விடுதலையின் கதையைத் தொடங்கும் பிலடெல்பியா..


அமெரிக்காவின் பிலடெல்பியா நகரைப் பார்க்கும் திட்டம் எனது பயணத்திட்டத்தில் இல்லை. எதிர்பாராது நடந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். கனடாவில் ஒருமாதம் இருந்தபின்பு திரும்பவும் டல்லாஸ் வரவேண்டும். டல்லாஸுக்கு ஒட்டாவாவிலிருந்து நேரடியாக விமானம் இல்லை. அங்கிருந்து டொரண்டோவுக்கோ, மாண்ட்ரியாலுக்கோ போய் விமானம் ஏறவேண்டும். ஒட்டாவிலிருந்து ஒரு உள்நாட்டு விமானம் ஏறித் திரும்ப அமெரிக்காவிற்குள் நுழையும் பன்னாட்டு விமான சேவையைப் பெறவேண்டும். முதலில் போட்ட திட்டப்படி மாண்ட்ரியாலுக்குக் காரில் போய் அங்கிருந்து விமானமேறி டல்லாஸ் போகும்படியாக பயணச்சீட்டுப் போட்டிருந்தோம். ஏற்கெனவே மாண்ட்ரியால் பார்த்துவிட்ட நிலையில் புதியதொரு ஊரைப் பார்த்துவிட்டு அனுப்பிவைக்கலாம் என்று மகன் நினைத்தார்.
குட்டி விமானப்பயணம்

ஐக்கிய அமெரிக்காவையும் கனடாவையும் பிரிக்கும் எல்லைக்கோடு பெரும்பாலான இடங்களில் நதியாகவே இருக்கிறது. நதியின் வடக்கே கனடா; தெற்கே அமெரிக்கா. அந்நதிகளின் மீது கட்டப்பட்ட பெரும்பாலங்கள் வழியாக இங்கிருந்து அங்குபோவதும் அங்கிருந்து இங்கு வருவதுநம் நடக்கிறது. ஒட்டாவாவிலிருந்து பிலடெல்பியா நகருக்கு வரும் பாதையில் இருக்கும் நகரம் ஆக்டென்ஸ்பெர்க் என்னும் சிறிய நகரம். அந்நகரத்தில் குட்டிவிமானங்கள் வந்திறங்கும் கிராமிய விமானநிலையம் இருக்கிறது. அந்த விமான நிலையத்திலிருந்து பிலடெல்பியாவிற்கும் சான்பிரான்சிஸ்கோவிற்கும் செல்லக் குட்டிக்குட்டி விமான நிலையங்களை இயக்குகின்றன சில விமானக்குழுமங்கள்.

அதிக அளவாக 35 பயணிகளுக்குக் குறைவானவர்கள் உட்காரும் விமானங்கள் வந்து போகின்றன. கொண்டார் என்னும் குழுமத்தின் விமானம் ஒன்றில் பிலடெல்பியா நகர் நோக்கிப் பயணம் செய்தேன். அந்த விமான நிலையத்தில் பணியாளர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. 10 பேர் என்ற அளவில் இருந்தார்கள்.ஒவ்வொரு வேலைக்கும் ஒருவிதப் பணியாளர்கள் என்ற நிலை இல்லை. ஒரு விமானத்தை ஓட்டும் விமானியும் சேவையாளர்களுமே அனைத்து வேலைகளையும் செய்தார்கள். பயணிகளின் வருகையை உறுதிசெய்து முடித்துவிட்டு, பொருட்களை வாங்கி உள்ளே அனுப்புகிறார்கள். அடுத்துப் பாதுகாப்புக் கண்காணிப்புகளைச் செய்தார்கள். எல்லாம் முடிந்தபின் விமானம் கிளம்பிய பின் உள்ளே அறிவிப்பு செய்தல், சிற்றுண்டி வழங்குதல் என அதற்கு மாறிக்கொண்டார்கள். ஒவ்வொரு பணிப்பொறுப்பின்போதும் அதற்கான உடல்மொழியை வெளிப்படுத்தி வேறு நபர்களாக ஆகமுடிகிறது.

அங்கு 10 பேர் பயணிக்கும் விமானங்கள் கூட உண்டாம். தனிக்குடும்பமாக பயணிக்க நினைத்தால் தனி வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம். அவர்களே விமான நிலையங்களில் இறங்கி ஏற அனுமதி பெற்றுத்தருவார்கள். அதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

*****************

பிலடெல்பியா, பென்சில்வேனியா மாநிலத்தில் இருக்கும் பெருநகரம். அமெரிக்காவின் மாநிலங்களில் கிழக்குப்பகுதியில் – அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் இருக்கும் மாநிலங்கள் பரப்பளவில் சிறியவை; ஆனால் வளமானவை. ஐரோப்பாவிலிருந்து பிரிட்டானியக் குடியேற்றங்கள் முதலில் ஏற்பட்ட மாநிலங்கள். அங்கிருக்கும் நகர அமைப்பிலும், கட்ட டங்களின் அமைப்பிலும் இங்கிலாந்து நகரங்களின், கட்டடங்களின் சாயலைப் பார்க்கமுடியும். ஊர்ப்பெயர்கள், தெருப்பெயர்கள் எல்லாம் கூட அங்கிருக்கும் பெயர்களாக இருக்க வாய்ப்புண்டு. அமெரிக்க வரலாற்றில் 400 ஆண்டுக்கும் மேலான வரலாறு இம்மாநிலங்களுக்கு உண்டு.

இதற்கு மாறானவை மேற்கே, பசுபிக் கடல் பகுதியில் இருக்கும் மாநிலங்கள். கலிபோர்னியா, டெக்சாஸ், அரிசோனா, நியுமெக்ஸிகோ போன்றன அளவில் பெரியன. இங்கிலாந்திலிருந்து வந்து குடியேறியவர்களைவிடவும் மற்ற ஐரோப்பிய நாடுகளிலிருந்து – குறிப்பாக ஸ்பெயின், பிரான்ஸ், போர்ச்சுகள் போன்றவற்றிலிருந்து குடியேறியவர்களின் பரம்பரையினரே அதிகம். மெக்ஸிகோவின் பூர்வகுடிகளின் சாயல்கொண்ட மனிதர்கள் அதிகம்

2016 இல் அமெரிக்கா போனபோது அதிக நாட்கள் இருந்த நகரம் பாஸ்டன். அப்போது மகன் அங்கே இருந்தார். அதனால் வடகிழக்கு மாநிலங்களான மாசுசெட்ஸ், நியூஹாம்ஸயர், ரோட்ஸ் தீவுகள், வெர்மண்ட், நியூயார்க்,கனக்டிகட், வாசிங்டன் போன்ற மாநிலங்களில் பயணம் செய்த துண்டு. அந்த முறை பயணம் செய்யாத ஒரு மாநிலத்துக்குள் நுழைந்து டெக்சாஸ் போய்விடலாம் எனத் திட்டமிட்டுப் பிலடெல்பியாவில் இறங்கினோம். இரவு 8,40 விமானத்தைப் பிடிக்க க்காலை 9 மணிக்கே வந்திறங்கி, அன்று பகல் முழுவதும் அந்நகரில் பார்க்கத்தக்க இடங்களைப் பார்க்கும் விதமாக வந்தோம்.
 
விடுதலையின் கதை


இறங்கியதும் முதலில் போன இடம் அமெரிக்காவில் விடுதலை ஒப்பந்த மையம். பிரிட்டானியாவிலிருந்து விடுதலை பெற்ற கதையைச் சொல்லப் பழைய நாற்காலிகள் அப்படியே வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அறையிலும் யாரெல்லாம் உட்கார்ந்திருந்தனர்; என்னவெல்லாம் விவாதிக்கப்பட்ட து; யாரெல்லாம் கையெழுத்துப் போட்டார்கள்; கையொப்பம் போடப் பயன்பட்ட தாள்கள், பேனாக்கள், அப்போது செய்தித்தாள்கள் வந்த படங்கள், கட்டுரைகள் போன்றன பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அந்த வரலாற்றைக் கேட்கவும் அந்த அறைகளைப் பார்க்கவும் கட்டணம் உண்டு. ஒருவருக்கு ஒரு டாலர். எவ்வளவுபேர் அதைக் கேட்க வருகின்றனர் என்ற புள்ளிவிவரத்திற்காகவே அந்தக் கட்டணம். வரலாற்றை விவரிக்கும் ஆட்கள் நல்ல தேர்ந்த குரல்வளமும் தொனிமாற்றமும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். சுவாரசியமாகச் சொல்கிறார்கள். சொவதன் மூலம் அந்த நாட்களுக்குள் அழைத்துச் செல்ல முயல்கிறார்கள். அந்த வகையில் ஒரு நிகழ்த்தும் கலைஞர்களாக இருக்கிறார். காலை 9.00 பிற்பகல் 5 மணி வரை மட்டுமே அனுமதி உண்டு. நமக்கான நேரத்தை முன்பதிவுசெய்து கொள்ள வேண்டும். நமக்கு வரலாறு சொல்ல ஆணோ பெண்ணோ கிடைக்கலாம். சில நேரங்களில் படிக்கும் மாணாக்கர்கள் கூடப் பயிற்சிக்காக வந்திருக்கலாம்.

விடுதலை ஒப்பந்த வளாகத்திலேயே கீறல் விழுந்த பெரும் மணிக்கூண்டு ஒன்று உள்ளது. அதன் எடை, கீறல் காரணமாக மணிக்கூண்டின் உச்சியில் வைக்கப்படாமல் தரைத்தளத்தில் வைத்திருக்கிறார்கள். அங்கிருக்கும் அருங்காட்சியகத்தைப் பார்த்துவிட்டு, மாலை நேரத்தில் நடக்கும் கலைநிகழ்ச்சிகளைப் பார்த்தோம் என்றால் ஒருநாள் கழிந்துவிடும். ஆனால் எங்களுக்கு நேரமில்லை. அதனால் அடுத்தடுத்துப் போன இடங்கள் ஒவ்வொன்றிலும் ஒருமணி நேரம் என்பதாக நேரம் ஒதுக்கினோம்.

காதலே சிற்பமாக


வேறொன்றும் இல்லை; காதல் மட்டும்தான் நிற்கிறது. LOVE - என்ற நான்கு எழுத்துகளில் இரண்டை மேலேயும் இரண்டைக் கீழேயும் செதுக்கி நிறுத்தியிருக்கிறார்கள். சிற்பம் ரத்தச் சிவப்பில் நிற்கும் அந்த எழுத்துக்களின் கீழே நின்றும் சுற்று நின்றும் படம் எடுத்துக்கொள்ள வரிசை கட்டுகின்றார்கள் இணைகள்.

இணையர்களாகவும் இணையாமலும் தவிக்கும் மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் காதல் இருக்கத்தானே செய்யும். அமெரிக்காவின் இளம் அதிபராக இருந்து மறைந்தவர் ஜான் எப் கென்னடி. அவரது பெயரில் அமைந்துள்ள அந்தப் பகுதியில் இருக்கும் காதல்பூங்கா பிலடெல்பியா நகரில் இருப்பவர்களுக்கும் நகருக்குச் சுற்றுலாவாக வருபவர்களுக்கும் பார்க்கவேண்டிய ஒன்றாக் இருக்கிறது. செயற்கை நீரூற்று, பூக்களின் தொகுப்பு, உணவக நாற்காலிகள் எனச் சதுரத்திற்குள் இருப்புகள் உள்ளன. அச்சதுரத்தைச் சுற்றி நிற்கும் கட்டடங்களின் உயரமும் வண்ணங்களும் அடர்த்தியும் ஒவ்வொருவரின் இருப்பையும் மறக்கச் செய்யும் வல்லமை கொண்டவை.



சுற்றுலாவாசிகளைக் கவரும் இன்னொரு வட்டம் பெஞ்சமின் பிராங்ளின் நினைவுக்கூடம் இருக்கும் பகுதி. பன்னாட்டுக் கொடிகள் பறக்கும் சாலைகள் குவியும் அந்த வட்டத்தை நோக்கிப் பத்துக்கும் மேற்பட்ட சாலைகள் வந்து சுற்றிவிட்டு விலகுகின்றன. பெஞ்சமின் பிராங்ளின் நினைவுக்கூடம் வணிக அடையாளமாய் நிற்கிறது. நகர் மையத்தில் உள்ளடுக்குக் கடைகள் இருக்கின்றன. அவற்றின் தலைமேல் வீடுகள் இருக்கின்றன. பர்ந்து விரியும் பேரங்காடிக்கட்டடம் ஒன்றின் மேல் உருவாக்கப்பட்ட நகர்மையம் போல இருக்கிறது பிலடெல்பியா நகரத்துச் சதுக்கங்கள். சதுக்கங்கள் ஒவ்வொன்றாய்ச் சுற்றிவர திறப்புக்கொண்ட சுற்றுலா வாகனங்கள் நிற்கின்றன

நதியின் கரையில்

அங்கிருந்து டெலவர் நதியோரத்துத் துறைகள் ஒன்றுக்குப் போனால் பூங்காக்கள் இருக்கின்றன. நதி விரிந்து நகர்கின்றது. அதன் குறுக்கே நிற்கும் பல்லடுக்குப் பாலங்களில் ஓரடுக்கில் நகருக்குள் வரும் வாகனங்கள் நுழைகின்றன. இன்னொரு அடுக்கில் வெளியேறும் வாகனங்கள் போகின்றன. நீர்ப்பரப்பில் பயணிகள் கப்பல்கள், படகுகள் செல்கின்றன. பொருட்களை ஏற்றிச்செல்லும் பெரும்படகுகளும் நகர்கின்றன. இந்தக் கோடையில் பலரும் சமைத்த உணவை எடுத்துக்கொண்டு நதிக்கரை ஓரத்துப் பூங்காவிற்குள் வந்து விடுகிறார்கள். நாங்களும் அப்படியொரு பூங்காவைத்தேடித்தேடி குறுக்கும் நெடுக்குமாகப் போனபோது காரை நிறுத்துவதற்கான இடங்களே கிடைக்கவில்லை. எங்கு பார்த்தாலும் கார்களின் வரிசை. நிற்கும் கார்களும் நகரும் கார்களும் விரையும் கார்களுமென நகரமெங்கும் கார்கள் கார்கள். கார்களாய் நகரும் நகரமாய் இருந்த து பிலடெல்பியா.

காரிலிருந்தே ஒன்றிரண்டு நாட்கள் சுற்றவேண்டிய நகரம் அது. அதன் சுற்றுலாச் சிறப்பிடங்களைப் பார்க்கவே சில நாட்கள் வேண்டும். அதன் பிறகு டெலவர் நதிக்கரை ஓரக்காடுகளில் தங்கி நதியோடு பேசிக்கொள்ள சில நாட்கள் வேண்டும்










கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெரியார்- எப்போதும் பேசுபொருள்

பெரியார்மண்ணும் பிராமணியத்தின் இயக்கமும்.

நாத்திகம் என்னும் ஆன்மீகம்