சிங்கப்பூர் சேர்ந்துகொண்டது
பல்கலைக்கழக வேலைகள், கல்விசார்ந்த பயணங்கள் என்றால் தனியாகவே பயணம் செய்வேன். அதிலும் தமிழக/ இந்திய பயணங்களில் எப்போதும் குடும்ப உறுப்பினர்களைச் சேர்த்துக்கொள்வதில்லை. குறிப்பிட்ட பயணங்களோடு குடும்ப நிகழ்வுகள் அடுத்தோ, தொடர்ந்தோ வரும் சூழ்நிலையில் நானும் மனைவியும் சேர்ந்து போய்விட்டுப் பணி நேரத்தில் பிரிந்துவிடுவோம். ஆனால் வெளிநாட்டுப் பயணங்களில் அப்படி இருக்க நினைப்பதில்லை.
தமிழ்நாட்டிற்குள் போகும் கல்விப்புலப் பயணங்கள் வாரம் தோறும் இருக்கும் என்பதால் அவரும் வருகிறேன் என்று சொல்லவும் மாட்டார். அவருக்கு விருப்பமான கோயில்கள் இருக்கும் நகரங்களுக்குப் போவதாகச் சொல்லும்போதுகூட வந்தே ஆவேன் என்று அடம்பிடித்ததில்லை. நானே முன்வந்து அழைத்தால்கூட வரத்தயங்கவே செய்வார். அங்கு போனபின்பு அவரது விருப்பம் முழுவதும் நிறைவேறாமல் என்னுடைய வேலைகளில் மூழ்கிவிடுவேன் என்பது அவருக்குத் தெரியும் என்பதால் என்னோடு வருவதில் அதிக ஆர்வம் காட்டியதில்லை.
மலேசியப் பயணம் ஒருவாரத்திற்குள்ளான பயணம் என்பதால் உடன் அழைத்துப் போவதா? வேண்டாமா? குழப்பம் முதலில் இருந்த து, உலகத்தமிழ் மாநாட்டு ஆய்வரங்கங்களில் நான்கு நாட்கள் கழியும்; அந்த நேரங்களில் அவர் மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் தரும் அறையில் தனியாகத் தங்கவேண்டியதாக இருக்கும். இன்னொரு நாட்டில் தனியறையில் இருப்பதில் இருக்கும் சிக்கல்கள் எளிதானதல்ல. அதனால் உள்நாட்டுப் பயணங்கள் போலவே தனியாகச் சென்று திரும்புவது என்று தனியாளுக்கு மட்டுமே மாநாட்டில் கட்டணம் செலுத்திப் பதிவுசெய்திருந்தேன்.
அதில் திருப்பம் ஏற்பட்டது சிங்கப்பூரிலிருந்து வந்த அழைப்புதான். சிங்கப்பூரில் மனைவியின் நெருங்கிய உறவினர்கள் இருக்கிறார்கள். இப்போது அழைப்பு மனைவியின் அண்ணன் மகளிடமிருந்து. தற்செயலான தொலைபேசிப் பேச்சில் சிங்கப்பூரில் இருக்கும் அண்ணன் மகளிடம், ‘ உங்க மாமா மலேசியா வருகிறார்’ என்று சொன்னபோது, ‘ மலேசியாவும் சிங்கப்பூரும் ஒன்னுதான்; நீங்களும் வாங்க’ என்று அழைத்துவிட்டார் அவரது அண்ணன் மகள். அண்ணன் மகள் என்றால், நேரடியான அண்ணன் மகள் அல்ல. அவரது பெரியப்பாவின் மகன் வழியில் அண்ணன் மகள். பெயர் திலகராணி. என் மனைவிக்குப் பிரியமானவள். குழந்தையாக இருக்கும்போது என் மனைவியால் வளர்க்கப்பட்டவள் எங்கள் திருமணத்தின் போது நான்கு வயதுக்குள் இருக்கும். அவளது தந்தை இந்திய ராணுவத்தில் பணியாற்றி வீரமரணம் அடைந்தவர். அவள் பிறப்பதற்கு முன்பே அவர் இறந்துவிட்டதால் ‘அப்பனைத் தின்றுவிட்டு வந்த ராசியில்லாத பெண்’ எனக் கருதப்பெற்ற குழந்தை. அதனால் அவளது அம்மாவின் சீராட்டுக்குப் பதிலாக அத்தையின் மடியில் வளர்ந்த பெண். அந்த அத்தைதான் என் மனைவி. அதனால் அவளது அம்மாவைவிடவும் அத்தையான என் மனைவியை அதிகம் பிடிக்கும். அத்தையின் கணவரான என்னையும் அவளுக்குப் பிடிக்கும். அவளைக் கல்லூரியில் சேர்ந்து படிக்கச் சொன்னது நான் தான். சிங்கப்பூரில் திருமணம் செய்து கொடுக்கலாமா? என்ற ஆலோசனையில் கொடுக்கலாம் என்று சொன்னதும் நான் தான்.
சிங்கப்பூருக்கான மருமகளின் அழைப்பு இரண்டுவிதமாக இருந்தது. எப்படியும் அவளுக்கு அத்தையைச் சிங்கப்பூருக்கு அழைக்க வேண்டும் என்ற திட்டம் அதில் இருந்ததை உணரமுடிந்தது. அவளும் அவளது கணவர்- செல்வக்குமாரும் போட்டுச் சொன்ன பயணத்திட்டங்கள் இப்படி இருந்தன. இருவரும் நேரடியாக கோலாலம்பூர் போய்விட்டு, அங்கிருந்து சிங்கப்பூருக்கு வந்து ஒருவாரம் தங்கிவிட்டுப் போகலாம். அதில் சிக்கல்கள் இருக்கும் என்றால் இருவரும் முதலில் சிங்கப்பூர் வந்துவிட்டு, அத்தையை அவளிடம் விட்டுவிட்டு மாமா மட்டும் மலேசியா போய்விட்டுத் திரும்பவும் சிங்கப்பூர் வந்து அத்தையை அழைத்துக்கொண்டு ஊர் திரும்பலாம். இந்த இரண்டில் இரண்டாவது எனக்கு ஏற்புடையதாக இருந்தது. இந்த அழைப்பை ஏற்றுச் சிங்கப்பூர் போவதென்று முடிவானது.
சிங்கப்பூரில் மனைவிக்கு இருக்கும் உறவினர்களில் திலகராணி -செல்வக்குமார் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்தவர்கள். முதல் தலைமுறை அவர்களிருவருக்கும் தாத்தாவாக இருந்தவர். ஆங்கிலேயர்கள் ஆட்சியில் மதுரை மாவட்டத்திலிருந்து பஞ்சம் பிழைக்கக் கிளம்பிய தனியாட்களில் ஒருவர். தோட்ட த்தொழில் மட்டும் அல்லாமல் பலவகையான தொழில் செய்து சிங்கப்பூரில் வாழ்ந்துவிட முடியும் என்பதை உறுதி செய்துகொண்ட பின், கிராமத்தில் அம்போவென்று விட்டுவிட்டுப் போன மனைவியையும் கைப்பிள்ளையையும் திரும்ப வந்து அழைத்துப் போனவர். மனைவியை அழைத்துப் போனாலும் அங்கேயே ஒரு காதலும் உண்டு. இரண்டு பேருக்கும் சேர்த்துப் பத்துப் பிள்ளைகளைப் பெற்றுச் சிங்கப்பூரின் மனித வளத்துக்குப் பங்களிப்பு செய்தவர். அவரது ஐந்து ஆண்களும் ஐந்து பெண்களுமான வாரிசுகள் இரண்டாம் தலைமுறையினர். எல்லோருமே சிங்கப்பூரில் தான் இப்போதும் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரையும் ஒரு பயணத்தில் பார்த்துவிட முடியாது என்பதும் தெரியும். என்றாலும் விடுபட்ட சொந்தங்களைப் பார்ப்பது என்பது வாழ்க்கையின் மகிழ்ச்சியான கணங்கள் என்பதை மறுக்கமுடியாதல்லவா?
ஆங்கிலேயர்கள் காலத்தில் ஏற்பட்ட பஞ்சங்களில் குடும்பங்களாகவும் தனிநபர்களாகவும் வெவ்வேறு திசையில் பயணித்திருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்கள் தமிழ்நாட்டு கிராமங்களில் இன்றும் உள்ளன. அறுபது வீடுகள் கொண்ட எங்கள் கிராமத்தில் மலைக்காரர் குடும்பம் என ஒன்று இருந்தது போல ரங்கூன்காரர் குடும்பம் ஒன்றும் உண்டு. மலைக்காரர் குடும்பம் என்பது தேயிலைத் தோட்டங்கள் உண்டாக்கப்பட்டபோது பொண்டாட்டியும் புருசனுமாக மூணாறு மலையில் குடியேறி அங்கேயே தங்கிய குடும்பத்தின் பெயர். எப்படியாவது சொந்தங்களில் பெண் பிள்ளைகளைக் கொடுத்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் திரும்பவும் ஊருக்கு வரும்போது அந்தப்பெயரும் அந்தக் குடும்பத்தோடு ஒட்டிக் கொண்டுவிடும். அதே கதைதான் ரங்கூன்காரர் குடும்பத்துக் கதையும். என்ன வேலை என்று தெரியாமலேயே அழைத்துச் செல்லப்பட்டு மலேசியாவின் ரப்பர்க்காடுகளில் கூலியாக இருந்து இந்திய சுதந்திரத்திற்குப் பின்னர் ஊருக்கு வந்துபோகும் குடும்பத்தவர். ரங்கூன்காரராக இல்லையென்றால் ஒரு ஊரில் பினாங்குவாசியாக இருக்கலாம். இன்னொரு ஊரில் கெடாவாசியாக இருப்பார். அவர்களில் சிலர் பர்மாக்காரர்களாகவும் அறியப்பட்டதுண்டு. நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, ராமநாதபுரத்திலிருந்து இலங்கையின் தேயிலைத்தோட்டங்களை வளப்படுத்தியவர்களும் தென் தமிழகத்துக் கூலி விவசாயிகள் தான். எந்த நாட்டுக்கு – எந்த ஊருக்கு என்று சொல்லாமலேயே கப்பலேற்றி அழைத்துப் போன வெள்ளையர்கள் எந்தப் பகுதித் தோட்டங்களில் தொழிலாளிகளாக ஆக்கினார்களோ அந்த ஊர்க்காரராக இங்கே அறியப்படுவார்கள். அவர்கள் சொல்லும் கதைகளை விடவும் மிலிட்டரிக்காரர்கள் சொல்லும் கதைகள் நம்ப முடியாதவைகளாக இருக்கும். இந்திய ராணுவத்துக்குப் போனவர்களும் அயல்நாட்டிலிருந்து வந்தவர்களைப் போலவேதான் கதைகளை அளந்துவிடுவார்கள்
சிங்கப்பூருக்குப் போனவருக்கு ஒரு பிள்ளையையாவது சொந்தத்தில் தரவேண்டும் என்ற நினைப்பு உருவாவதில் தங்கியிருக்கிறது ஊர்ப்பற்று. தமிழ்நாட்டில் திருமணமாகி வந்த பெண்ணைப் பேறுகாலத்திற்காகச் சிங்கப்பூருக்கு அழைத்துப் போய் அவருடைய மகன்களுக்கு அங்கு குடியுரிமை பெற உதவியிருந்தார். அந்தப் பையன்களுக்குத் திரும்பவும் தமிழ்நாட்டில் உறவில் திருமணம் செய்ய வேண்டுமென்று தனது தம்பி வழிப் பேத்தியைத் திருமணம் செய்து கொண்டு போனார். இப்படி கொடுத்தும் எடுத்துமாக நடக்கும் உறவின் தொடர்ச்சிதான் சிங்கப்பூரில் மனைவிக்குச் சொந்தமாக இருந்தவர்கள். அங்கிருந்து இங்கு வரும்போதெல்லாம் சிங்கப்பூருக்கு வாருங்கள் என்று அழைத்துவிட்டுப் போவார்கள். மெனக்கெட்டுப் போகாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்த என்னை மலேசியா போகும்போது சிங்கப்பூர் போகலாம் என்ற பேச்சு யோசிக்க வைத்த து.
மலேசியா பயணத்தோடு சிங்கப்பூரையும் சேர்த்துக் கொள்ளலாம். என்னுடைய அக்காமார்களை இப்போதாவது பார்க்க வேண்டும் என்று மனைவி சொல்ல ஆரம்பித்தார். எனக்கும் சிங்கப்பூர் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. சரி போகலாம் என்று சொல்லிவிட்டேன். ஆனால் மலேசிய மாநாட்டிற்கு தனியாளுக்கான பதிவுக்கட்டணம் மட்டுமே கட்டியிருந்தது உறுத்திக்கொண்டே இருந்தது. அதனால் திலகராணி – செல்வக்குமார் சொன்ன இரண்டாவது பயணத்திட்ட த்தை நடைமுறைப்படுத்துவது என்று முடிவுசெய்தோம். நான் சிங்கப்பூரில் மருமகளோடு இருக்கத் தயார்; நீங்கள் மட்டும் மலேசியா போய்விட்டுத் திரும்பவும் சிங்கப்பூர் வந்தால் போதும். நான் சிங்கப்பூரிலேயே இருக்கிறேன் என்று சொல்லிவிட்டார்.
சிங்கப்பூர் பயணம் உறுதியான போது அதையும் கல்வி மற்றும் இலக்கியம் சார்ந்த பயணமாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையைப் புதிதாக உருவான முகநூல் நட்புகள் தந்தன. சிங்கப்பூரிலிருந்து தினசரி எனது முகநூல் பதிவுகளுக்கு முதல் விருப்பத்தைப் போடுபவராக இருந்தவர் கடலூரான் ஹாஜாமொய்தீன். தொடர்ச்சியாக அவரது விருப்பக்குறிக்குப் பின்னால் ஒருநாள் அவரது பெயருக்குப் முன்னால் இருக்கும் ‘கடலூரான்’ பற்றிக் கேட்டுவிட்டு, எனது பாண்டிச்சேரி காலத்தைப் பற்றிச் சொன்னதின் தொடர்ச்சியாக நெருக்கமானவர்களாக மாறியிருந்தோம். அவரிடம் தான் “இப்படியொரு உறவினர்கள் சிங்கப்பூரில் இருக்கிறார்கள்; வரலாம் என்றிருக்கிறேன்; இதனைத் தாண்டி கலை, இலக்கியம் சார்ந்த நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன்” என்று சொன்னேன். எந்த த்தயக்கமும் இல்லாமல் ஏற்பாடு செய்யலாம் என்று சொல்லிவிட்டார்.
சிங்கப்பூர் எழுத்தாளர்களில் முகம் தெரியாமல் – கடிதத்தொடர்பும் இல்லாமல் அறிமுகமான ஒருவர் உண்டு. சுந்தர ராமசாமி பல்லக்குத்தூக்கிகள் கதையை நாடகமாக்கியபோது அதைச் சிங்கையில் மேடையேற்றியவர்; பெயர் இளங்கோவன். அந்த நாடகம் எனது முதல் புத்தகமான ‘நாடகங்கள் விவாதங்கள்’ என்ற தொகுப்பில் மூன்றில் ஒரு நாடகமாக இருந்தது. சிங்கப்பூர் எழுத்தாளர்களின் சிறுகதைகளில் சிறந்த கதையைத் தேர்வுசெய்வதற்காகப் போனபோது அந்தப் புத்தகத்தை வாங்கிப் போன சுந்தரராமசாமி சிங்கப்பூரில் இருந்த இளங்கோவனிடம் கொடுத்துவிட்டு வந்திருப்பதாகவும் மேடையேற்றும்போது உங்களை அழைத்தாலும் அழைக்கலாம் என்று சொன்னார். அப்படி அவர் அழைக்கவில்லை. ஆனால் அவரோடு சில காலம் தொடர்பிருந்தது. அவரது நாடக நூலொன்றைச் சென்னையில் அச்சிட்டு எடுத்துச் செல்ல வந்தபோது என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு அந்த நூலைப் புதுவை முகவரியை வாங்கி நூலை அனுப்பிவைத்தார். ஊடாடி என்ற தலைப்பில் எழுதப்பெற்ற அந்நாடகம் இருமொழி நாடகமாக அச்சிடப்பெற்றதாக நினைவு. தமிழ்ப் பனுவல் குறித்து இரண்டு மாதத்திலேயே புதிய கோடாங்கியில் விரிவான அறிமுகம் ஒன்றை எழுதியிருந்தேன். நாடகத்துறையை விட்டுவிட்டு திருநெல்வேலிக்கு வந்தபின்பு தொடர்பு விட்டுப்போய்விட்டது. ஆனால் அவர் இப்போது என்ன செய்கிறார்; நாடகத்துறையில் தான் செயல்படுகின்றாரா? என்பது தெரியவில்லை. இளங்கோவன் என்ற அந்த நாடகக்காரரை சிங்கப்பூரில் இருந்த மற்றவர்களுக்கு அதிகம் தெரிந்திருக்கவில்லை.
சிங்கப்பூர் பல்கலைக்கழகம் ஒன்றில் அமெரிக்கன் கல்லூரியில் எனக்கு முன்பாகப் படித்தவர் ஒருவர் இருக்கிறார். அமெரிக்கன் கல்லூரில் தற்காலிகப் பணியில் நான் வேலைக்குச் சேர்ந்தபோது நிரந்தரப் பணியில் சேர்ந்தவர் முனைவர் வேல்முருகன். சிங்கப்பூரில் வேலை கிடைத்த தால் அங்கேயே போய்விட்டார். அவர் பணியாற்றும் பல்கலைக்கழகத்திற்குப் போய்ப் பார்த்துவிட்டுத் தமிழ்க் கல்வி அங்கு எவ்வாறு உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளலாம் என்று திட்டமிட்டேன். அத்தோடு அவரிடமிருந்து ஓர் அழைப்புக் கடிதம் பெற்றுவிட்டால் அந்தப் பயணக் காலத்தை பணிமேல் விடுப்பாக மாற்றிக்கொள்ளலாம் என்பதால் அவரைத் தொடர்பு கொண்டு பேசியபோது கொஞ்சம் யோசித்தார். மலேசியாவில் நடக்கும் உலகத்தமிழ் மாநாட்டிற்கு அவரது துறையில் இருக்கும் அனைவரும் போக இருப்பதால், அந்த நேரத்தில் துறையில் ஏதும் நிகழ்வு நட த்துவதும் மாணவர்களைச் சந்திப்பதும் இயலாது என்று பதில் சொன்னார். மாநாட்டிற்குப் பின்னர் ஒரு வாரம் கழித்து என்றால் ஏற்பாடு செய்யலாம் என்பதுபோலச் சொன்னார். அவரது தயக்கம் புரிந்ததால் அதைக் கைவிட்டேன். அங்கிருக்கும் இலக்கிய அமைப்பு ஒன்றின் அழைப்புக் கடிதம் கிடைத்தால் கூடப் போதும் என்று பல்கலைக்கழகத்தில் பணிமேல் விடுப்பு அளிக்கும் அதிகாரி சொன்னதால் அதற்கான முயற்சியில் ஈடுபட்டபோது சிங்கப்பூரில் இருக்கும் முகநூல் மற்றும் எழுத்தாள நண்பர்களின் உதவிகளை நாடினேன்.
சிங்கப்பூரில் நவீனத்துவத்தை உள்வாங்கி எழுதும் புதிய எழுத்தாளர்கள் வரிசை ஒன்று உருவாகி வருவதை எனது வாசிப்பின் வழியாக அறிந்திருந்தேன். லதாவின் எழுத்துகளை காலச்சுவடில் வாசித்திருந்தேன். எனது நூல்களை வெளியிடும் உயிர்மை பதிப்பகம் வழியாகச் சில சிங்கை எழுத்தாளர்களின் நூல்கள் வெளியிடப்பட்டிருந்தன. அவற்றுள் ஷா நாவஸ் என்பவரின் சிறுகதைத் தொகுதி ஒன்றையும் உணவு தொடர்பான நூலையும் மனுஷ்யபுத்திரன் தந்ததால் வாசித்திருந்தேன். மனுஷ்ய புத்திரனும் அங்கே போய்விட்டு வந்து அவரது அனுபவங்களைச் சொல்லியிருந்தார். அத்தோடு அம்ருதா பதிப்பகம் வெளியிடும் முத்துக்கள் பத்து என்ற சிறுகதைத் தொகுப்பு வருசை ஒன்றுக்கு முன்னுரை ஒன்று வேண்டும் என்று திலகவதி கேட்டார். அவர் கேட்டு எதையும் மறுத்த தில்லை. அவர் அனுப்பி வைத்த பத்துக் கதைகளையும் படித்துவிட்டு முன்னுரை எழுதிக்கொடுத்தேன். கதைகளின் நிகழ்களம் சிங்கப்பூர், மலேசியா, இந்தியா என்ற பகுதிகளாகவும் இங்குமங்குமான அலைவுகளே கதைகளின் சிக்கல்களாகவும் இருந்தன. அந்தக் கதைகளின் ஆசிரியரான ஜெயந்தி சங்கரும் சிங்கப்பூரில் இருப்பவர் என்பது புத்தகம் வந்த போது தெரிந்தது. இவர்களில் சிலரைத் தொடர்புகொண்டு இலக்கிய அமைப்பு ஒன்றின் அழைப்புக் கடிதம் பெற முயன்றேன்.
முயற்சி கைகூடி, சிங்கப்பூர் நூலக வாசக வட்டத்தின் சிறப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு நாடகவியல் குறித்து ஓர் உரை நிகழ்த்த அழைப்பு கிடைத்தது. சிங்கப்பூர் வாசகர் வட்டம், அதன் செயல்பாடுகள் முன்பே முகநூல் வழியாகத் தெரிந்த ஒன்று . தமிழ்நாட்டிலிருந்து சென்ற சில எழுத்தாளர்கள் அவ்வாசக வட்டத்தின் சிறப்புக் கூட்டங்களில் பங்கேற்ற அனுபவங்களை எழுதியிருக்கிறார்கள். அழைப்பை அனுப்பியவர் நூலக வாசகர் வட்டத்தின் தலைவராக இருந்த சித்ரா அவர்கள். அவரிடம் எடுத்துச் சொன்னவர்கள் ஷாநாவாஸும் கடலூரானும். அவ்விருவரையும் தொலைபேசி வழியாகப் பேசி ஏற்பாடு செய்தவர் ஜெயந்திசங்கர். வாசிப்பும் எழுத்தும் இப்படியான உதவிகளைப் பெற்றுத்தந்துவிடும். ஒரு கூட்ட த்திற்கு ஏற்பாடு செய்வதின் வழியாக ஒரு பயணத்தின் கண்ணிகளை எளிதாக அவிழ்த்துவிட முடியும் என்பதை அனுபவங்களின் வழியாகச் சொல்லவேண்டும் என்பதற்காகவே இந்த விவரிப்புகள் எல்லாம்.
பயணத்தில் சிங்கப்பூர் சேர்ந்துகொண்ட போது பயணப்பாதையும் மாறியது. சென்னை – சிங்கப்பூர் -கோலாலம்பூர் என்று போய்விட்டுத் திரும்பவும் கோலாலம்பூர் -சிங்கப்பூர் -சென்னை என்று மாற்றம் செய்ய வேண்டிய கட்டாயத்தை தந்தது விமானக் குழுமங்கள் தரும் பயணச் சலுகையும் தான். பொதுவாக வெளிநாட்டுப் பயணங்களுக்கு ஒரு விமானக் குழுமத்தின் பாதையொன்றைத் தெரிவுசெய்து ஒரு நாட்டின் ஒரு நகரத்தில் இறங்கிவிட்டு பயணமுடிவில் அதே நகரத்திலிருந்து திரும்பும் விதமாகப் பயணத்திட்டம் அமைந்தால் பயணக்கட்டணத்தில் சலுகை கிடைக்கும். போகவும் வரவுமான ஏற்பாட்டிற்குப் பதிலாக ஒற்றைவழி மட்டும் என்றால் கட்டண விகிதங்கள் கூடும். இந்தக் காரணங்களுக்காகவே பலரும் – சொந்தப்பணத்தில் பயணம் செய்யும் பலரும் போகவும் வரவுமான பயணத்திட்டத்தைத் தேர்வு செய்வார்கள். அரசாங்கம் அல்லது வேலை பார்க்கும் குழுமங்கள் தரும் பணத்தில் பயணம் செய்பவர்கள் அதுபற்றிக் கவலைப்படுவதில்லை.
என்னுடைய இந்தப் பயணத்தின் ஒரு பகுதியைப் பல்கலைக்கழகம் அதன் கல்விப்பங்கேற்பு வரம்புக்குள் வழங்கும் என்றாலும் அது முழுமையான பயணத்திற்கும் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. கிடைத்தவரை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று முடிவு செய்து இரண்டு வாரப் பயணத்தை இறுதி செய்தேன். 2015, ஜனவரி 24 முன்னிரவு கிளம்பி சிங்கபூருக்கு அடுத்த நாள் அதிகாலையில் இறங்கும் விதமாக பயணச்சீட்டு வாங்கப்பட்டது. கிளம்பிய நேரம் அதேபோல் பிப்ரவரி 7 ஆம் தேதி சிங்கப்பூரில் அதிகாலை கிளம்பி 05.50 விமானத்தைப் பிடித்துச் சென்னையில் காலை நேரத்திலேயே வந்திறங்கும்போது நேரம் 07.40. 110 நிமிடப் பயணம் போலத் தோன்றலாம். ஆனால் சிங்கப்பூருக்கும் சென்னைக்குமிடையே இரண்டரை மணி நேரம் – 150 நிமிடங்கள் வானத்தில் காணாமல் போய்விடும் என்பதைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தியாவிலிருந்து கீழைத்தேய நாடுகளுக்குள் நுழையும் போது உங்கள் வாழ்க்கையில் சில மணிநேரங்களைத் தொலைத்துவிடுவீர்கள். மேற்கு நோக்குப் பயணத்தால் பயணதூரத்திற்கேற்ப வாழ்க்கையின் காலமும் கூடிக்கொள்ளும். கிழக்கும் மேற்கும் திசைகளால் மட்டும் முரண்பட்டவையல்ல.
கருத்துகள்