பிக்பாஸ்: உள்ளிருப்பின் காரணங்கள்

 

விஜய்தொலைக்காட்சியின் “பெருந்தல” – பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் அனிதா சம்பத் வெளியேறியுள்ளார். அவரது வெளியேற்றத்தைச் சமூக ஊடகங்களில் இயங்குபவர்கள் வெளியேற்றப்பட்டார் என்றே நம்புகின்றனர். அனிதா வெளியேற்றம் மட்டுமல்ல; இதற்கு முன்பு அர்ச்சனா, சனம்ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி  ஆகியோரின் வெளியேற்றங்களின் போதும்கூட இதுபோலவே கருத்துகள் வெளிவந்தன. ரேகா, வேல்முருகன், சுஜித்ரா, ஜித்தன் ரமேஷ், நிஷா ஆகியோரின் வெளியேற்றங்களின்போது அப்படியான கருத்துகளால் நிரம்பவில்லை.
  வாரம் ஒருவரை வெளியேற்றும் அமைப்புக் கொண்ட இந்த நிகழ்ச்சியில் தொடக்கத்தில் 16 பேர் நுழைகிறார்கள். பார்வையாளர்கள் அளிக்கும் விருப்ப வாக்குகளில் குறைவான எண்ணிக்கையாளர்களே வெளியேற்றப்படுகிறார்கள் என்பதாக அறிவிக்கப்பட்டு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அவரோடு உரையாடி வெளியே அனுப்புகிறார். அந்த வேலையைச் செய்யும் நடிகர் கமல்ஹாசனின் விருப்பமோ, அலைவரிசையின்  நிர்வாகமோ அதில் நுழைவதில்லை என்றாலும், விதிவிலக்குகளும் உள்ளன. பொது நடைமுறையைப் பின்பற்றாத – சமூக ஒழுங்குக்குப் பங்கம் ஏற்படாத அளவில் உள்ளே இருந்து விளையாட வேண்டும். அதனை மீறினால் நிர்வாகம் திடீர் முடிவெடுத்தும் வெளியேற்றும். அப்படி ஒவ்வொரு தடவையும் ஓரிருவர் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இந்த முறை அப்படி யாரும் வெளியேற்றப்படவில்லை. சில வாரங்களுக்குப் பின் புது நுழைவும், கடைசியில் மறு நுழைவும்கூட உண்டு. எல்லா நுழைவுகளும் வெளியேற்றங்களும் நிகழ்ச்சியின் பொழுதுபோக்குத் தன்மையை அதிகரிக்கவே என்பது வெளிப்படையானவை.   இந்த உரிமை அவர்களுக்கு இருப்பதால் வெளியேற்றங்கள் ஒவ்வொன்றிலும் அவர்களது கணக்கும் விருப்பமும் இருக்கும் எனப் பலரும் கருதுகின்றனர்.

பார்வையாளர் பங்கேற்பை அதிகரித்துத் தங்களின் பார்வையாளர்களாக அவர்களை நீட்டிக்க பொழுதுபோக்கு அலைவரிசைகள் நடத்தும் போட்டித்தன்மை விளையாட்டுகளில் ஒன்றாக இருக்கும் பிக்பாஸ் உலகம் முழுவதும் நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சி. வெவ்வேறு துறைகளில் இருக்கும் ஓரளவு பிரபலங்களை ஒன்றாக இருக்க வைத்து ஒவ்வொருவராக வெளியேற்றுவதைச் செய்கிறார்கள். ஆனால் இந்தியத் தொலைக்காட்சிப் பார்வையாளர்களுக்கு அதனை அறிமுகம் செய்துள்ள ஸ்டார் குழுமம் திரைப்படம், தொலைக்காட்சி ஊடகங்களை மட்டுமே நிகழ்த்துநர்களாக உள்ளே அனுப்புகிறது.

விஜய் தொலைக்காட்சியின் பெருந்தல – பிக்பாஸ்- 100 நாள் கொண்டாட்ட நிகழ்வு. 2017 இல் ஆரம்பிக்கப்பட்ட முதல் பருவம் தொடங்கி நான்காம் பருவம் வரை பெரிய அளவு மாற்றங்கள் இல்லாத கட்டமைப்புடன் நிகழ்த்தப்படுகிறது. முதல் மூன்று ஆண்டுகளில் ஜூனில் தொடங்கி அக்டோபரில் நிறைவடைந்த நிகழ்ச்சி, இந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கியிருக்கிறது. காரணம் கரோனா போட்ட தடைகள். தொடர்ச்சியாகப் படப்பிடிப்பு நடத்த இருந்த தடைக்காலம் முடிந்தபின் தொடங்கி, முன்னெச்சரிக்கை மருத்துவம், தனித்திருத்தல், சமூக இடைவெளி போன்றன கடைப்பிடிக்கப்பட்டு நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. 

படப்பிடிப்புத் தளங்களைத் தாண்டி விளையாட்டு மைதானம், அரசியல் மேடைகள், திருவிழாக்காட்சிகள் போன்றன மட்டுமே நேரடிக் காணொளிகளாக ஒளிபரப்பப்படும். அவற்றிலும் கூட விளம்பரங்கள் வரும்போது நடப்பனவற்றைத் திருப்புக்காட்சியாகவே காட்டுவார்கள். இவையல்லாத உண்மைநிகழ்வுகள் என்பன படப்பிடிப்பு நேரத்தில் எவ்வளவு பகுதிகள் காட்டப்படும் என்பது காட்சியின் படத்தொகுப்பாளரின் கற்பனைக்கும் திறமைக்கும் உரியது.

ஆறுமணி நேரம் நடந்த நீயா நானாவை 60 நிமிட ஒளிபரப்பாகப் பார்த்திருக்கிறேன். இரண்டு மணி நேர நேர்காணலை 30 நிமிடங்களில் சுருக்கித் தந்ததையும் கேட்டிருக்கிறேன். பெருந்தலை 24 மணிநேரத்தை நிலை நிறுத்தப்பட்ட ஒளிப்பதிவுக்கருவிகள் வழியாகப் பதிவுசெய்யப்பட்டு 60 நிமிட நிகழ்ச்சியாகத் தரும் ஒரு சுருக்கப்பட்ட வடிவம். அதில் உண்மையான கால அளவும், உணர்வுப்பெருக்கமும் வெளிப்படவில்லை எனச் சொல்வதும் சந்தேகப்படுவதும் தேவையற்றது. உண்மைத்தன்மையைக் கொண்டுவர முயல்கிறார்கள் என்பது மட்டுமே அதன் இலக்கு. அதன் இலக்குப்பார்வையாளர்களும் அதனையே எதிர்பார்க்கிறார்கள். 

வாரக்கடைசி நிகழ்ச்சிபோல குறிப்பிட்ட பருவ நிகழ்ச்சி. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் உரிப்பொருள் அடிப்படையிலும் பங்கேற்கும் பாத்திரங்களின் அடிப்படையிலும் இலக்குப்பார்வையாளர்கள் அமைவார்கள். நிகழ்வின் காலத்தை வைத்து அந்நிகழ்வைப் புனைவு நிகழ்வு எனவும் புனைவல்லாத நேரடி நிகழ்ச்சி எனவும் வகைப்படுத்திப் பார்க்கிறார்கள் பார்வையாளர்கள். 24 மணிமுழுமையான புனைவாகவும் இல்லாமல், நிகழ்வின் இலக்குப்பார்வையாளர்கள் பதின்பருவத்தைத் தாண்டிய இளையோரும் நடுவயதினரும். இதுகல்லூரி விடுமுறைக்கால வழக்கமாகக்க் கோடை விடுமுறையையொட்டி ‘பெருந்தல’யில் வெளியேற்றக் நிகழ்வுகள் தொடங்கிவிட்டன. முதல் ஒருமாத காலத்திற்குக் கூட்டம் குறையாமல் பார்த்துக் கொள்ளும்விதமாக ஒரு நுழைவும் ஒரு வெளியேற்றமும் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. புதுக்கதாபாத்திரங்களின் நுழைவு உள்ளே இருப்பவர்களுக்குக் கூடுதல் எச்சரிக்கையை உண்டாக்கவல்லன. பார்வையாளர்களுக்கு நிகழ்ச்சியின் வீச்சு பெரிய அளவுக்குப் போய்க் கொண்டிருக்கிறது என்ற பாவனையைத் தரவல்லது.

பெருந்தலை - 4 இல் அதிகமும் அறியப்படாத முகங்கள் உள்ளே நுழைந்திருப்பதால் விதம்விதமாக அறிமுகப் படலங்கள் நடந்தன/நடக்கின்றன. நுழையும்போது அதிகமும் விவரிக்கப்படாதநிலையில் முதல்வாரக் கடைசியில் ஒவ்வொருவரும் அவரவர் கதையைச் சொல்லும் காட்சிகள் இடம் பெற்றன. தன்வரலாற்றைச் சொல்லுதலில் தன்னிரக்கமும் கையறுநிலையும் பார்வையாளர்களிடம் அதிக ஈர்ப்பை உண்டாக்கும் என்பதற்காகக் கடந்தகாலச் சோகநிகழ்வுகளை அதிகம் சொல்லி அழுகையுணர்வுகளை மிகுவிப்பது நடந்தது. மிகக் குறைவானவர்களே உண்மையைச் சொல்வதாகக் காட்டிக்கொண்டனர். . வருவிக்கப்பட்ட அழுகையும் சோகமும் அந்த நேரத்தில் பரிதாப உணர்வை உண்டாக்கக் கூடும். ஆனால் மிகைப்படுத்தாத விவரிப்பும் உண்மையைச் சொல்கிறார் என்ற தோற்றமும் ஒரு பாத்திரத்தின் மீது நம்பகத்தன்மையை உண்டாக்கும். உள்ளே இருந்த 16 பேரில் இளையோர்களான ஷிவானி, கேப்ரில்லா, ஆஜிப் ஆகியோர் அதிகமும் அலட்டிக்கொள்ளாமல் தங்களின் கடந்த காலத்தைச் சொன்னார்கள்.

இந்த நான்கு ஆண்டுகளில் பெருந்தல நிகழ்ச்சிக்கான வீட்டிற்குள் அனுப்பபட்டவர்களில் பாதிக்கும் மேலே நிகழ்ச்சியை நடத்தும் நேரடியாக விஜய் தொலைக்காட்சியோடு தொடர்புடையவர்கள் என்ற பேச்சு உண்டு. அவர்களைக் கடைசிவரை உள்ளே இருக்க வைக்கும் முயற்சிகளைச் செய்கிறார்கள் என்ற பேச்சும் உள்ளது. அவர்களில்  அத்தொலைக்காட்சியின் வாரக்கடைசிப் போட்டி நிகழ்ச்சிகளின் பங்கேற்பாளர்களாகவோ, நிகழ்ச்சியின் பின்னரங்கத் திறனாளர்களில் ஒருவராகவோ, தொடர்களில் ஒரு நடிப்புக் கலைஞராகவோ இருந்து சிறிய அறிமுகம் பெற்றவர்களுக்குக் கூடுதல் அறிமுகத்தை வழங்குகிறது என்றொரு பேச்சு இருக்கிறது. இந்த ஆண்டும் அதேதான் நிலை ரம்யா பாண்டியன், ரியோ. கேப்ரி, ஆஜித், அர்ச்சனா, ரேகா, அறந்தாங்கி நிஷா, அத்தோடு விளம்பரங்கள், தொலைக்காட்சி, சேவை வானொலிகள், என வெகுமக்கள் ஊடகங்களில்   வாய்ப்புகளைப் பெற்றவர்களும் நடித்து முடித்து ஓய்வுபெற்ற திரைப்பட நடிக நடிகையர்களும் கூடுதல் வாய்ப்புக்காகக் காத்திருக்கும் புதுமுகங்களும் எனக் குறிப்பிட்ட துறையினரே அதன் பங்கேற்பாளர்கள்.


நகரவாசிகளில் பலபேருக்குக்கு அந்த விளையாட்டுக் கருவி அறிமுகம் தான்.  வட்டப் பாதையின் உள்ளே நுழையும் குண்டுகளின் பாதையின் – ஆங்கிலத்தில் லேப்ரிந்த்  (Labyrinth) எனக் குறிப்பிடப்படும் விளையாட்டின் மாற்று வடிவம் இது. லேப்ரிந்த்   என்பது கிரேக்கத்தொன்மம். அந்த விளையாட்டிடத்தைக் கட்டியவர் பெயர் டெட்லெஸ். அதற்குப்பின்னால் சில வதைகளும் சில கொலைகளும் உண்டு. அதைத்தாண்டியொரு காதல் கதையும் உண்டு. அதனை உள்வாங்கி உருவாக்கப்பட்ட விளையாட்டே லேப்ரிந்த.  அந்தக் கருவியின் விலைக்கேற்ப் பெரிதாகவும் வட்டங்களின் எண்ணிக்கை கூடுதலாகவும் இருக்கும்.  குறிப்பிட்ட எண்ணிக்கையில் குண்டுகள் போடப்பட்டு மூடப்பட்டிருக்கும். ஒவ்வொரு பாதையிலும் ஒரு குண்டு நுழையும் விதமாக ஒரு திறப்பு இருக்கும். சில வட்டங்களில் இரண்டு நுழைவுவாசல்கள் இருக்கும். ஒரு பக்கம் ஒன்று நுழையும்போது இன்னொரு வாசலில் ஒன்று வெளியேறும் வாய்ப்புகளும் உண்டு.  

ஒரேயொரு குண்டை உள்ளே தள்ளும் லேப்ரிந்த் விளையாட்டை   எனது பள்ளிப்பருவத்தில் விளையாடியிருக்கிறேன். ஆனால் அந்தக் கருவியை எனக்கு அறிமுகப்படுத்தியது எனது பெற்றோரோ உறவினர்களோ இல்லை. ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது விடுதி எனது அறையில் தங்கியிருந்த பத்துபேரில் ஒருவனாக வந்த கும்பகோணத்துக் கோடீஸ்வரன். விடுதிவாழ்க்கையிலும் அவனது குழந்தைத்தனம் கெட்டுப்போகாமல் பாதுகாக்கப் பலகருவிகளைக் கொடுத்து அனுப்பிய அவனது பெற்றோர் இந்தக் கருவியையும் கொடுத்து அனுப்பியிருந்தார்கள். அந்தக் கருவியை அறையின் வாசலில் அல்லது நடைபாதையின் தூணருகில் உட்கார்ந்து ஆட்டிக் கொண்டே இருப்பேன். மற்றவர்களுக்குத் தரமாட்டான்; விளையாடாதபோது ட்ரங்குப் பெட்டிக்குள் வைத்துப் பூட்டிவிடுவான். விளையாட்டு மைதானத்திற்கு வராமல் அந்தக் கருவியோடு முழுப்பொழுதையும் கழிக்கும் அவன். நல்ல குண்டாக இருப்பான். கும்பகோணம் குண்டு என்று தான் விடுதியில் அவனுக்குப் பட்டப்பெயர். அறையைச் சுத்தம்செய்யும் வேலையை அவனுக்குப் பதிலாகச் செய்து ஒருமுறை அந்தக் கருவியை வாங்கி விளையாண்டு பார்த்துவிட்டுத் திருப்பித் தந்தேன். 

லேப்ரிந்த் கருவியின் தொழில்நுட்பத்தை ஏறத்தாழக்கடைப்பிடிக்கும் பொழுதுபோக்கு விளையாட்டுதான் பெருந்தலை. ஒரேயொரு வித்தியாசம் இங்கே. அங்கே உள்நோக்கிய பயணம்; இதில் வெளியேறும் பயணம். உள்வட்டத்திற்குள் நுழைந்து கடைசி இடத்தில் நின்றுவிடும் குண்டு எது என்பது உறுதியாகத் தெரியாது. உள்ளே நுழைந்துவிட்ட நிலையில் திரும்பவும் வெளியே வர வாய்ப்புடைய விளையாட்டு அது. இதிலும் மறுபிரவேசம் உண்டு என்றாலும் எல்லாருக்கும் வாய்ப்பிருக்காது. அதிலும் தொலைக்காட்சி அலைவரிசையின் விருப்பமே முதன்மைக்காரணமாக இருக்கும்.

இந்த ஆண்டு தொலைக்காட்சி அலைவரிசை பார்வையாளர்களின் பொழுதுபோக்கை இரண்டாம் நிலையில் நினைப்பதுபோலத்தோன்றுகிறதோ என்று தோன்றுகிறது. உள்ளே இருக்கும்போது ஒரு மணி நேர நிகழ்ச்சியில் தனது விவாதங்கள், பங்கேற்புகள், சண்டைகள், தவறுகள் வழியாக க்கூடுதல் கூடுதல் உள்ளடக்கக் கூறுகளைத் தந்த பங்கேற்பாளர்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். சுரேஷ் சக்கரவர்த்தி, சனம் ஷெட்டி, அர்ச்சனா, அனிதா ஆகியோரின்   செயல்கள் பங்கேற்பாளர்களின் பொதுப்புத்தியோடு முரண்படக்கூடியனவாக இருந்தன என்றாலும் பங்கேற்பைக் காத்திரமாக வெளிப்படுத்தியவர்கள்.  இவர்களோடு ஒப்பிட  இன்னும் உள்ளே இருக்கும்  ஷிவானி, ஷோம்சேகர், கேப்ரி, ஆஜித் ஆகியோரின் பங்களிப்புகள் குறைந்த அளவு போட்டியாகக் கூட இல்லை. ஆனால் ஆரி, ரியோ, பாலாஜி, ரம்யா பாண்டியன் ஆகியோரின் பங்களிப்பும் கூட வெளியேற்றப்பட்டவர்களின் பங்களிப்பைவிடவும் கூடுதல் தரமானவை அல்ல; தரமான சம்பவங்களை அவர்கள் உருவாக்கவில்லை. ஆனாலும் பார்வையாளர்களின் விருப்ப வாக்குகள் கிடைக்கவே செய்கின்றன. விஜய் தொலைக் காட்சியோடு தொடர்புடையவர்களின் உள்ளிருப்புக்கு அலைவரிசையின் தயவைத்தாண்டி அவர்கள் சமூக ஊடகச் செயல்பாடுகளும் காரணமாக இருக்க க்கூடும் எனத் தோன்றுகிறது. இங்கே வருவதற்கு முன்பே முகநூல், டிக்டாக், இன்ஸ்டாக்ராம் போன்றவற்றில் அவர்கள் பெற்றிருந்த தொடர்வாளர்களின் எண்ணிக்கையும் காரணமாக இருக்கலாம். இன்னும் மூன்று வாரங்களில் இன்னும் வித்தியாசமான வெளியேற்றங்களும் உள் நுழைவுகளும் கூட இருக்கலாம். பார்க்கலாம்; பார்ப்போம்.

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்