கி.ரா. -புதுச்சேரி - நான் -2

21

புதுவைப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் முனைவர் கி. வேங்கட சுப்பிரமணியனைத் தடாலடியான நிர்வாகி என்றுதான் சொல்ல வேண்டும். அவர் நினைத்ததைச் செய்துவிடுவார். அப்பல்கலைக் கழகத்திற்குத் தேசிய அளவிலும் உலக அளவிலும் இடங்களை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டு வெவ்வேறு துறைகளில் அதற்கான நபர்களை அழைத்துவந்தார். பன்னாட்டு உறவுகளும் அரசியலும் என்ற துறையில் உலக அளவில் அறியப்பட்ட ஒருவரை வருகைதரு பேராசிரியராக ஆக்கினார். அவர் திரு ராஜீவ்காந்தி காலத்தில் நடந்த மூன்றாம் உலக நாடுகளின் கூட்டறிக்கையை - பெல்கிரேட் முன்வைப்பு - உருவாக்கியவர். உயிரியல் துறைக்குச் சலீம் அலியின் பெயரைச் சூட்டி, அவரது சீடர் ஒருவரைக் கொண்டுவந்தார். விளையாட்டுத்துறையின் முதன்மையராக இந்திய ராணுவத்தில் மிக உயர்ந்த பதவியிலிருந்து ஓய்வுபெற்ற ஒருவரை நியமனம் செய்தார்.
வெளியே அறியப்பட்ட முகங்களைப் பல்கலைக்கழகத்தில் நிரப்புவதின் வழியாக உலக வரைபடத்தில் பல்கலைக்கழகம் இடம்பெறும் என்ற நோக்கத்தை நிறைவேற்றினார். தமிழ்த்துறைக்குப் பேரா.க.ப. அறவாணன் தேர்வு செய்யப்பட்டதின் பின்னணியில் கூட அவரது அயல்நாட்டுப் பணி அனுபவங்கள் இருந்தன. அவரோடு டெல்லிப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் பணியாற்றி ஓய்வுபெறும் நிலையில் இருந்த எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியை அழைத்துவந்தார். ஆனால் அவர் தமிழ்த்துறையில் பணியாற்ற இயலாது; அவர்கள் அனைவரும் மரபான தமிழாசிரியர்களாக இருக்கிறார்கள் என்று சொன்னபோது அவருக்காக ஆரம்பிக்கப்பட்டதே நிகழ்கலைப்பள்ளி.

தமிழ்த்துறையோடு ஒத்துப்போக முடியுமா என்றெல்லாம் சிந்திக்காமலேயே ஆளுமைகளை அழைத்து வந்து அமர்த்திவிடுவார். அப்படியாகச் சிறப்புநிலைப் பேராசிரியராக அழைக்கப்பட்டவர் கி.ராஜநாராயணன். அவருக்கு முன்பு க.நா.சுப்பிரமணியம். இவ்விருவரின் இலக்கியச் செயல்பாடுகள், இலக்கியம் பற்றிய கருத்துகளோடு தமிழ்த்துறைக்கு இணக்கம் இருந்ததில்லை. ஓராண்டு இருந்த க.நா.சு. இந்திய இலக்கியம், இலக்கியத்திறனாய்வு எனச் சில சொற்பொழிவுகளை நிகழ்த்திவிட்டு வெளியேறி விட்டார். கி.ரா.வோ நிதானமாக வந்து மூன்று மாதங்கள் வரை துறையாசிரியர்களோடும் ஆய்வாளர்களோடும் உரையாடி, இங்கு என்ன செய்யலாம் என்று திட்டமிட்டுக்கொண்டு, தனது சமகால இலக்கிய அடையாளத்தை முன்னிறுத்தாமல் நாட்டார் கதைத்தொகுப்பு என்ற இன்னொரு பக்கம் நகர்ந்தார். அப்படியொரு திட்டத்தைத் தந்தவுடன் துறை அவருக்கு ஆய்வு உதவியாளராக சிலம்பு நா.செல்வராஜை அனுப்பியது. தேடுவது, தொகுப்பது, வகைப்படுத்துவது, பதிப்புப்பணி என எல்லாவற்றிலும் திட்டமிட்டுச் செயல்படும் நா. செல்வராஜ், கி.ரா. வுக்குக் கிடைத்த நல்ல உதவியாளர்.

22

சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப்பள்ளியில் கொண்டாடப்படும் உலக அரங்கநாள் (மார்ச்,27) கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும் என்று நானும் அப்போது துறைத் தலைவராயிருந்த கரு. அழ.குணசேகரனும் சென்று கி.ரா.வை அழைத்தோம். அப்போது முதல் துணைவேந்தர் இல்லை. அடுத்த துணைவேந்தர் பேரா.ஆ.ஞானம் வந்திருந்த ஆண்டு. அவரும் வருகிறார்; நீங்களும் வரவேண்டும் என்றோம். தேதியைக் கேட்டுக்கொண்டு, ‘ வந்து அழைத்துச் செல்ல வேண்டும். இருசக்கர வாகனத்தில் வருவது இயலாது; ஒரு ஆட்டோ போதும்’ என்றார். சரியென்று சொல்லிவிட்டுக் கிளம்பும்போது நிறுத்தி “ நேரம் சொல்லவில்லையே?” என்றார். மாலை 6.30. என்றபோது சிரித்துக் கொண்டே, “அப்போ என்னையெ விட்டுடுங்க சாமிகளா..” என்றார். “பகல்லெ நிகழ்ச்சின்னா எப்படியோ தட்டுத்தடுமாறி வந்து பார்த்துட்டு வந்திடலாம். ராத்திரி கதையெல்லாம் நமக்கில்ல. அதெல்லாம் முடிஞ்சு போச்சு” என்று சொல்லித் திரும்பவும் எங்களை உட்கார வைத்துவிட்டார்.

உட்காரவைத்தவர், நாங்கள் செய்யும் தலித் நாடகங்கள் பற்றிக் கேட்கத் தொடங்கினார். இதெல்லாம் தமிழ்நாட்ல இப்பத்தானே பேசத் தொடங்கிறோம். இலங்கையிலெ எப்பையோ ஆரம்ப்பிச்சுப் பேசிட்டாங்க. மல்லிகையின்னு ஒரு பத்திரிகை; அதன் ஆசிரிய டொமினிக் ஜீவாதான் அதில் முன்னோடி. அப்புறம் கே.டேனியல். அவர்களோடு நட்புடன் இருந்து பேசிய தளையசிங்கம் என அரைமணி நேரம் தொடர்ந்தார். தலித் இலக்கியம், தலித் நாடகம் என்ற சொல்லாட்சி மட்டும் தான் நம்முடையது. தொடக்கமும் செயல்பாடுகளும் அங்கதான் என்று சொல்லி முடித்தார்.

இரவில் வரமுடியாது என்ற சொன்னதால் அவர் இல்லாமல் உலகநாடகவிழாவைத் தொடங்க விருப்பம் இல்லை. அதனால் குணசேகரன் நீங்கள் காலையில் 11 மணிக்கு வாங்க; உங்களுக்காக அப்போதே தொடக்கவிழாவை வைத்துவிடலாம். துணைவேந்தர் இரவில் சிறப்பு விருந்தினராக வரட்டும் என்று ஒத்துக்கொள்ள வைத்தார். அப்படியே அந்த விழாவிற்கு வந்தார் கி.ரா.

நிகழ்கலைப்பள்ளி மாணவர்களின் ஒத்திகைகளின் பரபரப்புப் பின்னணியில் தொடங்கி வைத்தார். கரு. அழ. குணசேகரனின் குரல் “ஆக்காட்டி.. ஆக்காட்டி.. எங்கெங்கே முட்டையிட்டே” என்று ஆகாயத்தில் தேடிப்போனது. இப்போது கி.ரா.வும் இல்லை. கி.ரா.வை அப்படி நேசித்த நண்பர் குணசேகரனும் இல்லை. இன்மைகளின் பாரம் அழுத்துகிற காலமாக நமது காலம் மாறிக் கொண்டிருக்கிறது.
 
23

பாண்டிச்சேரி கம்பன் கலை அரங்கில் ஒரு கூட்டம். கூட்டம் முடிந்து வெளியேறும்போது பார்த்தால் கோமல் சுவாமிநாதன் நின்றிருந்தார். பக்கத்தில் கி.ரா., கூட்டம் ஆரம்பித்தபிறகு அவர்கள் வந்திருக்க வேண்டும். அப்போது கோமல் சுபமங்களாவின் ஆசிரியர். அவரோடு அவரது துணை ஆசிரியர்களும் புகைப்படக்காரர் ஒருவரும் வந்திருந்தார்கள். சுபமங்களாவில் ஒவ்வொரு இதழிலும் ஒரு எழுத்தாளரை நேர்காணல் செய்து விரிவாக வெளியிட்டுக் கொண்டிருந்த நேரம். கி.ரா.வை நேர்காணல் செய்ய வந்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன். கூட்டம் கலைந்து கொண்டிருந்தது. இரவு ஒன்பது மணிக்கு மேலாகிவிட்டது. கடைசியில் கோமலைச் சுற்றிப் பத்துப் பன்னிரண்டு பேர் நின்றிருந்தோம். நிறப்பரிகை ரவிக்குமார், பிஎஸ்என்எல் மதியழகன், எங்கள் கூட்டுக்குரல் நாடகக் குழுவைச் சேர்ந்த அருணன், கோமதி, பெருமாள், விஷ்ணுதாசன் ஆகியோரும் இருந்தார்கள்.

பாண்டிச்சேரியைச் சைக்கிளில் சுற்றிவரும் நாங்கள் - எங்கே சுற்றினாலும் வீட்டுக்குப் போய் சாப்பிடும் பழக்கம் கொண்டவர்கள் . கி.ரா, வும் வெளியில் சாப்பிடுவதைத் தவிர்ப்பவரே. கோமலோடு பேசிக்கொண்டிருந்த நிலையில் எப்படி ஒன்றும் சொல்லாமல் கிளம்புவது என்று நினைத்துக் கொண்டு நின்றோம். “வாங்க சாப்பிடலாம்; ராம் இண்டர்நேசனல் பக்கத்திலெதான் இருக்கு” என்று சொன்னபோது. “ பாண்டிச்சேரி ரோட்டுக்கடைப் புரோட்டோவும், போத்திக் குழம்பும் சாப்பிடணும்யா” என்றார் கோமல்.

கம்பன் கலையரங்கத்தின் இடது மூலையில் தொடங்கும் அண்ணாசாலையின் வலதுபக்கம் - அண்ணா திடல் ஓரத்தில் மூன்று பக்கமும் இரவுச் சாப்பாட்டுக்கடைகள் வரிசை கட்டும். புரோட்டா, இட்லி, ஊத்தப்பம் கிடைக்கும். இவற்றிற்குத் தரப்படும் சால்னாக்கள் விதம்விதமானவை. வெத்துச்சால்னா, வெஜ் சால்னா, மட்டன் சால்னா, சிக்கன் சால்னா, என்பனவற்றைத் தாண்டி குடல் குழம்பு ஒன்று தருவார்கள். அதற்கு போத்திச் சால்னா என்று பெயர். அதேபோல் இறால் சால்னாவும் தருவார்கள்.

கோமலின் ரோட்டுக்கடை ஆர்வம் அங்கிருந்த பலருக்கும் ஆச்சர்யம். இத்தனை பேர் சாப்பிட்டால் யார் பணம் தருவது என்ற தயக்கம் இருந்தது. பிஎஸ்என்எல்லில் வேலை பார்க்கும் நண்பர் மதியழகன் தான் தைரியம் ஊட்டினார். சாப்பிடட்டும் பணம் இல்லையின்னா சொல்லிக்கிடலாம். நாளைக்கு வந்து கொடுத்திடலாம். மதியழகன் கவிதைகள் எழுதுவார். ஆனால் மற்றவர்களோடு விவாதிக்கக் கொஞ்சம் யோசிப்பார். புதிய கோடாங்கியில் வந்த அவர் கவிதைகள் வித்தியாசமாவை. அவை பின்னர் தொகுக்கப்பட்டு 2012 இல் ‘ வியூகம் கொள்ளும் காய்கள்’ என்ற தொகுப்பாகக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டது.

மதியழகன் தந்த தைரியத்தில் எல்லோரும் சாப்பிட்டு முடித்தோம். கோமல் போத்திக்குழம்பை விரும்பிச் சாப்பிட்டார். கி.ரா. பக்கத்தில் நின்ற ஸ்கூட்டரில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். கோமலை அவர் தங்கியிருந்த விடுதிக்கு ஆட்டோவில் ஏற்றி அனுப்பிவிட்டு வீடு திரும்பினோம். சில நாட்கள் கழித்துக் கி.ரா.வைச் சந்தித்தபோது ‘ பிராமணர்களிடமிருந்து கற்றுக் கொள்ள இன்னும் நிறைய இருக்கில்ல’ என்று கேட்டார். கோமலின் எதார்த்தமான இணைக்கத்தையும் உணவு விருப்பத்தையும் தான் அப்படிக் குறிப்பிட்டார்.


24
 
புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு வருவதற்கு முன்பே சிறுகதைகளை நாடகமாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தேன். சுந்தரராமசாமியின் ‘பல்லக்குத்தூக்கிகள்’ சிறுகதையை நாடகமாக்கிப் பலதடவை மேடையேற்றியிருந்தேன். திருவண்ணாமலை, சென்னை பரிக்‌ஷா குழுவினர் கூட அந்தப் பிரதியை மேடையேற்றினார்கள். அதைப்போலவே புதுமைப்பித்தனின் ‘சிற்பியின் நரகம்’ கதையையும் நாடகமாக்கி ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தோம். மதுரை நிஜநாடக இயக்கத்தின் கலைவிழாவில் மேடையேற்றுவதற்காகக் கூட்டுக்குரல் நாடகக் குழு மூலம் வேலை செய்து கொண்டிருந்தோம். எங்களது ஒத்திகைகள் பெரும்பாலும் பாண்டிச்சேரியின் மிஷன் தெருவில் உள்ள கல்வே கல்லூரியின் மைதானத்தில் அல்லது திறந்திருக்கும் வகுப்பறை ஒன்றில் நடக்கும்.

புதுமைப்பித்தன் கதையை நாடகமாக்கியிருந்த தகவலைக் கி.ரா.விடம் சொல்லியிருந்தேன். கல்வே கல்லூரிப் பக்கம் வந்தால் ஒத்திகையைப் பார்த்து கருத்துச் சொல்லுங்கள் என்றும் சொல்லியிருந்தேன். ஒருநாள் வருகிறேன் என்று சொல்லியிருந்தார். அம்மாவோடு வந்து பார்த்துவிட்டுக் கடற்கரைப் போகும் திட்டம். அதன்படி வந்து பார்த்துவிட்டுக் கடற்கரைக்கு மாலைநேரக்காற்று வாங்கப்போய்விட்டார். கருத்து எதுவும் சொல்லவில்லை. ‘வீட்டிற்கு வாங்கோ, பேசலாம்’ என்று சொல்லிவிட்டுப் போனார்.

ஒருநாள் கழித்து அவர் வீட்டிற்கு போனபோது புதுமைப்பித்தன் கதையில் இல்லாத பகுதியையெல்லாம் சேர்த்த மாதிரி இருக்கே. அத்தோட அவரோட கதையிலெ ‘ஒரு தேவாரப்பாட்டு இருக்கு; ஆனா ஒங்க நாடகத்திலெ நாட்டுப்புறப்பாட்டெல்லாம் இருக்கு’ என்று சொல்லிவிட்டு, நாடகம் முடியும்போது புதுமைப்பித்தன் கதையில் விவாதிக்கும் விவாதம் இருக்கு. பொதுவா ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்திற்குப் போகும்போது அதன் பகுதிகளை விடவேண்டியது இருக்கும். ஆனால் புதுசா சேர்த்தா, எழுதினவன் கதை காணாமல் போயிடுமில்ல’ என்று கேட்டார். இன்னொரு வடிவத்திற்கு மாற்றும்போது விடுறமாதிரி கூடுதலாச் சேர்க்கிறதும் தவிர்க்க முடியாதுன்னு சொன்னேன். “ஒரு கதை ஒருவரின் வாசிப்புக்கானது; நாடகம், சினிமால்லாம் கூட்டமா ஒக்காந்து பார்க்கிற பார்வையாளர்களுக்கானது; அதனாலெ அதிலெ சேர்க்க வேண்டிய கூறுகளெச் சேக்கவும் வேணும். அந்த அடிப்படையிலெ தான் புதுமைப்பித்தன் கதையில கதைசொல்லியெ தூக்கிட்டு, ஒரு குழுவெ வச்சு நாடகத்தின் நிகழ்வுகளெச் சொல்ல வச்சிருக்கேன். அந்தக் குழு பாட்டு மூலமா பார்வையாளர்களுக்கு நாடக நிகழ்வுகளெ முன்வைக்குது” என்று விளக்கினேன்.

“நீங்க இப்படி சொல்றீங்க; ஆனா என்னோட நாற்காலி கதையெ கோமல் சுவாமிநாதன் நாடகமா ஆக்கினாரு. கோமல் குழுவில இருந்த வாத்தியார் ராமனெல்லாம் அதில நடிச்சாரு. அந்த நாடகப்பிரதியெ எனக்கு அனுப்பியிருந்தாரு. மேடையேத்திறதுக்கு அனுமதி வேணும்னு கேட்டாரு. நானும் படிச்சுப் பார்த்துட்டு பேஷாப் போடுங்கோன்னு சொல்லிட்டேன். சென்னையில ஒரு எழுத்தாளர் மாநாட்டில தான் போட்டாரு. நான் போய்ப்பாக்கல” என்று சொல்லிவிட்டு சுந்தரராமசாமியோட கதையெ நாடகமாக்கினீங்களே ; அவர் பாக்க வந்தாரான்னு கேட்டார். முதல் மேடையேற்றத்துக்கு மதுரைக்கு வருவதாகச் சொன்னார். ஆனால் அந்த நாளுக்கு முன்னால் ‘பல்வலி, அதனாலெ வர இயலாது; நாடகமாப் போடலாம்னு எழுதி ஒரு கார்டு போட்டிருந்தார்’ என்றேன். அதன் பிறகு நாவல், சிறுகதைகளைச் சினிமாவாக்குவது பற்றி பேச்சு திசைமாறி முடிந்தது.

“நீங்க என்னோட சிறுகதைகள்ல ஏதாவது ஒன்னெ நாடகமாக்கலாமே” என்றார். அப்படி நேரடியாகச் சொல்வார் என்று நினைக்கவில்லை. அவரது சிறுகதைகள் பலவும் நடப்பியல் கதைகள். ஒன்று அல்லது இரண்டு நிகழ்வுகளை விவரிப்பதின் வழியாக முடியும் வடிவம் கொண்டவை. அதற்குள் பாத்திரமுரண்கள் குறைவு. கதை எழுப்பும் நிகழ்வுகளோடு வெளியே இருக்கும் சமூகத்திற்கு முரண் உண்டு. கருத்தியல் முரண்கள் இருக்கும். அதே நேரத்தில் கதை சொல்வதற்கு ஒரு எடுத்துரைப்பாளரை உருவாக்கி அவரது கதைகளை நாடகமாக்க முடியும் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். முயற்சி செய்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்தேன். பணத்தின் நகர்வை மையப்படுத்திய தாவைப் பார்த்து கதையை அப்படி முயன்று பார்த்தேன். கதவையும் வேட்டியையும் இணைத்து ஈரங்க நாடகமாக்கவும் முயன்றேன். அந்த முயற்சிகள் இன்னும் மேடையேறாமலேயே கிடக்கின்றன. நிகழ்கலைப்பள்ளியை விட்டு வராமல் இருந்திருந்தால் அவை மேடையேற்றப்பட்டிருக்கலாம்.

25
”பாண்டிச்சேரிக்கு வந்தபிறகு சிறுகதை எழுதிறதே மறந்துட்டுய்ய்யா.. ரொம்பநாள் கழிச்சு ஒரு கதை இந்தியாடுடேயிலெ வருது. படிச்சுட்டு சொல்லுங்கோ “ என்றார் கி.ரா. அப்படி வந்த கதையின் பெயர் ”காய்ச்சமரம்” இந்தியாடுடே வெளியிட்ட பொங்கல் அல்லது தீபாவளி மலராக இருக்கவேண்டும். ’காய்ச்சமரம் கல்லடிபடும்’ என்ற சொலவடையின் முன் சொல்லைத் தலைப்பாக்கி எழுதிய அந்தக் கதை வந்த இந்தியாடுடேயை வாங்கிப் படித்துவிட்டு அவரைச் சந்தித்தேன்.

கிராமத்துப் பெருந்தனக் குடும்பம் ஒன்றின் பாகப்பிரிவினைக்குப் பின், மகன்களிடம் பெற்றோர் படும்பாட்டையும், இனி இவர்களிடம் இருக்கக்கூடாது; எங்கேயாவது போய்த் தற்கொலை செய்துகொள்ளலாம் என்று கிளம்பிய தம்பதிகள், தற்கொலை முடிவைக் கைவிட்டு ஒரு கோயில்வாசலில் பிச்சையெடுத்து வாழ்க்கையை நடத்தியதைக் கண்டுபிடித்த ஊர்க்காரரின் மனவேதனையாக அந்தக் கதையைச் சொல்லியிருந்தார்.

அந்தக்கதை வருவதற்கு முன்னால் சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப்பள்ளி சி.கே.தாமஸ் என்ற மலையாள இயக்குநரை அழைத்து விருந்து இயக்குராக ஒரு நாடகம் செய்யச் சொன்னது. அவர் சேக்ஸ்பியரில் ஒன்றைச் செய்யலாம் என்று சொன்னார். மேக்பெத், ஜூலியர் சீஸர் என யோசித்துக் கடைசியில் ‘கிங்லியர்’ தேர்வுபெற்றது. ஏற்கெனவே இருக்கும் மொழி பெயர்ப்புகளைப் பயன்படுத்தலாமா? புத்தாக்கமாக ஒத்திகையின்போது பிரதியாக்கத்தையும் பயிற்சிக்கு எடுத்துக் கொள்ளலாமா? என்று யோசித்தபோது, நிகழ்கலைப்பள்ளி இயக்குநர் இந்திரா பார்த்தசாரதி, ”ஒத்திகையைத் தொடங்குங்கள்; நாடகப்பிரதியைத் தழுவலாகத் தருகிறேன்” என்று சொல்லிவிட்டார். ஆரம்பக்கட்ட ஒத்திகைகள் வசனங்கள் இல்லாமல் காட்சி அமைப்புகளாக ஆரம்பித்தன. பள்ளியில் படித்த மாணவர்கள் போதாத நிலையில் நான் லியரின் நண்பரைப் போன்ற பக்கத்து நாட்டு க்ளோஸ்செஸ்டர் பிரபு பாத்திரத்தை ஏற்றிருந்தேன். கண் தெரியாத தந்தையை ஏமாற்றும் பிள்ளைகள் அவருக்குண்டு. இன்னொரு ஆசிரியர் வ. ஆறுமுகம் லியரின் மருமகன்களில் மூத்தவராக நடித்தார். மனுஜோஸ் என்னும் சிறந்த நடிப்பு மாணவன் லியராக நடித்தான். ஆசிரியர்கள், ஆய்வாளர்கள் மட்டுமல்லாமல் நாடக்த்துறையில் விருப்பப்பாடம் படிக்க வந்த மாணவிகளும் நடித்தார்கள். 20 -க்கும் மேற்பட்ட பாத்திரங்கள்.

ஒருவாரத்திற்குப் பின் இ.பா. கிங் லியரை, ”இறுதியாட்டம்” என்னும் தழுவலாகத் தந்தார். சேக்ஸ்பியரின் எல்லாப் பெயர்களும் மாறியிருந்தன. ஒரு மாத ஒத்திகைக்குப் பின் நாடகம் மேடையேற்றம் கண்டது. இந்த கிங் லியர் கதையை அப்படியே மாற்றி பெண் பிள்ளைகளுக்குப் பதிலாக ஆண்கள் என்று போட்டால் அதுதான் கி.ரா.வின் காய்ச்சமரம். இங்கிலாந்து உள்பட்ட ஐரோப்பாவில் பெண்களுக்குச் சொத்துரிமை உண்டு. இந்தியாவில் எப்போதும் ஆண்களுக்கே சொத்துரிமை.

காய்ச்சமரம் கதையை வாசித்துவிட்டு லியரை ஒப்பிட்டுப் பேசிக்கொண்டிருந்தோம். உலகத்தில் பிள்ளைகளைக் கடைசிவரை அடக்கிவைத்திருக்கும் பெற்றோரைப் பழிவாங்கும் பிள்ளைகள் என்ற உரிப்பொருள் பரவலான ஒன்றுதான். எல்லா மொழிகளிலும் இப்படியான ஒரு கதையல்ல; ஓராயிரம் கதைகள் இருக்கும் என்றார் கி.ரா. நேரடி அனுபவங்களைக் கதையாக்கும் கலைஞனைச் சேக்ஸ்பியர் படித்துத் தழுவல் செய்துவிட்டான் எனச் சொன்னால், சொல்பவனைப்பார்த்துச் சிரித்துக் கொண்டே நகர்ந்துவிடுவான் என்றும் சொன்னார்.

கி.ரா. வைப்பொறுத்தவரைக் கதைகள் காய்த்துத் தொங்குப் பெருமரம் என்பதைப் பாண்டிச்சேரியில் இருந்த ஏழாண்டுகளில் நேரடியாக அறிந்து கொண்டேன். அவர் பேச்சு ஒவ்வொன்றும் கதையாகவே இருக்கும்.

26.

பாண்டிச்சேரிக்குக் கி.ரா. வந்தததால் எழுத்தில் மட்டுமே வாசித்திருந்த பல எழுத்தாளர்களை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ் நாட்டுக்காரர்கள் என்றில்லாமல் அயல்நாட்டிலிருந்து வந்தவர்களைக் கூட அவரது வீட்டில் பார்த்திருக்கிறேன். அப்படி அறிமுகமான எழுத்தாளர்களில் இளையோரும் உண்டு. நடுத்தர வயதினரும் உண்டு. ஒரு சில முதியவர்களும் உண்டு. நான், பாண்டிச்சேரிக்குப் போனபோது எனது வயது 30. அதனால் இளையோர்களில் ஒருவன் எனக் கருதியிருந்தேன். நாற்பதிலிருந்து அறுபது தாண்டியவர்களை நடுத்தர வயதினராகவும் அறுபதுக்கும் மேல் கடந்தவர்களை முதிய எழுத்தாளராகவும் நினைத்துக் கொள்வேன். அவரைப் பார்க்க வருபவர்களில் நடுத்தரவயது மற்றும் மூத்தோர்கள்தான் அதிகம்.

ஒருநாள் அதுவரை நான் கேள்வியே படாத ஒரு எழுத்தாளரை எனக்கு அறிமுகம் செய்தார் கி.ரா. அது ஒரு இன்பகரமான நினைவு. அந்த எழுத்தாளரின் பெயர் பா.விசாலம். அவரது "மெல்லக்கனவாய்ப் பழங்கதையாய்" என்ற நாவலோடுதான் அறிமுகம் ஆனார். அறிமுகமான இடம் கி.ரா.வின் வீடு. நான் போனபோது கி.ரா.வின் சாய்வு நாற்காலிக்குப் பக்கத்தில் இருந்த சின்ன மேசையில் மெல்லக் கனவாய்ப் பழங்கதைகள் நாவலின் சில பிரதிகள் இருந்தன. அவருக்கு முன்னால் இரண்டுபேர் அமர்ந்திருந்தார்கள்.

அவர்களோடு பேசிக்கொண்டிருந்த கி.ரா. பேச்சை நிறுத்திவிட்டு, அந்த நாவலின் ஒரு பிரதியைக் கையிலெடுத்துக் கொண்டு, ‘இவரைத் தெரியுமா? என்று கேட்டார். அந்தக் கேள்வி எனக்கா? அவருக்கா? என்று புரியாமல் இருவரும் தலையை அசைத்தோம். பிறகு அவரே இருவரையும் இருவருக்கும் மாற்றிமாற்றி அறிமுகம் செய்தார். அவர் பெயர் பா.விசாலம்; அறுபது வயதை நெருங்கும்போது தனது முதல் நாவலோடு தமிழ் இலக்கியத்திற்குள் வந்திருக்கிறார். இவர் அவரது கணவர் ராஜு. பாண்டிச்சேரி தொழிற்பேட்டையில் குறுந்தொழில்கூடம் வைத்திருக்கும் தொழில் அதிபர் என்றார். சுந்தரராமசாமிக்கு நண்பர்கள் என்று சொல்லிவிட்டு ‘ நாகர்கோயில்காரங்க;நாவலைப் படிச்சுப் பாருங்கய்யா?’ என்ற சொன்ன போது பா.விசாலம் தன்கைப்பட அன்புடன் என்று எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார்.

விசாலத்தின் கணவர் ராஜுவைச் சிலதடவை பார்த்ததாகத்தோன்றியது. அவரையும் மதியழகன் தான் அறிமுகம் செய்திருந்தார். நான் பல்கலைக்கழகம் போவதற்கு நிற்கும் குறிஞ்சி நகர் பேருந்து நிறுத்தத்தில் அவரைச் சந்தித்தது ஞாபகம் வந்தது. அதற்குப் பின்பக்கம் இருக்கும் தாகூர் நகரில் அவரது வீடு என்றும் சொல்லியிருந்தார். புதுவை இலாசுப்பேட்டைப் பகுதி ஒரு தொகுதி. அத்தொகுதிக்குள் இருக்கும் நகர்களின் பெயர்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமாக ஆளுமைகளின் பெயர்களாக - ராஜாஜி, தாகூர், லெனின், இந்திரா என இருக்கும். பண்டைத்தமிழ் இலக்கியத்திலிருந்து திணைப்பெயர்கள் கொண்ட -குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் நகர்களும் உண்டு. ஔவை, பாரதியார், குமரகுருபர் எனப் புலவர்களின் பெயர்களையும் பார்க்காலம். நகர் என்று இருந்தாலும் அதற்குள் இரண்டிலிருந்து ஐந்து தெருக்களே இருக்க வாய்ப்புண்டு.

விசாலத்தின் மெல்லக்கனவாய்ப் பழங்கதையாய் ஒருவித லட்சியத்தன்மை கொண்ட ஒரு பெண்ணின் கதை. நாகர்கோவில் பின்னணியில் எழுதப்பெற்ற நாவல். ஆனால் வட்டார மொழியைக் கைவிட்டுவிட்டு இடப்பின்னணியில் பாத்திரங்களை உலாவ விட்டிருந்தார். இளமையின் வேகமும் லட்சியமும் கொண்ட பெண்ணின் பிடிவாதமான காதலும், இடதுசாரி இயக்கத்தலைவர்களோடு பழகிய பழக்கமும் நிகழ்வுகளாக விரியும் அந்த நாவலை ஒருவிதத் தன்வரலாற்று நாவல் என்று வகைப்படுத்தலாம்.

நாவலை வாசித்துவிட்டு அவர்களது தாகூர் நகர் வீட்டுக்குப் போய் மாலைநேரக் காபியோடு விரிவாகப் பேசிக்கொண்டிருந்தேன். ஊடகம் இதழில் எழுத நினைத்தேன். ஆனால் அது நாவல் போன்றவற்றைக் கவனத்தில் கொள்ளாத இதழ். அப்போது அவ்வளவு பிரபலம் இல்லை என்பதால் நான் எழுதி அனுப்பிய விமரிசனம் வரவில்லை. விசாலத்தின் கணவர் ராஜூ இலக்கியம், சமூக இயக்கம் என இயங்கும் பலருக்கும் நெருக்கமானவர். கேட்காமலே நன்கொடைகள் வழங்கி ஆதரவு தருவார். மெல்லக்கனவாய்.. நாவலின் லட்சிய இடதுசாரி அவரே என்று தோன்றியது.

27.

மதுரையில் சுரேஷ்குமார் இந்திரஜித் ஒருங்கிணைத்த மதுரை சந்திப்பு நிகழ்வுகளில் சுந்தரராமசாமியைப் பார்த்ததுண்டு. தனியாக அவரோடு பேசியதில்லை. இடையில் அவரது பல்லக்குத்தூக்கிகளை நாடகமாக்கியதால் நெருக்கம் கூடியிருந்தது. கடிதங்கள் மூலம் பேசிக் கொண்டோம். அதன் பிறகு அவரை நேரடியாகச் சந்தித்தது பாண்டிச்சேரியில் தான். விசாலம் – ராஜு இல்லத் திருமணம் ஒன்றில் கலந்துகொள்வதற்காகப் பாண்டிச்சேரி வந்திருந்தார். என்னைச் சந்திக்க விரும்புவதாகத் தகவல் அனுப்பியிருந்தார். கி.ரா.வுக்கும் அப்படியொரு தகவல் போயிருக்கும் என்று நினைக்கிறேன்.

புதுவையில் அப்பொழுது இரட்டைத் திரை அரங்காக இருந்த ஆனந்தா-பால ஆனந்தா திரையரங்கத்திற்குப் பக்கத்தில் இருந்த ஆனந்த திருமண மஹாலில் திருமணம். அங்கேயே தங்கும் அறைகளும் உண்டு. அதன் உரிமையாளர் கோவிந்தசாமி முதலியார் கலை, இலக்கியப் புரவலரும்கூட. எப்போதும் மஞ்சள்வண்ணப் பட்டுவேட்டியோடு பட்டுத்துண்டும் அவரது அடையாளங்கள். ஒருவிதக் கதர்பட்டு ஆடைகள். நான் மண்டபத்திற்குள் நுழையும்போது அவர் அங்கிருந்தார். கம்பன் விழாவில் பிரபஞ்சனின் அகல்யா நாடகம் மேடையேற்றம் மூலம் மரபைப் பேணும் முதியவர்கள் பலருக்கும் நான் எதிர்மறையாக அறிமுகமாகியிருந்தேன். ஆனாலும் அதற்காக எதிரியாகப் பார்க்காத மனம் அவர்களிடம் உண்டு. என்னைப் பார்த்தவுடன் கி.ரா. இப்போதுதான் போறார். நீங்களும் பின்னாலேயே வறீங்க என்று சிரித்தபடியே சொல்லி அனுப்பி வைத்தார். நாங்கள் மாலையில் போனோம். அநேகமாக அது திருமணத்திற்கு முந்திய வரவேற்பு நிகழ்வு என்று நினைக்கிறேன். மண்டபத்திற்கு வெளியே இருந்த புல்வெளியில் சு.ரா., ராஜு, கி.ரா. ஆகியோர் இருந்தனர். இன்னும் சிலர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அவர்களை எனக்குத் தெரியாது. கி.ரா.வும் சு.ரா.வும் கொஞ்ச நேரம் பழைய நினைவுகளைப் பேசினார்கள். சுந்தர ராமசாமிக்குக் கி.ரா., பாண்டிச்சேரிவாசியாகவே மாறிவிட்ட து ஆச்சரியமாக இருந்தது. ஒரு கரிசல் காட்டு விவசாயியால் புதுச்சேரி போன்ற நகரத்தில் தன்னை ஐக்கியமாக்கிக் கொள்ளமுடியும் என்பதை நம்பமுடியாமல் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டிருந்தார். ‘அதென்ன பெரிய காரியம்; இடைசெவல்லெ என்னைப் பார்க்க வர்றவங்கள விட அதிகமான இலக்கியவாதிகள் இங்கெ என்னைப் பார்க்க வர்றாங்க. நல்ல காத்து கெடைக்குது; நல்ல தண்ணி; நல்லா மீன். அரிசியெக் குறைச்சுட்டு மீனெ அதிகமாச் சாப்பிடுறேன். சர்க்கரை வியாதிக்கு இது நல்ல உணவுன்னு சொல்றாங்க’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது பஞ்சாங்கம் வந்தார். கி.ரா., அவர் பக்கம் திரும்பியதும், சுந்தர ராமசாமி என் பக்கம் திரும்பினார்.

"குடுங்கோ" என்று நான் கையில் வைத்திருந்த நூலை வாங்கிப் பார்த்தார். அவருக்குத் தருவதற்காக எனது “ நாடகங்கள் விவாதங்கள்” என்ற முதல் நூலைக் கொண்டுபோயிருந்தேன். அதில் முதல் நாடகமாக சு.ரா.வின் பல்லக்குத்தூக்கிகள் இருந்தது. வாங்கிப் பார்த்துவிட்டு மதுரை நண்பர்கள் நாடக நிகழ்வைப் பாராட்டிச் சொன்னதை நினைவுபடுத்திப் பேசினார். அத்தோடு இந்தப் புத்தகத்தின் இரண்டு பிரதிகளை எனக்கு நாகர்கோவிலுக்கு அனுப்பித் தரணும். அப்புறம் பத்துப் புத்தகங்களை சிங்கப்பூருக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கணும் என்றார். எனக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை

ஒரு தேதியைக் குறிப்பிட்டுச் சிங்கப்பூர் அரசாங்கம் சிறுகதைப் போட்டி நட த்தியிருக்கிறது. அதில் நல்ல சிறுகதையைத் தெரிவுசெய்யும் வேலைக்காக என்னை எழைத்திருக்கிறது. நான் போகிறேன். நீங்கள் அந்தத் தேதிக்கு முன்னால் க்ரியா முகவரியில் இதன் பத்துப் பிரதிகளைக் சேர்த்துவிடுங்கள் என்று சொல்லி அதன் முகவரியைக் கொடுத்தார். கொடுத்துவிட்டுச் சிங்கப்பூரில் இளங்கோவன் என்றொரு நாடகக்காரர் இருக்கிறார். அவர் இந்தப் பிரதியை மேடையேற்றுவதாகச் சொல்லியிருக்கிறார். ஒருவேளை மேடையேற்றும்போது உங்களையும் அழைக்கப்போவதாகச் சொன்னார் என்றார்.

தபாலில் அனுப்பாமல் எனது நூலின் 25 பிரதிகளை எடுத்துக்கொண்டு க்ரியாவிற்கு நேரில் சென்று தனியாகப் பத்து நூல்களை ஒரு கட்டாகவும் 15 பிரதிகளைக் க்ரியாவில் விற்பதற்காகவும் தந்துவிட்டு வந்தேன்.
 
28.

பா.விசாலம் போலவே அதுவரை நான் கேள்விப்படாதவராக இருந்து கி.ரா. வீட்டில் அறிமுகமாகிப் பின்னர் நெருங்கிய நண்பராக ஆனவர் பா.இராமமூர்த்தி. சங்கமித்திரை என்னும் புனைபெயரில் கட்டுரைகள் எழுதினார். பெரியாரியச் சிந்தனைகள் நிரம்பியவர். திராவிட இயக்க இதழ்களில் அவரது எழுத்துகள் அச்சாகிக் கொண்டிருந்தன. மார்க்சியமும் நவீனத்துவ எழுத்தும் பிடித்திருந்த அளவுக்குப் பெரியாரியம் சார்ந்த எழுத்துகள் மீது பிடிமானம் அப்போது இல்லை.

பா. இராமமூர்த்தி மாதமொருமுறையாவது பாண்டிச்சேரிக்கு வந்து கி.ரா.வைப் பார்த்துவிட்டு நீண்ட நேரம் இருந்து பேசிவிட்டுச் செல்லக்கூடியவர். அப்போது அவரது பணியிடம் நெய்வேலியா? கடலூரா? என்பது நினைவில்லை. பாண்டிச்சேரிக்கு வரும்போது சில நேரங்களில் குடும்ப உறுப்பினர்களோடு வருவார். கணவதி அம்மாவுக்கும் அவர்கள் அறிமுகம் என்பது தெரிந்தது, அவருக்கும் கி.ராவுக்குமான நட்பு நீண்ட கால நட்பு. கோவில்பட்டியில் அவர் ஸ்டேட்வங்கி அதிகாரியாக இருந்த காலத்திலேயே இடைசெவலுக்கு அடிக்கடி சென்று சந்தித்திருக்கிறார். இளம் வயதில் காலை நடைக்குப் பதிலாக மெல்லோட்டமாக நீண்ட தூரம் ஓடுவாராம். கோவில்பட்டியிலிருந்து இடைசெவல் வரை ஓடிவிட்டுத் திரும்பி வருவாராம். இடைசெவலில் பேச்சுத் தொடர்ச்சியில் நேரம் போவது தெரியாமல் இருந்துவிட்டு, ஓடிவந்து திருநெல்வேலி – கோவில்பட்டி இடையே ஓடும் ஏதாவது ஒரு பேருந்தில் ஏறி வீடு திரும்புவேன் என்றும் சொல்லியிருக்கிறார். அவரைப் பார்க்க ஸ்டேட் வங்கிச் சென்றபோது , அங்கு வரும் விவசாயிகளையும் அவர்களை எதிர்கொள்ளும் வங்கி ஊழியர்களையும் பார்த்துச் சில கதைகள் எழுதியிருப்பதாகக் கி.ரா. சொல்லியிருக்கிறார்.

பா.இராமமூர்த்தி கோவில்பட்டியிலிருந்த காலத்தில்தான் அங்கே மாவட்டக் கல்வி அதிகாரியாக இருந்திருக்கிறார் கி.வேங்கடசுப்பிரமணியம். பின்னர் மாநில அளவில் கல்வி அதிகாரியாக மாறியிருக்கிறார். அவருக்கு முன்னோடி நெ.து. சுந்தரவடிவேல். அவர் எம்ஜிஆர் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்த செ. அரங்கநாயகத்தின் நம்பிக்கைக்குரிய ஆலோசகர் எனக் கேள்விப்பட்டிருக்கிறார். அந்தப் பின்னணியோடு மைய அரசில் அமைச்சராக இருந்த ஆர்.வெங்கட்ராமனின் அறிமுகத்தோடு முதல் துணைவேந்தரானவர் முனைவர் கி. வேங்கடசுப்பிரமணியன். அந்த நன்றிக்காகவே பல்கலைக்கழக வளாகத்திற்கு ஆர். வெங்கட்ராமன் நகர் எனப்பெயரிட்டார் என பா. இராம மூர்த்தி ஒரு விளக்கம் தந்தார். பலரும் இதனைச் சொல்லியிருக்கிறார்கள்.

நான் புதுச்சேரியிலிருந்து திருநெல்வேலிக்கு வந்தபின் அவ்வப்போது புதுச்சேரிக்குப் போவேன். பல்கலைக்கழக வேலையாகப் போகும் ஒவ்வொரு முறையும் அவர் வீட்டுக்குப் போவதில்லை. என்றாலும் ஆண்டுக்கு இரண்டு தடவையாவது அவரைப் பார்த்து விடுவேன். வீட்டில் சென்று பார்த்தால், அவரது புதிய நூல்களையும் அவருக்கு வந்து சேரும் நூல்களையும் என்னிடம் தருவார். அப்படியொரு தடவை போனபோது “கி.ரா. இணைநலம்” என்று சிறிய நூலொன்றைத் தந்தார். அதில் முழுக்கவும் கணவதி அம்மாவின் பண்புகளும் கி.ரா. என்னும் எழுத்தாளுமையை அவர் கவனித்துக் கொள்ளும் விதங்களும் எழுதப்பெற்றிருந்தன. அதனை எழுதியவராக ஒரு பெண்ணின் பெயர் – எஸ்.பி, சாந்தி(2012)இருந்தது. அவர் பா.இராம மூர்த்தியின் புதல்விகளில் ஒருவர் என்பதைக் கணவதி அம்மா சொன்னார்.

29.

புதுச்சேரிப் பல்கலைக்கழகத்தமிழ்த்துறைக்குக் க.நா.சுப்பிரமண்யம், கி.ராஜநாராயணன் போன்றோரை வருகைதரு பேராசிரியராக அழைத்ததுபோலச் சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப் பள்ளியிலும் ஒருவரை அழைக்கலாம் என்ற பேச்சு வந்தது. அப்போது உடனடியாக நினைவில் வந்த பெயர் பிரபஞ்சன். நாடக இலக்கியம் என்றொரு தாள் ஒவ்வொரு பருவத்திலும் உண்டு. செவ்வியல் நாடகங்கள் வரிசையில் இந்திய நாடகங்கள், ஐரோப்பிய நாடகங்கள், நவீன இந்திய நாடகங்கள் என அத்தாள்களுக்குப் பெயர். இந்தத் தாள்களில் ஒன்றிரண்டைப் பாடம் சொல்வதற்காக அவரை அழைக்கலாம் என்று பேசினோம். தமிழ்நாட்டில் நடந்த பாதல் சர்க்கார் நாடகப்பட்டறையில் கலந்துகொண்டு பயிற்சி பெற்றவர் அவர். அந்த உத்வேகத்தில் அவர் எழுதிய முட்டை, அகல்யா என்ற இரண்டு நாடகப்பிரதிகளும் கவனிக்கத்தக்க நாடகங்கள்தான் என்று சொன்னேன். பாதல் சர்க்கார் பட்டறையில் கலந்துகொண்ட முனைவர் கே.ஏ.குணசேகரன், பிரபஞ்சன் செய்முறைப் பயிற்சியில் அதிகம் ஈடுபாடு காட்டியவர் அல்ல; ஆனால் நாடகப்பிரதிகள் சார்ந்து நல்ல வாசிப்புடையவர் என்று சொன்னார். அவரை அழைப்பது என்று முடிவானபின், பல்கலைக்கழகத்திற்கு அனுமதி கேட்டுக் கோப்பு அனுப்ப வேண்டும். அதனை ஏற்று ஒப்புதல் தரவேண்டியவர் துணைவேந்தர். அவரிடம் போவதற்கு முன்பே குறிப்பு எழுதும் பிரிவு அலுவலர், துணைப்பதிவாளர், இணைப்பதிவாளர், பதிவாளர் போன்றவர்கள், “ நாடகத்துறையில் இருக்கும் ஆசிரியர்கள்: மாணாக்கர் விகித அடிப்படையில் இப்போது இருக்கும் ஆசிரியர்களே போதும்” என்று குறிப்பு எழுதிவிட்டால், அதை மாற்றும் அதிகாரம் இருந்தாலும் துணைவேந்தர்கள் அப்படிச் செய்வதற்கு யோசிப்பார்கள். அதனால் கோப்பைத் தயாரிப்பதற்கு முன்பே துணைவேந்தரோடு பேசிவிட்டால், வேலை எளிதாகிவிடும். துணைவேந்தரோடு கலந்துரையாடியதின் அடிப்படையில் இந்தக் குறிப்பு அனுப்பப்படுகிறது என்று தொடங்கிவிடலாம். அதன் பிறகு ஒருவரும் எந்தக் குறிப்பும் எழுத மாட்டார்கள்; தடை போட மாட்டார்கள். அப்படிச் செய்யும் வல்லமை எல்லாத் துறைத்தலைவர்களுக்கும் இருப்பதில்லை. சில தலைவர்கள் ‘நான் ஏன் அவரைப் பார்க்கவேண்டும்; கோப்பைப் பார்த்து அனுமதிக்க வேண்டியது பல்கலைக்கழக நிர்வாகத்தின் கடமை’ என அனுப்பி வைப்பார்கள். இந்திரா பார்த்தசாரதியும் சில நேரங்களில் அப்படிச் செய்வார். செய்துவிட்டுத் தகவலைத் தொலைபேசி வழியாகச் சொல்லிவிடுவார். பிரபஞ்சனை அழைப்பதற்கான கோப்பைத் தயாரிப்பதற்கு முன்பே துணைவேந்தரோடு பேசுவதோடு, அழைக்கப்பட்டால் அதனை ஏற்றுப் பிரபஞ்சன் வருவாரா? என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று சொன்னேன். “ஆமாம்; அதுவும் முக்கியம் தான். அனுமதி வாங்கியபின் அவர் வரமறுத்துவிட்டால் சிக்கலாகிவிடும். நீங்களே பிரபஞ்சனைப் பார்த்துப் பேசிவிட்டு வந்துவிடுங்கள்’ என்று சொல்லிவிட்டார் இ.பா.

பிரபஞ்சனிடம் பேசும்போது ‘எல்லா நாளும் துறைக்கு வரவேண்டியதில்லை. வருகைப் பதிவேட்டில் ஒப்பம் இடவேண்டியதில்லை. வாரத்தில் இரண்டு நாட்கள் வந்து பாடம் சொல்லிவிட்டுப் போகலாம் என்ற கட்டுப்பாடற்ற விதிகளோடு அழைக்கிறது என்பதையும் சொல்லிவிடுங்கள்’ என்றார். அவரைச் சந்திப்பதற்கு முன்னால் கி.ரா.வீட்டிற்குப் போனேன். பிரபஞ்சனை அழைக்கப்போகிறோம் என்ற தகவலைச் சொன்னேன். ‘நல்ல காரியம் இது. பாண்டிச்சேரியில் இருக்கும் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுக்காரங்களுக்கு மரியாதெ செய்யுது; புதுச்சேரிக்காரங்களெ கண்டுக்கிறது இல்லென்னு ஒரு வருத்தம் இங்கெ நிறையப்பேருக்கு இருக்கு. அதெ இது மாத்தும். அத்தோட அவரும் பொறுத்தமானவர்’ என்று சொல்லிவிட்டு அவர் எப்போதாவது தான் புதுச்சேரிக்கு வருவார்; சென்னையில் தான் அதிகம் இருப்பார் என்று கேள்விப்பட்டேன்’ என்றார்.

‘பிரபஞ்சனைப் பார்க்கணும்னு முகவரியெல்லாம் வாங்கி வச்சிருக்கேன்; ஆனா அவரெ பார்க்கிற வாய்ப்பு இன்னும் வரல’ என்று சொல்லிவிட்டு, அவர் முகவரிகள் எழுதி வைத்திருக்கும் நாட்காட்டி ஒன்றை எடுத்து வந்தார். அதில் பிரபஞ்சனின் முகவரி இருந்தது. இந்த முகவரி எங்கெ இருக்குன்னு தெரியுமா? என்று கேட்டார். “பெரிய மணிக்கூண்டுக்குப் பக்கத்திலெ இருக்கு. அங்கு இன்னொரு நண்பர் இருப்பார் ; நான் அங்கெ போயிடுவேன். அவர் என்னைப் பிரபஞ்சன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போவார்” என்று சொன்னேன். பெரிய மணிக்கூண்டிலிருந்து ரயில்வே ஸ்டேசன் போகும் சாலையில் இருப்பதாக அவர் சொன்னார்” என்று சொல்லிவிட்டு பிரபஞ்சனின் முகவரியைக் குறித்துக்கொண்டேன்.

எழுதி முடித்து நிமிர்ந்தபோது, “இந்த ஊர்லெ ஒரு இடத்துக்கு வழி சொல்லும்போது மணிக்கூண்டுகளெச் சொல்லி இடது பக்கம் அல்லது வலது பக்கம் என்று சொல்கிறார்கள் கவனிச்சீங்களா? என்று கேட்டார். இந்த மணிக்கூண்டுகள் பெரும்பாலும் பிரெஞ்சுக்காரன் வைத்த கூண்டுகள்னு நெனக்கிறேன். எல்லா மணிக்கூண்டும் நல்ல உயரமா இருக்கு. ஊருக்கே நேரங்காட்டுற மாதிரி பெரிய கடிகாரங்கள். அதில்லாமெ எல்லா மணிக்கூண்டும் மஞ்சள் வண்ணத்திலெ தான் இருக்கு. கடல் கரையோரத்திலெ இருக்கிற பிரெஞ்சுப் பகுதியும் அதே மஞ்சள்லெ உயரம் உயரமான ஜன்னல்களோட இருக்குல்ல. பிரெஞ்சு அடையாளத்தெ இங்கெ இருக்கிறவங்க பத்திரமா வச்சிருக்காங்க” என்றார்.

அவர் சொன்னதை நானும் கவனிச்சிருக்கிறேன் என்று சொல்லிவிட்டு, பாண்டிச்சேரி நகரத்தெ விட்டு வெளியிலிருந்து வர்றவங்க மணிக்கூண்டுக்குப் பதிலா கந்தன் தியேட்டர், அஜெந்தா தியேட்டர், முருகா தியேட்டர், ராமன் தியேட்டர், ஜீவா, ஜெயராம்,என்று சினிமா தியேட்டர்களைத்தான் அடையாளம் சொல்லிப் பாதை காட்டுகிறார்கள். கொஞ்சம் சேரிப் பகுதியின்னா கள்ளுக்கடைகளின் எண்களைச் சொல்லுகிறார்கள் என்றேன். கடலோரங்களில் இருக்கும் மீனவர்களுக்குப் பெரும்பாலும் கள்ளுக்கடை, சாராயக்கடைகள் தான் அடையாளம் சொல்லும் இடமாக இருக்கு என்று சொன்னேன். “நான் இன்னும் அப்படியான மனுசங்களெச் சந்திக்கலையே” என்று சொல்லிவிட்டுச் சிரித்தார்.









கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்