எதிர்பாராத சந்திப்புகளும் நிகழ்வுகளும் -அமெரிக்கா
மூன்றுமாதப் பயணம் என முடிவானபோது பெரும்பாலும் சந்திப்புகளும் நிகழ்வுகளும் திட்டமிடப்பட்டன. அமெரிக்காவில் ஜூன் மாதம் இருப்பது என்றும் ஜூலையில் கனடாவிற்குப் போய்விட்டுத் திரும்பவும் ஆகஸ்டு முதல் வாரம் திரும்பிவிடுவது என்றும் திட்டம். அமெரிக்காவில் இருக்கும் சில நண்பர்கள் இந்த ஆண்டும் பெட்னா நிகழ்வுக்கு வாருங்கள் என்றார்கள். ஆனால் 2016 நியூஜெர்சியில் நடந்தபோது கலந்துகொண்ட நிலையில் திரும்பவும் அழைப்புக் கிடைக்காது என்று அதே தேதியில் வேறு இடத்தில் குடும்பத்தினரின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தோம்.
அமெரிக்காவிற்கு வந்தபின் நீங்கள் விரும்பினால் பெட்னாவில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யலாம். டெக்சாஸிலிருந்து இந்த ஆண்டு பெட்னா நடக்கும் நகருக்கு விமானக் கட்டணம் வழங்கி அழைக்கலாம் எனச் சொன்ன நண்பர்களிடம் அன்போடு மறுத்துவிட்டேன். திரும்பவும் வருவேன்; அப்போது பெட்னாவில் கலந்துகொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன். அதைத்தாண்டி இந்தப் பயணத்தில் எதிர்பாராத சந்திப்புகள் சில நிகழ்ந்தன. குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்கவும் அவர்களோடு நாட்களைக் கழிக்கவும் இடங்களைப் பார்க்கவுமான பயணத்தில் இப்படியான சந்திப்புகளும் நிகழ்வுகளும் கிடைக்க நமது இயங்குவெளியில் ஒரு பொதுமனித அடையாளத்தை உருவாக்கியிருக்க வேண்டும். தமிழ்ப்பேராசிரியர் என்ற அடையாளமும் கலை இலக்கியங்கள் மீது விமரிசனக்கருத்துக்கள் சொல்லும் ஒருவன் என்ற அடையாளமே எனக்கான பொது அடையாளம். நாடகம் சார்ந்து நீண்ட கால நண்பரான கோ.ராஜாராம் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை. டல்லாஸ் நகருக்கு அவர் வந்ததால் அந்த வாய்ப்பு கிடைத்தது. அதேபோல் முகநூல் வழியாக எனது எழுத்துக்களை வாசித்திருந்த நண்பர்கள் வழியாகவே மெட்ரோப்ளக்ஸ் தமிழ்ச்சங்கத்தில் உரையாற்றும் வாய்ப்பும் கிடைத்தது.
கோ.ராஜாராம் சந்திப்பு
நவீன நாடகம் என்ற சொல்லாட்சியை எனக்குச் சொன்ன இதழ் கணையாழி. அப்போது நான் அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலைத் தமிழ் இலக்கியமாணவன். மூன்றாம் அரங்கு என்ற கருத்தியலையும் செயல்படும் முறையையும் விளக்கிய இந்திய அரங்கியலாளர் பாதல் சர்க்காரைத் தமிழ்நாட்டுக்கு அழைத்தவர் என்ற தகவலோடு கோ.ராஜாராமின் பெயரும் அதன் வழியாகவே அறிமுகம். அப்போது அவர் கல்கத்தாவில் பணியில் இருந்தார். அங்கு செயல்பட்ட பாதல்சர்க்காரின் சதாப்தி குழுவைப் பற்றியும் சர்க்காரின் புகழ்பெற்ற ஏவம் இந்திரஜித்(பிறகொரு இந்திரஜித் ), மிச்செல் (தேடுங்கள் அல்லது ஊர்வலம்) போன்ற நாடகங்களின் மொழிபெயர்ப்பாளர் என்ற தகவலோடும் பின்னர் அறிமுகமானவர். திருச்சியில் நடத்தப்பெற்ற பாதல் சர்க்கார் நாடகவிழாவிற்கென சர்க்காரின் இன்னும் சில நாடகங்களையும் மொழிபெயர்த்துத் தந்தார். அப்போதெல்லாம் பெயராக மட்டுமே அறிமுகம். பின்னர் சென்னையில் பார்த்தபோதும் பெரிதாக உரையாடும் வாய்ப்பு ஏற்பட்டதில்லை. அந்த ஏக்கம் இன்று அமெரிக்காவில் டல்லாஸ் நகரில் நிறைவேறியது.
30 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவில் பணியாற்ற வந்து இங்கேயே தங்கிவிட்டார். அவரது கட்டுரைகள், கதைகள் சிலவற்றைத் திண்ணை இணைய இதழில் வாசித்துள்ளேன். முகநூலில் நண்பராக இருக்கிறோம். அதில் எப்போதாவதுதான் எழுதுவார். அமெரிக்கா வரும் தகவலைத் தெரிவித்து வாய்ப்பிருந்தால் சந்திக்கலாம் என்று சொல்லியிருந்தேன். ஆனால் அவர் இருப்பது கனெக்டிகட் என்ற மாநிலத்தில். அது அமெரிக்காவின் வடக்கில் இருக்கும் ஓரிடம். நான் வந்து தங்கியிருப்பதோ டெக்சாஸ் என்னும் தென் பகுதி மாநிலத்தில் டல்லாஸ் நகரில். அதனால் சந்திக்க வாய்ப்பிருக்காது என்றுதான் முடிவானது.
வாய்ப்பில்லை என்று நினைத்த ஒன்று மாற்றத்திற்குள்ளானது. அவரது மகளும் டல்லாஸில் இருக்கிறார்; அவரைப் பார்க்க வந்திருந்த வேளையில் என்னைப் பார்க்க வரலாமா? என்று கேட்டு முடிவுசெய்து சந்தித்து உரையாடினோம். நீண்ட நேரம் தமிழ்நாட்டின் நவீன நாடகப்போக்கு, சிற்றிதழ் எழுத்துகள், தமிழ் இலக்கிய ஆளுமைகளின்/ குழுக்களின் செயல்பாடுகள், சாகித்ய அகாதெமியின் செயல்பாடுகள் எனப் பேசிக்கொண்டிருக்கும்போது அவரோடு தொடர்புடைய ‘விளக்கு’ விருது அமைப்பும், தெரிவுகளும் பற்றியும் பேச்சு திரும்பியது. விளக்குவிருதுத் தேர்வில் நான் இருந்த காலகட்டத்துத் தெரிவுகளைச் சொல்லிக் கொண்டிருந்தேன். 2010-11 இல் விருதை மறுதளித்த வண்ணநிலவன், இந்த ஆண்டு பெற்றுக்கொண்ட மனமாற்றம் பற்றிச் சொல்லிச் சிரித்துக்கொண்டோம்.
பாண்டிச்சேரிக் காலத்துக் கி.ரா., இ.பா. நினைவுகளும் நண்பர் குணசேகரன் குறித்தும் பேச்சு திரும்பியது. அந்தப் பேச்சில் அவரது துணைவியாரும் கலந்துகொண்டார். அப்போதுதான் அவர் கே.ஏ.குணசேகரனோடு பன்ஸிகௌல் காந்திகிராமத்தில் நடத்திய தேசிய நாடகப்பள்ளிப் பயிற்சிப்பட்டறையில் பங்கெடுத்துப் பாஞ்சாலி சபதம் நாடகத்தில் நடித்தவர் என்பது தெரியவந்தது. கோ.ராஜாராமை நவீன நாடகப்போக்கின் தொடக்கப்புள்ளியாக நினைத்திருந்த எனக்கு அவரது துணைவியாரும் அதில் இணைந்தவர் என்ற தகவல் மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளித்தது.
வாசிக்கும் நண்பர்களோடு ஒரு சந்திப்பு
இந்தப் பயணத்தின் தொடக்கத்தில் எழுதிய முகநூல் பதிவுகளை வாசித்திருக்க வேண்டும். டல்லாஸ் நகரின் டெண்டன் பகுதியில் காலை, மாலை நடைகளையும் கடைகளுக்குப் போனதையும் படங்களாகவும் குறிப்புகளாகவும் எழுதிக் கொண்டிருந்ததை வாசித்துவிட்டு முகநூல் செய்தியோடை வழியாகத் தொடர்புகொண்டார் அவர். முகநூலில் நான் எழுதிய நீண்ட குறிப்புகள் சிலவற்றைச் சொல்லிவிட்டு, தொடர்ந்து உங்களை வாசிக்கிறேன் என்றார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்ததும், இப்போது கோவை குமரகுரு பன்முகக்கலை அறிவியல் கல்லூரியில் இருப்பதும் அவருக்குத் தெரிந்திருந்தது. சுப்பு பழனிச்சாமிக்குச் சொந்த ஊர் கரூர் பக்கம் 100 வீடுகளுக்கும் குறைவான எண்ணிக்கை கொண்ட கிராமம் என்றார். எனது சொந்தக்கிராமமான தச்சபட்டியும் கூட அப்படியொரு கிராமம் தான் என்றேன். .
அமெரிக்காவில் இருக்கும் தமிழர்களில் பெரும்பாலோர் சம்பளம் வாங்கும் வேலைகளுக்கு வருகிறார்கள் என்ற பொதுவான எண்ணத்தை அவரது பேச்சு மாற்றியது. அவர் இங்கே மருந்துக் கடைகள் வைத்திருக்கும் தொழில் முனைவோர். டல்லாஸ் நகரில் மட்டுமல்லாம், அருகில் இருக்கும் சிறுநகரங்கள் சிலவற்றிலும் அவரது கடைகள் உள்ளன என்றார். ‘எவ்வளவு நாட்கள் அமெரிக்காவில் இருப்பீர்கள் என்று கேட்டுவிட்டு, ஒருநாள் சந்திக்கலாம்’ என்றார். வாய்ப்பிருந்தால் கிராமப்புறக் கடை ஒன்றுக்கு அழைத்துப் போகிறேன் என்றும் சொன்னார். தொடர்ந்து பேசிக்கொண்ட பிறகு எனது கனடாப் பயணத்திற்குப் பின் சந்திப்பது என்று முடிவானது.
என்னைச் சந்திக்கப்போவதை சுப்பு அவரது நண்பர் செல்வக்குமாரிடம் சொல்ல, அந்தச் சந்திப்பில் அவரும் சேர்ந்துகொள்வதாகச் சொல்லியிருக்கிறார் என்றும் தெரிவித்திருந்தார். கனடாவிலிருந்து வந்தபின் முதல் சனியான நேற்று சந்தித்தோம். ஐந்து மணிக்குக் கிளம்பி 5.30 -க்குள் வந்துவிடுவேன் என்று சொல்லிச் சரியான நேரத்தைக் கடைப்பிடித்தார். இந்த நேரத்தைக் கடைப்பிடிப்பது அனைவருக்கும் உரியதாக இருக்கிறது. சொந்த ஊர் பற்றிய விசாரிப்புகளுக்குப் பிறகான பேச்சு அமெரிக்காவைக் குறித்த பேச்சாக மாறியது. அமெரிக்க வருகைக்கான விசா நடைமுறைகள் அத்துபடியாக இருந்தன. அதுவல்லாமல் அங்கிருக்கும் வெவ்வேறு நடைமுறைகளின் மீதான குறுக்குவெட்டுத் தோற்றத்தைச் சொல்லிக்கொண்டே காரில் அழைத்துச் சென்றார்.
டெக்சாஸ் மாநிலத்தின் தட்பவெப்பம், அமெரிக்கர்களுக்கும் வெளியிலிருந்து வருகிறவர்களுக்குமான உறவுகள், தொழில் செய்யும்போது கவனிக்கவேண்டிய நடைமுறைகள், ஐக்கிய அமெரிக்காவின் அரசாங்கத்தின் அமைப்புகளான காவல் துறை, கல்வித்துறை போன்றவற்றில் இருக்கும் சுதந்திரம் மற்றும் எல்லைகள் என எல்லாவற்றையும் அனுபவரீதியாக அறிந்து வைத்திருக்கிறார் தனி மனிதர்களுக்குத் தரும் சுதந்திரத்தில் எவ்வளவு தூரம் தலையிடாமல் இருக்கிறது அரசின் அமைப்புக என்பதையும் எல்லை மீறும்போது எப்படிக் கண்டிப்புக் காட்டும் என்பதையெல்லாம் சொல்லும்போது இந்திய வாழ்க்கையில் சட்டமும் அமைப்புகளும் எங்கே தடுமாறுகின்றன என நினைத்துக்கொண்டேன்.
30 நிமிடப் பயணத்தைப் பேச்சு மயக்கத்தில் 45 நிமிடமாக ஆக்கிவிட்டோம். திரும்பவேண்டிய ஓரிட த்தில் கவனிக்க மறந்த நிலையில் 15 நிமிடம் கூடிவிட்ட து. காத்திருந்த செல்வக்குமார், வீட்டு வளாக வாசல் கதவின் குறியீட்டு எண்ணை வாங்கித் தானியங்கிக் கதவை திறந்து போனபோது ஒரு பெரும் வாசக அனுபவம் கொண்ட ஒருவரைச் சந்திக்கப் போகிறோம் என்று நினைக்கவில்லை. செல்வக்குமாரின் வீட்டுக்குள் நுழைந்து பார்வையைச் சுழற்றியபோது போது அவரது வாசிப்பு மேசையில் லா.ச.ரா.வும் எஸ்.ராமகிருஷ்ணனும் இளங்கோ கிருஷ்ணனும் இருந்தார்கள். கோவையில் இருக்கும் அவரது நண்பர் அவைநாயகன் தொடங்கிப் பொதியவெற்பன் எனப் பலரது நெருக்கத்தைப் பகிர்ந்துகொண்டதோடு 30 ஆண்டுக் கால வாசிப்பையும் கடைசியாக இளங்கோ கிருஷ்ணனின் வியனுலகு வதியும் பெருமலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டது வரை சொல்லி முடித்தார்.
வாசித்த எழுத்தாளர்களைச் சந்தித்த இளமைப்பருவ அனுபவங்களோடு இலக்கியவாதியாகாமல் விலகி விட்டதில் ஒரு வருத்தமும், வாழ்க்கை தந்த நெருக்கடியால் வேலை, பணம், தொழில் என நகர்ந்துவிட்ட தால் கிடைத்துள்ள அனுபவங்களின் நினைவுப்பாதையைச் செல்வக்குமார் சொல்லிக்கொண்டே வரும்போது மூவரோடும் கார் உயர்தர விருந்துக் கூடம் ஒன்றை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. லா.ச.ராமாம்ருதம், பிரமிள், தி.ஜானகிராமன் என வாசித்துள்ள செல்வக்குமாரின் தமிழ்ப்பற்றும் அரசியல் தெளிவும் ஆச்சரியமூட்டுவது. மகன்களுக்கு முகிலன், கபிலன் எனப்பெயர் வைத்துள்ளார். பல்தொழில் நுட்பக் கல்லூரிப் படிப்பிற்குப் பின் வேலைக்குச் சேர்ந்து, பிறகு படித்து, படிக்கும்போது வேலை பார்த்து, திரும்பவும் படித்து என நகர்ந்துள்ள அவர் இதுவரை பணியாற்றியுள்ள தொழில்குழுமங்களும் திட்டங்களும் விதம்விதமாக இருக்கின்றன. சீனா, தைவான், ஐரோப்பா எனப் பயணம் செய்துள்ள அவர் அமெரிக்காவில் இருப்பதை வருத்தமாக நினைக்கவில்லை.
விருந்தின் பாதியில் அவர்கள் இருவருக்கும் பொதுவான இன்னொரு நண்பருக்கு என்னோடு சந்தித்துச் சாப்பிட்டுக்கொண்டிருப்பதைச் சொன்னபோது அவரும் வந்து சேர்ந்துகொண்டார். வந்தவுடன் தனது அப்பாவின் பெயரும் உங்கள் பெயரும் ஒன்று எனச் சொல்லி மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார் சக்திவேல் ராமசாமி. சில நாட்களுக்கு முன்பே எனது பெயரையும் வருகையையும் தெரிந்துகொண்டதாகவும் அடுத்தவாரம் சந்திக்க மெட்ரோபிளக்ஸ் தமிழ்ச் சங்கக் கூட்ட த்தில் சந்திக்கும் வாய்ப்பு இருக்கிறது என்றிருந்தவரைச் செல்வாவின் அழைப்பு இப்போது சந்திக்கும்படி செய்து விட்ட து என்றும் சொன்னார். அடுத்தவாரம் நான் பேச இருக்கும் டல்லாஸ் நகரத்தமிழ்ச்சங்கத்தின் பொறுப்பாளர்களில் அவரும் ஒருவர் என்பது தெரிந்தது. அவருக்கும் சொந்த ஊர் கொங்குப் பகுதிதான். நான் இப்போதிருக்கும் குமரகுரு தொழில்நுட்பக்கல்வி நிறுவனத்தில் முன்னாள் மாணவர்
கொங்குப் பகுதி என்ற அடையாளத்தோடு இணைந்தபின் பேச்சு தமிழ்நாட்டு அரசியல் பக்கம் திரும்பியது. கருத்தியல் ரீதியான பிராமணரல்லாதார் – பிராமணர் என்ற எதிர்நிலைப் போக்கு தமிழ்நாட்டுக்கு வெளியேயும் எப்படி வடிவம் கொண்டிருக்கிறது என்பதைச் சுற்றிச்சுற்றி வந்தது. கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்கப்பெருநகரங்களில் குடியேறிக்கும் தமிழர்களின் எண்ணிக்கைப் பெருக்கம் உருவாக்கியிருக்கும் பண்பாட்டு நடவடிக்கை மாற்றங்களைச் சொன்னார்கள். 15 ஆண்டுகளுக்கு முன்பு பெட்னாவிற்கு அழைக்கப்பட்டவர்கள், நடந்த நிகழ்ச்சிகள் போன்றவற்றை, இப்போது அழைக்கப்படும் ஆளுமைகள், கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றோடு ஒப்பிட்டுச் சொல்லச் சொல்ல இந்திய மனம் - தமிழ் மனம் என்ற எதிர்வின் நீட்சியைப் புரிந்துகொள்ள முடிந்தது. அதே நேரம் அமெரிக்காவிலிருக்கும் மற்ற இந்தியர்களின் மனம் தொடர்ந்து பாரதீய ஜனதா ஆதரவு நிலைபாட்டோடு இருப்பதையும் உணர்ந்திருக்கிறார்கள். அமெரிக்காவிலிருக்கும் தமிழ்நாட்டுப் பிராமணர்கள் முன்பு தமிழ் மொழி அடையாளத்திற்குரியவர்களாக இருந்து இப்போது இந்திய அடையாளத்தை நோக்கி நகர்ந்துவிட்டார்கள் என்பதை இந்தப் பத்தாண்டு தமிழ்ச்சங்கங்களின் செயல்பாடுகள் உறுதிசெய்துள்ளன.
உறவினர்கள், சொந்த சாதி, சொந்த ஊர் மயக்கங்களை உடைத்ததின் வழியாகப் பெரியார் தங்களுக்குள் இருக்கிறார் என்றார்கள் மூவருமே. சொந்த உரையே நினைத்துக்கொண்டு புலம்பும் மனநிலை அவர்களுக்கு இல்லை. இடம்பெயர்ந்து அமெரிக்காவிற்கு வந்ததைப் பெரும் வரமாக நினைக்கிறார்கள். கலைஞரின் முன்னெடுப்பில் வளர்ச்சிபெற்ற தகவல் தொழில்நுட்ப ப்பரவலின் தாக்கம் தான் இந்த இடப்பெயர்வைச் சாத்தியமாக்கியது என்று நன்றியோடு நினைக்கிறார்கள். மேலும் மேலும் தமிழர்கள் இடம்பெயர்ந்து உலகமெங்கும் பரவும் வகையில் உருவாக்கப்படும் திட்டங்கள் தமிழர்களின் வலிமையைப் பெருக்கும் என நினைக்கிறார்கள் .
இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட விருந்து, முடிந்து கிளம்பும்போது படங்கள் எடுத்துக்கொண்டோம். காரில் வரும்போது இடையிடையே வனப்பகுதிகளும் ஏரிப்பகுதிகளும் வந்தபோது “ சரியான பாதையில் தான் செல்கிறோமா?” என்றொரு சந்தேகத்தை எழுப்பினேன். “ கவலையே படாதீங்க. தேவையான அளவு எரிபொருள் இருக்கிறது; இரவுமுழுவதும் டல்லாஸைச் சுற்றிக்காட்டிவிட்டுக் காலையிலாவது கொண்டுபோய் உங்கள் மருமகனிடம் ஒப்படைத்துவிடுகிறேன் என்றார் காரோட்டிக்கொண்டிருந்த சக்திவேல். ஆனால் கூகிள் காட்டும் பாதையில் சென்று சரியான நேரத்திற்கு வீட்டில் இறக்கிவிட்டார்கள். ‘யாதும் எங்கள் ஊர்; எல்லோரும் எங்கள் உறவினர்கள்’ என்ற கணியன் பூங்குன்றனின் சிந்தனை ஓடிக்கொண்டே இருக்கிறது.
மெட்ரோப்ளக்ஸ் தமிழ்ச்சங்கத்தில் உரை

அயல்நாடுகளில் இயங்கும் தமிழ்ச்சங்கங்களின் முதன்மை நோக்கம் தமிழ் வளர்ப்பது மட்டுமல்ல. அங்கு தமிழ் என்பது மொழியைக் குறிப்பதில் தொடங்கித் தமிழ் மொழி பேசிய நிலப்பகுதியிலிருந்து வந்து புதிய நாடுகளில்/ நகரங்களில் வாழும் விதமாக மாறியவர்களி்ன் இருப்போடு தொடர்புடையது. தாய்நிலப்பரப்பிலிருந்து வந்தவர்களை இணைக்கும் சங்கிலியாக மொழி இருக்கிறது. தாய்மொழி பேச்சாகவும் எழுத்தாகவும் வாழ்வியலாகவும் இருக்கிறது என்பது அறியப்படாமலேயே அதற்குள் இயங்குவார்கள். அதே நிலை அயல்நாடுகளிலும் இருக்காது. இங்கு மொழி என்பது தன்னுணர்வோடும் அறிதலோடும் தொடர்புடையது. இந்தப் புரிதலை எனது அயல் பயணங்களில் கவனித்திருக்கிறேன். 10 ஆண்டுகளுக்கு முன்னால் ஐரோப்பிய நாடுகளின் சில நகரங்களில் இருந்த தமிழ்ச்சங்கங்களின் செயல்பாடுகளில் பங்கேற்றபோது தமிழ் கொண்டாட்டத்தின் வெளிப்பாடாகவும் ஒருங்கிணைப்பின் கருவியாகவும் இருந்ததைப் புரிந்துகொண்டிருக்கிறேன். தாய்நிலத்தில் கொண்டாடிய பொதுப்பண்டிகைகளைக் கொண்டாடுவதும் ஒவ்வொருவரும் பங்கேற்பதும் அங்கு நடக்கிறது. சொந்த ஊரில் பொங்கல் விழாவைக் கொண்டாடுவதில் பெரிய ஆர்வம் காட்டாதவர்களும் கூட அங்கே ஈடுபாட்டோடு பங்கேற்பாளராகவும் ஏற்பாட்டாளர்களாகவும் செயல்படுவார்கள்
அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் செயல்படும் மெட்ரோப்ளக்ஸ் தமிழ்ச்சங்கமும் அப்படியான செயல்பாடுகளைக் கொண்ட ஒன்று. அத்தோடு தமிழ் மொழி சார்ந்த- கலை, இலக்கிய நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்கிறது. நேற்றுக் காலை 10 முதல் மாலை 7 மணி வரை நடந்த நிகழ்வுகள் டல்லாஸ் நகரில் இருக்கும் தமிழ்க்குடும்பங்களின் இருப்பையொட்டிச் செய்துகொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகள் தொடர்பான ஒரு தொடர்நிகழ்வு. வருமானவரி, சேமிப்பு, சொத்து வாங்குதல், பதிவுசெய்தல், அதற்குரிய வாரிசுகளைச் சுட்டி உயில் எழுதுதல் போன்றவற்றைக் குறித்த விழிப்புணர்வை உண்டாக்கும் விதமாக நிகழ்வுகள் நடந்துகொண்டிருந்தன. இவ்வகையான பணிகளில் முழுநேரமாகவும் பகுதிநேரமாகவும் ஈடுபடும் 20 முகவர்கள் தங்கள் குழுமங்களைச் சொல்லும் விதமாக சந்திப்பு மேசைகளை வைத்திருந்தார்கள். 300 -க்கும் அதிகமான தமிழ்க்குடும்பங்கள் வந்து ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டதாக அமைப்பாளர்கள் சொன்னார்கள்.
இப்படியான சந்திப்பொன்றின் பகுதியாக தமிழ்நாட்டிலிருந்து வந்துள்ள ஓர் ஆளுமையைச் சந்திக்கும் நிகவாக எனது உரை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்களிடத்தில் தமிழ் மொழியாக மட்டும் இல்லை; உலகமொழிகளில் ஒன்றாக மாறிக்கொண்டிருப்பதைச் சொல்லும் வாய்ப்பாக எனது உரையை அமைத்துக்கொண்டேன். இந்தக் கல்வி ஆண்டில் அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் கற்பித்தலைத் தொடங்கவுள்ள தமிழ் இருக்கையோடு உலகப்பல்கலைக்கழகங்களில் செயல்படும் தமிழ் இருக்கைகளைச் சுட்டிக்காட்டி, அவற்றின் கற்பித்தல் முறைமைகளும் பாடத்திட்டங்களில் உருவாக்கவேண்டிய மாற்றங்களையும் சுட்டிக்காட்டினேன். அத்தோடு உலகத்திற்கான அறிவுருவாக்கத்தில் லத்தீனும் கிரேக்கமும் ஆற்றிய பங்கிற்கு இணையாகத் தமிழின் முதன்மை இலக்கியமான தொல்காப்பியம் இருப்பதையும் விளக்கியுரைத்தேன்.
காலனிய காலத்திலும் பின்னரும் ஐரோப்பிய நாடுகளில் உருவாக்கப்பட்ட இந்தியவியல்/ தென்னாசிவியல் புலங்களின் பகுதியாகத் தொடங்கப்பட்ட தமிழ் இருக்கைகள் தமிழை ஒரு கீழ்த்திசைச் செவ்வியல் மொழியாகக் கருதித் தங்கள் நாட்டு மாணவர்களுக்குக் கற்பிக்கும் நோக்கத்தோடு பாடத்திட்டங்களை வடிவமைத்துக் கொண்டு கற்பித்தன. நான் பணியாற்றிய வார்சா பல்கலைக்கழகப் பட்டப்படிப்பின் பாடத்திட்டம் அதன் மாதிரிதான். பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், சோவியத் யூனியன், செக்கோஸ்லோவோக்கியா போன்ற நாடுகளில் தொடங்கப்பட்ட இந்தியவியல் படிப்புகளின் பகுதியாக இருந்த தமிழ்ப்படிப்புகள் அப்படித்தான் இருந்தன; இருக்கின்றன. அதே மாதிரிகளையே அமெரிக்காவில் பெர்க்லி, விஸ்கான்சின், சிகாகோ பல்கலைக்கழகத்தில் காணமுடியும். ஆனால் இப்போது தொடங்கப்படும் ஹார்வர்ட், ஹூஸ்டன் பல்கலைக்கழகங்களின் தமிழ் இருக்கைகள் அப்படியான எல்லைக்குள் மட்டும் இருக்கமுடியாது. ஏனென்றால் இப்போது அமெரிக்காவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தமிழ்க்குடும்பங்கள் இருக்கின்றன. அவர்களுக்குத் தாய்மொழியான தமிழைப் படிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தரவேண்டிய பொறுப்பு அவற்றுக்கு உண்டு. அந்த நோக்கத்தோடு தான் புதிய இருக்கைகளுக்குத் தாராளமாக நிதியுதவியைச் செய்கிறார்கள் தமிழர்கள். இந்த நோக்கம் இருக்கிறது என்பதைக் கனடாவின் யார்க்,டொரண்டோ பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் தொடங்கப்பட்டபோது நினைவுகூரப்பட்டது.
தங்கள் நாட்டில் வாழும் தமிழர்களின் நிதியுதவி இல்லாமலேயே தமிழ்நாட்டிலிருந்து வந்த குடும்பங்களின் பிள்ளைகள் தமிழ் படிக்கவும், தங்கள் நாட்டுப் பிள்ளைகள் தமிழ்நாட்டில் போய் வணிகத்தில் ஈடுபடவும், பணி வாய்ப்புகள் பெறவுமான நிலைபாட்டோடு கீழ்த்திசை நாடுகளான சீனாவும் கொரியாவும் தமிழ்த்துறைகளைத் தங்கள் நாட்டுப் பல்கலைக் கழகங்களில் தொடங்கியுள்ளன. இதற்கு முன்மாதிரியாக இருந்தவை மலேசிய, சிங்கப்பூர் பல்கலைக்கழகங்கள். இவையல்லாமல் இலங்கைத் தமிழர்களின் புலப்பெயர்வு பலவிதமான தமிழ்க்கற்கை நிறுவனங்களை உருவாக்கியுள்ளது. மொழியாகவும், கலையாகவும், சமயமாகவும், புழங்குபொருள் வாழ்வியலாகவும் தமிழ் அடையாளத்தைப் பேணுகிறார்கள். ஐரோப்பிய நகரங்களிலும் கனடாவிலும் ஆஸ்திரேலிய நகரங்களிலும் இத்தகைய கற்கை நிறுவனங்கள் பல செயல்படுகின்றன.
இன்று தமிழ் என்பது வடவேங்கடம் தென்குமரி ஆயிடையில் இருக்கும் தமிழ் அல்ல. உலகமயம் கொடுத்த வாய்ப்புகளாலும் ஈழப்போரின் துணைவிளைவாக நேர்ந்த புலப்பெயர்வும் தமிழை உலகமொழியாக ஆக்கியிருக்கிறது. அதன் அறிவை, சிந்தனை முறையை, இலக்கியத்தை, அதன் வெளிப்பாடுகளை உலகப்பரப்புக்கு நகர்த்துவது நம்முன் இருக்கும் பணிகளில் ஒன்று என்பதைச் சொல்லும் வாய்ப்பு கிடைத்தது.
கருத்துகள்