ஆகச்சிறந்த நல்லாணும் நல்லாளும் - BOY BESTIE AND GIRL BESTIE

 

உருளும் நிகழ்வுகளால் அல்லது சுழலும் சொற்களால் அலைகிறது நமது காலம். சுழலும் சொற்களை அல்லது உருளும் நிகழ்வுகளை உற்பத்தி செய்வதில் அனைத்து வகையான ஊடகங்களும் போட்டியில் இருக்கின்றன. எப்போதும் பெரும் நிகழ்வுகளைத் திறப்புச் செய்திகளாக (Breaking News) உருட்டிவிடும் தொலைக்காட்சி ஊடகங்களுக்குப் போட்டியாக சிறு நிகழ்வுகளை உண்டாக்கி உருட்டி விடும் வேலையைச் சமூக ஊடகங்கள் செய்கின்றன. ஒருவிதத்தில் பெரும்போக்குக் கதையாடல்(Grand Narration)களுக்குப் போட்டியாகச் சிறுபோக்குக் கதையாடல்(Little Narration)களை உற்பத்தி செய்யும் இப்பாவனைகள் பின் நவீனத்துவ விளையாட்டுகளில் ஒன்று. இவ்வகை விளையாட்டுகள் இருவேறு இணைகோடுகளில் பயணிப்பவை அல்ல. இரண்டும் கொண்டும் கொடுத்தும் அழிந்தும் அழித்தும் நகர்பவை. 
பின் நவீனத்துவ காலத்தை – அதனோடு இணைந்து பயணிக்கும் மனித உயிரிகளின் மனநிலையை- விளக்கியவர்கள் இவ்வகை விளையாட்டுகளைப் பாவனை விளையாட்டுகள் என்கிறார்கள். பாவனை விளையாட்டுகளுக்கான கருவிகளாக இருப்பவை சொற்கள் மற்றும் பிம்பங்கள். சொற்களும் பிம்பங்களும் நேரடியாகத் தரும் அர்த்தங்களைத் தாண்டிக் குறியீட்டு அர்த்தங்கள் வழியாக விதம் விதமான அலைவுகளை உருவாக்கிக் களிப்பூட்டலாம் அல்லது குற்றவுணர்வுக்குள்ளாக்கலாம். ஓடிப்பிடித்து விளையாடும் களிப்புக்கும், கள்ளன் -போலீஸ் விளையாட்டின் ரகசியங்களுக்கும் இருக்கிற வேறுபாடுகள் போல விதம்விதமான மனச் சாய்வுகளை - சிக்கல்களை -சிதைவுகளை- கொந்தளிப்புகளை- நிதானங்களை அவை உருவாக்கித் தரக்கூடும். 
சொற்களும் பிம்பங்களும் அவை வெளிப்படும் ஊடகங்களுக்கேற்பச் செய்தி, விவாதம், கலைப் பொருள், இலக்கியம் எனப் பெயர் தாங்கி வெளிப்படுகின்றன. ஒரு ஊடகத்தின் வெளிப்பாட்டு வடிவத்தை இன்னொரு ஊடகம் தனதாக்கி, அதன் முதன்மை அடையாளத்தை அழித்து இன்னொன்றாக்கி விளையாடும் விளையாட்டும் நமது காலத்தின் – பின் நவீனத்துவ – விளையாட்டுகளே. ஆணும் பெண்ணும் தனித்திருத்தலையும் பரிமாறிக்கொள்ளுதலையும் குறிப்பிடுவதற்கு வெளிப்படையான அல்லது மரபான சமூகம் பயன்படுத்திவந்த சொற்களின் போதாமையின் காரணமாக உருவான ஒரு சொல் நல்லான்/ள்(Bestie). அந்த சொல்லின் பயன்பாடு புதிது என்பதாலேயே அந்த உறவே புதிது எனக் கொள்ளவேண்டியதில்லை. இவ்வகை உறவுகளை அங்கீகரித்து வெளிப்படையாகப் பேசும் சமூகமாக – காலகட்டமாக இப்போதைய சமூகம் மாறியிருக்கிறது என்பதானாலே அந்தச் சொல்லும் அதன் நேரடி அர்த்தமும், குறியீட்டு அர்த்தமும் விவாதப்பொருளாக மாறியிருக்கின்றன. 
இந்தப் பின்னணியில் தான் மனுஷ்யபுத்திரன் எழுதிய’பாய் பெஸ்டி’களின் கதை என்ற நீண்ட கவிதை, கவனிக்கத்தக்க ஒன்றாக – உருளும் செய்தியாகவும் பிம்பங்களாகவும் அலையத் தொடங்கியது. அதனை வெளிப்படையாக ஏற்று விவாதிக்கும் மனநிலை கொண்டவர்களாலும் மறுத்து நிராகரிக்கும் மரபுப் பார்வையாளர்களாலும் பந்தாக மாறியிருக்கிறது. ஒரே பந்தாக அல்ல. ஆடப்படும் விளையாட்டுகளின் பந்தாக. கால்பந்தாட்ட மைதானத்து உதைபந்து போலவும், கைப்பந்து விளையாட்டுக்கார்களிடம் அடிவாங்கும் பந்தாகவும், கூடைக்குள் திணிக்கப்படும் பந்தாகவும் பாவிக்கப்பட்டு அலைந்து கொண்டிருக்கிறது. 
‘பாய்பெஸ்டி’யை உருவாக்கி உருட்டிவிட்ட மனுஷ்யபுத்திரன் தான் கவிஞர் என்பதால், அதைக் கவிதை எனப் பெயரிட்டுத் தள்ளிவிட்டார். அதனைப் பலரும் ஏற்று விளையாண்டு கொண்டிருக்கிறார்கள். கவிதையின் இயல்பியல், கவிதையின் வேதியியல் தெரிந்ததாக நம்பும் சிலரோ அதை நிராகரிக்கப்பார்க்கிறார்கள். ஆனால் கவிதையைக் கவிதையெனச் சொல்ல ஒரு இயல் இருக்கிறது. அதன் விதிகளைப் பொருத்திப் பார்த்துக் கவிதை இல்லையென மறுத்திருக்கலாம். அப்படியொரு முயற்சியைக் கைவிட்டுவிட்டு உருட்டியவரின் ஆட்டத்திறன், உடல் திறன் போன்றவற்றை முன்வைத்து விவாதிக்கிறார்கள். 
கவிதையை கவிதையென அடையாளம் காட்டும் கவிதையியல் முதன்மையாகச் சொல்வோர் – கேட்போரிடையே நிகழும் உரையாடலாக அல்லது நிகழ்வாகக் கவிதையை வரையறை செய்கிறது. சொல்வோர், கேட்போர், நிகழ்வு இம்மூன்றும் உருவாக்கப்படும் நிலையில் கவிதை முழுமை அடைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. உலக அளவில் கவிதைக்கான விமரிசனங்கள் இதனையே வலியுத்துகின்றன. தமிழின் தொடக்கக் கவிதையியலான தொல்காப்பிய இலக்கியவியல் விரிவாகப் பலவற்றைப் பேசினாலும் சாரமாக வலியுறுத்துவது 
1. பாடலுக்குள் இடம்பெறு உணர்வு நிலை, 
2. பாடலுக்கான நிலவியல் அடையாளங்களைத் தரும் முதல் மற்றும் கருப்பொருள்
3. இவ்விரண்டையும் ஏற்று வினையாற்றும் மாந்தர்கள் 
என்ற மூன்றையும் தான். மனுஷ்ய புத்திரனின் பாய்பெஸ்டி இவற்றை உருவாக்கித் தந்திருக்கிறதா? என்று வாசித்துப் பார்த்தால், அதற்குள் ஒரு கவிதை சொல்லி உருவாக்கப்பட்டிருப்பதை உணரமுடிகிறது. ஆனால் கேட்போர் எவரும் கவிதைக்குள் இல்லை.அந்த இடத்தில் யாரும் அமர்ந்துகொள்ளலாம். 
தமிழ்க் கவிதை மரபு, கவிதைக்குள்ளேயே சொல்வோரும் கேட்போரும் உருவாக்கப்பட்டு நிகழ்வு அல்லது சம்பவங்களும் தரப்படும் கவிதைகளை அகக்கவிதையாக அடையாளப்படுத்தியிருக்கிறது. பெயர் சொல்லக்கூடாது–பெயர் அறியும் விதமாக இருக்கக் கூடாது (சுட்டி ஒருவர் பெயர்கொளப்பெறாஅர்) என்ற விதியை மட்டும் வைத்துக் கொண்டு அகம், புறம் எனப் பிரித்த பிரிப்பைத் தாண்டி அதற்கு மாறாகச் சொல்பவர் மட்டும் உருவாக்கப்பட்ட கவிதைகள் பெரும்பாலும் புறக்கவிதைகளாக அடையாளப்பட்டிருக்கிறது. அகக்கவிதை வடிவமைப்பிலேயே பக்திக்கவிதைகளும் உருவாகியிருக்கின்றன. சொல்பவள்/ன் பக்த நிலையிலும் இறை கேட்குமிடத்திலும் நிறுத்தப்பட்டிருக்கிறது. அகம் அல்லது பக்திக் கவிதையின் இன்னொரு வடிவமே நவீனத்துவக் கவிதைகளில் உள்முகவடிவம் கொள்பவை. புறக்கவிதையின் தொடர்ச்சியை அறக்கவிதைகள் கைக்கொண்டுள்ளன. ஒருவரிடம் பேசும் அறங்கள் அல்லது புறவுலக வாழ்வாகவும், பலருக்கும் சொல்லும் ஆலோசனைகளாகவும் புறயதார்த்தம் பேசப்படுகின்றன. தனிப்பாடல்கள் வழியாகப் புதுக்கவிதையில் வானம்பாடிகள் வெளிச்சங்களாக வெளிப்பட்டனர். இப்போதும் அரசியல் கவிதைகள் எழுதிய / எழுதும் ஆத்மாநாம், இன்குலாப், யவனிகா ஸ்ரீராம் போன்றவர்கள் அப்படியே நீள்கிறார்கள். ஈழத்துப் போர்க்கால/ போர்க்களக்கவிதைகளை அப்படித்தான் வாசிக்க முடியும். 
தமிழின் முதன்மையான பனுவல்களுள் ஒன்றான திருக்குறளின் மூன்று பால்களும் மூன்றுவிதமான கவிதைச் சொல்லாடலைக் கொண்டிருக்கின்றன. அறத்துப்பாலின் சொல்லி (Narrator) தன்னை வாழ்க்கையின் விதிகள் அனைத்தையும் அறிந்த ஒருவரின் தன்னிலையில் நிறுத்திக்கொண்டு அறங்களை வலியுறுத்துகின்றார். ஆனால் பொருட்பாலில் இடம் பெறும் சொல்லியோ தெரிந்த உண்மைகளை உறுதியாகவும், சில நேரங்களில் ஐயங்களாகவும், கூடுதல் வரையறைகளைத் தந்தால் நல்லது எனத் தோன்றும்போது விளக்கங்களையும் தருகிறார். மூன்றாவது பாலான காமத்துப் பாலில் மூன்று நிலைகளும் இருக்கின்றன. சொல்லியும் கேட்போரும் உள்ளேயே வெளிப்படும் குறள்களும் காமத்துப்பாலில் உண்டு. சொல்பவர் மட்டும் வெளிப்படும் குறள்கள் மட்டும் சில அதிகாரங்களில் இருக்கின்றன. சில அதிகாரங்களில் கேட்போர் மட்டுமே வெளிப்படுவதையும் காண்கிறோம். முழுமையும் அக/பக்திக்கவிதை வடிவத்தில் சொல்வோரையும் கேட்போரையும் உள்ளேயே வைத்துக் கவிதைச் சம்பவத்தை நிகழ்த்துகிறது. இவை ஒவ்வொன்றையும் எடுத்துக்காட்டுகளோடு விளக்கவேண்டும். அதை வேறொரு நேரத்தில் செய்யலாம். இப்போது மனுஷ்ய புத்திரனின் ‘பாய் பெஸ்டி’ யை வாசிக்கலாம். 

’பாய் பெஸ்டி’களின் கதை 
…………………… 

பாய் பெஸ்டி என்பவன் 
கனவுகளால் ஆனவனல்ல 
கண்ணீரால் ஆனவன் 

ஒரு பாய் பெஸ்டி 
பாதி மிருகமாகவும் 
பாதி மனிதனாகவும் 
வாழ்பவனல்ல; 
அவன் வாழ்வது 
பாதிக் கணவனாக 
பாதிக் காதலனாக 

ஒரு பாய் பெஸ்டி 
ஒரு பெண் உடுக்கை இழக்கும் 
ஒரு கணத்திற்காக 
இடுக்கண் களைய 
அவள் அருகிலேயே காத்திருக்கிறான் 
ஒரு நிழலாக 
அதுகூட அல்ல 
ஒரு நிழலின் நிழலாக 
ஒரு பாய் பெஸ்டிக்கு 

ஒரு பெண்ணின் கணவனின் முன் 
எவ்வளவு அன்னியனாக நடந்துகொள்ள வேண்டும் 
என்று தெரியும் 
அதே சமயம் அவன் நண்பனாகவும் 
ஒரு பாய் பெஸ்டிக்கு
ஒரு பெண்ணின் காதலன் முன் 
எவ்வளவு கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும் 
என்று தெரியும் 
தான் ஒரு அண்டைவீட்டான் 
அல்லது வழிப்போக்கன் என்பதை 
ஒவ்வொரு கணமும் நிரூபித்துக்கொண்டே 

ஒரு பெண் கண்ணீர் சிந்தும்போது 
தன்னை ஒரு கைக்குட்டையாக 
பயன்படுத்துகிறாள் என 
ஒரு பாய் பெஸ்டிக்கு தோன்றாமலில்லை 
கைக்குட்டையாகவாவது 
இருக்கிறோமே என நினைத்ததும் 
அவன் மனம் சமாதானமடைந்து விடுகிறது 

ஒரு பாய் பெஸ்டி 
ஒரு பெண்ணின் நலக்குறைவை சரி செய்வதில் 
ஒரு மருத்துவரைவிடவும் கவனமாகச் செயல்படுகிறான் 
ஒரு பெண் துயரமடையும்போது 
ஒருவனை அவனது தாய் தேற்றுவதுபோல 
அவளைத் தேற்றுகிறான் 

ஒரு பாய் பெஸ்டி 
ஒரு பெண்ணின் சிறிய கஷ்டங்களை பெரிதாக்கிக்கொண்டு 
தன் தோளில் சுமக்கிறான் 
அவள் ஒரு கிளாஸ் தண்ணீர் கேட்டால் 
அதற்காக ஒரு நீருற்றைத் தேடிச் செல்கிறான் 

ஒரு பாய் பெஸ்டி எப்போதும் 
உணவகங்களில் பில்களை செலுத்துவதில் 
ஆர்வமுடையவனாக இருக்கிறான் 
ஒரு பெண்ணிற்கு பரிசு வங்குவதற்காக 
நீண்ட நேரம் செலவிடுகிறான் 
ஒரு பெண் படியில் காலிடறும்போது 
அது இந்த உலகின் அநீதிகளில் ஒன்றாக 
அவனுக்குத் தோன்றிவிடுகிறது 

ஒரு பாய் பெஸ்டியை 
ஒரு பெண் பிரியத்தோடு அணைத்துகொள்கிறாள் 
ஆதரவாக அவன் தோளில் சாய்ந்துகொள்கிறாள் 
ஒரு பாய் பெஸ்டி 
தான் எப்போதாவது அப்படி 
அணைத்துக்கொள்ளவோ 
சாய்ந்துகொள்ளவோ முடியுமா என 
குழப்பமடைகிறான் 

ஒரு பாய் பெஸ்டி என்பவன் 
சங்கிலியால் கட்டப்பட்ட 
ஒரு நாய்போல சிலசயம் தன்னை உணர்கிறான் 
அன்பைக் காட்டவும் 
அன்பைப் பெறவும் 
சங்கிலியின் நீளம் எவ்வளவோ 
அவ்வளவே அனுமதி என்பது 
அவனை மனமுடையச் செய்கிறது 

ஒரு பாஸ் பெஸ்டி 
எப்போதும் தன்னை பயன்படுத்திக்கொள்ளக்கூடிய 
ஒரு ஆயத்த நிலையில் வைத்திருக்கிறான் 
ஒரு போர்வீரனைப்போல உத்தரவிற்குக் காத்திருக்கிறான் 
அவன் அன்பின் புரவிகள் 
எப்போதும் பாய்ந்து செல்லக் காத்திருக்கின்றன 

ஒரு பாய் பெஸ்டி எப்போதும் காத்திருக்கிறான் 
ஒரு பெண் அவள் காதலனால் துரோகமிழைக்கப்படுவதற்காக 
அவள் கணவனால் அவள் சந்தேகிக்கப்படுவதற்காக 
அவள் நண்பனால் அவள் காயப்படுவதற்காக; 
அப்போதுதான் அவன் அங்கு அவதரிக்க இயலும் 
அப்போதுதான் அவனுக்கு ஒரு சிறிய கதவு திறக்கிறது 
அப்போதுதான் அவனுக்கு அவனது வசனங்களுக்கான 
அவகாசம் கிட்டுகிறது 

ஒரு பாய் பெஸ்டி 
எப்போதாவது ஒரு பெண்ணிடம் 
அந்த அற்புதம் நிகழ்ந்துவிடும் என 
ரகசியமாக கனவு காண்கிறான் 
அது ஒருபோதும் நிகழ்வதில்லை 
அது வேறு யாருக்கோ கண்முன்னால் நிகழும்போது 
அவன் இன்னும் பொறுமை தேவை 
என்று தன்னைத்தானே உறுதிப்படுத்திக்கொள்கிறான் 
இரண்டு நாள் பேசாமல் இருந்துவிட்டு 
மூன்றாவது நாள் பெருந்தன்மையின் 
முகமூடியை அணிந்துகொண்டு 
அவனே அலைபேசியில் அழைக்கிறான் 
தன் தற்கொலை முடிவுகளை 
ஒருபோதும் நிறைவேற்ற முடியாத 
ஒரு கோழையாக இருக்கிறான் 

ஒரு பெண் தன்னோடு ஒருபோதும் 
இல்லாதபோதும் 
அவள் ஏன் எப்போதும் 
தன்னுடன் இருக்கிறாள் என்பதை 
ஒரு பாய்பெஸ்டியினால் 
ஒருபோதும் புரிந்துகொள்ள முடிவதில்லை 

ஒரு காதலனின் பொறுப்பற்றத்தனங்களோ 
ஒரு கணவனின் அதிகாரங்களோ 
ஒருபோதும் ஒரு பாய்பெஸ்டியிடம் இருப்பதில்லை 
அவன் ஒரே நேரத்தில் 
ஒரு பெண்ணின் தந்தையாகவும் 
குழந்தையாகவும் தன்னை மாற்றிக்கொள்கிறான் 

ஒரு பாய் பெஸ்டி எப்போதாவது 
ஒரு பெண்ணிடம் தன் காதலைச் சொல்ல விழைகிறான் 
அவள் முதலில் அதிர்ச்சியடைவதுபோல 
முகத்தை வைத்துக்கொள்கிறாள் 
அது எதிர்பாராத ஒன்று என்பதுபோன்ற 
ஒரு சித்திரத்தை உருவாக்குகிறாள் 
பாய் பெஸ்டி குற்ற உணர்வால் நடுங்கத் தொடங்குகிறான் 
நூறு முறை மன்னிப்புக் கோருகிறான் 
அது ஒரு மிகப்பெரிய நகைச்சுவை காட்சியாகிவிடுகிறது 
அந்த நகைச்சுவைக்கு 
அவளோடு சேர்ந்து 
அவனும் சிரிக்கத் தொடங்கிவிடுகிறான் 

ஒரு பாய் பெஸ்டி 
ஒரு பெண்ணின் காதல் கதைகளை 
அவ்வளவு பொறுமையுடன் கேட்கிறான் 
கல்லாய் சமைந்த ஒரு கடவுள்கூட 
அத்தனை பொறுமையாய் கேட்கமாட்டார் 

யாரும் பிறக்கும்போதே 
பாய் பெஸ்டியாக பிறப்பதில்லை 
விதி எங்கோ தடம் மாற்றிவிடுகிறது 
பசித்த மனிதர்களின் கையில் 
ஒரு மலரைக்கொடுத்து அனுப்பி வைக்கிறது 
======8.2.2020 /காலை 11.27 ==================================== 

435 சொற்களைக் கொண்ட இக்கவிதையில் இரண்டு பாத்திரங்களை உருவாக்கியிருக்கிறார் மனுஷ்யபுத்திரன். ஒருவர் ஆண். அவனுக்கு ஒரே பெயர்தான்; நல்லான்( பெஸ்டி) ஆனால் இன்னொரு பாத்திரம் பெண். அவள் இன்னொருவனின் காதலியாக இருக்கலாம். அல்லது மனைவியாக இருக்கலாம். இவ்விரண்டுமே – நல்லானும், காதலி/ மனைவி என்ற இரண்டுமே வகைமாதிரிப்பாத்திரங்கள். ஆனால் கேட்பவரை உருவாக்கவில்லை. கேட்கும் இடத்தில் இருப்பவர் யாராகவும் இருக்கலாம். வாசிக்கும் ஒருவர் தன்னைப் பெஸ்டியாக நினைத்துக் கொள்ளும் நிலையில் நிகழ்வில் பங்கேற்கும் பாத்திரமாக மாறிக்கொள்வார்.நிகழ்வுகளைக் கேள்விப்பட்டவராக இருந்து, அப்படியொரு வாய்ப்பு கிடைக்காதவர்கள் நடந்ததை வேடிக்கை பார்க்கும் -விளையாட்டைக் கண்டுகளிக்கும் நபராக மாறிக் கொள்ளலாம். இவையெதுவுமே அறியாத - தெரியாத நபர்கள் இப்படியெல்லாமா? நடக்குது இந்த உலகத்தில்? எனப் புழுக்கம் கொள்ளும் மனிதராக விலகி நிற்கலாம். இதற்கான வாய்ப்புகளை ஒரு நிலையில் இல்லாமல் பல நிலையில் அடுக்கிப் போகிறார் மனுஷ்ய புத்திரன் கேட்போரை உருவாக்காத இந்தக் கவிதைக்குள் சொல்லியாக ஆசிரியரையே கொண்டிருக்கிறது. அந்த ஆசிரியர்- மனுஷ்யபுத்திரன் என்னும் கவி. அவர், பெண்ணின் மனதோடு -உடலோடு உறவாடும் பெஸ்டியின் பல்வேறு பரிமாணங்களை அறிந்தவர் மட்டுமே. பெஸ்டிக்கு பலவரையறைகளை அடுக்கும் இந்தக் கவிதை பெஸ்டியின் பாத்திரம் சமகால வாழ்வில் ஒற்றைத் தன்மை கொண்டதல்ல; பல அடுக்குகளைக் கொண்டது என்கிறது. 

இப்படி அடுக்கும் முறைமை -சொல்முறைக்குத் தமிழில் முன்மாதிரி இருக்கிறது. திருக்குறளின் ஒவ்வொரு அதிகாரமும் இப்படி அடுக்கப்பட்டவைதான். திருக்குறளின் பொருட்பாலில் ஒவ்வொரு அதிகாரத்திலும் ஏதாவதொன்றை விளக்கும் – ஒவ்வொரு குறளிலும் விளக்கி விளக்கிப் புரியவைக்கும் முறையைக் கொண்டுள்ளது. அமைச்சு என்பது என்ன? என்ற கேள்விக்குப் பத்துப் பதில்கள் சொல்வதுபோல.. நல்குரவு என்பதைப் பத்துக் குறள்களில் வரையறுத்துவிட நினைப்பதுபோல மனுஷ்யபுத்திரன், நிகழ்கால உறவு நிலை ஒன்றை – இதுவரை வெளிப்படையாகப் பேசப்படாத உறவுமுறையாக இருந்த ஒன்றை இனிப் பேசலாம் என்று நினைத்து விளக்கி அடுக்குகியுள்ளார். அவர் அந்த உறவின் எல்லா வரையறைகளையும் – உறவு நிலைகளையும் மனப்பாங்கையும் சொல்லி முடித்துவிட்டார் என்பதற்கில்லை. இன்னொருவருக்கு இன்னும் சில வரையறைகள்/ உறவுநிலைகள்/ மனப்பாங்குகள் தோன்றலாம். அவர்கள் அவற்றை எழுதலாம். அதற்கான திறப்பைச் செய்த வகையில் மனுஷ்யபுத்திரன் இந்தப்பனுவல் ஒரு முன்னோடி. 

கறரான இலக்கியப்பார்வைகள் கொண்டவராக நினைப்பவர்கள், திருக்குறளையே இலக்கியமாக ஏற்பதில்லை. சிலர் காமத்துப்பாலில் இலக்கியத் தன்மை இருக்கிறது என்று ஏற்றுக்கொண்டு, அறத்துப் பாலிலும் பொருட்பாலிலும் இலக்கியத்தின் கூறுகள் என்ன இருக்கிறது? என்று கேட்பார்கள். நெருக்கிப் பிடித்தால், அவ்விரண்டிலும் அறத்துப்பாலில் ஒரு தெளிவும் தீர்க்கமும் இருக்கிறது, ஆனால் பொருட்பாலில் அப்படியொன்றும் இல்லை என்பார்கள். அதே நிலையில் தான் பொருட்பாலின் சொல் முறைமையைக் கொண்டிருக்கும் மனுஷ்யபுத்திரனின் ‘பாய் பெஸ்டி’களின் கதை கவிதையாகாது; இலக்கியமாகாது என வாதிடக் கூடும்.அதைச் செய்யாமல் முரட்டுத்தனமான ஒதுக்கலும் கேலியும் திறனாய்வுச் சொல்லாடல் ஆகாது. 
பிப்ரவரி, 2020 

ஆகச்சிறந்த நல்லாள்- GIRL BESTIE-

================================

நவீனத் தமிழ்க்கவிகளுக்கு எப்போதும் உதாரணங்களும் தொன்மப் பாத்திரங்களும் சம்ஸ்க்ர்தப் புராணங்களிலிருந்தும் இதிகாசங்களிலிருந்தும் தான் கிடைத்திருக்கின்றன. கண்ணனை- நந்தகோபன் குமரனைக் காதலனாக நினைத்து அவனை அழைத்து விளையாட நினைத்த ஆண்டாளின் சாயலையே பாரதி, கண்ணன் பாட்டிற்குள் உலவ விட்டார்.   அதற்கும் முன்பே  ஆகச் சிறந்த - நண்பனை நினைந்து நினைந்துக் கசிந்துருகிய நல்லாளாக இருந்தவள் ஔவை. அவள் தனது நல்ல நண்பனுக்கு-Boy Bestie- எழுதிய கவிதை அது. முதலில் உரைநடையில்; பிறகு கவிதையாக 

நம்மிருவரிடையேயுமான நெருக்கமும் அன்பும் பற்றி நினைத்துக் கொள்ளும் போது நாம் குடித்த கள்ளும் உண்ட உணவுமே முதலில் நினைவுக்கு வருகிறது. உன்னிடம் கொஞ்சம் கள் இருந்ததென்றால் எனக்குத் தந்துவிட்டு நான் குடிப்பதைப் பார்த்துக்கொண்டிருப்பாய். பெரிய அளவு கிடைத்தால் அன்றைய காட்சியே வேறாகிவிடும். கள்ளுண்ட நான் பாடுவேன்; நீ குடித்துக் கொண்டே ரசிப்பாய். அதே நிலைதான் சாப்பிடும்போதும். இருப்பு கொஞ்சம் சோறு என்றால் எனக்கே முன்னுரிமை; அதிகம் என்றால்தான் நாம் இருவர் மட்டுமல்ல; பலரோடும் சேர்ந்து உண்டாட்டாகவும் கொண்டாட்டமாகவும் மாறிவிடும். எதிர்த்துவரும் பகைவர்களின் அம்பை எதிர்கொள்ளப் போர்க்களத்தின் முன்னணியில் நிற்கும் அதியமானே! நீ எனது புலவுமணம் வீசும் கூந்தலைத் தடவிய நாட்கள் இனி இல்லை; எல்லாம் போய்விட்டன.

அவனின் இன்மை எனது கையறுநிலை மட்டுமல்ல. அவன் மார்பைத் துளைத்த வேல், அவனது வள்ளல்தன்மையால் ஈர்க்கப்பட்டு காத்திருந்த பெரும் பாணர்கூட்டத்தின் அகன்ற பாத்திரங்களையெல்லாம் துளைத்து நம்பிக்கை இழக்கச் செய்துவிட்டது. அவனே நமது காப்பாளன் எனக் களித்திருந்த அவனது சுற்றத்தாரின் கண்களில் ஒளி காணாமல் போய் துயரத்தின் சாயல் குடிகொண்டுவிட்டது. தங்கள் அறிவை வெளிப்படுத்தும் அழகிய சொற்களைச் சொந்தமாகக் கொண்டிருந்த புலவர்களின் நாவிலும் அந்த வேல் துளைத்து அவர்களின் எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் இல்லாமல் ஆக்கிவிட்டது. எனக்கும் இவர்களுக்கும் பற்றுக்கோடாக இருந்த அதியமான் இப்போது இல்லை என்பதால் பாடலோடு கூட்டமாக வரும் பாணர்களின் வருகை இல்லாமல் போய்விட்டது. வந்தால் தருவோர் யாரிருக்கிறார்? தேனொழுகும் பெரிய பகன்றை மலர் நிரம்பிய நீர்த்துறையில் பூக்கும் மலரைப் பறித்துச் சூடுவோர் இல்லை என்பதுபோல், பொருள் தேவைப்படுவோர்க்குக் கொடுத்து வாழும் குணம் இல்லாதவர்களாக இருந்து இறந்துபோகின்றவர்களே இப்போது இருக்கிறார்கள். இவர்களைப் பார்க்கும்போது அதியமானின் நட்பும் அன்பும் எவ்வளவு பெரியதென்று தோன்றிக்கொண்டே இருக்கிறது. 

சிறிய கள் பெறினே, எமக்கு ஈயும்; மன்னே!

பெரிய கள் பெறினே,

யாம் பாட, தான் மகிழ்ந்து உண்ணும்; மன்னே!

சிறு சோற்றானும் நனி பல கலத்தன்; மன்னே!

பெருஞ் சோற்றானும் நனி பல கலத்தன்; மன்னே!

என்பொடு தடி படு வழி எல்லாம் எமக்கு ஈயும்; மன்னே!

அம்பொடு வேல் நுழை வழி எல்லாம் தான் நிற்கும்; மன்னே!

நரந்தம் நாறும் தன் கையால்,

புலவு நாறும் என் தலை தைவரும்; மன்னே!

அருந் தலை இரும் பாணர் அகல் மண்டைத் துளை உரீஇ,

இரப்போர் கையுளும் போகி,

புரப்போர் புன்கண் பாவை சோர,

அம் சொல் நுண் தேர்ச்சிப் புலவர் நாவில்

சென்று வீழ்ந்தன்று, அவன்

அரு நிறத்து இயங்கிய வேலே!

ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்கொல்லோ?

இனி, பாடுநரும் இல்லை; பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை;

பனித் துறைப் பகன்றை நறைக் கொள் மாமலர்

சூடாது வைகியாங்கு, பிறர்க்கு ஒன்று

ஈயாது வீயும் உயிர் தவப் பலவே!

கவிதையை உரைநடையாக மாற்றி வாசிக்கலாம்.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்