கி.ராஜநாராயணன்-புதுச்சேரி - அ.ராமசாமி



35
கி.ரா.வைத் தொகுத்தளித்த கண்காட்சியைப் பார்க்கும் வாய்ப்பைத் தவறவிட்ட எனக்கு எல்லாப் படங்களையும் வீட்டில் வைத்துப் புரட்டிக்காட்டினார் கி.ரா. அப்படிக் காட்டும்போது, அவரை ஓவியங்களாக வரைந்த ஆதிமூலத்தின் ஓவியங்களில் இருக்கும் பாவனைகளோடு இளவேனிலின் படங்களை ஒப்பிட்டுப் பேசினார்.
படங்கள் எடுப்பதற்காக இளவேனிலோடு புதுவையைச் சுற்றிவந்ததைச் சிரிப்போடு சொல்லிக் கொண்டே வந்தார். நான் முதன் முதலில் வந்து தங்கியிருந்த ஜமீன்தார் கார்டனிலும், அங்காளம்மன் நகரிலும் படம் எடுக்கவில்லை. நீங்கள் இருந்திருந்தால் ஒருவேளை அங்கும் போய்ப் படங்களை எடுத்திருப்போம் என்று சொன்னார்.

மனித முகங்களின் மெய்ப்பாடுகளையும் உடல் அசைவுகளையும் குறிப்பான சூழலில் வைத்து நிழற்படங்களாக்கிய புதுவை இளவேனிலின் அபாரமான படங்களின் நுட்பங்களைப் பார்க்கும் வாய்ப்பு சென்னையில் கிடைத்தது. கி.ரா.விற்கு வைத்ததைப்போலச் சுந்தர ராமசாமிக்கும் ஒரு புகைப்படக் கண்காட்சியை நடத்தவேண்டும் என்ற ஆர்வத்தில் இளவேனிலை நாகர்கோவிலுக்கு அழைத்துச் சென்று சில நாட்கள் தங்க வைத்துப் படங்கள் எடுக்கப்பட்டன. அவற்றின் தொகுதி ஒன்றைச் சென்னையின் அல்லயன்ஸ் பிரான்சேவில் கண்காட்சியாக நடத்தியது காலச்சுவடு அறக்கட்டளை.

அந்தக் கண்காட்சியில் சுந்தரராமசாமியின் பல்லக்குத்தூக்கிகளை மறுபடியும் நிகழ்த்தும்படி கேட்டுக்கொண்டது. 1992 நிகழ்த்திய பல்லக்குத் தூக்கிகளைத் திரும்பவும் கூட்டுக்குரல் சார்பில் நிகழ்த்தினோம். அந்த நாடகத்தை நிகழ்த்துவதற்கு எனக்கொரு கடப்பாடு இருந்தது. அதுவரை நிஜநாடக இயக்கத்தில் ஒரு நடிகனாகவும் பின்னரங்க வேலைகள் செய்யும் நபராகவும் மட்டுமே இருந்த என்னை, நாடகப் பனுவல்களை உருவாக்கும் எழுத்தாளராக அடையாளம் காட்டியது சுந்தர ராமசாமியின் பல்லக்குத் தூக்கிகள் கதைதான். நிஜநாடக இயக்கம் அல்லாமல் மதுரையில் புதிதாக உருவாக்கப்பட்ட சுதேசிகள் நாடகக்குழுவிற்காக நாடகங்களைத் தேடியபோது, நண்பர்களின் உரையாடல் வட்டத்தில், பல சிறுகதைகள் ‘நாடகீயத் தன்மைகள்’ கொண்டனவாக இருக்கின்றன என்று சொல்லிவிட்டு, உதாரணமாகப் பல்லக்குத்தூக்கிகள் கதையின் நாடகீயத்தன்மையை விளக்கிச் சொன்னேன். சொன்னவிதம் நண்பர்களுக்குச் சரியெனப்பட்டதால் எழுதும்படி வற்புறுத்தினார்கள்; எழுதினேன். படித்தோம். சில திருத்தங்கள் செய்யப்பட்டன. மேடையேற்றினோம். சிறுகதையை எழுதிய சுந்தரராமசாமிக்கு நாடகப்பிரதியை அனுப்பிவைத்து மேடையேற்றத்துக்கு அழைத்தோம். “மேடையேற்றத்தின்போது வர இயலவில்லை” என்று கடிதம் எழுதினார். பின்னர் ஒரு நேர்ப்பேச்சில், சிறுகதையை அப்படியே நாடகமாக்க வேண்டும் என்று அவசியமில்லை; நீங்கள் அப்படிச் செய்யவில்லை என்பதாகச் சொன்னார்.

அதிகமான நிகழ்வுகளை அடுக்கும் வடிவமல்ல. குறைவான நிகழ்வுகளை முன்பின்னாக அடுக்குவதன் மூலம் தன் வடிவத்தை உருவாக்கிக்கொள்வது சிறுகதை. சிறுகதை வடிவத்தில் கதைசொல்லியாக ஒரு பாத்திரம் கதைக்குள்ளோ, அல்லது வெளியிலோ இருக்கும். அதனைக் கண்டறிந்து தூக்கிவிட முடிந்தால் நாடகப்பிரதியுருவாக்கத்தின் பாதிவேலை முடிந்துவிடும். பல்லக்குத்தூக்கிகளில் அதைத்தான் செய்தேன். பல்லக்குத் தூக்கிகளைப் பற்றிய வருணனை, சித்திரிப்பு மூலம் அவர்களைப் பற்றியதொரு விலகல்நிலைக் கருத்துக்களை உருவாக்குவனாகக் கதைசொல்லியின் பாத்திரம் இருக்கும். அதன் மூலம் வாசகர்களின் வாசிப்புத்தளத்தை முடிவுசெய்யும் கதைசொல்லியின் அதிகாரத்துவத் தன்மை கதைக்குள் ஊடாடும். அதனைக் கண்டறிந்து தூரப்படுத்தியபின், 1990-களின் நிகழ்வுகளைக் குறிக்கும் சில குறியீட்டுச் சொற்களை உரையாடலில் சேர்த்தபோது நாடகப்பிரதி முழுமையானது. அத்தோடு நாடகத்திற்குள்ளோ அல்லது வெளியிலோ ஒருவித முரணிலையை உருவாக்க வேண்டும். பாத்திரங்கள் சார்ந்த முரணென்றால், அது அகமுரணாக அமையும், வெளியிலிருக்கும் ஏதோவொன்றொன்றால் புறமுரணாகத் தோன்றும். நவீன நாடகங்கள் என்ற வகைப்பாட்டில் பெரும்பாலும் புறநிலை முரண்களே முக்கியத்துவம் பெறும். பல்லக்குத்தூக்கிகளின் உரையாடலின் வழி உருவாக்கப்படும் அந்த நபர் நாடகத்தில் தோன்றா முரணை உருவாக்குவதன் வழி, புறநிலை முரணைக் குறியீடாக உருவாக்கிவிடுகிறார்.

மதுரையில் சுதேசிகள் மேடையேற்றிய பல்லக்குத்தூக்கிகளைப் புதுவையில் கூட்டுக்குரல் நாடகக்குழு மூலம் மேடையேற்றினோம். புதுவையில் இருந்தபோது நண்பர்களோடு சேர்ந்து கூட்டுக்குரல் என்ற நாடகக்குழுவை ஆரம்பித்து பல இடங்களில் 1990 -1997 காலகட்டங்களில் பல நாடகங்களை நிகழ்த்தினோம். நாடகத்துறையிலிருந்து வெளியேறி ஏழு ஆண்டுகள் ஆனபின்பு ஏறத்தாழ நாடகத்தை நெறியாள்கை செய்வதை நிறுத்தியிருந்தேன். நீண்ட இடைவெளிக்குப் பின் அந்த நாடகத்தைச் சுந்தர ராமசாமிக்காகச் சென்னையில் நிகழ்த்தும் பொருட்டுக் கூட்டுக்குரல் நண்பர்களை இணைத்துக்கொண்டு திரும்பவும் மேடையேற்றினோம். அந்த விழாவில். எனது இலக்கியப்பயணத்தில் கி.ரா.வும் சு.ரா.வும் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். நிழற்படக் கலைஞனாகப் புதுவை இளவேனில் கவனிக்கப்படுவதற்கு இவ்விரு ஆளுமைகளின் படங்கள் ஆதாரங்களாக இருந்தன; இருக்கின்றன.

36

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்குக் கி.ரா.வை அழைக்கும் முயற்சிகள் துணைவேந்தர் வே. வசந்திதேவி காலத்தில் மட்டுமே நடந்தது என்பதில்லை. துணைவேந்தராகப் பேராசிரியர் க.ப. அறவாணன் அவர்கள் இருந்தபோதும் முன்னெடுக்கப்பட்டது. தமிழியல் ஆய்வுகளில் அண்மைப்போக்குகள் என்றொரு கருத்தரங்கை 2002 இல் திட்டமிட்டோம். அப்போது துறையின் தலைவராக இருந்தவர் பேரா. தொ.பரமசிவன். அதன் தொடக்கவிழாவிற்குப் பல்கலைக்கழக எல்லைக்குட்பட்ட மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த எழுத்தாளர்கள் மற்றும் ஆய்வாளர்களை அழைத்திருந்தோம். தொடக்க விழாவில் ஒரு எழுத்தாளரின் சிறப்புரையும், ஆய்வாளர் ஒருவரின் தலைமையுரையும் என்பது திட்டம். சிறப்புரைக்காக கி.ராஜநாராயணன், சுந்தர ராமசாமி, தோப்பில் முகம்மது மீரான் என்ற மூன்று பேரில் அதே வரிசையில் அழைக்க முயற்சி செய்யலாம் என்ற திட்டப்படி முதலில் கி.ரா.வைத் தொடர்புகொண்டோம். அவரது வட்டார வழக்குச் சொல்லகராதி திட்டத்தை பல்கலைக்கழகப் பரப்பு முழுமைக்கும் விரிக்கும் திட்டம் இருக்கிறது; அதில் எங்களுக்கு ஆலோசனைகள் வழங்கும் பொறுப்பில் உங்களைப் பல்கலைக்கழகம் சிறப்பு ஆலோசகராக அமர்த்த விரும்புவதாகத் தொலைபேசியில் சொன்னேன். வழக்கம்போலத் தூரத்தைக் காரணம் சொல்லி கி.ரா. மறுத்துவிட்டார்.

கி.ரா. வராத நிலையில் சுந்தர ராமசாமியைத் தொடர்புகொண்டோம். சு.ரா. ஒத்துக் கொண்டார். தொடங்குவதற்கு முன்பே வந்து துறையின் ஆசிரியர்களோடு உறவாடித் துறையின் போக்கைத் தெரிந்துகொண்டு நிறைவான சொற்பொழிவொன்றைத் தந்தார். தனக்கு ஆய்வுகள் மீதிருக்கும் வருத்தங்களையும், சமகாலத்திற்கு வராமல் சில பத்தாண்டுகளுக்கு முன்பே தங்கிவிடும் இலக்கியத்துறைகளுக்கு மாறாகச் சில நம்பிக்கைகளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் வெளிப்படுத்துகிறது என்று குறிப்பிட்டுப் பேசினார்.
  
பின்னர் பல்கலைக்கழகத்தின் ஆட்சிப்பேரவையில் சமூக ஆர்வலர்/ எழுத்தாளர்/ பத்திரிகையாளர் என்ற வகைப்பாட்டில் ஒருவர் நியமனம் செய்யப்படும் வாய்ப்பு வந்தபோது பேராசிரியர் தொ.பரமசிவன் அவர் பெயரை முன்மொழிந்து அனுப்பினார். அனுப்பிச் சில ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் நியமனம் செய்யப்பட்டார். ஒரிரண்டு கூட்டங்களுக்கு வந்தார். ஆனால் அந்த நடைமுறையில் தன்னைப் போன்ற எழுத்தாளர்கள் என்ன பங்களிப்பு செய்யமுடியும் என்பதில் இருந்த குழப்பத்தால் பின்னர் கலந்துகொள்வதைத் தவிர்த்துவிட்டார்.

37

1989 கல்வியாண்டின் தொடக்கத்தில் புதுவைப்பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகப் பணியைத் தொடங்கிய கி.ரா. வுக்கு முதல் வழங்கப்பட்ட காலம் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டது. அந்தக் காலத்திலும் அவர் தொடங்கிய தொகுப்பு மற்றும் பதிப்புப்பணிகள் நிறைவடையவில்லை. புதுவை வட்டார நாட்டுப்புறக் கதைகளையும், பெண்களின் மனவுணர்வுகள் வெளிப்படும் கதைகளையும் தொகுத்துப் பல்கலைக்கழகத்திற்கு வழங்கியதோடு தனது பணி முடிந்துவிட்டது எனக் கிளம்பிவிடவில்லை. புதுவையிலேயே தங்கிப் பல்கலைக்கழகத்தின் அனுமதியுடன் அவற்றைத் தனது நூல்களை வெளியிடும் பதிப்பகங்கள் மூலம் நூல்களாகவும் வெளியிட்டார்.

தொடர்ச்சியாகப் புதுவையிலேயே தங்கிவிடுவது என்று முடிவெடுத்தபோது தனது இருப்புக்கான காரணங்களை நிறுவும் விதமாக அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கும் பணிகளை ஆரம்பித்தார். அப்பணியில் அவருக்கு உறுதுணையாக இருந்தவர் தாகூர் கலைக்கல்லூரியில் இயங்கிய பட்டமேற்படிப்பு மையப்பேராசிரியர் முனைவர் க.பஞ்சாங்கம் ஆவார். கரிசல் அறக்கட்டளை என்ற பெயரில் கி.ரா. தொடங்கிய அவ்வறக்கட்டளையின் பணிகளாகச் சிலவற்றை அவர் வரையறை செய்தார்.

· பேச்சுத்தமிழுக்கும் எழுத்துத்தமிழுக்கும் இடையே நிலவும் வேறுபாடுகளைக் குறைத்து எழுத்துத்தமிழுக்குரிய மரியாதையை பேச்சுத்தமிழுக்கும் பெற்றுத் தருவது. அதற்காக வட்டார வழக்குச் சொல்லகராதிகளை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொள்வது. கோவில்பட்டியில் இருந்தபோது கரிசல் வட்டாரச் சொற்களைத் தொகுத்து வெளியிட்டதுபோலப் புதுவை வட்டாரச் சொல்லகராதியை வெளியிடும் முயற்சியை மேற்கொள்வது என்பது அதன் நீண்ட காலத்திட்டம்.

· இரண்டாவதாகக் கரிசல் அறக்கட்டளையின் சார்பில் ‘கதைசொல்லி’ என்னும் எண்வழிச் சிற்றிதழை வெளியிடுவது. எண் வழிச்சிற்றிதழ் என்பது குறிப்பிட்ட காலத்தை – வார இதழ், மாத இதழ், காலாண்டு இதழ் போலக் காலக்கணக்கு வைத்து வெளியிடும் விதமாக இல்லாமல் இதழின் பணிகள் நிறைவுற்ற நிலையில் இதழை அச்சிட்டுத் தபால் வழியாக அதன் சந்தாதாரர்களுக்கும் வாசகர்களுக்கும் அனுப்பும் முறையைக் கைக்கொள்ளுதலாகும். இதழின் உள்ளடக்கத்திற்காகக் காத்திருத்தல், விளம்பரத்தேவைக்காகக் காத்திருத்தல் போன்றவற்றைக் கைவிட்டுவிட்டு ஆசிரியர் குழுவின் விருப்பம்போல இதழை வெளியிடுவது என்ற நோக்கம் அதற்கிருந்தது. ஏறத்தாழ கால்நூற்றாண்டுக் காலம் புதுவையிலிருந்து வெளிவந்த கதைசொல்லியில் கி.ரா.வோடு அவ்வப்போது பலரும் இணைந்து இயங்கினார்கள். ஆரம்பநிலையிலிருந்தே பேரா.க.பஞ்சாங்கத்தின் பங்களிப்பு இருந்தது. அதேபோல கரிசல் அறக்கட்டளையின் பொறுப்புகளைக் கவனித்துக்கொண்ட வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணனும் தனது எழுத்துகளைக் கதைசொல்லி வழியாக வெளியிட்டார். நாட்டுப்புறக்கதைகளைத் தொகுப்பதில் கி.ரா.வுக்குத் துணையாக இருந்த கழனியூரனும் பாரத தேவியும் அவ்விதழில் எழுதியவர்களில் முக்கியமானவர்கள்.

புதுவையிலிருந்த எழுத்தாளர்களில் பிரேம் – ரமேஷ் ஆகியோர் கதைசொல்லியில் அதிகமாகப் பங்களிப்பு செய்தனர். குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ப்ரேம் தில்லிப்பல்கலைக்கழகத்திற்குச் சென்றபிறகு அவரது பங்களிப்பு இல்லை. கி.ரா.வைத் தினசரி சந்தித்துவிடக்கூடிய வெங்கடசுப்பா நாயகர் போன்றோரும் மொழிபெயர்ப்பு வழியாகக் கதைசொல்லியில் எழுதினர்.

· கரிசல் அறக்கட்டளையின் மூன்றாவது பணி முன்னிரண்டையும்விடச் சிறப்பானது. தமிழ் இலக்கியத்திற்கும் மொழிக்கும் பங்களிப்புச் செய்யும் சிறுபத்திரிகைகளின் வளர்ச்சிக்கு உதவுவது. ஆண்டுதோறும் ஒரு சிறுபத்திரிகையைத் தெரிவு செய்து அதனைத் தொடர்ந்து வெளியிடும் வகையில் பண உதவி செய்தார். முதல் ஆண்டு குன்றம் ராமரத்நம் அவர்கள் நடத்திய தாரமதி இதழுக்கு வழங்கப்பட்ட து. தொடர்ந்து முங்காரி, சுந்தர சுகன், கனவு, கவிதாசரண், உன்னதம், திசை எட்டு, சதங்கை, கோடு, மாந்தன், புதுவைபாரதி, ரசனை, புதிய கோடங்கி, உயிர்மை, தாமரை, செம்மலர், மந்திரச் சிமிழ், மணல்வீடு முதலான இதழ்களுக்கு வழங்கப்பட்டதாக ஒரு குறிப்பொன்றை எழுதிவைத்திருந்தார். நான் புதுவையில் இருந்தபோது ஊடகம் என்றொரு சிற்றிதழ் எனது இல்ல முகவரியிலிருந்து வந்தது. ஆரம்பித்த இரண்டாவது ஆண்டில் அதற்கு உதவலாம் என்ற நோக்கில் என்னிடம் சொன்னார். ஆனால் நாங்கள் அந்த ஆண்டே இதழை நிறுத்திவிட்டோம் என்பதால் அவரது விருப்பத்தை நிறைவேற்ற இயலவில்லை.

புதுவையில் பாரதி என்றொரு நூல் எழுதப்பட்டதுபோலப் புதுவையில் கி.ரா. என்றொரு வரலாற்று நூல் எழுதப்பட வேண்டும். நான் எழுதும் குறிப்புகள் பெரும்பாலும் நான் அங்கிருந்த எட்டாண்டுகளில் அவரோடு பேசிய தகவல்களையும், பிறகு அவ்வப்போது புதுச்சேரிக்குச் சென்றபோது அவரிடமிருந்து பெற்றுக்கொண்ட தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டவையே. அவையெல்லாம் பெரும்பாலும் வாய்மொழித் தகவல்களே. நான் புதுவையிலிருந்து வந்தபின் கால் நூற்றாண்டுக்காலம் அங்கு வசித்துள்ளார். அவை முறையான தகவல்களைத் திரட்டி எழுதப்படவேண்டும். அவருக்கு நாட்குறிப்புபோல எழுதும் பழக்கம் உண்டு. அவற்றை விரிவாகப்பரிசீலனை செய்து 32 ஆண்டுப்புதுவை வாழ்க்கையைப் (1989 முதல் 1921 வரையில்) பதிவுசெய்ய வேண்டும். அதற்கு அவரது புதல்வர் பிரபாகரன் முன் முயற்சி எடுக்கவேண்டும்.



38

“மழைக்காகப் பள்ளிக்கூடத்தின் பக்கம் போனேன்; ஆனால் பள்ளிக்கூடத்திலிருந்து மழையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்” என்பதைப் பல நேரங்களில் சொல்லியவர் கி.ரா. இப்படிச் சொன்னதால், அவர் பள்ளிக்கூடத்திற்கே போனவரில்லை என்பது பொருளில்லை. பள்ளிக்கூடப் பாடத்திட்டம், ஆசிரியர்கள், அவர்களின் கற்பித்தல் முறை போன்றவற்றில் அவருக்கு ஈடுபாடு இருந்ததில்லை; புத்தகங்களில் கற்றதைத் திருப்பிச் சொல்லும் ஆசிரியர்களிடமிருந்து கற்றுக்கொள்ளப் பெரிதாக எதுவுமில்லை என்பதையே இந்த விவரிப்பின் மூலம் உறுதி செய்தார். அதே நேரம் அவரது கற்றல் முறை என்பது கூர்ந்து கவனித்தல் வழியாகவும், பார்த்த ஒவ்வொன்றைப் பற்றியும் தெரிந்தவர்களிடம் கேட்டுத்தெரிந்து கொள்வதன் மூலம் கற்றுக் கொள்வதாகவும் இருந்தது.

அவரது பாடங்கள் எல்லாம் இயற்கையின் ஜீவராசிகளாகவே இருந்தன. தாவரங்களையும் விலங்கினங்களையும் நீர்நிலைகளையும் நிலத்தின் மண்வகைகளையும் படிமங்களையும் வகைபிரித்துப் பேசும் பல கதைகளை அவர் எழுதியிருக்கிறார். ஒன்றைப்பலவாக அடுக்கிச் சொல்லும் வாய்ப்புகள் கொண்ட புனைகதை வடிவத்திற்குள்ளேயே ஒரு சொல்லை விரித்துப் பேசும் வாய்ப்பை உருவாக்கிக்கொண்டு விரித்துப் பேசுவார். இந்தச் சொல்முறைக்கு நல்லதொரு உதாரணமாக இருப்பது அவரது கிடை குறுநாவல். ஆடு மேய்க்கும் இளம்பெண்ணும் இளைஞனும் கொண்ட காதலை -சாதி மீறிய உறவைப் பேசும் கதைக்குள் ஆடுகளின் வகைகளைப் பட்டியலிட்டுக்காட்டுவார். அதே போல, மாற்றிக் கட்ட இன்னொரு வேட்டி இல்லாத ஒருவரின் கதையைச் சொல்லும் கதைக்குத் தலைப்பு வேட்டி. அந்தக் கதைக்குள் வகைவகையான துணிகளையும், வேட்டிகளின் வகைப்பாடுகளையும் நுட்பமான வேறுபாடுகளையும் சொல்லிவிட்டுக் கதையின் வடிவ அமைதி மாறாமல் கதையை முடித்துவிடுவார். இயற்கையைப் பாடமாகப் படிக்க நினைக்கும் குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெற்றோர் வாங்கித்தர வேண்டிய கதைப்புத்தகம் அவரது பிஞ்சுகள் என்று சொல்வேன்.

புதுச்சேரியில் இருந்த காலத்தில் அவருடன் நடைபோவதற்குப் புதுப்புது இடங்களைத் தேடிச் செல்வதுண்டு. அப்படித்தான் இப்போது கருவடிக்குப்பம் மயானத்தோப்புக்குள் ஒருநாள் நுழைந்தோம். நூற்றாண்டைத் தாண்டிய மரங்கள் அடர்ந்த வனமாக இருக்கும் சுடுகாட்டை நான் வேறெங்கும் கண்டதில்லை. அந்த வனத்திற்குள் தான் தமிழ் நாடகத்தின் தந்தையென அழைக்கப்படும் சங்கரதாஸ் சுவாமிகளின் கல்லறை இருக்கிறது. நாடகப்பள்ளி மாணவர்களோடு ஒன்றிரண்டு தடவை அதற்கு முன் போனதுண்டு. புதுவையின் முதன்மையான சுடுகாடான கருவடிக்குப்பம் தோப்பை ஒருவரும் சுடுகாடாக நினைப்பதில்லை. மயானத்திற்குப் பக்கத்திலேயே ஒரு கோயில் உண்டு. அதுவும் வேறு ஊரில் இல்லாத ஒன்று. பாரதியின் குயில்பாட்டுத்தோப்பு இதுதான் என்று பலரும் சொல்வார்கள். அந்த அனுபவத்தில் கி.ரா.விடம் தோப்புக்குள் இருக்கும் மரங்களைப் பற்றிச் சொன்னேன். இதையெல்லாம் நாங்கள் பேசிக் கொண்டிருந்த இடம் ஒரு சினிமா தியேட்டர் வாசல்.

நல்ல படம்; பார்த்துவிடுங்கள் என்று யாராவது சொன்னால், ஏன்? எப்படி? என்று பேசிவிட்டு, அவர்களின் பேச்சை வைத்தே அந்தப் படத்தைப் பார்க்க வேண்டுமா? வேண்டாமா? என்று முடிவுசெய்துவிடுவார் கி.ரா. புதுவையில் இயங்கிய திரைப்பட ரசனை சார்ந்த வெளியீடுகளுக்கும், ஆண்டுதோறும் நடக்கும் புதுவைத் திரைப்பட விழாவிற்கும் முதல் ஆளாக நிற்பவர் கி.ரா. நாசரின் அவதாரம் படம் வந்தபோது “இயக்குநர் தங்கர் பச்சான் அந்தப்படத்தைப் பார்த்துவிடுங்கள் என்று சொல்லியிருக்கிறார்; அவர் சொன்னா நம்பிப் பார்க்கலாம்” என்று சொன்னார். இருவரும் படம் பார்ப்பதற்காக அந்தத் தியேட்டர் வாசலில் இருந்தோம். கருவடிக்குப்பம் போகும் பாதையில் இருந்த அந்த அரங்கில் புதுப்படங்கள் எதுவும் முதல் காட்சியாக வருவதில்லை. இரண்டாவது மூன்றாவது சுற்றில் தான் வரும். ஆனால் கலைப்படம் எனக் கருதப்பட்ட அவதாரத்தை நகரின் முதன்மை வரிசைத் திரையரங்குகள் வாங்காததால், இந்த அரங்கில் வெளியிட்டிருந்தார்கள்.

நாங்கள் போனபோது தியேட்டருக்கு முன்னால் ஒருவரும் இல்லை. டிக்கெட் கொடுக்கும் அடையாளமும் இல்லை. உள்ளே போய் விசாரித்தோம். கூட்டம் குறைவாகவே வருது. 100 பேர்களாவது வந்தால் அடுத்த காட்சி நடக்கும் என்று சொல்லி விட்டார்கள். என்ன செய்யலாம் என்று யோசித்தபோதுதான் குயில்தோப்பு என அறியப்பட்ட மயானத்திற்குள் போய்ப் பார்த்துவிட்டு வரலாம் என்று சொன்னார் கி.ரா. காலாற நடக்கலாம் என்று நுழைந்து ஒவ்வொரு மரத்தின் பக்கமும் நின்று மரங்களைப் பற்றிச் சொல்லிக்கொண்டே வந்தார். பட்டைகளையும் வழுவழுப்பையும் இலைகளையும் வைத்து அவற்றின் பெயர்களையும் அவைகளின் உறுதிப்பாட்டையும் சொன்னார். இதுபோன்றதொரு மயானத்தில் தான் அரிச்சந்திரன் – சந்திரமதி கதை நிகழ்ந்திருக்கவேண்டும். அந்தக் கதையைப்பாட்டாகவும் வசனமாகவும் எழுதி மேடையேற்றிய சங்கரதாஸ் சுவாமிகளின் சமாதிவரை போய்விட்டுத் திரும்பினோம்.

தோப்பின் வாசலில் நின்று திரையரங்கைப் பார்த்தோம். கூட்டம் வந்திருந்தது. நாங்கள் நடந்துபோகவும் டிக்கெட் கொடுக்கத்தொடங்கினார்கள். நான் சில தடவை அந்த அரங்கில் படங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் கி.ரா.வுக்கு அது முதல் முறை. முதுகுவலியை உண்டாக்கக்கூடிய இருக்கைகள் தான் இருக்கும் என்று சொல்லியிருந்தேன். பரவாயில்லை படம் நல்ல படம் என்றால் அதெல்லாம் தெரியாது என்று சொல்லிவிட்டார்.

படம் பார்த்துவிட்டுத் திரும்பும்போது படத்தின் காட்சிகளில் காடும் வீடும் பாதைகளும் இயற்கையை விட்டு விலகாமல் பிடிக்கப்பட்டிருப்பதைப் பற்றிச் சொல்லிக்கொண்டே வந்தார். கண் தெரியாத பெண்ணாக நடித்துள்ள ரேவதியின் நாசி உணர்வைக் காட்ட இயற்கையின் ஒலிகளையும் வாசனையையும் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று பாராட்டிப் பேசிக்கொண்டே வந்தார். ’நல்ல பாடல்கள் இருக்கு; நல்ல நடிப்பு இருக்கு; ஆனா நம்மெ ஆளுகளுக்கு இது போதாதே; படம் பார்க்க வரமாட்டாங்களே’ என்று வருத்தத்தோடு சொல்லிக்கொண்டே வந்தார். சில நாட்களுக்குப் பின் நடிகர் நாசர் வந்தார். அவரிடம் அந்தப் படத்தைப் பற்றி விரிவாகப் பேசிக்கொண்டிருந்தார். பக்கத்தில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த எனக்கு அவரது சினிமா ரசனை என்னுடைய பார்வைக்கோணத்திலிருந்து பெரிய அளவு வேறுபட்டது என்பது புரிந்தது.

39

“சார் அப்பா விசாரிச்சார்

இப்போ அப்பா உடன்தான் இருக்கேன்

அழைக்கிறீர்களா?”



புதுவை இளவேனில் மெசஞ்சரில் இதை அனுப்பிய நாள் ஏப்ரல்-19/ நேரம் இரவு 9.27. அவரது தொலைபேசி எண்ணையும் தந்தார். அவர் அப்பா என விளித்த து கி.ரா.வை. இந்த நேரத்தில் வேண்டாம். நாளை பகலில் பேசிக்கொள்கிறேன். அடுத்த நாள் ஏதோ ஒரு வேலையால் மறந்துவிட்டேன். இரண்டு நாட்கள் கழித்து கி.ரா.வின் தொலைபேசிக்கு அழைத்தேன். யாரோ பேசிக்கொண்டிருப்பதாகச் சொன்னது. இரண்டு தடவை முயற்சி செய்துவிட்டு விட்டுவிட்டேன். சில நாட்கள் கழித்து இளவேனில் பக்கத்தில், குதூகலமாக அவர் எழுதிக் கொண்டிருந்த படம் வந்தது. நானும் பார்த்துச் சிரித்துக்கொண்டேன். நூறைக் கடந்தும் இருப்பார்; இன்னும் சில நூல்களை எழுதுவார் என்று மனம் சொன்னது.



சிலநாட்கள் கழித்து மருத்துவமனைக்குப் போய்வருவதாகத் தகவல் வந்தது. நானும் மருத்துவமனையில் ஒருவாரம் இருந்துவிட்டு வந்தேன். இப்போது அழைப்பது சரியில்லை என்று தோன்றியது. அதனால் தொலைபேசியில் அழைக்காமல் விட்டுவிட்டேன். திரும்பவும் பாண்டிச்சேரிக்குப் போவோம். சந்திப்போம் என்றே மனசு சொல்லியது.



வழக்கமாக 12 மணிக்கு மேலும் விழித்திருப்பேன். தூங்குவதற்கு முன்னால் முகநூலில் ஒரு சுற்றுச் சுற்றுவிட்டுத் தூங்கிவிடுவேன். ஆனால் மே. 17 அன்று பத்தரை மணிக்கெல்லாம் தூங்கிவிட்டேன். மூன்றரை மணிவாக்கில் ஒரு தொலைபேசி அழைப்பு. வந்து உடனே நின்று விட்டது. எடுத்துப் பார்த்தால் அதொரு வெளிநாட்டு அழைப்பு. அப்படியான அழைப்புகளுக்குத் திரும்பவும் அழைத்து மறுமொழி சொல்வதில்லை. ஒரு தடவை வரும் அழைப்புகளைத் திரும்ப அழைத்தால் நமது தொலைபேசி திசைமாற்றம் செய்ய வாய்ப்புண்டு என்பதால் அதனைத் தவிர்ப்பேன். அப்படித்தான் அதையும் திரும்ப அழைக்கவில்லை. ஆனால் தூக்கம் கலைந்து விட்டது.



முகநூலின் பக்கங்களில் நுழைய நினைத்துத் திறந்தபோது முதல் பதிவாக வந்தது இளவேனில் பதிவுதான். அப்பாவைப் பறிகொடுத்த மகனின் கதறலாக இருந்தது அந்தப்பதிவு. நான் புதுச்சேரியில் இருந்த காலத்தில் கி.ரா.வுக்கும் இளவேனிலுக்குமான உறவு ஒவ்வொன்றாக மாறிக்கொண்டிருந்தது. தாகூர் கலைக்கல்லூரிக்குச் செல்லும் சாலையில் கி.ரா., இருந்தபோதுதான் அந்தச் சிறுவனைப் பார்த்தேன். பின்னொரு நாளில் அந்தச் சிறுவன் இளைஞனாக மாறிய தோற்றத்தில் இருந்தான்.



பின்னரும் புதுவை இளவேனிலோடு தொடர்புகள் இருந்தன. முகநூல் காலம் விலகிய தொடர்புகள் நெருங்கிய காலமாகிவிட்டது. வார்சாவிலிருந்து திரும்பிய பின்னர் உங்களையும் படங்கள் எடுக்க வேண்டும் என்று என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தார். எப்போதும் புதுவை இளவேனிலைப் பார்க்கும்போது கி.ரா.வைப்பற்றியே பேசினார். கடந்த பத்தாண்டுகளில் கி.ரா.வின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறியிருந்தார் இளவேனில். அவரது புதிய புத்தகங்களை அவருக்குச் சமர்ப்பணம் செய்தார். நூல்களின் உரிமையைப் பிரித்துப் பாகம் செய்யும்போது அவரையும் ஒரு மகனாகப் பாவித்துப் பிரித்து எழுதினார்.



அவரது மரணத்திற்குப் பின்னர் சில நாட்கள் கழித்து ஒரு குறுஞ்செய்தி அனுப்பினார் இளவேனில். “பேசாமல் இருந்தீட்டீங்க சார் என்று கோபமும் வருத்தமும் கூடியதாக அந்தச் செய்தி இருந்தது. ”

“அதுதான் பெருந்துயரம். உன்னிடம் சொன்ன சில நாட்களில் நானும் மருத்துவமனைக்குப் போய்விட்டேன்; கரோனாவின் தாக்குதல். ஒருவாரம் மருத்துவமனையில் தங்கித் திரும்பினேன் ” என்றேன்.



‘துயர கணங்கள் சார்.. கடைசி நாட்களில் ... உங்களிடமும் பேச விரும்பினார்’ - என்பது இளவேனில். எனக்கும் அவருக்குமிடையே ஒரு ரகசியம் ஒன்று உண்டு. அதை வெளிப்படையாகச் சொல்ல நினைத்திருக்கலாம். இனி அதை ரகசியமாகவே விட்டுவிட வேண்டியது தான் என்று சொல்லி முடித்தேன். அப்படியான பல ரகசியங்கள் என்னிடம் இருக்கின்றன என்றார் புதுவை இளவேனில்



40

புதுவையிலிருந்து நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் வந்த புதிதில் கி.ராஜநாராயணனைப் பல்கலைக்கழகத்திற்கு அழைக்கும் முயற்சிகளை ஒவ்வொரு ஆண்டும் செய்தேன். பல்கலைக்கழகத்தில் தமிழியல் துறையை ஆரம்பித்து என்னை முதல் முழுநேர ஆசிரியராகத் தேர்வுசெய்த துணைவேந்தர் முனைவர் வே.வசந்தி தேவி அதனைத் தொடர்ந்து தூண்டிக்கொண்டே இருந்தார். “ஆறு மாதம் முதல் ஓராண்டு வரை நமது பல்கலைக்கழகத்திலும் அவர் வருகைதரு பேராசிரியராக நியமிக்க முடியும்; வருவார் என்றால் ஏற்பாடு செய்வோம்” என்றார். புதுவைக்குப் போன பின்பு திரும்பவும் கோவில்பட்டிக்குத் திரும்புவதில்லை என்ற முடிவை மனதளவில் எடுத்திருந்ததால் அந்த அழைப்பை அவர் ஏற்கவில்லை. ஒரு கருத்தரங்கிற்காகவாவது அழைத்துவிடலாம் என்று முயன்றபோதும் அவர் வருவதைத் தவிர்த்துவிட்டார். அதனால் அந்த முயற்சியையே கைவிட்டுவிட்டேன்.

தொண்ணூற்றைந்தாவது பிறந்தநாள் விழாவைப் புதுவைப் பல்கலைக்கழகத்தில் கொண்டாடிய நிலையில் அவரது படைப்புகள் குறித்து ஒரு விரிவான கருத்தரங்கம் ஏற்பாடு செய்து அவரை அழைக்கலாம் என்று முயற்சி செய்தோம். அதுவும் நடக்கவில்லை. கடைசியாக 2017 இல் பல்கலைக்கழகம் வழங்கும் உயரிய விருதான பேரா.சுந்தரனார் விருதை வழங்கிச் சிறப்பிப்பது என்று முடிவெடுத்துப் பல்கலைக்கழகத்திற்கு அழைத்தோம். அவரும் வருவதாக ஒத்துக்கொண்டார். அப்போது துணைவேந்தராக இருந்த பேரா.கி.பாஸ்கருக்கு மிகுந்த மகிழ்ச்சியோடு காத்திருந்தார்.

பேராசிரியர் சுந்தரனார் விருது 2013 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அப்போதைய துணைவேந்தர் முனைவர் அ.க. குமரகுருவின் முயற்சியில் ஓர் அறக்கட்டளை நிறுவப்பட்டு, அதன் வைப்புத்தொகையாக ரூ .25 லட்சம் நிதி ஒதுக்கப்பட்ட து. அதன் வட்டித்தொகையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் தமிழ்மொழி, இலக்கியம், வரலாறு, பண்பாட்டுத்துறையில் சிறப்பான பங்களிப்பு செய்பவருக்கு ஒரு லட்சம் பணமுடிப்பும் ஒரு பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. தொடங்கப்பட்ட ஆண்டுக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளிலும் பேராசிரியர்களுக்கே அவ்விருது வழங்கப்பட்டது. அதனைக் கொஞ்சம் திசை திருப்பி, வருகைதரு பேராசிரியராகவும் படைப்பாளியாகவும் விளங்கிய கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு வழங்குவது என்ற முடிவை எடுத்தபோது பலரும் பாராட்டினார்கள். அதேநேரம் சிலரிடமிருந்து எதிர்மறைக்கருத்துகளும் வந்தன. பொதுவாக எதிர்மறைக்கருத்துடையவர்களுக்கு அவரது மொழி இலக்கியப்பங்களிப்பு என்ன என்பது தெரியாமல் இருந்தது. அதனால் விழா அழைப்பிதழோடு அவரது பங்களிப்புகள் குறித்த சிற்றேடு ஒன்றைத்தயாரித்து அனைவருக்கும் வழங்கினோம்.

ஒரு லட்சம் விருதையும் பாராட்டுச் சான்றிதழையும் பெற்றுக்கொள்ள நேரில் வருவேன்; என்னைப் புதுச்சேரிக்கே வந்து அழைத்துச் சென்று திரும்பவும் புதுச்சேரியில் கொண்டுவந்து விடும் பொறுப்பை கழனியூரன் ஏற்றுக்கொண்டுள்ளார் என்று கடிதம் எழுதினார். கழனியூர் என்பது பல்கலைக்கழகம் அமைந்துள்ள பகுதியில் இருக்கும் ஒரு சிற்றூர். அந்த ஊரின் பெயரைத் தனது புனைபெயராகக்கொண்ட கழனியூரன் கி.ரா.வின் நாட்டுப்புறக்கதைத் தொகுப்பு வேலையிலும் வட்டார வழக்குச் சொல்லகராதி உருவாக்கத்திட்டத்திலும் பங்கேற்றவர். அவரது கதைசொல்லி இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர். அவரும் என்னிடம் சொல்லிவிட்டுப் புதுவைக்குக் கிளம்பிப்போனார். கி.ரா. பல்கலைக்கழகத்திற்கு வரப்போகிறார் என்ற மகிழ்ச்சியில் எல்லா வேலைகளையும் செய்திருந்தோம். சிறப்பு அழைப்பாளராக அந்த ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்ற வண்ணதாசனை அழைத்திருந்தோம். வண்ணதாசனும் கி.ரா.வும் அன்பால் நெருங்கியவர்கள். வண்ணதாசனின் தந்தை தி.க.சி. காலம் தொடங்கிக் குடும்ப நட்புகொண்டவர்கள். மகிழ்ச்சியோடு அவரும் ஒத்துக்கொண்டார்.

எல்லா மகிழ்ச்சியும் விழாவிற்கு முந்திய நாள் முடிந்துபோனது. தனிக் கார் ஒன்றில் பயணம் செய்து நெல்லைக்கு வரும் ஏற்பாட்டிற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனைக்காகச் சென்றபோது “இப்போது பயணம் செய்வது நல்லதல்ல; முடிந்தால் ரயில் பயணம் மேற்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டதாகவும், உடனடியாக ரயிலில் சிறப்பு இருக்கைகள் பெற இயலவில்லை; எனவே மகன் பிரபியும் கழனியூரனும் வருகிறார்கள்; மன்னிக்கவும்” என்று தொலைபேசியில் சொல்லிவிட்டார்.

பெரும் ஏமாற்றமாகப் போய்விட்டது. துணைவேந்தருக்கு எப்படிச் சமாதானம் சொல்வது என்பதுதான் பெரிய சிக்கல். அவரது ஏமாற்றத்தைத் தீவிரமாகக் காட்டினார். விழாவை ஒருவாரம் தள்ளிவைக்கலாம் என்றார். ஆனால் அப்போதும் அவர் வருவார் என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்பது எனக்குத்தெரியும். எனவே துணைவேந்தரைச் சமாதானப்படுத்தி விழாவை நடத்தி பணமுடிப்பை அவரது மகனிடம் வழங்கி அனுப்பிவைத்தோம். எழுத்தாளர்களை பாராட்டுவது என்பது எழுத்திற்காகத்தானே என்ற தேற்றுதலோடு அவருக்குப் பேரா.சுந்தரனார் விருது 2016 -2017 ஆம் கல்வியாண்டில் வழங்கப்பட்டது.

கி.ரா.வின் சொந்தக் கிராமம் இடைசெவல். அந்தக் கிராமத்தை உள்ளடக்கிய பகுதியில் இருக்கும் பல்கலைக்கழகம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம். அதன் வளாகத்திற்குள் ஒருதடவையாவது அழைத்துவந்துவிட வேண்டும் என்று நினைத்த எனது நினைப்பும் பல்கலைக்கழகத்தின் ஆசையும் கடைசி வரை நிறைவேறவே இல்லை. என்றாலும் அவரது நாவல்களையும் சிறுகதைகளையும் பாடமாக்கிக் கற்பித்துக் கொண்டிருக்கிறது. முனைவர், ஆய்வியல் நிறைஞர் போன்ற பட்டங்களுக்கு ஆய்வாளர்கள் ஆய்வுசெய்து முடித்துள்ளார்கள். பாட த்திட்டத்தின் பகுதியாக வைத்து மாணாக்கர்களுக்குக் கற்பிக்கிறது.

**********

41



கி.ராஜநாராயணனைக் கடைசியாகப் பார்த்தது ஏப்ரல், 2019. இந்தக் கல்வி ஆண்டின் இறுதியில் – 30, ஜூன் 2019 இல் ஓய்வு பெறுகிறேன். அதன் பிறகு புதுச்சேரிக்கு வரும்போது குடும்பத்தோடு வர முயல்கிறேன். “அமெரிக்காவில் இருக்கும் மகன் ராகுலனும் வருவதாகச் சொல்லியிருக்கிறான். அவனது மனைவி/மருமகள் பானுரேகா உங்களின் கதைகளை வாசித்தவர். பேரன் பெயர் முகிலன். சென்னையில் இருக்கும் மகள் சிநேகலதாவும் வருவார். மருமகன் பிர்ஜித்துக்கும் பாண்டிச்சேரியோடு தொடர்புண்டு. புதுச்சேரி சந்நியாசி குப்பத்தில் இருக்கும் ரானே பிரேக் லைன் என்னும் மோட்டார் வாகன உதிரிப்பாகத் தொழிற்சாலையில் வேலைசெய்தவர். அந்த நேரத்தில் தான் திருமணம். அவர்கள் வழிப்பேரன் ஹர்ஜித் நந்தா. பேரன்கள் இருவரையும் உங்கள் மடியில் உட்காரவைத்துக் கதை கேட்க வேண்டும் என நினைக்கிறார்கள் எனது பிள்ளைகள். புதுச்சேரிக்கு நீங்கள் வந்தபோது சிறுவர்களாக இருந்த பிள்ளைகள்; உங்கள் மடியில் உட்கார்ந்து கதைகேட்ட பிள்ளைகள் இப்போது அவர்கள் பிள்ளைகளை உங்கள் மடியில் உட்காரவைத்துக் கதை கேட்க நினைக்கிறார்கள்” என்று சொன்னபோது ‘எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அழைத்துவந்துவிடுங்கள். நாமெ எவ்வளவு காலம் இருப்போம்’ னு யாருக்குத் தெரியும் என்று சொன்னார். அப்படிச் சொன்னாலும் நூறு ஆண்டுகள் கடக்க வேண்டுமென்று ஆசை இருந்தது என்பதையும் அந்த முகம் சொன்னது. அப்படிச் சொல்லிவிட்டு வந்தபிறகு பாண்டிச்சேரிப் பல்கலைக்கழகத்திற்கு ஒரு தேர்வு தொடர்பாகப் போனேன். அந்த முறை புதுச்சேரி ஊருக்குள் செல்லவேண்டிய குறிப்பான வேலை இல்லை. கி.ரா.வைப் பார்க்க மட்டுமே போக வேண்டும். காலையில் அந்த வேலைக்காகச் சென்னையிலிருந்துதான் கடற்கரைச் சாலை வழியாகப் பேருந்தில் வந்து இறங்கினேன். திரும்பவும் அதே பாதையில் பயணிக்க வேண்டும் என்பதால், பிற்பகல் பல்கலைக்கழகத்தின் முதன்மை வாசலுக்கு வந்த சென்னைக்குச் செல்லும் பேருந்துகள் நிற்கும் இடத்தில் நின்ற போது ஒரு கார் அங்கே நின்றது. சென்னை மீனம்பாக்கத்தில் ‘ஏர்போர்ட் சவாரிக்காகப் போகிறது வண்டி; அடையார் அல்லது திருவான்மையூரில் இறங்கிக் கொள்ளலாம்; பேருந்து கட்டணத்தோடு 25 ரூபாய் அதிகம் என்றார். ஏறிவிட்டேன். ஊருக்குள் போகவில்லை. கி.ரா.வைப் பார்க்கவும் இல்லை. சில மாதங்கள் கழித்து கணவதி அம்மா மரணத்தின் போது எங்கும் போகமுடியாத நிலை. கண்ணுக்காக மருத்துவ மனையில் இருந்தேன். பின்னர் இலங்கைப் பயணம், கரோனா முதல் அலையில் வீடடங்கு. திருநெல்வேலியிலிருந்து திருமங்கலத்திற்கு என்று சொந்த அலைச்சல்கள்.



2019 ஆகஸ்டு அல்லது அக்டோபரில் பாண்டிச்சேரியில் போய் சில நாட்கள் தங்கிவிட்டுப் பழைய நினைவுகளை மீட்டுக்கொள்ள அவர்களும் தயாராகவே இருந்தனர். மீட்டப்படும் நினைவுகளில் ஒன்றாகக் கி.ரா. தாத்தாவைச் சந்திப்பதும் இருக்க வேண்டும் என்று திட்டமிட்டார்கள். பெரிய தேடுதல்களோ, திட்டமிடுதல்களோ இல்லாமல் மகள் சிநேகலதாவையும் மகன் ராகுலனையும் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள முத்தியால் பேட்டை மடத்தா பள்ளியில் சேர்த்தேன். கத்தோலிக்க மடத்துச் சகோதரிகள் நடத்தும் அந்தப் பள்ளிக்குப் புனித ஜோசப் பள்ளி என்று பெயர் இருந்தாலும், அந்தப் பள்ளியை அந்தப் பெயரால் அழைப்பதில்லை. பெண்களால் நிர்வாகம் நடந்ததால் அனைவரும் மடத்தா பள்ளி என்றே அழைத்தனர். பெரிய பள்ளிகள் இருக்கும் இடங்களில் வீடுகள் வாடகைக்குக் கிடைக்கவில்லை. வீட்டு வாடகை குறைவாக இருந்த பகுதியில் பெரிய பள்ளிகள் இல்லை. நான் பணியாற்ற இருந்த நாடகத்துறை இருந்த பகுதி ஜமீந்தார் கார்டன் என்று அழைக்கப்பட்டது. பெரியபெரிய வீடுகள் இருந்தன. ஆனால் வாடகை அதிகம். முத்தியால்பேட்டை அங்காளங்குப்பம் பகுதியில் தான் வாடகை குறைவாக இருந்தது.

என்னோடு மதுரை காமராசர் பல்கலையில் முதுகலை படித்துவிட்டு, தஞ்சை மாவட்ட அரசர் கல்லூரியில் பணியாற்றியபின், புதுவைக்கு மாறிய நண்பர் ஆ.திருநாகலிங்கம் தமிழ்த்துறையில் விரிவுரையாளராக இருந்தார். அவரது வீடு அங்காளங்குப்பத்தைத் தாண்டிய சோலைநகரில் இருந்தது. அதுவும் கடலோரத்தில் இருந்த ஒரு குப்பம் தான். நாடகத்துறையில் பயிற்றுநராக இருந்த வ.ஆறுமுகமும் அங்குதான் இருந்தார். மீனவர்கள் வாழும் பகுதிகளைக் குப்பம் என்ற பெயரில் அழைத்தாலும் நடுத்தரவர்க்கம் அங்கு அதிகமாகும் பகுதிக்கு நகரெனப் பெயர் சூட்டிக்கொள்வது வழக்கமாக இருந்தது.

மகள் மடத்தா பள்ளியில் ஐந்து வகுப்புகள் முடிந்தவுடன் புதுவை ஏழாம் புனித நாள் மேல்நிலைப்பள்ளியில் சேர்த்தபோது மகனையும் மூன்றாம் வகுப்பில் சேர்த்தோம். அவன் நான்காம் வகுப்பு வரும்போது அதன் கிளையொன்றை முதலியார் பேட்டைப் பகுதியில் ஆரம்பித்து அங்கே மாற்றிவிட்டார்கள். பள்ளியை மாற்றவில்லை. பள்ளிக்கூட வாகனத்தில் காலை 7 மணிக்கு ஏற்றி அனுப்புவோம். மகளோ அப்போதே மிதிவண்டிப் பயணம். இருவருக்கும் அந்தப் பள்ளிகளைப் பார்க்கவேண்டும். அத்தோடு புதுச்சேரியில் 30 ஆண்டுகளில் நடந்துள்ள மாற்றங்களைப் பார்த்துவிட நினைத்தார்கள். அவர்கள் பார்க்க நினைத்த பட்டியலில் கி.ரா. தாத்தாவும் இருந்தார்.

தகவல் தொழில் நுட்பத்துறையில் பணியாற்றும் மகனுக்கு அமெரிக்காவில் பணி. அங்கு அவனது வேலைக்கான ஒப்பந்த காலம் ஆறு ஆண்டுகள். அதற்குள் வந்து போவதில் சில சிக்கல்கள். அமெரிக்காவின் ட்ரம்ப் போட்ட விதிகளில் பலரும் கலங்கியிருந்தார்கள். ஓய்வுக்குப் பின் நான் டிசம்பரில் இலங்கைக்குப் போகும் பயணத்திட்டம் ஒன்றை வைத்திருந்தேன். அதனால் புதுவை போகும் திட்டத்தை நானும் தள்ளிப்போட்டேன்.

இலங்கை போய்வந்து ஒரு மாதத்திற்குள் கரோனாவும் வந்து சேர்ந்துவிட்டது. 2020 பிப்ரவரி தொடக்கம் டிசம்பர் வரை ஊரடங்கு; வீடடங்கு எனப் பயணங்களே இல்லாத நாட்கள். அதற்குள் திருநெல்வேலியிலிருந்து திருமங்கலத்திற்கு இடப்பெயர்வு. 2020 பிப்ரவரியில் நடந்திருக்கவேண்டிய அந்தப் பெயர்வு டிசம்பரில் நடந்தது. இடையில் மருமகனும் மகளும் புனேவிற்கு இடம்பெயர்ந்தார்கள். எல்லாம் சேர்ந்து புதுச்சேரிக்குப் போகவே இல்லை. கி.ரா.வைப் பார்க்கவும் இல்லை. இடையில் கணவதி அம்மாவின் மரணச் செய்தியைக் கூடப் போய்ப் பார்த்து விசாரிக்க முடியவில்லை. இப்போது அவரது இறப்புச் செய்தி வரும்போது கரோனாவின் இரண்டாவது அலையின் பயமுறுத்தல். பாண்டிச்சேரி நினைவுகள் போலவே கி.ரா. வின் நினைவுகளும் காற்றிலேயே கரைந்துகொண்டிருக்கிறது.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்