நவீனத் தமிழ் எழுத்து என்னும் வரையறை



எல்லாவகையான ஆய்வுகளிலும் கருதுகோள் ஒன்று வேண்டும் என வலியுறுத்தப்படும். ஒற்றைக் கருதுகோளோடு தொடங்கும் ஆய்வுகள் துணைக் கருதுகோள்களையும் உருவாக்கிக் கொண்டு ஒன்றுக்கு மேற்பட்ட முடிவுகளையும் முன் வைக்கலாம். ஆய்வேடுகளில் குறிப்பான கருதுகோள் இல்லாமல் பரந்துபட்ட நோக்கம் ஒன்றை முன்வைத்துக் கொண்டு தொகுத்தும் பகுத்தும் வைக்கப்படும் ஆய்வுகளும்கூட அதற்கான பயன்மதிப்பைப் பெறக் கூடியனதான்.

அதேபோல ஆய்வுக்கட்டுரை எழுதுபவர்களும், விமரிசனக் கட்டுரை எழுதுபவர்களும் முதன்மையாக ஒரு நோக்கத்தை முன்வைத்துக் கட்டுரையை எழுதவேண்டும். பரந்துபட்ட பரப்பில் சிதறிக்கிடக்கும் தகவல்களைத் தொகுத்து வகைப்படுத்தி முன்வைக்கும் கட்டுரைக்கும் ஒரு மதிப்பு உண்டு. திராவிட இயக்கங்கள் மற்றும் இடதுசாரி இயக்கங்கள் அவற்றின் இலக்கியச் செயல்பாடுகள், இலக்கியவாதிகள் பற்றிய ஜெயமோகன் முன்வைத்துள்ள கருத்துக்களை அவர் முடிவாகச் சொல்கிறார்.ஆனால் தகவல் அடிப்படையிலான ஆதாரங்கள் எதுவும் இல்லை. அவையெல்லாம் ஒரு கருதுகோள்கள் தான். சிறுபத்திரிகையாளர்கள் என நம்பிச் செயல்படும் ஒரு கூட்டத்தின் பொதுப்புத்தி சார்ந்த கருதுகோள்கள் இவை.

இக்கட்டுரையில் ஜெயமோகன் முன்வைக்கும் நுண் உணர்வுகொண்ட மிகச்சிறிய எண்ணிக்கையிலான வாசகர்களைக் கொண்டது நவீனத் தமிழ் எழுத்துப் பரப்பு என்னும் கருதுகோளும் ஏற்கத்தக்கதல்ல. 1990- களுக்குப் பின் நவீன எழுத்துப்பரப்பு திராவிட இயக்கச் சார்பாளர்களாலும் இடதுசாரிச் சார்பாளர்களாலும் நிரப்பப்பட்டிருக்கிறது. அதற்கு முன்பு இவற்றின் சார்பாளர்களாகக் காட்டிக் கொள்ளத் தயங்கியவர்கள் கூட வெளிப்படையாகப் பின்னர் காட்டிக் கொண்டதைப் பார்த்திருக்கிறோம். திராவிட இயக்கத்தின் அடையாளமான பெரும் நிகழ்வு சென்னை சங்கமம். அதில் தமிழின் கவிகள் எழுத்தாளர்கள்/கலைஞர்கள் தயக்கமின்றிக் கலந்து கொண்டார்கள் என்பது வரலாறு. கி.ராஜநாராயணனையும், சா.கந்தசாமியையும் தோப்பில் முகம்மது மீரானையும் வண்ணதாசனையும் சுரேஷ்குமார் இந்திரஜித்தையும் மா.அரங்கநாதனையும் இமையத்தையும் வாசித்தவர்கள்/ வாசிப்பவர்கள் நுண்ணுணர்வற்ற வாசகர்கள் எனச் சொல்ல முடியாது. இவர்களின் அரசியல் ஆதரவு திராவிட இயக்கம் என்பதையோ, கருத்தியல் சார்பு சமூக மாற்றத்தை உள்ளடக்கிய விசாரணைகள் என்பதையும் மறுக்க முடியாது. 80 -களில் எழுதத் தொடங்கிய பெருங்கவிகள் கலாப்ரியா, விக்ரமாதித்தியன் போன்றவர்களின் கவிதைகள் நுண்ணுணர்வு வாசிப்பாளர்களைக் கொண்டவை. அவர்களும் திராவிட அரசியல் ஆதரவாளர்கள். 
சென்னை சங்கமத்திற்கு முன்னோடியாகச் சொல்லப்பட வேண்டிய நிகழ்வு கலை இரவுகள். திருவண்ணாமலையில் கால்கொண்ட கலை இரவுகள் இடதுசாரிகளின் பண்பாட்டு -இலக்கிய அடையாளம். இன்றளவும் அதன் நீட்சிகள் இருக்கின்றன. இவ்விரு நிகழ்வுகளும் வாசிப்புத் தளத்தையும் விரிவு படுத்திய நிகழ்வுகள் என்பதை மறுக்க முடியாது. பூமணி, அஷ்வகோஷ், பா.செயப்பிரகாசம், சோ.தர்மன், கவி.சுகுமாரன், கவி.ரசூல், யவனிகா ஸ்ரீராம் போன்றவர்கள் இடதுசாரிக் கருத்தியலாளர்கள்தான். கலை இலக்கியப் பெருமன்றமும் ஆராய்ச்சி இதழும் உருவாக்கிய திறனாய்வு மரபு கோட்பாடு சார்ந்த திறனாய்வு மரபு. அங்கிருந்துதான் தி.சு.நடராசன், ராஜ் கௌதமன், தமிழவன், முத்துமோகன் போன்ற கோட்பாட்டு விமரிசகர்கள் உருவானார்கள். அவர்களின் முறையியலைப் பின்பற்றியவர்கள் 2000 -க்குப் பின்னரும் தோன்றிக் கொண்டே இருக்கிறார்கள். இவர்களின் தாக்கம் கல்விப் புலத்திற்குள் பரவலாக அறியப்படுகிறது.

இடதுசாரிகளின் கலை இரவு மேடைகளில் ஜெயமோகனும் கோணங்கியும் எஸ்.ராமகிருஷ்ணனும் ஏறியிருக்கிறார்கள். அரசியலற்றவர்கள் எனச் சொல்லிக் கொள்பவர்களின் எழுத்துகளுக்கும் வாசிப்புத் தளத்தை உருவாக்கித் தந்துள்ளது த.மு.எ.ச,. மாற்று சினிமா ரசனையை தமிழ்நாடு முற்போக்குக் கலைஞர்கள் எழுத்தாளர்கள் சங்கம் உருவாக்கியிருக்கிறது. நாடகச் செயல்பாடுகளைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. ஓவியங்களின் பக்கம் கவனம் செலுத்தும்படி தூண்டுகிறது. இவ்விரண்டு நிகழ்வுகளையொத்த பெரும் நிகழ்வாக வந்திருக்க வேண்டிய தலித் கலை விழாக்கள். அவை நீட்சிகள் இல்லாமல் போனதின் பின்னணியில் அரசியல் இயக்கங்களின் சிதைவுகள் இருக்கின்றன. அறிவாளிகளின்/எழுத்தாளர்களின் தடுமாற்றங்களும் இருக்கின்றன.

இப்படியான எந்தப் பங்களிப்பும் செய்யாமல் சிறுபத்திரிகை எழுத்தாளர்கள் என்ற அடையாளத்தோடு இயங்கியவர்களை மட்டுமே நவீன எழுத்தாளர்கள் எனச் சுருக்குவது தொடரக்கூடாத ஒன்று. நவீனத்தமிழ் இலக்கிய வரைபடத்தின் விரிவை விரும்பாத மனநிலை அது. அத்தோடு அரசியலற்ற சிறுபத்திரிகையாளர்கள் என அறியப்பட்ட பலரும் கறாரான அரசியலோடு இருந்தார்கள் என்பதற்கு அவர்களது எழுத்துகளுக்குள் ஆதாரங்கள் இருக்கின்றன. திராவிட இயக்க எழுத்தாளர்கள் தங்களின் அரசியல் ஆதரவுச் செயல்பாட்டையும் கருத்தியலையும் எழுத்துக்களில் மறைக்காமல் வெளிப்படுத்தினார்கள். இடதுசாரி எழுத்தாளர்களும் அத்தகைய வெளிப்பாட்டைச் செய்யத் தவறவில்லை. ஆனால் நவீன எழுத்தாளர்கள் என முன்மொழியப்பட்ட - பட்டியலிடப்பெற்ற பலரும் மரபான வாழ்வியலையும் கருத்தியலையும் உள்ளடக்கிய பனுவல்களையே எழுதித் தந்திருக்கிறார்கள். உரைநடையைப் பயன்படுத்துவதிலும் சொல்முறைகளிலும் புதிய உத்திகளைக் கையாண்ட அவர்கள் உருவாக்கிய பாத்திரங்கள் மரபின் மீதான விருப்பமும் நகராமைக் கைக்கொண்ட தேக்கத்தையும் கொண்டவர்கள். அதே நேரத்தில் மனத்திற்குள் எல்லாவற்றையும் அலசிப்பார்த்துவிட்டு அங்கேயே இருந்துவிட நினைத்தவர்கள். ஒருவித அச்சமும் கலக்கமும் கொண்ட அவர்கள், தங்களின் கருத்தியல் எதிரிகளாகக் கருதிய திராவிட இயக்கத்தவரையும் இடதுசாரிகளையும் குறியீடுகளாலும் படிமங்களாலும் விமரிசனம் செய்திருக்கிறார்கள். அக்குறியீடுகளும் படிமங்களும் அரசியல் நிலைபாட்டை மறைத்துக் கொண்ட அச்சத்தின் வெளிப்பாடுகளாகவே இருக்கின்றன. அச்சத்தில் இயங்கிய அவர்களின் வாரிசுகள் இப்போது அச்சம் விலகியதாக நினைக்கிறார்கள். வெளிப்படையாக வலதுசாரிக் கருத்தியலையும் அரசியலையும் ஆதரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். வலதுசாரி அரசியல் ஆட்சியதிகாரத்தில் இருப்பதைச் சாதகமான சூழலாக நினைப்பதுதான் முதன்மைக்காரணம். 

2000 -க்குப் பின் எழுத வந்துள்ளவர்களில் பலரும் தமிழ்த் தேசியத்தின் ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். வெளிப்படையாகச் சொல்லிக் கொள்ளவில்லை என்றாலும் நாம் தமிழர் இயக்கத்தையும், மே 17 இயக்கத்தையும் ஆதரிக்கும் இளைய கவிகளும் புனைகதையாளர்களும் கணிசமாக இருக்கிறார்கள். மார்க்சியத்தின் தொடர்ச்சியாகப் பெண்ணியத்தைக் கருதும் பெண் எழுத்தாளர்களை அடையாளப்படுத்தவும் முடியும். பின் நவீனத்துவச் சிதறல்களாகச் சொந்த சாதி அனுதாபத்தோடி இயங்கும் நவீன எழுத்தாளர்களும் தமிழ்வாழ்வை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அதை மறைக்க வேண்டியதில்லை என்று முன்வரவும் தயாராகிவிட்டார்கள். ஆனால் நவீன எழுத்தாளர்கள் மட்டுமே நுண் உணர்வு என்ற பெயரில் நத்தைக் கூடுகளுக்குள் பதுங்கிக் கொள்கிறார்கள்
=========================================

https://www.jeyamohan.in/127393/

https://www.jeyamohan.in/127405/

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்