கோலாலம்பூரில் ஒன்பதாவது உலகத்தமிழ் மாநாடு


எனது அயல் பயணங்கள் என்பன பெரும்பாலும் கல்விப்பயணங்கள் தான். உலகத்தமிழ் மாநாட்டிற்காக மலேசியாவின் கோலாலம்பூருக்குச் செல்வது மூன்றாவது அயல்நாட்டுப் பயணம். 2011 இல் பல்கலைக் கழகத்தில் தொலைதூர மையங்களைச் சௌதி அரேபியாவின் தம்மாமிலும் ரியாத்திலும் ஆரம்பிக்க அனுமதிக்கலாமா என்று பார்க்கச் சென்ற ஒருநபர் குழுவுப் பயணம்தான் எனது முதல் வெளிநாட்டுப் பயணம்.

  நான்கு நாட்கள் தங்கியிருந்த அந்தப் பயணத்தைத் தொடந்து வந்த து ஐரோப்பியப் பயணம். போலந்து நாட்டின் வார்சா பல்கலைக்கழகத்தின் இந்தியவியல் துறையின் இருக்கைப் பேராசிரியர் பொறுப்புக்குத் தேர்வு பெற்றுச் சென்ற பயணம் அது. இரண்டு கல்வி ஆண்டுகள் (2011 அக்டோபர் 8 முதல் 2013 ஜூலை10 வரையிலான) அங்கு தங்கியிருந்த காலத்தில் நார்வே, டென்மார்க், ஆஸ்திரியா, ஹங்கேரி ஆகிய நாடுகளுக்குச் சென்று வந்தன அதற்குள் அடக்கும்.

கோலாலம்பூர் பயணம் சரியாகச் சொல்லப்படவேண்டுமென்றால் ஆய்வு மாநாட்டில் கட்டுரை வழங்கப்படுவதற்காகச் சென்ற கல்விப்பயணம். பொதுவாகப் பன்னாட்டுக் கருத்தரங்குகள், ஆய்வுமாநாடுகளைத் திட்டமிடும் கல்விப்புலத்தவர்கள் ஆறுமாதத்திற்கு முன்பே அறிவிப்பைச் செய்துவிடுவார்கள். 2015 ஜனவரி 27 தொடங்கி பிப்ரவரி 1 ஆம் தேதி முடிய நான்கு நாட்கள் மலேசியாவின் கோலாலம்பூர் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை ஒன்பதாவது உலகத்தமிழ் மாநாட்டை நடத்தப் போகிறது என்ற அறிவிப்பும் அப்படித் தான் முன்கூட்டியே வந்தது.  வந்த போதே அம்மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை படிப்பது என்று முடிவுசெய்து விட்டேன்.

ஆறுமாதம் என்பது குறைந்த கால அளவுதான். ஓராண்டுக்கு முன்பே அறிவிப்புச் செய்யும் நிறுவனங்களும் உண்டு.  அடுத்த கல்வி ஆண்டின் நிகழ்திட்டங்களை ஓராண்டுக்கும் முன்பே திட்டமிட்டுத் தங்கள் இணைய தளங்களில் வெளியிடும் பல்கலைக்கழகங்கள் இப்போது உலகமெங்கும் உள்ளன. ஒரு மாத காலத்தில் ஆய்வுச் சுருக்கத்தை ஏற்றுப் பங்கேற்பை உறுதிசெய்தால் தான் அந்த நாட்டிற்கு நுழைவு அனுமதி வாங்குவது, பல்கலைக்கழகத்திற்கும் கல்விப்பயணங்களுக்கு உதவும் நிதிநல்கைக் குழுக்களுக்கும் அந்த ஏற்பைக்காட்டி அனுமதியும் நிதி உதவியும் பெற வசதியாக இருக்கும். அத்தோடு குறைந்த விலையில் பயணச்சீட்டு பெறுவது, பயணம் செய்யும் நாட்டில்  கூடுதலாகத் தங்கித் தங்கள் துறைசார்ந்த ஆய்வு மையங்களைப் பார்வையிடுதல், அங்கு வாய்ப்பிருந்தால் சிறப்புச் சொற்பொழிவுகள் நிகழ்த்துதல்,   சுற்றுலா போதல் போன்றவற்றைத் திட்டமிட  முடியும். இதற்கெல்லாம் பலரையும் தொடர்பு கொள்ள வேண்டும்  என்பதால் இந்தக் கால இடைவெளி தேவை. 

கோலாலம்பூரில் நடக்கும் உலகத்தமிழ் மாநாட்டில் கலந்துகொண்ட இந்தப் பயணத்தை மலேசியா – சிங்கப்பூர் பயணம் என்று சொல்வதா? சிங்கப்பூர் - மலேசியா பயணம் என்று சொல்வதா? என்ற குழப்பம் ஏற்படும் அளவிற்குப் பின்னர் எல்லாம் மாறிவிட்டது என்பது தனிக்கதை. வார்சாவிலிருந்தபடியே ஐரோப்பிய நாடுகள் சிலவற்றிற்குப் போய்வந்தபோது உண்டான நாடுகள் பார்க்கும் ஆசை இந்தியாவிற்கு வந்தபின் அதிகமாகிக் கொண்டே இருந்தது. அத்தோடு பணி சார்ந்து பதவி உயர்வுக்காகவும் பின்னர் ஆய்வுநிறுவனங்களின் தலைமைப்பொறுப்பு, பல்கலைக்கழக நிர்வாகப் பதவிகள் போன்றவற்றிற்கு முயற்சிக்க வேண்டும் என்றால் கூடுதலான அயல்நாட்டுப் பயணங்களும், அங்கு நடக்கும் பன்னாட்டுக் கருத்தரங்குகள், ஆய்வுமாநாடுகளில் பங்கேற்பது போன்றன கூடுதல் தகுதியாக இருக்கும் என்பதும் காரணங்களாக இருந்தன.  பல்கலைக்கழகத் துறைசார்ந்த பொறுப்பு என்று பார்த்தால் அதன் உயர்நிலையான பேராசிரியர் பதவியை 2005 ஏப்ரலிலேயே அடைந்து விட்டேன். ஆகஸ்டில் துறைத்தலைவராகவும் ஆகிவிட்டேன். இனிக் கிடைக்க க்கூடிய ஒரே பதவி உயர்வு மூத்தநிலைப் பேராசிரியர் என்பதுதான். அதற்குப் பத்தாண்டுகள் பேராசிரியராக இருக்க வேண்டும். அந்தக் காலத்தை அடைவது 2015 ஏப்ரலில். அதற்குள் செய்ய வேண்டிய வேலைகள், வெளிப்படுத்த வேண்டிய திறன்கள் என்பனவற்றுள் ஒன்றாகப் பன்னாட்டு ஆய்வு மாநாட்டில் கலந்துகொள்வதும் ஒன்று. இதனை உள்வாங்கியே மலேசியாவில் நடக்க இருந்த ஒன்பதாவது உலகத்தமிழ் மாநாட்டில் கலந்துகொள்வது என்ற முடிவை எடுத்தேன்.    

2015 ஆண்டு ஏப்பிரலுக்கு முன்னதாக ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கில் கலந்துகொண்டு விட்டால் எனது அடுத்த கட்டப் பணி உயர்வான முதுநிலைப் பேராசிரியர் நிலைக்கு விண்ணப்பித்துவிடலாம். இது ஒன்றுதான் அந்த முடிவை எடுப்பதற்கு முன்னுரிமைக்காரணம்.  ஏற்கெனவே செம்மொழி நிறுவனம் நடத்திய ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கில்  ஒன்றும் ( சங்கப்பெண் கவிதைகளின் கவிதையியல்- அகம்)    வார்சா பல்கலைக்கழகம் நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கில்  இன்னொன்றுமாக ( சங்கக் கவிதைகளில் போருக்கெதிரான பெண்கள் மனநிலை) இன்னொன்றுமாக இரண்டு கட்டுரைகளை வாசித்திருக்கிறேன். பன்னாட்டு ஆய்வு மாநாட்டில் இரண்டு கட்டுரைகள் போதுமானது என்றாலும் கூடுதலாக ஒன்றை – அயல்நாட்டிலேயே சென்று வாசித்துவிடலாம் என்ற அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு அது.

ஒரு பல்கலைக்கழக ஆசிரியருக்கு துறைசார்ந்த பணிகளின் அடிப்படையில் பணி உயர்வுகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் கிடைக்கும். இரண்டு கல்வி ஆண்டுகள் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றிவிட்டு புதுவைப்பல்கலைக்கழக சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப்பள்ளியில் நிரந்தரப் பணியில் சேர்ந்தது1989 ஜூலை முதல் தேதி. அப்போதிருந்த நடைமுறைப்படி   விரிவுரையாளர்(Lecturer).  இணைப் பேராசிரியர் ( Reader) பேராசிரியர் (Professor ) என மூன்று படிநிலைகள் தான் இருந்தன. முதல் படிநிலையைத் தாண்ட எட்டாண்டு காலமும் அடுத்த கட்டமான பேராசிரியராகப் பதவி உயர்வுபெற இன்னொரு பத்தாண்டு காலமும் பணியாற்ற வேண்டும்.  பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு பேராசிரியராகவே இருந்து பணி ஓய்வு பெறுவார்கள்.

 மூன்றடுக்கு நடைமுறையை 1996 இல் அமைக்கப்பட்ட பல்கலைக்கழக மானியக்குழுவின் புதிய சம்பளவிகித மாறுதல் குழு மாற்று அமைத்தது. பணிக்காலத் திறன் வளர்ப்பை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒவ்வொரு அடுக்குக்கும் இடையில் இன்னொரு அடுக்கைக் கொண்டுவந்த தோடு பணியின் பெயர்களையும் மாற்றிவிட்டது.   விரிவுரையாளர் என்ற பெயர் ஒழிக்கப்பட்டு உதவிப் பேராசிரியர், பேராசிரியர் என்ற இரண்டாக மாற்றப்பட்டது. ஆனால் இடையில் தேர்வுநிலை உதவிப் பேராசிரியர், மூப்புநிலை உதவிப்பேராசிரியர் இணைப்பேராசிரியர், மூப்புநிலை இணைப்பேராசிரியர், இணைநிலைப் பேராசிரியர், எனப்படிநிலைகள் உருவாக்கப்பட்டன. அவற்றுக்கான கால இடைவெளி முறையே 5, 3, 3, 8, 3  எனப் பிரிக்கப்பட்டுப் பேராசிரியராக ஆகும் காலம் தள்ளிப்போடப்பட்டன.  அத்தோடு இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் தனது பணிகளை முறையாகச் செய்திருக்க வேண்டும் என்பதோடு, கற்பித்தல், கற்றல், மதிப்பிடுதல் ஆகிய மூன்றிலும் தொடர்ச்சியாகத் திறன்வளர்ப்பு இருக்கவேண்டும்; மூன்று நிலைகளிலும்       புத்தாக்க முயற்சிகள் வெளிப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.

இதற்காகத் தொடக்க நிலையில் – உதவிப்பேராசிரியர் நிலையில்  நான்கு வார கால அறிமுகப் பயிற்சி வகுப்புக்கும், மூன்றுவார கால புத்தொளிப்பயிற்சி  வகுப்புகள் இரண்டுக்கும் சென்று வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.  இப்பயிற்சி வகுப்புகளில் பங்கேற்காமல் ஒருவர் பணி உயர்வு பெறுவது இயலாத ஒன்றாக மாறியது. அடிப்படையான இப்பயிற்சிகளோடு கட்டுரைகள்/ நூல்கள் எழுதுவது, ஆய்வாளர்களுக்கு வழிகாட்டுவது,   பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டக் குழுக்களில் பங்கேற்பது, கருத்தரங்குகள்/ பயிலரங்குகள் ஒருங்கிணைப்பது, அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் போன்ற சிறப்புச் சொற்பொழிவுகள் நிகழ்த்துவது போன்றவற்றோடு தேசிய அளவிலும் பன்னாட்டு நிலையிலும் நடக்கும் ஆய்வியல் கருத்தரங்குகளிலும் பங்கேற்பது, ஆய்வுக்கழகங்களை உருவாக்கிப் பணியாற்றுவது, ஆய்விதழ்களின் ஆசிரியர் பொறுப்பு எனப்பலவும் கூடுதல் தகுதியாகவும் திறனாகவும் கருதப்பட்டு பதவி உயர்வுகள் பெறுவதில் வேகம் குறைக்கப்பட்டது. இவை ஒவ்வொன்றையும் தக்க ஆதாரத்தோடு வழங்க வேண்டும். பல்கலைக்கழக நிர்வாகம் அமைக்கும் நேர்காணல் குழுவைச் சந்தித்து விவாதிக்க வேண்டும்.

புதுவைப் பல்கலைக்கழகத்திலிருந்து நேரடி விண்ணப்பம் மூலம் இணைப் பேராசிரியராக மனோன்மணியத்தில் இணைந்த நான், எனது வேலைகளின் போக்கிலேயே  இத்திறன்கள் பலவற்றையும் அதனதன் போக்கில்   செய்திருந்தேன். அதனால் உரிய நேரத்தில் – சரியாக எட்டாண்டுகளுக்குப் பின் பேராசிரியர் பதவிக்கு நகர்த்தப்பட்டேன். அதேபோலப் பத்தாண்டுகளுக்குப் பின்னர் மூத்த பேராசிரியராக நகரவேண்டும் என்றால் ஒரேயொரு நிலையில் மட்டும் போதிய மதிப்புப்புள்ளிகள் இல்லாமல் இருந்தது. பன்னாட்டுக் கருத்தரங்கப் பங்கேற்புகள் குறைவாகவே இருந்தன என்பதை ஒத்துக்கொள்ளத் தான் வேண்டும். இரண்டு ஆண்டுகள் வார்சா பல்கலைக்கழகத்தில் பணியாற்றியிருந்தாலும் அதனை மாநாட்டுப் பங்கேற்பாக க்கொள்ள வாய்ப்பில்லை என்பதால்,  சரியான அர்த்தத்தில் அயல்நாட்டுப் பல்கலைக்கழகம் ஒன்றில் பங்கேற்றுக் கட்டுரை வழங்கிட வேண்டும் என்று நினைத்தேன்   அந்த வகையான பங்கேற்பை இந்தியாவிற்குள் நடக்கும் பன்னாட்டுக் கருத்தரங்குகள் சிலவற்றில் பங்கேற்றுச் சரிசெய்யலாம்.இங்கே பலரும் அப்படித்தான் செய்கிறார்கள்.  என்றாலும், செய்ய வேண்டியதைச் சரியாகவே செய்துவிடலாம் என்று முடிவு செய்தேன்.

*********

இந்திய/ தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்குள்ளேயே பணி சார்ந்த பயணங்களின் போது கூடுதலாக ஒன்றிரண்டு நாட்கள் தங்கி ஊர் சுற்றிப் பார்க்கும் பழக்கம் தொற்றிக்கொண்ட நோயாகிவிட்ட து. அப்படித்தான் கேரளத்தின் உள்காடுகளையும் கர்நாடகத்தின் மைசூர்,பெங்களூர் நகரங்களையும் புதுடெல்லியையும் சுற்றியிருக்கிறேன். அயல் நாடொன்றிற்குப் போய்விட்டுக் கட்டுரையை வாசித்து விட்டுக் கருத்தரங்கம் நடந்த கோலாலம்பூரை மட்டும் சுற்றிப்பார்த்துவிட்டு வரும் மனநிலை இல்லை. மாநாட்டை ஒட்டி முன்னும்பின்னுமாகச் சில கல்விப்புல நிகழ்வுகளை ஏற்பாடு செய்துகொண்டு மலேசியாவில் குறைந்தது பத்துநாட்கள் தங்குவது என்று முடிவுசெய்தேன். அதனால் கருத்தரங்கிற்குக் கட்டவேண்டிய பதிவுக் கட்டணம் நூறு அமெரிக்க டாலரை மட்டும் கட்டிவிட்டு விமானப் பயணத்திற்கான சீட்டுகளை முன்பதிவு செய்யவில்லை. மூன்று மாதத்திற்கு முன்பே பயணச்சீட்டு எடுத்திருந்தால் கட்டணம் குறையும் என்றாலும் பயணத்திட்டம் முடிவாகாததால் பயண அனுமதிக்கான நுழைவு அனுமதியும் (Visa)வாங்கவும் இல்லை.

மாநாட்டிற்கான கட்டுரைச் சுருக்கத்தைத் தயாரித்துக் கொண்டிருந்த காலகட்ட த்தில் ஒருநாள் எழுத்தாளர் இமையத்திடம், மலேசியாவில் நடக்கும் உலகத்தமிழ் மாநாட்டிற்குப் போகப்போகிறேன்; அதற்கான கட்டுரை ஒன்றை விரிவாக எழுதிக் கொண்டிருக்கிறேன்’ என்று சொன்னேன். ‘அப்படியா? நானும் பங்கெடுக்கலாமா?’  என்று கேட்டார். அதில் என்ன சிக்கல்; நீயொரு தமிழின் முக்கியமான எழுத்தாளர்; அத்தோடு ஆசிரியர் ஆகவே கலந்துகொள்ளலாம்; கட்டுரைச் சுருக்கத்தைத் தயார் செய்துவிட்டுப் பதிவுக்கட்டணத்தைக் கட்டிவிடு’ என்று சொல்லி விவரங்களை இணையம் வழியாக அனுப்பி வைத்தேன். அவரும் வரத்தயாரானார்.

 மலேசியப்பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் இருக்கும் சிலரைத் தெரியும். அவர்கள் அனைவருமே தமிழ்மாநாட்டின் பொறுப்பாளராக இருப்பார்கள். அதனால் அவர்களிடம் வேறு ஏற்பாடுகளுக்குக் கேட்கமுடியாது. கோலாலம்பூர் பல்கலைக்கழகம் தவிர வேறு பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறை இருக்கிறதா? என்பது முதலில் தெரியவில்லை. பின்னர் சுல்தான் இத்ரிஸ் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் படிப்பிற்குள் தமிழ் இருப்பதாக அறிய முடிந்த து. அத்துறையில் மதுரையைப் பலகலைக்கழகத்தில் படித்த முனைவர் வீரலட்சுமி என்பவர் இருப்பது தெரியவந்த து. அவரிடம் ஒரு அழைப்புக் கடிதம் தரமுடியுமா? எனக் கேட்டேன். அவரது துறையின் தலைவரோடு கலந்து பேசித் துறையில் சிறப்புச் சொற்பொழிவு ஒன்றைச் செய்வதற்கான அழைப்புக்கடிதம் ஒன்றை அனுப்பிவைத்தார். அது கூடுதலாகச் சில நாட்கள் மலேசியாவில் தங்குவதற்கு விடுப்புப்பெற உதவியது.

இதே நேரத்தில் கல்விப்புலம் சாராத இலக்கிய அமைப்புகளில் பங்கேற்கலாம் எனவு நினைத்தேன். ஏற்கெனவே முகநூல் வழியாக அங்கு நடக்கும் இலக்கிய நிகழ்வுகள், அமைப்புகள் குறித்துச் சில தகவல்கள் தெரியும். அத்தோடு மலேசியாவில் நவீன இலக்கியத்தை அறிமுகம் செய்து விவாதக்களங்களை உருவாக்கிவரும்  வல்லினம் குழுவையும் கேள்விப்பட்டிருந்தேன். அ.மார்க்ஸின் கட்டுரைகள் வல்லினத்தின் வந்து கொண்டிருந்த நேரம். அ.மார்க்ஸின் எழுத்துகளை வாசித்ததின் தொடர்ச்சியாகவே வல்லினம் இதழையும் அதன் ஆசிரியர் குழுவில் இருந்த மணிமொழி, யோகி, கே.பாலமுருகன் போன்ற பெயர்களையும் தெரிந்திருந்தது. இவர்கள் எல்லாம் முகநூலிலும் இருந்தார்கள். மணிமொழி ஒரு மொழி ஆசிரியை. அதன் காரணமாக வார்சாவிலிருந்தபோதே தொலைபேசி வழியாகப் பேசியிருக்கிறார். யோகியின் கவிதைகளையும் பாலமுருகனின் கதைகளையும் கூட வாசித்துக் கருத்துச் சொன்னதின் வழியாக அறிமுகமுண்டு. வல்லினத்தின் ஆசிரியர் நவீனின் எழுத்துகளை வாசித்திருந்தேன் என்ற போதிலும், அவர்   முகநூல் வழியாகவோ, தொலைபேசியிலோ பேசுவதில் ஒரு விலகலைக் காட்டக்கூடியவராக இருந்தார். ஒருவேளை அ.மார்க்ஸோடு முரண்பாடு கொண்ட ரவிக்குமாரோடு என்னை அடையாளப்படுத்திக் கொண்டு அந்த விலகலைக் கடைப்பிடித்திருக்கக் கூடும் என நினைத்துக்கொண்டேன். தமிழ்நாட்டிலேயே பலர் அப்படியான விலகலோடு இருந்தார்கள் என்பதால் இது சாத்தியம் என்பதாக நினைத்துக்கொண்டேன்.

வல்லினம் குழுவினர் ஒருவரையும்    இமையத்திற்குத் தெரியாது. ஆனால் இமையத்தின் கதைகள் வழியாக அவரை வல்லினம் குழுவினர் தெரிந்து வைத்திருந்தனர். அவரும் வருகிறார் என்று சொன்னவுடன் ‘நாங்களும் மாநாட்டில் பங்கேற்போம்; முடிந்தால்   தனிக்கூட்டம் ஒன்றையும் ஏற்பாடு செய்யலாம்’ என்று தகவல் அனுப்பினார் வல்லினத்தின் ஆசிரியர் ம.நவீன். அதற்கு முன்பே வல்லினம் அ.மார்க்ஸ், லீனா மணிமேகலை, ஷோபாசக்தி ஆகியோரோடு சந்திப்புகள் நடத்திய தகவல்கள் முகநூல் வழியாகவும் இணையப் பக்கங்கள் வழியாகவும் தெரிந்த ஒன்றுதான். அதுபோல ஒரு சந்திப்பை இமையம் + அ.ராமசாமியை வைத்து நட த்துவோம் எனச் சொன்னார்கள். யோகியும் கூட அதை உறுதி செய்திருந்தார். கே.பாலமுருகன் தனது ஊர் மலேசியாவின் வடபகுதியில் கெடா பகுதியில் இருப்பதாகவும் அங்கிருக்கும் ஒரு கல்லூரியில் ஒரு பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்கிறேன் என்றும் தகவல் அனுப்பினார். இந்தத் தகவல்கள் ஒரு உற்சாகத்தைத் தந்தன. இந்தத் தொடர்புகள் வழியாக மலேசியாவில் உலகத்தமிழ் மாநாட்டிற்குப் பின்னும் சில நாட்கள் தங்கமுடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.  எனவே மாநாட்டு நிகழ்வுகள் நடக்கும் நான்கு நாட்களோடு மேலும் மூன்று திங்கள் மலேசியாவில் தங்குவது என முடிவுசெய்தேன். ஆனால் என்னோடு மாநாட்டிற்கு வருவதாகச் சொன்ன இமையம், மாநாடு முடிந்த தும் உடனே ஊர் திரும்பவேண்டும் என்று சொல்லிவிட்டார். பொதுவாக இமையத்திற்கு ஊர் சுற்றுவதிலோ மனிதர்களோடு உரையாடுவதிலோ பெரிய ஆர்வம் இருந்ததில்லை. மலேசியாவிற்குள் நுழைவதற்கான நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்க நினைத்தபோது, அது ஒன்றும் சிரமம் இல்லை; ஒருமாதத்திற்கு முன்பு இணையம் வழியாக விண்ணப்பத்தால் ஓராண்டுக்கு பலதடவை நுழைய அனுமதி கிடைக்கும் என்று தெரிந்தது. ஆக மலேசியாவில் ஒருவாரப்பயணம் என்பது உறுதியானது.

========================                             மலேசிய -சிங்கப்பூர் பயணங்கள்-1

பின்குறிப்பு: 

நண்பர் கே.பாலமுருகனின் குறிப்பொன்று:

அ.ராமசாமியுடன் கழிந்த 7 நாட்கள்: பாகம் 1 (இமையத்தின் வருகை)

கடந்த வருடமே முகநூலின் வழி மலேசிய வருகையை எழுத்தாளர் பேராசரியர் அ.ராமசாமி அவர்கள் தெரிவித்திருந்தார். மலேசியாவில் இலக்கிய நண்பர்களைச் சந்திக்க ஆர்வத்துடன் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். உடனடியாக இரண்டு இலக்கிய சந்திப்புகளுக்குச் சொல்லியிருந்தேன். அ.ராமசாமி ஐயா அவர்களுக்கும் அந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சிகளுக்கு அழைப்பும் அனுப்பியிருந்தேன்.

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்காக முன்னமே சிங்கப்பூர் வந்தவுடன் அவருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் உறுதியானது. இது தொடர்பாக நானும் அ.ராமசாமி அவர்களும் பலமுறை முகநூலில் பேசித் திட்டமிட்டோம். 29ஆம் திகதி காலையில் நானும் தினகரனும் விரிவுரைஞர் மணியரசன் அவர்களும் காரில் கோலாலம்பூருக்குச் சென்று கொண்டிருந்தபோது யோகியிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது.

உங்க ஆளு இங்கத்தான் இருக்காருலா” என்றார். உடனே தெரிந்துவிட்டது அ.ராமசாமி ஐயாவைத்தான் யோகி அப்படிச் சொல்கிறார் என. மலாயாப்பல்கலைக்கழகம் வந்து சேர்ந்த அ.ராமசாமி அவர்களால் உடனே பதிய முடியாததால் தடுமாறிவிட்டார். காலை பதிவுக்கான நேரம் தாண்டிவிட்டதால் குறிப்பிட்ட நபர்கள் யாரும் பதிவிடத்தில் இல்லை. பின்னர், யோகிதான் அவரை அழைத்துக் கொண்டு போய் மாநாட்டின் அதிகாரப்பூர்வத் திறப்பு விழாவரை கவனித்துக்கொண்டார்.

பிறகு அ.ராமசாமி அவர்களை மாநாட்டின் துவக்க விழாவிற்கு முன் சந்தித்தேன். பயண அனுபவங்களைப் பேசிக்கொண்டிருந்தோம். மாநாட்டின் தொடக்க விழா பொது உரைகள் குறித்தும் பேசிக்கொண்டிருந்தோம். பின்னர் குழலி அவர்கள் எழுத்தாளர் அண்ணன் இமையம் அவர்களை அழைத்து வந்து அறிமுகப்படுத்தி வைத்தார். அதுவரை இமையம் வருவது எனக்கு தெரியாது. தமிழர்களின் பொது அடையாளம் சார்ந்த உரையாடலாக இமையத்தின் பேச்சு இருந்தது. அவரின் இயற்பெயர் அண்ணாமலை. பள்ளி ஆசிரியர் ஆவார்.

அன்றைய இரவு இமையத்தின் மாநாட்டுக் கட்டுரை தலைப்பைக் கவனித்துவிட்டு நானும் தினகரனும் கட்டாயம் இந்த உரைக்குச் செல்ல வேண்டும் எனப் பேசிக்கொண்டிருந்தோம். அப்பொழுதும் எங்களுக்குத் தெரியாது அண்ணாமலைத்தான் இமையம் என. ‘2000க்குப் பிறகு வந்த தமிழ் நாவல்கள்’ குறித்து யாரோ அண்ணாமலை பேசப்போகிறார் என நினைத்தோம். பிறகுத்தான் மறுநாள் காலையில் அண்ணாமலை என்பது இமையம் எனத் தெரிந்தது.

அ.ராமசாமி ஐயாவின் மாநாட்டுக் கட்டுரையைக் கேட்க மறுநாள் நானும் தினகரனும் சென்றிருந்தோம். பலர் கொடுக்கப்பட்ட சுருக்கமான நேரத்தில் முழுமையான ஆய்வையும் சுருக்கிச் சொல்ல முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்த சூழலில் ஐயா அ.ராமசாமி அவர்கள் 13ஆவது நிமிடம் வரை மிகவும் கச்சிதமாகத் தன் ஆய்வை ஓர் இலக்கிய உரையைப் போல நிகழ்த்தினார். குறிப்பாக அவர் பேசிய தினைக் கோட்பாடுகள் பிரமிக்க வைத்தது. சங்க இலக்கியம் என்பது எத்துனைத் துல்லிதமான நுட்பமான இலக்கியம் என்பதை ஆழமாக உணர வாய்ப்பாக இருந்தது. உடல்கள் தீராப் பசியுடன் இன்னொரு உடல்களைத் தேடி அலைந்து கொண்டேயிருக்கின்றன என அவர் சொல்லும்போது உடல்களின் அரசியல் குறித்த புரிதல் உருவானது. உடல் என்பது வெறும் இரத்தத்தாலும் சதையாலும் ஆனது மட்டும் அல்ல; உடலுக்கு ஒரு மிகப்பெரிய தேவை இருக்கின்றது; உடலுக்கு பசி இருக்கின்றது; உடலுக்கு இயக்கம் இருக்கிறது; வயிற்றுப் பசியைப் போல உடலுக்கும் பசியிருக்கிறது எனச் சொல்லிக்கொண்டே போகலாம்

அன்று மாநாட்டிற்குப் பிறகு நானும் தினாவும் இரவில் அ.ராமசாமி தங்கியிருந்த அறைக்குச் சென்றோம். அங்கு இமையமும் இருந்தார். மலேசிய நாவல்கள் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அ.ராமசாமி அவர்கள் எழுதிய நூல்கள் சிலவற்றை கொடுத்தார். மேலும் கோட்பாடுகள் தொடர்பான எளிய விளக்கங்கள் உள்ள ஒரு நூலை நான் கேட்டதற்கிணங்க தமிழகத்திலிருந்து வாங்கி வந்திருந்தார். அதனையும் அவரிடமிருந்து பெற்றுக்கொண்டேன்.

மறுநாள் இமையத்தின் உரைக்குச் சென்றோம். அவர் கட்டுரையைப் படித்துக் கொண்டிருக்கும் போதே நேரம் முடிவடைந்துவிட்டதால் முழுக் கட்டுரையையும் வாசிக்க முடியாமல் போயிற்று. 2000க்குப் பிறகான நாவல்களில் பிராமணியத் தாக்கம் குறைந்து ஒடுக்கப்பட்டோருக்கான வாழ்க்கைகளைச் சொல்லும் நாவல்கள் அதிகம் வரத் துவங்கியதை மிகவும் விமர்சனப்பூர்வமாகக் குறிப்பிட்டார். அவரைப் பாதியிலேயே நிறுத்தும்படி கூறிய அரங்கத் தலைவரின் மீது தவிர்க்க முடியாத கோபம் உருவானது. நானும் தினாவும் முனகிக் கொண்டே அரங்கத்தைவிட்டு வெளியேறினோம்.


கே.பாலமுருகன்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்