ஒட்டாவா என்னும் ஆற்றங்கரை நகரம்

ஒட்டாவா: இடையில் ஓடும் ஆறு

நகர நாகரிகம் ஆற்றுப்படுகைகளில் உருவானதாக வரலாறு சொல்கிறது. இந்திய ஆறுகளின் பெருக்கத்தால் உருவான வேளாண்மைச்சமூகம் அதன் கரைகளில் பெருநகரங்களை உருவாக்கியிருப்பதைத் தமிழ்நாட்டில் பார்க்கிறோம். மதுரையின் கரையில் இப்போதிருக்கும் மதுரைக்கும் முன்னால் நதிக்கரையோர நகரமாகக் கீழடி இருந்திருக்கலாம் எனப் புதிய தொல்லியல் ஆய்வுகள் சொல்கின்றன. ஆனால் புத்துலகங்களான அமெரிக்காவும் கனடாவும் ஓடும் ஆறுகளின் பெயர்களிலேயே நகரங்களை உருவாக்கியுள்ளன. அதிலும் வேளாண்மை நாடான கனடா ஆறுகளின் பெயரிலும் ஏரிகளின் பெயரிலும் பெருநகரங்களைக் கொண்டிருக்கிறது. தலைநகர் ஒட்டாவா ஆற்றின் பெயர். பெருநகர் டொரண்டோ பேரேரியின் பெயர். கடல்போல் விரிந்த மதுராந்தகப்பேரேரியைவிடவும் பெரியதாகக் கடல்போல் விரிந்துள்ளது. அதன் கரையைக் கடற்கரை என்றே சொல்கிறார்கள்.ஒட்டாவா -கனடாவில் ஓடும் ஆற்றின் பெயர். ஆற்றின் பெயரே ஒரு நகரின் பெயராகவும் ஆகியிருக்கிறது. அந்நகரம் கனடாவின் நிர்வாகத்தலைநகரமாக இருக்கிறது. ஆற்றின் தென்கரையில் விரியும் ஒட்டாவா நகரம் கனடாவின் வணிகத்தலைநகரான டொரண்டோவைப்போலப் பெரியதல்ல. மக்கள் தொகையும் தொழில் பெருக்கமும் குறைவுதான். ஆனால் வேளாண்மை சார்ந்த நிலப்பரப்புகளால் சூழப்பட்டுள்ளது. ஒட்டாவா கனடாவின் பெரிய மாநிலங்களான ஒண்டாரியோ - க்யூபெக் இரண்டையும் பிரித்துக்கொண்டு ஓடும் ஆறாக இருக்கிறது. இந்தக் கோடையில் நதியின் சலசலப்பைக் கேட்க முடிகிறது. நீர்ப்பரப்பு ஆழமில்லாத பகுதியில் இறங்கிக் குளிக்கிறார்கள்; மீன் பிடிக்கிறார்கள். கரையின் ஓரத்தில் நடக்கவும் மிதிவண்டிகள் ஓட்டவுமான சாலை இருக்கிறது. நதிக்கரை ஓர உணவுவிடுதிகள் இருக்கின்றன. இன்னும் இரண்டு மாதங்களுக்குப்பிறகு ஒட்டாவா ஆறு உறையத்தொடங்கி, வெள்ளைப் பனிக்கட்டிப் பாளங்களாக அசைவற்று நிற்குமாம். அதன் மீது காலில் கட்டிய பனிச்சறுக்குச் சாதனத்தோடு சறுக்கி விளையாடுவார்களாம். நகரின் குறுக்கே ஓடும் ஆறு இறுகிய பனிப்பாறைகளாக மாறி நிற்கும் காலமாற்றத்தை வார்சாவின் நடுவில் ஓடிய விஸ்துலா ஆற்றில் பார்த்திருக்கிறேன். போலந்தின் நடுவில் ஓடும் விஸ்துலா ஆறு போலந்தின் முதன்மையான நகரங்களைத் தொட்டுச் செல்லும் நீரும் பனிக்கட்டியுமாக நகரும் ஆறு.

ஒட்டாவாவின் வடகரையில் இருக்கும் க்யூபெக் முழுவதும் பிரெஞ்சு அடையாளத்தோடு இருக்கும் மாநிலம். பிரெஞ்சு மொழி, கட்டடக்கலை, பண்பாட்டு அடையாளங்கள் எனத் தனி அடையாளம் பேணும் மாநிலம். அண்டாரியோ ஆங்கிலம் வழி தொடர்புகளைப் பேணும் மாநிலம். ஒட்டாவா நாட்டின் தலைநகர் என்பதால் ஆங்கிலம், பிரெஞ்சு என இரண்டு மொழிகளிலும் தொடர்புகளைக் கொண்டிருக்கிறது. ஒரே நாட்டிற்குள் தனித்தனி மொழிசார் அடையாளங்களைப் பேணிக்கொள்ள அனுமதிக்கும் சிறந்த எடுத்துக்காட்டாகக் கனடாவின் க்யூபெக் மாநில உரிமைகள் சார்ந்த நடைமுறைகள் இருக்கின்றன.

ஆற்றின் போக்கால் பிரிக்கப்பட்ட திருநெல்வேலி - பாளையங்கோட்டை இரட்டை நகரில் வாழ்ந்தவன் நான். பழைமையின் அடையாளமாக நெல்லையும், நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோயிலும் அதனைச் சுற்றிச்சுற்றி அமைந்த வீதிகளும், வயல்வெளிகளும் குளங்களும் திருநெல்வேலியின் அடையாளங்கள். அதன் மறுதலையாக ஆங்கிலேயர்கள் காலத்து அடையாளங்களான பள்ளிகள், கல்லூரிகள், தேவாலயங்கள், கல்லறைத் தோட்டங்கள், சிறைச்சாலை, விளையாட்டு மைதானங்கள் எனப் புதுமையின் அடையாளங்களோடு கூடிய நகரம் பாளையங்கோட்டை. இர்ண்டுக்கும் நடுவே மேலப்பாளையம் பகுதி தனித்தீவாக விரிந்துகொண்டிருக்கிறது.

ஒட்டாவா, விஸ்துலா ஆறுகள் நீர்வழிப்போக்குவரத்துக்குப் பயன்படும் ஆறுகளாகவும் இருக்கின்றன. தாமிரபரணியிலும் அதற்கான வாய்ப்புகள் உண்டு. அரசு நிர்வாகம் அதில் கவனம் செலுத்தவேண்டும்.


மக்கள் மன்றத்தின் வாசல்கள்
 ஒட்டாவா நகரில் இருக்கும் நாடாளுமன்றத்தின் மக்கள் பிரதிநிதிகள் அமரும் பொது அவை, நியமன உறுப்பினர்களின் மேலவை, அமைச்சர்களின் செயலகங்கள் போன்றவற்றைப் பார்க்கப்போன போது நினைவுக்கு வந்தது திருவனந்தபுரம் சட்டமன்ற வளாகம் தான். நினைவுக்கு வரக்காரணம் நாடாளுமன்ற வளாகத்தில் நடந்துகொண்டிருந்த ஆர்ப்பாட்டக்காட்சி.

நடந்த ஆர்ப்பாட்டம் கனடாவோடும் ,கனடிய மக்களோடும் நேரடியாகத் தொடர்புடைய ஒன்றல்ல. கரிபியன் தீவுகளில் ஒன்றான கெய்தி நாட்டின் அரசியல் நிலைமையும் பொருளாதார நிலைமையும் கடந்த ஓராண்டாக ஆட்டம் கண்டுள்ளது. மக்களின் அடிப்படை உரிமைகள் ஆபத்தில் இருக்கின்றன. விலைவாசி உயர்வு, உணவுப் பொருள் பற்றாக்குறை போன்றன ஏற்பட்டுள்ளது. அதனை உலகத்திற்குக் கவனப்படுத்தும் ஆர்ப்பாட்டத்தைக் காணமுடிந்தது. 95 சதமான ஆப்பிரிக்க இன மக்கள் வாழும் கெய்திக்காக இங்கே அதே அளவுச் சதவீதமான ஆப்பிரிக்க வம்சாவளியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள்.

2016 இல் இதே இடத்திற்கு வந்தபோது கனடிய மாணவர்கள் ஒரு பெரும் நிகழ்வுக்கான ஒத்திகையை அந்த வளாகத்தில் நடத்திக்கொண்டிருந்தார்கள். நாடாளுமன்றத்திற்குள் நடக்கும் முறைப்படியான நடவடிக்கைகள் போலவே, அக்கட்டடத்திற்கு முன்னால் வளாகத்தின் பகுதிகளில் நடக்கும் ஒத்திகைகள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் போன்றவற்றிக்கும் அனுமதி அளித்துவிட்டுக் காவல்துறை தனது பணியைச் செய்துகொண்டிருக்கிறது. எல்லாவற்றையும் அனுமதிக்கும் மக்களாட்சி நடைமுறையின் செயல்பாடுகள் இப்படித்தான் இருக்கும். நாடாளுமன்றத்தைப் பார்க்கவரும் ஒவ்வொருக்கும் சுற்றிக் காண்பிப்பதோடு அரசியல் அமைப்பு, சட்டமியற்றுதல், அமைச்சரவைப் பொறுப்புகள், மக்கள் பங்கேற்பு என ஒவ்வொன்றையும் விளக்கிச் சொல்ல அரசியல் அறிவியல் மாணாக்கர்கள் தங்கள் படிப்பின் பகுதியாக அங்கே வேலை செய்கிறார்கள்.

இந்தியாவின் திருவனந்தபுரம் சட்டமன்ற வளாகத்தில் இப்படிப் பார்த்திருக்கிறேன். கேரளப்பல்கலைக் கழகத்தின் முதன்மை அலுவலகங்களும் விருந்தினர் விடுதியும் இருப்பது நகரத்தில். பாளையம் வளாகத்தில். ஆனால் பல்கலைக்கழகத்துறைகள் இருப்பது காரியாவட்ட வளாகத்தில். பாளையம் வளாகத்தில் கேரளப் பல்கலைக்கழகத்தின் விருந்தினர் விடுதி உண்டு. பல்கலைக்கழகக் கல்லூரி உண்டு. முனைவர் பட்டம், வாய்மொழித் தேர்வு போன்றவற்றிற்காகப் போகும்போது அங்கே தங்குவேன். அதனால் பல்கலைக்கழகத்திற்கு எதிரே இருக்கும் சட்டமன்ற வளாகம் கண்ணில் படும். கண்ணில்படும் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஆர்ப்பாட்டம், சம்மேளனம், கோரிக்கை வாசகங்களின் அட்டைகள் எனத் தவறாது. இந்தியாவின் நாடாளுமன்ற வாசலிலோ தமிழ்நாடு சட்டமன்ற வளாகத்திலோ இப்படிப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததில்லை.

ஒட்டாவா நகரின் மையப்பகுதியை முற்பகல் நேரத்தில் மட்டுமே பார்த்திருந்ததால் விளக்குகள் எரியும் இரவுக் கோலத்தில் பார்க்கலாம் என்று ஒருநாள் போனேன். நேற்றைய சூரியன் மறையும் நேரம் 20.37. வீட்டிலிருந்து கிளம்பிய நேரம் 17.40 ( மாலை 05.40) மாலை நேரங்களில் சாலைகளிலேயே வாகனங்கள் நிறுத்த இடங்கள் கிடைப்பது குதிரைக்கொம்பு. கிடைத்துவிட்டால் இரண்டுமணி நேரம் இலவசமாக நிறுத்திக்கொள்ளலாம். இல்லையென்றால் ஒவ்வொரு சாலையிலும் உருவாக்கப்பட்டிருக்கும் அடுக்குமாடி வாகன நிறுத்தங்களுக்குள் தான் நிறுத்தவேண்டும். முழுமையும் தானியங்கிமுறையில் இருக்கும் அக்கட்டிட வாசலில் வாகனம் நுழையும்போது எடுக்கப்படும் அனுமதிச்சீட்டின்படி வெளியேறும் நேரத்தில் பணம் செலுத்திவிட்டே வெளியேற முடியும். நாங்கள் நிறுத்திய கட்டடம் 4 நான்குமாடிக்கட்டடம். ஒவ்வொரு மாடியிலும் சில நூறு கார்களை நிறுத்தலாம். கார்களும் இருசக்கர வாகனங்களும் மட்டுமே நிறுத்தும் வசதி அதில் இருந்தது. ஒரு மணி நேரத்திற்கு 3 டாலர் .



அந்தப் பகுதியில் தான் கனடாவின் நாடாளுமன்றம், அமைச்சரவை, செயலகப்பகுதிகள் எல்லாம் இருக்கின்றன. அதன் பின்னால் ஒண்டாரியோ, க்யூபெக் என்ற இரண்டு மாநிலங்களையும் பிரிக்கும் ஆறு ஒட்டாவா ஆறு ஓடுகிறது. சமதளமாகவும் ஏற்ற இறங்கங்களோடும் பரந்து விரிந்து கிடக்கும் பூங்கா ஒன்று இருக்கிறது. ரிடியூ என்ற ஆற்றின் பெயர் கொண்ட பேரங்காடியும் கலைக்காட்சிக்கூடம், நாணயத்தொழிற்சாலையோடு கூடிய காட்சிக்கூடம், போர்க்காட்சியகம், பொது மருத்துவமனை, ஒட்டாவா பல்கலைக்கழகம் என முக்கியமான பெரும் நிலையங்கள் இருக்கும் பகுதி. போர் நினைவுச்சின்னங்களும் போர்ப்படைத்தளபதிகளின் சிலைகளும் இருக்கின்றன.

நாணய ஆலை.
  
ஒட்டாவா நகரில் இருக்கும் நாணயங்கள் தயாரிக்கும் ஆலையைக் காட்சியகமாகவும் வைத்திருக்கிறார்கள். ராயல் மிண்ட் ம்யூசியம் என்ற அரங்கில் நுழைவுக்கட்டணம் செலுத்தி உள்ளே நுழைந்தால் சரியாக 40 நிமிடங்கள் காகிதத் தாள்களாக இல்லாத நாணயங்கள் தயாரிக்கப்படும் விதத்தைப் பார்த்துவரலாம். காகிதப் பணம் தயாரிக்கப்படுவது இன்னொரு இடத்தில். இங்கே சிறியதிலிருந்து அதிக மதிப்பெண் கொண்ட உலோக நாணயங்கள் தயாரிக்கப்படுவதைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். அத்தோடு மதிப்புகூடிய வெள்ளி, தங்கம், வைரம் போன்றனவற்றை சேமிப்பாக வைத்துக்கொள்ளும் டாலர்கள் தயாரிக்கப்படுவதும் அங்குதான். இவையல்லாமல் உலக அளவிலான ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக் போன்றவற்றைக் கனடா நடத்தியபோது தயாரிக்கப்பட்ட பதக்கங்களின் மாதிரிகளும் அங்கே பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

எல்லாவற்றையும் காட்சிப்படுத்துவதும், பார்க்கச் செய்வதும், விவரிப்பதும் வெளிப்படையான மக்களாட்சி நடக்கும் நாடுகளின் அடிப்படை. அந்த அடிப்படையை வகுப்பறைக் கல்வியாகக் கற்பிப்பதோடு நேரடி அனுபவங்களாகப் பார்க்கச் செய்வதும் கற்பித்தலில் ஒருவகையே. காட்சியகத்தைச் சுற்றிவரும்போது வழிகாட்டியாக இருந்து விவரிப்பவர்கள் பெரும்பாலும் அத்துறையில் கற்றுக்கொள்ளும் மாணாக்கர்களாகவே இருக்கிறார்கள்.

தயாரிப்பு முறைகளை விவரிக்கும்போதும் பார்க்கும்போதும் படங்கள் எடுக்க அனுமதி இல்லை. ஆனால் காட்சிப்படுத்தப்பட்ட இடங்களைப் படம் பிடித்துக்கொள்ளலாம். எல்லாக் காட்சிக்கூடங்களிலும் இருக்கும் விற்பனை அங்காடியில் நாணயங்களையும் வாங்கிக் கொள்ளலாம். பரிசுப்பொருட்கள், பேனா போன்ற நினைவுப் பொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம்.

நகர் மையத்தில் உள்ள பைவார்டு அங்காடிப் பகுதி மாலை நேரம் சாலையின் ஒரு புறத்தில் நாற்காலிகள் போடப்பட்டு உணவுச்சாலையாக மாறிவிடும். மதுக்கூடங்களின் சேவைகளோடு கூடிய மாலை விருந்துகள் நடக்கும். சாலைகளுக்கு இணையாக உள்ளரங்க அங்காடிகளும் உண்டு. பனிக்காலத்தில் சாலையோர இருப்புகள் இல்லாமல் கட்டடங்கள் நகர்ந்துகொள்ளும் விதமாக அமைப்புகள் உள்ளன. அந்தப் பகுதியில் ஒருவர் மாலைநேர உணவுண்ண விரும்பினால் கனடாவின் உணவுப் பண்டங்கள் மட்டுமே கிடைக்கும் உணவுச்சாலைகள் தொடங்கி மெக்சிகன், தாய், இட்டாலியன், பிரெஞ்சு, சீனம், வளைகுடா நாடு, கொரியன் என எல்லாவகை உணவுச் சாலைகளும் இருக்கின்றன. மலையாளப்புட்டு வழங்கும் கொச்சின் சமையலறை, கொத்துரொட்டி வழங்கும் யாழ்ப்பாணக்கடை போன்றனவும் கண்ணில் தட்டுப்பட்டன. ஒபாமா வந்து சாப்பிட்ட நாற்காலியும் கேக்கும் என ஒரு விளம்பர தட்டியை வைத்திருந்தது ஒரு அங்காடி.

நம்ம கோவை, மதுரை, சென்னை எனப் பெரிய எழுத்துகளில் இருக்கும் பகுதியில் நின்று படம் எடுத்துக்கொள்வதைப் போல படம் எடுத்துக்கொள்ள ஓரிடம் இருக்கிறது. அங்கே ஒட்டாவா என்பதை ஆங்கிலத்தில் பெரிய எழுத்துகளில் நிறுத்தியிருக்கிறார்கள். ஒவ்வொரு எழுத்தும் ஒரு வண்ணத்தில் ஒளிர்கிறது. அதன் முன்னால் ஒரு இசைக்குழு வாசிக்க, ஒரு நடனக்குழு நடனம் ஆடிக்கொண்டிருந்தார்கள்.

இசையும் நடனமும் என்பது பெரிய உணவு விடுதிகளிலும் தெருவோரங்களிலும் மேற்கத்திய நகரங்களின் மாலை வேளைகளில் தவறாமல் காணக்கிடைப்பவை. ஒட்டாவா பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிலையங்கள் இருக்கும் பகுதி என்பதால் இளையோர்கள் அதிகம் இருக்கும் பகுதிகள் உள்ளன. எல்லாவகையான கொண்டாட்ட அரங்குகளும் அங்கே இருக்கின்றன. ஓரிடத்தில் ஜூலை 7 முதல் ஆகஸ்டு 27 வரை கனடச் செவ்வியல் நாடக விழா நடப்பதாக அறிவிப்பு இருந்தது. இரவு நடனங்கள், கஞ்சா, ஓபியம், புகைக்கும் கருவிகள் போன்றன விற்கும் கடைகள் நகர் மையத்திலும் இருக்கின்றன. கோடைகாலம் என்பதால் குறைவான ஆடைகளோடு ஆண்களும் பெண்களும் நகர்ந்துகொண்டிருக்கிறார்கள். நின்று முத்தமிட்டுக் கொள்கிறார்கள்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவில் இருந்தபோது இந்த நகர்மையம் என்ற கருத்தும் இடமும் இருந்திருக்கின்றன. மதுரை ரயில் நிலையத்திலிருந்து மீனாட்சி- சொக்கநாதர் கோயிலுக்குப் போகும் சாலைக்குப் பெயர் டவுன்ஹால் ரோடு என்பதுதான். அதன் இரண்டாவது நாற்சந்தியில் பெரிய குளத்தோடு கூடிய டவுன்ஹால் இருந்ததாக மதுரை ஜில்லாபோர்டு உறுப்பினராக இருந்த உத்தப்புரம் காந்தியவாதி பொன்னுச்சாமியா பிள்ளை சொல்லிக் கேட்டிருக்கிறேன். அவரது கடைசிக்காலம் மதுரையின் மையப்பகுதியில் இருந்த வீட்டில் தான் நிறைவடைந்தது. கோவையில் கூட ஒரு நகர்மையம் இருக்கிறது. நகர்மையத்தைச் சுற்றி வியாபாரமும் பொழுதுபோக்கும் என்பது ஐரோப்பிய நாகரிக அடையாளம். கனடாவிலும் ஐரோப்பாவின் பெயர்களும் அடையாளங்களும்தான் இருக்கின்றன.நதிகளின் பெயரால் வீதிகளும் தலைவர்களின் பெயரால் சாலைகளும் போர்களின் பெயரால் நினைவுச் சின்னங்களும் என்பது அவர்கள் போன காலனிய நாடுகள் தோறும் இருக்கவே செய்கின்றன.

ஒட்டாவா ஆற்றங்கரை அரங்கம்.

கரை என்ற சொல்லைப் பின்னொட்டாக்கி கடற்கரை, ஏரிக்கரை, கண்மாய்க்கரை, குளத்தங்கரை, ஆற்றங்கரை, ஓடைக்கரை, கிணற்றங்கரை, வாய்க்கால் கரை எனப் பல சொற்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். நீர்நிலைகளை ஒட்டியுள்ள தரைப்பகுதியைக் குறிக்கும் சொல்லான கரை ஒருவிதத்தில் நீரின் நிலை ஒழுங்கு செய்யும் ஒன்று. இவ்வளவு சொல்வளம் உருவாக்காமல் கனடிய வாழ்வியலில் எல்லா நீர்நிலைகளின் கரையையும் ’பீச்’ (Beach) என்ற ஒற்றைச் சொல்லாலேயே குறிக்கிறார்கள். டொரண்டோவில் ஒண்டாரியோ ஏரிக்கரையையும், ஒட்டாவில் ஒட்டாவா ஆற்றின் கரையையும் பீச் என்றே சொல்கிறார்கள். சென்னையில் பீச் என்றால் மெரினா கடற்கரை. பரந்த நீர்ப்பரப்பையொட்டிய மணற்பரப்பு கொண்ட புதுச்சேரி கடற்கரையில் தினசரி காலை நடையாக நடந்து திரிந்த எனக்கு ஏரிக்கரையையும் ஆற்றங்கரையையும் பீச் என்று சொல்வது நகைப்பையே தந்தது.

கடற்கரை இல்லாத ஒட்டாவா நகரத்தின் நடுவில் ஓடும் ஆற்றங்கரைக்கு அவ்வப்போது போய்வந்தேன். அந்த ஆற்றங்கரை, கடற்கரை இல்லாத நிலையைப் போக்குவதாகத் தான் இருக்கிறது. ஆற்றங்கரைக்கு இணையாகப் போகும் பெருஞ்சாலைக்கும் கரைக்கும் இடையே கரையின் ஓரங்களில் நீண்டு செல்லும் நடைபாதைச் சாலை. மிதிவண்டிச் சாலை தொடர்ச்சியாக நீள்கின்றன. அங்கங்கே பூங்காக்கள், காடுகள், படகுக்குழாம்கள் என உருவாக்கப்பட்டுள்ளன. விடுதிகளின் முகப்புகள் ஆற்றங்கரை நோக்கி அமைக்கப்பட்டு ஆற்றைப் பார்த்த அறைகள் சுற்றுலா ஈர்ப்பாக இருக்கின்றன. சில இடங்களில் இறங்கி ஆற்றில் குளிக்கும் வசதிகள் இருக்கின்றன. அதேபோல் மீன்பிடிக்கும் இடங்களும் அடையாளப்படுத்தப் பட்டுள்ளன. ஆங்காங்காங்கே இயற்கையானதும் செயற்கையானதுமான சிறு தீவுகள் இருக்கின்றன. தீவுகளுக்குப் போக படகுகள் மட்டுமல்லாமல் நீரில் மிதக்கும் பேருந்துகளும் இருக்கின்றன. போவதாகவே சொல்கிறார்கள்.

இன்று போன கடற்கரையில் ஒரு மிதவை அரங்குபோல ஒரு கூடம் இருந்தது. அதன் முன்பகுதியில் நீர்ப்பரப்பு. அரங்கின் ஒப்பனை அறைகள் மட்டும் தரையோடு இணைக்கப்பட்டிருக்கின்றன. நான் போனது மேடையில் ஒன்றிரண்டு பேர் நின்றிருந்தார்கள். அதற்கு முன்னால் இருக்கும் நீர்ப்பரப்பைத் தாண்டி போடப்பட்டிருந்த நாற்காலிகளில் அமர்ந்து வெயில் காய்ந்துகொண்டிருந்தார்கள். ஆற்றங்கரையில் முக்கால்மணி நேர நடைக்குப் பின் அந்த வழியாக வந்தபோது நடனக்கோர்வை ஒன்று நடந்து கொண்டிருந்தது.

அந்த நடனத்திற்குப் பெயர் அசைவு நடனமாம். நீரின் அசைவைப்போல, காற்றில் அசையும் தாவரங்களின் அசைவைப்போல, பறவைகளின் பறத்தல் அசைவைப்போல நடனக் காட்சிகள் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஞாயிற்றுக்கிழமை விளக்கொளியில் முழுமையான நடனக்கோர்வை நிகழ்ச்சி நடக்கும் என்று சொன்னார்கள். நான் நாளை ஒட்டாவாவிலிருந்து கிளம்புகிறேன். அதைப் பார்க்கும் வாய்ப்பு இல்லை.

 குடிமைச்சமூகத்தின் இயங்குநிலை

கனடாவின் ஒட்டாவா நகரில் கனட்டா- கார்லெடன் என்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடப்பதற்கான பரப்புரை நடந்துகொண்டிருக்கிறது. ஏற்கெனவேஎ தேர்ந்தெடுக்கப்பட்டவரின் மீதான குற்றச்சாட்டு உறுதியானதால் அவர் பதவி விலகியிருக்கிறார். அந்த இடத்திற்கு 27 ஆம் தேதி வாக்களிப்பு இருக்கிறது. வாக்களிப்பில் இரண்டு நிலைகள் இருக்கின்றன. முன் வாக்களிப்பிலும் ஒருவர் வாக்களிக்கலாம். அல்லது கடைசி நாளிலும் வாக்களிக்கலாம். முன் வாக்களிப்புக்கு 19-21 என மூன்று நாட்கள் தரப்பட்டுள்ளன. அந்நாட்களில் குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்று தங்கள் வாக்களிப்பைப் பதிவு செய்துவிடலாம். அல்லது கடைசி நாளில் அவர்களுக்குரிய வாக்களிப்பு மையம் சென்றும் வாக்களிக்கலாம். ஒரே நாளில் காலை 7 மணி தொடங்கி மாலை 5 மணிக்குள் வரிசையில் நின்று வாக்களிக்கும் நெருக்கடி இங்கு இல்லை.

இந்தப் பகுதியில் தான் எனது மகன் குடும்பம் உள்ளது. அவருக்கு கனடாவில் வாக்களிக்கும் உரிமை இல்லை. ஆனாலும் பரப்புரை விளம்பரத்தை வைத்துவிட்டுப் போயிருந்தார்கள். சிறிய துண்டுப்பிரசுரத்தின் பெரிய அளவு தட்டி ஒன்றைப் புறவழிச்சாலையில் நட்டு வைத்திருந்ததைப் பார்த்தேன். இதைத்தவிர வேறுவிதமான பரப்புரைகள் நேரடியாக இல்லை. இணையத்திலும் தொலைக்காட்சிகளிலும் விவாதிக்கிறார்கள். அந்தப் பரப்புரைக்காகிதம் இப்போது ஆட்சியில் இருக்கும் பிரதமர் ஜஸ்டின் துருடோவின் தாராளவாதக் கட்சியின் வேட்பாளர் கெரன் மிக்கரமோன் என்பவரை அறிமுகம் செய்யும் காகிதம்.

1. வாழ்க்கை இன்னும் எளிதானதாக - சாத்தியமானதாக ஆக்குதல்

2. உடல் நலம் சார்ந்த மருத்துவத்துறைத் தனியார்மயம் ஆக்கும் பிற்போக்கு நோக்கத்தை முறியடிக்க..

3. நமது சுற்றுச்சூழலைப் பாதுகாத்துப் பசுமைப்பரப்பை அதிகரிக்க..

4. உள்ளூர் தொழில்களையும் வணிகத்தையும் பாதுகாக்கும் பொருளியல் திட்டங்களை மேற்கொள்ள

தனக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார் வேட்பாளர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக ராணுவத்தில் பணியாற்றியிருப்பதைச் சொல்லும் கெரன் நிறைய பதக்கங்களை அணிந்த படத்தை அத்தாளில் பதிந்துள்ளார்

வேறு நாட்டுக்குடிமக்கள் வேலை செய்வதற்கான அனுமதியில் வந்து, நிரந்தரக்குடியாளர் உரிமையை முதலில் பெறவேண்டும். வந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு விரும்பினால் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம். அதன் பிறகு 3 ஆண்டுகள் அங்கேயே இருந்தால் கனடாவின் குடி உரிமை கிடைக்கும் வாய்ப்புண்டு. குடி உரிமை கிடைத்தால் வாக்களித்தல் போன்ற அடிப்படை உரிமைகள் கிடைக்கும். ஆனால் வேலை பார்க்கும் அனுமதியில் - விசாவில் இருப்பவர்களுக்குக் குடிமைச் சமூக உரிமைகள் பெற்றுக்கொள்வதில் சிக்கல் இல்லை.

கல்வி, மருத்துவம், குழந்தை வளர்ப்பு, போக்குவரத்து போன்றவற்றில் வேறுபாடுகள் இல்லை. அரசு உருவாக்கியுள்ள விளையாட்டு மைதானம் பொழுதுபோக்குக் கூடம் போன்றவற்றைப் பயன்படுத்துவதில் வேறுபாடுகள் இல்லை. முறைப்படி சம்பாதித்து வருமான வரி கட்டியிருந்தால் வீடு போன்ற சொத்துகள் வாங்கலாம். இந்தியாவில் வேற்றுநாட்டவர்களுக்கு ஆதார் அட்டை தரும் முறை இல்லை என்பதால், அதனைக் காட்டிப் பெறும் எதனையும் அடையமுடியாது. இப்போது எல்லாவற்றிற்கும் ஆதார் அட்டை கேட்பதால் வங்கிக் கணக்கு கூட ஆரம்பிக்க முடியாது.

இதனைத் தாண்டி மேற்கத்திய அரசுகள் நாட்டு மக்களைக் குடிமைச் சமூகமாகக் கருதி உருவாக்கித் தரும் பொது நலன் அமைப்புகள் கவனிக்கப்பட வேண்டியன. ஆனால் திரும்பத்திரும்ப அரசுகள் தரும் சலுகைகளை எதிர்பார்த்து இருக்கவைப்பதை இந்தியா, இலங்கை போன்ற கீழைத்தேய நாடுகளின் அரசியல் கட்சிகள் செய்துகொண்டே இருக்கின்றன. அவர்களின் தேர்தல் காலச் சொல்லாடல்கள் மானியங்கள், சலுகைகள், இலவசங்கள் குறித்து மட்டுமே அதிகம் பேசுகின்றன. அரசின் கடமை, அது சார்ந்த செயல் திட்டங்கள் போன்றன விவாதிக்கப்படுவதில்லை. இதில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் வேறுபாடு இல்லை.
 
தேர்தல் அறிக்கைகள் என்ற பெயரில் வெளியிடப்படும் துண்டறிக்கைகள், பரப்புரைகளைக் கேட்கும்போது குடிமைச் சமூகத்தைப் பேணுதல் பற்றிய புரிதல் இருக்கிறதா? என்ற ஐயம் எழுந்துகொண்டே இருக்கும். ஒரு வாரமாக நடைக்கான சாலையில் பயணிக்கிறேன். அச்சாலையில் வாகனங்கள் வருவதில்லை. நடப்பவர்களும் மிதிவண்டியில் செல்பவர்களும் மட்டுமே பயன்படுத்தும் சாலை அது. வெவ்வேறு வனங்கள், பூங்காக்கள் நீர்நிலைகள் அருகில் அச்சாலை செல்கிறது. ஒட்டாவா நகருக்குள் அதன் நீளம் எட்டு மைல் என ஒரு குறிப்பு இருந்தது. அது முடியும்/ தொடங்கும் இடத்தில் உடல் பயிற்சி சார்ந்த விளையாட்டுத்திடல்கள் இருக்கிறது. ஒட்டாவா நகரின் உள்ளாட்சிப் பொறுப்பில் இருக்கும் மையம் அது. அங்கே உள்ளக விளையாட்டுகளும் திறந்த வெளி விளையாட்டுகளும் விளையாட மைதானங்கள் இருக்கின்றன. அதனைப் பயன்படுத்திக்கொள்ள அடிப்படையில் முதலில் உறுப்பினர் ஆகவேண்டும். ஒவ்வொரு விளையாட்டுக்கும் வயது அடிப்படையில் நேரம் ஒதுக்கித் தெரிவிக்கபடுகிறது. உங்கள் வசதிப்படி அதனைத் தெரிவுசெய்து உரிய கட்டணத்தைச் செலுத்திப் பயன்படுத்திக் கொள்ளலாம். எதுவும் இலவசம் அல்ல. அதே நேரம் அதிகக் கட்டணமும் அல்ல. சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறது. வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் வெவ்வேறு நேரத்தில் நீச்சல் போகிறார்கள். பேரன் கராத்தே போகிறான். மகன் இறகுப் பந்து விளையாடப் போகிறார். வழக்கமாகச் செய்யும் இதுதவிர வேறு ஏதாவது விருப்பம் என்றால் பதிவுசெய்து கலந்துகொள்ளலாம். ஒவ்வொரு நாள் மாலையிலும் குடும்பம் குடும்பமாக வந்து கால்பந்து, கூடைப்பந்து, டென்னிஸ் என்று விளையாடுகிறார்கள். மாலை வெயிலில் உடலுக்கு வைட்டமின் பெற்றுக்கொள்கிறவர்கள் காய்கிறார்கள். நான் வேடிக்கை பார்த்தபடி நடந்து கொண்டிருக்கிறேன்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்