பாபநாசம்: குளியலும் கும்மிருட்டும்

நெல்லையிலிருந்த இருபத்தி மூன்றாண்டுகளில் அதிகம் குளித்த அருவி பாபநாசம் அகத்தியர் அருவிதான். நீர்த்தேக்கம் பாபநாசம் கீழணைத்தேக்கம்தான். ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று தடவை பாபநாசம் கீழணையில் குளித்து வருகிறேன். ஏதாவது வாய்ப்புக் கிடைத்தால் பாபநாசம் போய் விடவே எப்போதும் விரும்புவேன். திருநெல்வேலிக்கு வரும் நண்பர்கள், உறவினர்கள் விரும்புவது குற்றாலம் . ஆனால் எனக்குக் குற்றாலம் விருப்பமானதாக இருந்த தில்லை. அந்தக் கூட்டத்திற்குள் நுழைந்து குளித்து வெளியேறுவதில் ஏற்படும் எந்தப் பிரச்சினையும் பாபநாசத்தில் இல்லை.
விக்கிரமசிங்கபுரம் பஞ்சுமில்லுக்கு நேரடியாகத் தண்ணீர் போகும்படி ஏற்பாடு செய்யவே வெள்ளைக்காரன் இந்தக் கீழணையைக் கட்டி நீரைத் தேக்கி இருக்கிறான். பாபநாசம் போனால் அருவியிலும் குளிக்கலாம். கீழணையில் நீச்சலும் அடிக்கலாம்; மீன்கடிகளை ரசிக்கலாம். என்னுடைய ஒருநாள் சுற்றுப் பயணத் திட்டத்தில் எப்போதும் பாபநாசம் கீழணைக் குளியலும் உள்ளடக்கமாகவே இருக்கும். மணிமுத்தாறு, மாஞ்சோலை, பாபநாசம் என்று சொல்லி விட்டுக் கடைசியில் தான் குற்றாலம் என்று சொல்வேன்.

பாபநாசம் போகும்போதெல்லாம் மணிமுத்தாறு போகலாம் என்று நினைத்தாலும் மணிமுத்தாறு அருவியில் எல்லாக் காலங்களிலும் நீர் வரத்து இருக்காது. அதேபோல் நினைத்த போதெல்லாம் மாஞ்சோலைக்கும் போய்விட முடியாது. மாஞ்சோலை சுற்றுலா வரைபடத்தில் இருக்கும் இடமில்லை. ஆங்கிலேயர்கள் காலத்திலிருந்தே மும்மையில் இருக்கும் முகம் தெரியாத முதலாளியிடம் தேயிலைத் தோட்டம் அது. மாஞ்சோலை, நாலு முக்கு. ஊத்து, குதிரை வெட்டி எனச் சின்னச் சின்னக்கிராமங்கள் இருந்தாலும் மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டங்கள் என்று தான் பிரபலம். அம்பாசமுத்திரம் பக்கம் இருக்கும் சிங்கம்பட்டி ஜமீனுக்கும் அந்தத் தோட்டத்தில் பங்கு இருப்பதாக அங்கு வேலை பார்க்கும் தோட்டத் தொழிலாளர்கள் நினைக்கிறார்கள். நம்பவும் செய்கிறார்கள். அவருக்கு பராமரிப்பு உரிமை இருக்கக் கூடும். முழு விவரம் யாருக்கும் தெரியவில்லை. மிகக்குறைவான தொழிலாளர்கள், கங்காணிகளுடன் மாஞ்சோலையின் குளுமையும் வளமும் வெளியில் தெரியாமல் பராமரிக்கப்படுகிறது. குறைந்த பட்சக் கூலிக்காகப் போராடிய மாஞ்சோலைத் தொழிலாளர்களின் பிரச்சினையைப் புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தான் வெளியே கொண்டு வந்தார். கொடைக்கானல், ஊட்டிக்கெல்லாம் போயிருக்கிறேன். மாஞ்சோலையின் இதமான குளிரும் பசுமையெழில் காட்சிகளுக்கும் கண்களை விட்டு அகலாத காட்சிகள். வனப் பராமரிப்பாளர்களிடமும் தோட்ட உரிமையாளர்களிடமும் அனுமதி பெற்றுத் தந்த நண்பர்களின் உதவியோடு இரண்டு தடவை மாஞ்சோலைக்குப் போன அனுபவம் காட்சி இன்பத்தின் சிகரங்கள்.

பாபநாசம் குளியல் மீது பிரிக்க முடியாத பந்தம் ஏற்படக் காரணம் என்னவாக இருக்க முடியும் என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை.ஒரு வேளை திருநெல்வேலியில் வேலைக்குச் சேர்ந்து முதல் வாரத்திலேயே ஏற்பட்ட நெருக்கம் காரணமாக இருக்கலாம். பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்தக் கருத்தரங்கம் ஒருவிதத்தில் தன்னார்வத்தின் வெளிப்பாடு எனச் சொல்லக்கூடிய கருத்தரங்கம். பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் துறை மாணவர்கள் தங்களுக்குள் ஓர் அமைப்பை உருவாக்கித் தங்களுக்கான வேலை வாய்ப்பை உறுதி செய்ய முயன்ற முயற்சியின் விளைவு அது. கருத்தரங்கைத் தொடங்கி வைக்க பேரா. தே.லூர்துவும், தஞ்சை பல்கலைக் கழக நாட்டார் வழக்காற்றியல் துறையின் ஆறு . இராமனாதனும் வந்திருந்தார்கள். தொடங்கி வைத்து விட்டுப் போய்விட்டார்கள். கருத்தரங்கை நட த்திட இலவசமாக இடமளித்த திருவள்ளுவர் கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியர்களும், அதன் முதல்வர் பெருமாள்சாமியும் தொடக்கவிழாவிற்கு வந்திருந்தார்கள். அதனால் பல்கலைக்கழகத்தைத் தாண்டிப் பழக்கம் ஏற்பட்ட இரண்டாவது கல்லூரியாகத் திருவள்ளுவர் கல்லூரி அமைந்த து. முதல் கல்லூரி சேவியர் கல்லூரியும் அதன் ஆய்வாளர்களும்.

நான் வெறும் பார்வையாளனாகவே போயிருந்தேன். பொதுவாக நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகள் மீது எனக்கு எப்போதும் எதிர்மறை விமரிசனங்கள் உண்டு. அடையாளம், பாரம்பரியம் என்ற பெயரில் சாதி மதக் குப்பைகளைத் தூக்கிச் சுமப்பதை நியாயப்படுத்துகிறவர்களுக்கு இந்திய நாட்டுப் புறவியல் உதவுவதாக இருக்கும், அதே நேரத்தில் மேற்கத்திய அறிவாளிகளின் கோட்பாடுகளைப் பொருத்தி பார்க்கும் சோதனைச் சாலையாக மூன்றாம் உலக நாடுகளை வைத்து வேடிக்கை பார்க்கும் ஒரு துறை என்பது என் கருத்து. இரண்டு நாள் கருத்தரங்கில் பகலில் கட்டுரை வாசிப்பு,. மாலையில் குளியல், இரவில் ஆற்றோர மண்டபத்தில் படுக்கை எனத் திட்டமிட்டிருந்தனர்.

பல்கலைக்கழகப் பேராசிரியரான நான் மண்டபத்தில் தங்க ஒத்துக் கொள்வேனா? என்ற தயக்கம் இருந்ததால் பக்கத்தில் விடுதி இருக்கிறது தங்கிக் கொள்ளலாம் என்று சொன்னார்கள். ஆற்று மணலிலும் கட்டாந்தரையிலும் படுப்பதில் இருக்கும் சுகம் பற்றி அவர்களுக்குக் கதைகள் சொன்ன பிறகுதான் என்னை அழைத்துப் போவதில் இருந்த தயக்கத்தைத் தூரப் போட்டார்கள். திருநெல்வேலிக்கும் பாபநாசத்திற்கும் இடையே உள்ள தூரம் 65 லிருந்து 70 கி.மீ. இருக்கும். பேருந்தில் போகாமல் சேவியர் கல்லூரித் தமிழ்த்துறையில் சு.சமுத்திரம் நாவல்கள் பற்றி முனைவர் பட்ட ஆய்வு செய்துகொண்டிருந்த மனோகரனின் மோட்டார் சைக்கிளில் போய். சனி, ஞாயிறு இரண்டு நாட்களிலும் கீழணையிலும் அகஸ்தியர் அருவியிலும் மாறிமாறிக் குளித்த சுகம் தான் திரும்பத்திரும்ப இழுத்துக் கொண்டே இருக்கிறது.

என்னுடைய குளியல் விருப்பத்தையும் ஆர்வத்தையும் எனது பேரன் நந்தாவுக்கு இரண்டரை வயதிலேயே கடத்தியிருந்தேன். அவனது முதல் ஆற்றுக்குளியல் அங்குதான். தாமிரபரணியிலும் பாபநாசம் அணையிலும் குளிப்பதில் எப்போதும் ஆர்வம். திருநெல்வேலிக்குக் கிளம்பினாலே “ தாத்தா …தைய் தைய்.. ” என ஆற்றுக் குளியலைத் தான் முதலில் சொல்வான். நீரில் முங்கிக் கண்களில் நீர்வழிய எழுந்து பார்க்கும் போது அவனுக்கு என்ன உணர்வு இருக்கும் எனத் தெரியாது. பயமற்ற ஆச்சரியத்துடன் சிரிப்பான். மகள் சிநேகலதா, மருமகன் பிர்ஜித் எனக் கிளம்பிப் போய் ஆசைதீரக் குளித்து விட்டு வருவோம். விக்கிரம சிங்கபுரத்துத் தாய் மெஸ்ஸின் இட்லியும் அதற்குத் தரும் சாம்பார், சட்னி, பொடியும் இன்னொரு இழுப்புக்காரணிகள்.

அகஸ்தியர் அருவிக்கும் மேலே பாணதீர்த்த அருவியென ஒரு அருவி இருக்கிறது. ரோஜா படத்தில் பாவாடை தாவணியில் மதுபாலா சின்னச் சின்ன ஆசை எனக் குதியாட்டம் போடும் அருவி தான் பாணதீர்த்த அருவி. பாபநாசம் அணைக்குக் கணிசமான நீரைக் கொண்டு வந்து சேர்க்கும் பாண தீர்த்த அருவியைப் போலச் சில அருவிகளும் பல ஓடைகளும் மலைக்குள் இருக்கின்றன. நகரத்து மனிதர்களின் நடமாட்டமில்லாத அந்த இடங்களைப் பார்க்க நினைத்தால் கொஞ்ச நாள் மேலே இருக்கும் காணிகளின் குடியிருப்பில் தங்க வேண்டும். அவர்களோடு கால்நடையாய் நடந்து போக வேண்டும். மான்களையும் மிளாவையும் பார்ப்பதோடு கரடிகளையும் சிறுத்தைகளையும் கூடப் பார்க்கலாம். இத்தகைய சாகசங்கள் செய்யும் ஆசையெல்லாம் இப்போதும் இருந்தாலும் உடம்பு ஒத்துழைக்க மறுக்கிறது என்பதும் உண்மை. கிராமத்து உடம்பை நகரத்து உணவு காவு வாங்கிச் சில பத்தாண்டுகள் ஓடிய பின்னும் கிராமத்து மனத்தோடு அலைவது சரியில்லை தான். ஆனாலும் அருவிக் குளியலும் ஆத்துக் குளியலையும் விட்டு விட முடியாது.

பாபநாசத்தில் பாணதீர்த்தத்துக்கும் கீழணைக்கும் இடையில் இருக்கும் அகஸ்தியர் அருவியில் எப்போதும் கூட்டம் நெரிபடும். அருவியில் குளிப்பதை விட தேங்கி நிற்கும் பள்ளங்களில் குளிக்கும் போது மீன்களின் கடியை ரசிக்கலாம். அகஸ்தியர் அருவிக்கும் மேலே போய் கீழே சுழன்று ஓடும் நீரின் காட்சியைப் பார்த்த போது தலை கொஞ்சம் சுற்றவே செய்தது. அப்படியொரு தலை சுற்றலில் தான் வ.வே.சு. அய்யர் மேலே இருந்து கீழே விழுந்து சுழலில் மாட்டிச் செத்திருக்க வேண்டும் என ஒருவர் ஐயம் கிளப்பினார். ஆனால் அங்கிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார் எனப் படித்த ஞாபகத்தைச் சொன்னேன். அந்த நண்பர் ஒத்துக் கொள்ளவில்லை. அவர் கல்யாணி தீர்த்தத்தில் தவறி விழுந்த விபத்தைத் தற்கொலை எனச் சொல்லி அனுதாபம் உண்டாக்கினார்கள் என்பது அவரது வாதமாக இருந்தது. சிறுகதை முன்னோடி, முதல் திறனாய்வாளர் என முதல்களைச் சொந்தமாக்கிய வ.வே.சு. அய்யருக்கு முதன் முதலாகக் ’குற்றவுணர்வில் தற்கொலை செய்து செத்துப் போன படைப்பாளி ’ என்ற பெருமையை உருவாக்கும் முயற்சியில் பிராமணச் சதி அப்படி வேலை செய்ததாக ஆணித்தரமாகச் சொன்னார். தமிழ் நாட்டில் என்ன பேச்சும், விவாதமும் கடைசியில் பிராமணர் x பிராமணரல்லாதார் முரண்பாடாக ஆகிவிடும் மாயம் எப்போதும் தொடரத்தான் செய்கிறது.
 
அகத்தியர் அருவிக்கும் பாபநாசம் அணைக்கும் இடையிலுள்ள சொரிமுத்து அய்யனார் கோயில் திருவிழா ஆடி அமாவாசையிலும் தைப்பூசத்திலும் கலைகட்டும். முத்துப்பட்டன் கதையோடு இணைக்கப்படும் அந்தக் கோயில் திருநெல்வேலி மாவட்டம் மட்டுமல்லாமல் தூத்துக்குடி, விருதுநகர், குமரியெனத் தென்மாவட்டங்கள் முழுவதும் அறிமுகமான நாட்டார்/ குலதெய்வக்கோயில். திருவிழா நாட்களில் நான் போனதில்லை. கூட்டம் இல்லாத நாட்களில் மாணவர்களோடும் குடும்பத்தினரோடும் போயிருக்கிறேன். அங்கு நின்று நகரும் ஆற்றில் குளித்ததில்லை.

பாபநாசத்தில் சிறப்பு முகாம்.

பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளராக ஆனபோது திருவள்ளுவர் கல்லூரியில் இரண்டு அணிகள் இருந்தன. அதன் பொறுப்பாளர்கள் இருவரும் வணிகவியல் துறையைச் சேர்ந்தவர்கள். இருவருமே மாணவர்களோடும் சமூகத்தோடும் உறவுடையவர்களாக இருப்பதில் ஆர்வம் கொண்டவர்கள். அவர்களில் ஒருவர் தேசிய ராணுவ அணியிலும் பொறுப்பில் இருந்தார். சுற்றுச்சூழல் கழகம், அரிமா சங்கம், விலங்குகள் கணக்கெடுப்பு என்று பலவற்றில் உறுப்பினர்; ஆர்வலராக இருந்தார். எந்த உதவியென்றாலும் செய்யத்தயாரானவர். அதனாலேயே ஒரு அகில இந்திய அளவில் நட த்தும் சிறப்பு முகாமொன்றை அங்கு நடத்திடத்திட்டமிட்டோம். இந்தியாவின் ஒவ்வொரு மண்டலங்களிலிருந்தும் நான்கு அணிகள் வீதம் மொத்தம் 16 அணிகள். இந்தியாவின் எல்லா மொழிக்காரர்களும் கலந்து நின்ற அந்த வளாகம் 1999 டிசம்பரில் இந்தியாவின் பன்முகத்தன்மையின் அடையாளத்தைக் கொண்டிருந்தது. அந்தப் பத்து நாட்களிலும் கீழணைக்குளியலும் அகஸ்தியர் அருவிக்குளியலும் தொடர்ந்த து. கல்லூரி முதல்வர் பெருமாள்சாமியும் குளியலில் ஈடுபாடு கொண்டவர். அவரது வீடு கல்லூரி வளாகத்திலேயே இருந்த து. காலையில் நடையையும் குளியலையும் இணைத்துக் கொள்கிறார். போகும்போது நடை; குளித்து முடித்தவுடன் வாகனப் பயணம். கரம்பற்றிப்பேசும் உடல்மொழியைக் கொண்ட அவரோடு ஏற்பட்ட நட்பு அவர் பணி ஓய்வுக்குப் பின்னும் நீடித்தது. பத்துநாள் முகாமின் போது சுடலையாண்டி உருவாக்கிய இன்னொரு ஆர்வம் மலையில் இரவில் தங்குவது என்பதாக மாறியது. ஒருவாரத்திற்கு முன்பு தேதியைச் சொல்லிவிடுங்கள் நான் எல்லா ஏற்பாடுகளையும் செய்து விடுகிறேன் என்று சொல்லியிருந்தார். அதனை உடனடியாகச் செய்யும் நேரம் வரவில்லை. சில ஆண்டுகளுக்குப் பின்பே வாய்த்தது.

சாகசப் பயணம்

மனிதர்களின் பயணங்களுக்குப் பின்னால் வெறும் கொண்டாட்ட மனநிலை மட்டுமே இருப்பதில்லை. திகைத்து நிற்கும் சாகசங்களும் தேவைப்படுகின்றன. தூக்கம் வராமல் போனதற்கு அந்த சாகசப் பயணமே காரணம் என்று தோன்றியது. நடை பயணங்களாலும்சரி, வாகனப் பயணங்களானாலும்சரி அதன் முடிவில் உடல் ஓய்வை எதிர்பார்க்கவே செய்கிறது.

நீண்ட பயணங்களுக்குப் பின் கிடைக்கும் ஓய்வும் தூக்கமும் பயணங்களை அசைபோடுவதற்கான வாய்ப்புகளாகி விடும் சாத்தியங்கள் கொண்டவை.காலையில் கிளம்பி மாலையில் வீடு திரும்பி விடும் குறும்பயணங்களுக்குப் பின்னால் அசை போடுவதற்கு ஒன்றும் இருப்பதில்லை. அதிலும் ஏற்கெனவே சென்று வந்திருந்த இடங்களுக்கே திரும்பவும் போகும்போது நினைத்துப் பார்த்துக் கொள்ள என்ன இருக்க முடியும்?. மேற்குத் தொடர்ச்சி மலையின் கிளைகளை இணைக்கும் பாபநாசம், சேர்வலாறு, காரையாறு அணைகள் ஒவ்வொன்றையும் திட்டமிட்டவர்கள் ஆங்கிலேயர்கள். அவற்றைச் சுற்றுலா இடங்களாக ஆக்காமல் வைத்திருக்கிறார்கள். இன்பச் சுற்றுலாவோ பக்திச் சுற்றுலாவோ ஒரே நாளில் முடியும் குறும்பயண வாய்ப்புகள் நெல்லைவாசிகளுக்கு அதிகம். வைணவர்கள் என்றால் நவதிருப்பதிகள்; சைவர்களென்றால் தாமிரபரணிக்கரைச் சிவன் கோயில்கள் என ஒரே நாளில் சென்று வர முடியும். இசுலாமியர்கள் என்றால் காயல்பட்டினம், ஏர்வாடி, உவரி எனப் பள்ளிவாசல்கள் நிரம்பிய ஊர்கள் இருக்கவே இருக்கின்றன. கிறித்தவர்களுக்கும் மாதாகோயில்களும் தேவாலயங்களும் இருநூறாண்டுப் பழைமையோடு நிற்கவே செய்கின்றன.

திருநெல்வேலியிலிருந்து காலையில் கிளம்பி முன்னிரவில் வீடு திரும்பும் இன்பச் சுற்றுலா இடங்கள் நிறைய உண்டு. அய்யன் திருவள்ளுவனும், அம்மன் குமரியும், ஆன்மீகவாதி விவேகானந்தரும் ஒருசேர நினைவுக்கு வரும் கன்னியாகுமரியே இரண்டு மணிநேரப் பயணம் தான். அதிகாலையில் நெல்லைக்கு வந்து செல்லும் கன்னியாகுமரி விரைவு வண்டியில் ஏறினால் சூரிய உதயம் பார்க்க குமரிமுனைக்குப் போய்விடலாம். தெற்கே இரண்டு மணிநேரப் பயண தூரத்தில் குமரிக்கடல் இருப்பது போல மேற்குத்தொடர்ச்சி மலைக்கூடுகளில் தென்மலை இருக்கிறது. செங்கோட்டையைத் தாண்டியவுடன் கேரள எல்லையாக நின்று வரவேற்கும் தென்மலையில் காலை தொடங்கி முன்னிரவு வரை இருந்து, இசை நீரூற்றுக் காட்சியையும் பார்த்துவிட்டு இரவில் நெல்லை திரும்பி விடலாம். பகலில் படகுப் போக்குவரத்து, தாவரவியல் பூங்கா, தொங்குபாலம், சிற்பக்காட்சிகள் எனப் பார்ப்பதற்கு நிறைய உண்டு

சாரல் வீசும் ஜூன், ஜூலை மாதங்களில் திருநெல்வேலியிலிருந்து காலையில் கிளம்பி குற்றாலத்திற்குச் சென்று பேரருவி, தேனருவி, ஐந்தருவி, செண்பகாதேவி அருவி, பழைய குற்றால அருவி என ஒவ்வொன்றாகக் குளித்துவிட்டு மாலையில் வீடு திரும்புவது போலவே மாஞ்சோலைக்கும் கூட சிறுபயணங்களை மேற்கொள்ள முடியும். காலையில் கிளம்பும் அரசுப் பேருந்தில் ஏறி மாஞ்சோலையில் இறங்கி அடுத்தடுத்து வரும் பேருந்துகளில் நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி, குதிரைவெட்டி என ஒவ்வொரு தேயிலைத் தோட்டங்களையும் பார்த்துக் கொண்டே கோதையாறு அணைக் கட்டு வழியாகக் கடைசிப் பேருந்து பிடித்து நெல்லை வந்து சேர்ந்து விடலாம். மாஞ்சோலையில் தேயிலை பயிரிடலாம் எனக் கண்டுபிடித்த வெள்ளைக்காரர்கள் கோல்ப் விளையாடிக் களித்த அந்த மைதானத்தில் விளையாடுவது போலப் பாவனை செய்து படம் பிடித்துக் கொள்ளலாம்.வரும்போது மணிமுத்தாறு அருவியில் சிறுகுளியலும் போடலாம்.

அரசுப் பேருந்தில் தனியாளாகப் போனால் மாஞ்சோலைக்குப் போய்வர எந்த அனுமதியும் வாங்க வேண்டியதில்லை. உங்கள் சொந்த வாகனத்தில் செல்வதாகவோ, தனியார் வாகனத்தை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு போவதாக இருந்தால் வனத்துறையிடம் அனுமதி வாங்கியாக வேண்டும். அது இருந்தால் தான் பர்மா-மும்பை வணிகக் குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டங்களுக்குள் நீங்கள் பயணம் செய்ய முடியும். கொடைக்கானல், ஊட்டி என பணம் பிடுங்கும் மலை வாசஸ்தலங்களை விடவும் கூடுதல் ரம்மியத்தோடும், குளிருமல்லாத வெயிலுமல்லாத தட்ப வெப்பத்தோடும் இருக்கும் மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டங்களுக்குள் போய்வரும் அனுபவம் தனியானது. பக்கத்திலிருக்கும் திருநெல்வேலிக்காரர்களில் எத்தனை பேர் அந்த பச்சைப் பசுங்கொழுந்துகளைக் கண்களால் தடவிப் பார்க்க ஆசைப்பட்டிருப்பார்கள்; போய்வர வேண்டும் என விரும்பியிருப்பார்கள் எனத் தெரியவில்லை.

இந்த இடங்களுக்கெல்லாம் பல தடவை குறும்பயணங்களாகப் போய்வந்திருக்கும் நான் இந்த முறை பாபநாசம் காட்டுக்குள் சாகசப் பயணத்திற்குத் தயாரானேன். வாகனத்தில் அதிக சக்தியுடன் கூடிய விளக்குகளைப் பொருத்திக் கொண்டு காட்டு விலங்குகளை அசையாமல் நிறுத்திப் பார்க்கும் ஆசையை மூட்டிய நண்பர் வேண்டுகோளுக்குச் சரியென்று சொல்லி விட்டேன். சக்தி வாய்ந்த விளக்கு வெளிச்சத்தில் காட்டு மிருகங்கள் அசையும் வழியறியாமல் திகைத்து நிற்பதைக் காணலாம் என்று சொன்னதைக் கேட்டுக் கிளம்பி விட்டேன். அதற்கான அனுமதியையும் ஏற்பாடுகளையும் அந்த நண்பரே செய்து விட்டு என்னைக் காட்டுக்குள் முன்னிரவு ஒன்பது மணிக்கு மேல் அழைத்துச் சென்றார்.

கானுயிர்களுக்குள் தான் எத்தனை வகைகள்?. தனது இருப்பைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கும் சில்வண்டுகள் தொடங்கி அசைந்து வரும் பாறையென நடந்து போகும் யானைகள் வரை முண்டன் துறை- களக்காடு வனச் சரகத்தில் உலாவுகின்றன. இந்தியக் காடுகளில் இருக்கும் சிறுத்தைப்புலிகளில் கணிசமான எண்ணிக்கை இருப்பதாகக் காட்டிலாகா அவ்வப்போது தரும் தகவல்கள் செய்தித்தாள்களில் வரும். நாங்கள் சென்ற வாகனம் காட்டுக்குள் நுழைந்த பத்து நிமிடத்திற்குள் இரண்டு மிளாக்கள் நின்றிருப்பதைப் பார்க்க முடிந்தது. குதிரை உயரத்திற்கு வளர்ந்திருந்த அந்த மிளாக்கள் விளக்கு வெளிச்சத்தில் அசையாமல் நின்றன. மிருகங்களின் மின்னும் கண்களைப் பொன்னுக்கு உவமையாகச் சொல்வது அவற்றின் கண்களை அவமதிப்பதாகும்.

தொடர்ந்து வாகனம் நகர்ந்து கொண்டே இருந்தது. குரங்குகளும் கீரிகளும் இரவிலும் மனிதத் தொல்லையைத் தாங்க முடியவில்லையே என்று நினைத்தபடியே ஓடிக்கொண்டிருந்தன. மலைமேல் இருக்கும் சொரிமுத்து அய்யனார் கோயிலுக்குச் செல்லும் சாலையில் போகலாமா? வேண்டாமா? என்று யோசித்துக் கொண்டிருந்த போது யானைப் பிளிறலா? பன்றி உறுமலா என்று கணிக்க முடியாத பெருஞ்சத்தம் கேட்டது. தூரத்திலிருந்து வருகிறது என்றால் யானைச் சத்தம்; பக்கத்தில் இருந்தால் பன்றியின் உறுமல் என்று விளக்கிக் கொண்டிருந்தார் அழைத்துச் சென்ற நண்பர். பன்றியில் கேளல் என்னும் வகையினம் இந்தக் காட்டுக்குள் அதிகம் என்றார். அவர் இரவிலும் பகலிலும் காட்டுப் பயணங்களை விரும்பி மேற்கொள்பவர். சத்தங்களை வைத்து என்ன மிருகம் அருகில் இருக்கிறது என்பதைச் சொல்லுவார்.

மிளாக்களும் மான்களும் சாலையோரங்களில் நின்று வேடிக்கை காட்டின. இரவில் கானுயிர்களைக் காணும் ஆசையோடு வரும் மனிதர்களை ஏமாற்றாத மிருகங்கள் மான்களும் முயல்களும் மட்டும் தான் போலும். நம்மை மகிழ்விக்கலாம் என வரும் அவற்றைத் தான் மனிதர்கள் சுலபமாக அடித்துச் சாப்பிட்டு விடுகிறார்கள். எப்போதாவது தென்படும் புலியின் கறியைத் தின்னும் ஆசை ஏன் மனிதனுக்கு வருவதில்லை? ஆம். வலியவர்கள் உண்கிறார்கள்; சாதுவானவர்கள் எப்போதும் எங்கும் இரையாகத்தான் வேண்டும் போலும். மனித நியதியைப் போல விலங்கு நியதிகளும் இருக்கக் கூடும்.

புலிகள் சரணாலயம் என்று வழியெங்கும் பலகைகள் வைக்கப்பட்டிருந்தாலும் புலிகளில் ஒன்றை நேரில் பார்க்கும் ஆசையை மனம் விரும்பியும் விரும்பாமலும் இயங்கியது. புலியை நேரில் பார்த்து அதைப் படம் பிடித்துவிட்டால் நமது சாகசம் நிறைவேறிய திருப்தி எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். “உங்களுக்கு யோகமிருந்தால் சிறுத்தையைப் பார்த்து விடலாம்” என்றார். சிறுத்தைகள் எப்போதும் தரையில் இருக்காது; மரங்களின் கிளைகளில் இலைகளோடு இலையாகப் படுத்துக் கிடக்கும்; விளக்குகளின் வெளிச்சம் கண்ணுக்கு நேராக அடிக்கப்பட்டால் அசையாமல் கிடக்கும்; பக்கவாட்டில் வெளிச்சம் பட்டால் பாய்ந்து வரவும் வாய்ப்புண்டு என்று சொன்னபோது புதுவகைப் பூவொன்றின் வாசம் போல நாசியுணர்ந்தது; நாமறியாத மிருகவாசனையோ என்று மனம் பீதியுற்றது. சிறுத்தை வராமல் இருப்பதே எனது யோகம் என்று உள் மனம் நினைத்துக் கொண்டது. மின்மினிப்பூச்சிகளோடு சாரல் மழை போட்டி போட்டது; காட்டின் மணமும் மண்ணின் மணமும் சேர்ந்து எங்கள் வாகனத்தை அடிவாரத்தை நோக்கித் திருப்பி விட்டன.

இரண்டு மணிநேரம் காட்டுக்குள் இருந்துவிட்டு அடிவாரத்தில் இருந்த தங்கும் விடுதிக்கு வந்தபோது காடு கூடவே வருவது போல இருந்தது. தொலைக்காட்சிப் பெட்டியில் கானுயிர்களைக் காட்டும் அனிமல் பிளானட் அலைவரிசையில் கண் நின்றது.கூட்டணிக் காட்சிகள் மாறியிருக்கிறதா? என அறியும் ஆசையில் செய்தி அலைவரிசைக்குத் தாவிவிட்டு அணைத்துவிட்டேன். தூக்கம் வராமல் கண் காட்டின் இருட்டுக்குள் அலைந்து கொண்டிருந்தது.

தாவி ஓடிய முயலோடு மனமும் தாவி ஓடியது. நல்லவேளை சிறுத்தையைப் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை என நினைத்துக் கொண்டே சிறுத்தை ஒன்றைப் பார்த்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என மனமும் யோசித்தது. மரணத்தை அண்மையில் சந்திக்கும் காட்சியாக இருந்திருக்குமோ என அச்சம் வந்து விலகியது. ஆம் மரணம் தானே அச்சத்தின் அடித்தளம்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்