சிங்களர்களோடு சேர்ந்து பயணித்த ரயில் பயணம் போலவே சொல்லப்பட வேண்டிய
இன்னொரு பயணம் மலையகத்திலிருந்து அதன் இன்னொரு சமதளப்பகுதியில் இருக்கும் சப்ரகமுவ
பல்கலைக்கழகத்திற்குச் சென்ற மலைப்பாதைப்பயணம். வளைந்து வளைந்து செல்லும் மலைப்பாதைப்
பயணங்கள் இரவில் அமைவதைவிடப் பகலில் அமைவதே நல்லது. பார்ப்பதற்கான காட்சிகள் நிரம்பி
நிற்கும். அசையும் மரங்கள் மேகத்தைத் தொட முயற்சிப்பதும், மேகத்திரள்கள் மரங்களைத்
தழுவிச் செல்வதுமான காட்சிகளைப் பல பயணங்களில் பார்த்திருக்கிறேன். மேகமாக நகரும் பஞ்சுப்பொதிகள்
சில நிமிடங்களில் கறுத்து இருண்டு மழைமேகமாகிப் பெய்யத்தொடங்கிவிடும். ஆனால் இந்த மலைப்பாதைப்
பயணம் இரவுப்பயணம். எண்பது
கிலோமீட்டர் தூரம் தான். இரண்டரை மணிநேரத்தில் போய்விடலாம் என்று சொன்னார்கள். ஆனால்
தமிழே தெரியாத அந்த ஓட்டுநரோடு சென்ற அந்தப் பயணம் மூன்றரை மணிநேரமாக மாறிவிட்டது.
************************
மலையகத்தின் ராகலையில் கூட்டம் முடிந்தபோது பிற்பகல் மூன்று மணி.
சபரகமுவ பல்கலைக்கழகத்திற்கு என்னை அழைத்துச் செல்லப் பல்கலைக்கழக வாகனம் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது. மாலை 4 மணிக்கு நுவரெலியா வந்துவிடும் என்பது திட்டம். ஆனால் வரவேண்டிய
ஓட்டுநர் - தமிழ் தெரிந்த ஓட்டுநர் கடைசி நேரத்தில் வரவில்லை. மாற்று ஏற்பாடாக
ஏற்பாடு செய்யப்பட்ட ஓட்டுநருடன் ஒரு மணி நேரத் தாமதத்திற்குப் பின் ராகலைக்கே
வந்துவிட்டது.
நான்கு மணிக்குக்
கிளம்பியிருந்தால் மலைப்பகுதியைப் பார்த்துக்கொண்டே பயணம் செய்திருக்கலாம். ஆனால்
கிளம்பும்போது மணி ஆறு. நுவரெலியாவரை நண்பர்கள் வந்தார்கள். அதன் பிறகு நானும் சிங்களம்
மட்டுமே தெரிந்த ஓட்டுநரும்தான் அந்த வாகனத்தில். அனுப்பிவைத்த தேசியக்கலைப் பேரவை
நண்பர்களுக்குக் கொஞ்சம் கலக்கம். பாதுகாப்பு மற்றும் பேச்சுத்துணை குறித்த கவலை.
நான் தயங்கவில்லை. அவரோடு பயணிப்பது பிரச்சினை இல்லை என்று தைரியம் சொல்லிக்
கிளம்பி விட்டேன்.நுவரெலியாவரை வந்த நண்பர் சுதர்சனுக்குச் சிங்களம் பேசத்
தெரிந்திருந்தது. அவரோடு பேசிக் கொண்டே வந்தார் ஓட்டுநர். அதன் பிறகு
தேவைப்பட்டால் அவரோடு அல்லது கவி லறீனாவோடு தொலைபேசியில் அவர் பேசிக்கொள்வார்
என்பது ஏற்பாடு. அவர் சிங்களத்தில் பேசட்டும். ஓரளவு புரிந்து கொள்ள முடியும்
என்று நான் சொன்னேன். ஒருவரின்
பேச்சுமொழியும் அது உணர்த்தும் பொருளும் என்னவாக இருந்தாலும் மனிதர்கள் வெளிப்படுத்தும்
உணர்வுகளிலும் உடல்மொழியிலும் சில பொதுமைக்கூறுகள் உண்டு.
அவர் பேசிக்கொண்டு வந்தார். திடீரென்று சிங்களப்பாடல் பாடிய
எப்.எம். வானொலியைத் தமிழ் பாடும் அலைவரிசைக்கு மாற்றி விட்டார். ஒருமணி நேரம்
கழித்து சீதா, ராவணா, ராமன் என்ற பெயர்கள் வரும்படியான கதையொன்றைச் சொன்னார். எனக்குப்
புரியவில்லை. உடனடியாகத் தொலைபேசியில் பேசி சீதை காவல் வைத்த இடமாக அறியப்படும்
இடத்தில் இருக்கும் கோயிலைக் காட்டலாமா? என்று அனுமதி கேட்டார் சுதர்சனிடம். சுதர்சன் என்னிடம் கேட்டார். எனத் அனுமதிக்குப் பின் அங்கு நிறுத்திக் காட்டினார். ஒளி வெள்ளத்தில் தங்கமுலாம் பூசிய கோயிலில் ராமாயணக்காட்சிகள் கொண்ட
சிலைகள் நின்றன. இரவு என்பதால் கோயில் மூடப்பட்டிருந்தது. சீதாஎலியா என்ற பெயர்கொண்ட
ராமாயண அசோக வனமாக இருக்கத்தக்க காடாகவே அந்த மலைப்பகுதி இருந்தது. ராமாயணம் உண்மையில் நடந்த கதை என்பதை நிறுவப் பலவிதமான
ஆதாரங்கள் இந்தியாவிலும் காட்டப்படுகின்றன. ராமர் பாதங்கள், லட்சுமணன் போட்ட கோடுகள்
எனப் பலவற்றை ஒவ்வொரு பகுதிகளின் காட்டுப் பகுதிகளில் காட்டுகின்றார்கள்; கதையாகச்
சொல்கின்றார்கள். இலங்கையிலும் அப்படியான கதைகளும் இடங்களும் காட்டப்படுகின்றன.
சீதா எலியாவைத்தாண்டி அரைமணிநேரம் போயிருப்போம். சரியான கும்மென்று இருட்டு. மலை உச்சி போல் தோன்றும் ஓரிடம். அங்கும்
நிறுத்தினார். மேகத்திரட்சி கார் வெளிச்சத்தில்
நகர்ந்துகொண்டிருந்த து. மேகங்கள் தழுவியதை முடித்துக்கொண்டு நழுவிச் சென்றபோது அந்தக் கல்வெட்டு வெளிச்சத்தில்
தெரிந்த து. அதுவரை காத்திருந்து எனக்குக் காட்டிவிட்டுக் கிளம்பினார். கல்வெட்டு ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் எழுதப்பெற்றிருந்த து. சாலையிலிருந்து
இறங்கிச் செல்லும் பாதையில் தூரத்தில் இந்திய அரசாங்கம் கட்டித்தந்த வீடுகள் இருப்பதாகச்
சொன்னது கல்வெட்டுச் செய்தி. அதைக் குறித்து
ஓட்டுநரின் சிங்களப்பேச்சில் ஒருவித நன்றி உணர்வு வெளிப்படுவதுபோலத் தோன்றியது.
இப்போது கார் மலைப்பாதையில் இறங்குமுகமாக நகர்ந்து கொண்டிருந்த து.
வேகத்தைக் குறைத்து தொலைபேசியில் உரையாடினார் ஓட்டுநர். அவர் பேசியது என்னை அழைத்துவர ஏற்பாடு செய்த பேராசிரியர் லறீனாவோடு என்பது என்னிடம் தந்து பேச ச்சொன்னபோது தெரிந்தது, “ வரும்பாதையில் தான் அவர் ஊர் இருக்கு. வீட்டுக்கு உங்களை
அழைத்துப் போய் காபி அல்லது தேநீர் தர விரும்புகிறார். உங்கள் விருப்பம் எது” என்று கேட்கச்
சொன்னார் என்றார் லறீனா. நீங்கள் பேராசிரியரென்றும் கலைஞர் என்றும் சொன்னதால் அவர்
வீட்டுக்கு வருவதில் மகிழ்ச்சி அடைகிறார் என்றார். உடனடியாகச் சம்மதம் சொன்னேன்.
அவர் வீட்டுக்கு அழைத்துப் போய் கழிப்பறையைக் காட்டி முகம் கழுவச் சொல்லிக்
குடும்பத்தினரை அழைத்து அறிமுகம் செய்தார்.
வீட்டில் ஓடிக்கொண்டிருந்த
சிங்கள அலைவரிசையை மாற்றி இந்திப்பாடல்கள் பாடும் இந்தியத் தொலைக்காட்சி ஒன்றுக்கு
மாற்றினார் அவர் மனைவி. அவருக்கு ஆங்கிலச் சொற்கள் தெரிந்திருந்தன. பிள்ளைகளுக்கும் அதே
அளவு ஆங்கிலம். பெயர் கேட்டார்; இந்தியாவில் எங்கே என்றார். இலங்கை பிடித்திருக்கிறதா என்று
கேட்டார். காபியும் பிஸ்கெட்டும் வெல்லம் கலந்த ஒரு இனிப்பும் தந்தார்கள்.
கிளம்பும்போது படம் எடுத்துக் கொள்ளவிரும்பினார்கள். பிறகு பிள்ளைகள் ஒவ்வொன்றும்
ஆசிர்வாதம் வேண்டிக் காலைத் தொட்டு வணங்கினார்கள். நெகிழ்ந்து போனேன்.
பல்கலைக்கழகத்தின் விருந்தினர் விடுதியில் லறீனா இரவு உணவோடு
காத்திருந்தார். என்னோடு அவரையும் உணவு உண்ணச்செய்து அனுப்பி வைத்தோம். மறுநாள்
விடுதியிலிருந்து துறைக்கும் உள்ளே
வளாகத்தில் சுற்றிவரவும் வண்டி ஓட்டினார். எனக்குத் தமிழ் தெரியவில்லை என்று
வருத்தம் அடைகிறேன் என்று சொன்னார் உங்களோடு இருந்த இந்த இருபத்திநான்கு மணிநேரத்தில் எவ்வளவு பேசியிருக்க முடியும் என்று சொன்னார். அடுத்து நான் செல்ல வேண்டிய இடம் திரிகோணமலை. முழுத் தூரத்திற்குமல்லாமல்
திரிகோணமலைக்கு நேரடியாகச் செல்லும் இடம்
வரை அதே கார் ஏற்பாடு செய்யப்பட்ட து. அவர் தான் ஓட்டி வந்தார். பேருந்தில் ஏற்றி அமரச்செய்து ஒருமணிநேரம்
காத்திருந்து ஏற்றிவிட்டுப் போனார் . ஒரு தடவை என் பெயரைக் கேட்டார். சொன்னவுடன்
ராமசாமி என்று மூன்று முறை சொல்லிக் கொண்டார். அவர் பெயரைச் சொல்லி மூன்று தடவை
சொல்லிப் பதியவைத்தார்.
ஜய் ரத்ன
என்று அந்தப் பெயர் இந்தப் பயணத்தில் மறக்கமுடியாத பெயராக ஆகிவிட்டது. ஜயரத்னவோடு
கதைக்க சிங்களம் தெரிந்திருந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.
கருத்துகள்