சம்ஸ்க்ருதம் என்னும் ஆதிக்கமொழி

இரண்டு ஆண்டுகள் போலந்து மாணாக்கர்களுக்குத் தமிழ்மொழி கற்பிக்கச் சென்ற போலந்து நாட்டில் கஷுபியன் மொழி என்றொரு மொழி வட்டார மொழியாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. அம்மொழி பேசும் மக்கள் எண்ணிக்கை ஒரு லட்சம் அளவில் இருக்கிறார்கள். குறிப்பிட்ட வட்டாரத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்காகத் தனியாகத் தொலைக்காட்சி, வானொலி போன்ற ஊடகவாய்ப்புகள் உருவாக்கித்தரப்பட்டுள்ளன.
ஒரு நாட்டின் எல்லா மொழியையும் சமமாக மதிப்பதும், நவீனத்தொழில் நுட்பத்தில் கிடைக்கக் கூடிய அனைத்துச் சாத்தியங்களையும் அந்த மொழிகளுக்கு வழங்குவது அந்த நாட்டு அரசாங்கத்தின் கடமை. உலக நாடுகள் பலவற்றில் வரி வடிவம் இல்லாத -சிறுபான்மையினரிடம் பேச்சு மொழியாக இருக்கும், மொழிகளுக்குக் கூடச் சம வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்காக அந்த நாட்டின் அலுவல் மொழியின் வரிவடிவத்தை அளித்துப் பயன்பாட்டில் இருக்கச் செய்கிறார்கள். வானொலி, தொலைக்காட்சி போன்ற நவீனத்தொழில்நுட்பக் கருவிகளில் அதன் பயன்பாட்டை உறுதி செய்கிறார்கள்.
இந்தியாவில் சம்ஸ்க்ருதமும் ஒரு சிறுபான்மை வட்டார மொழி என்ற தன்மையோடு அதற்கான அனைத்து உரிமைகளையும் வாய்ப்புகளையும் பெறும் தகுதியுடைய மொழி என்பதை யாரும் மறுக்க வேண்டியதில்லை. சம்ஸ்க்ருதம் பேசும் மக்கள் வாழும் பகுதியில் தனியான தொலைக்காட்சி அலைவரிசையை உருவாக்கித் தொடர்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஆகியவற்றோடு காலை, நண்பகல், மாலை, இரவு என நான்குநேரமும் செய்திகளையும் வழங்கலாம். இப்போது உருவாகியிருக்கும் வையக வலை வாய்ப்பைப் பயன்படுத்தி 24 மணி அலைவரிசையாகவும் உலக அளவுப் பரவல்கொண்ட அலைவரிசையாகவும் தரம் உயர்த்தித் தரும் வாய்ப்பை இந்திய நாட்டின் அரசாங்கமே உருவாக்கித் தரலாம். இந்த வசதியை இந்திய நாட்டின் அலுவல் மொழியாகப் பட்டியலிடப்பட்டுள்ள மொழிகளுக்கும் பட்டியலிடப்படாத மொழிகளுக்கும் அந்த வாய்ப்பைத் தரவேண்டும்.

இந்தியநாட்டின் தேசிய அரசு, சம்ஸ்க்ருதத்தைச் சிறுபான்மை மொழி என்ற வகைப்பாட்டில் வைத்து வளர்த்தெடுக்க நினைக்கவில்லை. அந்த மொழி, இந்திய மொழிகள் அனைத்திலும் மூத்தமொழி; செவ்வியல் மொழி என நினைக்கிறது.அதன் வளமான இலக்கியம், தத்துவம் ஆகியவற்றை மற்ற மொழிகளுக்குக் கடத்தவேண்டும்; ஏற்றுக்கொள்ள வேண்டும்; அறிந்துகொள்ள வேண்டும்; புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கருதுகிறது. அந்த நோக்கத்தோடு தான் அனைத்து மக்களும் அந்த மொழிச் செய்திகளைக் கேட்க வேண்டும் என்று இந்தத்திணிப்பைச் செய்கிறது. ஆதிக்க நோக்கத்தோடு உருவாக்கி அனைத்து மாநில மக்களும் வட்டாரச் சிறுபான்மை மொழி பேசுபவர்களும் ஏற்றுக்கொள்ளவேண்டும் வலியுறுத்துகிறது.

சம்ஸ்க்ருதம் மூத்தமொழி; செவ்வியல் இலக்கியங்களைக் கொண்ட தொன்மைமொழி என்பதை மறுப்பதற்கில்லை. அதனால் இந்தியப் பரப்பு முழுவதும் அறியப்பட வேண்டிய மொழி என்று ஒரு அரசாங்கம் நினைப்பதில் தவறில்லை என்று வாதிடப்படலாம். அந்த வாதம் ஏற்கப்படக்கூடிய வாதம் தான்.அந்த வாதத்தை ஏற்கும் நிலையில் இந்திய அரசுக்கு இன்னொரு கடமையும் முன்னே வந்து நிற்கும். இந்தியப்பரப்பில் சம்ஸ்க்ருதம் மட்டுமே தொன்மையான செவ்வியல் மொழி அல்ல. சம்ஸ்க்ருத்ததிற்கு இணையான தொன்மையுடன் செவ்வியல் மொழியாகத் தமிழும் இருக்கிறது. அம்மொழியிலும் வளமான இலக்கியங்கள் எழுதப்பெற்றுள்ளன. செவ்வியல் கவிதைகள் தொடங்கி தொடர்நிலைச்செய்யுள்களால் கதைசொன்ன சிலம்பும் மணிமேகலையும் போல இன்னொன்றை இந்திய மொழிகள் எதிலும் காட்ட முடியாது. தொல்காப்பியமென்னும் இலக்கண, இலக்கிய வரையறைகளைச் சொன்ன பனுவல்கள் சம்ஸ்க்ருதத்தில் தான் உண்டு.

தொல்காப்பியத்தின் நீட்சியாகத் தமிழில் இலக்கணப்பாரம்பரியம் நீண்டு கொண்டே இருக்கிறது. இந்தியச் சமயவியலுக்குத் தமிழின் பக்தி இலக்கியங்களும் சித்தர்மரபும் பெரும்பங்களிப்புச் செய்துள்ளன. கணியன் பூங்குன்றன் தொடங்கி வாழ்க்கையைத் தத்துவ நோக்கோடு விவரித்த கவிகள் பலர் இருக்கிறார்கள். சைவ சித்தாந்ததிதின் அடிப்படை நூல்கள் தமிழில் தான் இருக்கின்றன. பௌத்தத் தத்துவத்தை மணிமேகலை விரிவாக விளக்கியிருக்கிறது. அரச நீதிகளை குடும்ப நீதிகளையும் சொல்லும் மனுஸ்மிருதி, அர்த்த சாஸ்திரம் போன்றவற்றிற்கிணையாகத் திருக்குறளும் நீதி நூல்களும் தமிழில் தோன்றியுள்ளன. எனவே இந்தியாவின் இரண்டு தொன்மையான செவ்வியல் மொழிகளிலும் செய்திகள் மட்டுமல்லாது பல்வேறு நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டு, அனைத்து மாநிலங்களிலும் செயல்படும் அரசு தொலைக்காட்சிகளின் வழியே ஒளிபரப்பப் பட வேண்டும் என்பதுதானே சரியாக இருக்கும். அதற்குப் பதிலாகச் சம்ஸ்க்ருதத்தில் மட்டும் ஏன் அனைத்து இந்தியாவிற்கும் செய்தி அறிக்கை?

இது எல்லா வகையிலும் ஆதிக்கம் செலுத்துதலே. மக்களாட்சிக் காலகட்டத்தில் சிறுபான்மை மொழி ஒன்று அனைத்துப் பெரும்பான்மை மக்களின் மொழியையும் பண்பாட்டையும் ஊடுருவிக் கலந்து சிதைக்கும் வண்ணம் இந்த உத்தரவும் செயல்பாடும் இருக்கிறது. பன்முகப்பண்பாடும் மொழி அமைப்புகளும் கொண்ட ஒரு நாட்டின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் ஒன்று. கண்டிக்க வேண்டிய இந்த அறிவிப்பை மத்திய அரசு விலக்கிக்கொள்ள வேண்டும்.

==================================================

இந்த நேரத்தில் இந்தியவியல் அறிஞர் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் இவ்விரு மொழிகளையும் பற்றி எழுதிய குறிப்பொன்றை இங்கே வாசிக்கத் தருகிறேன். வாசித்துப்பாருங்கள்.

https://ramasamywritings.blogspot.com/2012/09/blog-post_27.html

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்