சமயங்கள் -நிகழ்வுகள் -பின்னணிகள்


உலக அளவில் திரள் மக்களைப் பற்றி ஆய்வு செய்த ஆய்வாளர்கள் பொதுப்புத்தி என்றொரு சொல்லை அதிகம் பயன்படுத்துகின்றனர். தனக்கெனத் தனி அடையாளம் கொண்டவர்களாக ஒவ்வொருவரும் இருந்தாலும் வாழும் இடம், சீதோஷ்ணம், நடைமுறை வாழ்க்கைச் சிக்கல்கள் சார்ந்து பொதுக்குணங்கள் உருவாகி விடுவதைத் தவிர்க்க முடியாது என்பதுவும் அவர்கள் வாதம். இப்பொதுப் புத்தி வெளிப்படையாகப் புலப்படாதவை என்றாலும் அதுவே ரசனை, முடிவெடுத்தல், தெரிவு செய்தல், பின்பற்றுதல் போன்ற அகவாழ்க்கை முடிவுகளையும் அவற்றின் தொடர்ச்சியாக அரசியல், பொருளாதாரம், பண்பாடு, சமூக நடைமுறை போன்ற புறவாழ்க்கை அமைவுகளையும் தீர்மானிக்கும் சக்தி கொண்டது என்பதாகவும் ஆய்வுமுடிவுகள் சொல்கின்றன. பொதுப்புத்தி உருவாக்கத்தில் சமய நம்பிக்கைகள் செயல்படும் அடிப்படைகளை வைத்து எழுதப்பெற்ற இச்சிறுகட்டுரைகளை வாசித்துப்பாருங்கள்
க்தி இயக்கமென்னும் சமூக நிகழ்வு

இலக்கிய வரலாற்றிலும் சமூக அரசியல் வரலாற்றிலும் ஒற்றைப்படுத்தப்பட்ட சொல்லாடல்களை இன்னும் அப்படியே ஏற்பதிலுள்ள சிக்கல்களை விவாதிக்க வேண்டும். 
பக்தி இலக்கியம், பக்தி இயக்கம் எனச் சொல்லப்படுவதை ஒற்றையாகப் பார்க்கக்கூடாது. அதற்குள் வைணவ இலக்கியம், சைவ இலக்கியம் என இருபெரும் முரண்நிலைப் போக்குகள் இருந்தன. முரண்நிலையற்று இணைந்து செயல்பட்டதாக வரலாற்றாசிரியர்கள் கட்டமைத்திருக்கிறார்கள். எழுதப்பெற்ற இலக்கியங்களின் வழியாகவும் கிடைக்கும் ஆதாரங்கள் வழியாகவும் அப்படியொரு இயக்கமும் இலக்கிய உருவாக்கமும் நிகழ்ந்ததாகச் சொன்னவர்களுக்கு வைதீக இந்து மதத்திற்குள் இவ்விரு பிரிவும் சகோதர அமைப்புகள் என்ற கருத்தியல் இருந்தது. ஆனால் அவ்விரு சமயங்களும் சமய நடவடிக்கைகள் சார்ந்து முரண்பாடுகள் கொண்டவை தான்.
இவ்விரு சமய நடவடிக்கைகளுக்கும் முகம் கொடுத்த அமைப்பைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் எல்லாக் கடவுள்களையும் வழிபாடு செய்யும் பெருங்கூட்டமும் இருந்தது. இந்தியாவில் அப்படியானவர்களே இப்போதும் அதிகம் என்று கூடச் சொல்லலாம். தூண்டப்படாத வரை அக்கூட்டம், இன்னொரு சமயத்தவரை எதிரிகளாகவும், அழிக்கப்பட வேண்டியவராகவும் கருதுவதில்லை. ஆனால் சமயத்தை அமைப்பாக்க நினைப்பவர்களும், அவ்வமைப்பின் கருத்தியலை அரசின் கருத்தியலாக ஆக்கிவிட நினைப்பவர்களுமே சமயப் பூசல்களை உருவாக்கியிருக்கிறார்கள்; உருவாக்குகிறார்கள். 

களப்பிரர்களின் ஆட்சி அதிகாரம் சமண ஆதரவு கொண்டதா? பௌத்த ஆதவு கொண்டதா? எனத் தீர்மானமாகச் சொல்லமுடியாது. அதற்கான சான்றுகள் நிலைப்பட்டனவாக எவையும் இப்போது இல்லை. கிடைக்கும் சான்றுகள் அனைத்தும் அக்கால கட்டத்தில் எழுதப்பெற்ற இலக்கியங்கள் மட்டுமே. இன்றுள்ள சைவக் கோயில் பல சமண வழிபாட்டு அமைப்புகளின் மீதும், பௌத்த வழிபாட்டு அமைப்புகளின் மீது எழுப்பபெற்றவை என முடிவுசெய்ய ஆராய்ச்சிகளைத் திசை திருப்புவது உண்மைகளைக் கொண்டுவரலாம். சில வரலாற்று உண்மைகளைக் கண்டுபிடிப்பதற்காக நிகழ்கால வாழ்க்கையைச் சிக்கலாக்க வேண்டுமா? என்ற கேள்வி அப்போது எழும்.

களப்பிரர்களின் வீழ்ச்சிக்குப் பின் - சில நூற்றாண்டு இடைவெளிக்குப் பிறகு -காவிரிப் படுகையில் மேலெழும்பிய சோழப்பேரரசும் அதன் ஆதரவுபெற்ற சைவசமயமும் தங்களின் எதிர்நிலையாளர்களாகக் கட்டமைத்த சமணர்களை, பௌத்தர்களை எதிர்கொண்டதில் காட்டிய தீவிர நிலைப்பாட்டையும், வன்மத்தையும் வைணவத்தின் மீது காட்டவில்லை என்று சொல்ல சான்றுகள் உள்ளன. பேரமைப்புகளை நிறுவி நிலைபெற்றுவிட வேண்டுமென நினைக்காத சமயங்களின் மீது நம்பிக்கை கொண்டவர்களையும்கூட எதிர்நிலையில் பார்க்கவில்லை. அதே நேரத்தில் சைவத்திற்கும் வைணவத்திற்கும் இடையே முரண்நிலைகள் இருந்தன. இவ்விரு சமயத்தவரும் இன்று நாட்டார் சமயம் எனச் சொல்லப்படும் பேரமைப்புகள் இல்லாத சமயத்தவர்களையும் பிற சமயத்தவர்களாகவே பார்த்தார்கள் என்பதையும் மறுக்க முடியாது. அவர்களை உள்ளிழுக்கும் முயற்சிகளை இவ்விரு பேரமைப்பும் தொடர்ந்து முயற்சிக்கவே செய்துள்ளன. பெருங்கோயில்களில் பிற சமயத்தவர்களுக்குத் தரப்பட்டுள்ள இடங்களின் வழியாக இதனை உணரமுடியும். 

காவிரி வள நாட்டில் அதிகாரம் செலுத்திய சோழர்களுக்கும் வைகை வள நாட்டில் அதிகாரம் செலுத்திய பாண்டியர்களுக்கும் வழிபாட்டுச் சமயமாக சைவம் இருந்த போதிலும் ஆட்சியதிகார நிலையில் மோதல்கள் இருந்துள்ளன. ஆனால் சமயத் தலைவர்களை ஓரிடத்தோடு - நாட்டோடு தொடர்புபடுத்தித் தடுக்கவில்லை. சைவம் வளர்க்க வேண்டி உழவாரப்பணிகள் செய்யப் பயணங்கள் மேற்கொண்ட நாயன்மார்களை ஆதரித்து அனுமதித்துள்ளனர். 
நாயக்கர்களின் வருகைக்குப் பின் அந்தப் பகைநிலை முன்பின் மாறித் தொடரவே செய்தது. அரச ஆதரவுச் சமயமாக சைவம் இருந்ததை மாற்றி வைணவம் பிடித்தது. அப்படிப் பிடித்த வைணவம்கூட சோழர்கால வைணவம் அல்ல.அதன் பரப்புநர்கள் தமிழறிந்த ஆழ்வார்களைப் போன்றவர்கள் அல்ல. நாயக்கர் கால வைணவம் தமிழ்நாட்டுக்கு ஒருவிதத்தில் வெளியிலிருந்து வந்த வைணவமே. . இவர்களின் சமயச் சொல்லாடல்கள் முழுமையும் சம்ஸ்க்ருதத்தை மையமாக்கி, தெலுங்கையும் தமிழையும் அடுத்த இடங்களுக்கு உரியனவாக்கியவை.சம்ஸ்க்ருத மையத்தை எப்போதும் சைவம் ஏற்றுக்கொண்டதாக இல்லை என்பதற்கு இலக்கியச் சான்றுகள் நிறையவே கிடைக்கின்றன.

தமிழ் என்னும் படிமம்

தமிழ் என்பதை மொழியாக மட்டும் நினைத்துக்கொண்டிருந்தவர்களுக்கு அது வெறும் மொழி அல்ல; தனிப்போக்கான சிந்தனை முறை என்பது பலமுறை உணர்த்தப்பட்டிருக்கிறது. மொழியால் உருவாக்கப்படும் இலக்கிய உருவாக்கத்தில் அதற்கெனத் தனி அடையாளம் இருப்பதை உலகம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்திய ஒன்றியத்தின் அதிகாரத்துவக் குழு ஏற்க மறுத்து வந்தது.

தமிழ் என்னும் சிந்தனை முறை அதற்கான கற்றல் முறையையும் கற்பித்தல் முறையையும் கொண்டது. வழிபடுவதற்கான கடவுள்களை நிலத்தோடு இணைத்து உருவாக்கிக் கொண்டது. வழிபாட்டுச் சடங்குகளையும் தனிப்போக்கோடு உருவாக்கி வைத்திருந்தது. திணிக்கப்படும் சிந்தனை முறைகளைத் தள்ளிவிடும் முறையையும் ஏற்கத்தக்க சிந்தனை முறைகளைக் கையாளும் முறைகளையும் வேறுபடுத்தி வைத்திருக்கிறது.

வெகுமக்கள் மனத்திற்குள் தமிழின் எதிராளிகளின் குறியீடுகளும், தந்திரங்களும் நிழல் படிமங்களாகவும் நீரோட்டச் சுழிப்பாகவும் படிந்திருக்கின்றன. அதனை மேல்பரப்பிற்குக் கொண்டுவரும் வேலை மிக எளிது. உதாரணங்கள் சொல்லவும் சுட்டிக்காட்டவும் போதுமான தரவுகளை தமிழின் எதிராளிகளே உற்பத்தி செய்து தருகின்றார்கள். நிதானமாகவும் ஆவேசத்துடனும் உற்பத்தி செய்கிறார்கள். தேர்தலுக்கு முன்பே - ஜெயலலிதாவின் மறைவு தொடங்கி அந்த உற்பத்தி நடந்தது. அதனைக் கண்டறிந்து செய்யப்பட்ட தொடர்ச்சியான பரப்புரைகளே அதற்குப் போதுமானதாக இருந்தது.
இந்தத்தேர்தலின் முடிவுகள் தமிழ் - தமிழர் -தமிழ்நாடு எனச் சொல்லப்படும் ஒவ்வொன்றும் தமிழ் மனத்தின் படிமங்களின் உள்ளர்த்தங்கள் -குறியீடுகள் என்பதைச் சொல்லியிருக்கின்றன. அந்தத் தனிக்குணத்தைப் புரிந்துகொள்ளவும் கையாளவும் பழகாதவரை தேசியவாதம் பேசும் கட்சிகள் - குறிப்பாகப் பாரதீய ஜனதா கட்சி போன்ற எதிர்மனப்படிமங்கள் கொண்ட இயக்கங்கள் வெல்வது எளிதன்று. தமிழாகிய படிமம் தனித்துவமான போக்கு என்பதை எண்ணிக்கை அடிப்படையில் - புள்ளிவிவரங்கள் மூலம் சொல்லியிருக்கிறது தமிழ் மனம்

அதிகாரங்களின் முரணியக்கம்
அமைப்புகள், கருத்தியல்கள், நிறுவனங்கள் என்பன தனியாக இல்லை. ஏற்றுக்கொண்ட மனிதர்களின் இயக்கமே அவற்றின் இயக்கம். அவை தனக்கு முற்றிலும் எதிரானது என்று ஒன்றை அடையாளம் கண்ட பின் அதனோடு விவாதிப்பதில்லை. விவாதித்து வென்றெடுக்க வாய்ப்பில்லை என்பதால் எதிர்த்து வெற்றி கொள்வதெப்படி? என்று மட்டுமே அதற்குள் இருப்பவர்கள் சிந்திக்கின்றனர். அச்சிந்தனை அதனதன் எல்லைக்குள் மட்டுமே நடக்கும்; எவ்வாறு நடக்கின்றன? என்பதை வெளியே காட்டிக் கொள்ளக்கூட விரும்புவதில்லை .
அதேநேரம் தன்னையொத்தது; தன்னிலிருந்து உருவானது எனக்கண்டறியும் ஒன்றோடு முரண்டுபிடிக்கும்;மோதிப்பார்க்கும். அதிகாரத்தின் பிடிமானமும், விலகலும் விளையாடும் விளையாட்டுகள் இவை.

குடும்ப அமைப்புகள்- களவுக்குடும்பம், கற்புக்குடும்பம், கூட்டுக்குடும்பம், தனிக் குடும்பம், இல்லறம், துறவு,- மோதிக் கொண்டேதான் நகர்கின்றன.

ஒற்றைச்சமயமாக உருவம் பெற்று விட்டதாக நம்பும் வைதீகம் தன்னை அதிகாரமிக்கதாக நிறுவப்பார்க்கிறது; வேறு என்கின்றன சைவமும் வீரசைவமும். குத்துநிலைப்பிளவுகள் அல்லது கிளைகள். ஆபிரகாமிய சமயங்களின் முரண்பாடுகள் ஓரளவு கிடைநிலைப்பட்டவை.

புதியனவற்றின் மீது பழையன குற்றச்சாட்டுடன் வன்மம் காட்டும். புனைவியல் நடப்பியல்மீது காட்டுவது மென்வன்மை. நடப்பியல் குறியீட்டியல் மீது காட்டியது வன்வன்மை.
மார்க்சியம் பின்- நவீனத்துவம் மீது காட்டுவது இடைவன்மை.

மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் தவிக்கும் தவிப்பு. தொண்டையில் சிக்கியுள்ள வஞ்சிர மீனின் நடுமுள்.
திரும்பத்திரும்ப ஒளிபரப்பப்பட வேண்டும்

நேற்றைய நீயா? நானா? : 
===========================
ஞாயிறு இரவில் முன்னிரவுக்குப் பின் சரியாக 9 மணிக்குத் தொடங்கும் நிகழ்ச்சியாக - தவிர்க்க முடியாத நிகழ்ச்சியாக இருந்த விஜய் தொலைக்காட்சியின் நீயா நானா ஒளிபரப்பு நேரங்களில் மாற்றம் பெற்றுக்கொண்டே வந்தது. மாற்றங்களுக்குப் பின்னே பார்வையாளர்கள் குறைவு - தரவரிசையில் பின் தங்குவது அதனால் விளம்பரதாரர்களின் நெருக்கடி போன்றன இருக்கக் கூடும். வெகுமக்கள் ஊடகங்களின் ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்குப் பின்னும் இந்த நெருக்கடிகள் இருக்கவே செய்யும். என்றாலும் நீண்ட காலமாக ஒரு தொலைக்காட்சியின் அடையாளமாக இருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று நீயா? நானா? அநேகமாகப் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்நிகழ்ச்சி தொடர்கிறது. நானே ஏழெட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். அதன் நடத்துநராக கோபிநாத் இருந்துவருகிறார். ஆனால் அதன் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் இருப்பது நெல்லை ஆண்டனி.

இரவுக்குப் பதிலாகப் பிற்பகலில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சியாக மாறிய பிறகு நீயா? நானா? வைப் பார்க்கும் வாய்ப்புகள் குறைந்து விட்டன. வாரக் கடைசிகளில் பெரும்பாலும் வீட்டில் இருப்பதில்லை. வீட்டில் இருந்தாலும் அந்த நேரம் ஓய்வெடுக்கும் நேரமாக இருந்தது. நேரமாற்றம் காரணமாக என்னைப் போன்றவர்களின் - முதுமையை நோக்கி நகர்பவர்களின் கவனத்துக்குரியனவற்றை விட்டு விலகியனவாக நிகழ்ச்சிப்பொருண்மைகளும் மாறிவிட்டன. சமூக நடப்புகளையும் பண்பாட்டரசியலையும், வணிகப் போக்குகளையும் தனிநபர் உளவியலையும், மரபுக்கும் மாற்றத்துக்குமிடையேயுள்ள முரண்பாடுகளையும் விவாதிக்கும் தலைப்புகளைத் தேர்வுசெய்துவந்த அதன் தயாரிப்பாளர்கள் இளையோரின் விருப்பங்கள், ஆசைகள், அவர்களின் கவனம் பெறுபவை, பொழுதுபோக்கு, ஆடை, காதல், காமம், நாயகர்கள், நாயகிகள், குடும்ப அமைப்புக்குள் அவர்களின் இருப்பும் இன்மையுமென விலகிப் போய்க்கொண்டே இருந்ததை அவ்வப்போது கவனித்துவிட்டு நானும் விலகிவிட்டேன்.

பிற்பகல் நிகழ்ச்சி நண்பகல் நிகழ்ச்சியாக இப்போது மாறிவிட்டது. ஒளிபரப்பாகும் கால அளவுகூடக் குறைந்திருக்கிறது. இந்த மாற்றத்திற்குப் பிறகு பின் வீட்டில் இருந்தால் நீயா நானாவைப் பார்த்து விடுகிறேன். இடையில் மாறிய அந்தத் தடத்திலிருந்து பெரிய மாற்றங்கள் இல்லை என்றாலும் சமகாலப் பரபரப்போடு இணையும் முயற்சிகளும் எப்போதும் கவனத்தில் இருக்க வேண்டிய நிகழ்ச்சிகளும் மாறிமாறி வருவதாகத் தோன்றியது. அதிகமும் இளையவர்கள் என்பதை மாற்றி இளையவர்களும் நடுத்தர வயதினரும் என்பதான பங்கேற்பில் இப்போது கவனம் செலுத்துகிறது.

இந்த விலகல் எல்லாவற்றையும் தாண்டி நேற்று ஒளிபரப்பான நீயா? நானா? கண்பார்வைக் குறைவானவர்கள் அல்லது உடல் சவால்கள் கொண்ட மனிதர்களின் உலகத்திற்குள் பார்வையாளர்களைக் கொண்ட சென்ற நீயா? நானா? நீண்ட நாளைக்குப் பின் முக்கியமான ஒரு நிகழ்ச்சியாகப் பட்டது. தொகுத்துத் தரும் கோபியும் நிதானமாக அவர்களின் மனம், உடல், விருப்பம், அந்நிய மனிதர்களோடு அவர்கள் கொண்டுள்ள உறவு போன்றவற்றைக் கொண்டுவரும் தன்மையில் வினாக்களை எழுப்பிக் கவனப்படுத்தினார். பங்கேற்றவர்களின் 

நிதானமான பேச்சுகளில் தங்களின் சிக்கல்களையும் திறமைகளையும் எப்படி முன்வைக்க வேண்டுமென்ற நேர்த்தி வெளிப்பட்டது. உடல் சவால் கொண்ட மனிதர்களின் பாடலின் போதும் வெளிப்பாடுகளின் போதும் காமிரா அந்தக் குறைகள் இல்லாத மனிதர்களின் பக்கம் போய்ப் படம்பிடித்தபோது அவர்களின் முகச்சலனமும் கண்களின் விரிப்பும் மொத்த நிகழ்ச்சியில் அவர்களும் ஈடுபாட்டோடு இருந்தார்கள் என்று காட்டியது. விருந்தினர்களாக வந்தவர்களில் நகலிசைக்கலைஞரின் ஈடுபாடு நிகழ்ச்சியைத் தரம் மிக்கதாக – கொண்டாட்டம் மிக்கதாக ஆக்கியது . நீண்ட நாட்களுக்குப் பின் முழுமையாகப் பார்க்க முடிந்தது. வாழ்த்துகள் நீயா? நானா? அணியினருக்கு.

பழைய பஞ்சாங்கங்கள்
பயன்பாட்டில் இருக்கும் கலைச்சொற்களுக்கு எதிர்நிலைப்பாட்டைக் குறிக்கும் கலைச் சொல்லாக்கம் எளிமையானது. இருக்கும் கலைச்சொல்லின் முன்னால் - எதிர்/ Anti - என்பதைச் சேர்த்துப் பயன்படுத்திவிடலாம். ஆனால் அப்படியே பயன்படுத்தாமல் சிலவகையான வேறுபாடுகளோடு பயன்படுத்தும்போது எப்படிப் பயன்படுத்துவது என்பதில் சிக்கலும் குழப்பமும் ஏற்படுவதுண்டு. சிலவேளைகளில் - நவ(Neo)- என்ற முன்னொட்டும் சில வேளைகளில், - புது( New)- என்ற முன்னொட்டும் சேர்க்கப்படுகிறது

மரபை மறுதலிக்கும் நவீனத்துவத்திற்கு எதிரான கருத்தியலைத் திரும்பவும் மரபு எனச்சொல்லாமல் பின் நவீனத்துவம் என்று பயன்படுத்துகிறோம். காரணம் பின் நவீனத்துவம், நவீனத்துவத்தை எந்த அளவிற்கு மறுதலிக்கிறதோ, அதைவிடவும் கூடுதலாக மரபையும் மறுதலிக்கிறது.அதே நேரத்தில் மார்க்சியத்தையும் ப்ராய்டியத்தையும் முற்றாக மறுதலிக்காமல் மேலும் வளப்படுத்தியவர்களைப் பின் - மார்க்சியர்கள், பின்- ப்ராய்டியர்கள் என்றோ சொல்லாமல் - புது- என்ற முன்னொட்டுச் சேர்த்து புதுமார்க்சியர்கள், புதுப் பிராய்டியர்கள் என்று சொல்கிறார்கள்.

இந்தியாவைப் பற்றிப் பேசும்போது தவிர்க்க முடியாமல் வந்து நிற்கும் ப்ராமணியம் ப்ராமணியர்கள்/ என்ற சொல்லோடு எந்த முன்னொட்டைச் சேர்ப்பது என்பதுதான் இப்போதைய சிக்கல். ப்ராமணிய மேலாண்மையைக் கேள்விக்குட்படுத்தாமல், அதனோடு சமரசம் செய்துகொண்டு அரசியல், சமூகத்தளங்களில் தங்களை வளர்த்துக்கொள்ளும் தனிநபர்களைக் குறிக்கும் சொல்லாக ‘நவபிராமணர்கள்’ என்றொரு சொல் பயன்பாட்டில் உள்ளது. இவர்கள் பிறப்பால் ப்ராமணர்களாக இருப்பதில்லை. கருத்தியலால் ப்ராமணியத்தோடு உடன்படுபவர்கள். 
இவர்கள் அல்லாமல் இப்போது பலர் - ப்ராமணர்களாகத் தங்களை மறு உயிர்ப்புச் செய்துகொண்டு பொதுவெளிக்கு வருகிறார்கள். தாங்கள் பிறப்பாலும் அறிவாலும் மேலானவர்கள் எனச் சொல்லக் கூச்சப்படாமல் சொல்கிறார்கள். அப்படிச் சொல்வதில் ஆண் - பெண் பேதமெல்லாம் இல்லை. பெருகிவிட்ட ஊடகப்பொதுவெளியில் ஆவேசமாகத் தங்களை முன்வைக்கிறார்கள். அப்படி முன்வைப்பவர்களில் பலர் கலை, இலக்கியத்தளங்களிலும் செயல்பட்டவர்களாக இருப்பது இன்னும் வேடிக்கையாக இருக்கிறது. நகைச்சுவை நடிகர்களும் அவர்களின் வாரிசுகளும் முன்னணியில் நின்று சவால் விடுகிறார்கள் இடையில் பல காலம் தங்களின் ப்ராமண அடையாளத்தைக் காட்டிக்கொள்வதற்கு அச்சப்பட்டு மறைந்து திரிந்தவர்கள் அவர்கள். வேதங்கள் சொல்லி வாயால் வாழ்வதைக் கைவிட்டுவிட்டு, திரைகடலோடித் திரவியம் தேடிக் களியாட்டங்களிலும் கொண்டாட்டங்களிலும் திளைத்து மகிழும்போது ப்ராமண சனாதனத்தைக் கைவிட்டுவிடத் தயாரானவர்கள் . இவர்களை எந்தக் கலைச்சொல்லால் குறிப்பிடலாம். 
புதுப்பிராமணர்கள் என்றா? பழைய பஞ்சாங்கம் என்றா? 

பண்பாட்டுக் கவசம் நகைமுரண்களின் பகட்டு

சித்திரைத் திருநாள் ஆட்டச் சிறப்புக்காக நடை திறக்கப்படுகிறது இன்று.144 தடை. 2000 காவலர்கள் பணி அமர்த்தல் என்கிறது செய்தி.
ஐயப்பன் கோவிலுக்குச் செய்தி சேகரிக்க இளம்பெண்களை ஊடக நிறுவனங்கள் அனுப்ப வேண்டாம் எனக் கோரிக்கை வைக்கின்றன இந்து அமைப்புகள். அதே அமைப்புகள் பாதுகாப்புக்காக நிற்கும் 100 பெண்காவலர்கள் - இளம்பெண் காவலர்கள் கோயில் வளாகத்தில் நிற்பதைக் கண்டுகொள்ளாமல் தவிர்க்கிறது. காவல் துறையில் இருப்பவர்கள் 10 வயதுக்குக் கீழும் 50 வயதுக்கு மேலும் இருப்பவர்களா?

காலம் காலமாகப் பெண்கள் ஐயப்பன் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. அது மரபு; ஐதீகம், பண்பாடு. எனவே நீதிமன்றம் இதிலெல்லாம் தலையிடக்கூடாது என்று கூக்குரல் எழுப்புகிறார்கள்; போராட்டம் நடத்துகிறார்கள்; வாது செய்கிறார்கள். 
சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் என்று சொல்வதுபோல, சாமிக்கு முன் ஆண் -பெண் பேதமில்லை என்று பெண்களுக்கான உரிமையைத் தரும் வாய்ப்புடைய நீதிமன்றத் தீர்ப்பை எதிர்க்க பெருந்திரளான பெண்களைத் திரட்டிக் காட்டுகிறார்கள்.முன்னணியில் நிற்கும் பெண்கள் எல்லாம் படித்துப் பட்டம் பெற்றுப் பல்வேறு பணிகளில் இருப்பவர்கள். தங்களின் மேலான அறிவை -நாகரிகத்தை- சாதிக்கும் திறனைக் காட்டிய இந்திய உயர் ( உயர்சாதி மனோபாவம் கொண்ட) நடுத்தரவர்க்கப் பெண்கள். அவர்களின் பின்னால் திரட்டப்படும் வெகுமக்கள் கூட்டம்; அவர்களுக்கு சூதும் தெரியாது; வாதும் புரியாது. படித்தவர்களுக்கு எல்லாம் தெரியும். 

சூதும்வாதும் செய்தால் போவாள்; போவாள்.. ஐயோவென்று போவாள்.
************* 

கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கும் கூட்டம் தமிழ்நாட்டில் உண்டு.ஆண்களாகவும் பெண்களாகவும் இருக்கும் அந்தக் கூட்டம் இந்த முகநூலிலும் இருக்கிறது. படிப்பறிவும் பகுத்தறிவும் கொண்டவர்களாகக் காட்டிக்கொள்ளும் கூட்டம் அது. முற்போக்கு முகமும் அதற்கு உண்டு.

நாளை வரப்போகும் தீபாவளியை ஒட்டி வெடிவெடிக்கும் நேரத்தைக் குறைத்துக்கொள்ளும்படி ஒழுங்கு செய்து ஓர் அறிவிப்புச் செய்கிறது நீதிமன்றம். காலையில் 6 முதல் 7 வரை; முன்னிரவு 7 முதல் 8 வரை வெடிக்கலாம் என்று சொல்வதில் என்ன பெருந்தவறு என்று தெரியவில்லை. மக்கள் நலனில் - சுற்றுச்சூழல், உடல் நலன், அடிப்படை உரிமைகள் ஆகியவற்றில் அக்கறைகொண்ட மக்கள் நல அரசை விரும்பும் ஒருவர் இந்த ஒழுங்குமுறையை ஏன் மீறவேண்டும் என நினைக்கவேண்டும். நாம் இப்போது ஆட்சிசெய்யும் அரசின் ஆணையாக நினைத்துக் கொண்டு அதை எதிர்ப்பதாகப் பாவனை செய்யலாம். ஆம் அது பாவனைதான். நடப்பைப் புரிந்துகொண்ட பார்வை அல்ல.

வெடிக்கும்போது எழும் ஒலியளவும் புகையளவும் கூடி ஏற்படுத்தும் மாசு வெடிப்பவர்களுக்குத்தான் கேடு. வெடித்துவிட்டு ஓட முடியாத சந்துகளிலும் பொந்துகளிலும் வெடித்துக் காயமாகும் சிறுவர்கள் பற்றிய செய்திகள் அடுத்தநாட்களில் வரத்தான் செய்யும். என்றாலும் என் வீட்டு வாசலில் வெடிப்பேன்; அது என் உரிமை என்கிறார்கள் பண்பாடு காக்க நினைப்பவர்கள். அடுத்த வீட்டுக்காரரோடு போட்டிபோட்டு தன் ஜம்பம் காட்டும் உளவியலுக்குப் பின்னால் பண்பாட்டுக் கவசம் இருக்கத்தானே செய்யும்.

காலம்காலமாக அதிகாலை 4 மணிக்கு எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டுப் புத்தாடை பூட்டி வெடிபோடும் வழக்கத்தை விட முடியுமா? என்ற கேள்விக்குப் பின்னால் இருப்பதும் பண்பாட்டுப் பிரியம் தான். பண்டிகைக்காலம் என்பது தடையற்ற மனத்தின் காலம். என் பிரியத்தின்படி நான் வேட்டுப் போடுவேன்; ஒலி எழுப்புவேன்; புகை உண்டாக்குவேன். அதிலெல்லாம் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்ற வாதத்திற்குப் பின்னாலும் பண்பாட்டுக்கவசம் தான் இருக்கிறது.

கடுங்குளிர்காலத்தில் வரும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திலும் புத்தாண்டை வரவேற்கும் நிகழ்ச்சியிலும் ஐரோப்பியர்கள் வெடிவெடிக்கிறார்கள். நள்ளிரவில் - தூரமாக இருக்கும் மைதானங்களில் கூட்டமாகக் கூடி வெடிக்கிறார்கள். சட்டம் அதைத்தான் அனுமதித்திருக்கிறது. சட்டங்களை மதிக்கமாட்டோம் என்றால், சடங்குகளை மதிக்கிறீர்கள் என்றுதானே பொருள். சடங்குகளோடு தொடர்புகொண்டது பண்பாடு; காலம் காலமாகப் பின்பற்றப்படுவது பண்பாடு. பண்பாட்டைப் பொன்னே போல் போற்றும் ஆர்வத்தின் பின்னே இருக்கும் முரண் வெடித்துச் சிரித்துக்கொள்ள வேண்டிய நகைமுரண்..


****************
நகைமுரண்களின் காலம் 
சூதுவாதுகளை மறைக்கும் 

லயோலா நிகழ்வுகள்

சாதிப்பூசல்களை விடச் சமயப்பூசல்கள் ஆபத்தானவை. இந்தியாவில் ஒவ்வொரு சாதியும் குறிப்பிட்ட வட்டார அடையாளம் கொண்டவை. மக்களாட்சி வாக்கு வங்கி அரசியல் தேவைக்காக ஒரு மாநில அளவிலான சொல்லாடல்களை நடத்தும்போது ஒற்றை அடையாளத்தை முன்வைத்து பெருங்கூட்டமாகக் காட்டிக்கொண்டாலும் சடங்குகள், நம்பிக்கைகள், குலதெய்வங்கள், காவல் தெய்வங்கள் எனச் சொல்லாடும்போது வெளிகள் சுருங்கிச் சுருங்கிக் கடைசியாக ஒரு கிராமத்தின் எல்லைக்குள் நின்றுவிடும். 

இதற்கெதிரானது சமயப்பூசல்கள். இந்து என்ற சமயம் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்குப் பின் உருவான சமயம் என்று அறிவார்த்தமாக வாதிடலாம். ஆனால் பெருந்தொகையான மனிதர்கள் இந்து அடையாளம் பாதுகாப்பானது என நம்பத் தொடங்கி விட்டார்கள். அந்த அடையாளத்திலிருந்து விலகிவந்தால் எந்தப் பேரடையாளத்தைத் தனதாக்கிக் கொள்வது என்ற அச்சம் அவர்களுக்கு இருக்கிறது. பௌத்தப் பேரடையாளத்தை முன் வைத்தார் அறிஞர் அம்பேத்கர். அப்பௌத்தத்தையும் உள்வாங்கிக் கொள்ள வைதீக இந்து சமயம் கொள்கைகளை வகுத்துக் கொண்டு செயல்படுகிறது. 

தமிழக வரலாற்றில் பக்தி இயக்கக் காலத்திலேயே முதன்மையான சமயப் போக்குகளாக ஆறு முக்கியமான சமயப் பிரிவுகள் இருந்தன. அவ்வாறும் ஒரு சமயம் என்ற கருத்தும் இருந்தது. ஆறு போக்குகளையும் அகச்சமயங்கள் எனக் குறிப்பிட்டுப் பேசும் சொல்லாடல்களைத் தேவாரப் பாசுரங்களிலும் அவற்றிற்கான உரைகளும் முன்வைக்கின்றன. அகச்சமயங்கள் என்ற சொல்லாடல்கள் போலவே புறச்சமயங்கள் என்ற எதிரிணைகளும் சொல்லப்படுகின்றன. அப்போது பௌத்தமும், சமணமும் புறச்சமயங்கள். 
தமிழகத்தில் சைவ சமயம் - சிவனையும், வைணவம் - திருமாலையும், சாக்தம் - சக்தியையும், காணாபத்தியம் - கணபதியையும், கௌமாரம் - முருகனையும், சௌமாரம் - சூரியனையும் வழிபடு தெய்வங்களாகக் கொண்டிருந்தன. இவ்வறுவகைப் பெருமரபுகள் தவிர ஊர்த் தெய்வங்களை- காவல் தெய்வங்களை-குலதெய்வங்களை மட்டுமே தெரிந்த- வணங்கும் மனிதத் திரள்களும் தமிழ்நாட்டில்/ இந்தியாவில் இருக்கின்றன. 

இவை எல்லாவற்றையும் விளக்கிப் பேசி கொள்ளுவன கொள்ளவும் தள்ளுவன தள்ளவும் கற்பிக்க வேண்டும். கடவுள்/ சமயங்களின் இடம் பற்றி பேசவேண்டும். அதைவிடுத்து மொத்தமாக வேண்டாம் எனப்பேசும் நாத்திகம் திரள்மக்களை விரட்டவே செய்யும். பழைய அக/புறச்சமயங்கள் சாராமல் புதிய புறச்சமயங்களான கிறித்தவ, இசுலாமியம் சார்ந்த நபர்கள்/ நிறுவனங்கள் விமர்சன வெளிகளை உருவாக்கித் தரும்போது எதிர்விளைவுகளை உருவாக்கிவிடும். லையோலா நிகழ்வுகள் கண் நடக்கும் காட்சிகள்.


************* ******************** **********
ஓரடி முன்னால் 

ஈரடி பின்னால்’
அறிந்திருந்தவர்கள்

மறந்துவிட்டார்கள்.
பயன்பாடில்லை.
எதிர்த்தவர்கள் 
உணர்ந்திருக்கிறார்கள்
பயன்படுத்துகிறார்கள்.

நேற்று நேற்றோடு போய்விடும்
இன்று இன்னொரு நாள். 
நாளையென்பது .. நாளைகள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்