வேளாண்மை: இந்தியாவும் கனடாவும்


இந்திய விவசாயத்தின் பெருங்குறை

நானொரு சிறுவிவசாயக்குடும்பத்திலிருந்து வந்தவன். எங்கள் விவசாயம் நஷ்டமான விவசாயமாக இருந்ததற்கு முதல் காரணம் விளைச்சலைச் சேமித்து வைக்கக் கொள்கலன் எதுவும் இருக்கவில்லை என்பதே. நான் ஆரம்பப்பள்ளியை முடித்தபோது வீட்டின் உறுப்பினர்கள் 10 பேர். பத்துப் பேரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட வீட்டில் இடம் இருந்ததில்லை. பெரும்பாலும் வீட்டிற்கு முன்னால் இருக்கும் திண்ணையிலும் தொம்பரைக் கற்களிலும் தான் அமர்ந்து சாப்பிடுவோம்.ஆனால் தோட்ட விவசாயமும் காட்டு விவசாயமும் இருந்தது. 60 மூடை நெல்லும் 25 மூடை நிலக்கடலையும் ஒரே நேரத்தில் அறுவடை செய்தார்கள். அதனை எல்லாம் களத்து மேட்டிலிருந்தே விற்பனைக்குக் கொண்டுபோவார்கள். அல்லது வியாபாரிகள் வந்து வாங்கிப் போய்விடுவார்கள்.
பருத்தி விவசாயம் கூட அப்படித்தான் நடந்தது. எந்த விளைச்சலையும் ஒரு வாரம் வைத்திருக்கும் அளவுக்குக் கூடத் தானியக்கிடங்குகளோ, சேமிப்புக் கூடங்களோ இருந்ததில்லை. இது என்னுடைய குடும்பப்பிரச்சினை மட்டுமல்ல. மொத்த ஊரின் பிரச்சினையும் அதுதான். எங்கள் குடும்பத்தைவிடப் பெரிய விவசாயிகளாக 10 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் எங்கள் ஊரில் உண்டு. அவர்களுக்கும் அவர்களது விளைச்சலைப் பாதுகாக்கும் சேமிப்புக்கூடங்கள் இருந்ததில்லை.

நெல் அவித்துக்காயப்பட்டு மழைக்கும் வெயிலுக்கும் பாதுகாத்து அரிசியாக்குவதற்கே பெரும்பாடுபடுவார்கள். பொதுச்சாவடி மாடி அல்லது கோயில் களம் போன்றன அவித்த நெல் காயப்போடும் இடங்களாக இருந்தன. அப்போது எல்லாரும் சேர்ந்து ஒரு தானியக்கிட்டங்கியை உருவாக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. இதுதான் 1970 கள் வரையிலான தமிழ்நாட்டுக் கிராமங்களின் விவசாயிகளின் நிலை. இதில் மாற்றம் கொண்டுவருவதுபோல வந்த கூட்டுறவுப் பண்டகசாலைகள் அடகுக்கடைகள் போலத் தானியத்தை வாங்கிச் சேமித்தார்கள் என்றாலும் அங்கு போன தானியங்கள் வீணடிக்கப்பட்டன என்பதும் வரலாறு. இப்போதும் நிலைமை பெரிதாக மாறிவிடவில்லை. இதனையெல்லாம் கவனத்தில் கொண்டுதான் முன்னால் பிரதமர் மன்மோகன் சிங் இந்திய விவசாயம் பெரும் பண்ணை விவசாயமாக மாற வேண்டும் என்றார். தனியார் சேமிப்புக்கூடங்களுக்கு அனுமதி தரவும் தயாரானார்.
 
தானிய விவசாயத்திலிருந்து தோட்ட விவசாயத்திற்கும் மாறிய கிராமத்து விவசாயிகள் மரபான கிராமத்து விவசாயிகள் அல்ல. அவர்கள் சிறுநிலங்களை விற்றுவிட்டு நகரங்களுக்குப் போய்விட்டார்கள். இப்போது காய்கறிகள், பழங்கள் பயிரிடப்படுவது பண்ணை முறையில். பாதுகாப்பிற்கும் பழமுதிர்ச்சோலைகள் போன்ற மாற்றங்கள் வந்துள்ளன. பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா, மகாராட்டிரம் போன்றன முன்னேற்றம் கண்டுள்ளன. தமிழ்நாட்டில் இன்னும்கூட அதில் இலக்குகள் உருவாக்கப்படவில்லை.

கனடாவில் ஒட்டாவாவிற்குப் பக்கத்தில் இருக்கும் கிராமங்களுக்கும் தோட்டப்பகுதிகளுக்கும் போய்க் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு ஊரிலும் பொதுவான சேமிப்புக்கூடங்கள் இருக்கின்றன. தனியார் கொள்கலன்களும் இருக்கின்றன. பனிக்கட்டிகளாக மாறும் குளிர்காலத்தில் வெப்பம் உண்டாக்கும் விதமாகவும், கோடைகாலத்தில் குளிர்பதமாக மாற்றும்விதமாகவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தானியங்களும் விதைகளும் பழங்களும் காய்கறிகளும் அதனதன் நிலையிலேயே ஆண்டுக்கணக்கில் சேமித்துப் பாதுகாக்க முடியும். அக்கூடங்களும் கொள்கலன்களும் வாடகைக்கிடைக்கின்றன. பெரும் தோட்டக்காரர்கள் சொந்தமாகவே வைத்துள்ளனர். அவர்கள் கொள்கலன்களில் இடமிருந்தால் வாடகைக்கு விடுகிறார்கள். வீடுகட்டி வாடகைக்கு விடுவதுபோல விவசாயப்பொருட்களைப் பாதுகாக்கும் தரைத்தளக் கூடங்களும் அடுக்குநிலைக் கூடங்களும் கட்டி வாடகைக்கு விடுகிறார்கள்.

வேளாண்மை உற்பத்திக்கு இலக்கு வைப்பது, விளைச்சல் வரும்போது விலை வைப்பது போன்றவற்றில் காட்டும் கவனத்தைப் பாதுகாப்பதிலும் பதப்படுத்துவதிலும் காட்டினால் தான் இந்திய விவசாயிக்கு வாழ்க்கை இருக்கும். இல்லையென்றால் சிறு விவசாயிகள் என்ற இனமே இல்லாமல் போகத்தான் செய்வார்கள். எல்லாத்தொழிலையும் கைப்பற்றும் தொழிலதிபர்கள் விவசாயத் தொழிலதிபர்களாகவும் வலம்வரவே செய்வார்கள்.

உணவுப்பயிர்கள், கால்நடைகள் அருங்காட்சியகம்
 


மேற்கு நாடுகள் ஒவ்வொரு துறைக்கும் ஒரு அருங்காட்சியகத்தைப் பராமரிக்கின்றன. அடிப்படையில் இவ்வகை அருங்காட்சியகங்கள் பள்ளிப்படிப்புக்காலத்தில் இருக்கும் இளம் மாணாக்கர்களுக்குக் கற்பிக்கும் நோக்கமே முதன்மையானது. இவ்வகை அருங்காட்சியகங்கள் இருப்பதோடு மாநில அளவிலும் இருக்கின்றன. இவ்வகை அருங்காட்சியக வளாகங்கள், அந்த நோக்கத்தைத் தாண்டிச் சுற்றுலா, பொழுதுபோக்கு, தகவல் களஞ்சியம் என்பதாக விரிகின்றன.
 கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில் தேசிய வேளாண்மைத்துறையினர் நடத்தும் உணவு&, கால்நடைத் துறை சார்ந்த அருங்காட்சியகம் பரந்து விரிந்த நிலப்பரப்பு ஒன்றில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது. நகரின் முக்கியமான பகுதியான பிரின்ஸ் ஆப் வேல்ஸ் பகுதியிலிருக்கும் அருங்காட்சியகம், நாங்கள் இருக்கும் கனட்டாவிலிருந்து 20 மைல்தூரம். நகரத்திற்குள் செல்லும் சாலைகளைத் தவிர்த்துவிட்டு புறநகர் வழியாகப் போகும்போது வனங்களும் காடுகளும் தோட்டப்பகுதிகளையும் பார்த்துக்கொண்டே செல்லமுடிந்தது. காலை 9 மணி முதல் 5 மணி வரை திறந்திருக்கும் காட்சியகத்தைப் பார்ப்பதற்குப் பலவிதமாகச் சலுகைகள் உள்ளன. குடும்பமாக வருபவர்களுக்கென்று சலுகை உள்ளது. அவரவர் பகுதியில் இருக்கும் நூலகத்தில் உறுப்பினராக இருந்தால், குறிப்பிட்ட நாளில் அங்கு வழங்கப்படும் சிறப்பு அனுமதி அட்டையைப் பெற்றுக்கொண்டு வரும்போது இலவசமாகப் பார்க்கமுடிகின்றது. ஒவ்வொரு நாளுமே கடைசி ஒருமணிநேரம் 4-5 அனைவருக்குமே இலவசமே. ஆனால் எல்லாவற்றையும் ஒருமணி நேரத்தில் பார்த்து முடிக்க முடியாது. அவ்வப்போது வந்து ஒவ்வொரு திடலாக நுழைந்து பார்த்து முடிக்கலாம்.

சமதளமாக இல்லாமல் சரிவும் மேடுமான பகுதியில் ஒவ்வொரு திடலும் தனித்தனியாக இருக்கின்றன. இது கோடை காலம் என்பதால் கால்நடைகள், பறவைகள் திறந்த வெளிக்கூண்டுகள் இருக்கின்றன. பனிக் காலத்தில் எல்லா உயிரினங்களும் திடல்களுக்குள் அடைக்கப்பட்டு இதமான வெப்பச்சூழல் உருவாக்கப்பட்டுப் பாதுகாப்பார்கள். ஜெர்சி மாடுகள் வரிசையாக தொழுவத்தில் இருந்தன. பால் கறக்கும் தொழிலாளிகள் ஒவ்வொன்றாக அதற்குரிய எந்திரக்குழாய்களை எடுத்து மாட்டிவிடும்போது பால் பதப்படுத்தும் எந்திரப்பகுதிக்குச் சென்று சேர்கிறது.

வெள்ளைப்பன்றிகளும் கரும்பன்றிகளும் தங்களுக்குத் தேவையான் தண்ணீர், உணவுப்பொருள் போன்றவற்றைப் பெற்றுக்கொள்ளும் முறை உருவாக்கப்பட்டுள்ளன. ஆடுகள், கழுதை, கோழிகள், குதிரை என விலங்குகள் பராமரிக்கப்படுவதைப் போலவே செடிகளும் கொடிகளும் மரங்களும் அடையாளப்படுத்தப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றன. மண்வளம் குறித்த பாடங்கள் நடத்தப்படும் பகுதி, பூவிலிருந்து சமையல் எண்ணெய் எடுக்கும் முறை, இறைச்சிக்கான விலங்குகளிலிருந்து பதப்படுத்தப்பட்ட இறைச்சியாக ஆக்கும் முறை போன்றன சலனப் படங்களாகக் காட்சிகள் ஆக்கப்பட்டுள்ளன. ஒருவர் ஏதாவதொன்றைக் கூடுதலாகத் தெரிந்துகொள்ள விரும்பினால் அங்கேயே அமர்ந்து, அதற்கென இருக்கும் எந்திரங்களை இயக்கினால் காட்சிகள் விரிகின்றன.
 
கனடாவைச் சுற்றிக் கடல் பரப்பு இருக்கிறது. நாட்டிற்குள்ளும் ஏராளமான ஏரிகளும் ஆறுகளும் இருக்கின்றன. இந்த நீர்ப்பிடிமானங்களைப் பயன்படுத்தி மீன்வளம் எவ்வாறு பெருக்கம் பெற்றுள்ளது என்பதும், கடல் வாழ் உயிரினங்கள் வழியாக நாட்டிற்குக் கிடைக்கும் ஏற்றுமதிப் பொருளாதாரநிலையை அங்கே தெரிந்துகொள்ள முடியும்.

கனடா முழுவதும் வேளாண்பொருட்களைப் பாதுகாத்து வைக்கும் கொள்கலன்களின் மாதிரிகளும் அங்கே இருக்கின்றன. முழுவதும் மூடப்பட்ட கொள்கலன்களுக்குள் ஏறி இறங்கும் தானியங்கிக் கட்டமைப்பு இருக்கிறது.வேளாண்மையிலும் கால்நடைப் பொருளியலிலும் கனடா கடந்த காலங்களில் எப்படி இருந்தது; இப்போது எத்தகைய வளர்ச்சிநிலையைக் கண்டுள்ளது. அதன் வழியாக நாட்டின் பொருளாதார வளம் எப்படி உறுதிப்பட்டுள்ளது போன்றனவற்றைக் கற்பிக்கும் கல்வி நிலையமாகவே அருங்காட்சியகம் இருக்கிறது. நிறைவாக அங்கிருக்கும் மரங்களில் இருந்து ஓய்வெடுக்கவும் சிறுவர் விளையாட்டுக் கருவிகளில் அவர்கள் விளையாடவும் வாய்ப்புண்டு.

பழத்தோட்டம் பார்த்த காதை

சிற்றுலாக்களில் ஒன்றாகத் தோட்டம் பார்க்கப் போவதும் பழங்களைப் பறிப்பதும் இருக்கிறது இங்கே. கனடா விவசாய நாடாக இருப்பதற்கு அதன் பரப்பளவு முதன்மையான காரணம். பெரும்பாலும் பண்ணை அமைப்புகள் கொண்ட தோட்டங்கள். அங்கே இப்போதைய பருவம் ஸ்டார்பெரி பழத்துக்கான பருவம். ஆப்பிள்,செர்ரி பருவங்களும் வரும். அப்போது அதனைப் பறித்துக்கொண்டு வரச் சிற்றுலா போகலாம் எனச் சொன்னார்கள். சிறியதும் பெரியதுமான பண்ணைகளில் பழம் பறிக்கும் சிற்றுலாவிற்கான ஏற்பாடுகள் இருக்கின்றன.

 

நாங்கள் போனது ஒட்டாவா நகரிலிருந்து 30 மைல் தூரத்திலிருந்து மில்லர் பண்ணை. மகன் குடும்பத்தோடு அவனது நண்பர்கள் இரண்டு பேரின் குடும்பங்களும் சேர்ந்துகொண்டன. காரில் பயணித்துக்கொண்டிருக்கும்போது ஆண்டன் செகாவ் எழுதிய செர்ரித் தோட்டம் நினைவில் விரிந்துகொண்டிருந்தது. இறங்கிப் பார்த்தபோது அந்நினைவுகள் அகன்று எங்கள் கிணற்றுமேட்டில் இருந்த பம்புசெட் அறை, களம், மாட்டுக் கொட்டில், கோழிக்கூண்டு, பூவரச மரங்கள், அதில் கட்டித்தொங்க விடப்பட்டிருந்த வைக்கோல் பிரி ஊஞ்சல், படப்பு, உரக்குவியல் என எல்லாம் நினவில் வந்து போயின.

நமது விருப்பப்படி கூடைகளை வாங்கிக்கொள்ளலாம். அதற்கேற்ப விலை மாறும். சிறிய கூடைக்கு 7, பெரிய கூடைக்கு 12 டாலர், அதேநேரம் தோட்டத்திற்குள் சென்றுவர ஒவ்வொருவருக்கும் ஒரு டாலர். விரிந்து பரந்து கிடக்கும் பண்ணைக்குள் அழைத்துச் செல்வதற்கென டிராக்டர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஏறிக்கொண்டால் பண்ணையைச் சுற்றிக் காட்டியபடி செர்ரிப்பழங்களைப் பறித்துக்கொள்வதற்கென இருக்கும் பகுதியில் இறக்கிவிடுகிறார்கள்.

ஸ்டார்பெரிப் பழங்கள் வேர்ப்பகுதியில் காய்த்துப் பழமாகும் வகை. தக்காளியை விடவும் கூடுதல் சிவப்பில் இருக்கும் பழங்களை மறைத்து நிற்கின்றன அவற்றின் இலைகள். எல்லாப் பயிடுதலும் வரிசைகட்டி நடப்படுவதால் உள்ளே நுழைந்து வருவதில் சிக்கல் இல்லை. பழங்கள் பறிக்கச் சென்றவர்கள் கூடையை நிரப்பிக்கொள்வதோடு அங்கேயே முடிந்த அளவுக்குப் பறித்துச் சாப்பிட்டுக்கொள்ளலாம். ஆட்களை இறக்கிவிட்டுப் போகும் டிராக்டர் அடுத்தடுத்து ஆட்களை ஏற்றிக்கொண்டு வருவதும் போவதுமாக இருக்கிறது. அனுமதி பெற்றவர்கள் என்பதற்கென ஒரு சிவப்புப்பட்டியைக் கட்டிக்கொள்ளவேண்டும். அதன் மதிப்புதான் ஒருடாலர்.

தோட்டத்திற்கு வருபவர்கள் நேரடியாகப் பொருட்களைப் பெற்றுக் கொள்ளும் விதமாக கடையொன்று இருக்கிறது. தேன், விதைகள், கொட்டைகள், செடிகளோடு கூடிய கூடைகள், கோழிமுட்டைகள், பழங்கள், காய்கறிகள், உரங்கள் எல்லாம் விற்பனைக்கு இருக்கின்றன. சிற்றுலா நோக்கத்தில் வருவதால் குழந்தைகளும் வருவார்கள் என்பதற்காக விளையாட்டு இடம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அங்கு சிறுவர் பூங்காக்களில் இருக்கும் ஊஞ்சல், சறுக்கல், ஆட்டல், நகர்த்துதல் போன்றன இருக்கின்றன. கொண்டுவந்த உணவுப்பண்டங்களைச் சாப்பிடும் வகையில் மரப்பெஞ்சுகள் இருக்கின்றன. கொண்டுவராதவர்கள் அங்கே கிடைக்கும் தின்பண்டங்களை வாங்கி உண்ணலாம்.

இந்திய விவசாயிகள் விவசாயத்தைப் புனிதமானது என நினைக்கிறார்கள். ’கலை, கலைக்காக’ என்ற கோட்பாடுபோல, ”வேளாண்மை வேளாண்மைக்காக” என்று நினைத்துத் தனது தோட்டத்திற்குள் அந்நியர்களை அனுமதிப்பதில்லை. ஆனால் மேற்கத்திய விவசாயத்திற்குள் வியாபாரம் இருக்கிறது, பொழுதுபோக்கு இருக்கிறது; சுற்றுலாவும் சேர்ந்து கொள்கிறது. கொண்டாட்டமும் இருக்கிறது. செர்ரித்தோட்டத்தில் பழத்தைப் பறித்துச் சந்தைக்கு அனுப்பிக் கிடைக்கும் வருமானத்தைவிடவும் சிற்றுலாவுக்கென்று ஒதுக்குவதில் லாபமே இருக்கும் என்பது தெரிந்து அதையும் செய்கிறார்கள்.

ரிடோ ஆறு பலகிளைகளாகப் பிரிந்து இப்பகுதியில் பாதை அமைத்து நகர்கிறது. அதன் கரைகளில் நீர்த்துறைகளும் படகுப் பயணங்களும் சிற்றுலாவின் பகுதியாக இருக்கின்றன. கோடைகாலத்துச் சூரியவெளிச்சத்தை விரும்பும் வெள்ளை உடம்புக்காரர்கள் ஆற்றின் கரையில் சூரிய வெளிச்சத்தில் குளிப்பதும், சூடேறியதும் ஆற்றுக்குள் இறங்கி நீச்சல் அடிப்பதுமாக இருக்கிறார்கள். ரப்பர், மரம், உலோகம், பைபர் எனப்பலவிதமான பொருட்களால் ஆன படகுகளைச் சொந்தமாக வைத்திருப்பவர்கள் வாகனங்களில் இழுத்து வந்து ஆற்றில் இறக்கிச் சுற்றிவருகிறார்கள்.

ஒருவாரக்கடைசியின் ஒருநாள் என்பது அனுபவிக்க வேண்டிய நாள் என்பது அவர்களின் கணக்கு. மகிழ்ச்சியோடு அனுபவிக்கிறார்கள்





சோளக்கொல்லை



கனடாவுக்குள் நுழைந்து மூன்று வாரங்கள் கடந்து விட்டன. வரும்போது முட்டியளவு வளர்ந்து நின்ற சோளத்தட்டைகள் இப்போது ஆளை மறைக்கும் உயரத்தைத் தாண்டி ஒரு அடி நீளக்கதிர்களை நீட்டிப் பரிந்து நிற்கின்றன. இன்னும் இரண்டு வாரத்தில் கதிர்முற்றி மஞ்சள் திரட்டாகிவிடும். அதன் பிறகு அறுவடை; கொள்முதல் எல்லாமே எந்திரங்கள். எல்லாமே பண்ணைகள் தான். மிகக்குறைவான ஆட்களைக் கொண்டு நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாயம் நடக்கின்றது. அங்கேயே கால்நடைகளும் வளர்க்கப்படுகின்றன இங்கே இருக்கும் ஒரே தானியப் பயிர் இதுதான் என்பதுபோலச் சோளப் பயிர்கள்தான். சோளம் என்றால் நம்ம ஊரில் இருக்கும் வெள்ளைச்சோளமோ கறுப்புச் சோளமோ அல்ல;மக்காச்சோளம்

அமெரிக்காவிலும் கனடாவிலும் மக்காச்சோளம் தான் அடிப்படைத்தானியம். அதிலிருந்து சர்க்கரை தயாரிக்கிறார்கள் மைதாமாவு தயாரிக்கிறார்கள், அதிலிருந்து ரொட்டி, எண்ணெய் கூட எடுக்கிறார்கள். இதைவிட்டால் கால்நடைகளுக்கான தீவனமாகப் பயன்படும் பயிர் ஒன்று அங்கங்கே நிற்கின்றன. அவை இல்லையென்றால் பழங்கள், காய்கறிகள் விதைகள் போன்றன விளைவிக்கிறார்கள். தீவனப்பயிரைத் திரட்டி உருட்டிக் காயவைத்துத் தீவனமாக அடுக்கி வைத்திருக்கும் படப்புமேடுகள் இல்லை. அங்கங்கே பொதியாகக் குவித்து வைத்திருக்கிறார்கள்.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்