மனுஷ்யபுத்திரனின் புதிய அடையாளம்
நீண்டகாலமாகவே தேர்தல் அரசியலில் வாக்காளர்களை நேரடியாகச் சந்திக்கும் தொண்டர்களின்- முன்களப்பணியாளர்களின் - செயல்பாடுகளே வெற்றி -தோல்வியைத் தீர்மானிக்கும் வாக்குகளைப் பெற்றுத்தரும் நகர்வுகளாக இருக்கின்றன. அதே நேரத்தில் நிகழ்காலத் தேர்தல் நடைமுறைகளில் பல மாற்றங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. பலவற்றை ரகசியமாகச் செய்துவந்த அரசியல் கட்சிகள் இப்போது வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்கின்றன. ரகசியம் பேணுவதும் உரிய நேரத்தில் ரகசியத்தை வெளிப்படச் செய்வதும் நவீனத்துவ நோக்கின் அடையாளம். ஆனால் பின் நவீனத்துவச் சூழல் ரகசியங்களைத் துறக்கத் தூண்டும் விளைவுகளைக் கொண்டது.
அந்த விளைவுகளை உள்வாங்கியே எல்லாவற்றையும் அரசியல் தலைமை தீர்மானிக்கிறது என்ற கருத்துநிலையைக் கைவிட்டுவிட்டுக் கூட்டுத் தலைமையும் கூட்டு அறிவுமே எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றன என்பதை வெளிப்படையாகச் சொல்லத் தொடங்கியிருக்கின்றன. சொந்தக் கட்சியின் அறிவுத்தொகுதியைத் தாண்டித் தேர்தல் வெற்றிக்காக நவீனக் கல்வி அறிவும் திறன்களும் கொண்ட முகவாண்மைகளைப் பயன்படுத்துவதைக் கூடத் தேர்தல் உத்திகளில் ஒன்றாகக் காட்டுவதை வாக்களிக்கும் வெகுமக்கள் விரும்புவார்கள் என அரசியல் கட்சிகள் நம்புகின்றன. இந்தியத்தேர்தலில் இதனை வெற்றிகரமாகப் பயன்படுத்திய கட்சி ஆட்சியில் இருக்கிறது.
கட்சித்தலைமையின் அரசியல் அறிவு, கட்சியின் தேர்தல் பரப்புரை நகர்வுகளைத் தீர்மானிக்கும் கொள்கை வகுப்பாளர்கள், ஊடகப் பங்கேற்பாளர்கள், மக்கள் தொடர்பாளர்கள், நிதிமேலாண்மையாளர்கள் எனப் பல்வேறு குழுமங்களில் பணியாற்றும் பின்களப் பணியாளர்கள் யார் யார் என்பதும், அவர்களின் கீழ் செயல்படும் அணிகளில் இருப்பவர்கள் எவர் என்பதும் வெளிப்படையாக்கப்பட்டு வருகின்றன. இந்த வெளிப்படைத்தன்மையின் முதன்மையான அடையாளங்களாக வெகுமக்கள் ஊடகப் பங்கேற்பும், சமூக ஊடகங்களைக் கையாள்வதும் இருக்கின்றன. இவ்விரண்டும் ஒரு கட்சியின் பிம்பங்களைக் கட்டமைப்பதிலும் கருத்துருவாக்கத்திலும் முதன்மையான பங்களிப்புச் செய்யக்கூடியன.
வரும் தேர்தலில் வெற்றிவாய்ப்பு கொண்ட கட்சியாக - கூட்டணியின் தலைமையாக இருப்பது திராவிட முன்னேற்றக்கழகம். அதன் ஊடகச் செயல்பாடுகள் மற்றும் சமூக ஊடகங்களைக் கையாளும் முறைமைகள் குறித்துப் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இதே சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டுள்ளன/படுகின்றன. இந்தச் சூழ்நிலையில் வெகுமக்கள் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களில் நீண்டகாலமாகப் பங்கேற்றுவரும் கவிஞர் மனுஷ்யபுத்திரன் மாநில அளவு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நேரடி அனுபவங்களைத் தாண்டி ஊடகக் கல்வியை முறையாகக் கற்றவர் அவர். ஊடகங்களில் பரவும் ஒரு தகவல், அல்லது கருத்தோட்டம் அல்லது நோக்கு எந்தெந்த நிலைகளில் எவ்வகையான விளைவுகளை உண்டாக்கும் என்ற ஊடக உளவியல் கோட்பாடுகளைப் பாடமாகப் படித்தவர். விவாதங்களுக்குப் பதில் அளிப்பதில் வல்லவர். அவரது ஆலோசனைகளைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்தது நல்ல விளைவுகளைத் தரக்கூடும். புதிய பொறுப்பில் வெற்றிபெற எனது வாழ்த்துகள்
கருத்துகள்