சேரனோடு இரண்டு நாட்கள்

பெரு நகரத்தின் நடுவில் ஒரு சிற்றங்காடிக் கூடங்கள்

நேற்றும் இன்றும் நண்பர் கவி.சேரனோடு இருக்கிறேன். அவரது குடியிருப்பு டொரண்டோ நகரின் மையப்பகுதியான டென்சன் அவென்யூ. வானைத் தொடும் பல்லடுக்குக் கோபுரங்களாக நிற்கும் கட்டடங்களுக்குள் நிற்கும் வரிசை வீடுகளில் ஒன்று அவரது வீடு.

வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு சிறு பூங்கா இருக்கிறது. அதன் ஒரு மூலையில் தொடங்கி அங்காடித்தெரு தொடங்குகிறது. ஒவ்வொரு அங்காடியிலும் ஒரு வகைச் சாமான்கள் மட்டுமே விற்கும் கடைகள் இருக்கின்றன. மசாலா சாமான்கள் என்றால் எல்லாவகைப் பொருட்களையும் விற்கும் விதமாக ஒரு கடை. காய்கறிகள் என்றால் அதற்கு மட்டுமே ஒரு கடை. மீன் வெட்டித்தரும் தனிக்கடை. இப்படி துணிக்கடை, காலை உணவு மட்டும் தரும் உணவகம், மதிய உணவு, இரவு உணவுக்கெனத் தனிக்கடைகள். பல் பொருள் அங்காடி என்ற நிலைபாட்டுக்கெதிராகத் தனித்தனி அங்காடிகள். அந்த அங்காடிகளில் உலகின் பலநாட்டுச் சிறு வியாபாரிகளும் இருக்கிறார்கள். இந்திய உணவுவிடுதியும் இருக்கிறது. ஈழத்தமிழர்களும் கடையை வாங்கி நட த்துகிறார். காலாற நடந்து காய்கறிகளை வாங்கிவிட்டு மதிய உணவை முடித்துக் கொண்டு திரும்பினோம்.
 

இரண்டு தெருக்களில் சுற்றிச்சுற்றி வரும் நான்கு புற வீதிகளிலும் இருக்கின்றன அவ்வகைக் கடைகள். இந்தக் கடைகளை எடுத்துவிட்டுப் பல்லடுக்குப் பேரங்காடியாக ஒன்றைக் கொண்டுவரும் தீர்மானம் வரும்போதெல்லாம் மக்கள் கூடித் தீர்மானம் போடுகிறார்கள். கோரிக்கை வைத்து ஊடகங்களைச் சந்திக்கிறார்கள். அதன் வீரியத்தைக் கண்டு அரசின் அமைப்புகள் தொடர்ந்து பின்வாங்கிவிடுகின்றன. இரண்டு அடுக்குகளைக் கொண்ட கட்டடத்தில் மேலே குடியிருப்பும் கீழ்தளத்தில் அங்காடியும் என்னும் நடைமுறையைத் தொடர்கிறார்கள்.

பேரங்காடிகளை மறுக்கும் மனிதர்களாக அந்நகர் மையத்து மனிதர்கள் திகழ்கிறார்கள். பெரும் லாபத்தை மையமாக க்கொண்ட வணிகத்திற்கான எதிர்நிலைப்பாட்டின் அடையாளம் அந்த அங்காடி வளாகம். ஞாயிற்றுக்கிழமையில் திருவிழாக்கூட்டமாக இருக்கும் என்றார் சேரன். எனக்குப் பார்க்க வாய்ப்பில்லை இப்போது. ஆனால் பாண்டிச்சேரியின் ஞாயிற்றுக்கிழமைச் சந்தையைப் பார்த்தவன் நான். நேருவிதியும் காந்திவீதியும் சந்திக்கும் நாற்சந்திகள் திரளாக அலையும் கூட்ட த்தில் அலைந்து பொருட்களை வாங்கிய அனுபவம் எனக்குண்டு. அந்த அனுபவத்தை நினைத்துக்கொண்டேன்.

சந்திப்பும் உண்டாட்டும்



மூன்றுமாதப் பயணத்திட்டம் உருவானபோது முதலில் தகவல் சொன்னது கவி. சேரனுக்குத்தான். ஒட்டாவா போனதும் தொடர்புகொண்ட சேரன் டொரண்டோவில் இந்தமுறை என் வீட்டில் இரண்டு நாள் இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார். இரண்டு நாளில் ஒருநாள் நண்பர்களோடு உரையாடலாம்; விருந்துண்ணலாம் என்ற திட்டப்படி நண்பர்களைச் சேர்க்க ஒரு புலனக்குழு உருவாக்கினோம்.

ஒரு டஜன் என்ற எண்ணிக்கையில் நண்பர்களை அழைக்கலாம். அதில் நான் அழைக்க நினைப்பவர்கள் பாதி; அவரது வட்டத்திலிருப்பவர்கள் மீதி என்பதாகவும் பேசிக்கொண்டோம். ஆனால் டொரண்டோவில் அவரது நண்பர்களில் பலரும் எனக்கும் நண்பர்கள். எனது விருப்பமாக- குறிப்பாக- சிலரை அழைத்தேன். வாரக்கடைசியாக இல்லாமல் வேலை நாள் என்பதால் அவர்களுக்கு வர இயலாது எனத்தெரிவித்த நிலையில் கலந்துகொள்ள அழைப்பவர்கள் எண்ணிக்கை, பெயர்கள் எல்லாவற்றையும் அவர் பொறுப்பிலேயே விட்டுவிட்டேன். “பேரா. அ.ராமசாமியோடு சந்திப்பும் உண்டாட்டும்” என்பதான புலனக்குழுவில் பின்வரும் நண்பர்கள் வருகை உறுதியானது.

1. ஜெயகரன், நாடகக் கலைஞர், கவி, எழுத்தாளர்.

2. தேவகாந்தன் நாவலாசிரியர், திறனாய்வாளர்

3. துஷி: தமிழ், ஆங்கிலம் இருமொழி நாடகக் கலைஞர்.

4. தங்கவடிவேல்: நடிகர், நாடகர், கவி, கூத்துக் கலைஞர்.

5. திலீப் குமார்: தாய்வீடு ஆசிரியர். நாடகர்.

6. லெனின் சிவம். திரைப்படக் கலைஞர்.

7. பி. விக்னேஸ்வரன். நாடக, ஊடக, தொலைக்காட்சிக் கலைஞர்.

8. ஆசி. கந்தராஜா/ கிழத்தியோடு, எழுத்தாளர். விஞ்ஞானி

9. முனைவர் வெட்டிவேலு,

10. சேரன்: செம்மது வழங்குபவர். ச/மையல்காரன்.

11. பேரா.அ.ராமசாமி - என்னோடு சேர்த்து மொத்தம் 12.

சந்திப்பை ஏற்பாடு செய்த கவி.சேரன், வந்திருந்தவர்களின் விருப்பம், செயல்பாடு சார்ந்து தங்களின் உரையாடலை முன்வைக்கும் விதமாக ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்தார். பல்வேறு கருத்தரங்குகள், பயிலரங்குகளில் ஒருங்கிணைப்புச் செய்த அனுபவம் அது. தனது அரங்கியல் நிகழ்வுகள் சார்ந்த நினைவலைகளையும் டொரண்டோவில் தொடர்ந்து அரங்காற்றுகைகளைச் செய்வதில் இருக்கும் இடர்ப்பாடுகளையும் முன்வைத்த ஜெயகரனைத் தொடர்ந்து ஒவ்வொருவரும் தனது துறை சார்ந்து பேசினார்கள். தனது கனவு நாவல் உருவாக்கத்தை விரிவாக முன்வைத்தார் தேவகாந்தன். இருவரின் புனைவாக்கங்களை வாசித்திருந்த நானும் அவற்றின் மீது என விமரிசனக் கருத்துகளை முன்வைக்க விவாதங்கள் நடந்தன.



இருமொழியாக்கமாக உருவாக்கியிருக்கும் சுவேந்திரினி லீனாவின் மந்திரத்தறி (THE ENCHANTED LOOM by SUVENDRINI LENA) நாடகப்பனுவலை அறிமுகம் செய்தார் துஷி ஞானப்பிரகாசம். தாய்வீடு இதழின் ஆசிரியர் திலீப்குமாரும் இலங்கை வானொலியில் நீண்டகாலம் பணியாற்றிய அனுபவங்களை – நினைவுகளை விரிவாக எழுதியுள்ள விக்னேஸ்வரனும் அதிகம் பேசுபவர்கள் இல்லை. அவர்களின் வேலைகளைச் சேரனே சொன்னார். தனது புனைவல்லாத – தாவரவியல். விலங்கியல் கட்டுரைகளுக்குள் புனைவுத்தன்மையைக் கொண்டுவரும் வித்தைகளையும் புனைகதைகளுக்குள் உண்மையின் சாயல் வெளிப்பட்ட சில கதைகளை எழுதிய விதத்தையும் ஆ.சி.கந்தராஜா சொல்ல கேட்ட நாங்கள் சிரிப்பை அடக்கமுடியாமல் சிரித்துக் கொண்டோம். அவரது பேச்சைத் தொடர்ந்து ஈழநாட்டுப் பகுதியில் உணவாகும் மீன்கள், விலங்குகள், காய்கறிகள் எனப் பேச்சு நகர்ந்தது. கேரளத்தில் ஆமைக்கறி சாப்பிட்டதை நான் சொன்னபோது ‘சீமான்’ அனைவருக்கும் நினைவில் வந்துவிட்டார்.


பன்னாட்டு திரைப்பட விழாக்களில் விருதுகள் பெற்ற குறும்பட, பெரும்பட இயக்குநரான லெனின் சிவம் தனது சில படங்களுக்குள் உருவாக்கிய -குறியீடுகள்/சொல்லாடல்கள் எப்படிப் புரிந்துகொள்ளப்பட்டன என்பது குறித்துச் சொன்னார். சேரனின் பள்ளிக்கால நண்பரும் கூத்துக்கலைஞரும் நாடகருமான களப்பூரான் தங்கா, 40 ஆண்டுகளுக்கு முன்பு மண் சுமந்த மேனியரில் நடிக்கமுடியாமல் போன ஆதங்கத்தை – ஏமாற்றத்தைச் சொல்லி, அந்நாடகம் தொடர்ந்து மேடையேறியபோது முன்னொட்டாக நிகழ்த்திய கவிதா நிகழ்வில் நடித்த நினைவுகளையும் டொரண்டோவில் அவரது செயல்பாடுகளையும் சொல்வதற்கு முன்னால் ஒரு பாட்டுக்கச்சேரியை அரங்கேற்றினார். முனைவர் வெட்டிவேலு, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அந்தப் பட்டத்தைப் பெறுவதற்கு எடுத்துக்கொண்ட முயற்சிகளை நான் சொல்ல, அனைவரும் அவருக்கு வாழ்த்துரைத்தார்கள்.

ஒவ்வொருவரும் அவரவர் அனுபவங்களைச் சொல்லும்போதும் இணைப்புரையாக மட்டுமல்லாமல், கவிதை மனத்தின் வெளிப்பாடுகளைத் தந்துகொண்டே இருந்தார் சேரன். ஐந்துமணி நேரத்திற்கும் மேலாக நீண்ட உண்டாட்டும் சந்திப்பும் ஓர் இலக்கிய நிகழ்வாக இருந்தது. ஒரு மூலையில் வீடியோ கேமிரா ஒன்றின் விசையை முடுக்கிவைத்திருந்து இப்போது தொகுத்தெழுதியிருக்கலாம் என்று தோன்றுகிறது

****

கடந்தமுறை (2016) போனபோது யோர்க் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்க அறையில் மட்டுமே சந்தித்தோம். திரும்பவும் போனபோது மருத்துவமனையில் கண்ணாடி அறைக்குள் அவர் இருக்க, நான் வெளியே இருந்து பார்த்துவிட்டு வந்தேன். இருமுறையும் சேரனும் நானும் அதிகம் பேசிக்கொள்ள முடியாத நிலை. அதனால் இந்தமுறை நிறையக் கதைக்க வேண்டும் என்பது எங்களின் திட்டமிடலில் இருந்தது. அதனால் டொரண்டோவில் மற்ற நிகழ்ச்சிகளையெல்லாம் முடித்துக்கொண்டு சேரன் வீட்டிற்குப் போனேன். அவரது வீடு டொரண்டோவின் நகர் நகர்மையத்தில் இருக்கிறது. முதல் நாளும் மறு நாளும் கால்நடையாகச் சென்று என்னவெல்லாம் காட்டமுடியுமோ அங்கெல்லாம் அழைத்துச் சென்றார். அங்கிருந்து டொரண்டோ ரயில் நிலையமும் பக்கம். மதிய உணவுக்குப் பின் ரயிலில் டிக்கெட் எடுத்துக் கொடுத்து வரிசையில் நிறுத்தி அனுப்பிவைத்து மகிழ்ச்சியை உண்டாக்கிவிட்டுப் போனார் சேரன். சந்திப்பின்போது அவர் தங்காவை அறிமுகம் செய்தபோது ஒரு குறிப்பு சொன்னார். அந்தக் குறிப்பு இந்தக் கவிதையில் வரும் குறிப்பு என்பது எனக்கு உடனே நினைவில் வந்த து. இப்போது அந்தக் கவிதையையும் தருகிறேன்.

********

கறுப்பு

------------------

அவளுடைய வடிவும் செருக்கும்

நிறமும் ஒளியும்

அவளுக்குத் தெரியவில்லை

மழையில் தோய்ந்த பனைமரம் போல்

ஒளிரும் கறுப்பும் காதலும்

அவள்

சுட்ட பழமா சுடாத பழமா

எனத் திகைக்க வைக்கும்

முலைக் காம்பு

அவளுக்கு வெறுப்பேற்றுகின்றது

நான் சொல்ல விரும்பியது இதுதான்:

ஆற்றங்கரைக்கு வா

ஆடை களை

பாதி நிலவு ஒளிரும் நீரில் இறங்கு

உன் ஒளியில் மலரும் நீர்.

அப்போது

ஆற்றில் எப்போதும் விரியாத

பூக்களைப் பார்க்கலாம்.

அவற்றின் பெயர் கடவுளுக்கும் தெரியாது.

கறுப்பில் விளையும் காமம்

உலகப் பேரொளி.

நிறைய மறுக்கும் கறுப்பூ.







கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெரியார்- எப்போதும் பேசுபொருள்

பெரியார்மண்ணும் பிராமணியத்தின் இயக்கமும்.

நாத்திகம் என்னும் ஆன்மீகம்