தொலையாமல் அலைதல்- ஒட்டாவாவின் குறுக்கும் நெடுக்கும்


பூக்கும் தருணங்கள் தொடங்கிவிட்டன

கனடாவுக்குள் சரியாக 30 நாட்கள் இருந்தேன். அமெரிக்காவின் நியுயார்க் மாநிலம் பப்பல்லோ விமான நிலையத்தில் இறங்கிச் சாலை மார்க்கமாக ஒட்டாவா நகருக்குப் போனேன். போகும் பாதையெங்கும் வயல்களும் தோட்டங்களும் வனங்களும் நீர்ப்பரப்புகளுமே கண்ணை நிரப்பின. போகும் பாதையில் நிரம்பிய பச்சையம் மொத்தப் பயணத்திலும் கூடவே இருந்துவிட்ட தாகத் தோன்றுகிறது. ஒருவேளை ஒட்டாவாவுக்குப் பதிலாக டொரண்டோவில் இறங்கியிருந்தால், இப்படித் தோன்றியிருக்காதோ என்று மனம் நினைக்கிறது. வானுயர்ந்து நின்றிருக்கும் கட்டடங்களே மனதை முதலில் ஆக்கிரமித்திருக்கும். பேரங்காடிகள், காட்சிக்கூடங்கள், அருங்காட்சியகங்கள், கல்விக்கூடங்கள், வீடுகள், அலுவலகங்கள், சாலையின் பரப்புகள், போக்குவரத்துகள், கார்கள், டிராம்கள் என நவீனத்துவ அடையாளங்கள் பிடித்துக்கொண்டிருக்கும்.
இந்த முறை அப்படி நடக்கவில்லை. அதற்குப் பதிலாக கனடாவின் விவசாயம் ஈர்ப்பைத் தருவதாக மாறின. நுழைந்த ஜூலை 5 இல் மரங்களும் செடிகளும் பசுமையாக மாறியிருந்தன. தோட்டக்காடுகளில் இளம் செடிகளே நின்றன. மக்காச்சோளம் தண்டுவிட்டு வளர்ந்து நின்றன. தினசரி நடைபோனபோது அவற்றின் வளர்ச்சிக் கண்கூடாகத் தெரிந்தன. கனடாவின் தேசிய மரபான மேபல் கூடப் பூத்திருக்கவில்லை. ஆனால் பச்சையம் தோய்ந்து நின்றன. பெர்ரிச் செடிகளில் காய்கள் முற்றத்தொடங்கியிருந்தன. அதன் வகைகளான ரோஸ்பெர்ரி, புளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, பிளாக்பெர்ரி என்பனவோடு, கரண்ட் என அழைக்கப்படும் பழவகையில் இருக்கும் வெள்ளை, சிவப்பு, கறுப்பு வண்ணப் பழங்களும் காய்ப்பு நிலையிலேயே இருந்தன. எல்லாக்காய்களையும் முற்றிப் பழமாகும் நிலையில் பறித்துப் பாதுகாக்கிறார்கள். நம் ஊரில் இருக்கும் தட்டாம் காய் போன்ற நீளமான காய்களும் உருளைக்கிழங்கு, ஆப்பிள் போன்றனவும் அப்போது பூக்கவில்லை. இனிமேல் தான் பூக்கும். அவை பூக்கும்போது வசந்தம் வந்துவிட்ட தாக நினைப்பார்கள்.

தங்கியிருந்த கனட்டா சாலையோரங்களில் ஒவ்வொரு வீட்டிலும் பூச்செடிகள் நின்றன. அப்போது பூக்காமல் தான் இருந்தன. பெரும்பாலும் பூச்செடிகள் தொட்டிகளில் தான் வளர்க்கப்படுகின்றன. சிறுதொட்டிகளிலும் பெருந்தொட்டிகளிலும் நகர்த்தி வைக்கத் தக்க மரப்பலகைகளின் மேல் வைக்கப்பட்டுள்ளன. கனடாவிலிருந்து ஆகஸ்ட் 5 கிளம்பும் திட்டம் இருந்த நிலையில் காலையிலும் மாலையிலும் நடந்தபோது வீட்டுகளின் முன்னால் பூக்கத்தொடங்கியிருக்கும் பூக்களைப் பிடித்துக்கொண்டே வந்தேன். பனிச் சாரலும் கட்டிகளும் விழத்தொடங்கும்போது அவையெல்லாம் பத்திரமாக வீட்டிற்கு பின்னிருக்கும் மூடிய அறைகளுக்குள் போய்விடும். அநேகமாக இன்னும் ஒருமாதம் தான் அவற்றிற்கு வெளிப்புற வாசம் செப்டம்பர் கடைசியில் அல்லது அக்டோபர் தொடக்கத்தில் வெள்ளைப்பூக்களாய்ப் பரவும் பனியில் இவையெல்லாம் தாக்குப் பிடிக்காது. வீட்டின் கூரைகளும் சாலையின் ஓரங்களும் மரங்களின் கிளைகளும் என எங்கும் வெள்ளைப் பாளங்கள் உருவாகிவிடும். அந்தக் காட்சிகளைக் கனடாவில் பார்த்ததில்லை. போலந்தில் இருந்தபோது பார்த்திருக்கிறேன்.

கூட்டாஞ்சோறுக் கொண்டாட்டங்கள்


 வாரக் கடைசியை ஒரு காட்டுப்பகுதியில் கூட்டாஞ்சோறுடன் கொண்டாடுவதாகத் தீர்மானித்துச் சிற்றுலா இடங்களைத் தேடியபோது ஒட்டாவாவை விட்டு வெளியே போகலாம் என்று முடிவானது. அந்த முடிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்திற்குப் பெயர் பிட்ஜ்ராய். மகன் வீட்டிலிருந்து 50 கிமீ. ஒட்டாவா நகருக்குள் போகாமல் சுற்றுச்சாலையில் போகும்போது வடக்குக் கனட்டா வழியாகப் போனோம். கனடாவின் தகவல் தொழில் நுட்பப்பூங்காக்கள் நிரம்பிய அந்தச் சாலையைத் தாண்டிய உடனே தோட்டப்பகுதியும் கிராமப்புறச்சூழலும் ஆரம்பிக்கிறது.

அந்தத்திட்டத்தில் எங்களோடு இணைந்தது 4 தமிழ்க் குடும்ப உறுப்பினர்கள். பெரும்பாலும் கனடாவுக்குத் தகவல் தொழில்நுட்பக்குழுமங்களில் பணியாற்ற வந்துள்ளவர்கள். அவர்களின் பிள்ளைகள். பேரப்பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ள வந்த பெற்றோர்கள் என எங்கள் குழுமமே நான்கு கார்களில் 20 பேர் இருக்கும். இதுபோலச் சில நூறு கார்களில் வந்த சில நூறு குடும்பங்களின் ஒருநாள் கொண்டாட்ட இடமாக இருந்தது பிட்ஜ்ராய் சிற்றுலா மைதானம்.

காட்டுக்குள் செல்வதற்கு அனுமதி இலவசம். ஆனால் கார்களை நிறுத்த வாடகை செலுத்தவேண்டும். ஒரு காருக்குக் கட்டணம் 18 கனடியன் டாலர். ஒருநாள் முழுவதும் நிறுத்திக் கொள்ளலாம். நாங்கள் போய்ச் சேர்ந்த நேரம் மதியம் 12. அப்போது 100 க்கும் அதிகமான கார்கள் நின்றிருந்தன. 3 மணிக்கெல்லாம் இன்னும் 200 க்கும் அதிகமான கார்கள் வந்தன. வந்தவர்கள் எல்லாரும் மதிய உணவுப்பொதிகளோடும், உணவு தயாரிப்புக்கான பண்ட பாத்திரங்களோடும் உட்காரவும் படுக்கவும், படகோட்டவும் நீரில் மிதக்கவும், என அனைத்துக்கும் தயாராக வருகிறார்கள்.

அந்தக் கூட்டத்திற்குத் தேவையான அடிப்படை வசதியாக 6 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. வரிசையில் நின்று அவற்றைப் பயன்படுத்துகிறார்கள். பத்துப்பேர் வரை உட்கார்ந்து உணவுண்ணும் வகையிலான மரப்பெஞ்சுகள் கிடக்கின்றன. அவற்றை தங்கள் விருப்பம் போல எடுத்துப் போட்டு இடங்களைத் தேர்வுசெய்துகொள்கிறார்கள். தேவைப்படுகிறவர் களுக்கு வாடகைக்குப் படகுகள் வாடகைக்குத் தரும் வசதியும் இருக்கிறது.

தனிக்குடும்பமாக இல்லாமல் நண்பர்கள் குடும்பங்கள், உறவினர்கள் குடும்பங்கள் எனச் சேர்ந்து கூட்டாஞ்சோறு சாப்பிடுகிறார்கள். வீட்டில் சமைத்து எடுத்து வருகிறார்கள். இறைச்சியைச் சுட்டுக்கொள்ளும் வசதிகள் அங்கே இருக்கின்றன. சமைத்துக்கொள்வதற்கான கரி அடுப்புகள் இருக்கின்றன. கரியும், இறைச்சியும் கொண்டுவந்தவர்கள் அடுப்பைப் பற்றவைத்துச் சமைக்கிறார்கள்.ஒன்றாகச் சேர்ந்து சாப்பிடுகிறார்கள். குடிக்கிறார்கள்; குளிக்கிறார்கள். விளையாடுகிறார்கள். புத்தகங்களோடு வந்தவர்கள் படிக்கிறார்கள்.

அந்தச் சிற்றுலா மைதானத்தின் முடிவில் பெருமணல் பரப்பு இருக்கிறது. அதனை அடுத்து சிலுசிலுத்து ஓடுகிறது நதி. இறங்கிக் குளிப்பதற்கான அடையாளப்படுத்தப்பட்ட பகுதி தனியாகவும் மிதவைகள், படகுகள் செல்லும் பகுதிகள் தனியாகவும் காட்டப்பட்டுள்ளன. மீன்படிப்பவர்களுக்குத் தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

வனமும் ஆறும் நீர்த்தேக்கமும் கொண்ட இதுபோன்ற மைதானங்கள் அந்தப் பகுதிக்குள் ஒன்றிரண்டு உருவாக்கப்பட்டுள்ளன. காலாற நடக்கலாம். நடப்பதற்கான பாதைகள் அடையாளம் காட்டப்பட்டுள்ளன. அடர்த்தியான காட்டுக்குள் நடக்கும் அனுபவத்தைப் பெற நடந்துகொண்டே இருக்கலாம். அவையில்லாமல் இரவில் தங்கிச் செல்ல விரும்புபவர்களாக தங்கும் பகுதியில் இன்னும் சில வசதிகள் இருக்கின்றன. தற்காலிகக் கூடாரங்கள் அமைத்தோ, காரில் இழுத்துவரப்படும் அறைகளை அங்கே நிறுத்தியோ இரவில் தங்கிக்கொள்கிறார்கள். அதற்காகவும் பிட்ஜ்ராய் காட்டுக்குள் 20 க்கும் மேற்பட்ட இடங்கள் இருக்கின்றன. முன்பதிவு செய்துகொண்டு வந்தால் தங்கிக் களித்துக் கொண்டாடிச் செல்லலாம்.


சிற்றங்காடி வளாகங்கள்-

கனடாவில் ஒருமாதம் இருந்துவிட்டுத் திரும்பியபின் அந்த வித்தியாசம் பளிச்சென்று தெரிகின்றது. அமெரிக்காவை அப்படியே பின்பற்றும் நாடாக இல்லை கனடா.

பல்லடுக்குப் பேரங்காடிகள் கனடாவின் பெருநகரங்களான ஒட்டாவா, டொரண்டோ, மாண்ட்ரியால் போன்றவற்றில் இருக்கின்றன. அதே நேரம் கனடாவின் சிறுநகர்களில் அவை இல்லை. அதற்குப் பதிலாக ஒரே தளத்தைக் கொண்ட சிற்றங்காடி வளாகங்களே இருக்கின்றன. சிறுநகரங்களைப் போலவே பெருநகரின் புறநகர்ப் பகுதிகளிலும் சிற்றங்காடி வளாகங்கள் தவறாமல் இருக்கின்றன.

பெரும்பாலும் தரத்தளக்கடைகளாக இருக்கும் சிற்றங்காடி வளாகங்கள் ‘ப’ எழுத்து வடிவத்தில் மூன்று பக்கங்களைக் கொண்டனவாக இருக்கின்றன. அல்லது ‘ட’ எழுத்தைப்போல இரண்டு பக்கங்களில் வரிசையாக நிற்கின்றன. 300 சதுர அடி முதல் 500 சதுர அடி வரை இருக்கும் கடைகளின் தொகுதியாக இருக்கின்றன. 10 முதல் 20 கடைகள் கொண்ட வளாகங்களுக்குள் வாகனங்கள் உள்ளே நுழைந்து வெளியேறும் விதமான கட்டமைப்புகள் கட்டாயம்.

இவ்வகைச் சிற்றங்காடிகளில் அடிப்படைத் தேவைகளான உணவுக்கூடங்கள் இருக்கின்றன. அவற்றில் இருந்து உண்ணும் வசதிகள் குறைவு. பெரும்பாலும் முன்பதிவு செய்தோ, வாசலில் இருக்கும் பதிவு எந்திரத்திலோ பதிவு செய்து வந்து வாங்கிச் செல்கிறார்கள். அதேபோல் மருந்துக்கடைகள் தவறாமல் இருக்கின்றன. ஏதாவது ஒரு மருத்துவரின் பார்வைக்கூடமும் ஆலோசனை நிலையமும் இருக்கின்றன. ஒவ்வொரு உடல் அலங்காரக் கூடங்கள் - குறிப்பாகச் சிகை அலங்காரமும் நகப்பூச்சு அலங்காரம் போன்றன தனித்தனியாக இருக்கின்றன. அதேபோல் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு அளிக்கவேண்டிய ரசீதுகள், பணங்கட்டுதல், வரிகட்டுதல் போன்றவற்றைச் செய்து தரும் சேவை அலுவலகங்களும் இருக்கின்றன. சிறார்களும் இளையோரும் விளையாடும் காட்சிக்கூட விளையாட்டுகளான வீடியோ விளையாட்டுகளைத் தரும் கூடங்களும் சிற்றங்காடிகளில் இடம்பெற்றுள்ளன. தவறாமல் ஒரு பேக்கரியும் சமையல் கூடச் சரக்குகளான மசாலா, காய்கறிகள், மீன்கள், இறைச்சிக்கூடங்கள் எனச் சில்லறை விற்பனையகங்களும் சிற்றங்காடி வளாகங்களில் இருக்கின்றன. ஒரு கூடத்தில் மதுவகைகள் விற்கப்படுவதுண்டு. வாகனங்களுக்கு எரிபொருள் நிரம்பும் சிறிய கடைகளும் உள்ளன.

மாணவர்களுக்குரிய தாள்கள், பேனாக்கள், பள்ளிப்பொருட்கள் வழங்கும் கடைகளில் நகலெடுத்தல் அச்சிடுதல் போன்ற வசதிகள் இருக்கின்றன. ஏறத்தாழ நம்மூரில் இருக்கும் ‘ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்’கள் அவை. ஆனால் சாலையின் ஓரத்தில் வரிசையாக இல்லாமல் தனி வளாகமாக ஒதுங்கியிருக்கின்றன. வாகன நிறுத்தம், கழிப்பறை வசதி போன்றன இல்லாமல் இவ்வகை வளாகங்கள் இருப்பதில்லை. இவ்வகை வளாகங்கள் அமைப்பதற்கான இடத்தை நகர நிர்வாகம் ஒதுக்கித் தந்துள்ளது. அதுவே கட்டி வாடகைக்கும் விட்டுள்ளது. இவ்வகைச் சிற்றங்காடி வளாகங்களைப் போலந்திலும் பார்த்துள்ளேன். போலந்தில் மட்டுமல்லாமல் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் எல்லாவற்றிலும் இவ்வகைச் சிற்றங்காடிகள் இன்னும் இருக்கின்றன.

டொரண்டோவில் இவ்வகைச் சிற்றங்காடிகளை உருவாக்கியுள்ள ஈழத்தமிழர்கள் முதலாளிகளாகவும் பணியாளர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் அதிகம் இருக்கும் ஸ்கார்புரோவில் உள்ள சிற்றங்காடி வளாகங்கள் பலவற்றிலும் பல்லின, பல்தேச அடையாளங்களோடு பணியாளர்களும் கடைகளும் உள்ளன. அங்கிருந்த ஒரு வளாகத்தில் ”எல்லாம் ஒரே இடத்தில்” என்பதுபோல ஒரு உணவு வளாகத்தைப் பார்த்தேன். அங்கிருக்கும் சமையல் கூடங்களில் ஆசிய, ஆப்பிரிக்க, ஐரோப்பிய, அமெரிக்க வாசனைகள் கொண்ட உணவுப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. கண்டங்களுக்குள்ளும் தனிச்சுவைகொண்ட இட்டாலியன், அரேபியன், பிரெஞ்சியன், ஜெர்மானியன், சைனிஷ், கொரியன், மெக்ஸிகன், இந்தியன், இலங்கைக்குள் கொழும்புச் சுவை, யாழ்ப்பாணச்சுவை என எல்லாம் கிடைக்கின்றன. கனடாவின் வணிகப்பண்பாட்டில் சிற்றங்காடிப் பண்பாடும் விவசாயப் பொருட்களை நேரடியாகக் கொண்டுவந்து விற்கும் அங்காடிகளும் முக்கிய அடையாளமாக இருக்கின்றன.

இப்படியான சிற்றங்காடி வளாகங்கள் அமெரிக்கப் பெருநகரங்களின் புறநகர்களில் இல்லை. அமெரிக்காவில் சிறுநகரங்களே குறைவாக இருக்கின்றன. அங்கிருக்கும் நகரங்கள் ஒவ்வொன்றும் பெருநகரங்கள் தான். பெருநகரங்களின் வணிக வளாகங்கள் ஒவ்வொன்றும் ஆகப்பெரும் வளாகங்களாகவே இருக்கின்றன. சில ஆயிரம் சதுர அடி கொண்ட கடைகளின் தொகுதியான ‘ மால்’ களே அமெரிக்கர்களின் விருப்பமாக இருக்கின்றன. அதன் வணிகப்பண்பாட்டைப் பெரும்பேரங்காடிப் பண்பாடாகவே சொல்லலாம். சில ஆயிரம் கார்கள் நிறுத்தக்கூடிய பல்லடுக்குக் கார் நிறுத்தவளாகத்தோடு விரிகின்றன.

சேகரிப்புத்தொகுப்பு

புலம்பெயர்ந்து கனடாவில் வாழும் ஈழத்தமிழ் மக்கள் அந்நாட்டின் தவிர்க்கமுடியாத சமூகக்குழுவாக மாறிவருவதைப் பரவலாகப் பார்க்கமுடிகிறது. தமிழ் அடையாளத்தைத் தக்கவைக்கும் நோக்கில் வழிபாடு, கொண்டாட்டம், சடங்கு எனப்பண்பாட்டு வெளிகளில் வெளிப்பட்ட காலத்தைத் தாண்டியிருக்கிறார்கள். அங்கிருக்கும் கல்வி நிறுவனங்களில் மாணவர்களாக நுழைந்து கற்றுத்தேறிய தலைமுறையினர் திறன்வாய்ந்த பணிகளில் சேர்ந்துள்ளர். தனியார் பல்கலைக்கழகங்களில் இருக்கும் அறக்கட்டளைகளுக்கு நன்கொடை வழங்கித் திறன் வாய்ந்த மாணாக்கர்களுக்குக் கல்வி வாய்ப்பை உருவாக்கித் தருகிறார்கள். தமிழுக்கெனத் தனி இருக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

வேளாண்மைக்கு வாய்ப்பளிக்கும் கனடிய அரசின் உதவியோடு பண்ணை விவசாயத்தில் ஈடுபடுவதையும் பார்க்கமுடிகிறது. தொடக்கத்தில் சேவைப் பணியாளர்களாகத் தொடங்கிய காலம் முடிந்துவிட்டது. இப்போது அவர்களே பணிவாய்ப்புகளை உருவாக்கித்தரும் உற்பத்தி மற்றும் சேவைத்தொழில் முனைவோர்களாக வலம் வருகின்றனர்.
கனடியப் பெருநகரங்கள் பலவற்றிலும் நிலம்,வீடு வாங்கி விற்கும் தரகுப்பொறுப்பில் அதிக எண்ணிக்கையில் தமிழர்களே உள்ளனர். ஒருமாதம் காலம் தங்கியிருந்தபோது இங்குமங்குமாகப் பயணம் செய்தபோது கண்ணில்பட்ட- காதில் விழுந்த தமிழ் எழுத்துகளும் குரல்களும் தமிழர்கள் உலகத்தமிழர்களாக ஆனதைக் காட்டின. இவற்றையெல்லாம் ஆவணப்படுத்தும் விதமாகத் தகவல் திரட்டுகளை வெளியிடுகிறார்கள். ஒரு நாவல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு இறங்கியபோது என் கையில் தரப்பட்ட இந்நூல் வெறும் தகவல் திரட்டாக மட்டுமில்லாமல், புதிய அறிவியலையும் உலகப்பார்வையையும் சொல்லும் பனுவலாகவும் இருந்தது. இருப்பைப் பதிவுசெய்தல் என்பதைத் தாண்டி பயணத்தின் பரப்பைப் பறைசாட்டுகிறது இத்தொகுப்பு. பெரும்பாலும் டொரண்டோ நகரை மையப்படுத்தியுள்ள இந்நூல் போலப் பல நகரங்களுக்கும் தொகுக்கப்பட வேண்டும்.

தொடர்ந்து எழுதும் பணிகள்

 
ஒரு செய்திப் பத்திரிகையின் தேவைகளை நிறைவு செய்வதற்காக எழுதும் எழுத்துகளில் தகவல்கள் சார்ந்த வெளிப்பாடுகளே அதிகம் இருக்கும். அவ்வெளிப்பாடுகளுக்குத் தற்காலிகத்தன்மையை விலக்கி, நிரந்தரத் தன்மையைத் தரவேண்டுமென்றால் இலக்கியப்பனுவல்களின் வடிவத்தை நாடவேண்டும். அதற்கு முதலில் கைவருவது கட்டுரை வடிவம். அதனையடுத்துக் கதைவடிவம் பயன்படும்.

புதிய செய்திகளைக் கட்டுரை வடிவிலும் பழைய செய்திகளை/ நிகழ்வுகளைக் கதை வடிவிலும் எழுத முடிகிற பத்திரிகையாளர்கள் இலக்கியவாதியின் நிலைக்கு மெல்ல நகர்ந்துவிடுவார். அந்த நகர்வை - தொடர்ந்து செயல்படும் வாய்ப்பைப் பத்திரிகைத்துறைப் பணி உருவாக்கித்தரும் போது அவர் அடையும் மகிழ்ச்சி செய்யும் தொழிலே தெய்வம் என்ற திருப்தியாக மாறிவிடும்

கனடாவின் மாண்ட்ரியால் நகரில் வசிக்கும் வீணை மைந்தனின் நூல்களை அனுப்பிவைத்து, இந்நூல்களின் அறிமுக நிகழ்வொன்றில் கலந்துகொள்ள இயலுமா என்று கேட்டபோது இயலாமல் போய்விட்டது. தமிழ்ச்சினிமாவில் இடம்பெற்ற பாரதியார் பாடல்களின் இடம், அதன் ராகம், பாடியவர்கள் என முழுமையாகத் தொகுத்துள்ள நூல் ஒரு ஆவணம். அதேபோல சந்தித்த மனிதர்களின் ஆளுமைப்பண்பு, சந்தித்த நிகழ்வு குறித்து எழுதியுள்ள இரண்டு நூல்களும் கூட ஆவணத்தன்மைகொண்ட தொகுப்புகளே. இதல்லாமல் மரபுக்கவிதையாகவும் சொல்கதையாகவும் இரண்டு நூல்களை எழுதியுள்ளார் வீணை மைந்தன். வீணை மைந்தனை வாழ்த்துகிறேன்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்