செய்நேர்த்தியும் இன்மையும்

ஒரு சினிமாவின் செய்நேர்த்திக்கும் வெற்றிக்கும் தொடர்பு இல்லையென்றுதான் தோன்றுகிறது. அண்மையில் நான் பார்த்த இரண்டு படங்களுமே இணையச்செயலிகளில் தான் பார்த்தேன். திரையரங்குகளில் அதிகம் வெளியாகவில்லை. மதுரை போன்ற நகரங்களிலேயே ஒன்று அல்லது திரையில் -சில காட்சிகள் மட்டுமே ஓட்டப்பட்டன. இவற்றைப் பார்வையாளர்கள் பார்க்காமல் ஒதுக்க என்ன காரணம் இருக்கும் என்பதற்குப் பின்னால் பிரபல நடிகர்கள், விளம்பரங்கள், சமூக ஊடகங்களில் பேசு பொருளாதல் எனப் பல காரணங்கள் இருக்கின்றன.

சிம்புத்தேவனின் போட் திரைக்கதை, உரையாடல்கள், காட்சிகள் எனப் பொருத்தமும் நேர்த்தியும் கூடிய படம். அந்த அளவுக்கு ஒருங்கிணைப்பு கூடியதாக இல்லையென்றபோதிலும் நந்தன் பேசிய உரிப்பொருளும் சமகாலத்தன்மையும் விவாதிக்க வேண்டிய ஒன்று. ஆனாலும் இரண்டு படங்களுமே பார்க்கப்படவில்லை என்பதுதான் இப்போதைய போக்கு.

இருத்தலின் வினாக்கள்

ஒரு திரைப்பட இயக்குநர் முதல் படத்தில் உருவாக்கும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் அடுத்து வரும் படங்களில் தரத்தவறி விடுவது தமிழில் ஒரு மரபாக நீள்கிறது. இயக்குநர் சிம்புத்தேவனின் “ இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி” (2006) அப்படியொரு முதல் பட ஆச்சரியம். அங்கிருந்து ஒவ்வொரு படத்திலும் மெல்லமெல்லக் கீழிறங்கிப்போன அவரது அவரது திரைப்பட ஆக்க முறைமையையும் வெளிப்பாட்டுக் குறைபாடுகளையும் எட்டாவது படமான போட்டில் சரிசெய்துள்ளார் சிம்புத்தேவன். முதல் படமான இம்சை அரசனையும் தாண்டி நிற்கக்கூடிய செய்நேர்த்தியோடு வந்துள்ளது “BOAT” (படகு). நல்ல சினிமா ஒன்றைப் பார்க்க நினைப்பவர்கள் சிம்புத்தேவனின் இந்தப் படத்தைப் பார்க்கலாம் எனப் பரிந்துரை செய்கிறேன்.

வரலாற்றுப் பின்னணியில் நிகழ்காலத்தின் மீது விமரிசனம் என்ற கலையியல் பார்வை இந்தப்படத்திலும் இருக்கிறது. அத்தோடு மரணத்தின் பக்கத்தில் மனித இருப்பும் மனச்சாய்வுகளும் எப்படியெல்லாம் சிந்திக்கின்றன என்ற விசாரணையையும் படம் எழுப்பியுள்ளது. திரைக்கதை ஆக்கம்,நடிப்பு, இசை எனப் பலவிதத்திலும் ஓர்மையுடன் வந்துள்ளதால் விரிவாக எழுதவேண்டிய படங்களின் பட்டியலில் சேர்ந்துகொண்டுள்ளது

பிரச்சினைப்படம்

இரா.சரவணன் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள 'நந்தன்' அமெசான் பிரைமில் பார்க்கக் கிடைக்கிறது. கவனப்படுத்தும் பொருண்மைகள் என இந்தியால் பலவற்றைப்பட்டியலிடலாம். அந்தப் பட்டியலில் எப்போதும் முதலிடத்தில் இருப்பது சாதி ஆதிக்கமும் ஒடுக்குமுறையும் என்பதுதான். பிறப்பு அடிப்படையில் மனிதர்களைப் பிரித்துக் கூறுகட்டி, தீண்டத்தகாதவர்கள் என ஒதுக்கிவைக்கும் ஆகக்கூடிய கேட்டைக் கலை இலக்கியங்கள் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கின்றன. ஆனால் அதன் இருப்பும் வலிமையும் குறைந்துவிடவில்லை.

பிரிட்டானிய ஆட்சிக் காலத்திலேயே இந்தப் பிளவுகளையும் ஒதுக்கல்களையும் குறைப்பதற்குக் கல்வி அறிவை ஒரு கருவியாக முன்வைத்தது அரசமைப்பு. தலைவர்களும் கலை இலக்கியவாதிகளும் அதனைத் தொடர்ந்து தாக்குவதும் விமரிசிப்பதுமாகச் சாதியமைப்போடு எதிர்வினையாற்றியுள்ளனர் .மக்களாட்சி முறையில் தரப்படும் சலுகைகள், உரிமைகள் வழியாகப் பிளவுகளைக் குறைத்துவிட முடியும் என்ற நம்பிக்கையில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் இடஒதுக்கீடு என்னும் கருவியை ஆயுதமாக்கியது. சட்டப்படியான இந்தக் கருவியும் எல்லா இடங்களிலும் எல்லா நிலைகளிலும் செல்லுபடியாகும் நிலையில் இல்லை என்பதைக் கவனப்படுத்துவதும் தொடர்கிறது.
சாதி ஆதிக்கக் குழுக்கள் ஆதிக்கத்தை நேரடியாகக் காட்டாமல் மறைமுகமாகவும் தந்திரமாகவும் கையாண்டு ஒடுக்கும் தன்மைகளும் உண்டு. அத்தன்மையின் தொன்மப்பாத்திரமாக இருப்பது நந்தன். நந்தனை நந்தனாராக்கிச் சிதம்பரத்தில் நெருப்பில் இறக்கிய கதையைப் புராணங்களில் வாசித்திருக்கிறோம். அந்தத்தொன்மப்பாத்திரம் நவீன இலக்கியத்திலும் பலவிதமாக எழுதிக் காட்டப்பட்டுள்ளது.
நந்தன் என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தச் சினிமா, ஒதுக்கீட்டுத் தொகுதிகள் - ரிசர்வ் தொகுதிகள் - என்ற உரிமையைப் பஞ்சாயத்துத் தேர்தல் அளவில் எப்படிப் பயன்படுத்துகிறார்கள் ஆதிக்க சாதியினர் என்பதைக் காட்சிப்படுத்த முயன்றுள்ளது. நடப்புச் சமூகத்தில் நிலவும் சீர்கேடுகளைப் பேசும் கலை, இலக்கியங்களைப் பிரச்சினைப் படைப்புகள் (Problem arts) என வகைப்படுத்துவதுண்டு. நந்தனும் அப்படியொரு பிரச்சினை சினிமாவாக உருவாக்கப்பட்டுள்ளது.
பிரச்சினைப்படங்களில் எப்போதும் உண்மை இருக்கும். ஆனால் அந்த உண்மையை எப்படிச் சினிமாவாக ஆக்குவது என்பதில் பலரும் சறுக்கி விடுவதே நடந்து வந்துள்ளது. நந்தனும் அப்படியொரு சறுக்கலோடு கூடிய படம் தான். ஆவணத்தன்மை கொண்ட நந்தன் - ஜூனியர் விகடன், நக்கீரன் போன்ற அரசியல், புலனாய்வு இதழ்களில் வரும் கட்டுரைத் தன்மையோடு எடுக்கப்பட்டுள்ளது. சசிகுமார், பாலாஜி சக்திவேல் என்று அறியப்பட்ட நடிகர்கள் எதிரெதிர் பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். படத்திற்கான இடப்பின்னணி, இசைக்கோலங்கள், பாத்திர உருவாக்கம் என அனைத்திலும் போதாமையோடு இருக்கிறது நந்தன்.
நேரடியாக எல்லாவற்றையும் பேசிவிடும் சினிமாவைப் பெரும்பாலும் பார்வையாளர்கள் ரசிப்பதில்லை. ஒன்றை ரசிப்பதற்குப் புனைவுத் தன்மையோடு கூடிய உண்மைத் தன்மை தேவை. மாரி செல்வராஜின் வாழை அந்தவிதத்தில் தான் வெற்றிப்படமாக மாறியிருக்கிறது. நந்தன் கவனித்துப் பேசப்படாத சினிமாவாக ஆகியிருக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தி.சு.நடராசனின் திறனாய்வுப் பார்வைகள் :தமிழ் அழகியல், தமிழகத்தில் வைதீக சமயம்

உடல் மறுப்பு என்னும் பெரும்போக்கு

கற்றல் - கற்பித்தல்: மாணவ ஆசிரிய உறவுகள்