ஜெயந்தி: மாமனிதர்களின் அடையாளங்கள்

ஜெயந்தி என்பது வேறொன்றும் இல்லை. பிறந்த நாள் தான். பிறந்த நாளை, பிறந்த நாள் என்று கொண்டாடுவதற்குப் பதிலாக ஜெயந்தி என்று கொண்டாடுவது வெறும் பெயரளவு மாற்றம் அல்ல. ஜெயந்தி என்ற சமஸ்கிருதச் சொல்லால் பிறந்த நாள் அழைக்கப்படும்போது சமஸ்கிருதமயமாக்கப் பட்டதாக மாறி மேல்நிலையாக்கமும் பெறுகிறது. அதனால் சமஸ்கிருதக் கருத்தியலும் சேர்ந்து கொள்கிறது . பிறந்த நாள் கொண்டாட்டங்கள் வெறும் மனிதர்களுக்கானது. ஜெயந்தி மனிதர்களுக்கானதல்ல; மகான்களுக்கானது என்பது அதன் உள்கிடை.
கிருஷ்ணனின் பிறந்த நாளை கிருஷ்ண ஜெயந்தி என வைணவ சமய நம்பிக்கை கொண்டவர்கள் கொண்டாடுவது போல மோகன் தாஸ் கரம்சந்த் காந்தியின் பிறந்த நாளை இந்தியா கொண்டாடத் தொடங்கிய போது அவர் காந்திமகான் ஆனார் என்பதை நாம் அறிவோம். தனது சொந்த வாழ்க்கையைப் பொதுவாழ்க்கைக்கு உரியதாகக் கொடுத்த அவர் அதற்கீடாகப் பெற்றுத் தர விரும்பியது இந்திய தேசத்தின் மனிதர்களுக்கான அரசியல் விடுதலை மட்டும் அல்ல. தேசத்தின் மக்களைப் பாகுபடுத்தி வந்த சமய, சாதி, இன வேறுபாடுகள் சார்ந்த கீழ்மைகளையும் இல்லாததாக ஆக்கும் சமூக விடுதலையையும் தான்.

அகிம்சை, உண்மை பேசுதல், எளிமையான வாழ்க்கை முறை என நடைமுறைச் சாத்தியங்களற்ற தனிமனிதக் கொள்கைகளைக் காந்தி முன் மொழிந்தார் என்ற விமரிசனங்கள் அவர் மீது உண்டு . ஆனால் அவை தனது நலம், தனது குடும்ப உறுப்பினர்களுக்கு அரசுப் பதவிகளைப் பெற்றுத் தருவது, தனது சாதியின் மேலாண்மையை நிறுவுதல், தனது மதத்தின் மீதான பெருமையைக் கூறி அடுத்த மதத்தினரை அச்சுறுத்துவது, தனது தேசத்தின் வல்லாண்மையை ஏற்றுக் கொள்ளும்படி பிற நாடுகளைக் கட்டுப் படுத்துவது போன்ற பரப்புரைகள் என்று யாரும் குற்றம் சாட்டியதில்லை. அவருடைய பரப்புரைகள் இவற்றையெல்லாம் ஒழிப்பதற்கான வழிமுறைகள் என்று நம்பியதால் இந்திய தேசம் மட்டும் அல்ல இந்த உலகமே அவரை மகாத்மா என்று கொண்டாடியது; கொண்டாடுகிறது.

தனிமனித வாழ்க்கையில் காந்தியின் பரப்புரைகள் பின்பற்றப் படவில்லை; அரசியல் வெளியோ பின்பற்றப் பட வேண்டும் என்ற சிந்தனைகள் கூட இல்லாமல் எதிர்நிலையில் சென்று கொண்டிருக்கிறது. என்றாலும் அவரது நோக்கங்கள் சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவனாகக் கருதப் படுகின்றன. அவரது ஜெயந்திக்குப் பின் இருக்கும் மகான் என்ற அடையாளம் ஏற்கப்பட்டுப் பலகாலம் ஆகி விட்டது. இன்று அக்டோபர் இரண்டு இந்திய தேசத்தின் பொதுச் சடங்காக ஆகி இருக்கிறது. அரசுகள் ஒவ்வொன்றும் அதனைக் கொண்டாடுகின்றன.

காந்தி பிறந்த நாள் அக்டோபர் இரண்டு. ஆங்கிலக் காலண்டரின் பத்தாவது மாதம்.அம்மாதத்திற்கு 31 நாட்கள் உண்டு. முதல் தேதிக்கு அடுத்த நாள் காந்தி ஜெயந்தி .அந்த மாதத்தின் கடைசித் தேதிக்கு முந்திய நாள் தேவர் ஜெயந்தி. தேவர் பிறந்த நாளை தேவர் குருபூஜை எனக் கொண்டாடி வந்த அவரது கட்சித் தொண்டர்களும் அவரது சாதியினரும் அந்தப் பெயரை விட்டுவிட்டு ஜெயந்தி என்பதற்கு மாறி விட்டனர். அப்படி மாறியதால் அவர் அந்த சாதிக்கும் அவர் நடத்திய பார்வர்ட் பிளாக் என்ற கட்சிக்கும் உரியவராக இருந்த நிலை மாறிப் பொது மனிதராக மாறியிருக்கிறார்; மாற்றப் பட்டிருக்கிறார். அனைத்துக் கட்சிகளும் அரசும் ஒரு தலைவரின் பிறந்த நாளைக் கொண்டாடும் நிலையில் தான் அவர், வெறும் மனிதர் என்ற நிலையில் இருந்து மாமனிதராக மாறும் நிலை ஏற்படுகிறது.

காந்தியின் அடையாளங்கள் பலவற்றில் ஒத்த தன்மையுடையவர் முத்துராமலிங்கத் தேவர். அவரும் ஆங்கிலக் காலனிய ஆதிக்கத்திற்கெதிராக நடந்த போராட்டங்களில் பங்கேற்றவர். ஆனால் ஒரு சிறிய வித்தியாசம் உண்டு. அவரது போராட்டம் காந்தீய வழியிலானது அல்ல. காந்திய வழியை விமரிசித்து மாற்று வழியை முன் மொழிந்த சுபாஸ் சந்திர போஸின் வழியிலானது. தேவரின் செயல்பாடுகள் தமிழகம் என்ற சிறிய வெளியில் இருந்தது என்றாலும் தேசியத்தின் மீதும், காந்திக்கு இருந்த தெய்வ பக்தியின் மீதும் இவருக்கும் மிகுந்த ஈடுபாடு உண்டு. வியாபார குழுக்களின் நலனை முன்னிறுத்திய காந்தியின் போராட்டங்கள் தேசிய அளவிலான கவனத்தைப் பெற்றவை. அதே போல் தேவரின் முக்கியப் போராட்டமான ரேகைச் சட்ட எதிர்ப்பு தேசிய அடையாளம் கொண்டது என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
 
இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு இனக்குழுக்களை- சாதிகளை- அடக்குவதற்காகப் போடப்பட்ட சட்டம் தான் ரேகைச் சட்டம் என அழைக்கப் பட்ட குற்றபரம்பரைச் சட்டம். அதன்படி ஆங்கில அரசாங்கம் அடங்க மறுத்த இனக்குழுக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் காவல் நிலையங்களையும் சிறைகளையும் ஏற்படுத்தியது. ஆங்கிலேயர்கள் காலத்தில் பாளையங்கோட்டை, மதுரை, கடலூர், வேலூர் போன்ற சிறைகள் உருவாக்கப் பட்ட பின்னணியில் இந்தக் குற்றப் பரம்பரைச் சட்டமும் அந்தப் பகுதியில் அடங்க மறுத்த இனக்குழுக்களாக வன்னியர், கள்ளர், மறவர், குறவர் போன்ற குழுக்களும் இருந்தன.

குற்றப்பரம்பரைச் சட்டம் நீக்கப் பட வேண்டும் எனப் போராடிய தேவர் , அம்மக்களுக்குச் சலுகைகள் வழங்கப் பட வேண்டும் என்ற கோரிக்கைகளையும் கூட முன் வைத்தார். அதன் மூலம் அவர்கள் கற்க வேண்டும்; புதிய புதிய வெளிகளுக்குள் பயணம் செய்ய வேண்டும்; ஒதுக்கப் பட்டவர்களாக இருந்த நிலை மாற வேண்டும்; அனைவரோடும் கலந்து மக்களாட்சியின் பலனை அவர்கள் பெற வேண்டும் என்பதுதான் அந்தக் கோரிக்கைகளின் பின் இருந்த நோக்கங்கள். அதாவது ஜனநாயகத்திற்கு ஏற்றவர்களாக மாற்றுவது என்பது தான் அதன் அடிப்படை நோக்கம். ஆனால் நடைமுறை எதார்த்தம் வேறாக இருக்கிறது. மக்களை விடுவிக்கப் போராடிய தலைவர்களை இன்று சுயநலம் சார்ந்த மனிதர்கள் சாதிக் கூண்டுக்குள் அடைத்துக் கொண்டிருக்கின்றன. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட பலரும் இன்று சாதியத் தலைவர்களாக ஆக்கப்படும் ஆபத்து நடந்து கொண்டிருக்கிறது.

காலனிய அடையாளத்தைத் தூக்கி எறியப் போராடிய பல தலைவர்களின் இலக்குகள் விடுதலைக்குப் பின்பு பல்வேறு காரணங்களால் திசைமாற்றம் பெற்றன என்பதும் கூட உண்மைதான். புதிதாக அறிமுகமான ஜனநாயக நடைமுறையைச் சரியாகப் புரிந்து கொள்ளாத கூட்டத்தை வழி நடத்தத் திணறிய அவர்கள், தன்னை ஏற்றுக் கொண்ட கூட்டத்தின் போக்கிற்கு வளைந்து கொடுத்த நிலைகளும் கூட ஏற்பட்டன. காலனியவாதிகளை விரட்டிய அதே நிலை பாட்டை ஐரோப்பிய கருத்தியல் நிலைபாடான ஜனநாயகத்தின் மீதும் காட்டி வெறுப்புடன் பலர் விமரிசித்தனர். இந்தியப் பாரம்பரியம் என்ற பெயரில் சாதிய வேறுபாடுகளும், பெண்ணடிமைத் தனமும் கூட இங்கு ஏற்றுக் கொள்ளப் படுகின்ற போக்கு காணப்பட்டது; காணப்படுகிறது.

தேவரின் பிற்கால அரசியலை இத்தகைய பின்னணியில் விளங்கிக் கொள்ளாமல், தனது சாதியின் ஆதிக்கத்திற்காகப் போராடியவர் என்று விளங்கிக் கொண்டதின் விளைவுகளால் தான் தமிழ் நாட்டுக் கிராமங்களின் தெருக்கள் சாதிக் கோடுகளால் பிளவு பட்டுக் கிடக்கின்றன. தொடர்ந்து அந்த வேலையை வெவ்வேறு இயக்கங்களும் தனி நபர்களும் செய்து கொண்டு போகும் போது மாமனிதரின் அடையாளங்கள் கேள்விக்குள்ளாக்கப்படும் ஆபத்தும் ஏற்பட்டு விடும்.

தேவர் ஜெயந்தி அரசின் விழாவாக மாற்றப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான ஒரு சடங்கு என்ற அளவில் அது நின்று போகக் கூடாது. அவரது போராட்டம் அவர் சார்ந்த - சாதியை -இனக்குழுவை- குற்றப் பரம்பரையினர் என்ற மோசமான அடையாளத்திலிருந்து மீட்டெடுப்பதற்கான போராட்டமாக இருந்தது. அது நிறைவேறி விட்டது என்பதைச் சட்டபூர்வமாகச் சாதித்தால் மட்டும் போதாது. நடைமுறையிலும் சாத்தியமானதாக்க வேண்டும் .அரசு விழா என்பது ஜனநாயகத்தன்மை கொண்டது. அதனால் அனைவரும் பங்கேற்கும் சாத்தியங்களை வழங்குவது அவசியம். அங்கே வன்மங்களை விதைப்பதற்கும், மேலாதிக்க உணர்வை உறுதி செய்வதற்கும், வன்முறைகளைத் தூண்டுவதற்கும் இடம் எதுவும் இல்லை.

இதை உறுதி செய்யாவிட்டால் மாமனிதர்களின் அடையாளம் தொலைந்து போகும். இதை உறுதி செய்யும் பொறுப்பு அரசுக்கு மட்டும் உரியது என்று நினைக்க வேண்டியதில்லை. அவர்களைச் சொந்தமெனக் கொண்டாடுபவர்களுக்கும் பின்பற்றுவதாக நம்புகிறவர்களுக்கும் கூட அந்தப் பொறுப்பு உண்டுதான். மாமனிதர்களின் அடையாளம் தொலைவது ஒரு குறிப்பிட்ட குழுவின் பிரச்சினை அல்ல; நிகழ்காலச்¢ சமூகத்தின் நலவாழ்வுப் பிரச்சினை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தி.சு.நடராசனின் திறனாய்வுப் பார்வைகள் :தமிழ் அழகியல், தமிழகத்தில் வைதீக சமயம்

உடல் மறுப்பு என்னும் பெரும்போக்கு

கற்றல் - கற்பித்தல்: மாணவ ஆசிரிய உறவுகள்