நல்ல சினிமாக்களின் காலம்

மூன்று மாத காலத்திற்குள் பத்துக்கும் மேற்பட்ட சினிமாக்களை - நல்ல சினிமாக்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்போது அந்தக் காலத்தை நல்ல சினிமாக்களின் காலம் எனச் சொல்வது தவறில்லை தானே. ஆகஸ்டு மாதத்தின் இடையில் தொடங்கி, நேற்றுவரை அப்படியான காலமாக மாறி இருக்கிறது. அது அக்டோபர் 31 லப்பர் பந்து பார்த்து முடிக்கும்போது நிறைவடையும்.


ஆகஸ்டு மாதத்தின் தொடக்கத்தில் பிரச்சந்ந விதனகேயின் ' பாரடைஸ்' படத்தை வலைச் செயலியில் பார்த்தேன். அது ஒரு மும்மொழிப் படம். சிங்கள இயக்குநராக அறியப்படுபவர் விதனகே; ஆனால் அவரை இலங்கையின் சினிமாக்காரர் என்று சொல்லவே தோன்றுகிறது. படத்தைத் தயாரித்தது மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ். சென்னையில் இயங்கும் திரைப்பட நிறுவனம். அவரைத் தமிழ்ச் சினிமா இயக்குநர் எனச் சொல்வதைவிட இந்தியச் சினிமாக்காரர் என்பதே சரியாக இருக்கும்.


பாரடைஸ் படத்தின் மையக் கதாபாத்திரங்களில் இரண்டு ஆங்கிலத்தில் உரையாடக்கூடிய மலையாளிகள்; கணவனும் மனைவியும். அப்பாத்திரங்களை ஏற்று நடித்த ரோஷன் மேத்யூவும் தர்ஷனா ராஜேந்திரனும் மலையாள சினிமாவோடு தொடர்புடையவர்கள். அவர்களுக்கு வழிகாட்டியாகவும் காரோட்டியாகவும் வருபவர் ஆங்கிலம் அறிந்த சிங்களர். ஷ்யாம் பெர்னாண்டோ என்ற சிங்கள நடிகர்.

அவர்கள் தங்கும் இலங்கையின் மலையகத் தோட்டக்காட்டு விருந்தினர் விடுதியின் பணியாளர்கள் இருவரும் சிங்களம் அறிந்தவர்கள். ஆனால் மத அடையாளத்தோடு முஸ்லீமாகவும் பௌத்தராகவும் காட்டப்பட்டுள்ளனர். இலங்கையின் மலையகப் பின்னணியில் படம் இருப்பதால் கூட்டப் பாத்திரங்களில் வந்த தொழிலாளர்கள் மலையகத்தமிழர்கள். தமிழில் பேசினார்கள். இந்தப் பாத்திரங்கள், அவர்களின் பேச்சுமொழி, மத அடையாளம் எல்லாம் சேர்ந்ததோடு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், இலங்கையில் நடந்த பொருளாதாரச் சீர்குலைவை எதிர்த்த பின்னணியும் படத்தின் காலகட்டமாகக் காட்டப்பட்டிருந்தது. அந்நாட்டின் உள்விவகாரங்களில் இந்தியாவின் நுழைவு நேரடியாகக் காட்டப்படவில்லை என்ற போதிலும் விருந்தாளிகளாக வந்துள்ள கணவனும் மனைவியும் நடந்துகொள்ளும் விதத்திலிருந்து ஓரளவு ஊகித்துக்கொள்ள வாய்ப்பளிக்கிறார் இயக்குநர் விதனகே.

இலங்கையின் சமகால அரசியல் படத்தை உருவாக்குவதற்குப் பிரசந்ந விதனகே எவ்வளவு கவனமாகத் திரைக்கதையை உருவாக்குகிறார் என வியந்தபடி படத்தைப் பார்த்த உற்சாகம் தீர்வதற்குள், பாஸ்கர் சக்தியின் ரயில் படமும் வலைச் செயலில் பார்க்கக் கிடைத்தது. இதுவும் ஒருவிதத்தில் இந்தியப்பரப்பைப் பின்னணியாகக் கொண்ட ஓர் அரசியல் படமாகவே பார்க்கத்தக்க படம். இந்திய மனிதர்களைக் குறிப்பாக உழைக்கும் இந்தியர்களை வடக்கத்தியான் X தெற்கத்தியான் எனப்பேசும் போக்கிற்கு எதிராக வலுவான காட்சிகளை வைத்திருந்த சினிமாவாக இருந்தது. தமிழ்நாட்டிற்குள் வந்து உடல் உழைப்பால் பணம் ஈட்டித் தங்கள் குடும்பங்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கும் இடம்பெயரும் இந்தியர்களின் வாழ்வியலையும், அவர்களிடம் அன்பு பாராட்டும் தமிழ்ப் பொதுமனத்தின் இயல்பையும் கவனத்தோடு கதையாக்கிய படமாகப் பாஸ்கர் சக்தியின் ரயில் ஓடியது.

அவ்விரு படங்களைப் பார்ப்பதற்கு முன்னால் சினிமாவாகக் கருதவும் முடியாத இந்தியன்- 2 படத்தைத் திரையரங்கம் சென்று பார்த்து என்னையே நொந்துகொண்டேன். அதையும் தாண்டி விஜய் சேதுபதிக்காக மகாராஜாவையும், இயக்குநர் பா.ரஞ்சித்திற்காகத் தங்கலானையும் திரையரங்கம் சென்று பார்த்தேன். மாரி.செல்வராஜின் 'வாழை;யும் அரங்கம் சென்று பார்த்த படங்களின் பட்டியலில் சேர்ந்துகொண்டது.

இதற்குப் பின் வரிசையாகப் பார்த்த படங்கள் எல்லாமே செயலிகள் வழியாகத்தான். குரங்குப் பெடல், ஜமா, கொட்டுக்காளி,போட் , நந்தன், போகுமிடம் வெகுதூரமில்லை என நீண்டு நேற்றிரவு
மெய்யழகன் வந்து சேர்ந்தாகிவிட்டது. பார்த்தே ஆகவேண்டிய படம் என்ற ஆவலைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது லப்பர் பந்து. அதையும் அக்.31 பார்த்துவிடலாம். இடையில் ஒரேயொரு மலையாளப்படம் அடியோஸ் அமிக்கோ பார்த்ததும் நினைவுக்கு வருகிறது.

பலகோடி முதல் போட்டு, பற்பல கோடிகளில் லாபம் ஈட்ட நினைத்து எடுக்கப்பட்ட இந்தியனையும் மகாராஜாவையும் மறந்துவிட்டால் மற்ற படங்கள் ஒவ்வொன்றும் தவறவிடக்கூடாத சினிமாக்கள். நடிகர்களுக்காகப் படம் பார்க்காமல், இயக்குநர்கள் உருவாக்கும் திரைக்கதையில் பொருந்தி நிற்கும் பாத்திரங்களுக்காகப் பார்க்கவேண்டிய படங்கள். ஒவ்வொன்றும் அதனதன் அளவில் சமகால மனிதர்களின் மனதோடு உரையாட முயன்ற சினிமாக்கள். குறிப்பான வெளிகளில், குறிப்பான காலப்பின்னணியில், குறிப்பிட்ட வகை மனிதர்களை உருவாக்கிப் பார்வையாளர்களைச் சிந்திக்கத் தூண்டிய படங்கள்.

விதனகேயின் பாரடைஸ் அளவுக்கு இல்லையென்றாலும் பாஸ்கர் சக்தியின் ரயில் படத்தை ஓரம்சத்தில் இணைவைத்துப் பேசலாம் என்று தோன்றுகிறது. ஒரு தேசத்து மனிதர்களுக்குள் இருக்கும் மனிதாய உறவுகளைப் பேசுவதைத் தடுக்கும் அரசியல் அதிகாரத்தையும், அதற்காக உருவாக்கப்படும் பிளவுவாதச் சொல்லாடல்களின் நோக்கங்களையும் அடையாளப்படுத்தியதே அந்த அம்சம். அதே போல் ஒரு பயணம் என்ற கால அளவுக்குள் தனிமனிதர்களின் வாழ்க்கைச் சிக்கலுக்குள் மரபான சமூக மதிப்பீடுகளும் போலியான நம்பிக்கைகளும் விட்டுவிட முடியாத பெருமைகளும் செலுத்தும் ஆதிக்கத்தை அந்த இருபடங்களும் பேசியுள்ளன. கொட்டுக்காளியின் ஆட்டோ பயணமும் போகுமிடம் வெகுதூரமில்லையின் வேன் பயணமும் படத்தின் கால அளவுக்குள் திரைக்கதை ஆக்கத்தைச் செய்துள்ளன.

கலை சார்ந்த வாழ்க்கையில் -கூத்தில் ஏற்று நடிக்கும் பாத்திரங்களுக்குப் பின்னால் இருக்கும் வாழ்வியலின் மோதல்களும், மேம்பட்ட பண்புநலன்களால் முரண்களைத் தாண்டிக் கடக்கும் புதிய தலைமுறையின் தன்னம்பிக்கைக்காகவும் ஜமா என்ற சினிமா பார்க்கவேண்டிய படமாக ஆகிவிடுகிறது. காலனிய காலத்துப் பின்னணியில் கச்சிதமான திரைக்கதையில் மனிதர்களின் இருப்புகளைப் பேசிய போட்டும், இந்தியச் சமூகத்தின் அவமானமாக விளங்கும் தீண்டாமையின் இருப்பும் சாதிய ஆதிக்கமும் விமரிசிக்கப்படும் தீவிரத்திற்காகவும் நந்தன் கவனிக்கப்பட வேண்டிய படம்.



நேற்று மெய்யழகன் பார்த்த முடித்தபோது அடியோஸ் அமிக்கோ பார்த்தபோது உண்டான மகிழ்ச்சி உருவானது. இரண்டு படங்களின் சொல்முறையும், இரண்டு பாத்திரங்களைக் கொண்டு பின்னப்பட்ட திரைக்கதையும் இயக்குநர்களின் திறன்களைக் கொண்டுவந்து நிறுத்தின. படமாக்கலில் இருக்கும் கொண்டாட்டத்தன்மையும் நுட்பங்களை உருவாக்க நினைக்கும் ஆக்கத்திறனும் அந்த இயக்குநர்களின் மீதான பெருமிதமாக மாறிவிட்டது. முழுமையான திரைப்பட அனுபவத்தைப் பெறுவதால் உண்டாகும் மகிழ்ச்சி.


தொடர்ந்து பார்க்கக் கிடைக்கும் நல்ல ரசனைக்கான சினிமாக்களின் காலமாக இந்த மூன்று மாதங்களைக் கடந்துவிடலாம். இத்தகைய படங்களின் பெருக்கத்தில் விஜய் நடித்து திரைக்கு வந்த கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்ஸ்- GOAT- எனச் சொல்லிக்கொண்ட சினிமா வந்ததே மறந்து விட்டது. இப்போது வலைச்செயலியிலும் பார்க்கக் கிடைக்கிறது. ஆனாலும் பார்க்கத் தோன்றவில்லை. ரஜினி நடித்து வெளியாகியிருக்கும் வேட்டையன் வலைச்செயலியில் வந்தாலும் அப்படி ஒதுக்கத்தான் தோன்றுகிறது. ஏற்றுக்கொள்ளுதலும் ஒதுக்குதலும் மனிதர்களிடம் செயல்படவேண்டியதில்லை. ஆனால் கலை, இலக்கியம், பண்பாட்டுக்கூறுகள் என நாம் பங்கேற்கும் பலவற்றில் இப்படி ஒதுங்குதலும் ஒதுக்குதலும் செயல்படவேண்டிய தேவை இருக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தி.சு.நடராசனின் திறனாய்வுப் பார்வைகள் :தமிழ் அழகியல், தமிழகத்தில் வைதீக சமயம்

உடல் மறுப்பு என்னும் பெரும்போக்கு

கற்றல் - கற்பித்தல்: மாணவ ஆசிரிய உறவுகள்