அரசியல் தெரிவுகளின் அவலங்கள்

நல்லன நடக்கவேண்டும் என நினைக்கும் நினைப்புக்குள்ளேயே தீயனவற்றுக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.

மதுரைக்கு வரவேண்டிய அகில இந்திய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் ஆய்வுக்கூடமும் அடிக்கல் நாட்டியதோடு நிற்கிறது. ஆனால் அதன் நிர்வாகத் தலைவரையும் நிர்வாகக் குழு உறுப்பினர்களையும் நியமிக்கும் பணியைத்தொடங்கிவிட்டது மைய அரசு. தங்களிடம் அதிகாரம் இருக்கும்போது தங்களின் ஆதரவு சக்திகளுக்குப் பதவியைப் பிரித்துக் கொடுத்துவிடும் வழக்கமான வேகம் தான். மிக அண்மையில் தனது செயல்பாடுகளினால் தனிமனித நடத்தைவிதிகளுக்கு மாறான செயலைச் செய்தவரென ஊடகங்களும் காவல் துறையும் சுட்டிக்காட்டிய ஒருவரைப் பொறுப்பாளராக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பணியாற்றும் சுப்பையா சண்முகம் தனது மாணவப்பருவம் தொட்டே பா.ஜ.க.வின் ஆதரவாளர்; அதன் அமைப்புகளில் இணைந்து இயங்கியவர். அவரது நியமனத்தைப் பலரும் கண்டித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பிட்ட நபரை நியமிக்கக் கூடாது என்றுதான் விமரிசனம் எழுந்துள்ளது. இதுபோன்று அரசியல் சார்பு நியமினங்கள் தவறு என ஒருவரும் விமரிசனங்களை எழுப்பவில்லை. ஏனென்றால் இந்தியாவில் இத்தகைய நியமனங்கள் அனுமதிக்கப்பட்ட ஒன்று.

பொதுத்துறை மற்றும் அரசுத்துறை அமைப்புகளில் மக்களின் பங்கேற்பு இருக்கவேண்டும் என்பதற்காகத் தேர்தல் வழி தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை, சட்டமன்ற, உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்களைத் தெரிவுசெய்ய வகைசெய்யப்பட்டுள்ளது. அத்தோடு மக்களோடு நெருங்கித் தன்னார்வமாகப் பணிகளை மேற்கொள்ளும் ஆளுமைகளையும் கலைஞர்களையும்கூடத் தெரிவுசெய்து குறிப்பிட்ட காலத்திற்கு உறுப்பினர்கள் ஆக்குவார்கள். இட ஒதுக்கீடு வழங்கிப் பட்டியல் சாதியினருக்கும் நியமனங்கள் வழியாக வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த நியமனங்களுக்கான பெயர்கள் நியமனம் செய்யும் பொறுப்பில் உள்ளவர்களுக்கு நிறுவனங்கள் வழியாகவே அனுப்பப்படுவது மரபு. அந்தப்பட்டியலிலிருந்து தெரிவுசெய்யப்படுவதும் மரபு. அந்த மரபுகள் மீறப்பட்ட நேரங்களும் உண்டு. மேலிடத்தோடு ஒத்துப்போகாத ஆட்கள் பொறுப்பில் இருக்கும்போது மீறல்கள் நடக்கும்.

நியமனங்கள் வழியாகத் தெரிவுசெய்யப்பட்டு வரும் உறுப்பினர்களின் பங்களிப்புகளை பல்கலைக் கழகங்களின் ஆட்சிக்குழு , ஆட்சிப்பேரவை, பாடத்திட்டக்குழு, திட்டக்குழு போன்றவற்றில் நான் பார்த்திருக்கிறேன். அரசியல் கட்சிகள் சார்ந்து வருகிறவர்களின் பங்களிப்புகள் சில நேரங்களில் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்குப் பயன்பட்டிருக்கிறது. ஆனால் பல நேரங்களில் அவர்களுக்கே பல்கலைக்கழகம் பயன்பட்டிருக்கிறது. வேண்டியவர்களுக்குப் பணி வாய்ப்புகள் தொடங்கித் தேர்வுத்தாளில் மதிப்பெண் கூட்டுவது வரை தலையிடுவார்கள். அதன் வழியாக ஊழல்கள் நடக்கும்.


பண்டித நேருவின் கொள்கைகள் எல்லா நிலையிலும் கலப்புநிலை கொண்டவை. விடுதலைக்குப் பின்னான இந்தியாவை மேற்கத்திய அறிவிலான சிந்தனை மரபும், பகுத்தறிவு மனப்பாங்கும் இந்தியக் கலைஞானமும் இந்தியாவில் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என நினைத்தவர் அவர். அவர் காலம் தொடங்கி திருமதி இந்திரா காந்தி காலம் வரை, இடதுசாரி மனோபாவம் கொண்டவர்களைப் பல முக்கியக் குழுக்களிலும் நிறுவனங்களிலும் பொறுப்பாக்கினார்கள். மைய அரசாங்கத்தின் நேரடிப் பொறுப்பிலிருக்கும் பல்கலைக்கழகங்கள், கலை - பண்பாட்டு அமைப்புகளான அகாதெமிகள், உயராய்வுக் கழகங்கள், கல்வி நிலையங்களைக் கட்டுப்படுத்தும் குழுமங்கள் போன்றவற்றில் மேற்கத்தியப் பல்கலைக்கழகங்களில் கற்றவர்களும் அவர்களின் சீடர்களுமே அதிகமும் நியமிக்கப்பட்டார்கள். நரசிம்மராவ் காலமும் மன்மோகன் சிங் காலமும் தனியார் மயத்தை முன்னெடுக்கும் ஆட்கள் தேடிப்பிடிக்கப்பட்டார்கள். இடையில் இருந்த அடல் பிகாரி வாஜ்பாயி காலத்திலேயே வலதுசாரிகள் அந்த இடங்களைக் கைப்பற்றுவது தொடங்கியது. இப்போது அது தீவிரமாகியிருக்கிறது. இந்திய வரலாற்றுக்கழகம், புனே திரைப்பட நிறுவனம் போன்ற இடங்களில் எதிர்ப்புகளைச் சந்தித்தன.

தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்கள், ஆய்வுக்கழகங்கள், சிறப்புக் கல்விக்கான உயர்கல்வி நிறுவனங்கள் போன்றவற்றின் - துணைவேந்தர், முதன்மையர், இயக்குநர் போன்ற தலைமைப் பொறுப்புகளில் ஆளுங்கட்சி ஆதரவு நிலைபாடுகொண்ட கல்வியாளர்களை / வல்லுநர்களை நியமனம் செய்வதைக் காங்கிரஸ் பேரியக்கமே தமிழ்நாட்டில் தொடங்கிவிட்டது. திராவிட முன்னேற்றக் கழகமும் அதனைத் தொடர்ந்தது. அ இ அதிமுக ஆட்சியில் அதன் இன்னொரு விரிவாக்கமாக அமைச்சர்களின் உறவினர்களும் அமைச்சர்கள் கைகாட்டும் பேராசிரியர்களும் மூப்பு நிலை/தனித்துவமான திறமைகளையெல்லாம் பார்க்காமல் கட்சிசார்ந்தவர்களின் துணையோடு முந்திப் போய்ப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்கள். 1980 களிலேயே தொடங்கிவிட்ட அந்தப் போக்கோடு செல்வாக்கு மிக்க சாதிகளுக்கு இட ஒதுக்கீட்டு அடிப்படையில் கல்விநிலையத் தலைமைப் பொறுப்புகளும் கிடைக்க ஆரம்பித்தன. கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் கேட்டுப் பெறும் பதவிகளாகத் துணைவேந்தர்கள், பொதுத்தலைவர் பதவிகள் இடம்பெற்றன. அப்படிக் கிடைக்கும் பதவிகளுக்குரிய பங்குத்தொகையை ஆளுங்கட்சிகளின் அதிகார மையங்கள் பெற்றுக் கொண்டுதான் பிரித்துக் கொடுத்தன; கொடுக்கின்றன.

அதிகாரத்தில் பங்குபெற்றுப் பலனை அனுபவிக்கும் இந்த நடைமுறையைக் கவனத்தில் வைத்திருந்த வலதுசாரிகள் தங்களின் ஆட்சிக் காலத்தில் நியமனப் பதவிகள் ஒவ்வொன்றிற்கும் கட்சி ஆட்களையும் , துணை அமைப்புகளில் செயல்பட்டவர்களையும் நியமித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த நியமனங்களுக்கு உரிய கல்வித்தகுதி இல்லையென்றாலும் சிறப்பு அழைப்பாளர்களாகப் பொறுப்புத் தரலாம் என நாடாளுமன்றத்தில் சட்டமியற்றி ஆட்கள் நிரப்பப்படுகிறார்கள். மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கும் கட்சிக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும் இந்த நடைமுறையில் பின்பற்ற மரபுகள் உண்டு. முன்பிருந்த மத்திய அரசுகள் மாநில அரசுகளின் பரிந்துரைகள், ஆலோசனைகளை ஏற்று நியமனங்களைச் செய்தார்கள். ஆனால் தமிழ்நாட்டில் ஆட்சிப்பொறுப்பில் அ இ அதிமுக இருக்கிறது என்றாலும் கல்வி, கலை, பண்பாட்டுத்தளங்களுக்கான பரிந்துரைகளை அந்தக் கட்சி செய்வதாகச் சொல்லமுடியாது. கடந்த மூன்று ஆண்டுகளில் இப்படி நடந்த நியமனங்களில் பெரும்பாலும் மத்திய அரசில் பொறுப்பிலிருக்கும் கட்சியான பா.ஜ.க.வின் பரிந்துரைகளே நியமனங்கள் ஆகியிருக்கின்றன. நான் ஓய்வு பெறுவதற்கு முன்பு பல்கலைக் கழகங்களுக்குள் - ஆட்சிப்பேரவை, ஆட்சிக்குழுக்களில் நியமனம் செய்யப்பட்டு வந்தவர்களைக் கவனித்திருக்கிறேன். பொதுத்துறை மற்றும் அரசுத்துறை நியமனங்களைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வழியாகக் கேட்டுப் பெற்றாலே இந்த உண்மை வெளிப்பட்டுவிடும்.
*****************
ஆமாம் நல்லன நடக்கவேண்டும் என நினைக்கும் நினைப்புக்குள்ளேயே தீயனவற்றுக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. அதிகாரத்தின் இருப்பும் இயக்கமும் இப்படித்தான் இருக்கிறது. தனியொருவரை நோக்கிப் பாடப்பட்ட அந்தக் கவிதை தான் நினைவுக்கு வருகிறது

பல்சான்றீரே பல்சான்றீரே
கயல்முள் அன்ன நரைமுதிர் திரைகவுள்
பயனின் மூப்பிற் பல்சான்றீரே
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திரல் ஒருவன்
பிணிக்கும் காலை இரங்குவிர் மாதோ
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின் அதுதான்
எல்லாரும் உவப்பது அன்றியும்
நல்லாற்றுப் படூஉம் நெறியுமா ரதுவே!
============================
-நரிவெரூஉத் தலையார்/ புறநானூறு/195

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்