யாசகப் பாடல்களும், தென்னிந்தியச் சேனல்களும்
பிரித்தானியாவில், கனடாவில், இலங்கையில் என எந்த நாடுகளிலிருந்தும் தென்னிந்தியத் தொலைக்காட்சிகளின் பாடல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் ஈழத்தை வேராகக் கொண்ட போட்டியாளர்கள் நன்றாகவே பாடுகிறார்கள். தாம் விரும்பும் துறையில் முன்னேற்றங் காண முயலும் அவர்களின் முயற்சி மேலும் திருவினையாக்க வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
எழுத வந்த விடயம் அதுவல்ல. முன்னெல்லாம் ரயிலில் யாசகம் கேட்பவர்கள் பாடுவதற்கென்றே, தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா....., அம்மாவும் நீயே அப்பாவும் நீயே ..... போன்ற சில பாடல்கள் பிரத்தியேகத் தேர்வாக இருந்தன.
அதே போலத்தான் இப்போது தென்னிந்தியத் தொலைக்காட்சிகளின் இசைத் தேர்வு நிகழ்ச்சிகளில் ஈழத்தை வேராகக் கொண்டோர் பாடுவதற்கென்றே
விடைகொடு எங்கள் நாடே ........
கண்டால் வரச்சொல்லுங்க.......
போன்ற சில பாடல்களை இந்தச் சேனல்கள் தேர்வு செய்து வைத்திருக்கின்றன. பாடும் குழந்தைகள் உயிரைக் கொடுத்து நன்றாகவே பாடி விடுகிறார்கள் .
எனக்கேதோ அந்நேரத்தில், எந்த உணர்வுக் கொந்தளிப்பும் கண்ணீரும் வருவதில்லை. சேனல்கள் யாசகம் கேட்கப் பாடும் பாடல்களாகவே அவை காதில் ஒலிக்கின்றன. கோடியில் புரள்பவன் யாசகம் கேட்டால் கண்ணீர் வருமா?
பிள்ளைகள் பாடும் போது சுழலும் கமெரா சோகம் ஊடுருவும் முகங்களைக் கச்சிதமாகக் கவ்விக் கொள்கிறது. அந்தப் பாடல்களுக்கு மாத்திரம் அற்புதமாக உணர்ச்சிகளைப் பிழியும் முகங்களினால் நடுவர்கள் நடிகர் திலகத்தைத் தோற்கடிக்கும் நடிப்புச்
சிகரங்களாகி விடுகிறார்கள்.
பின், போட்டியாளரின் உறவினர்களின் கண்ணீர் சிந்தவைக்கும் உரை , அவர்கள் சொல்லும் போர்க்கால அனுபவங்கள் இழப்புகள் என்பன அன்றைய நிகழ்ச்சியின் உச்சக்கட்ட உணர்ச்சித் தவிப்பாகி விடுகிறது.
வசனம், கமெரா, இயக்கம் என எல்லாமும் கச்சிதமாக அமையும் போதும் பாடவந்த சூழ்நிலைக் கைதிகளான குழந்தைகளால் , தயாரிப்பாளரோ, இயக்குனரோ அந்தப் பாடல்களுக்குரிய நேரத்தில் எதிர்பார்க்கும் உணர்ச்சித் தவிப்பை முகத்தில் காட்டத் தெரியாமல் பேந்தப் பேந்த விளிப்பது பெரும் சோகம்.
சில பத்து வருடங்களின் முன் ,
தென்னிந்தியாவில் இசையமைக்கப்பட்டு , தென்னிந்தியத் திரைப்படப் பாடகர்களால் பாடப்பட்டுப் பிரபலமாக இருந்த, இன்று பலரும் மறந்து போன, அல்லது மறந்ததாகப் பாவனை காட்டுகின்ற சில பாடல்களை உங்களுக்காகச் சிபாரிசு செய்கிறேன். அத்தனை பாடல்களும் நீங்கள் பாடவைக்கும் பாடல்களை விட உணர்ச்சியைப் பிழியும். எல்லாப் பாடல்களும் ஏதோ ஒரு வரியிலேனும் இந்தியாவைத் தொடர்பு படுத்தும் என்பதால் இந்த நிகழ்வுக்குச் சிறப்பான தேர்வு அந்த இசைத்தொகுப்பு.
அடுத்தடுத்த நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்யம் போது உங்கள் மேடையில் எங்கள் குழந்தைகளைக் கொண்டு அவைகளைப் பாடவையுங்கள். ஒரு பாடலின் சில வரிகளை மட்டும் குறிப்பிடுகிறேன்
"எங்களின் பேய்களும் செய்ய மறந்ததை
உங்களின் ராணுவம் செய்து முடித்தது........"
வீசும் காற்றே தூது செல்லு
தமிழ் நாட்டிலெழுந்தொரு சேதி சொல்லு
ஈழத்தில் நாம் படும் வேதனைகள் இதை
எங்களின் சோதரர் காதில் சொல்லு ......
இதை உங்களால் பாடவைக்க, அந்தக் காலத்தை உங்கள் மேடையில் மீட்டிப் பார்க்க ஒரு நிமிடம் தலைகவிழ உங்களால் முடியுமானால் ஒத்துக் கொள்கிறோம் நீங்கள் எங்கள் அனுதாபிகள் ஆதரவாளர்கள் தான் என்பதையும், எங்கள் வலியைக் காசாக்க முயலவில்லை என்பதையும்.
இல்லையென்றாலென்ன , . எங்கள் இழப்பையும், இரத்தத்தையும், கண்ணீரையும் தொலைந்து போன வாழ்வுகளையும் விற்றுக் காசாக்கிய பலரும் போல இருந்து விட்டுப் போங்கள். என்ன வந்தது.
வலியவற்றுக்கு வாழத்தெரியும் என்பதுணர்ந்து , வழமைபோல வாழாவிருந்து விடுகிறோம். எல்லாமும் இழந்தோருக்கு என்ன குறைந்து விடும் .
கருத்துகள்