இன்னுமொரு குடிப்பெயர்வு


இதுவரையிலான வாழ்நாளில் மூன்று பங்குக் காலத்தைக் கழித்த நெல்லை நகரவாழ்க்கை இன்றோடு நிறைவடைகிறது. இன்று மதுரை – திருமங்கலத்தில் குடியேறுவதற்கான பயணத்தைத் தொடங்குகிறேன்.


பல்கலைக்கழகங்களில் = கல்விப்புலத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஓய்வு பெறும் வயது அறுபது. பிறந்த நாள் அடிப்படையில் அறுபது வயதைத் தொடும் நாளன்றே ஓய்வுபெறுவதில்லை. ஒரு கல்வியாண்டில் ஒரு ஆசிரியர் கற்பிக்கத் தொடங்கும் பாட த்தை அவரே நிறைவுசெய்து தேர்வு நடத்தி மாணாக்கர்களுக்கான தேர்ச்சி அறிவிப்புச் செய்துவிட்டு விடைபெற வேண்டும் என்ற ஆங்கிலேய நடைமுறையின்படி அந்தக் கல்வி ஆண்டின் இறுதிவரை பணியில் இருக்கலாம்.

தமிழக அரசின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகங்களின் கல்வியாண்டு ஜூலை முதல் தேதி தொடங்கி ஜூன் முப்பதில் முடியும். கல்லூரிகளில் ஒரு மாதம் முன்பே மே இறுதியில் ஓய்வு பெற வேண்டும். அத்தோடு அங்கு ஓய்வுபெறும் வயதும் இரண்டு ஆண்டுகள் குறைவு.  முடிந்த்பல்கலைக்கழகப் பணிக்கான ஓய்வு நிகழ்ந்து ஒன்றரை ஆண்டு முடிந்துவிட்டது   எனது பிறந்தநாள் பிப்பிரவரி(17) மாதத்தில் வருகிறதென்றாலும் ஜூன் முப்பதில் ஓய்வு. அதன் பிறகு வழக்கமாகச் செல்லும் குற்றாலம், கன்யாகுமரி, பாபநாசம், சங்கரன் கோவில் என ஒரு சுற்றுச் சுற்றினேன். எல்லாம் 2019 இல். 2020 இல் எதுவும் இல்லை


தவறாமல் சென்று நீராடிவரும் குற்றாலம் ஐந்தருவிக்குளியலுக்கு முன்பு அடித்து தேய்த்துக் கொள்ளும் எண்ணெய்க் குளியலும் இல்லை. அரப்புத் தேய்ப்பும் இல்லை. பேரருவியின் இரைச்சலைக் காதுகள் கேட்கவில்லை. பழைய குற்றால அருவியின் காட்சியைகளில் கண்கள் லயிக்கவில்லை.  அம்பாசமுத்திரத்தின் வயல்வெளிகளையும் திருச்செந்தூர் சாலையிலிருக்கும் வாழைத்தோப்புகளையும் பார்க்கவில்லை.  பாபநாசம் அகஸ்தியர் அருவியும் சொரிமுத்து அய்யனாரும் கோபித்துக்கொள்ளக்கூடும். களக்காடு ஆத்துக்குளியலும், குறுக்குத்துறை முருகன் கோயில் துறையும் நிரம்பி ஓடுகின்றது நீர். செங்கோட்டையைத் தாண்டிப் போய்க் குண்டாறைப் பார்க்கவில்லை.

குமரி பகவதியோடு சேர்ந்து காலைச் சூரியனைப் பார்க்க வாய்க்கவில்லை. பத்மநாபனைப் பார்க்க அனந்தபுரியில் செல்லவில்லை. நாகர்கோவில் - திருவனந்தபுரம் பேருந்துப்பாதையும் தண்டவாளங்களும் காட்டும் பச்சையம் எவ்வளவு குளிர்மை. எதுவும் இல்லை இந்த ஆண்டு. இவற்றைப் பார்க்க விரும்பினால் இனிச் சுற்றுலாப் பயணியாக வரவேண்டும். இதற்கு முன்பே ஓர் உள்ளூர் வாசியைப் போல நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் வலம் வந்துகொண்டிருந்தேன். பல்கலைக்கழகத்தின் பரப்பு இந்த மாவட்டங்கள். முதன்மையான சாலைகளில் எல்லாம் என்னைச் சுமந்த வாகனங்கள் சென்றிருக்கின்றன எல்லாப் பெருநகரங்களுக்கும் பணி நிமித்தம் பயணம் செய்திருக்கிறேன். சின்னச் சின்ன கிராமங்களின் தேநீர்க்கடைகளிலும் தேநீர் குடித்திருக்கிறேன். கால்டுவெல், ஜி.யு. போப் ஆகியோரின் நினைவிடங்கள், கூடங்குளம், மகேந்திரகிரி அறிவியல் கூடங்கள் என எல்லாம் எல்லாம் பின்னோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றன.


 ஆண்டு முழுவதும் நகர்ந்துகொண்டிருக்கும்  தாமிரபரணியில் குளித்து விட்டுக் கிளம்புகிறேன்.  இன்று மட்டுமல்ல. இந்த வாரத்தில்    நாரணம்மாள் புரம், சீவலப்பேரி, முறப்பநாடு, என ஒவ்வொரு படித்துறையிலும் ஆசைதீர இறங்கிக் குளித்தாகிவிட்ட து. என்னோடு ஆற்றில் குதியாட்டம் போடும் பேரனும் வந்திருக்கிறான். தொடர்ச்சியான மழைப்பொழிவினால் நகரம் பரணியாறு, ஓடிக்கொண்டிருக்கிறது. குதிகால்களில் அழுக்குத்தின்ன வரும் ஆத்து மீன்கள் இடுப்பு வரை வந்து கடித்துவிட்டுப் போகின்றன. மலைகளும் நதிகளும் மறைந்துவிடப்போவதில்லை. நீரும் நிலமும் எப்போதும் இருக்கப்போகின்றன. மனிதர்களும் இருப்பார்கள். புதுப்புது மனிதர்களாக..

*******

ஓய்வுக்குப் பின் (2019, ஜூன்,30) நெல்லையிலிருந்து இன்னொரு நகரத்திற்குக் குடிபெயரவேண்டும் என்பது முன்பே போட்ட திட்டம்.  அந்தப் பெயர்ச்சிக்கு முன்னால் இரண்டு அயலகப்பயணங்களும் திட்டத்தில் இருந்தன.   நண்பர்களின் அழைப்பின் பேரில் இரண்டாவது இலங்கைப் பயணமும், மகனின் அழைப்பின் பேரில் இரண்டாவது அமெரிக்கப்பயணமும் உறுதி செய்யப்பட்டது. இரண்டும் முடிந்தபின்பு குடிப்பெயர்வைத் திட்டமிடலாம் என்று தள்ளிப்போட்டோம்.

 

முதல் விருப்பம் சென்னை. மகள் குடும்பம் அங்கே இருந்தது. அவர்கள் குடியிருக்கும் அம்பத்தூரில் குடியேறலாம். ஊடகத்துறையில் நண்பர்களோடும் மாணாக்கர்களோடு இணைந்து வேலைகள் செய்யலாம்.  கல்வி நிறுவனங்களில் சிறப்பு வகுப்புகள் எடுக்கலாம். தொடர்ச்சியாக எழுதலாம் என்பது அதன் பின்னணியில் இருந்த துணைத்திட்டங்கள்.   அத்திட்டங்களைக் களைத்துப்போடும் விதமாக மருமகனுக்குப் பணியிட மாற்றம். அதனால்   புனே நகருக்கு நகரும் நிலை. அவர்களின் மாறுதல் உறுதியான நிலையில் சென்னைக்குக் குடிபெயர்வது ஊஞ்சலாட்டமாக மாறியது. சென்னை என்பது மதுரை- திருமங்கலம் என்றாகியது. மதுரை எனது தாய்க்கிராமமும் தந்தையின் கிராமமும் இருக்கும் மாவட்டம். மனைவியின் ஊரும் அருகே தான். திருமங்கலத்திலிருந்து நகர்ப்பேருந்தில் ஒருமணி நேரத்தில் அந்தக் கிராமங்களுக்குப் போய்விடலாம்.

திருமங்கலம்-எனது பள்ளிப்பருவத்தில் கச்சேரி ஊராக அறிமுகம். கச்சேரி என்பது கோர்ட்டும் போலீஸ் ஸ்டேசனும் இருக்கும் ஊர் என்பதாக அறிமுகம். சொத்துச் சண்டை,  வழக்கு,வாய்தா எனப் பேசுபவர்கள் அந்த ஊரைக் கச்சேரி ஊர் என்று குறிப்பிட்டுச் சொல்வார்கள். சுதந்திரப்போராட்த்தில் கலந்துகொண்ட அனுபவங்களைச் சொன்ன எனது தாய்மாமா,  தச்சபட்டி, உத்தப்புரம் அஞ்சல், திருமங்கலம் தாலுகா, மதுரை ஜில்லை என அவரது முகவரியை எழுதுவார். நகரவாழ்க்கையின் வசதிகளை அனுபவைத்துவிட்ட மனம் முழுமையாகக்  கிராமத்திற்கே போய்விடலாம் என்பதை ஏற்கவில்லை.  நகரமாகவும் இல்லாமல் கிராமமாகவும் இல்லாமல் இருக்கும் திருமங்கலம் கிராமத்தின் வாசனையைத் தரும் எனப் பாவனை செய்கிறது மனம். அங்கே எனக்கும் மனைவிக்குமான வீடு – ஒரு சிறியதான வீடு ஒன்றைக் கட்டிக்கொண்டு போய்விடலாம் என்று தொடங்கினோம். இப்போதுதான் நிறைவடைந்திருக்கிறது.

ஆறுமாதத்திற்கு முன்பே கிளம்பியிருக்கலாம். மனிதர்களின் திட்டங்கள் எல்லாம் அப்படியே நடந்துவிடுவதில்லையே. திட்டமிட்டபடி 20 நாள் பயணமாக (2019, டிசம்பர்-2020, ஜனவரி 5) இலங்கைப் பயணம் முடிந்தது.  அதனால் ஆரம்பித்த வீட்டு வேலைகளில் ஒரு சுணக்கம்.   சுணக்கம் தீர்ந்து ஆரம்பித்த போது கரோனாவின் ஆதிக்கம் மெல்லப் பரவத்தொடங்கியது. தீவிரமான முடக்கங்களை அறிவித்த அரசு உத்தரவுகளால் ஆறுமாதங்கள் ஓடிவிட்டன. ஆகஸ்டில் ஆரம்பித்த வேலைகள் இப்போது நிறைவடைந்துவிட்டன. திருநெல்வேலியை விட்டுக் கிளம்பத் தயாராகிவிட்டேன்.  

    

1996 கடைசியில் நேர்காணலுக்கு வந்த நான், 1997 பிப்ரவரி 13 இல் பணியேற்புக்காகத் தனியாக வந்தேன். கல்வியாண்டு முடிந்தபின் மே முதல் வாரத்தில் குடும்பமும் புதுச்சேரியிலிருந்து திருநெல்வேலிக்கு வந்தது. கரோனாவின் இடையீடு இல்லாமலிருந்தால் 2020 இன் தொடக்க மாதங்களிலேயே குடிபெயர்ந்திருக்கலாம்.  நடக்கவில்லை இப்போது உலகையே அச்சுறுத்திய ஆண்டு முடியப்போகிறது. இன்னொரு தடைக்காலம் அறிவிக்கப்படும் வாய்ப்புகள் இருக்கின்றன. அதற்கு முன் கிளம்பியாக வேண்டும்.

 

நெல்லைப் பல்கலைக்கழக த்தில் இருபத்திரண்டு கல்வியாண்டுகளும் ஐந்து மாதங்களும். இடையில் 22 மாதங்கள் (2011 செப்டம்பர் முதல் 2013 ஜுலை) போலந்து நாட்டின் வார்சா வாசம். அந்தக் காலத்தைக் கழித்துவிட்டால் திருநெல்வேலியில் வசிப்பு ஏறத்தாழ 20 ஆண்டுகள். இவ்வளவு காலம் பிறந்த ஊரில் கூட இருந்ததில்லை.  வாழ்ந்த காலம் குறைவுதான். அது ஒரு மிகச் சிறிய ஓர் மலையடிவாரக் கிராமம்.  100 வீடுகள்கூடக் கிடையாது. ஊருக்கான விளைச்சல் நிலங்களை உள்ளடக்கிய எல்லையாக வடக்கே வாசிமலையான் மலை இருக்கிறது. தெற்கே உசிலம்பட்டி – எழுமலைச் சாலை. கிழக்கிலும் மேற்கிலும் இரண்டு ஓடைகள். ஆண்டிபட்டியையும் எழுமலையையும் பிரிக்கும் வாசிமலையான் மலைத்தொடரிலிருந்து மழைக்காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து வந்த இளமைக்காலம் நினைவில் இருக்கிறது. அதேபோல இளமைக்காலக்   கொண்டாட்டமான வைகாசியில் நடக்கும் மாரியம்மன் திருவிழாவும் தைத்திங்களில் நடக்கும் மாடு விரட்டும் நினைவில் இருக்கின்றன. இதுவரையான வாழ்நாளில் நான்கில் ஒரு பகுதிகூட அங்கிருந்ததில்லை. படிக்க என்றும் வேலைக்கென்றும் பார்க்கவென்றும் பழகவென்றும் திரியவென்றும் திளைக்கவென்றும் சென்று திரும்பிய வெளிகள்.ஆண்டுக்கணக்கில் தங்கியிருந்த - எனத் திண்டுக்கல் (3 ஆண்டுகள்) மதுரை(15 ஆண்டுகள்) புதுவை (ஏழரை ஆண்டுகள்) வெளிகள் ஒவ்வொன்றும் வந்துபோகின்றன.

 

திருநெல்வேலியில் இருந்த இருபதாண்டுக்காலத்தை நினைத்துக்கொள்ளவும் திரும்பச் சொல்லவும் நிறைய இருக்கின்றன.பல்கலைக்கழகப் பணிகள் சார்ந்த பயணங்களாகவும், பணிசாராப் பயணங்களாகவும் ஏராளமான பயணங்கள் நிகழ்ந்துள்ளன. எழுத்தாளர்கள், கலைஞர்கள், நிகழ்வுகள், பொழுதுபோக்குகள் எனப் பலவகையான சந்திப்புகள் கடந்து போயுள்ளன. அமைப்புகள் எப்படி இருக்கின்றன என்ற புரிதல் ஏற்பட்டிருக்கிறது. அமைப்புகளை மக்கள் எதிர்கொள்ளும் விதங்கள் இன்னும் கூடப் புரியாமல் இருக்கின்றன. ஒவ்வொரு வருடமும் வந்துபோன காலநிலை மாற்றங்களும் குற்றாலச்சாரலும் அருவிகளும் அணைகளும் மலைகளுமெனப் பார்த்த இடங்கள் மறந்துவிடக்கூடியன அல்ல.

 

திருநெல்வேலியிலிருந்து திருமங்கலம் சென்றபின்பு நானிருந்த ஊர்களின் வெளிகளில் அலைந்து திரிந்த நாட்களும் சந்தித்த ஆளுமைகளும் பங்கேற்ற அமைப்புகளும் அடைந்த மாற்றங்களும் பற்றி எழுதித்தொகுக்க வேண்டுமெனத் தோன்றுகிறது. அப்படி எழுதும் குறிப்புகள் எனது காலகட்டத்தின் நகர்வுகளாகவும் இருக்கலாம்.  எழுதும்போது நினைவில் வரக்கூடியனவாக என்னவெல்லாம் இருக்கும் என இப்போது சொல்ல முடியவில்லை.


#நெல்லை நினைவுகள் - 1



இந்த ஊர்களும் நானும்.. தொடரும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்