அத்திவரதர்: பண்பாட்டுச் சுற்றுலாவியல்

 சென்ற ஆண்டு தாமிரபரணியில் மகாபுஷ்கரணி. இந்த ஆண்டு அத்திவரதர். 12 ஆண்டுகள் இடைவெளியில் கும்பமேளாக்கள். அதே 12 ஆண்டுகள் கணக்கு வைத்து பெருங்கோயில்களில் கும்பாபிஷேகங்களும் நடக்கின்றன. வட இந்தியாவில் அலகாபாத், உஜ்ஜையினி, ஹரித்துவார், நாசிக் என நான்கு நகரங்களில் நடக்கும் கும்பமேளாக்கள் முக்கியம் எனச் சொல்லிக் கொள்கிறார்கள். தமிழ்நாட்டிற்குக் கும்பகோணத்தில் கும்பமேளா நடத்துகிறார்கள்.

நான் நெல்லையில் இருக்கிறேன்.22 ஆண்டுகளாக இருக்கிறேன். ஆண்டுதோறும் திருநெல்வேலியில் ஆனித்தேரோட்டம் 10 நாட்கள் நடக்கிறது. நெல்லையப்பர் -காந்திமதி அம்மன் கோயிலை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ரத வீதிகளில் போக்குவரத்து மாற்றம் நடக்கும். 10 நாட்கள் நடந்தாலும் பெருந்தேரை வடம்பிடித்து இழுத்துத் தெருக்களில் நிறுத்தி நிறுத்தி நகர்த்தும் ஒருநாளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை உண்டு. அன்று தேரையும் தேரின் வடத்தையும் தொட்டுவிட்டால் அந்த ஆண்டின் நல்லது கெட்டது பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்று நம்பும் மனம் எப்படியாவது கூட்டத்தில் சிக்கிப் பிதுங்கி வெளியேறும். இப்பெருவிழாவைத் தவிர ஆடிப்பூரவிழா ஊர்வலங்கள், புரட்டாசியில் நவராத்திரிக் கொலுக்கள், ஐப்பசியில் திருக்கல்யாணக் கோலங்கள் என ஆண்டுதோறும் நடக்கின்றன. நெல்லை நகரத்துக்கு மேற்கே இருக்கும் சங்கரன்கோவிலில் குடிகொண்டிருக்கும் சங்கரநாராயணப்பெருமாளுக்கும் ஒருநாள் மாவட்ட அளவில் உள்ளூர் விடுமுறை உண்டு. தென்காசியில் விசுவநாதருக்கு- பாபநாசத்தில் பாவநாசம் செய்யும் ஈஸ்வரனுக்கு- திருச்செந்தூரில் முருகனுக்கு- - தூத்துக்குடியில் பனிமயமாதாவுக்கு - உள்ளூர் விடுமுறைகள் உண்டு. இந்தப் போட்டியில் இறங்கிய ஐயா வைகுண்டர் கன்யாகுமரியில் ஒருநாள் விடுமுறை வாங்கித்தந்தார். இப்போது குமரியைத் தாண்டி தூத்துக்குடி, நெல்லையென மூன்று மாவட்டங்களுக்கும் ஆதிக்கத்தை விரிவுபடுத்திவிட்டார். 


முன்பெல்லாம திருநெல்வேலி வழியாகத் திருச்செந்தூருக்குத் தைப்பூசத்தையொட்டிக் கால்நடையாக நடக்கும் பக்தர்களின் கூட்டத்தைப் பார்த்தேன். இப்போதோ பங்குனி உத்திரம், திருகார்த்திகை, வைகாசி விசாகம், சஷ்டிக்காலம், சூரசம்ஹாரம், தெய்வானை திருக்கல்யாணம், சுவாமி திருக்கல்யாண கோலத்தில் ஊஞ்சல் சேவை என ஒவ்வொரு விழாவுக்கும் அலகு குத்தியும் தேரிழுத்துக்கொண்டு பக்தர்கள் கூட்டம் நடந்துகொண்டும் இடையிடையே சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டும் போகிறார்கள். மாவட்டத்தின் மேற்கோரம் தொடங்கி நடந்தவர்கள், மாவட்ட எல்லைகளைத் தாண்டியும் இழுத்துவிட்டார்கள். திருச்செந்தூர் முருகனுக்கு நடப்பதுபோலவே ஆறுபடை வீடுகளுக்கும் நடக்கிறார்கள். ஆறு பெரும்படை வீடுகள் அல்லாமல் சிறுபடை வீடுகளில் இருக்கும் முருகனை நோக்கியும் நடக்கிறார்கள். 

ஆங்கிலேயர்களால் இந்தியா என்ற பெயர் தரப்பட்டு தேசமாகக் கட்டமைக்கப்பட்ட வரலாறு நவீன இந்திய வரலாறு. அதற்கு முன்பு இந்தியப் பண்பாட்டு நிலவியலை உருவாக்கி நிலை நிறுத்தியதில் கோயில்பண்பாட்டுக்கு முக்கியமான பங்குண்டு. பெருங்கதையாடல்களை முன்வைக்கும் புராண இதிகாசங்களிலும், காவியங்களிலும் கதைப் பாடல்களிலும், நாடகங்களிலும் ஏராளமான தேசங்கள், மகா மண்டலங்கள், மண்டலங்கள், சிற்றரசுகள், நாய்க்குகள், பாளையங்கள், ஜமீன்கள் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. ”56 தேசத்து ராசாக்கள்” என்ற சொல்லாடலைப் பரத கண்டத்தின் பிரிவுகளாகப் பேசும் பனுவல்கள் இந்திய மொழிகள் பலவற்றிலும் கிடைக்கின்றன. தேசப் பிரிவினைகள் பலவாக இருந்தபோதிலும் கோயில் மற்றும் வழிபாடு சார்ந்த பயணங்களும் சுற்றுலாக்களும் நாடு, மொழி போன்ற வேறுபாடுகளைக் கடந்தனவாக இருந்திருக்கின்றன.

இந்தியப் பண்பாட்டு வெளிக்குள் தமிழகத்தையும் உள்ளடக்கிய வரலாறுக்கு - பண்பாட்டு வெளிகளாகப் பிரித்து விழாக்களை மையப்படுத்திப் பண்பாட்டுக் காலங்காட்டிகள் (CULTURAL DIARIES ) உருவாக்கப்பட்ட வரலாறுக்கு 1000 ஆண்டுகள் இருக்கக் கூடும். அந்தக் காலங்காட்டிகள் ஒருவிதச் சுற்றுலாவியல் நோக்கங்களைக் கொண்டவை.சுற்றுலா என்பது இப்போது போலவே எல்லாக் காலத்திலும் பொருளியல் உறவுகளால் ஆனவை. பொருளியல் உறவுகளுக்குப் பின்னால் சமூக நலத்திட்டங்களின் அக்கறைகள் உண்டு. அதன் மறுதலையாகக் கிடைக்கும் வருமானத்தைக் கையாள்பவர்களின் தன்னலமும் சுரண்டலும் இருக்கவே செய்யும். 

தமிழகம் தழுவியல் பண்பாட்டுக் காலங்காட்டிகளும் சுற்றுலாக்களும் 10 ஆம் நூற்றாண்டுக்கு முந்திய தமிழ்ப் பனுவல்களில் இல்லை. செவ்வியல் பிரதிகளான அக, புறக் கவிதைகள், பதிணென்கீழ்க்கணக்கு நூல்கள், சிலம்பு, மணிமேகலை போன்றவற்றில் விழாக்கள் சார்ந்த இடப்பெயர்வுகள், பயணங்கள் பற்றிய குறிப்புகள் இல்லை. ஆனால் தமிழ்ப் பக்திக் கவிதைகளான தேவாரம், திவ்யப்பிரபந்தம் போன்றவற்றில் இந்தச் சொல்லாடல்கள் முக்கியமான ஒன்றாக மாறியிருக்கிறது. தேவாரம் பாடிய மூவர் முதலிகளால் பாடப்பெற்ற தலம் எனச் சிவன் கோவில்கள் பெருமைபேசிக்கொண்டன. அந்தப் பெருமையில் சிவனை அந்த ஊரோடு இணைக்கும் - வட்டாரத்தன்மையை அளிக்கும் நுட்பங்கள் வெளிப்பட்டுள்ளன. 63 நாயன்மார்கள் சிவன்கோவில்களில் உழவாரப்படைகளை அமைத்துக் கோயில்பண்பாட்டை உருவாக்கியிருக்கிறார்கள். தேவாரப் பாசுரங்கள் பாடப்பெற்ற தலம் என்பதை இன்றும் சிவன்கோவில்கள் கல்வெட்டுகளில் எழுதி வைத்துள்ளன. பெருங்கோயில்களோடு சிவனைக் கொண்டுவந்து சேர்த்த வேலையைப் பெரியபுராணம் வேறுவிதமாகச் செய்தது. சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த அடியார்களுக்கும் உதவுவதற்காக - அருள் செய்வதற்காக ஒவ்வொரு ஊருக்கும் - அடியார்களின் வீட்டுக்கே வந்ததாகப் புனைவுகள் செய்தது. நாயன்மார்களோடு போட்டிக் களத்தில் இருந்த வைணவ ஆழ்வார்களும் ஊர் ஊராகப் போய்ப் பிரபந்தக் கவிதைகள் பாடிக் கண்ணனையும் திருமாலையும் கிருஷ்ணனையும் உள்ளூர்க் கடவுளாக மாற்றினார்கள். 

இந்தத் தன்மை, பேரரசுக் கொள்கையுடன் சோழர்களின் ஆட்சிப்பரவல் நிகழ்ந்த பின்பே நடந்தது. இறைவனை இலக்கியப்பனுவல்களில் உள்ளூருக்குரியவனாக மாற்றிய அதே நேரத்தில் அரசர்கள் உலகம் தழுவியவர்களாக ஆக்கப்பட்டார்கள் என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று. சோழப்பேரரசர்களின் மெய்க் கீர்த்திகளிலும் பொது நிர்வாகம் சார்ந்த கல்வெட்டுகளிலும் திரிபுவனச் சக்கரவர்த்தி, உலகமுழுதாண்டவன், அவனிமுழுதாண்டான் என்ற பட்டங்களுடன் பரவினார்கள்.ஒரு தேசத்தின் ராஜாவுக்கோ, யுவராஜாவுக்கோ பட்டங்கட்டும் பட்டாபிஷேகம் போன்ற பொது நிகழ்வுகளை அல்லது பெண் தேடும் சுயம்வரங்களைப் பற்றிய விவரணைகளில் மேருமலை முதல் குமரிக்கடல் வரையிலான ராசாக்கள் வந்து கலந்துகொண்டதாகக் குறிப்புகள் உள்ளன. இத்தகைய குறிப்புகள் பிற்காலச் சோழர்கள் காலத்துக்குப் பிந்திய புராணங்கள் வழியாக நிலைநிறுத்தப்பெற்றன. ஒவ்வொரு ஊருக்கும் எழுதப்பெற்ற தல புராணங்கள் இதில் முக்கியப்பங்காற்றியுள்ளன. 

இந்தியாவில் இப்போதிருக்கும் அரசு - குறிப்பாக மைய அரசு இரட்டைத் தன்மைகொண்ட அரசாக இயங்குகிறது. பொருளியல் சார்ந்து நவீனப் பேரரசாகக் காட்டிக் கொள்ள ஆசைப்படுகிறது. உலக வர்த்தகக் குழுமங்களைத் தேசத்தில் உருவாக்கிப் பெருவணிகர்களாக மாற்றும் விசையை முடுக்கிவிடுகிறது. அதே நேரத்தில் கோயில் பண்பாட்டு நடவடிக்கைகள் மூலம் உள்ளூர்த் தன்மைகளோடு இணைத்துக் கட்டிப்போடப் பார்க்கிறது. இந்த அரசைப் பயன்படுத்தி உடல் உழைப்பில் ஈடுபடாத வர்க்கமாகத் தொடரும் கூட்டம் அதற்கான புனிதப் பிம்பங்களை உயிர்ப்பித்துத் தருகிறார்கள். அப்பிம்பங்களோடு இணைத்து இயற்கை வெளிகளான ஆறுகள், குளங்கள், மலைகள் போன்றன புனித வெளிகளாக மாற்றப்படுகின்றன. அப்புனித வெளிகளில் இருக்கும் கோவில்கள் பண்பாட்டுச் சுற்றுலா மையங்களாக ஆக்கப்படுகின்றன. பொருளியல் நடவடிக்கைகளைப் பக்தியாகக் காட்டிக்கொள்வதின் வழியாகச் சமயமும் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது.

நவீன அரசாங்கத்தில் அரசும் பொருளியல் நடவடிக்கைகளும் சமூகநலத்திட்டங்களோடு இணைந்திருக்க வேண்டும். ஆனால் இந்த அரசோ சமய நடவடிக்கைகளோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதின் வழியாக நிலவுடமைக்கால அரசாகவும் காட்டிக் கொள்கிறது. ஒரே உடம்பில் இரண்டு தலைகள் கொண்ட அற்புதக் கதைகளைத் திரும்பவும் எழுதுகிறார்கள் நவீனப் பண்டிதர்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்