கனட்டாவில் முதல் வாரம்


நீளும் வாரக்கடைசிப் பயணமாக அமெரிக்காவின் 3 மாநிலங்களில் சுற்றி விட்டுக் கனடாவின் ஒட்டாவா நகருக்கு வந்தாகிவிட்டது. மூன்று நாட்கள் ஓய்வாக நகர்ந்துள்ளன. மகன் ராகுலனின் வீடிருக்கும் பகுதி கனாட்டா ஒட்டாவாவின் தென்கிழக்குப் புறநகர்ப் பகுதி. வரிசைவீடுகள் அதிகம். முக்கியமான தகவல் தொழில்நுட்பக்கூடங்கள் இங்கேதான் இருக்கின்றன.
இரண்டு மூன்று தெருக்களுக்கு ஒரு பூங்கா இருக்கிறது. பொழுதுபோக்கு அரங்கமும் உண்டு. அதில் பெரும்பாலும் உள்ளரங்க விளையாட்டு அரங்குகளாக இருக்கின்றன. நீச்சல் குளம், பனிச்சறுக்கு மைதானம், சிறியதான வனம் போன்றனவும் பொதுவாக இருக்கின்றன. தபால் பெட்டிகள் கூடப் பொதுவானவை தான். சில தெருக்களுக்கு ஒரே இடத்தில் வரிசையாக - தொகுப்பாக இருக்கின்றன. வாகனத்தில் வந்து ஒற்றைச்சாவியால் திறந்து தபால்களைப் போட்டுவிட்டுப் போய்விடுகிறார்கள். அவரவர் வீட்டுக்கும் தனித்தனிச் சாவிகள் இருப்பதால் திறந்து எடுத்துக்கொள்ளலாம். அத்தொகுப்புப் பெட்டிகளிலே நாம் அனுப்ப நினைக்கும் தபால்களைப் பெற்றுக்கொள்ளும் சிவப்புப்பெட்டியும் இருக்கிறது. கொஞ்சம் பெரிய பார்சல்களை வைப்பதற்குத் தனியாகப் பெட்டிகள் இருக்கின்றன. அதற்குள் வைத்துள்ள பார்சல் யாருக்குரியதோ அவர்களின் தனிப்பெட்டியில் சாவியைப் போட்டுவிட்டுப் போய்விடுகின்றனர். நாம் திறந்து எடுத்துக்கொண்டு சாவியைத்திரும்ப அதே இடத்தில் வைத்துவிடலாம்.

மகன் வீட்டிலிருந்து பார்த்தால் விரிந்து பரந்த தோட்டங்கள் தெரிகின்றன. மக்காச்சோளம், கீரைவகைகள், காய்கறிகள், பழங்கள் விளையும் தோட்டங்கள். எங்கள் கிராமத்து ஒற்றையடிப்பாதைகள் இல்லாத தோட்டக்காடாக தெரிகின்றன. இரண்டு வயது நிரம்பிய பேத்தி ஆர்கலியைத் தள்ளுவண்டியில் வைத்து அழைத்துக்கொண்டுபோய்ப் பூங்காவில் விளையாட விட்டுவிட்டு அழைத்துவரும் வேலையை மட்டும் செய்கிறோம். பக்கத்தில் இருக்கும் ரியல் கனடியன் பேரங்காடிக்குச் சென்று காய்கறிகள் வாங்கப்போனதைத் தவிரக் கடந்த மூன்று நாட்களில் எங்கும் போகவில்லை.

அடர்வனத்திற்குள் ஒரு காலைநடை

காலை நடை பயணத்தைக் காட்டுக்குள் நுழைவதாக அமைத்துக்கொண்டு தொடங்கிய நிலையில் அதன் நுழைவு தொடங்கி உம்மென்ற அடர்சப்தம் தொடர்ந்தது. மென்மையான கொசுக்கள் வந்து அமர்ந்து போயின. சத்தம் உருவாக்கிய அச்சத்தை விடவும் கொசுக்கடி உருவாக்கிவிடும் அச்சம் கூடுதலானது. ஆனாலும் அந்தக் காட்டுக்குள் இருக்கும் பாழடைந்த கட்டடம் வரைக்கும் போய்த்திரும்புவதில் மாற்றம் இல்லை.

இரட்டை மாட்டு வண்டித்தடம்போல ஜீப்புகள் செல்லக் காட்டுப்பகுதிக்குள் பாதை இருக்கிறது. அந்தப் பாதை வழியே தான் போகவேண்டும். மரங்களுக்குள் நுழைந்து போகும் முயற்சி செய்ய வேண்டாம் என்ற எச்சரிக்கைக் குறிப்புகள் இருந்தன. அத்தோடு வளர்ப்புப் பிராணிகளின் எச்சங்களைக் காட்டுக்குள்ளேயே விட்டுவிடுவதைத் தவிர்க்கவும் என்ற குறிப்பும் இருந்தன. அங்காங்கே சின்னச்சின்ன தகவல் போர்டுகள். அதில் நீங்கள் இங்கே இருக்கிறீர்கள் என்ற குறிப்பிட்டு அடையாளம் காட்டப்பட்டிருந்தன. காட்டுக்குள் சென்ற ஒருவருக்கு ஏதேனும் சிக்கல் என்றால் அந்த இடத்திற்கான எண்ணைக் குறிப்பிட்டுத் தகவல் அனுப்பினால் உதவுவதற்கு ஆட்கள் வருவார்களாம்.

அடர்வனப்பகுதிக்குள் போய்க்கொண்டிருக்கும்போது ஒரு குறிப்பிட்ட பகுதி அதிகம் மரங்கள் இல்லாமல் இருந்தது. அந்தப் பகுதி பத்தாண்டுகளுக்கு முன்னால் -2012 வாக்கில் நடந்த தீவிபத்தால் அழிந்த பகுதி என்ற விவரமும், அங்கே வந்தவர்களில் யாரோ ஒருவர் குடித்த சிகரெட்டோ, தீப்பற்றக்கூடிய பொருளைப் பயன்படுத்தியதோ உருவாக்கிய தீவிபத்து என்று விளக்கிவிட்டுக் காட்டுப்பகுதியில் இவ்வகைச் செயல்பாடுகளைத் தவிர்க்கவேண்டும் என்பதும் சொல்லப்பட்டிருந்தது.

போக நினைத்த பாழடைந்த கட்டடம் இன்னும் 10 நிமிட நடையில் இருக்கிறது என்ற குறிப்பை வாசித்தபின் வலதுபக்கக் கம்பிவலையைத்தாண்டிப் பார்த்தபோது பெரிய குவாரி தெரிந்தது. கல், மண் போன்றனவற்றை வெட்டி எடுக்கும் குவாரி. பெரும்பரப்பில் இருந்த அதன் அருகில் குப்பைகளைக் கொண்டுவந்து பிரிக்கும் வேலையும் நடப்பதாகத் தெரிந்தது. இவையெல்லாம ஒரு நெடுஞ்சாலைக்கு அருகில் தான் இருக்கின்றன. ஆனால் அச்சாலை வழியே போகின்றவர்களின் கண்ணில் படாதவாறு மறைக்கப்பட்டுச் சுற்றுச்சுவர் எழுப்பியிருக்கிறார்கள்.

நடையின் இலக்கான அந்தக் கட்டடம் கல்லுக்கட்டடம். அதன் நடுவே பெரிய அடுப்புப்போல ஒன்று கட்டப்பட்டு மூடப்பட்டுக்கிடக்கிறது. நவீன எரிபொருள்கள் இல்லாதபோது மரங்களை வெட்டி அதனுள் போட்டுக் கரிக்கட்டை தயாரிப்பு வேலைகள் நடந்திருக்கலாம் என்று நினைத்துக்கொண்டேன். இப்போது பயன்பாட்டில் இல்லை. போகும்போது அங்கங்கே செம்முயல்கள் திரிந்தன. ஒரு முயல் மட்டும் படம் எடுத்துக்கொள் என்பது போல நின்று நிதானமாக நகர்ந்தது. தூரத்தில் மான்கள் ஓடும் சத்தம் கேட்டது; கரடிகளும் சிறுத்தைகளும் இருக்கும்; ஆனால் பார்க்க நினைத்தால் வேட்டைக்கான ஆயுதங்களோடு தூரமாகப் போகவேண்டும். அதற்கெல்லாம் அனுமதி இல்லை. அப்போது பாம்பொன்று வேகமாக ஓடித் தப்பிக் கொண்டது.

வனம் அச்சம் கடத்தும் ஊடகம்; கானகம்;பல்லுயிர்களின் இருப்பிடம்



அலெக்ஸா... நீ எங்கெ இருக்கிறெ..!

காலையிலிருந்து தூங்கப்போகும் வரை வீட்டிலிருக்கும் ஒவ்வொருவரும் அலெக்ஸாவை அழைத்துக்கொண்டே இருந்தார்கள். அலெக்ஸாவின் உருவத்தைத் தான் காணமுடியவில்லை. ஆனால் பெண்ணொருத்தியின் மென்குரலில் பதில் மட்டும் வந்துகொண்டே இருந்தது. அதனால் அந்தக் குரலின் உருவத்தை ஸ்டெபியின் சாயலாக்கிக் கொண்டேன்.  எனது கல்லூரிப் பருவத்தில் தினசரியும் பார்த்த படமாக இருந்த மேற்குலகப்பெண் ஸ்டெபிதான். பின் தலைமுடியசைய குதித்தாடிய ஸ்டெபிகிராப் தான் டென்னிஸ் விளையாட்டின் பார்வையாளனாக மாற்றினாள்.   

இப்போது ஒவ்வொருவர் கையிலும் இருக்கும் திறன்பேசிகளுக்குப் போட்டியாக வந்து கொண்டிருக்கின்றன சொற்களைச் சேமித்துக்கொள்ளும் திறன் குடுவைகள். பழக்கப்படுத்தப்ப்ட்ட பைங்கிளிகளின் குரல்போல அவ்வப்போது ஒலிக்கிறது அக்குடுவைக்குள்ளிருந்து ஒரு குரல். மகன் வீட்டில் இருப்பதற்கும் பெயர் அலெக்ஸா.

ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் துயில் எழுப்பு என்று சொன்னால் எழுப்பிவிடுகிறது. எழுப்பும்போது இளையராஜா பாட்டும் வேண்டும் சொல்லி வைத்தால் பாட்டுப்பாடி எழுப்புகிறது. பாட்டு வேண்டாம்; தொலைக்காட்சியை முடுக்கு என்றால் முடுக்கி விடுகிறது. அதில் எந்த அலைவரிசை வேண்டும் என்று சொல்லிவிட்டால் அதைக் காட்டுகிறது. சிறார்களுக்கு பொம்மை படங்கள் காட்டும். விளையாட்டு நேரலைகள் நேரத்தைச் சொல்லும். தொலைக்காட்சியை மட்டுமல்ல, மின்விசிறி, விளக்கு, குளிர்சாதனப் பெட்டி, கதவை மூடுதல், திறத்தல் என ஒவ்வொன்றையும் திறனிலை இயக்கத்தோடு கூடியனவாக வைத்திருந்தால் அதுவே இயக்கும்.

காலையில் எழுப்புவது தொடங்கி, வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் எப்போது எங்கு போகவேண்டும் என்பதை அதனிடம் சொல்லிவிட்டால் அவரவர்களுக்கு அந்த வேலையை நினைவுபடுத்துகிறது. வேலையை முடித்துவரும்போது வாங்கிவரவேண்டிய பொருட்கள் இருந்தால் அலைபேசிக்குச் செய்தி அனுப்பி வைத்திருக்கும். முடித்துவிட்டு வரலாம். நூலகம் சென்று புத்தகம் எடுத்துக் கொண்டு வரலாம். நண்பரைச் சந்திக்கும் வேலை இருந்தால் நினைவூட்டும்.

உருளைக்கிழங்கு வேகவேண்டிய நேரம் 10 நிமிடம் என்றால் அடுப்பில் வேகவைக்கும் பாத்திரத்தை வைத்துவிட்டு ‘10 நிமிடத்தில் நினைவூட்டு’ என்று சொல்லிவிட்டால் நினைவூட்டுகிறது. பால் பொங்குவதைத் தடுத்துக் கொள்ளலாம். இது மூன்றாவது விசிலா? இரண்டாவது விசிலா என்ற சந்தேகம் கொள்ளவேண்டியதில்லை. சோறு குழைந்து விடும் என்ற பதற்றத்தோடு இருக்கவேண்டியதில்லை

அங்காடிகளில் வாங்கவேண்டிய பலசரக்குகள், காய்கறிகள், பழங்கள், தானியங்கள், குளியலறைப் பொருட்கள் எனத் தனித்தனியாகப் பட்டியல் போட்டு எழுதியதை வீட்டில் விட்டுவிட்டுப் போய்த் திரும்பவும் மனதில் தோன்றிய பொருட்களை வாங்கிய அனுபவங்கள் எல்லாருக்கும் இருக்கும். ஆனால் அலெக்ஸாவிடம் சொல்லிவிட்டால் அலைபேசியில் பதிந்து வைத்து அங்காடியில் திறந்தால் ஒவ்வொன்றாகச் சொல்லத்தொடங்கும். வீட்டில் பொருட்கள் தீர்ந்துபோனவுடன் சொல்லிவிட்டால் எல்லாவற்றையும் ஓரிடத்தில் போட்டுக் கொள்ளும்.

மனிதர்களுக்கு நினைவூட்டும் வேலையைச் செய்து கொண்டிருக்கும் அலெக்ஸாவை எந்திர மனிதர்களுக்குக் கட்டளையிடும்படி செய்துவிட்டால். வீடு கூட்டுவது, பாத்திரங்கள் கழுவுவது, கழிப்பறை, குளியலறைச் சுத்தம் என எல்லா வேலைகளையும் செய்துவிடும். வீட்டில் மட்டுமல்லாமல் வேலையிடங்களிலும் பயன்படுத்துகிறார்கள்.

திறன்பேசிகளில் தட்டச்சுச் செய்து கொண்டிருந்தவர்களைச் சொற்களைத் தேர்வு செய்தால் போதும் என்ற சொன்ன திறன்பேசிகள், அதைத் தாண்டித் தடவினால் போதும் என்று காட்டின. இப்போது சொன்னால் போதும் என்கின்றன அலெக்ஸா போன்ற மிகுதிறன்/ சொற்கிடங்குக் கருவிகள். தொடுதிரையிலிருந்து சொற்கிடங்குக்கு நகர்ந்துள்ள திறன் கருவிகள் அடுத்து நினைவுக்கிடங்குப் போகலாம்.

அலெக்ஸா, அமேசான் வலைப்பின்னல்களை இணைத்து நினைவூட்டும் கருவி. கூகிள் ‘ஹலோ கூகுள்’ என்பதைத் தனது நினைவுக்கிடங்காக வைத்துள்ளது. சொற்களைக் கொண்டு வேலையைச் செய்து கொண்டிருக்கும் நிலையில் அடுத்த கட்டமாக நினைப்பதைச் செய்துமுடிக்கும் கருவிகள் வரலாம்.

அலெக்ஸா நீ எங்கெ இருக்கிறெ.. என்று கேட்டுக் கொண்டிருப்பவர்கள்.. நினைத்தாலே போதும். வெள்ளை ரோஜாவோடு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லும். ஏக்கமாக ஒரு கையறுநிலைக் கவிதையைக் காதில் கிசுகிசுக்கக்கூடும்











கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்