வட்டாரத்திலிருந்து தேசியத்திற்கு


கடந்த பத்தாண்டுகளில் தமிழக அரசியல், மாநிலம் தழுவிய அரசியலிலிருந்து வட்டார அரசியலுக்கு நகர்ந்துவிட்டது. வட்டார அரசியல் என்பது முன்பு மண்டலங்களின் அரசியலாக இருந்தது. அதன் வெளிப்படையான அடையாளம் திராவிட முன்னேற்றக் கழகம் தென்மண்டல ஒருங்கிணைப்பாளராக திரு மு.க. அழகிரியை நியமித்ததைச் சொல்லலாம். மண்டல அளவு அரசியல், மாவட்ட அளவு அரசியலாக மாறி, தாலுகா அளவு அரசியலாக நகர்ந்துகொண்டிருக்கிறது. இதன் வெளிப்பாடுகளே கட்சி அமைப்புகளுக்காக ஒரே மாவட்டம் இரண்டு மூன்று பிரிவுகளாக ஆக்கப்பட்டுத் தனித்தனி மாவட்டச் செயலாளர்கள் நியமனங்கள் நடப்பது. இந்த நகர்வைத் தொடங்கி வைத்தது திராவிட முன்னேற்றக்கழகம்.
2006- 2011 இல் சட்டமன்றத்தேர்தலில் திராவிட முன்னேற்றக்கழகக் கூட்டணி வெற்றிபெற்றது. அந்தத் தேர்தலிலேயே தமிழ்நாடு மாநில உணர்வைக் கைவிட்டுவிட்டு வட்டார உணர்வுக்குள் நகர்ந்துவிட்டது. தி.மு.க.வின் மாவட்டச் செயலாளர்களின் ஆதிக்கம் தலைதூக்கிய ஆட்சிக்காலம் அந்த ஐந்தாண்டுகள் தான். அதன் பிறகு தி.மு.க. வாரிசுகளின் அரசியலை எதிர்மறையாகப் பார்ப்பதைக் கைவிட்டுவிட்டு நேர்மறையாகவே எடுத்துக் கொண்டது. அடுத்தடுத்து வந்த நாடாளுமன்ற, சட்டமன்றத்தேர்தல்களிலும் வாரிசு அரசியலை ஊக்குவிக்கவே செய்தது. கட்சியின் தலைமையிலிருந்து மாவட்டம்தோறும் வாரிசுகளின் கட்டுப்பாட்டில் கட்சி அமைப்புகள் நகர்ந்தன. அந்த நகர்வு தி.மு.கவின் வாக்கு வங்கியைக் குறைத்து விடாமல் காப்பாற்றவும் உதவியிருக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னெடுப்புகளையும் வழிமுறைகளையும் ஆட்சியிலும் கட்சியிலும் அப்படியே பின்பற்றுவதாகவும் நகலெடுப்பதாகவும் இருக்கும் கட்சி அ இ அதிமுக. அந்த வகையில் அது திராவிட இயக்கக் கட்சியாகத் தன்னைத் தக்கவைத்துக்கொள்ள முடிகிறது. அக்கட்சியின் பொதுச்செயலாளராக ஜெ.ஜெயலலிதா என்னும் பிராமணப் பெண் இருந்தபோதிலும் இட ஒதுக்கீட்டுக் கொள்கையைக் கைவிட முடியவில்லை. தன்னளவில் அவர் பிராமணப் பெண்ணாகவும் இட ஒதுக்கீட்டை விரும்பாதவராகவும் இருந்தாலும் அதில் கைவைக்க விரும்பியதில்லை. அதிகரிக்கவே வேண்டியிருந்தது. மதமாற்றச் சட்டத்தையும் உயிர்பலித் தடைச் சட்டத்தையும் கைவிட வேண்டியிருந்தது. இலங்கைத் தமிழர் அரசியலிலும் தமிழ் உணர்வாளராகக் காட்டிக்கொள்ள வேண்டியிருந்தது. அதே நேரம் அவர் இருந்தவரை அந்தக் கட்சி மையத்தலைமையால் கட்டுப்படுத்தப்படக்கூடிய கட்சியாகவே இருந்தது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பெரும்பான்மை சாதிகளை அதிகாரச் சமன்பாடுகளின் வழியாக முன்னெடுத்துக் கொண்டிருந்தார். எடுத்துக்காட்டாக திருநெல்வேலி மாவட்ட நிகழ்வுகளையே சொல்லலாம். இம்மாவட்டத்தில் எண்ணிக்கையில் பெரும்பான்மையாக உள்ள முக்குலத்தோர் அரசியலின் பிரதிநிதிகளாக நயினார் நாகேந்திரன், கருப்பசாமிப் பாண்டியன் ஆகியோரையும், நாடார்களின் பிரதிநிதியாக பி.எச். பாண்டியன் குடும்பத்தையும் வைத்துச் சமன்பாடுகளை மாற்றிக் கொண்டே இருந்ததைச் சொல்லலாம் .

அ இ அதிமுக ஜெ.ஜெயலலிதா என்ற மையப்படுத்தப்பெற்ற தலைமையில்லாமல் சந்தித்த முதல் தேர்தல் 2019 நாடாளுமன்றத்தேர்தல். அதிலேயே திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாணியில் வட்டாரத் தலைமைகளின் பிடிக்குள் சென்றுவிட்டது அ இ அதிமுக. அந்தந்த மாவட்டச் செயலாளர்களின் முடிவுகளே தீர்மானிக்கும் இடத்தில் இருந்தன. திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது ஒரு குற்றச்சாட்டாகச் சொல்லிக் கொண்டிருந்த வாரிசு அரசியலை அஇஅதிமுகவும் ஏற்றுக்கொண்டு வேட்பாளர்கள் ஆக்கியது. வெற்றிபெற்ற ஒரே வேட்பாளரான ரவீந்திரநாத் குமார் திரு ஓ.பி.எஸ்ஸின் வாரிசுதான் . பலரது வாரிசுகள் தோல்வியடைந்தார்கள். ஆனால் இந்தச் சட்டமன்றத் தேர்தலில் இன்னும் பல அமைச்சர்களின் வாரிசுகள் களம் இறங்குவார்கள். இந்த மாற்றம் தான் ஜெ.ஜெயலலிதா இல்லாத வெற்றிடம் நிரப்பப்பட்ட முறை.

வட்டாரத்தலைமை என்பதின் தொடக்கம் விஜயநகர ஆட்சிக்காலம். அவர்களால் நியமிக்கப்பட்ட மண்டலாதிபதிகள் பின்னர் நாயக்கர்களாக மாறினார்கள். தமிழ்நாட்டில் நாயக்கர்களின் ஆட்சிக்காலத்தில் அது பாளையக்காரர்களாக மாறியது. ஒவ்வொரு நாயக்கமண்டலமும் 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டதாகக் குறிப்புகள் சொல்கின்றன. பிரிட்டானியர்கள் காலத்தில் ஜமீன்தார்களே வட்டாரத்தலைமைகளாக மாறினர். நாயக்கர்கள் காலத்திலும் பிரிட்டானியர்கள் காலத்திலும் வட்டாரத் தலைமைகள் சாதியத் தலைமைகளாக மாறின.

பெரும்பான்மை வாக்குவங்கி என்ற அடிப்படையில் இயங்கும் இந்தியத் தேர்தலில் இயல்பாகவே சாதிகள் முதன்மையான தீர்மானிக்கும் காரணிகளாக இருக்கின்றன. இது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல; இந்தியப் பொதுமைக்கூறு. சாதி என்னும் சிற்றலகு ஒருவிதத்தில் இந்தியப்பண்பாடு அல்லது இந்து சமயம் என்னும் பேரலகுத் துணையாக இருக்கிறது. மதத்தின் அடிப்படையில் எல்லாச் சாதிகளையும் ஒன்றிணைத்து விட முடியும் என நம்பும் இந்துத்துவக் கருத்தியலாளர்கள் மறைமுகமாகச் சாதி அடுக்குகளே வைத்துக்கொள்ள வேண்டும் என நினைப்பதின் காரணங்களும் அதுதான். ஆனால் தேர்தல் அரசியலில் மதத்தைவிடவும் சாதிப்பிரிவுகளே முதன்மையான அடையாளங்களாக மாறிவிடக்கூடியவை. அதனால் சமய அடையாளத்தில் ஒன்றிணைவதைத் தடுக்கும் காரணியாகவும் சாதி மாறிவிடுகிறது. அரசதிகாரத்தில் பழைய மரபுப்படி அதிகாரப்பங்கீட்டை இனியும் செய்ய முடியாது. தீண்டாமை, ஒதுக்குதல், இட ஒதுக்கீடு, அனைவருக்கும் சமமான கல்வி போன்றவை இந்த ஒருங்கிணைவைக் குலைக்கும் வலுவான காரணிகளாக மாறியிருக்கின்றன.

வட்டாரத் தேசியம் வலுவான கருத்தியலாகவும் நிகழ்வாகவும் மாறிச் சமய அடையாளத்தைத் தோல்வி அடையச் செய்துவிடுகிறது. அத்தகைய சூழலில் தான் ரஜினிகாந்த் போன்ற வட்டார அடையாளம் இல்லாத தனிநபர்களைத் தேடுகிறது பெரும்பான்மைச் சமய அரசியல் என்னும் இந்துத்துவ அரசியல். ரஜினிகாந்த் என்னும் பிம்பம் வட்டார அரசியலை வெற்றிகொள்ள வேண்டும் என்றால் வட்டாரத்தன்மை கொண்ட சாதிகளோடும் அங்கிருக்கும் சாதியத் தலைமைகளோடு சமரசம் செய்துகொள்ள வேண்டும். அப்படியான ஆளுமைகள் அவரது மன்றங்களில் இருக்கிறார்கள் என்பதற்கு எந்தச் சான்றுகளும் இதுவரை கிடைக்கவில்லை. அப்படியான களப்பணி எதையும் அவர்கள் செய்து தங்களை நிரூபித்தவர்களாகவும் இல்லை.

அவரை முன்னிலைப் படுத்தும் பாரதிய ஜனதா கட்சிக்கும் அத்தகைய அமைப்புகள் வட்டாரம் தோறும் இல்லை. அதன் நோக்கமே வட்டாரத் தன்மையைக் கைவிட்டுவிட்டுத் தேசிய அரசியலுக்கு நகரவேண்டும் என்பதே. அதன் காரணமாகத் திரும்பவும் அ இ அதிமுகவிடமும் அதன் கூட்டணிக் கட்சிகளிடமும்தான் செல்லவேண்டும். அப்படியொரு கூட்டணியை அமைக்காமல் விலகி நின்று - மூன்றாவது அணியாக நின்று வட்டார தேசிய அரசியலை வென்றெடுப்போம் - சாதி மத வேறுபாடற்ற ஆன்மீக அரசியலை உருவாக்குவோம் எனக் கூவுவது நடைமுறைச் சாத்தியமற்ற மலைப்பிரசங்கக் கூக்குரலாகவே முடியும்.


தொடர்பாக வாசிக்க
====================

கமல்ஹாசன்: நடிகரிலிருந்து அரசியல்வாதியாக
https://ramasamywritings.blogspot.com/2020/11/blog-post_6.html

நாத்திகம் என்னும் ஆன்மீகம்
https://ramasamywritings.blogspot.com/2020/11/blog-post.html

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்