எஸ்.விஸ்வநாதனின் குளிர்ந்த கரம் பற்றுதல் இனி இல்லை


சென்னை நகரம் பிடிக்காமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். ஒவ்வொரு முறை போகும்போதும் சிலரைப் பார்க்க வேண்டும் என நினைத்துக் கொண்டு போவேன். அதன் போக்குவரத்து நெருக்கடியும் போகவேண்டிய தூரத்தைக் கடக்க எடுத்துக்கொள்ளும் நேரமும் சேர்ந்து கிளம்புவதையே தடுத்துவிடும். பார்க்க நினைத்தவர்களைப் பார்க்காமலேயே வருத்தத்துடன் - தொலைபேசியில் பேசிவிட்டுத் திரும்பிவிடுவேன். இரண்டு வாரங்களுக்கு முன்னால் தொலைபேசியில் வருத்தத்துடன் பேசிவிட்டு வந்த நண்பர் எஸ்.விஸ்வநாதன். இனி அவரோடு தொலைபேசியிலும் பேசமுடியாது. இனி அவரது குரலும் அன்பாய்ப்பிடித்துக்கொள்ளும் கைகளின் குளிர்மையும் இனி இல்லை.

15 ஆண்டுகளுக்கு முன்னால் மகளுக்குச் சென்னையில் வேலை கிடைத்துத் தங்குமிடம் தேடிக்கொண்டிருந்தபோது சென்னையில் பெண்கள் தங்கும் விடுதிகளின் தொலைபேசி எண்கள் சிலவற்றைக் கொடுத்து இடம் இருக்கிறதா என்று பாருங்கள்; இடம் இருந்தால் வாங்கிவிடலாம் என்று சொன்னவர் அவர்தான். அண்ணாநகரில் ஒரு விடுதியில் இடம் இருந்தது; ஆனால் அறிமுகப்படுத்த ஆட்கள் வேண்டும் என்று சொன்னபோது அவரே பாதுகாவலர் என்ற இடத்தில் நின்று இடம் வாங்கிக் கொடுத்தார்.

பரபரப்பு இதழியலாளர்களுக்கு நடுவில் காத்திறமான இதழியலாளராகச் செயல்பட்டவர் எஸ்.வி., அவரோடான பழக்கத்திற்கு வயது 40 . நான் மதுரைப்பல்கலைக் கழகத்தில் முதுகலை மாணவனாக இருந்த நேரம். எனது விருப்பப் பாடங்களில் ஒன்றாக இதழியல் இருந்தது. அப்போது சந்தித்த சந்திப்புதான் முதல் சந்திப்பு. பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடுகளைச் சின்னச்சின்னத் தவறுகளாகக் காட்டித் தமிழ்ப் பத்திரிகைகள் எழுதிக்காட்டிக் கொண்டிருந்த காலகட்டத்தில் விரிவான கட்டுரை ஒன்றை இண்டியன் எக்ஸ்பிரஸில் எழுதினார். அதற்காக அவரும் நானும் நடத்திய உரையாடல்கள் இப்போதும் நினைவில் இருக்கின்றன. அவரைப் பார்த்து நானும் இதழியலாளனாக ஆகவேண்டுமென நினைத்ததுமுண்டு. இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பில் சனிக்கிழமைதோறும் இலக்கிய இணைப்பு ஒன்று கொண்டு வர வேண்டும் என்று திட்டமிட்டபோது அவரை அதன்-WEEKEND - பொறுப்பாசிரியராக நியமித்தது அதன் நிர்வாகம். அதற்குக் காரணமாக இருந்தவை நிருபரின் எல்லைகளைத் தாண்டி அவர் எழுதிய இலக்கியக் கட்டுரைகளே. கி.ராஜநாராயணன் எழுத்துகளை ஆப்பிரிக்க எழுத்தாளர்களின் கறுப்பு இலக்கியத்தோடு ஒப்பிட்டு விரிவாக எழுதிய அறிமுகம் -ஆங்கிலத்தில் வந்த அந்த அறிமுகம் கி.ரா.வுக்கு நிறைய வாசகர்களைக் கொண்டுவந்து சேர்த்தது என்பார்.

கவிஞர் மீராவின் அன்னம் புத்தகக் கடையில் சந்திக்கும் இளையோர் கூட்டத்தில் அவர்தான் நடுத்தர வயதுக்காரர். நாங்கள் இருபதுகளின் வேகத்தில் இருந்தபோது அவர் நாற்பதுகளின் நிதானத்தோடு கைகளைப் பற்றி நிறுத்திப் பேசுவார். அவரது கரங்கள் எப்போதும் குளிர்ச்சியாகவே இருக்கும். அவரது பேனா அவருக்கு ஏழாவது விரல். இயற்கையாகவே அவருக்கு ஆறுவிரல்கள். இண்டியன் எக்ஸ்பிரஸிருந்து இந்துக் குழுமம் ப்ரண்ட்லைன் என்னும் பருவ இதழைத் தொடங்கியபோது அதன் இணையாசிரியராகச் சென்னைக்குப்போனார். அவ்விதழில் எழுதிய கட்டுரைகள் தமிழ்நாட்டில் எழுந்த தலித் அரசியலின் பதிவுகளாக இருந்தன. அவற்றைத் தொகுத்து Dalits in Dravidian Land என நூலாகவும் வெளியிட்டுள்ளார். புதுவையிலிருந்த காலத்தில் வீட்டிற்கு வந்திருக்கிறார்; நானும் அவருமாகப் பிரபஞ்சன், கி.ரா., ரவிக்குமார் எனப் பலரையும் சந்தித்திருக்கிறோம். நெல்லைக்குச் சென்றபின் அதிகமாகச் சந்திப்புகள் நடந்ததுண்டு. அவரது துணைவியார் வழி உறவுகள் அங்கே இருந்ததால் அடிக்கடி வருவார். வரும்போதெல்லாம் சந்தித்து இலக்கியம் அரசியல் எனப் பேசுவோம்.

உயிர்மை பதிப்பகத்தின் சார்பில் எனது முதல் நூல் பிம்பங்கள் அடையாளங்கள் வந்தபோது அதனைப் பெற்றுச் சிறப்புரை ஆற்ற ஒருவர் பெயரைச் சொல்லுங்கள் என மனுஷ்யபுத்திரன் கேட்டபோது அவரது பெயரையே சொன்னேன். மனுஷ்ய புத்திரனுக்குப் பிரபல எழுத்தாளராக இல்லையே என்ற தயக்கம் இருந்தது. அந்தத் தயக்கம் எஸ்.வி.க்கும் இருந்தது. எனது பிடிவாதத்தால் இருவரும் சம்மதம் தெரிவித்தார்கள். முதல் நூல் வெளியீட்டில் அவர்தான் பேசினார்.புனைகதைகள், நாடகம், சினிமா, தலித் அரசியல் போன்ற பொருண்மைகளில் அவர் எழுதிய பல கட்டுரைகளில் இடையே மேற்கோள் காட்டும் கருத்தாக, எனது கருத்துகள் இருந்துள்ளன.

கட்டுரைகளின் தலைப்புப் பக்கத்தில் அடியில் பெயரை எழுதும்போது முழுமையாக S.VISWANATHAN எனவும் ஒரு நிருபர் என்ற நிலையில் கடைசியில் பெயரை இடும்போது YESVEE எனவும் இருக்கும் பெயரும் அவரது வட்டமுகம் கொண்ட உயர்ந்த தோற்றமும் இனி நினைவில் மட்டுமே இருக்கப்போகிறது. தூரம்தூரமாய் வாழ்வதின் வலிகளைத் தாங்கத்தான் வேண்டியிருக்கிறது. என் சார்பில் அவரது பாதுகாப்பில் சென்னையில் இருந்த மகள் அஞ்சலி செலுத்தச் செல்வார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்