பண்பாட்டு அரசியலை முன்வைத்த மறுபேச்சுகள் -ந.முருகேசபாண்டியன்.

1981 ஆம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் எம்.ஃபில் படித்துக்கொண்டிருந்தேன். வகுப்பு இடைவேளையின்போது துறை அலுவலகத்திற்குப் போய்க், கடிதம் எதுவும் எனக்கு வந்திருக்கிறதா என்று பார்த்தேன். அப்பொழுது தற்செயலாகப் பார்த்த அஞ்சலட்டையில் கலை இலக்கியப் பெருமன்றம் நடத்தும் மாதந்திரக் கூட்டத்திற்கான அறிவிப்பைப் பார்த்தவுடன் வியப்பாக இருந்தது. அதுவும் அந்தக் கடிதம் முதலாமாண்டு படிக்கிற அ. ராமசாமி என்ற மாணவர் பெயருக்கு அனுப்பப்பட்டிருந்தது. இடதுசாரிப் பின்புலத்தில் இளம் மாணவரா? என்று யோசித்தவாறு அஞ்சலட்டையை எடுத்துக்கொண்டு முதலாமாண்டு வகுப்பிற்குப் போனேன். ”யாருங்க ராமசாமி?” என்ற எனது கேள்விக்கு நான்தான் என்று எழுந்து வந்த மாணவர் பின்னர் எனக்கு நெருக்கமானார்.