இரங்கல் பாக்களில் ஒரு மாயநடப்பியல் கதை-வெய்யிலின் அக்காளின் எலும்புகள் தொகுப்பை முன்வைத்து




அக்காவைக் 
காக்கா தூக்கிச் சென்றுவிட்டது
அவ்வளவுதான்
***** 
கையிலிருக்கும் மண்ணாலான செப்பு
கண்ணாடிக்குடுவை
பீங்கான் பொம்மை
எலக்ட்ரானிக் சாதனம் எனக் கையாள்வதில் கவனமாக இருக்கும் பொருளைக் கேட்டு அடம்பிடிக்கும் குழந்தையை எப்படிச் சமாளிப்பது. போனால் போகட்டும் என்று நினைத்தால் குழந்தையின் கையில் கொடுக்கலாம். கொடுத்த அடுத்த கணம் அந்தப் பொருளைப் போட்டு உடைத்துவிடக்கூடும். அதனால் கொடுக்கக் கூடாது.
குழந்தையைத் திசை திருப்பச் செய்து பொருளைக் காப்பாற்றும் விளையாட்டில் உதவுவதுதான் அந்தக் காக்கா. வலதுகையில் இருக்கும் பொருளைக் குழந்தைக்கு அருகில் கொண்டுபோய்க் காட்டி, கண்ணிமைக்கும் நேரத்தில் இடதுகைக்கு மாற்றி, உடனே திரும்பவும் வலதுகைக்குக் கொண்டுவந்து முதுகுக்குப் பின்னால் கொண்டுபோய் எங்கோ மறைத்துவிட்டுச் சொல்லும் வார்த்தைகள் “ காக்கா கொண்டு போயிடுச்சு” மாயமா மறஞ்சு போச்சு. உண்மையா? ஏமாற்றமா? எனக் குழந்தை திகைத்து நிற்கும்.


இங்கே காக்கா கொண்டுபோனது மண்பாண்டமோ, கண்ணாடிக் குடுவையோ, தின்பண்டப்பொருளோ அல்ல; அக்கா.உடலும் உயிருமான பெண். கடைக்குட்டித் தம்பி மீது அன்பையும் பாசத்தையும் காட்டிய அக்கா. அவளைக் காக்கா தூக்கிப் போகவில்லை. காக்காய்க்குக் கொடுத்துவிட்டார்கள். ஆனால் மனசு ஆறுதல் படணுமே. அதற்காக அந்த மனசு அப்போது சொல்லிக் கொள்வது தான் ’அக்காவைக் காக்கா கொண்டு போயிடுச்சு’ 
2019 ஆண்டிற்கான ஆத்மநாம் விருதுபெற்ற “வெய்யிலின் அக்காளின் எலும்புகள்” ஏமாற்றங்களையும் மாயாஜால நடப்புகளையும் எழுதிப்பார்த்த இரங்கல் பாக்களின் தொகையாக இருக்கிறது. நூல், மொத்தத்தையும் ஒரே பாவாக வாசிப்பதைத் தடுப்பதுபோலச் சில-நான்கு பிரிவுகளாகப் பிரித்துத் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு எலும்புப்படமும் அச்சாகியுள்ளது. அப்பிரிப்புகள் அவற்றைத் தனித்தனியாக வாசிக்கக் கோருகின்றன. அத்தோடு பக்க எண்ணோடு தலைப்புகள் தராமல் எண்களையும் இடாமல் தமிழ் எழுத்து வரிசைகளில் பிரிக்கப்பட்டுத் தரப்பட்டுள்ள கட்டமைப்பில் நூலாக்கம் செய்யப் பட்டுள்ளது. 
நெஞ்சுக்கூட்டை எலும்புருவாக்கித் தரப்பட்டுள்ள அ -ஔ வரையிலான உயிர் நிலையான 12 ஒரு நிலை. அதனை அடுத்து மீன் முள்ளோடு கூடிய க் -ன் வரையிலான 18 மெய்நிலைகள் இன்னொரு நிலை. மூன்றாவது நிலை முள்ளெலும்புகள் கூடிய முதுகுத்தண்டாகவும் கம்பளிப்பூச்சியின் கொடுக்காகவும் தோற்றம் தரும் எலும்புக்கூடு. கூ - னூ வரையிலான ஊகாரமொலிக்கும் 18. நான்காவதாக உயிரேறிய ஞகர மெய் வரிசையில் ஞை வரையிலான 9 . அதற்கு முன்னால் இருக்கும் எலும்புக்கூடு விரித்து வைக்கப்பட்டுள்ள கையின் முன்புறம். இவ்வடுக்குகளுக்கு முன்னால் நூல் திறப்பும் வரத்துப்பாடலுமாக இரண்டும், நிறைவில் ஃ என்னும் ஆயுதத்தோடு ஒன்றுமாக பாக்கள் அச்சிடப்பட்டுள்ளன.
தமிழ் எழுத்துகள் ஓசையின் வரிவடிவமானவை. உயிரின் ஓசையாகவும் மெய்யின் ஓசையாகவும் இவ்விரண்டின் இணைந்த வழி உருவாகும் உயிர் மெய்யின் ஓசையாகவும் உருவகிக்கப்பட்டுள்ள வரிவடிவங்களைத் தலைப்பு போலக் கொண்டு அடுக்கப்பட்டுள்ள இப்பாக்களுக்கு அவ்வோசைகளோடு நேரடித் தொடர்போ, குறியீட்டுத்தொடர்போ இருப்பதாகத் தெரியவில்லை. நிரல்படுத்தலுக்கான ஒரு உத்தி என்பதைத் தாண்டி ஒவ்வொன்றிலும் வெளிப்படும் உணர்வெழுச்சிக்கும் எழுத்தின் ஓசைக்கோ வரிவடிவத்திற்கோ பெரிதாக உறவில்லை,

இப்படி நிரல்படுத்தித் தரப்படுத்தித் தரப்பட்டுள்ள அனைத்தையும் ஒரே மூச்சில் வாசித்து முடிக்கும்போது பெருந்துயர் கொண்ட ஒருவனின் - அக்காவைப் பறிகொடுத்த சகோதரன் ஒருவனின் வலியும் கலக்கமும் துன்பமும் மட்டும் வெளிப்படவில்லை. பெருங்குற்றவுணர்வும் சேர்ந்தே வெளிப்படுகிறது. ஒற்றை இரங்கல்பாவாக வாசிக்காமல் துண்டுதுண்டாக வாசிக்கும்போது இந்தக் கவிதைகள் பெருமூச்சோடு கூடிய இரங்கல் பாவாக -துன்பமாலையாகத் தொகுக்கப்பட்டுள்ளதை உணரமுடிகிறது. ஒவ்வொரு துண்டிலும் சில நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன. எல்லா நிகழ்ச்சியிலும் அக்கா நிழலாகவும் நிஜமாகவும் வந்துகொண்டே இருக்கிறாள். அவள் இருந்தபோது செய்த செயல்களும் இல்லாமல் போன பின்பு உண்டாக்கும் அதிர்ச்சிகளும் நினைவுத்தூண்டல்களும் பழைமையான குறியீடுகளால் நிரப்பப்பட்டுள்ளன. செவ்வியல் கவிதைகளின் இரங்கல் பாக்களிலும் கையறுநிலைக்கவிதகளிலும் இடம்பெற்றுள்ள குறியீடுகளோடு, நாட்டார் பலிச்சடங்குகளிலும் வழிபாட்டிலும் இடம்பெறும் பொருள்கள் அவற்றின் பொருண்மைகள் என ஒவ்வொன்றும் கவிதைகளை வாசிப்பவரை நின்று நின்று வாசிக்கச் செய்கின்றன. நின்று வாசிக்கும்போது விவரிக்கப்படும் நிகழ்ச்சிகள் பலவும் ஒழுங்கை மீறிய செயல்களாகத் தோற்றம் கொள்கின்றன. அத்தோற்றம் கவிதைக்குள் எலும்புக் கூடாக மிதக்கும் அக்கா இயல்பாக இறந்தாளா? தற்கொலை செய்து கொண்டாளா? கொலை செய்யப்பட்டாளா? என்ற ஐயத்தையும் பயத்தையும் கலந்து உண்டாக்குகின்றன இந்த இரங்கல் பாக்கள். அன்பையும் பாசத்தையும் காட்டிய அக்காவையும் மச்சானையும் அதே அளவு பாசத்தோடு பார்க்க முடியாமல் போன ஒருவனின் தவிப்பின் வெளிப்பாகவே எல்லாப்பக்கங்களிலும் கவிதை சொல்லியின் வார்த்தைகள் வந்து விழுந்துள்ளன. இரங்கல் பாவை இசைக்கும் போது வரையப்படும் சித்திரமாக அவள் ஒவ்வொரு பக்கத்திலும் வரிகளாக வரையப் பட்டிருக்கிறாள் அக்கா. கண்ணை மூடிக்கொண்டு ஒரு பக்கத்தைத் திறந்து வாசிக்க நினைத்தால், அங்கே கொலைசெய்யப்பட்டவளாக அக்கா கிடக்கிறாள்:

******************
=====
அப்பா தூரத்தில் நின்று கொண்டார்
சூலாடு சூல் பன்றி ஏற்கும் சாமியாடி
அரவமற்ற வேலைக்காரர்
சிரமமின்றி
அக்காவின் கருப்பை கிழித்துப் பிண்டம் எடுத்தார்
குளிரக் குளிர அதில்
தயிர்ச்சோற்றை நிரப்பித் தைத்தார்
புதைமேட்டில் எத்தனை பண்டம் வைத்தும்
எடுக்காத காக்கை
செவ்வந்தி மாலையைக் கொத்திப் பிடுங்குகிறது
‘நான் பெத்தெடுத்த அதிரசமே’ என்று கேவுகிற

அம்மாவை
ஊர்க்கண் உற்றுப்பார்க்கிறாது.
ஓசையற்று வெயில் ஓங்கி வளர்கிறது 
***** 
வேறு சில பக்கங்களில் அவளின் ஆசையும் விருப்பமும் அதைத் தடுக்க நினைக்கும் பெற்றோரின் கட்டுப்பாடும் வரையப்பட்டிருக்கின்றன. 
***** 
=== 
மணமுறிவுற்ற அக்கா
குறிஞ்சிப் பூக்களைக் காண விரும்பினாள்; சூடவும்
மிகத் தாமதமாகத்தான் புரிந்துகொண்டோம்
நள்ளென் யாமமேதான்
துயில் கலைந்திடாது மெல்ல அரிந்து
அவள் தலையை எடுத்துச் சென்றோம் அங்கே
நிலைத்த விழிகளிலே நீலம் ததும்புவதை 
புகை பிடித்தபடியே 
அப்பா பார்த்துக்கொண்டிருக்கிறார்

***** 
==
எங்கள் வீட்டுச் சலவைக்குறியில் 
இரு கோடுகள் இரு புள்ளிகள் 
இரண்டு எலும்புகள்
தோண்டியெடுக்கப்பட்ட இருகண்களைப்போல
மச்சான் வீட்டில் புள்ளிகள் இடவலமாய் மாறிய குறி
பெண்களுக்குச் சலவைக்குறியிடும் வழக்கமில்லை நம்மில்
மச்சான் உயிரோடிருந்தபோது வேய்ந்த கூரை
மூன்று மழைக்காலத்தைத் தாங்கியிருக்கிறது
புதுக்கூரை வேய வந்தவருக்குக் கொடுத்தது தப்புதான்
வேட்டியிலொரு புதுக்குறி விழுந்தது கண்டு
சிரித்தாள் தங்கை.
வெட்கம் மிகுந்த அக்காள் சொன்னாள்:
“முயல்தடம் போலிருந்த கறை
என் ரத்தம்தான்!

***** 
மற்றொரு பக்கத்தைத் திறந்து படிக்கும்போது அக்காவிற்கு நிகழ்ந்ததை வேடிக்கை பார்த்தவனாகவும் இருக்கிறான் தம்பி. அவனே விரும்பாமல் அவளை இல்லாமல் ஆக்கிய நபர்களோடு இருந்ததாகவும் தோன்றுகிறது.
************
ன் 
===
விளையாட்டாக என் கள்ளில்
இளங்களிற்றின் மதநீரைக் கலந்துகொடுத்தாள் அக்கா
நான் அப்போதே பாணனானேன்
வேங்கைப் பூக்களுக்கிடையே
கூறுவரிகளாகக் கிடைக்கும் புலிகளின் மலையில்
எம் பூர்வகுடிலைக் கண்டோம். 
குறிஞ்சி மணக்கும் பன்றிகளின் கண்ணீர் துடைத்து 
குருளைகளை நெஞ்சிலேந்தினோம். 
புலால் நாறும் வெறியாட்டுப் பாறையில் குந்தி
யாழை முறுக்கினேன்.
அக்கா தன் கொலைச்சிந்தைப் பாடக் கேட்டாள்
துடியாய்ப் பண்ணிசைத்து ஓய்ந்து 
நான் விழிக்கையில்,
அக்கா பனையில் உறைந்தாள்.
பாளைகளில் களிகொண்டு கரந்தாள்
போலீஸிடம் மாட்டிக்கொள்ளாமல் 
பனைவேர்களைப் பிடுங்கிப் புகைத்தபடி 
அங்கேயேதான் கிடக்கிறேன் 
ஊருக்குள் கடும் ரத்தவாடை 
என் காவலுக்கு

ஆட்காட்டிக் குருவிகளைப் பணித்திருக்கிறாள் அக்கா. 

***** 
தூ
=== 
கள்ள மேய்ச்சலில் இறங்கிவிட்டன கறவைகள்
பதற்றமின்றி அக்காவோ
நீர்ப்பாம்புகளோடு
தாமரைக் குளத்தில் நீந்திக் கடக்கிறாள்
வேட்டைப் பந்தமாய் எரிகிறது மத்தியானம்
“சுடலி.. அது யார் குத்தம்?”
இணைவிளையும் மரங்கொத்தியின்
ஆயிரத்து நூறாவது கொத்தோசையிது
கண்களை மூடி
அக்கா எண்ணிக் கொண்டுதானிருக்கிறாள். 

***** 
ஞா 
==== 

ஆயிரங்கண் பானையை
வனைந்துகொண்டிருக்கிறார் குயவர்
மறைந்திருந்து பார்க்கிறாள் அம்மன்.
மனைவியின் பழுதுற்ற கண்களை
நேர்ச்சைக் காசுகளோடு அவர் முடிந்துவைத்திருக்கும் 
விளக்குமாடத்தையே சுற்றிச் சுற்றி வருகிறதொரு 
தாய்வண்டு.

மொத்தத் தொகுப்புக்குள்ளும் எலும்புக்கூடாகவும் ஆவியாகவும் பயமுறுத்தும் பேயாகவும் அலையும் அக்காவுக்கு நேர்ந்தது என்ன? செய்தவர்கள் யார்? யார்? ஏன் அப்படியான தண்டனைக்கு ஆளானாள். இப்படியான கேள்விகளுக்கெல்லாம் நிகழ்ச்சிகளைக் கொண்ட பதில்கள் கிடைக்கும்படியாக எழுதப்பட்டிருந்தால், அந்தப் புனைவு ஒரு நடப்பியல் புனைகதையாக மாறியிருக்கும். குடும்ப ஒழுங்கை மீறிய ஒரு பெண்ணின் மீது குடும்பத்தார் மேற்கொண்ட ஆணவத் தண்டனை வழங்கலைச் சொன்ன நாவலாக மாறியிருக்கக் கூடும். அப்படி மாறாதிருக்கும் வகையில் அக்காவிற்கு நடந்தன உண்மையா? மாய நடப்பா? என ஐயம் உண்டாகும் விதமாக வரிகளை எழுதித்தந்துள்ளார் வெய்யில். அவற்றையும் நிகழ் வரிசை மாறாமல் அடுக்கவும் கூடாது என்றும் திட்டமிட்டுள்ளார். 
இந்தத் தொகுப்பில் ஒரேயொரு பாத்திரத்தின் கதையை மாயநடப்பாக எழுதியுள்ள வெய்யிலின் கவிதையாக்கம் கதை சொல்லும் பாணியிலானது என்பதை அவரது முந்திய தொகுதிகளிலும் வாசிக்கலாம். அவற்றில் எல்லாம் நீளமான கதையாகச் சொல்லாமல் சின்னச்சின்னக் கதைகளைக் கவிதை நிகழ்வாக்கிச் சொல்லியிருப்பார். ஆனால் இந்தத் தொகுப்பில் பெண்ணொருத்தியின் குரூர வாழ்க்கை முடிவை இரங்கலோடும் குற்றுணர்வோடும் கலந்து தந்துள்ளார். தமிழில் கவிதை வாசிப்பவர்களுக்கு இதுபோன்ற தொகுப்புகள் தரும் திளைப்பும் அனுபவமும் பொதுவானவை அல்ல. இக்கவிதைகளை முழுமையும் நகரிய வாழ்வோடு இணைந்து நகர்பவர்களால் வாசித்துப் புரிந்துகொள்ளமுடியாது. முழுமையும் கிராமிய அனுபவங்களால் நிரப்பப்பட்ட சித்திரங்கள் இவை. அவற்றைப் புரிந்துகொள்ள கிராமிய வாழ்வின் அடிச்சரடுகளும் நம்பிக்கைகளும் தெரிந்திருக்க வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்