நாங்குநேரி - ஆறாவடுவாகும்

கீழ்வெண்மணி நிகழ்வைக் கவிதையாக்கிய இன்குலாப் ‘இந்த மாதிரிக் கொடுமைகள் இங்கு எங்கும் நடக்கிறது; இன்றும் நடக்கிறது; இதனை யார்வந்து கேட்கிறது” எனத் தனது கையறுநிலையை ஆவேசமாக ஆக்கியிருப்பார். அரசுதான் கேட்கவேண்டும். அரசுதான் தண்டனை தரவேண்டும்.
மனித உயிர்களைத் துச்சமென மதிக்கும் ஆணவத்தைத் தனக்குள் கொண்ட சாதி மனிதர்களின் கூடாரங்களாக நமது கிராமங்கள் மட்டும் அல்ல கல்விக் கூடங்களும் அசைந்து கொண்டிருக்கின்றன. இதை நமது அரசுகளும் அறிவுஜீவிகளும், தன்னலம் தவிர பிறர்நிலையைச் சிறிதும் பார்க்க விரும்பாத நடுத்தர வர்க்கமும் எப்போது உணரப் போகிறார்களோ தெரியவில்லை. இந்த தேசத்திற்கு ஆபத்தைத் தரும் பிரச்சினைகள் அவ்வப்போது தோன்றும் சந்தைப் பொருளாதாரத்தின் வீழ்ச்சி, மின்சாரப் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, தேர்தல் கொண்டாட்டங்கள் போன்றன மட்டும் தான் என அவை கருதிக் கொண்டிருக்கின்றன. நிச்சயம் இவை எல்லாவற்றையும் விட ஆபத்தான பிரச்சினை தீண்டாமையைக் கடைப்பிடிக்கும் சாதி வேறுபாடுகள் என்பதை உணர்ந்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நாங்குநேரி சம்பவம் போலப் பல சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. அதில் ஒன்றாக இப்போதும் நினைவில் இருப்பது சென்னை சட்டக்கல்லூரி வளாகத்தில் நடந்த மோதல் (2008)

நெல்லை நினைவுகள்
 
புதுச்சேரியில் இருந்தபோது 1990 களின் தலித் இலக்கியப் பரவலோடும் பண்பாட்டுத் தளத்தில் ஏற்பட்ட மாற்றங்களோடும் அடையாளப்படுத்திக் கொண்டு செயல்பட்ட நான் திருநெல்வேலிக்குப் போனபின் (1997) அப்படிச் செயல்படும் சூழல் இல்லை என்பதை முதல் ஆண்டிலேயே புரிந்துகொண்டேன். அங்கொரு நாடகக்குழுவை உருவாக்கும் எண்ணமே தோன்றியதில்லை. கல்வி வளாகத்தைத் தாண்டி நடக்கும் எல்லாவற்றிற்கும் பார்வையாளனாக மட்டுமே இருந்துள்ளேன்.
 
துறையில் முதுகலைப் படிப்பு ஆரம்பித்து இக்கால இலக்கியம் என்ற பாடப்பிரிவில் ‘தலித் இலக்கியம்’ ஒரு அலகாகச் சேர்க்கப்பட்டது. அதில் இடம்பெற்ற கவிதை, சிறுகதை, நாவல்களைப் படிப்பித்தபோது சாதியின் இயக்கம், தீண்டாமையின் வெளிப்பாடு, மனிதர்களாக இணைந்து நிற்றல் போன்றவற்றைச் சொன்னபோது வகுப்பில் விவாதங்களே எழாது. மற்ற அலகுகளில் கேள்வி கேட்கும் - விவாதிக்கும் மாணாக்கர்கள் கூட இந்தப் பாடங்களின்போது மௌனத்தையே கடைப்பிடிப்பார்கள்.
 
வகுப்பில் பேசாத மாணவிகளில் சிலர் தங்கள் வீட்டில் எனது வகுப்பு குறித்துப் பேசியிருக்கிறார்கள். குடும்ப உறுப்பினர்களிடம் சொல்லியிருக்கிறார்கள் என்பது எனக்கு வந்த எச்சரிக்கைகள் வழியாக அறிய முடிந்தது. ” வகுப்பில் சாதி வேறுபாடு இல்லை என்றெல்லாம் பேசக்கூடாது” என்று எச்சரித்த குரல்கள் நேரடியாக இல்லாமல், வேறுவேறு நபர்கள் வழியாக வந்தது. என்னில் அக்கறை கொண்ட இலக்கியவாதிகளும் ஆசிரிய நண்பர்களும் யோசனையாகச் சொன்னார்கள். எனது விவாதங்களைத் திசைமாற்ற வேண்டிய நெருக்கடியை உணர்ந்தேன்.
 
பல்கலைக்கழகத்தின் நாட்டுநலப்பணித்திட்டம், மாணாக்கர்கள் கலை விழாக்கள் போன்றவற்றின் பொறுப்பாளனாக இருந்தேன். பேரா.வசந்திதேவி, பேரா. இருந்தபோது சாதிய வேறுபாட்டுணர்வு அதிகம் வெளிப்பட்டதில்லை, அடுத்தடுத்த காலங்களில் மெல்லமெல்ல தலைதூக்கிக்கொண்டே இருந்தன. ஓரிடத்தில் தங்கி நடத்தும் நாடகப்பயிலரங்கு போன்றவற்றில் உருவாகும் பிரச்சினைகள் ஆண் - பெண் பிரச்சினையாக வெளிப்படும். ஆனால் அதற்குப் பின்னால் சாதியப் பிளவு மனம் இருக்கும்.
 
பல்கலைக்கழக வளாகத்தில் மனோ கலைவிழாக்களில் விநோதமான நெருக்கடிகள் எல்லாம் உருவானதுண்டு. துறையின் சார்பில் ஒரு குழுவாக/ அணியாகப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிப்புள்ளிகள் பெறுவதின் மூலம் ஒட்டு மொத்தமாகச் சிறந்த அணி என்று அறிவித்துப் பரிசு வழங்குவோம். அந்தக் குழுப்போட்டிகளில் - குறிப்பாக நடனம், நாடகம் போன்ற குழுப்போட்டிகளில் குறிப்பிட்ட இரண்டு சாதிகளைச் சேர்ந்த மாணவர்கள் இணையாகப் பங்கேற்பதை விரும்புவதில்லை. குழு நடனத்தில் ஒரு ஆண் + ஒரு பெண் என ஆடும் வாய்ப்புகளில் தங்கள் சாதிப் பெண்ணோடு எதிர்நிலையில் இருக்கும் சாதி ஆண் இணையாக ஆடுவதை அனுமதிக்க மாட்டார்கள். வேறு துறையில் இருக்கும் மாணவர்கள் வந்து கலைத்துவிட்டுப் போய்விடுவார்கள். இது முதுநிலை வகுப்பில் இருந்தவர்களின் நிலை.
 
குற்றாலம் சாலையில் இப்போதிருக்கும் வளாகத்தில் முதல் பத்தாண்டுகள் மனோ மாணவர் கலைவிழாக்கள் நடந்தன. நான் 2011 இல் வார்சாவிற்குப் போவதற்கு முன்னால் வரை நடந்த மாணவர் திருவிழா 2012 இல் நின்றுபோய்விட்ட து. நான் திரும்பவும் வந்து அத்தகைய விழாக்களின் முக்கியத்துவம் குறித்து அப்போதிருந்த துணைவேந்தரோடு பேசினேன். நான் பொறுப்பெடுத்து நடத்துகிறேன் என்றேன். ஆனால் ஏன் நிறுத்தினேன் என்ற காரணத்தைச் சொன்னார். கலையரங்கத்திலும் விடுதிகளிலும் உடைக்கப்பட்ட கண்ணாடிகள், பொருட்களின் மதிப்பு சுமார் 10 லட்சம் இருக்கும் என்றார். அப்படியொரு இழப்பைத் திருப்பவும் பல்கலைக்கழகம் தாங்காது. நீங்கள் போய் உங்கள் ஆய்வு வேலையை மட்டும் பாருங்கள் என்றார். 2014 -க்குப் பிறகு அப்படித்தான் கழிந்தது நெல்லைப் பல்கலைக்கழகப் பணிகள். பாடத்திட்டப்படி/ ஆய்வு எல்லைகளுக்குள் செயல்படுவதைத் தாண்டி எதையும் யோசிக்கவில்லை.

இதுவெல்லாம் எனது அனுபவங்கள். எனது மகனும் மகளும் பள்ளிக்கூடத்தில் நடப்பதை வந்து சொல்வார்கள். என் மகன் படித்த பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்தவர்கள், தனிப்பயிற்சி வகுப்பில் மோதிக்கொண்டதால் பள்ளியின் முன்னால் வெட்டிக்கொண்டார்கள். இந்தப் பக்கமும் அந்தப்பக்கமும் பெருங்காயத்தோடு மருத்துவமனைக்குப் போனார்கள். நெல்லை வாழ்க்கை எப்போதும் அச்சம் தங்கும் கிளிக்கூண்டாகவே தோன்றியது.

அடங்க மறுத்தல் என்னும் சொல்லாடல்
 
இந்திய அறிவு என்பது சாதி்யை விவாதிப்பதில் தங்கியிருக்கிறது. எல்லாவகைச் சிந்தனைகளும் வெளிப்பாடுகளும் ‘சாதி’யைச் சொல்லாடல்களாக மாற்றுவதை அகத்திலும் புறத்திலும் மேற்கொள்கின்றன. கொண்டாட்டமாயினும் பெருந்துயரமாயினும் அதன் உள்ளோட்டத்திற்குள் சாதியும் அதன் இயங்குநிலைகளும் இருக்கின்றன. இல்லையென்று நினைப்பது பாவனைகள் மட்டுமே.
சகமனிதனைச் சகித்துக் கொண்டு வேலைகள் செய்வதில் பாரதூரமான வேறுபாடுகள் இருப்பதாக இந்திய மனிதர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். ஜனநாயக அரசின் உறுப்பினர்களாக மாறி எழுபது ஆண்டுகள் ஆன பின்பும் இதுதான் நிலைமை. மக்களை மையப்படுத்தும் ஜனநாயகம் அதன் சாராம்ச குணமான சகிப்பு என்பதை ஏற்றுக் கொண்டவர்களாக ஆக்கவில்லை. அதனை நோக்கிய பயணத்தைக் கூடத் தொடங்கவில்லை. ஜனநாயக அரசின் கல்வி நிறுவனங்கள், கலை இலக்கியம் உள்ளிட்டவைகளை வடிவமைக்கிற பண்பாட்டு நிறுவனங்கள், சட்டம் ஒழுங்கைப் பேணும் காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள், சட்டமன்றங்கள், இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டிருக்கும் ஊடகங்கள் என அனைத்தும் சகிப்பின்மையைக் குற்றமாகக் கருதாமல் அடக்கத்தைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கின்றன. சகிப்பின்மையின் வெளிப்பாடாக இருக்கும் இந்தியர்களிடம் அடக்கம் பற்றிப் பேசுவதில் நுண் அரசியல் செயல்படுகிறது என்பதை ஜனநாயகத்தின் மீது பற்றுக் கொண்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.
பெரும்பான்மை இந்தியர்கள் சகிப்புக்குப் பதிலாக அடங்கிப் போகிறார்கள்; வாழ்தலுக்குத் தேவையான பொருளாதாரத் தேவை ஒரு மனிதனிடம் அடக்கத்தை உருவாக்குவதில்லை. அதற்குப் பதிலாக இயலாமையை உருவாக்கும். இயலாமை அமைதியின்மையை உருவாக்கும். அமைதியின்மை கலகத்தை அல்லது புரட்சியை உருவாக்கும். ஆனால் இந்தியர்களிடம் இருப்பது இயலாமை அல்ல; அடக்கம். இந்த அடக்கம் தானாக உருவாவதில்லை. நேர்மறையான குணமாக சித்திரிக்கப்பட்டு உருவாக்கப்படுகிறது. அடக்கத்தை உருவாக்குவதில் எல்லா மதங்களும் விருப்பம் உடையன என்றாலும் இந்து சமயத்தின் விருப்பம் அலாதியானது. சமய நடவடிக்கைகளைத் தனிமனித வெளிகளில் மட்டுமே நிகழ்த்திக் கொண்டிருக்காமல் பொது வெளிக்குள் நிகழ்த்திப் பார்க்கும் வடிவங்களைக் கொண்டது. நம்பிக்கைகள், சடங்குகள், பலியிடல், நிவர்த்திக்கடன், விழாக்கள், களியாட்டங்கள், என எல்லாவற்றையும் தனிமனிதனின் அந்தரங்கமாக வைக்காமல் குடும்பம், தெரு, கிராமம், பங்காளிகள், சுற்றம் சூழ எனக் கூட்டத்தினருடன் நிகழ்த்துவதையே வலிறுத்துவது அதன் குணம்.சமய நம்பிக்கை தனி மனிதனின் ஆன்மீகத் தேடல் எனச் சொல்லிக்கொண்டே பொதுநிகழ்வை வலியுறுத்துவதும், பங்கேற்கச் செய்வதும் அதன் வடிவமாக இருக்கிறது.
 
பக்தி இலக்கியங்களிலும் அறநூல்களிலும் தனிமனிதன் மற்றும் மனுஷியின் அடக்கங்கள் விதந்து ஓதப்பட்டுள்ளன. ‘அடக்கம் அமரருள் உய்க்கும்’ என்பது போன்ற புகழ் பெற்ற வாசகங்கள் தனிமனிதர்களின் அடக்கம் நோக்கிச் சொல்லப்பட்ட வாசகங்கள் என்று நம்புகிறோம். உண்மையில் இத்தகைய வாசகங்களும் அடக்கம் குறித்து மதநூல்கள் தரும் விளக்கவுரைகளும் தனிமனிதனை நோக்கி மட்டும் கூறியன அல்ல. குழுக்களின் அடக்கத்திற்காகவும் சொல்லப்பட்டவைதான். குழுக்களாக அடங்கிப் போகும் நிலையில் அடிமைகள் அல்லது தாசர்கள் பட்டம் கிடைக்கின்றன. தாசர்கள் பாராட்டப்படுகிறார்கள் பலவிதமாக. பாராட்டப்படும் குணமாக அடக்கம் எல்லா நிலையிலும் இருக்கிறது . அடங்கிப் போவதற்கும் சகிப்புக்கும் வேறுபாடு இருக்கிறது.
அடங்கிப்போவதைக் கொண்டாடும் பனுவல்கள் விதந்துரைக்கப்படுகின்றன; வி்ற்பனைச் சரக்காகின்றன; விலையாகின்றன. அதன் மறுதலையில் அடங்காமை ஒதுக்கப்படுதலை எதிர்கொள்ளும்

பரப்புரைகள் தேவை

இட ஒதுக்கீட்டால் பட்டியலின சாதியினர் மட்டுமே பலன் அடைவதாகக் கருத்து உருவாக்கப்பட்டு நம்பவைக்கப்பட்டுள்ளது. அந்த நம்பிக்கை மீது செயல் ரீதியாகத் தாக்குதல் நடத்தப்பட வேண்டும். அதற்கு முன்னோட்டமாகக் கருத்துருவாக்கம் தேவை. வீதிநாடகங்கள், நாட்டுப்புறக்கலை வடிவங்கள் வழியாகப் பரப்புரைகள் முழுவீச்சில் நடத்தப்பட வேண்டும். 1990 களில் எனது பொறுப்பில் புதுவையில் செயல்பட்ட கூட்டுக்குரல் நாடகக்குழு இவ்வகை நாடகங்களைத் தயாரித்து நிகழ்த்தியது. அப்போது தலித் பண்பாட்டுப் பேரவை, தலித் கலைவிழாக்குழு போன்றவை பொறுப்பேற்றன. இப்போது .அந்தப் பொறுப்பை அரசுத்துறைகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெரியார்- எப்போதும் பேசுபொருள்

பெரியார்மண்ணும் பிராமணியத்தின் இயக்கமும்.

நாத்திகம் என்னும் ஆன்மீகம்