ஓரங்க நாடகமும் ஓராள் நாடகமும்

ஓரங்க நாடகம் (One - Act Play) என்பதையும் ஓராள் நாடகம் (Mono -Acting) என்பதையும் பல நேரங்களில் குழப்பிக்கொள்வதைப் பார்த்திருக்கிறேன். குறிப்பாகக் கல்வி நிறுவனங்கள் நடத்தும் போட்டிகளில் இக்குழப்பம் உச்சநிலையை எட்டியிருக்கிறது. இவ்விரு சொற்களும் நாடகவியல் (Dramatics), அரங்கவியல் (Theatre) என்ற இரண்டின் வேறுபாட்டோடு தொடர்புடைய சொற்கள். உரையாடல்களே நாடக இலக்கியத்தின் அடிப்படைக்கூறு. அவ்வடிப்படைக்கூறு ஒரு குறிப்பிட்ட வெளியில் நடக்கும்போது காட்சி என்னும் சிற்றலகு உருவாகிறது. காட்சிகளில் இருக்கும் தொடர்புகளால் அங்கம் என்னும் பேரலகு வடிவம் கொள்கிறது.  அங்கங்கள் நாடக இலக்கியத்திற்குத் தேவையான முரண்களால் வளர்ந்து உச்சநிலையை அடைந்து முடிவை நோக்கிச் சென்று நாடகமாக மாறுகிறது. இவ்வளர்ச்சியையும் முடிவையும் ஒரே அங்கத்தில் தருவதாக எழுதப்படும் நாடகம் ஓரங்க நாடகம். இதற்கு மாறாக ஓரங்க நாடகத்தையோ, பல அங்கங்கள் கொண்ட நாடகத்தையோ, அதற்குள் இடம்பெற்றிருக்கக் கூடிய பல்வேறு கதாபாத்திரங்களையும் ஒரே நடிகர் தனது குரல், உடல் அசைவுகள், ஒப்பனைகள் வழியாக வேறுபடுத்திக் காட்டி நடிக்கும் நிகழ்வு ஓராள் நாடகம். இவ்வேறுபாட்டை விளக்கும் இரண்டு நிகழ்வுகளை இங்கே சொல்கிறேன்.

இமையத்தின் போலீஸும் ப்ரசன்னா ராமசுவாமியின் எல்லா உயிர்க்கும் 

நிகழ்காலத் தமிழில் நாடகம் இயக்கும் இயக்குநர்கள் இருக்கிறார்கள்; நடித்துப் பார்க்க நடிகர்களும் இருக்கிறார்கள். தேவையான நாடகப் பிரதிகளும் பார்வையாளர்களும் இல்லை. வாசிப்பதற்கான வாசகர்களும்கூட இல்லை என்பதுதான் உண்மை. புனைகதை எழுதும் பலரால் நாடகங்கள் - குறிப்பாக நல்திறக் கட்டமைப்பு கொண்ட நாடகங்களை எழுத முடியும். ஜெயகாந்தனின் ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன, கோகிலா என்ன செய்துவிட்டாள், யுகசந்தி, கிழக்கும் மேற்கும் போன்றன நாடக இலக்கியத்தின் உள்கட்டுமானங்களைக் கொண்ட புனைகதைகள். பூமணி, பிரபஞ்சன், பா.செயப்பிரகாசம், பாவண்ணன் போன்றவர்களின் கதைகளிலும் கூட வலுவான உரையாடல்கள் உள்ளன. காலத்தையும் நிகழ்வெளிகளையும் கச்சிதமாக மாற்றிவிட்டால் நாடகப்பிரதிகள் உருவாகிவிடும். 

நேர்கோட்டில் கதை சொல்லாத சுந்தரராமசாமி, திலீப்குமார், எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி போன்றவர்களால் நவீனத்துவத்தின் பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட நாடகங்களை எழுதித் தந்திருக்க முடியும். அவர்களின் கதைகளில் வெளிப்படும் குறியீட்டுத் தன்மைகளையும் அபத்த நிலைகளையும் இருத்தலியல் கேள்விகளையும் நாடகப்பிரதிகளாக ஆக்கமுடியும். ஆனால் இங்கே நாடகப்பிரதிகளை மேடையேற்ற நெறியாளர்கள் தயாரில்லாத நிலையில் நாடகங்களாக எழுத ஒருவரும் முன்வருவதில்லை. இங்கே இயங்கும் நாடக நெறியாளர்கள் தங்களின் மேடையேற்றப் பாணிக்கேற்ப பிரதிகள் கிடைக்காததால் அவர்களின் வசதிக்கேற்ப - நிகழ்த்துப் பிரதிகளை -ஆட்டப் பிரகாரங்களை -உருவாக்கிக் கொண்டு மேடையேற்றிவிட்டு நகர்ந்து விடுகிறார்கள். மேடையேற்றத்தின்போது பார்வையாளர்களைக் கவர்ந்த நிகழ்த்துப் பிரதிகளுக்கு வாசகர்களும் கிடைப்பதில்லை. இன்னொரு இயக்குநரும் கிடைப்பதில்லை. நாடக இலக்கியத்தின் எந்த வகைக்குள்ளும் அடங்காமல் இருப்பதால், வாசிப்பனுவத்தைத் தராமல் போய்விடும் நாடகப்பிரதிகளைப் பாடத் திட்டங்களுக்குக் கூடப் பரிந்துரைக்க முடியவில்லை. கவிதைகளிலிருந்து, சிறுகதைகளிலிருந்து, நாட்டார் கதைகளிலிருந்து உருவாக்கப்படும் இயக்குநரின் நிகழ்த்துப் பிரதியை அதே கோணத்தில் வாசகர்களை வாசிக்கக் கோர முடியது. இதே அனுபவம் எனக்கும் உண்டு. நானும் சில நாடகங்களை உருவாக்கி மேடையேற்றியிருக்கிறேன். கடந்த கால் நூற்றாண்டுக்காலமாக ஆண்டிற்கு இரண்டு மூன்று நாடகங்களை மேடையேற்றிவரும் ப்ரசன்னா ராமசுவாமியின் பிரதிகளும் நிகழ்த்துப் பிரதிகளாகவே இருக்கின்றன.
 
இமையத்தின் கதைகளில் நாடகக்கூறுகள் : 

எழுத்தாளர் இமையத்தின் புனை கதைகள் ஓரங்க நாடகங்களாகவும் மூவங்க நாடகங்களாகவும் அமையக்கூடிய கட்டமைப்புடன் இருக்கின்றன. அவரது கதைகளின் நிகழ்வெளிகள் பெரும்பாலும் ஒன்றிரண்டுக்கும் மேல் இருப்பதில்லை. நிகழும் வெளிகளில் கச்சிதத்தைக் கொண்டிருக்கும் அவரது கதைகளில் நினைக்கப்படும் வெளிகளில் அலையும் பாத்திரங்கள் பெரும்பாலும் உரையாடல்களின் வழியாகவே கதைக்குள் அலைகிறார்கள். நாடக இலக்கியத்தின் மிகச் சிறிய – அடிப்படையான கூறு உரையாடல் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அவரது எழுத்தின் ஆகப்பெரும் பலமே உரையாடல்கள் என்பதை அவரது வாசகர்கள் அறிவார்கள். இந்தக் காரணங்களாலேயே அவரது பல கதைகளை நாடகங்களாக மேடையேற்றம் கண்டுள்ளன. 

இந்திய சாதிய சமூக யதார்த்தத்தை முகத்தில் அறைவதுபோலப் பேசிய பெத்தவன் கதை பல மேடைகளைக் கண்டுள்ளது. அதை இயக்கிய இரா.இராசுவே அணையும் நெருப்பு, ஆகாசவீரன் ஆகிய கதைகளையும் பாண்டிச்சேரி நாடகப்பள்ளி மாணவர்களைக் கொண்டு மேடையேற்றியுள்ளார். கூத்துப்பட்டறையிலும் அவரது அம்மா, நிஜமும் பொய்யும் முதலான சிறுகதைகள் நாடகமாக மேடையேற்றப்பட்டுள்ளன. இபோது ப்ரசன்னா ராமசுவாமி அவரது போலீஸ் கதையை நிகழ்த்திக் காட்டியுள்ளார். 
சாதாரண உரையாடலில் தொடங்கிச் சின்னச்சின்ன சிக்கல் வழியாக ஓர் உச்சத்தை அடைந்து முடிவை நோக்கி நகரும் ஆரம்பம் -வளர்ச்சி - உச்சம் -வீழ்ச்சி என்ற கட்டமைப்பு கொண்ட நிகழ்வுக்கான வெளியில் மாற்றம் இருக்காது; பங்கேற்கும் பாத்திரங்களிலும் நுழைவும் வெளியேற்றமும் இருக்காது. இதுதான் ஓரங்க நாடகத்தின் வடிவம். இமையத்தின் போலீஸ் கதை இந்த வடிவத்தைக் கச்சிதமாகக் கொண்டிருக்கிறது. ஆனால் எழுதப்பட்டுள்ள முறையில் கதைசொல்லி தன்னை மறைத்துக் கொண்டு படர்க்கையில் கதைசொல்கிறார். படர்க்கையில் கதைசொல்லல் என்பது ஆசிரியர் கூற்று. அக்கூற்றுமுறைக்குச் சில சாத்தியங்கள் உண்டு. 

ஆசிரியர் எழுப்ப நினைக்கும் விமரிசனங்கள், விவாதங்கள், வினாக்கள் என எல்லாவற்றையும் பாத்திரங்களின் உரையாடலாக மாற்றிக் கேட்டுவிட்டுத் தனக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்று ஒதுங்கிக் கொள்ளலாம். தனது கதைகளின் பாத்திரங்களின் வழித் தனது வினாக்களை எழுப்பிவிட்டு ஒதுங்கிக் கொள்வதில் இமையம் தேர்ந்த எழுத்தாளர். போலீஸ் கதையிலும் அந்த உத்தியைச் சரியாகவே செய்துள்ளார். விலக்கவிரும்பாத கனியாகச் சாதியைக் கருதும் ஆதிக்கவாதிகளின் முன்னால் நடைமுறையிலிருக்கும் அரசு நிர்வாகங்களில் ஒன்றான காவல் துறையும், அதனை வழிநடத்தும் நீதிமன்றங்களும் தோற்றுக்கொண்டே இருக்கின்றன என்பதை எள்ளலுடன் சொல்ல நினைக்கும் இமையம் தன்னை முன்னிறுத்தாமல் காவல் துறையின் இரண்டு பணியாளர்களைக் கொண்டு பேசுகிறார். ஒருத்தர் புதிதாக வேலைக்குச் சேர்ந்த போலீஸ். இன்னொருவர் 20 வருடம் வேலைசெய்து ஏட்டாகப் பதிவு உயர்வு பெற்றுவிட்ட ஏட்டய்யா.ஏட்டய்யாவின் வீட்டில் கதை நிகழ்வதால் ஏட்டய்யாவின் மனைவியும் கதையின் பாத்திரமாக இருக்கிறார். மூவரையும் அந்த இடத்தில் சந்திக்க வைப்பதும் உரையாடச் செய்வதும் அவர்கள் ஒரே சாதி என்பதுதான். தன்னை மேல்சாதிக்காரர்களாகக் கருதிக் கொள்ளும் மூவரும் கீழ்ச்சாதிக்காரர் ஒருவரின் பிணத்தை முன்னிட்டு நடந்த சிக்கலை விவாதிக்கிறார்கள். 

கீழ்ச்சாதிக்காரனின் பிணத்தைத் தொட்டுத் தூக்கி அடக்கம் செய்ய நேரிட்ட அவமானத்திற்காகத் தனக்குக் கிடைத்துள்ள போலீஸ் வேலையை விடத்தயாராகும் இளைஞனைத் தடுத்து நிறுத்தி நடப்பு வாழ்க்கையைப் புரிந்துகொண்டு சாதியைக் கையாளப் பழகிக்கொள்ளப் பழக்கப்பார்க்கிறார் ஏட்டய்யா. அவரது வேண்டுகோளை மறுதலித்துக் கிளம்பும் போலீஸை லூசுப் பயல் எனத் திட்டுவதோடு கதை முடிகிறது. 

கதையைச் சொல்லும் ஆசிரியரை -படர்க்கை நிலைப் பாத்திரத்தை முற்றிலுமாக நீக்கிவிட்டு உரையாடல்களையும் நிகழ்வெளியையும் மட்டும் மேடையில் கொண்டுவந்தால் கச்சிதமான ஓரங்க நாடகமாக ஆகிவிடும் இந்தப் பிரதியின் மீது நாடக நெறியாளர் ப்ரசன்னா ராமசாமி தனது பார்வைக்கோணத்தை உருவாக்க விரும்பியுள்ளார். அதற்காக நாடகத்தை நிகழ்த்தும் பாத்திரத்தை உருவாக்கியுள்ளார். தமிழ் மரபுக்கூத்துப் பாத்திரமான கட்டியங்காரனைப் போல கட்டியம் சொல்வதையும், தானே ஒரு பாத்திரமாக - ஏட்டய்யாவின் மனைவி- ஆகிக் கொள்வதையும் செய்கிறது. இந்த மாற்றத்தோடு சாதி ஏற்றத்தாழ்வுகளும், சாதியின் பெயரால் நடக்கும் ஒடுக்குதல்களும் வன்முறைகளும் இல்லாத சமநிலை வேண்டும் என்ற ஆசையை -முன்வைப்பை - செய்தியாகப் பார்வையாளர்களுக்குத் தரவிரும்பியுள்ளார் நெறியாளர்.சாதியின் குரூரங்களை நேரடியாகப் பேசும் ஆதவன் தீட்சண்யாவின் கவிதையையும் வேறுபாடுகளற்ற வாழ்க்கையை முன்வைக்கும் தெலுங்குக் கவியொருவரின் பாடலையும் இணைத்து ”எல்லா உயிர்க்கும்” எனத் தலைப்பிட்டதின் மூலம் அதைச் செய்திருக்கிறார். 

ஓவியர் நடராஜின் மூன்று ஓவியங்களைப் பின்னணியாகவும் இரண்டு நாற்காலிகளையும் ஒரு சிறு ஸ்டூலின்மீது ஒன்றிரண்டு வீட்டு உபயோகப் பொருட்களை மேடைப்பொருட்களாகவும் கொண்டு நாடகத்தை வடிவமைப்புத்துள்ள ப்ரசன்னா ராமசாமி, பிரதியில் செய்துள்ள இணைப்புகள் இமையத்தின் கதை எழுப்பும் விவாதங்களோடு ஒத்துப்போகின்றவை அல்ல. ஆனால் சாதியைப் பேச்சாகக் கொண்டவை என்ற அளவில் நாடகத்தின் மையத்தோடு பார்வையாளர்களைச் சென்றடைகின்றன. ஏன் இன்னும் இந்த வேறுபாடுகளும் வன்மமும் தொடர்கின்றன என்று சிந்திக்கத் தூண்டக்கூடும். 

சென்னை ஆர். ஏ.புரம் வாண்டரர் ஆர்டிஸ்ட் சிற்றரங்கொன்றில் நிகழ்த்தப் பட்டதிற்குப் பின் நடந்த உரையாடல் இதை உணர்த்தியது. அந்த உரையாடல் இன்னொன்றையும் தெளிவாக்கியது. அந்நிகழ்வைப் பார்க்க வந்த குறிப்பிட்ட வகையான நகர மனிதர்கள் தமிழ்நாட்டுக் கிராமங்களின் நடப்பு நிலையிலிருந்து பல பத்தாண்டுகள் விலகியவர்களாக இருக்கிறார்கள். சாதியை ஒழித்துவிட எழுத்தாளரிடம் வழிமுறையைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலரோ சாதிவேறுபாடு இன்னுமா இருக்கிறது? என்று ஆச்சரியம் காட்டுகிறார்கள். தனது இலக்குப் பார்வையாளர்கள் யார் என்பதைத் தீர்மானித்துக் கொண்டு அவர்களின் நினைப்புகளையும் நம்பிக்கைகளையும் கலைத்துப் போடலாம் எனத் தீர்மானித்துக் கொண்டு சாதி அரசியலை மையமிட்ட ஒரு நிகழ்வைத் தந்துள்ளார் ப்ரசன்னா. 

நாடகத்தின் பாத்திரங்களின் உடல்மொழியும் உரையாடல்களும் போதாமையோடு வெளிப்பட்டன. போலீஸ்காரராக நடித்தவரிடம் வெளிப்பட்ட கோபமும் எரிச்சலும் ஏட்டய்யாவின் முன்னால் வெளிப்படவேண்டியன அல்ல. ஆற்றாமையும் இயலாமையும் கொண்டதாக அவரது வெளிப்பாடு இல்லை. ஏட்டயாவின் மனைவியாகவும் கட்டியம் கூறுபவராகவும் பாத்திரமேற்ற நடிகையின் பாவங்கள் இரண்டுக்குமான மாற்றங்களை வெளிப்படுத்தவில்லை. கூடுதல் அரங்க வெளியும் ஒளியமைப்பும் நடிப்புப் பயிற்சிகளும் தேவைப்படும் நிகழ்வாகவே இருந்தது நேற்றைய நிகழ்வு. 

களப்பூரான் தங்கத்தின் ஓராள் நாடகம் 

நடி -யின் திறனைக் கூட்டும் அரங்க வடிவம் ஓராள் நாடகம். உருவாக்கிக்கொண்ட காட்சிப்பின்னணிகளில் தனியொரு ஆளாக வெவ்வேறு பாத்திரங்களாக மாறி நடிக்கும் ஓராள் நாடகம், அதன் நுவல் பொருளைவிட - சொல்ல நினைத்த செய்திக்கான நிகழ்வுகளை உருவாக்குவதைவிட, அந்த ஆளின் நடிப்பையே அதிகமாக கவனிக்க வைக்கும் வடிவம். தனிமொழியின் கூறுகளைக் குறைவாகவும், மாறுபட்ட குணங்களைக் கொண்ட ஒன்றிரண்டு பாத்திரங்களையும் கொண்டதாக ஒரு பிரதியைத் தனியாள் நடிக்கும்போது பார்வையாளர்கள் அதன்மீது கவனம் செலுத்துவர். 

இந்த அடிப்படைகளை உள்வாங்கியவராகக் களப்பூரான் தங்கம் இந்த மேடை நிகழ்வில் தன்னை வெளிப்படுத்தியுள்ளார். அதிகமும் நகைச்சுவைத்தொனி வெளிப்படும் இந்த நிகழ்வுக்குள் இழையோடும் செய்தி புலம்பெயர் தேயமொன்றில் வாழ்பவர்களின் தன்னிலைக்குள் நுழைய நினைக்கின்றது. 

மட்டக்களப்பிலிருந்து கனடா சென்று வாழும் களப்பூரான் தங்கத்தின் அரங்கப் பயிற்சியை நேரில் பார்த்திருக்கிறேன். அவரோடு ஓரிரவு தங்கி அரங்கம் குறித்து உரையாடி இருக்கிறேன். கனடாவிலிருந்து வெளிவரும் காலம் இதழின் ஆசிரியர் செல்வம் தயாரித்த கூத்து ஒன்றிற்காகத் தனது உடலை இசையோடு இசைத்து அடவுகள் போட்டபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நானும் கூத்துப் பயிற்சி எடுத்தவன் தான். ஆனால் அவ்வடிவத்திற்குத் தேவையான சக்தியை என்னால் தரவியலாது என்று பின்வாங்கியவன். ஆனால் களப்பூரான் தொடர்ச்சியாகக் கூத்து அடவுகளைக் கையாள்வதில் விருப்பம் கொண்டவராக இருந்தார். கூத்து அடவுகளின் சில கூறுகள் இந்த ஓராள் நாடகத்திலும் வெளிப்பட்டுள்ளது. 

மேடையில் பார்த்து ரசித்துவிட்டு எழுத வேண்டிய குறிப்புகளை சென்னையில் உட்கார்ந்து  யூ-ட்யூப் வழியாகப் பார்த்து எழுதிக் கொண்டிருக்கிறேன். இது ஒருவிதத்தில் காட்சிக் கலைகளுக்குக் கிடைத்த வரம் என்றே தோன்றுகிறது.
வாழ்த்துகள் தங்கம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்