திறனறிந்து திறன் வளர்க்கும் கல்விக்கூடங்கள்


கோடைவிடுமுறைக்குப் பின் மூத்த பேரன் (மகள் வழி) ஹர்ஷித் நந்தாவுக்கு வகுப்புகள் ஆரம்பித்துவிட்டன. ஆரம்பித்து இரண்டு வாரங்கள் ஆகின்றன. நானும் சில நாட்களில் எனது காலை நடையாகப் பள்ளிக்குப் போய்த் திரும்பினேன். அப்போது அங்கே மைதானத்தில் இசைக்குழுவிற்கான பயிற்சி நடந்துகொண்டிருந்தது. அதில் அவனும் ஓர் உறுப்பினர்.
அவன் இப்போது போகும் வகுப்பு ஒன்பது. அமெரிக்காவில் ஒன்பதாம் வகுப்பு. உயர்நிலைப்பள்ளியின் தொடக்கம். அமெரிக்காவிலும் கனடாவிலும் பள்ளிக் கல்வியில் பெரிய வேறுபாடுகள் இல்லை. இன்னொரு பேரனான முகிலன் (மகன் வழி) நடுநிலைப்பள்ளியில் படிக்கிறான். படிக்கும் வகுப்பு 6. அவனுக்கு செப்டம்பர் மாதக் கடைசியில் தான் தொடங்கும். அவனது பள்ளிக்கும் சென்று வந்தேன். அதேபோல் பேத்தி ஆர்கலி, முன்பள்ளிக்கு -மழலையர் வகுப்புக்குச் செல்கிறார். அங்கும் போய் பார்த்திருக்கிறேன். இவ்விரு நாடுகளின் – அமெரிக்கா, கனடா- பள்ளிக்கல்வியின் உள்ளடுக்குகளைப் புரிந்துகொள்வதற்காக அவர்களோடு உரையாடியும் பள்ளிகளின் தகவல் அறிக்கைகளைப் படித்தும் புரிந்துகொண்டதின் அடிப்படையில் இதனை எழுதுகிறேன்

பேரன் போகும் பள்ளியின் பெயர் குயர். அது டெண்டன் கல்வி மாவட்டத்தின் (Denton Independent School District - ISD) கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு மாவட்ட க்கல்விக் குழுவும் தன்னாட்சி பெற்றவை என்பதைக் குறிக்கும் விதமாகத் தன்னாட்சி பெற்ற கல்வி மாவட்டம் என்றே குறிக்கப்படுகின்றன. ஒன்பதாம் வகுப்பு என்றால் புதுப்பள்ளிக்குச் செல்ல வேண்டும். இதற்கு முன்பு படித்த பள்ளி நடுநிலைப்பள்ளி. அதில் 6 முதல் 8 வரைதான் இருக்கும். அதற்கும் முன்பு ஐந்தாம் வகுப்பு வரை இருக்கும் பள்ளி ஆரம்பப்பள்ளி. அதுவும் தனியாகவே இருக்கிறது. நம்மூரில் ஒன்றுமுதல் 12 வரை இருக்கும் ஒரே பள்ளி முறை இங்கு இல்லை. ஒவ்வொரு கட்டப்பள்ளியும் தனித்தனியாகவே இருக்கின்றன.

பாண்டிச்சேரியில் எனது பிள்ளைகளைச் சேர்ப்பதற்காகப் பெரிய அளவில் அலையவில்லை. ஆனால் தமிழ்நாட்டில்- பாளையங்கோட்டையில் பள்ளியில் இடம் பிடிப்பதற்காக விண்ணப்பமனு வாங்கவும், சிபாரிசுக் கடிதங்கள் பெறவும், பள்ளிக் கட்டணத்தைச் செலுத்தவும் கூடுதல் நன்கொடையைக் கட்டவும் தனித்தனி வசூல் மையங்களில் நின்ற அனுபவம் எனக்குண்டு. ஆனால் அது எதுவும் பேரப்பிள்ளைகளுக்கு இல்லை. அவர்கள் மேற்குலகின் - அமெரிக்காவிலும் கனடாவிலும் பள்ளிப்படிப்பில் படிக்கிறார்கள். இரண்டு நாடுகளிலுமே வீட்டிற்கு அருகில் இருக்கும் அண்மைப்பள்ளியில் இடம் உறுதியாகக் கிடைக்கும் விதமாகச் சேர்க்கை நடைமுறைகள் உள்ளன.


குடியிருக்கும் வீட்டுக்கு, அதன் முகவரியைக் குறிப்பிட்டு விண்ணப்ப மனுவை அனுப்பி வைத்தால் பெற்றோரோடு மாணாக்கர்களையும் அழைத்துப் பேசுகிறது பள்ளி நிர்வாகம். அந்தப் பேச்சும், அவர்கள் விரும்பும் பாடங்களைத் தெரிவு செய்வதற்கான ஆலோசனை கூறும் கலந்துரையாடல் தானே தவிர அனுமதியளிப்பதில் இருக்கக் கூடிய சிக்கல்கள் குறித்து அல்ல. மாணாக்கர் ஆலோசகர் என்ற பொறுப்பில் இருக்கும் ஒருவர் கலந்துரையாடிய பின் உயர்நிலைப் பள்ளிக்கான பாடங்களை வரையறை செய்து அனுமதியை உறுதி செய்கிறார்கள்.

ஆரம்பப்பள்ளியிலும் இடைநிலைப்பள்ளியிலும் பெரும்பாலும் பொதுப்பாடங்களும் கலை, விளையாட்டு போன்றனவும் பொதுவாக இருக்கின்றன. ஆனால் உயர்நிலைப் பள்ளிக்கல்வி, பொதுப்பாடங்கள் முடிவடைந்து அவரவர் விருப்பப்படி தெரிவு செய்யும் பாடங்களைப் படிப்பதற்கான காலமாக மாறுகிறது. ஒன்பதாம் வகுப்பில் சேர்பவர்களை ஆரம்பநிலையினர்- ‘ப்ரெஷ்மென்’ என அழைக்கிறார்கள். அடுத்த வகுப்பு ‘இரண்டாம் நிலை என்ற பொருளில்- ‘ஸாபமோர்’ எனவும், பதினொன்றாம் வகுப்பு ‘ஜூனியர் ‘எனவும், பன்னிரண்டாம் வகுப்பு ‘சீனியர் ‘ எனவும் சொல்லப்படுகிறது. ஒன்பதாம் வகுப்பு தொடங்கிப் பன்னிரண்டாம் வகுப்பு வரை 4 ஆண்டுகளில் தேர்வு செய்யும் பாடங்களின் அடிப்படையில்தான் இங்கிருக்கும் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியைத் தொடர முடியும். அத்தோடு எடுத்திருக்கும் பாடங்களில் பெறும் தரப்புள்ளிகள் -கிரேட் பாய்ண்ட்- அடிப்படையில் தான் சிறந்த பல்கலைக்கழகங்களில் இடம் கிடைக்கும். இதல்லாமல்- SAT, ACT- போன்ற பல்திறன்களை வெளிப்படுத்தும் போட்டித்தேர்வுகளுக்கும் ஒவ்வொரு ஆண்டும் நடக்கின்றன. அவற்றின் அடிப்படையில் கல்வி உதவித்தொகைகள் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு.

தெரிவின் தொடக்கம்

உயர்நிலைப் பள்ளிக்கல்வியில் தெரிவுகள் தொடங்குகின்றன என்றாலும் அனைவரும் படித்திருக்க வேண்டிய பாடங்கள் அங்கும் இருக்கின்றன. மொழியாக ஆங்கிலமும், முதன்மைப்பாடங்களாகக் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என்பன அடிப்படையாகக் கற்கவேண்டிய பாடங்கள். ஆனால் நம் நாட்டில் படிப்பது போலப் பொதுக்கணிதமாக இல்லாமல் ஒன்பதாம் வகுப்பு தொடங்கியே கணிதம், அறிவியல், சமூக அறிவியல் போன்றவற்றில் விருப்பப்பாடங்களைத் தெரிவு செய்யலாம். கணிதத்தில் அல்ஜிப்ரா-1,2, அதேபோல் கால்குலஸில் 2 பாடங்கள், திரிகோணமிதியிலும் கூடுதல் பிரிவுகள் இருக்கின்றன. அதில் பொதுநிலைப் பாடத்தைத்தெரிவு செய்யலாம். சிறப்புநிலைப் பாடத்தையும் தெரிவு செய்யலாம். பொதுப்பாடம் பொதுநிலை ‘ஆன்லெவல்’ எனவும், சிறப்புப்பாடம் ‘ஆனர்ஸ் லெவல்’ எனவும் அழைக்கப்படுகின்றன. அதற்கும் மேலாக முன்நோக்குநிலைப் பாடம் – அட்வான்ஸ் பிளேஷ்மெண்ட் கோர்ஸ்- எனவும் கூட ஒவ்வொரு பாடத்திலும் இருக்கிறது. இதே நிலைதான் அறிவியலில். உயிரியல், இயல்பியல், வேதியியல் என ஒவ்வொன்றிலும் வெவ்வேறு நிலையிலான பாடங்கள் இருக்கின்றன. மாணவர்களின் ஆர்வத்தைப் பொறுத்துச் சாதாரணப்பாடம் அல்லது சிறப்புப்பாடம் முன்நோக்குநிலைப் பாடம் எனத் தேர்வு செய்யலாம். மொழிப்பாடமான ஆங்கிலத்தில் சமூக அறிவியலிலும் அதே நிலைகள் இருக்கின்றன. ஒருவருட த்தில் ஒரு முன்நோக்குநிலைப் பாட த்தைத் தெரிவுசெய்யும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதில் தேர்ச்சி பெற்றால், அதனைப் பல்கலைக்கழகப்படிப்பில் படிக்க வேண்டியதில்லை

பேரனுக்கு வான்வெளி அறிவியல் நிறுவனத்தில் உயர்கல்வி கற்க விருப்பம் இருக்கிறது. இந்த விருப்பம் ஆரம்பக்கல்வி காலத்திலேயே உண்டானது. அதனை ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்ததால் இப்போதும் அந்த ஆர்வத்தில் கணிதம், இயல்பியல் பாடங்களில் அதிகம் கவனம் செலுத்தும் நிலை இருக்கிறது. அதேபோல் நிலவியலிலும் ஆர்வம் உண்டு. அதனால் ஒன்பதாம் வகுப்பில் பண்பாட்டு நிலப்பின்னணிகள் என்ற பாட த்தைத் தெரிவு செய்துள்ளான். இந்தப் பள்ளியில் ஒன்பது தொடங்கி பன்னிரண்டு வரையிலான நான்கு ஆண்டுகளில் 26 பாடங்கள் முடிக்கவேண்டும். அவற்றைக் கிரெடிட்ஸ் என்ற சொல்லால் குறிக்கிறார்கள். 26 கட்டாயம். அதற்கு அதிகமாகவும் படிக்கலாம். இந்த எண்ணிக்கைப் பள்ளிகளைப் பொறுத்து மாறுபடவும் கூடும். ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களோடு கூடுதலாகப் பயிற்சி பெறும் விளையாட்டுத் திறனும், கலைப் பாடத்திறனும் தனிப்பாடங்களாகக் கருதப்பட்டுக் கணக்கில் சேர்க்கப்படுகிறது. விளையாட்டு, கலைப் பிரிவுகளிலும் நிறைய வாய்ப்புகள் தரப்படுகின்றன. இவ்விரண்டில் ஏதாவதொன்றை எடுக்கலாம். இரண்டையும் தேர்வு செய்யலாம். ஆனால் இவற்றிற்காகக் கூடுதல் நேரம் பள்ளியில் இருக்க வேண்டும். விளையாட்டில் தனித்திறன் வெளிப்பாடுகளும் குழு விளையாட்டுகளும் இருப்பதைப் போல, கலைப்பிரிவில் நுண்கலைப்பாடங்கள், நிகழ்த்துக் கலைப் பாடங்கள் எனப் பிரிக்கப்படுவதோடு அதற்குள்ளும் வகைப்பாடுகள் இருக்கின்றன. முன்பிருந்தே தனியாக இசைப் பயிற்சி பெற்று வரும் பேரனுக்கு பள்ளியின் அணிவகுப்பு இசைக்குழுவில் இடம் கிடைத்துள்ளது. அஃதல்லாமல் பியானோவிலும் பயிற்சி எடுக்கத் தனிப்பயிற்சி இருக்கிறது.

ஒரு பாடத்தில் தேர்ச்சி பெற 60 மதிப்பெண் பெறவேண்டும். அதற்குக் குறைவு என்றால் தேர்ச்சி இல்லை. 60 முதல் 100 வரை எட்டு அடுக்குக் கிரேடுகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் -, + அடையாளங்களோடு D, C , B, A சேர்த்து அழைக்கப்படுகின்றன. முன்நோக்கு நிலைப் பாடங்களுக்கு (AP courses) கூடுதல் புள்ளிக்கணக்கு உண்டு. ஒரு வருடத்தில் ஒரு முன்னோக்குநிலைப் பாடத்தில் தேர்வு எழுத வாய்ப்பளிக்கப்படுகிறது. அதன் மூலம் சிறப்பான உயர்கல்வி நிறுவனங்களில் இடம் பிடிக்க வாய்ப்பு கிடைக்கும். சிறப்புப் பாடங்களைத் தெரிவு செய்து அதிக மதிப்புப்புள்ளிகள் பெறுவதன் மூலம் உயர்நிலைப் பள்ளிப்படிப்பை 3 ஆண்டுகளில் முடிக்கும் வாய்ப்பும் தரப்படுகிறது. 14 வயதைத் தாண்டியவர்களின் திறன் அதிகம் எனக் கருதிப் போட்டி மனநிலையை உருவாக்குகிறார்கள். எல்லாவற்றிலும் போட்டி, தனித்திறனைச் சுட்டிப் பாராட்டு, அதற்கான மதிப்புகளுடன் புதிய வாய்ப்புகளை உருவாக்கித்தருதல் என நகர்த்துகிறார்கள். ஒவ்வொரு நாளும் மாணவர்கள் செய்யவேண்டியதை நினைவூட்டியும் செய்த தை மதிப்பிட்டு அறிக்கையும் எனப் பெற்றோர்களுக்குத் தகவல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. கண்காணிப்பிலிருந்து விலகிவிட முடியாத நெருக்கடி. அதன் நேர்மறைக்கூறுகளையும் எதிர்மறைக்கூறுகளையும் அமெரிக்க இளையோர் உலகம் எதிர்கொண்டாக வேண்டும்.

அமெரிக்காவின் பள்ளிக்கல்வி முழுவதும் இலவசம். படிப்புக்கட்டணம் கிடையாது. பேருந்துக் கட்டணம் கிடையாது. ஆனால் தாங்கள் கட்டும் வரியில் இவையெல்லாம் உள்ளடக்கியிருப்பதாகச் சொல்கிறார்கள். நூல்களுக்குப் பதிலாக பாடங்களை நிரம்பிய ஐ-பேடு அல்லது குரோம் புக் போன்ற மின்னணுவியல் சாதனங்கள் வழங்கப்படுகின்றன. ஆனாலும் எழுத்துப்பயிற்சி, கணக்குப் போடுதல் போன்றனவற்றிற்காக நோட்டுப் புத்தகங்களை எடுத்துச் செல்கிறார்கள். ஒவ்வொரு பள்ளியின் நிர்வாகமும் மாவட்ட அளவில்/ உள்ளாட்சி நிர்வாக அளவில் கண்காணிக்கப்படுகின்றன. மாநில அரசுக்கோ, ஐக்கிய அரசுக்கோ கல்வியில் பங்கில்லை. அவை பெரும் ஆய்வுச்சாலைகளை நடத்துவதில் கவனம் செலுத்துகின்றன. அவற்றில் பல்கலைக்கழக மாணாக்கர்களும், சில பள்ளி மாணவர்களும் பயிற்சிக்காகச் சென்று வருவதுண்டு.
 
வாய்ப்புகள்

ஹார்வர்ட், ப்ரவுன், கார்னெல், கொலம்பியா, டார்ட்மௌத், பென்சில்வேனியா,பிரின்ஸ்டன், யேல் ஆகிய எட்டும் அமெரிக்காவின் சிறந்த கல்வி நிறுவனங்கள். ஒவ்வொரு துறைக்கும் சிறப்புநிலை உயர்கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. வான்வெளியியல் படிப்பு போன்றனவற்றைக் கற்பிக்கும் கல்வி நிறுவனங்கள் நாசா போன்ற நிறுவனங்களில் நேரடிப்பயிற்சிக்கு ஒப்பந்தங்கள் செய்து வைத்திருக்கின்றன. 16 வயதிலிருந்து தொழிலகங்களில் மாணவர்கள் பயிற்சி எடுக்க அனுமதிக்கப்படுவார்கள். அதனால் அங்கு படிப்பு முடியும்போது அத்துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. இங்குள்ள எல்லாக் கல்வி நிறுவனங்களும் இருக்கும் வசதி, ஆசிரியர்களின் தகுதி, சிறப்புத் திறன்கள், தேர்ச்சி விகிதம், உயர்கல்விக்கு அனுப்பும் எண்ணிக்கை, வேலை வாய்ப்புப் பெறும் முன்னாள் மாணவர்களின் நிலை போன்றனவற்றைக் கொண்டு தரவரிசைகள் உருவாக்கப்பட்டுப் புள்ளிவிவரங்களைத் தங்கள் இணைய தளங்களில் வெளியிடுகிறார்கள். அதன் அடிப்படையில் பள்ளியைத் தேர்வு செய்கிறார்கள். பிள்ளைகளின் பள்ளிக்காக வீடு மாறுகிறவர்களும் இருக்கிறார்கள்.

அமெரிக்காவிலும் கனடாவிலும் கல்லூரிகள் என்ற நிலை இல்லை. பெரும்பாலும் பல்கலைக்கழகங்களே. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளிலும் அப்படித்தான். ஆனால் பிரிட்டானியாவில் இப்போதும் கல்லூரிகள் தான். இந்தியாவில் அதை இப்போதும் தொடர்கிறோம். ஒரு நகரத்தில் பல பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. ஒரு பல்கலைக்கழகத்தின் வெவ்வேறு படிப்புகளைக் கற்பிக்கும் வளாகங்கள் வெவ்வேறு இடங்களில் இருக்கின்றன. அரசுப் பல்கலைக்கழகங்கள் என்ற நிலை இல்லை. எல்லாம் தனியார் நிறுவனங்களே. அதனால் உயர்கல்விக்கான செலவு பலப்பல மடங்கு அதிகம். நல்ல தரங்களைப் பெற்றுள்ள பல்கலைக்கழகங்களில் இடம் கிடைப்பது எளிதல்ல. அதே நேரம் சிறப்புப் பல்கலைக்கழகங்களில் சிறப்புத் தரப்புள்ளிகளோடு சேரும் மாணவர்களின் படிப்பை முழுமையாக ஏற்றுக்கொண்டு உதவும் அறக்கட்டளைகள் பல்கலைக்கழக நிர்வாகத்தோடு இணைந்து செயல்படுகின்றன. உயர்கல்வியைத் தரும் படிப்புக்குச் செலவு அதிகம் என்பதால் பல்கலைக்கழகப் படிப்பில் சேராமல் வேலை தேடிப்போகின்றவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அனைவரையும் உயர்கல்வியாளர்களாக -வல்லுநர்களாக மாற்ற வேண்டாம் என நினைப்பது இதன் சாரம்.

நான் ஆரம்பக்கல்வியைப் பெற்றது பஞ்சாயத்து யூனியன் பள்ளியில்தான். சேடபட்டி பஞ்சாயத்து யூனியனுக்குள் இருந்த உத்தப்புரம் பஞ்சாயத்தின் ஆரம்பப் பள்ளியில் . அப்போது அதன் முழுக்கட்டுப்பாடும் பஞ்சாயத்து யூனியன் எல்லைக்குள் இருந்தது. பாடங்களும் நூல்களும் மாவட்ட அளவு வாரியத்தில் இருந்தது. அப்போது காங்கிரஸ் ஆட்சி. பஞ்சாயத்து யூனியனின் வருவாய்க்கேற்பவே ஆசிரியர்களின் சம்பளம் இருந்தது. கூடுதல் ஆசிரியர்கள் தேவையென்றால் புதிய நியமனங்கள் செய்ய முடியாமல் இருந்தது. இந்தக் கட்டுப்பாடு காரணமாக அந்தந்த யூனியன் எல்லைக்குள் இருந்தவர்களே பணி வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் கல்வி மாநில அளவு ஒன்றாக மாற்றம் பெற்றது. ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் என்ற வகைப்பாட்டில் வந்தார்கள். மாதச்சம்பளம் உறுதியானது. மாவட்டங்களைத் தாண்டி பணி வாய்ப்புகள் பெற்றார்கள்; மாறுதலுக்கும் வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டன. கல்வித்துறை அதிகாரிகளால் மட்டுமே கல்விச்சாலைகள் ஆண்டுக்கொரு முறை கண்காணிக்கப்படும் ஒன்றாக மாறியது. உள்ளூர் கண்காணிப்பும் பங்கேற்பும் குறைந்தது.

அமெரிக்கப் பள்ளிக்கல்வியிலிருந்து கனடாவில் சில வித்தியாசங்கள் இருக்கின்றன. பக்கத்தில் இருக்கும் பள்ளியில் சேரவிரும்பாமல் தூரத்தில் இருக்கும் பள்ளியில் சேரவிரும்பினால் அங்கும் விண்ணப்பிக்கலாம். ஆனால் அந்தப் பகுதி மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கி அனுமதித்த பின்பே வேறு பகுதி மாணாக்கர்களுக்கு இடம் கிடைக்கும். அங்கே மாண்டிசோரி பள்ளி, உண்டு உறைவிடப்பள்ளி போன்றனவும் இருக்கின்றன. ஆனால் மிகவும் குறைவு. செலவு பலமடங்கு கூடுதல் என்பதால் அதற்குப் போட்டி இருப்பதில்லை. பல்கலைக்கழகப் படிப்பு அமெரிக்காவில் இருப்பதுபோலவே இருக்கின்றன.

கொண்டாட்டத்தில் பங்கேற்பு
பேரன் ஹர்ஷித் நந்தா உயர்நிலைப்பள்ளிக் கல்வியின் முதலாண்டில் சேர்ந்துள்ளான். முறையான வகுப்புகள் தொடங்கிப் பத்துநாட்கள் ஆகின்றன. பள்ளியின் சேர்க்கை அனுமதி கொடுத்த பின் ஆலோசனைக்கு அழைக்கப்பட்டு அடுத்த நான்காண்டுகளுக்கு என்னென்ன பாடங்கள் அடிப்படைப் பாடங்கள் என்பதும், என்னென்ன பாடங்கள் பொதுநிலைப் பாடங்கள் என்பதும், எவற்றைக் கூடுதல் மதிப்புப் பாடங்களாகத் தெரிவுசெய்யலாம் என்பதும் முடிவான அதே நேரத்திலேயே விளையாட்டுப்பயிற்சிகள், கலைப்பயிற்சிகள் என்ற இரண்டில் ஒன்றையும் முடிவு செய்து தருகிறார்கள்.
பேரனுக்குக் கலைப்பயிற்சிகளில் இடம் கிடைத்துள்ளது. படிக்கவேண்டிய பாடங்களுக்கான வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பே இசை சார்ந்த பயிற்சி வகுப்பைப் பள்ளி ஆரம்பித்துவிட்டது.இசைப் பயிற்சியிலும் பல்வேறு பிரிவுகளும் பாடங்களும் உள்ளன. அவருக்கு இப்போது தரப்பட்டவை அணிவகுப்பு இசைக்குழுவில் வாசிப்பதற்கான பயிற்சிகள். ஒரு மாணவருக்கு என்ன வகையான இசையில் முன்னறிவும் ஆர்வமும் இருக்கிறதோ அதற்கேற்ப பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இந்தியாவில் ஆரம்பக்கல்வி தொடங்கியது முதலே இசையில் ஈடுபாடும் பயிற்சியும் பேரனுக்கு உண்டு.
பியானோ- மேற்கத்திய இசையின் அடிப்படைக்கருவி என்பதால் அதில் பயிற்சி பெற்றிருந்ததான். அந்த அடிப்படையில் பள்ளியின் அணிவகுப்பு இசைக்குழுவுக்குத் தெரிவு செய்யப்பட்டுப் பயிற்சிகள் தரப்பட்டன. அடுத்த வாரம் நடக்கப்போகும் விளையாட்டுப் போட்டி ஒன்றின்போது இசைக்குழு வாசிக்கப்போகிறது. அதற்கான முழு ஒத்திகை நேற்று நடந்தது. அதைப் பார்க்க மாணவர்களின் குடும்பத்தினருக்கும் அழைப்பு விடுத்தனர்.
இது கோடைகாலம் என்பதால் ஒத்திகை நிகழ்வு முன்னிரவு 9 மணிக்குத் தொடங்கி 45 நிமிடங்கள் நடந்தன. இரண்டு இரண்டு நிமிடங்கள் இசைக்கக்கூடிய பாடல்களுக்கான இசைக்கோர்வைகளைக் காட்சிப்படுத்தினார்கள். அந்த இசைக்கோர்வைகளில் ஒன்றாக ஏ.ஆர். ரகுமானின் ‘ஜெயஹோ’வும் இருந்தது.
நாங்கள் பார்வையாளர்களாகப் பங்கேற்றோம். ஓர் இடைவேளையில் பெற்றோர்களை மைதானத்திற்கு அழைத்துப் பிள்ளைகள் செய்த பயிற்சிகளில் சில நடன அசைவுகளைக் கற்பித்து அவர்களையும் பங்கேற்கச் செய்தார்கள். பேரனின் இசைக்கருவியைக் கையில் தாங்கி அசைவுகளில் பங்கேற்றார் அவரின் அம்மா. அமெரிக்கப் பள்ளிக்கல்வியில் - கற்கை முறையில் இது ஒரு நிலை. தொடர்ந்து பேரன்களோடு பள்ளிக்கல்வியின் உள்ளடுக்குகளைத் தெரிந்துகொள்ளும் உரையாடல்களை நடத்திக்கொண்டிருக்கிறேன். பள்ளிக்கல்வி சார்ந்து இன்னும் சில குறிப்புகளை எழுதுவேன்.







கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்