டொரண்டோ: போனதும் வந்ததும் சந்தித்தவர்களும்


 ஒட்டாவா> டொரண்டா < ஒட்டாவா

டொரண்டாவில் 5 நாட்கள் இருப்பதற்கான பயணத்திட்டத்தில் போகும்போது பேருந்துப்பயணம்; வரும்போது இருப்பூர்திப் பயணம் என்பது முன்பே முடிவான . இரண்டு பயணமுறைகளிலும் பயண நேரத்தில் பெரிய கால வேறுபாடு இல்லை. பேருந்துப் பயண நேரம்5 மணி 5 நேரம். ரயிலில் 30 நிமிடங்கள் குறைவு. ஒட்டாவாவிலிருந்து காலை 7 மணிக்குக் கிளம்பும் பேருந்து பகல் 12 மணிக்குப் போய்ச்சேர்கிறது. நான் ஒட்டாவாவின் இரண்டாவது நிறுத்தத்தில் ஏறி, டொரண்டோவில் கடைசி நிறுத்தத்திற்கு முந்திய ஸ்கார்புரோவில் இறங்க வேண்டியவன். அதனால் எனது பயண நேரம் 4 மணி 30 நிமிடம்தான்

 திரும்பி வரும்போது நான் பயணித்த ரயில் பிற்பகல் 14.17 க்கு டொரண்டோவில் கிளம்பி ரயில் ஒட்டாவுக்கு வந்து சேரும் நேரம் 18,44. நான் இறங்க வேண்டிய நிறுத்தம் கடைசி நிறுத்தத்திற்கு முந்திய பால்லோபீல்டுக்கு 20 நிமிடம் முன்பே வந்து விடுகிறது. நகரங்களுக்கு இடையே தினசரி இயக்கப்படும் அந்த ரயிலில் மொத்தம் ஐந்து பெட்டிகள் தான். ஒவ்வொரு பெட்டியிலும் 80 பேர் அமரும் விதமாக 20 வரிசைகள். வெளியே இருக்கும்போதுதான் ரயில். உள்ளே ஏறிவிட்டால் சிறியரக விமானத்தின் கட்டுமானத்தில் இருக்கிறது. ஒவ்வொரு பெட்டிக்கும் ஆண்/ பெண் தனித்தனி களிப்பறை. அவற்றைத்திறப்பது மூடுவதற்கு உரிய குறிப்புகளும் விமானத்தில் சொல்வதுபோலச் சொல்கிறார்கள். அச்சடிக்கப்பட்ட குறிப்புகளும் இருக்கின்றன. அவசரத்தில் இறங்க வேண்டுமென்றால் உடைப்பதற்கான சாளரம் பற்றிய குறிப்பும் சொல்லப்படுகிறது. சிற்றுண்டிகள் வருகையும் விமானத்தில் போலவே. ரயிலில் ஏறியவுடன் இணையத்தொடர்பு கிடைக்கிறது. ஒவ்வொருவருக்கும் மின்சாரத்தொடர்புக்கு வசதி இருக்கிறது. முன்னால் கணினியை வைத்து வேலை செய்யலாம்.

டொரண்டோ - ஒட்டாவா இடையில் ஏழு நிறுத்தங்கள். ஒவ்வொரு நிறுத்தம் வருவதற்கு முன்பே முன்னறிவிப்பு இருக்கிறது. ஒவ்வொரு பெட்டிக்கும் சோதனையாளர் இருக்கிறார். அவரே கதவைத் திறந்து, படிகளை இறக்கி அனுப்புகிறார். பயணிகள் இறங்கியவுடன் படிகள் தானே மேலேறி ரயிலோடு பயணிக்கிறது. எல்லா ரயில்களும் அரசின் பொதுப்போக்குவரத்தில்தான் இருக்கிறது. ஆனால் இருப்பூர்திகள் தனியார் வசம் இருக்கின்றன. சரக்குகளைக் கொண்டுவருவதற்காகப் போடப்பட்ட இருப்பூர்திகள் அவர்களோடு ஒப்பந்தம் செய்துகொண்டு ரயில் சேவை நடக்கிறது. கட்டணம் பேருந்துக் கட்டணத்தைவிடக் குறைவாக இருக்கிறது.

அதற்கு மாறாகப் பேருந்துப் போக்குவரத்து முழுவதும் தனியாரிடம் இருக்கிறது. அதனால் கட்டணமும் அதிகம். பேருந்துப் பயணப்பாதையில் பெரிய நகரங்கள் அதிகம் இல்லை. தோட்டங்களும் வனங்களும் ஆறுகளும் மலைகளுமான சாலையில் கால்நடைகள், பயிர்கள், காய்கறித்தோட்டங்கள் எனப் பார்த்துக் கொண்டே போகமுடிந்தது. அத்தோடு ஈழத்தமிழர்கள் அதிகம் வசிக்கும் ஸ்கார்புரோ நகர்மையத்தில் அதற்கொரு நிறுத்தம் இருந்தது. அதனால் நேராக அங்கே போய் இறங்கிக் கொள்ள முடிந்தது. ரயில் பயணத்தில் அந்த அளவுக்கு இல்லை. ஆனால் ஓஸோவோ, கிங்க்ஸ்டன், புரோக்வில்லெ, பாலோவ்பீல்டு போன்ற நடுத்தர நகரங்கள் வழியாக வருகின்றது. இடையிடையே ஆற்றுப்பாலங்கள், சரக்குப் பெட்டக நிறுத்தங்கள் கடந்துபோயின.

இதுவரையிலான அயல் பயணத்தில் தனியாக மேற்கொண்ட பேருந்துப் பயணமும் ரயில் பயணமும் இதுதான். இதற்கு முன்பெல்லாம் நண்பர்கள், மாணவர்கள், உறவினர்கள் என யாராவது இருப்பார்கள். இந்தமுறை தனியான தரைவழிப்பயணங்கள். பக்கத்து இருக்கைப் பயணியோடு கொஞ்சம் பேசமுடிந்தது. டொரண்டோ ரயில் நிலையத்திற்கு வந்து சேரன் வழியனுப்பி வைத்தார். பாலோவ்பீல்டில் மகன் வந்து அழைத்துக்கொண்டார். இல்லையென்றாலும் உள்ளூர் வாகன ஏற்பாடுகள் இருக்கின்றன. சமாளித்திருக்கலாம். போனதற்கும் வந்ததற்கும் இடையில் அங்கிருந்த நாட்களில் சந்தித்த நண்பர்களும் நிகழ்வுகளும் டொரண்டோ பயணத்தை இனிதாக்கினார்கள்.

****** 

இரண்டு நாவல் வெளியீடுகள்

டொரண்டோவில் இரண்டு புத்தக வெளியீடுகளும் சேரனோடும் சந்திப்பு முன்பே முடிவானவை. மற்றவையெல்லாம் தற்காலிகமானவை. முதல் புத்தக வெளியீடு 29/07/23/ , ஆ.சி.கந்தராஜாவின் ‘ ஒரு அகதியின் பெர்ளின் வாசல்’ நாவல் குறித்து நானும் நண்பர் சேரனும் விரிவாகப் பேசினோம். முன்னுரை எழுதி நான் கனடாவில் இருந்தேன் என்பதால் கந்தராஜா அழைத்தார். அங்கே டிசே தமிழன் என்ற புனைபெயரில் எழுதும் இளங்கோவையும் நல்ல சிறுகதைகளை எழுதிக்கொண்டிருக்கும் அரங்கவியலாளர் ஜெயகரனையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் இவ்விழாவில் கலந்துகொள்ள வருகிறேன் என்பதை அறிந்து ஜவஹர் வந்தார். 


கடைசிச் சந்திப்பு நடந்து 10 ஆண்டுகளாவது இருக்கும். பாண்டிச்சேரி காலத்தில் அவ்வப்போது சந்திப்போம். கடலூர், நெய்வேலி, விருத்தாசலம் என நடக்கும் கூட்டத்தில் அவரும் இருப்பார். நெல்லைக்குப் போன பின்பும்கூட ஒன்றிரண்டு சந்திப்புகள் உண்டு. ரவிக்குமாரோடு திருநெல்வேலிக்கு வந்தார். ஆனால் இமையம் நாவல்கள் குறித்து ஏதாவது எழுதினால் தொலைபேசியில் பேசுவார். முகநூலிலும் பின்னூட்டம் இடுவதுண்டு. நண்பர் ரவிக்குமார் தலித், மணற்கேணி போன்ற இதழ்களைத் தொடங்கியபோது உடன் இருந்து வேலைகள் செய்தவர் ஜவஹர். நெய்வேலி நிலக்கரிச் சுரங்கப்பொறியாளர். இருவரும் இப்போது டொரண்டோவில் சந்தித்துக் கொண்டோம். அவர் தனது மகன் குடும்பம் இருக்கும் மில்டன் நகரிலிருந்து -டொரண்டோவிலிருந்து ஒரு மணி நேரப்பயணம்- நான் பேசும் கூட்டத்தில் சந்தித்து விடலாம் என்று வந்துவிட்டார். நான் தங்கிய நண்பரின் வீட்டிலேயே அவரும் தங்கிப் பழைய கதைகள் பேசினோம். ஜவஹர் இன்னும் சில காலம் அங்கு இருப்பார். கனடாவின் காட்சிகளையும் தட்பவெப்பத்தையும் அனுபவிக்கலாம். அடுத்த நாள் தீபச்செல்வனின் பயங்கரவாதி நாவல் வெளியீடு வரை இருந்தார்.

தீபச்செல்வனின் பயங்கரவாதி நாவலை அறிமுகப்படுத்தும் கூட்டத்தை நேற்று -ஜூலை 30- ஏற்பாடு செய்தது டொரண்டோ தாய்த்தமிழ் இயக்கம், ஸ்கார்புரோவிலுள்ள எக்ஸ்பர்ட் எஜுகேசனல் செண்டர் என்ற கல்விக்கூடத்தில் நடந்த கூட்டத்தில் அந்நாவல் மீதான எனது ஆய்வுப்பார்வையை முன் வைத்து உரையாற்றினேன். அரங்கு நிறைந்த கூட்டம். வந்திருந்தவர்களுக்கு நூல்களைக் கையளிக்கும் பணியை எனக்கு வழங்கினார் அதன் அமைப்பாளர் விவேகானந்தன் பொன்னையா. கையளிக்கத்தொடங்கிய நிலையில் அங்கு வைக்கப்பட்டிருந்த 60 பிரதிகளும் விற்றுத்தீர்ந்தது.

தமிழ்நாட்டில் நடக்கும் நூலறிமுகக்கூட்டத்திலிருந்து பெரும் வேறுபாட்டைப் புலம்பெயர் நாடுகளில் பார்க்க முடிகிறது. நண்பர்களும் உறவினர்களும் அக்கூட்டங்களின் பார்வையாளர்களாக இருக்கிறார்கள். பார்வையாளர்களில் பெண்களின் எண்ணிக்கை செம்பாதிக்கும் குறையாமல் இருப்பதும் குறிப்பிடப்படவேண்டிய ஒன்று. அத்தோடு ஈழப்போராட்டத்தில் தங்கள் தரப்பு நியாயங்களோடு உடன்பட்ட இலக்கியப்பார்வை கொண்டவர்களாக நினைப்பவர்களும் வருகிறார்கள். வந்தவர்கள் ஒவ்வொருவரும் நூலைக் கையில் வாங்கிச் செல்பவர்கள். வாங்குபவர்கள் தரும் தொகை நூலின் தொகையைவிடவும் கூடுதலாகவே பெரும்பாலும் இருக்கிறது. இந்த வேறுபாட்டைக் குறித்து விரிவாக எழுதவேண்டும். பேசவேண்டும்.

தோழமை உண்டாக்கும் பரவசம்

என்னை ஏற்று அழைத்துச் சென்று தங்க வைக்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டவரால் வர இயலாமல் போனநிலையில் அந்நண்பருக்காக ஏற்றுக் கொண்டு வந்தவர் அவர். நான் இறங்கிய ஸ்கார்புரோ நகர் மையப்பேருந்து நிலையத்தில் குடையோடு வந்து, தனது காரில் ஏற்றிச் சென்று தனது வீட்டில் தங்க வைத்தார். அன்றிரவு நடந்த கூட்டத்திற்கு முன் பேசத்தொடங்கி, முன்னொரு காலத்தில் முகநூல் நண்பர் எனத் தெரிந்து கொண்டோம். ஈழம்/இலங்கை குறித்த எனது பதிவுகளில் என்னோடு விவாத்திருக்கிறார் என்று தெரிய பேச்சு , உரையாடலாக மாறித் தனது ஈபிஆர்எல்எப் அனுபவங்கள்,இந்தியாவில் பயிற்சி, கேரளத்தில் இருந்தது எனக் கதைக்கக்கதைக்க கதைகள் வளர்ந்துகொண்டே இருந்தன. இரண்டு நாளும் இரவு பன்னிரண்டு மணிவரையும் கதைத்தோம். சிங்கள் அரசின் பாகுபாட்டு நடைமுறைகள், வன்முறைத் திட்டங்கள், ஈழப் போராளி இயக்கியங்களின் அரசியல், கொலை மோகம் எனப் பேசியவற்றைப் படித்து தெரிந்துகொள்ளச் சில ஆண்டுகள் வேண்டும்.

சின்ன சிவம் என்ற அவரின் மனைவிக்குத் தமிழ் தெரியாது; கொஞ்சம் புரிந்துகொள்கிறார்; சீனப்பெண். வீட்டின் பின்னால் இருக்கும் தோட்டத்தில் பூசனி, சுரைக்காய், தக்காளி, மிளகாய், கத்தரிக்காய் எனக் காய்கறிகளும் பூச்செடிகளும் அழகாய் நிற்கின்றன. அதற்கு இணையாக வீட்டின் முன்புறம் மரங்களும் செடிகளும்.. பெயர் தெரியாத- முகம் தெரியாத மனிதன் ஒருவனோடு அரைமணி நேரத்தில் நட்பு உண்டாகிப் பரவசம் உண்டாக்கும் என்றால் இருவருக்கும் பொதுவாகக் கருத்துகளும் சிந்தனையோட்டமும் தோழமை உணர்வும் உண்டாகவேண்டும்.இன்று சந்திக்க வேண்டிய நண்பர்களிடத்திற்கு அவரே தனது காரில் கொண்டுவந்தார். இடையில் தமிழ்க்கடைகள் இருக்கும் பேரங்காடி வளாகத்தையும் காட்டிவிட்டுவிட்டுச்சென்றார். திருப்பவும் அவர் வீட்டில் தங்குவதற்காக டொரண்டோ செல்லவேண்டும். 

பயணக்காதலன் இளங்கோ

மனிதர்கள் மேற்கொள்ளும் பயணங்களுக்குப் பலவிதமான நோக்கங்கள் உண்டு. புனிதப்பயணங்கள், சாகசப்பயணங்கள், இடங்களைப் பார்த்தலும் களித்தலுக்குமான பயணங்கள் என்பதைத் தாண்டி வெவ்வேறு நிலவியலுக்குள் வாழும் மனிதர்களை அறிதலை நோக்கமாகக் கொண்டு பயணித்துக் கொண்டே இருக்கும் நபர் இளங்கோ. டி.சே.தமிழன் என்பதாகவும் அறியப்படும் அவரது புனைகதைகளின் வாசகனாகவும் அவரை அறிவேன்.

ஆ.சி.கந்தராஜாவின் நாவல் வெளியீட்டில் பார்த்த இளங்கோ, நான் தங்கியிருக்கும் இடத்திற்குப் பக்கத்தில்தான் தனது வீடு இருப்பதாகச் சொன்னார். அடுத்த நாள் காலை வந்து சந்திப்பேன். காலை உணவுக்கு என்னோடு வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதன்படியே வந்தார். வந்தவரோடு சென்றபோது ஒண்டாரியோ ஏரிக்கரையினை ஒட்டி இருக்கும் ஒரு பெரும்பூங்காவிற்கு அழைத்துச் சென்றார். காலைக்காட்சிக்கான பக்கம் என்பதாக அழைக்கப்படும் பகுதியில் இருக்கும் கில்டு பூங்காவும் (Guild Park & Gardens) தோட்டமுமான அந்த இடம் முதல் நாள் பெய்த மழையின் குளிர்ச்சியோடு இருந்தது. புதிதாகத் திருமணம் முடிக்க இருக்கும் இணையர்களின் படப்பிடிப்புகள் நடக்கும் இடமாகவும் இருந்தது அந்தப் பூங்கா. நாடக அரங்குகள், இசைக்கச்சேரிகள் நடக்கும் அரங்கத்தையும் உள்ளடக்கிய பூங்காவைக் காட்டினார் இளங்கோ. 

டொரண்டோவில் பார்க்க வேண்டிய பூங்காங்கள் பல இருக்கின்றன என்றாலும் வனமாகவும் தோட்டமாகவும் அரங்கக் கூடமாகவும், சிற்பங்களின் காட்சியாகவும் இருந்த அந்த இடத்தை நண்பர் இளங்கோவோடு சேர்ந்து பார்த்தது இந்தப் பயணத்தில் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. காலையில் வந்த நான் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் சிவாவுக்கும் நண்பர் என்பதால் பலவற்றையும் பேசிக்கொண்டிருந்த நினைவுகள் எப்போதும் இருக்கும்.


இரண்டு நாட்களுக்குப் பின்னர் மூன்றாவது நாள் இரவில் எங்கள் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற வெட்டிவேலுவின் வீட்டில் விருந்தும் தங்கலும். அதற்கிடையில் அபத்தம் இதழில் ஆசிரியர் குழுவினரோடு ஓர் உரையாடல். 

மாலை நேரத்தில் வியாபாரம் சூடுபிடிக்கும் உணவகம் ஒன்றில் மதியம் தொடங்கி மாலை 5 மணிவரை தமிழ் இலக்கியத்தின் போக்குகள், விவாதப்பொருட்கள், கல்வித்துறைப் பார்வைகள், இலக்கிய ஆளுமைகள், தமிழ்நாட்டு அரசியல், ஈழத்தமிழ் அரசியல், சாதியத்தின் நெளிவு சுளிவுகள் எனப்பலவற்றையும் உரையாடலாக நடத்தினோம். அபத்தத்தின் ஆசிரியர் குழுவிலிருந்து அதன் ஆசிரியரான ஜார்ஜும் கறசுறாவும் பங்கேற்றனர்.ஸ்கார்புரோ, ஸ்வெல் சாலைப் பகுதியில் நடக்கும் அந்த உணவகம் நடத்தும் கற்சுறா வடை, தட்டுவடை, மீன்கறி என நாவுக்கு ருசியான உணவை வழங்க,

உற்சாகமான உரையாடல் நடந்தது. அபத்தம் இதழில் அந்த உரையாடல் இடம் பெறும். அங்கு கொண்டுவந்து விட்டுவிட்டுப் போகும் பொறுப்பு வரை சின்னசிவா எடுத்துக்கொண்டார்.

வெட்டிவேலு: கனவு நிறைவேற்றம்
 
கற்றலின் நோக்கம் வாழ்க்கையின் தேவையை நோக்கிய நகர்வுகளுக்கான அடித்தளம் என்பது பொது நடைமுறை. ஆனால் சிலருக்கு அப்படியல்ல என்பதை உணர்த்திய மனிதர் முனைவர் வெட்டிவேலு. கடந்த மாதம் நடந்து முடிந்த பட்டமளிப்பு விழாவில் அந்தப் பட்டத்தைப் பெற்றுவிட்டார். இப்போது அவருக்கு வயது 72. முழுநேரப்படிப்பாக - முனைவர்பட்ட ஆய்வை இந்த வயதில் செய்தவர் அவராகவே இருப்பார்.

நான் பணியாற்றிய மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலிருந்து ஒய்வு பெறுவதற்கு இரண்டு ஆண்டுகள் இருந்தபோது அவர் நெல்லைக்கு வந்து நேரில் சந்தித்தார். ”தமிழில் கலாநிதிப் பட்டம் பெற வேண்டும் அது என் கனவு என்றார்” அந்தக் கனவுக்குப் பின்னால் அவருக்கு மாதிரியாக இருந்தவர் பேரா.கலாநிதி கா.சிவத்தம்பி. மாணவப்பருவத்தில் அவரது புலமையைக் கண்டு காதல் கொண்டு அலைந்தவர். ஆனால் அவர் அங்கு படித்தது தமிழ்ப் பட்டமல்ல. இலங்கை அரசாங்கத்தில் நீர்ப்பாசனத் துறையில் பணியாற்றி, போரினால் புலம்பெயர்ந்து கனடாவில் டொராண்டோவில் வாழ்ந்து கொண்டிருப்பவரைத் தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகத்தில் தமிழில் ஆய்வு செய்யும் ஆய்வாளராகச் சேர்ப்பதில் தாண்டவேண்டிய நடைமுறைகள் ஏராளம். முதல் தேவை தமிழில் முனைவர் பட்டம்பெற தமிழ் முதுகலைப் படிப்பில் இரண்டாம் வகுப்பு மதிப்பெண்களுடன் முடித்திருக்கவேண்டும். நுழைவுத் தேர்வு எழுதவேண்டும். தேர்ச்சிபெற்று நெறியாளர் கிடைத்து ஆய்வைத்தொடரவேண்டும்.

இவ்வளவையும் சொன்னபின்பு எல்லாம் செய்யலாம் என்றார். பேரா. அறவாணன் காலத்தில் டொரண்டோவில் தொடங்கப்பட்ட தமிழ் இளங்கலைப் படிப்பில் சேர்ந்து பட்டம் பெற்றுள்ளேன் என்று சொல்லிவிட்டு, அங்கே கவி.சேரன், கலாநிதி சுப்பிரமணிய அய்யர் எல்லாம் எனக்குக் கற்பித்தார்கள் என்று சொன்னார். முதுகலைப்படிப்பில் தொலைதூரக்கல்வி முறையில் தமிழ்நாட்டிலிருந்து பெற்றுள்ள சான்றிதழ்களையும் காட்டினார். அடிப்படைத்தகுதி இருந்தது. நுழைவுத்தேர்வுக் காலத்தைச் சொல்லி விண்ணப்பியுங்கள் என்று அனுப்பினேன். தமிழ்நாட்டில் தங்கியிருந்து நுழைவுத்தேர்வை எழுதித் தேர்ச்சியும் பெற்றார். இதற்கிடையில் இப்படியொருவரை எடுப்பதில் இருக்கக் கூடிய வயதுப் பிரச்சினை, அயல்நாட்டவருக்கான கட்டணமுறை போன்றவற்றை நிர்வாகத்தோடு விவாதித்து உருவாக்கினேன். எல்லாம் முடிந்து வரும்போது அவருக்கு நெறியாளராக இருக்கமுடியாத நிலை. தான் ஓய்வுபெறுவதற்கு ஓராண்டுக்கு முன்னால் வரை ஆய்வாளரைத் தேர்வு செய்துகொள்ளலாம். ஓய்வுக்குப்பிறகும் அவருக்கு வழிகாட்டி முடிக்கலாம். ஆனால் கடைசி ஓராண்டில் எடுக்க முடியாது. அதனால் எமது துறையில் அடுத்த துறைத்தலைவராக வர இருந்த முனைவர் ஞா.ஸ்டீபனிடம் பேச,  வெட்டிவேலுவுக்கு நெறியாளராக இருக்கச் சம்மதித்தார். 

ஞா.ஸ்டீபன் நாட்டார் வழக்காற்றியல் துறை வல்லுநர் என்பதால் அதற்கேற்பத் தலைப்பைத்தேர்வு செய்யச் சொன்னேன். ஆனால் வெட்டிவேலு தனது ஆய்வுப் பொருண்மையாக - தலைப்பாக எடுக்க விரும்பியது கனடாவின் பின்புலத்திலிருந்து வந்த காலம் இதழ் குறித்ததாக இருந்தது. இந்தத்தலைப்பில் ஆய்வு செய்வதற்கு நான் வழிகாட்டுவது நல்லது என்று நினைத்தார். அது இயலாத நிலையில் இருவரையும் ஒருசேரப் பேசவைத்து அதே தலைப்பில் செய்யலாம் என்று முடிவானது. ஸ்டீபன்   முழுமையாக நெறிப்படுத்தி அவரது கனவை - கலாநிதி/முனைவர் வெட்டிவேலு ஆக்கியுள்ளார்.  வெட்டிவேலு நான் கனடாவுக்கு வருவது தெரிந்து தீபச்செல்வன் நாவல் வெளியீட்டுக்கு வந்தார். அடுத்த நாள் அவரது வீட்டுக்கு வரவேண்டும் என்றார். ஒரு நாள் எங்கள் குடும்பத்தோடு இருக்க வேண்டும் என்றார். அழைப்பை ஏற்றுப் போனால், அவரது வீட்டில் இருக்கும் மனைவி, மகன், மருமகள் என எல்லோருக்கும் பழைய கதைகளையெல்லாம் சொல்லி வைத்திருக்கிறார். அவருடைய மகன்கள் வெவ்வேறு இடங்களில் இருப்பதாகவும் இன்னும் திருமணமாகாத மகனோடு அவர்கள் இருப்பதாகவும் சொன்னார். என்னை அழைத்துப் போனது மூத்த மகன் வீட்டிற்கு. இரண்டு பேரப்பிள்ளைகள் அங்கே இருக்கிறார்கள். தமிழ் பேசினால் புரிகிறது. திரும்பப்  பதில் சொல்ல ஆங்கிலம் தான். பேரப்பிள்ளைகளுக்கு முனைவர் வெட்டிவேலு தமிழ் சொல்லித்தருகிறார். இனி டொரண்டோவில் இயங்கும் தமிழ்ப்பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப் போவதாகச் சொன்னார்.

தந்தையின் கனவை – கலாநிதி கனவை நிறைவேற்றப் பெரும்பணத்தைச் செலவழித்திருக்கிறார் பிள்ளைகள். இந்தியாவில் ஒருவர் முனைவர் பட்டம் பெறுவதற்கு ஆகும் தொகையைப் போலச் சில பத்து மடங்கு செலவாகியிருக்கும். இந்திய அரசாங்கத்தின் புலனாய்வுக் காவல் துறையும் அந்நிய மனிதர்களைக் கையாலும் குடிவரவுத்துறையினரும் அவருக்குக் கொடுத்த தொல்லைகள் சொல்லி மாளாதவை. என்னிடம் சொன்னவை மிக க்குறைவு. சொல்லாத தையெல்லாம் அவர் எழுதினால் பெருங்கதையாக இருக்கும்.   தனது தந்தையின் கனவை நிறைவேற்றுவதற்கு உதவிய பேராசிரியர் என்ற வகையில் என் மீது அன்பு மழை பொழிந்தார்கள். முன்னிரவு இந்திய உணவகத்திலும் அடுத்த நாள் காலையில் அவரது வீட்டிலுமாக இருந்து உணவுண்டு திரும்பிய படங்கள் இவை.
  

  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்