ஸ்ரீஎன்ஸ்ரீவத்ஸா என்னும் மொழிபெயர்ப்பாளரும் கருணாகரனின் மத்தியூ கவிதைகளும்
அவரது மொழிபெயர்ப்பில் தினசரி ஒன்றிரண்டு கவிதைகள் ஆங்கிலத்தில் வாசிக்கக் கிடைக்கின்றன. எழுதிய கவிகளின் அனுமதியுடனும் மொழிபெயர்ப்புக்கான ஒப்புதலுடனும் தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்கிறார். அவரது மொழிபெயர்ப்பு வழியாகவே பல கவிகளை முதன்முதலாக வாசித்துள்ளேன். நானும் எப்போதாவது கவிதை வடிவத்தில் எனது நினைவுகளையும் நிலைப்பாடுகளையும் எழுதுவதுண்டு. அவற்றில் இரண்டு கவிதைகளை மொழிபெயர்த்துக் கவி அடையாளம் தந்து கூச்சப்பட வைத்துள்ளார்.
அந்த மொழிபெயர்ப்புக்காக அவரோடு தொலைபேசியில் பேசியபோது ஒரு வேண்டுகோளை அவரிடம் வைத்தேன். கடந்த புத்தகச் சந்தையின்போது நான் தலைமையேற்று வெளியிட்ட கவி. கருணாகரனின் இரண்டு கவிதைத் தொகுதிகளில் ஒன்று முழுமையான புறநிலைக் கவிதைகள் . ஈழப்போரின் பின்னணியில் அக்கவிதைகள் முக்கியமானவை. அக்கவிதைகளுக்குள் ‘ மத்தியூ’ என்ற பாத்திரம் உலவும் கவிதைகள் இருக்கின்றன. அவற்றை நீங்கள் மொழிபெயர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.
நினைவின் இறுதிநாள் - என்ற தலைப்பில் உள்ள தொகுப்பில் உள்ள மத்தியூ, மத்தியூவின் சிரிப்பு, மத்தியூவின் வருகை, மத்தியூவின் டயறி 01, மத்தியூவின் டயறி 02. என்னும் தலைப்புக்கவிதைகளை படியெடுத்து அனுப்புகிறேன் என்று சொன்னபோது நீங்கள் கவிஞரை எனக்கு அறிமுகப்படுத்துங்கள்; அவரது ஒப்புதலுடன் தான் வெளியிடுவேன் என்று சொன்னார். இருவருக்கும் தொடர்பு ஏற்படுத்திவிட்டு நான் ஒதுங்கிக் கொண்டேன். நேற்றுவரை மத்தியூ உலவும் ஒன்பது கவிதைகளை மொழிபெயர்த்துவிட்டார் ஸ்ரீஎன்ஸ்ரீவத்ஸா. இன்னும் கருணாகரன் பல மத்தியூக்களைத் தனது கவிதைகளுக்குள் உலவச்செய்வார் என்றே நினைக்கிறேன். அவை எல்லாம் தனியொரு தொகுப்பாகத் தமிழிலும் ஆங்கிலத்திலும் முடிந்தால் சிங்களத்திலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒரு தொகுப்பாக வெளியிடப்படவேண்டும் எனக் கருணாகரனிடம் கேட்டுக்கொண்டுள்ளேன்.
கவி. கருணாகரனின் மத்தியூ என்னும் கற்பனைப் பாத்திரத்தை முன்வைத்து விரிக்கும் நினைவுகள் தனியாகப் பேசப்படவேண்டியவை. மத்தியூவைப்போலப் பிடித்த கற்பனைப் பாத்திரங்களை/ நினைவிலிருக்கும் பாத்திரங்களை உருவாக்கி நகுலனும் (சுசிலா) கலாப்ரியாவும் (சசி) தங்கள் கவிதைக்குள் உலவவிட்டிருக்கிறார்கள். அவ்விரு கற்பனைப்பாத்திரமும் ஒரே நபரின் வெவ்வேறு சாயல்கள். ஆனால் கருணாகரன் மத்தியூவுக்குள் பலரை நடமாடவிட்டிருக்கிறார். மத்தியூ புறநிலையில் பார்த்த வெவ்வேறு மனிதர்களின் சாயல்களாக அலைகிறார்கள். ஈழப்போரின் பின்னணியில் இப்படியான ஒரு பாத்திரத்தை உருவாக்கி - வெவ்வேறு சூழலில் நிறுத்திக் காட்டியிருப்பது கவிதை அழகியலில் விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று.
மத்தியூவை எழுதும் கவி. கருணாகரனுக்கும் மொழிபெயர்க்கும் ஸ்ரீஎன்ஸ்ரீவத்ஸாவுக்கும் வாழ்த்துகள்
இப்போது -17-10-2020 மொழிபெயர்த்துள்ள ஒரு கவிதை:
தனக்குக் கிடைத்த தீர்ப்பை எண்ணியபோது
‘க்ளுக்’கெனச் சிரிப்பு வந்தது மத்தியூவுக்கு.
ஆயிரம் வழக்குகளுக்குத் தீர்ப்புச் சொல்லியிருக்கிறான் மத்தியூ
சொன்னதென்ன,
தீர்ப்பையே வழங்கியிருக்கிறான்
எதுவும் பிசகியதில்லை
குறி தவறாத குண்டும் தன்னுடைய தீர்ப்பும் ஒன்றென்று
மத்தியூவிற்குத் தெரியும்.
சொன்னால் சொன்னதுதான்
சட்டம், போட்டால் போட்டதுதான்
மேல் வழக்குக்குக்கோ மறுபேச்சுக்கோ இடமேயில்லை.
‘போடுவது’ அறமென்ற பிறகு ஏதொன்றும் புதியதல்ல
அதுவொரு கலை
சட்டத்தில் அதுவொரு ‘புதிய ஏற்பாடு’
புதிய ஏற்பாட்டில் எவையெல்லாமோ நிகழ்ந்தேறின
எல்லாம் அறத்தின்படியே நிகழ்ந்து முடிந்தன
கிருஸ்ணபரமாத்மா சொன்னதென்ன
“உன்னைக் கொல்லவரும் பசுவையும் கொல்”
அறத்தின் விதியில்
பாரதப்போரே நடந்து முடியவில்லையா!
.
அப்போதெல்லாம்
கடவுள் கூடத் தலையை வெளியே நீட்டுவதற்கே தயங்கினார்
மத்தியூவின் நீதி ஒளிகூடியது
கண்களை மட்டுமல்ல
அறிவையே கூசச்செய்யுமளவுக்கு ஒளிகொண்டது
அதனால் தம் கண்களையும் புத்தியையும் காத்திடவேண்டுமெனக்
கடவுள் தலையை மறைத்துக் கொண்டார்.
கடவுளில்லாத சாம்ராஜ்ஜியத்தில்
மத்தியூவின் கொடி பறந்தது
நீதி தளைத்து
அறம் பிழைத்து
புதிய விதி முளைத்து
வரலாறே புதிய முகம் கொண்டெழுந்தது சடைத்து.
ஒரு நாள்
ஒரு பகற்கனவைப்போல
எல்லாமே பிழைக்கச் சதி செய்தார் கடவுள்
காத்திருந்து கடவுள் செய்த சதியில்
மத்தியூவின் கொடி அறுந்து விழப் புயலடித்தது
வெள்ளம் பெருகியபோதும்
நெருப்பாகிச் சுட்டது நிலம்
“ரத்த வெள்ளம் அப்படித்தான் சுடும்
கையைக் காலைக் கண்ணைத் தலையை
வாழ்வையெல்லாம் சுடும்” என்றார் ரகசியமாகக் கடவுள்
“கொடியில்லாதவரெல்லாம் விதியற்றவர்
விதியற்றவரெல்லாம் வழியற்றவர்
வழியற்றவரெல்லாம் சிறைப்பட்டவர்”
என்று சொல்லித்தீர்ப்பளித்தார் நீதிபதி.
ஒருநாள் சிறைச்சோற்றில் கல்லெத்த
‘கடவுள் ஒரு பொல்லாத சதிகாரன்
காத்திருந்து கழுத்தறுக்கும் பேர்வழி’
என்றான் மத்தியூ.
“வரலாற்றுக் குழந்தைக்கு
எல்லாமே ஒரு விளையாட்டுத்தான் இல்லையா”
என்று மத்தியூ எழுதிய குறிப்பைக் காட்டுகிறான் M.O.B
When he thought
about the judgement he got
Matthew had to laugh
aloud.
Matthew had given decision
on a thousand cases.
Not just saying,
but he had delivered
the sentence itself.
Nothing was
off the mark.
Matthew knew
that the bullet
which does not miss the target
and his judgement
were the same.
Whatever said
will remain so.
A law made
will stay enacted.
There was no way at all
for appeal or review.
Nothing is new
after executions were
declared as righteous.
It was an art.
It was a new testament
under law.
So many things happened
as per the new testament.
Lord Krishna said
"kill even the cow
that comes to
kill you".
Didn't the battle
of Mahabharata
conclude as per
the rule of justice!
Those times,
even God hesitated
to put his head out.
Matthew's justice
was luminous.
Not just the eyes,
the light
was too bright
and hurt
even the intellect.
Therefore,
God hid his head
to save his eyes and wits.
Matthew's
flag flew
in a godless empire.
Justice flourished,
righteousness survived,
new rule sprouted
and history itself
rose with a new face.
God plotted one day
for everything
to survive
like a daydream.
Matthew's flag
was cut down
in the conspiracy
God waited to plot
and a cyclone blew.
The earth was afire,
scalding,
even though floods
kept rising.
"A flood of blood
will scald exactly like that;
it will singe the hand,
leg, eye, head and life",
said God, in secret.
"Those without flag
have no rules.
Those who have no rules
have no means.
Those without means
are prisoners"
the Judge said
while sentencing.
Finding a stone
in prison food one day,
"God is cruel conspirator
who waits to sever the neck"
said Mathew.
M.O.B. shows the note
that Matthew wrote
"Isn't it all a game
for the child of history!"
~Sri 1030 :: 17102020 :: Noida
கருத்துகள்