அச்சமூட்டும் பயணங்கள்

இதுதான் முதல் தடவை. கடந்த 15 ஆண்டுகளில் பல தடவை உள்நாட்டு விமானப் பயணங்களும் வெளிநாட்டுப் பயணங்களும் செய்துள்ளேன். விமானத்திற்குள் ஏற்றி உட்காரவைத்த பின் இறக்கிவிட்டது இதுதான் முதல்தடவை.

டெல்லி - ஹைடிராபாத் - மதுரை எனப் பயணத்தைத் திட்டமிட்டிருந்தேன். இண்டிகோ விமானம். ஆன்லைனில் விமானப்பயணத்தை உறுதி செய்து உறுதியும் செய்து தெரிவித்தேன். அதன் பிறகு டெல்லியிலிருந்து கிளம்பவிருந்த விமானம் முதலில் சொன்ன நேரத்தைவிட அரைமணி நேரம் தாமதமாகக் கிளம்பும் எனத் தகவல் வந்தது. அதன்படி போனபோது குறிப்பிடப்பட்ட வாசலுக்குப் பதிலாக இன்னொரு வாசல் எனச் சொன்னார்கள். அது அரைகிலோ மீட்டர் தூர நடையில் இருந்தது. அங்கு போனபோது எல்லாப் பயணிகளையும் விமானத்தில் ஏற்றினார்கள்.

பொதுவாகப் பயணிகள் ஏறிவிட்டால் சொன்ன நேரத்துக்கு முன்பே கிளம்பிவிடும். ஆனால் உரிய நேரத்துக்குப் பின் கிளம்பாமல் இன்னும் 10 நிமிடம் ஆகும் என்றார்கள். காத்திருந்தோம். 10 நிமிடம் அரை மணி நேரத்தைத் தாண்டியது. திரும்பவும் அறிவிப்பு. கிளம்பும் எனச் சொல்லாமல் காத்திருக்கச் சொன்னார்கள். காத்திருந்தோம். அடுத்த அறிவிப்பில் டெல்லி விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகளின் வேண்டுகோள்படி அந்த விமானம் கிளம்பாது. அனைவரும் இறங்குங்கள் என்று சொன்னார்கள். மாற்று ஏற்பாடு உண்டு திரும்பவும் நுழைவுப் பகுதிக்குச் செல்லும்படி சொன்னார்கள். திருச்சி -துபாய் விமானம் திரும்பி இறங்கிய காட்சிகளை ஊடகங்கள் எல்லாம் கலவரப்படுத்தியது நினைவுக்கு வந்தது.

போனோம். ஹைதிராபாத் செல்ல ஒரு விமானம் இருப்பதாகவும் அதில் ஹைதிராபாத்துக்குச் செல்பவர்கள் செல்லலாம். அங்கிருந்து வேறு ஊர்களுக்குத் தொடர்பு விமானங்களைப் பிடித்துச் செல்லவேண்டியவர்கள் இண்டிகோ விமானத்தின் அலுவலகம் செல்லும்படி அறிவிப்பு. போய் நின்றபோது, இந்த விமானத்தில் சென்றால் ஹைதிராபாத் சென்றால் மதுரைக்குப் போகும் விமானத்தைப் பிடிக்கமுடியாது. சென்னை அல்லது பெங்களூர் சென்று மதுரைக்குப் போகலாம் என்பது அவர்களின் பதில். சென்னைக்குப் போனால் இன்றிரவே மதுரைக்கு விமானம் உண்டு என்பதால் அதனை ஒத்துக்கொண்டேன். மாற்றித் தந்தார்கள்.
அதற்கு டெல்லியின் இன்னொரு முனையம் செல்ல வேண்டும். முதல் முனையத்திலிருந்து மூன்றாம் முனையம். திரும்பவும் விமான நிலையத்திற்குள் கைச் சுமையோடு நடை. ஒரு கவுண்டரில் இந்தப் பயண உறுதிச் சீட்டைக் காண்பித்துச் சிற்றுண்டியை வாங்கிக் கொள்ளலாம் என்றார்கள். ஆனால் அதற்கு நேரம் இல்லை. நேரம் குறைவு. போய்ச் சேரும்போது பயணிகளை ஏற்றும் நேரம் வந்துவிட்டது. ஏறி அமர்ந்து விட்டோம். சென்னையில் இறங்கி மதுரை விமானத்தைப் பிடிக்க இருந்த நேரம் ஒன்றேகால் மணி நேரம். அங்கும் எதுவும் சாப்பிட நேரம் இல்லை. காலையில் டெல்லியில் சாப்பிட்டதோடு கிளம்பி வீடுவந்துதான் சாப்பிட முடிந்தது. 12 மணி நேர உண்ணாவிரதம்.
இந்த மாற்றங்களுக்குப் பின்னால் இருப்பது விமானங்களுக்கு விடப்படும் வெடிகுண்டு மிரட்டல்கள் எனப் பயணிகள் அச்சத்தோடு பேசிக்கொண்டார்கள். இந்த அச்சம் தொடரும் நிலையில் ரயில் பயணங்களைப் போல வான்வெளிப் பயணங்களும் அச்சத்தோடு செல்லும் பயணங்களாகப் போகின்றன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெயரிடலும் பெயர் மாற்றமும் : ஒரு வரலாறு

தமிழ் என்பது நபர்கள் அல்ல

நவீனத்துவமும் பாரதியும்