வேளாண்சட்டங்கள் : வாக்காளர் எவ்வழி அரசும் அவ்வழி

 

உலகமயத்தை இந்தியா ஏற்றுக்கொண்டு 30 ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஏற்றுக் கொண்டது தொடங்கி, காங்கிரஸ் தலைமையில் - முனைவர் மன்மோகன்சிங் தலைமையில் நடந்த ஆட்சிக் காலத்தில் தொழில் மண்டலங்களே வளர்த்தெடுக்கப்பட்டன. ஒவ்வொரு மாநிலத்திலும் பெருந்தொழில்களில் ஈடுபடக்கூடிய முதலாளிகள் உருவாக்கப்பட்டனர். தேசிய முதலாளிகளின் கையிலிருந்த வணிகமையப் பொருள் உற்பத்தி தரகுமுதலாளிகளிடம் சென்றது. ஒவ்வொரு மாநிலத்திலும் சில நூறு தேசிய இன முதலாளிகள் உருவானார்கள். தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களும் போக்குவரத்து வளர்ச்சிக்கான தொழில்களும் வீட்டுபயோகப்பொருட்களுக்கான உற்பத்திகளும் முதன்மையாக மாறின. இயற்கை வளங்களான ஆற்றுமணல், ஆற்றுநீர், தாதுவளம், காடுகள் போன்றனத் தனியாருக்குக் குத்தகையாகத் தரப்பட்டன. இப்போது வந்திருக்கும் வேளாண்சட்டங்கள் விவசாய நிலங்களைக் குத்தகையாகத் தனியார்ப் பெறுநிறுவனங்கள் வசம் போக வழிவகை செய்யப்பார்க்கின்றன.

இந்தியா வேளாண்மை மையநாடு என்பதை மனதில் கொண்டு விவசாயிகள் உற்பத்தித்தொழிலில் தொடர்ந்து ஈடுபடும் வழிமுறையைக் கண்டறியும் ஆய்வுகளும் திட்டமிடுதல்களும் பின்னுக்குத் தள்ளப்பட்டன. தொடர்ந்து விவசாயத்தில் ஈடுபட முடியாத விவசாயிகள் நிலங்களைவிட்டு வெளியேறலாம் எனச் சொன்னார் மன்மோகன் சிங். 2014 தேர்தலில் வேளாண்மையை நம்பியிருந்த மாநிலங்களில் காங்கிரஸ் பேரியக்கம் பெருந்தோல்வியைக் கண்டது. அப்போது காங்கிரஸுக்கு கிடைத்த அடியை உணர்ந்தே பின்னர் வந்த பஞ்சாப், ஹரியானா மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸின் ராகுல் காந்தி வேளாண்மை ஆதரவுப்பேச்சுகளை முன்வைத்தார். காங்கிரஸ் கட்சி அம்மாநிலங்களில் மறு உயிர்ப்புப் பெற்றது.
சிறுசிறு நிலப்பிரிவுகளாக விவசாயம் செய்யும் பாணிக்கு இப்போது லாபம் இல்லை என்பது ஓரளவு ஏற்கத்தக்கது. அதற்காக அந்த நிலங்களைக் கார்ப்பரேட் முதலாளிகளிடம் விட்டுவிட்டுத் தொழிலற்ற உதிரிகளாக அலையச் சொல்வது ஓர் மக்கள் நல அரசாங்கத்தின் திட்டமாக இருக்கமுடியாது. மன்மோகன் சிங் மென்மையாகப் பேசிய சொற்களைத் தடாலடியாகச் சொல்வன தான் பா.ஜ.க.வின் மூன்று வேளாண்மை மசோதாக்களின் சாரம். மின்சார விநியோகச் சட்டமும் அதற்குத் துணைபோகும் சட்டமே.

சிறுகுறு விவசாயிகளாக இருக்கும் இந்திய விவசாயிகளைப் பெருந்தோட்டப்பயிர்களைச் செய்யும் விவசாயிகளாக மாற்றிவிட நினைக்கும்போது அதற்குத் தேவையான அடிப்படைத்தேவைகளைத் தரும் வழிகளை அரசு யோசிக்கவேண்டும். அதனை நிறைவேற்றும் திட்டங்களில் தனியார் முதலீட்டை ஊக்குவிக்கலாம். அதனைச் செய்யாமல் விவசாயிகளின் நிலங்களின் மீதான உரிமைகள் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தை உண்டாக்கியிருக்கிறது இந்தச் சட்டங்கள். உற்பத்திப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் முழுமையாகக் கார்ப்பரேட்டுகளின் கைக்கு மாறும் அபாயம் இருக்கிறது. அதல்லாமல் மின்சார விநியோக முறை மாற்றத்தின் மூலம் ஏற்படக்கூடிய ஆபத்துகளும் விவசாயிகளின் போராட்டத்திற்கான காரணங்களாக இருக்கின்றன.
இந்த அச்சங்களைப் போக்கும் வகையிலான தெளிவுகளை ஏற்படுத்திய பின்பு - தேவையான மாற்றங்களைச் செய்தபின்பே இந்தச் சட்டங்களின் மாற்றுவடிவங்களை நடைமுறைப்படுத்தவேண்டும். ஆனால் இந்த அரசாங்கம் தொடர்ந்து மிகக்குறைவான ஏகபோக முதலாளிகளை உருவாக்கும் நோக்கம் கொண்ட பொருளாதார நடைமுறைகளைப் பின்பற்றுகிறது. அரசாங்கத்தின் வேலைகள் என எதுவுமில்லாமல் எல்லாவற்றையும் தனியாரிடம் கையளிக்கும் எண்ணம் கொண்ட வழிமுறைகளே இதற்கு உகந்தது. அதனால் அவர்களுக்குப் பலனளிக்காத வகையில் எந்தச் சட்டத்தையும் கொண்டுவராது.
போதனையை மட்டுமே தனது செயல்பாடாகக் கொண்டவர் அரசின் தலைவராக இருக்கிறார். அவரது கவனமெல்லாம் மதம், பண்பாடு, மொழி, கல்வி போன்றவற்றில் ஒற்றைத் தன்மையை முன்மொழியும் உரைகளை மக்கள் முன்வைப்பதில் இருக்கிறது. அரசர்கள் காலத்தனிநபர் அதிகார அமைப்பைக் கட்டியெழுப்புவது மட்டுமே அவரது முதன்மை நோக்கம் .

உற்பத்தி, விநியோகம், வணிகம் என எதிலும் திட்டமிடும் பொறுப்பைத் தனதாக்கிக் கொள்வதைத் தவிர்க்கவே நினைக்கிறது. அதனையெல்லாம் அரசு செய்யவேண்டியதில்லை என நினைக்கிறது. அதனைச் செய்வதற்கு தனியார் துறை அறிவாளிகள் இருக்கிறார்கள்; குழும மேலாளர்கள் இருக்கிறார்கள். கடும் பணிச்சுமையைத் தந்து வேலை வாங்கும் கட்டமைப்பை அவர்கள் உருவாக்கிக் கொள்வார்கள் என நம்புகிறது. அவர்களின் தொழில் நடைமுறைக்கு ஒத்துவராத தொழிலாளர்களை வெளியேற்றும் சட்டங்களை மட்டும் உருவாக்கித்தந்தால் போதும் என இந்த அரசு நினைக்கிறது.
இந்த எண்ண ஓட்டத்திற்கும் நினைப்புகளுக்கும் எச்சரிக்கை மணி அடிக்கிறார்கள் போராடும் விவசாயிகள். அவர்கள் தான் அடுத்த தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்கள் என்ற உண்மை எப்போதும் மறுக்கமுடியாத உண்மை. தேர்தல் அரசியல் இருக்கும் வரை வாக்களிக்கும் கூட்டத்தின் குரலுக்குச் செவி சாய்க்கத்தான் வேண்டும் .இந்தப் பெரும்போராட்டத்தில் வாக்களிக்கும் திரளுக்குக் கிடைக்கும் வெற்றி இந்தியத் தேர்தல் ஜனநாயகத்திற்குக் கிடைக்கும் வெற்றியாக அமையும். தோற்றால் தேர்தல் இல்லாத இந்தியாவை விரைவில் காண நேரிடும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்