பிக்பாஸ் - சில குறிப்புகள்


பிக்பாஸ்-7:தவறவிட்ட முதலிடம்


வெகுமக்கள் ஊடகங்களைக் கவனித்து வெகுமக்கள் பண்பாடும் அரசியல் தீர்மானங்களும் எவ்வாறு கட்டமைக்கப்படுகின்றன என்பதைத் தொடர்ந்து விவாதித்து வருபவன் என்ற வகையில் இந்தியர்களின் மிகப்பெரிய பொழுதுபோக்கான கிரிக்கெட் விளையாட்டையும், தமிழர்களின் ஆகக் கூடிய நேரத்தை எடுத்துக்கொள்ளும் முதன்மை நேர நிகழ்ச்சிகளை- குறிப்பாகப் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளை பார்த்துவிடுவதைத் தவிர்ப்பதில்லை. நேரலையாகப் பார்க்கத் தவறினால் மறு ஒளிபரப்பிலாவது பார்த்துவிடுவேன். இப்போது அவற்றுக்கான செயலிகள் வந்தபின் நேரலையாகத் தான் பார்க்க வேண்டும் என்பதில்லை.இந்த ஆண்டில் இந்தியாவில் நடந்த உலகக்கோப்பை (50 ஓவர்கள்) போட்டியின் இறுதிப்போட்டியை நேரலையாகப் பார்க்கவில்லை. அதேபோல் நேற்று நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேரலை நிகழ்ச்சியையும் பார்க்கவில்லை, இப்போது பார்த்து முடித்துவிட்டேன்.
எனது கணிப்பின்படி இறுதிச்சுற்றுக்கு வந்து முதலிடத்தைப் பெற்று 50 லட்சத்தைப் பெற்றிருக்க வேண்டியவர் பூர்ணிமா ரவி.ஆனால் அவர் இடையிலேயே பணப்பெட்டியை - 16 லட்சம் - வரை உயர்த்தப்பெற்ற நிலையில் அதனை எடுத்துக்கொண்டு வெளியேறிவிட்டார். அதற்குப் பிறகு அந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் சுவாரசியம் குறைந்துவிட்டது என்றுகூட சொல்லலாம். பிக்பாஸ் நிகழ்ச்சியின் போக்கில் என்னவெல்லாம் செய்யலாம்; எப்படி விளையாண்டால் ஒவ்வொரு வாரமும் வெளியேற்றப்படாமல் இருக்க வாய்ப்புண்டு என்பதைத் திட்டமிட்டுக் கொண்டு செயல்பட்டார் என்றாலும், அவரளவில் அவர் மீது நம்பிக்கை இல்லை என்ற மனநிலையையும் வெளிப்படுத்தினார். அந்த மனநிலை காரணமாகவே இடையில் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு வெளியேறினார்.

இறுதிச்சுற்றுவரை வந்து முதலிடம் பெற்றுள்ள அர்ச்சனா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த காலகட்டத்தில் நல்திறக்கட்டமைப்பு கொண்ட நாடகத்தனத்தை உருவாக்கிக் கொண்டு அவர் மீது கவனம் தொடரும்படி பார்த்துக்கொண்டார். ஆரம்பத்திலேயே அனாதையாக்கப்பட்ட ஒருவரின் நிலையை உருவாக்கி அழுகையும் சோகமும் வெளிப்பட, இயல்பாகவே உள்ளே இருந்த மூத்தவர்களின் நட்பையும் ஆதரவையும் பெற்றார். அதன் பிறகும் மோதலும் அதிர்ச்சியும் கழிவிரக்கமும், ரகசியங்களும் கொண்டதான பங்கேற்புகளோடு கடைசிவரை வந்து வெற்றிக்கனியைப் பறித்துப் பெருந்தொகையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். 100 நாட்கள் ஓடிய வெற்றிப்படம் முடிந்துவிட்டது.




பிக்பாஸ் - உள்ளுறை நினைவுகளைத் தூண்டுதல்



நவம்பர் 27, 2023

உள்ளுறையும் நினைவுகள் ( EMOTIONAL MEMORIES) என்றொரு கலைச்சொல்லைப் பிக்பாஸ் நிகழ்ச்சியின் பின்னால் இருக்கும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் அறிந்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன். நேரடியாக அதனைக் கற்றவர்களாக இல்லையென்றாலும், நடிப்புப் பயிற்சிகள் பற்றிய பொது அறிதலில் அந்தச் சொல்லைக் கேள்விப்பட்டிருக்கலாம். அந்தச் சொல்லைக்கேள்விப்படாமலே கூடப் பயன்படுத்தியிருக்கலாம்.
நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் அறிந்திருக்காவிட்டாலும், நடிகர் கமல்ஹாசன் நிச்சயம் அறிந்திருப்பார் என்ற நம்பிக்கை எனக்குண்டு. இந்த நம்பிக்கையில் நேற்றைய அவரது உரையில்- உரையாடலில் அந்தக் கலைச்சொல்லையும், அதனை உருவாக்கிப் பயன்படுத்திய ஸ்டானிஸ்லாவ்ஸ்கியையும் குறிப்பிடுவார் என்றும் எதிர்பார்த்தேன். ஆனால் அது நடக்கவில்லை.

இந்தப் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் உள்ளுறையும் நினைவுகளைக் கடந்த வார நிகழ்ச்சியில் பயன்படுத்தினார்கள். அந்தப் பயன்பாடு பங்கேற்பாளர்களிடமும் பார்வையாளர்களிடமும் நல்ல தாக்கத்தையும் வரவேற்பையும் பெற்றுத் தந்தது. அதன் மூலம் இந்தப் பருவத்தின் பங்கேற்பாளர்களில் சிலருக்கு இந்த வாரம் மறக்கமுடியாத வாரமாக மாறியிருக்கும். அந்தப் பயிற்சியை மேற்கொண்ட விசித்ரா, தினேஷ், விஷ்ணு, மாயா கிருஷ்ணன், மணிச்சந்திரா, பிராவோ, பூர்ணிமா ஆகியோர் மீது கூடுதல் கவனம் விழுந்திருக்கும்.

நிகழ்ச்சியை விவரித்து நட த்தும் கமல்ஹாசனிடம் அவர்களுக்குப் பாராட்டு கிடைத்தது. குறிப்பாக 20 ஆண்டுகளுக்கு முன் தான் சந்தித்த பாலியல் துன்புறுத்தலை முன்னிட்டுச் சினிமாவிலிருந்து விலகியிருந்ததாகச் சொன்ன விசித்ராவின் ஆழ்நிலை நினைவுக்காகவும், மனதிலும் உடலிலும் பதிந்த வடுக்களை விவரித்த பிராவோவின் விவரணைக்காகவும் கமல்ஹாசன் வெகுவாகப் பாராட்டினார். இதுபோன்ற நினைவுகளைச் சொல்வதற்கான தைரியம் உருவானதைச் சுட்டிக்காட்டவும் செய்தார். அவரிடம் பாராட்டுப் பெற்ற பிராவோவுக்கு அதிகப்படியான வாக்குகள் கிடைக்கவில்லை என்பது தனியாக விவாதிக்க வேண்டிய ஒன்று.


எமோசனல் மெமரி என ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் ஆழ்நிலை நினைவுகளை மேலே கொண்டுவரும் பயிற்சிக்குப் பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்கள் சொன்ன பெயர், “உங்கள் வாழ்க்கையின் பூகம்ப நிகழ்வு” என்பது. தனது வாழ்க்கையில் நடந்த பூகம்ப நிகழ்வைச் சொல்லும் – ஆழ்நிலை நினைவைச் சொல்லத் தொடங்கிய முதல் போட்டியாளர் விசித்ரா. திரைத்துறை வாழ்க்கையில் ஒரு நடிகைக்கு நடப்பதற்குச் சாத்தியமான ஒரு நிகழ்வைக் கச்சிதமாக வடிவமைத்து, விவரிக்கும்போது அதுவரை அவர் வெளிப்படுத்திய உடல்மொழியையும் குரலையும் மாற்றிப் பேசியதின் மூலம் அவர் சொன்ன நிகழ்வின் காலத்துக்குப் பிக்பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களை அழைத்துச்சென்றார். அவரோடு சேர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த பார்வையாளர்களும் ஒன்றி நின்றிருக்கத் தூண்டியிருக்கும். பெரும்பாலும் பாத்திரங்களின் துயரநிகழ்வுகளை மேடையிலோ, காமிரா முன்போ கொண்டுவர முடியாமல் தவிக்கும் நடிப்புக்கலைஞர்களிடம் அந்தத் துயரக்காட்சியை ஒத்த நிகழ்வொன்றை நினைவூட்டி, நடிக்க வேண்டிய பாத்திரத்தோடு ஒன்றச் செய்வது இயக்குநர்கள் செய்யும் உத்தி.

அந்த உத்தியின் சாயலில் பூகம்ப நிகழ்வாகப் பிக்பாஸில் பயிற்சி செய்தார்கள். தான் தரப்போகும் போட்டிகளைச் சொல்லிவிட்டு அந்தப் போட்டிகளில் வெற்றி பெறவில்லை என்றால், கொத்தாக - கூட்டமாகப் போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்ற அதிர்ச்சியைப் போட்டியின் முடிவாக அறிவித்துக் கூடுதல் கவனத்தைக் கொண்டுவரும்படி தூண்டப்பட்டது. போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் வெளியேறும் பட்டியலில் இடம்பெறக்கூடாது என்ற நோக்கத்தில் ஆர்வத்துடன் பங்கேற்றார்கள். எளிதான பூகம்பப்போட்டிகளை வெளியிலிருந்து அளித்த பிக்பாஸ், அவரவர் வாழ்க்கையில் நடந்த பூகம்ப நினைவுகளை வெளியில் சொல்லலாம் என்ற வாய்ப்பை உருவாக்கித் தந்தார். அதனைத் தொடங்கி வைத்த விசித்ரா விவரித்த துயர நினைவைப் போலவே ஒவ்வொருவரும் அவரவருக்கு நேர்ந்த துயர நிகழ்வுகளை மேலே கொண்டு வந்து வழங்கிப் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் புதுப் பரிமாணத்தை உண்டாக்கினார்கள். அதிலும் மாயாவும் பூர்ணிமாவும் மட்டும் வழக்கம்போலத் தங்களைச் சாகசக்காரர்களாக முன்வைக்க நினைத்து விலகி நின்றார்கள்.

*****

நடிகர்களிடமிருந்து நடிப்பைக் கொண்டு வருவதற்கான பயிற்சிகளை உருவாக்கி, கோட்பாட்டைத் தந்த முதன்மையான ஆளுமைகளுள் தலைமை ஆசிரியர் ரஷ்ய நாட்டின் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி. அவரது நடிப்புப்பயிற்சிகளைக் குறிக்கும் கலைச்சொல் முறையியல் நடிப்பு ( METHOD ACTING ) என அழைக்கப்படும். அவரது நூல்கள், நடப்பியல் வகை நடிகர்களுக்கான பயிற்சிப்புத்தகம். அம்முறையியலில் குறிப்பிட்ட வகையான நடிப்பு வரவில்லை என்றால், அதனைக் கொண்டுவருவதற்குப் பயன்படும் அந்த உத்திக்கு ஸ்டானிஸ்லாவ்ஸ்கி சொன்ன கலைச்சொல் தான் ஆழ்நிலை நினைவுத் தூண்டல். அவர் காலத்தில் நாடக நடிகர்களுக்காகவே அந்தப் பயிற்சியை வடிவமைத்துத் தந்தார். நாடகத்தில் இருக்கும் நிகழ்வுகளை ஒத்த நிகழ்ச்சிகள் நடிகர்களின் வாழ்க்கையில் நடந்திருக்கிறதா எனத் தேடிக் கண்டுபிடித்து, ஆழ்நிலையில் இருக்கும் - அந்த நினைவுகளை- மேல் நிலைக்குக் கொண்டுவந்து காட்சியோடு பொருந்தச் செய்யும் உத்தி அது. அந்த உத்தியில் நன்மையும் உண்டு; சிக்கலும் உண்டு. ஆனால் நல்லதொரு பயிற்சி அது.


********

நடிகர்களுக்கான நடிப்புப் பயிற்சியில் இன்றும் முதன்மை ஆசிரியராக இருப்பவர் ரஷ்யநாட்டு அரங்கியலாளர் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி (STANISLAVSKY). தாள லயம் அல்லது ஒலியின் படிநிலைகள் வழியாகவே பயிற்சிகளை மேற்கொண்ட பாரம்பரிய நடிகர்களைத் தவிர்த்து விட்டு மனிதர்களின் அறிவுசார் சாத்தியங்களை முதன்மைப்படுத்திய நவீனத்துவத் தன்மையோடு நடிப்பதற்கான பயிற்சிகளை முழுமையாகப் பேசியவர் ஸ்டானிஸ் லாவ்ஸ்கி தான். நவீன ரஷ்ய அரங்கியலின் முதன்மையானவரும் முன்னோடியுமான கான்ஸ்டண்டின் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி (1863-1938) உருவாக்கிய நடிப்புப் பயிற்சிகள் இன்றளவும் உலக நாடகப் பள்ளிகளில் படிக்கப்படுகின்றன. நடிப்பு முறைமைகள் என்றாலே உலகம் முழுமையும் ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் நடிப்பு முறைமைகள் (System of Acting) என்றே புரிந்து கொள்ளப்படும். நாடகக்காரர்கள் மட்டுமல்லாமல் திரைப்படக்காரர்களும் அவரது நடிப்பு முறைகளையே அடிப்படைப் பயிற்சியாகக் கொள்கின்றனர். ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் முறைமைகள் நடப்பியலோடு நெருங்கிய தொடர்புடையன. அந்த அடிப்படையின் மேல் தான் பின்னர் வந்த பிரக்டின் விலகி நிற்கும் நடிப்பு, அர்த்தோவின் அபத்த நடிப்பு போன்றனவும் உருவாகின.

1981 இல் மதுரைப்பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் பட்டமேற்படிப்பு மாணவனாகச் சேர்ந்தேன். அங்கே பணியாற்றிய மு.ராமசுவாமி நிஜநாடக இயக்கம் என்னும் நவீன நாடகக்குழுவை நடத்தி வந்தார். அக்குழுவோடு எனது நண்பர் த.பரசுராமன் இணைந்து செயல்பட்டு வந்தார். அவர் வழியாக நானும் அக்குழுவில் இணைந்து நடிகனாகவும் பின்னரங்க வேலையிலும் ஈடுபட்டேன். அந்த அனுபவத்தில் புதுவைப்பல்கலைக்கழக நாடகத்துறையில் விரிவுரையாளர் பணி கிடைத்தது. அப்பணியில் 1989 ஜூலை முதல் தேதியில் இணைந்து 1997 பிப்ரவரி வரை பணியாற்றினேன். இந்தப் 17 ஆண்டுக்காலத்தை எனது நாடக விருப்பக்காலம் எனச் சொல்லலாம். அப்போது தமிழ்நாடகங்கள், இந்திய நாடகங்கள், உலக நாடகங்கள் என வாசித்தேன். நாடகப்பனுவல்களாகவும், அரங்கியல் முறைகளாகவும் கோட்பாடுகளாகவும் அவற்றைப் புரிந்துகொண்டேன். நாடக விருப்பம் ஏற்பட்ட முதல் ஆண்டிலேயே எனக்கு ஸ்டானிஸ்லாவ்ஸ்கி அறிமுகம். அந்தப் பெயரையும் அவரது முறையியலையும் கற்பித்தவர் பேரா.சே.ராமானுஜன். அதனால் தான் சொல்கிறேன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்தப் பகுதி ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் உள்ளுறை நினைவுகளைத் தூண்டுவது என்று..

கமலென்னும் கட்டியங்காரன்


முன்குறிப்புகளோடு ஒவ்வொரு பாத்திரத்தையும் காட்டி, அவர்களின் முன்னடையாளங்களோடு தொடர்புடைய ஆட்டம்பாட்டம் கொண்டாட்டமெனக் கலக்கியெடுத்து உருவாக்கப்பட்ட ஆரம்பம் புதுநிகழ்ச்சிக்கான ஆரம்பம் என்ற அளவில்தான் ஈர்த்தது. அந்தத் தொடக்கம், அடுத்தடுத்த வாரங்களில் நடந்த சின்னச்சின்ன நிகழ்வுகள் வழியாக நல்திற நாடகத்தின் முடிச்சாக(Conflict) மாறியது. அம்முடிச்சுக்குப்பின்னால் பிரிந்துநின்ற அணிச்சேர்க்கை ஒருகுடும்பத்திற்குள் பிரிந்துநிற்கும் பங்காளிகள் அல்லது உறவுகள் என்பதைத்தாண்டியது.
குடும்ப உறுப்பினர்களின் அடையாளமாகப் பார்க்கப்படாமல், தமிழ்நாட்டின் சமூகப் பிரிவுகளின் அடையாளங்களாக மாறின. அந்த மாற்றத்தை நிகழ்வின் வெளியேற்ற விதி சிதைத்துக்கொண்டே இருக்கிறது. அச்சிதைவு நல்திற நாடகக் கட்டமைப்பையும் சேர்த்தே சிதைக்கும் திறன்கொண்டதாக இருக்கிறது. அதன்மூலம் நடப்பியலுக்குப் பின்னான நவீனத்துவப் போக்குகளான குறியீட்டியல், அபத்தவியல், மிகையதார்த்தக் கூறுகள் கொண்டதாக நகரும்போது ஓவியாவின் வெளியேற்றம் முதன்மையான சிக்கலாக (Crisis) மாற்றியது. கடைசிவரை இருந்து வெற்றிக்கனியைப் பறிக்கும் ஓரணியின் தலைமைப்பாத்திரமாக - நாயகப்பாத்திரமாக மாறிய ஓவியாவின் வெளியேற்றம் ஒருவிதத்தில் உச்சக்காட்சி(Climax ) போல் மாறியுள்ளது. இனி முடிவுதான் என்று நினைத்துவிட முடியாது. ஏனென்றால் இன்னும் பாதிக்கும் மேலான நாட்கள் இருக்கின்றன. அதனால் உச்சநிலைக்காட்சிக்குப் பின்னான இன்னும்சில உச்சநிலைக்காட்சிகள் உருவாக்கப்படலாம். அதன்மூலம் நவீனத்துவ நாடகம் என்பதைத் தாண்டிப் பின் நவீனத்துவ வெளிப்பாட்டிற்குள்ளும் நுழையலாம். அப்படியான நுழைவு- காலத்தைக் கவனத்தைக் கொள்ளும் ஒன்றாக- அமையும். அதற்கான குறிப்புகளைக் காட்டியிருக்கிறார் நிகழ்வின் கட்டியங்காரனாகச் செயல்படும் கமல்ஹாசன்.

கமல்ஹாசனின் கட்டியங்காரத்திறன் கச்சிதமாகவும் எதிர்பார்ப்புக்கு அதிகமாகவும் வெளிப்பட்டது. தெற்காசிய நாடுகளின் மரபு அரங்குகளின் மையமான கூறு அது. சம்ஸ்க்ருதச் செவ்வியல் நாடகத்தில் விதூஷகன் என அழைக்கப்படும் அந்தப் பாத்திரத்தின் பரிமாணங்கள் பலவிதமானவை. கிரேக்கச் செவ்வியல் நாடகங்களில் குழுவினரின்(Chorus) செயல்பாட்டிலும் அந்தக் கூறுகள் உண்டு. இதன் கலவையான குணத்தைச் சேக்ஸ்பியரின் நாடகங்களிலும் பார்க்கமுடியும். குறிப்பாக அவரது லியர் அரசனில் (King Lear ) உள்ள முட்டாள்(Fool) பாத்திரம் ஆகச் சிறந்த பாத்திரம். முட்டாள் என்பவன் வெறும் முட்டாளல்ல. லியர் அரசனின் இன்னொரு பிரதி. அவரது தவறை - வீழ்ச்சியைப் புரிந்துகொண்ட பிம்பம். தேர்ந்த நடிகராக அறியப்பெற்ற கமல்ஹாசன் ஆகக்கூடிய நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் வெளிப்பட்டார் நேற்று. கமல்ஹாசனின் வெளிப்பாடு லியர் அரசனின் முட்டாளையும் விஞ்சி நின்றது.


பிக்பாஸ்: பார்ப்பதும் பங்கேற்பதும்
 
பிக்பாஸ் ஒளிபரப்பாகும் அதே நேரத்தில் பார்க்க முடியவில்லையென்றாலும் பார்த்துவிடுகிறேன். அதைவிடவும், அந்நிகழ்ச்சி குறித்துத் தொடர்ந்து பதிவுகள் போடும் முகநூல் பதிவர்களின் பதிவுகளை வாசிப்பதிலும் விருப்பத்தோடு இருக்கிறேன். எனது நட்புப்பட்டியலில் இருக்கும் நாலாயிரத்துச் சொச்சம் பேரில் பிக்பாஸ் பற்றி எழுதுபவர்கள் 400 -க்கும் குறைவாகவே இருப்பார்கள் என்றே நினைக்கிறேன். எப்போதாவது ஒன்றிரண்டு பதிவுகள் போடுபவர்களில் பலர் எதிர்மறையாக பிக்பாஸை அணுகுகின்றனர். ஆனால் தொடர்ந்து எழுதுபவர்கள் அதன் ஆதரவாளர்களாகவே இருக்கிறார்கள்.
ஆரம்பத்தில் என்னை ஈர்த்த பதிவு எழுதியவர் சரவண கார்த்திகேயேன். அவரை வாசிக்கத் தொடங்கி, நவீன்குமார், சுரேஷ்கண்ணன், சாருநிவேதிதா எனத் தொடர்ந்தது. இப்போது பின்வரும் பக்கங்களில் பிக்பாஸ் பற்றிய பதிவுகளைத் தொடர்ந்து வாசிக்கிறேன். இவர்களைத் தவிர அங்கங்கே எழுதுபவர்களையும் வாசிக்கிறேன். தமிழ்நாட்டில் குறிப்பிட்ட வகைமாதிரிப்பார்வையாளர்களால் பார்க்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியும் முக்கியம்; அதனை தீவிரமாக ஆதரிக்கும் மனிதர்களின் குரல்களும் எதிர்மறைக்குரல்களும் கவனிக்கப்படவேண்டியவை. எல்லாவற்றையும் இணைத்துப் பேசுவதே ஊடகங்கள் உருவாக்கும் பண்பாட்டுருவாக்கம் பற்றிய பார்வையாக இருக்கும். பிக்பாஸிலிருந்து ஒவ்வொருவராக வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் பிக்பாஸின் ஆதரவாளர்கள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறார்கள் என்பது அதன் இயங்கியலாக இருக்கிறது. தொடர்ந்து பார்க்கலாம். எழுதுவதைப் படிக்கலாம்.
**********************


பிக்பாஸ்: உள்ளிருப்பின் காரணங்கள்






விஜய்தொலைக்காட்சியின் “பெருந்தல” – பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் அனிதா சம்பத் வெளியேறியுள்ளார். அவரது வெளியேற்றத்தைச் சமூக ஊடகங்களில் இயங்குபவர்கள் வெளியேற்றப்பட்டார் என்றே நம்புகின்றனர். அனிதா வெளியேற்றம் மட்டுமல்ல; இதற்கு முன்பு அர்ச்சனா, சனம்ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோரின் வெளியேற்றங்களின் போதும்கூட இதுபோலவே கருத்துகள் வெளிவந்தன. ரேகா, வேல்முருகன், சுஜித்ரா, ஜித்தன் ரமேஷ், நிஷா ஆகியோரின் வெளியேற்றங்களின்போது அப்படியான கருத்துகளால் நிரம்பவில்லை.

வாரம் ஒருவரை வெளியேற்றும் அமைப்புக் கொண்ட இந்த நிகழ்ச்சியில் தொடக்கத்தில் 16 பேர் நுழைகிறார்கள். பார்வையாளர்கள் அளிக்கும் விருப்ப வாக்குகளில் குறைவான எண்ணிக்கையாளர்களே வெளியேற்றப்படுகிறார்கள் என்பதாக அறிவிக்கப்பட்டு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அவரோடு உரையாடி வெளியே அனுப்புகிறார். அந்த வேலையைச் செய்யும் நடிகர் கமல்ஹாசனின் விருப்பமோ, அலைவரிசையின் நிர்வாகமோ அதில் நுழைவதில்லை என்றாலும், விதிவிலக்குகளும் உள்ளன. பொது நடைமுறையைப் பின்பற்றாத – சமூக ஒழுங்குக்குப் பங்கம் ஏற்படாத அளவில் உள்ளே இருந்து விளையாட வேண்டும். அதனை மீறினால் நிர்வாகம் திடீர் முடிவெடுத்தும் வெளியேற்றும். அப்படி ஒவ்வொரு தடவையும் ஓரிருவர் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இந்த முறை அப்படி யாரும் வெளியேற்றப்படவில்லை. சில வாரங்களுக்குப் பின் புது நுழைவும், கடைசியில் மறு நுழைவும்கூட உண்டு. எல்லா நுழைவுகளும் வெளியேற்றங்களும் நிகழ்ச்சியின் பொழுதுபோக்குத் தன்மையை அதிகரிக்கவே என்பது வெளிப்படையானவை. இந்த உரிமை அவர்களுக்கு இருப்பதால் வெளியேற்றங்கள் ஒவ்வொன்றிலும் அவர்களது கணக்கும் விருப்பமும் இருக்கும் எனப் பலரும் கருதுகின்றனர்.

பார்வையாளர் பங்கேற்பை அதிகரித்துத் தங்களின் பார்வையாளர்களாக அவர்களை நீட்டிக்க பொழுதுபோக்கு அலைவரிசைகள் நடத்தும் போட்டித்தன்மை விளையாட்டுகளில் ஒன்றாக இருக்கும் பிக்பாஸ் உலகம் முழுவதும் நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சி. வெவ்வேறு துறைகளில் இருக்கும் ஓரளவு பிரபலங்களை ஒன்றாக இருக்க வைத்து ஒவ்வொருவராக வெளியேற்றுவதைச் செய்கிறார்கள். ஆனால் இந்தியத் தொலைக்காட்சிப் பார்வையாளர்களுக்கு அதனை அறிமுகம் செய்துள்ள ஸ்டார் குழுமம் திரைப்படம், தொலைக்காட்சி ஊடகங்களை மட்டுமே நிகழ்த்துநர்களாக உள்ளே அனுப்புகிறது.

விஜய் தொலைக்காட்சியின் பெருந்தல – பிக்பாஸ்- 100 நாள் கொண்டாட்ட நிகழ்வு. 2017 இல் ஆரம்பிக்கப்பட்ட முதல் பருவம் தொடங்கி நான்காம் பருவம் வரை பெரிய அளவு மாற்றங்கள் இல்லாத கட்டமைப்புடன் நிகழ்த்தப்படுகிறது. முதல் மூன்று ஆண்டுகளில் ஜூனில் தொடங்கி அக்டோபரில் நிறைவடைந்த நிகழ்ச்சி, இந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கியிருக்கிறது. காரணம் கரோனா போட்ட தடைகள். தொடர்ச்சியாகப் படப்பிடிப்பு நடத்த இருந்த தடைக்காலம் முடிந்தபின் தொடங்கி, முன்னெச்சரிக்கை மருத்துவம், தனித்திருத்தல், சமூக இடைவெளி போன்றன கடைப்பிடிக்கப்பட்டு நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்புத் தளங்களைத் தாண்டி விளையாட்டு மைதானம், அரசியல் மேடைகள், திருவிழாக்காட்சிகள் போன்றன மட்டுமே நேரடிக் காணொளிகளாக ஒளிபரப்பப்படும். அவற்றிலும் கூட விளம்பரங்கள் வரும்போது நடப்பனவற்றைத் திருப்புக்காட்சியாகவே காட்டுவார்கள். இவையல்லாத உண்மைநிகழ்வுகள் என்பன படப்பிடிப்பு நேரத்தில் எவ்வளவு பகுதிகள் காட்டப்படும் என்பது காட்சியின் படத்தொகுப்பாளரின் கற்பனைக்கும் திறமைக்கும் உரியது.

ஆறுமணி நேரம் நடந்த நீயா நானாவை 60 நிமிட ஒளிபரப்பாகப் பார்த்திருக்கிறேன். இரண்டு மணி நேர நேர்காணலை 30 நிமிடங்களில் சுருக்கித் தந்ததையும் கேட்டிருக்கிறேன். பெருந்தலை 24 மணிநேரத்தை நிலை நிறுத்தப்பட்ட ஒளிப்பதிவுக்கருவிகள் வழியாகப் பதிவுசெய்யப்பட்டு 60 நிமிட நிகழ்ச்சியாகத் தரும் ஒரு சுருக்கப்பட்ட வடிவம். அதில் உண்மையான கால அளவும், உணர்வுப்பெருக்கமும் வெளிப்படவில்லை எனச் சொல்வதும் சந்தேகப்படுவதும் தேவையற்றது. உண்மைத்தன்மையைக் கொண்டுவர முயல்கிறார்கள் என்பது மட்டுமே அதன் இலக்கு. அதன் இலக்குப்பார்வையாளர்களும் அதனையே எதிர்பார்க்கிறார்கள்.

வாரக்கடைசி நிகழ்ச்சிபோல குறிப்பிட்ட பருவ நிகழ்ச்சி. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் உரிப்பொருள் அடிப்படையிலும் பங்கேற்கும் பாத்திரங்களின் அடிப்படையிலும் இலக்குப்பார்வையாளர்கள் அமைவார்கள். நிகழ்வின் காலத்தை வைத்து அந்நிகழ்வைப் புனைவு நிகழ்வு எனவும் புனைவல்லாத நேரடி நிகழ்ச்சி எனவும் வகைப்படுத்திப் பார்க்கிறார்கள் பார்வையாளர்கள். 24 மணிமுழுமையான புனைவாகவும் இல்லாமல், நிகழ்வின் இலக்குப்பார்வையாளர்கள் பதின்பருவத்தைத் தாண்டிய இளையோரும் நடுவயதினரும். இதுகல்லூரி விடுமுறைக்கால வழக்கமாகக்க் கோடை விடுமுறையையொட்டி ‘பெருந்தல’யில் வெளியேற்றக் நிகழ்வுகள் தொடங்கிவிட்டன. முதல் ஒருமாத காலத்திற்குக் கூட்டம் குறையாமல் பார்த்துக் கொள்ளும்விதமாக ஒரு நுழைவும் ஒரு வெளியேற்றமும் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. புதுக்கதாபாத்திரங்களின் நுழைவு உள்ளே இருப்பவர்களுக்குக் கூடுதல் எச்சரிக்கையை உண்டாக்கவல்லன. பார்வையாளர்களுக்கு நிகழ்ச்சியின் வீச்சு பெரிய அளவுக்குப் போய்க் கொண்டிருக்கிறது என்ற பாவனையைத் தரவல்லது.

பெருந்தலை - 4 இல் அதிகமும் அறியப்படாத முகங்கள் உள்ளே நுழைந்திருப்பதால் விதம்விதமாக அறிமுகப் படலங்கள் நடந்தன/நடக்கின்றன. நுழையும்போது அதிகமும் விவரிக்கப்படாதநிலையில் முதல்வாரக் கடைசியில் ஒவ்வொருவரும் அவரவர் கதையைச் சொல்லும் காட்சிகள் இடம் பெற்றன. தன்வரலாற்றைச் சொல்லுதலில் தன்னிரக்கமும் கையறுநிலையும் பார்வையாளர்களிடம் அதிக ஈர்ப்பை உண்டாக்கும் என்பதற்காகக் கடந்தகாலச் சோகநிகழ்வுகளை அதிகம் சொல்லி அழுகையுணர்வுகளை மிகுவிப்பது நடந்தது. மிகக் குறைவானவர்களே உண்மையைச் சொல்வதாகக் காட்டிக்கொண்டனர். . வருவிக்கப்பட்ட அழுகையும் சோகமும் அந்த நேரத்தில் பரிதாப உணர்வை உண்டாக்கக் கூடும். ஆனால் மிகைப்படுத்தாத விவரிப்பும் உண்மையைச் சொல்கிறார் என்ற தோற்றமும் ஒரு பாத்திரத்தின் மீது நம்பகத்தன்மையை உண்டாக்கும். உள்ளே இருந்த 16 பேரில் இளையோர்களான ஷிவானி, கேப்ரில்லா, ஆஜிப் ஆகியோர் அதிகமும் அலட்டிக்கொள்ளாமல் தங்களின் கடந்த காலத்தைச் சொன்னார்கள்.

இந்த நான்கு ஆண்டுகளில் பெருந்தல நிகழ்ச்சிக்கான வீட்டிற்குள் அனுப்பபட்டவர்களில் பாதிக்கும் மேலே நிகழ்ச்சியை நடத்தும் நேரடியாக விஜய் தொலைக்காட்சியோடு தொடர்புடையவர்கள் என்ற பேச்சு உண்டு. அவர்களைக் கடைசிவரை உள்ளே இருக்க வைக்கும் முயற்சிகளைச் செய்கிறார்கள் என்ற பேச்சும் உள்ளது. அவர்களில் அத்தொலைக்காட்சியின் வாரக்கடைசிப் போட்டி நிகழ்ச்சிகளின் பங்கேற்பாளர்களாகவோ, நிகழ்ச்சியின் பின்னரங்கத் திறனாளர்களில் ஒருவராகவோ, தொடர்களில் ஒரு நடிப்புக் கலைஞராகவோ இருந்து சிறிய அறிமுகம் பெற்றவர்களுக்குக் கூடுதல் அறிமுகத்தை வழங்குகிறது என்றொரு பேச்சு இருக்கிறது. இந்த ஆண்டும் அதேதான் நிலை ரம்யா பாண்டியன், ரியோ. கேப்ரி, ஆஜித், அர்ச்சனா, ரேகா, அறந்தாங்கி நிஷா, அத்தோடு விளம்பரங்கள், தொலைக்காட்சி, சேவை வானொலிகள், என வெகுமக்கள் ஊடகங்களில் வாய்ப்புகளைப் பெற்றவர்களும் நடித்து முடித்து ஓய்வுபெற்ற திரைப்பட நடிக நடிகையர்களும் கூடுதல் வாய்ப்புக்காகக் காத்திருக்கும் புதுமுகங்களும் எனக் குறிப்பிட்ட துறையினரே அதன் பங்கேற்பாளர்கள்.

நகரவாசிகளில் பலபேருக்குக்கு அந்த விளையாட்டுக் கருவி அறிமுகம் தான். வட்டப் பாதையின் உள்ளே நுழையும் குண்டுகளின் பாதையின் – ஆங்கிலத்தில் லேப்ரிந்த் (Labyrinth) எனக் குறிப்பிடப்படும் விளையாட்டின் மாற்று வடிவம் இது. லேப்ரிந்த் என்பது கிரேக்கத்தொன்மம். அந்த விளையாட்டிடத்தைக் கட்டியவர் பெயர் டெட்லெஸ். அதற்குப்பின்னால் சில வதைகளும் சில கொலைகளும் உண்டு. அதைத்தாண்டியொரு காதல் கதையும் உண்டு. அதனை உள்வாங்கி உருவாக்கப்பட்ட விளையாட்டே லேப்ரிந்த. அந்தக் கருவியின் விலைக்கேற்ப் பெரிதாகவும் வட்டங்களின் எண்ணிக்கை கூடுதலாகவும் இருக்கும். குறிப்பிட்ட எண்ணிக்கையில் குண்டுகள் போடப்பட்டு மூடப்பட்டிருக்கும். ஒவ்வொரு பாதையிலும் ஒரு குண்டு நுழையும் விதமாக ஒரு திறப்பு இருக்கும். சில வட்டங்களில் இரண்டு நுழைவுவாசல்கள் இருக்கும். ஒரு பக்கம் ஒன்று நுழையும்போது இன்னொரு வாசலில் ஒன்று வெளியேறும் வாய்ப்புகளும் உண்டு.

ஒரேயொரு குண்டை உள்ளே தள்ளும் லேப்ரிந்த் விளையாட்டை எனது பள்ளிப்பருவத்தில் விளையாடியிருக்கிறேன். ஆனால் அந்தக் கருவியை எனக்கு அறிமுகப்படுத்தியது எனது பெற்றோரோ உறவினர்களோ இல்லை. ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது விடுதி எனது அறையில் தங்கியிருந்த பத்துபேரில் ஒருவனாக வந்த கும்பகோணத்துக் கோடீஸ்வரன். விடுதிவாழ்க்கையிலும் அவனது குழந்தைத்தனம் கெட்டுப்போகாமல் பாதுகாக்கப் பலகருவிகளைக் கொடுத்து அனுப்பிய அவனது பெற்றோர் இந்தக் கருவியையும் கொடுத்து அனுப்பியிருந்தார்கள். அந்தக் கருவியை அறையின் வாசலில் அல்லது நடைபாதையின் தூணருகில் உட்கார்ந்து ஆட்டிக் கொண்டே இருப்பேன். மற்றவர்களுக்குத் தரமாட்டான்; விளையாடாதபோது ட்ரங்குப் பெட்டிக்குள் வைத்துப் பூட்டிவிடுவான். விளையாட்டு மைதானத்திற்கு வராமல் அந்தக் கருவியோடு முழுப்பொழுதையும் கழிக்கும் அவன். நல்ல குண்டாக இருப்பான். கும்பகோணம் குண்டு என்று தான் விடுதியில் அவனுக்குப் பட்டப்பெயர். அறையைச் சுத்தம்செய்யும் வேலையை அவனுக்குப் பதிலாகச் செய்து ஒருமுறை அந்தக் கருவியை வாங்கி விளையாண்டு பார்த்துவிட்டுத் திருப்பித் தந்தேன்.

லேப்ரிந்த் கருவியின் தொழில்நுட்பத்தை ஏறத்தாழக்கடைப்பிடிக்கும் பொழுதுபோக்கு விளையாட்டுதான் பெருந்தலை. ஒரேயொரு வித்தியாசம் இங்கே. அங்கே உள்நோக்கிய பயணம்; இதில் வெளியேறும் பயணம். உள்வட்டத்திற்குள் நுழைந்து கடைசி இடத்தில் நின்றுவிடும் குண்டு எது என்பது உறுதியாகத் தெரியாது. உள்ளே நுழைந்துவிட்ட நிலையில் திரும்பவும் வெளியே வர வாய்ப்புடைய விளையாட்டு அது. இதிலும் மறுபிரவேசம் உண்டு என்றாலும் எல்லாருக்கும் வாய்ப்பிருக்காது. அதிலும் தொலைக்காட்சி அலைவரிசையின் விருப்பமே முதன்மைக்காரணமாக இருக்கும்.

இந்த ஆண்டு தொலைக்காட்சி அலைவரிசை பார்வையாளர்களின் பொழுதுபோக்கை இரண்டாம் நிலையில் நினைப்பதுபோலத்தோன்றுகிறதோ என்று தோன்றுகிறது. உள்ளே இருக்கும்போது ஒரு மணி நேர நிகழ்ச்சியில் தனது விவாதங்கள், பங்கேற்புகள், சண்டைகள், தவறுகள் வழியாக க்கூடுதல் கூடுதல் உள்ளடக்கக் கூறுகளைத் தந்த பங்கேற்பாளர்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். சுரேஷ் சக்கரவர்த்தி, சனம் ஷெட்டி, அர்ச்சனா, அனிதா ஆகியோரின் செயல்கள் பங்கேற்பாளர்களின் பொதுப்புத்தியோடு முரண்படக்கூடியனவாக இருந்தன என்றாலும் பங்கேற்பைக் காத்திரமாக வெளிப்படுத்தியவர்கள். இவர்களோடு ஒப்பிட இன்னும் உள்ளே இருக்கும் ஷிவானி, ஷோம்சேகர், கேப்ரி, ஆஜித் ஆகியோரின் பங்களிப்புகள் குறைந்த அளவு போட்டியாகக் கூட இல்லை. ஆனால் ஆரி, ரியோ, பாலாஜி, ரம்யா பாண்டியன் ஆகியோரின் பங்களிப்பும் கூட வெளியேற்றப்பட்டவர்களின் பங்களிப்பைவிடவும் கூடுதல் தரமானவை அல்ல; தரமான சம்பவங்களை அவர்கள் உருவாக்கவில்லை. ஆனாலும் பார்வையாளர்களின் விருப்ப வாக்குகள் கிடைக்கவே செய்கின்றன. விஜய் தொலைக் காட்சியோடு தொடர்புடையவர்களின் உள்ளிருப்புக்கு அலைவரிசையின் தயவைத்தாண்டி அவர்கள் சமூக ஊடகச் செயல்பாடுகளும் காரணமாக இருக்க க்கூடும் எனத் தோன்றுகிறது. இங்கே வருவதற்கு முன்பே முகநூல், டிக்டாக், இன்ஸ்டாக்ராம் போன்றவற்றில் அவர்கள் பெற்றிருந்த தொடர்வாளர்களின் எண்ணிக்கையும் காரணமாக இருக்கலாம். இன்னும் மூன்று வாரங்களில் இன்னும் வித்தியாசமான வெளியேற்றங்களும் உள் நுழைவுகளும் கூட இருக்கலாம். பார்க்கலாம்; பார்ப்போம்.

மநுவின் இருப்பு: பிக்பாஸில் நேரடி நிகழ்வு


மநு ஸ்மிருதியின் கருத்துகளும் போதனைகளும் இப்போது நடைமுறையில் இல்லை; இப்போது யாரும் அதைப் பொருட்படுத்துவதில்லை என்று வாதிட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு நிகழ்கால நேரடி ஒளிபரப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சியைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பெருந்தல - பிக்பாஸ் -நிகழ்ச்சியில் நேற்று சிறப்பு நிகழ்ச்சி. மாலை 6.30 முதல் 10.30 வரை நான்கு மணி நேரமும் விஜய் தசமியை நிகழ்த்திக் காட்டினார்கள்.

சர்க்கரைப் பொங்கல் வைத்தல், சுண்டல் அவித்தல் , பூஜை செய்தல் என்பதில் தொடங்கி , முப்பெருந்தேவியர் கதை என நகர்ந்தது நிகழ்ச்சி. பின்னர் கிராமம் x நகரம் எனப் பிரித்துப் பேச்சுப் போட்டிகள், விளையாட்டுகள், பாட்டு, ஆட்டம் எனக் கொண்டாடி மகிழ்ந்தார்கள் உள்ளே இருக்கும் போட்டியாளர்கள். இரு அணியாகப் பிரிந்தது போக அனிதாவை நிகழ்ச்சித்தொகுப்பாளராக ஆக்கியிருந்தார்கள்.

நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குபவராக- வெளியில் அவர் செய்யும் தொலைக்காட்சிப் பணியை- அனிதா சம்பத் உள்ளேயும் செய்தார். கிராமம் x நகரம் என்ற வேறுபாடுகளையும் நம்பிக்கைகளையும் மனிதர்களின் இயல்புகளையும் பேசி முடித்தபின்பு, இதன் மீது தனக்கும் சில கருத்துகள் இருக்கின்றன என்று சொல்லிவிட்டு, கிராமத்தில் இன்னும் சாதியும் பெண்களின்மீதான பழைய கருத்துகளும் இன்னும் நடைமுறையில் இருக்கின்றன என்பதைத் தனது அனுபவமாகச் சொன்னார். கிராமப்புறங்களிலிருந்து நகரங்களுக்கு வேலைக்கு வருபவர்கள் சில மாதங்களுக்குத் தனியாகவும் மற்றவர்களோடு பேசாமல் அமைதியாகவும் இருப்பார்கள்; மெதுவாகத்தான் அடுத்தவர்களோடு இணைந்து வேலைசெய்யத் தொடங்குவார்கள் என்று சொல்லிவிட்டு, ‘ கிராமப்பகுதிகளில் வேலை பார்க்கும்போது, “ நீங்க என்ன ஆளுங்க” என்ற கேள்வியைத்தான் முதலில் கேட்பார்கள்; ஆனால் நகரத்தில் அப்படி யாரும் கேட்பதில்லை என்று ஒரு அனுபவத்தைச் சொன்னார். அந்த அனுபவம் ‘இப்பெல்லாம் யாருங்க சாதி பார்க்கிறாங்க’ என்பவர்களுக்கான பதிலாக இருந்தது. அந்தப் பேச்சுக்குப் பெரிய எதிர்வினையோ, முகச்சுளிப்போ மற்றவர்களிடம் இல்லை. ஆனால் அடுத்தவொரு அனுபவத்தைச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அங்கிருக்கும் நபர்களில் மூத்தவரான சுரேஷ் சக்கரவர்த்தியின் முகமும் உடலும் அடைந்த மாற்றங்களை அண்மைக்காட்சியாகக் காட்டியது காமிரா. தலையில் பெரிய இடியே விழுந்ததுபோல எண்வகை மெய்ப்பாடுகளையும் காட்டினார் அந்தப் பெரியவர்.

இப்போதும் விதவைப் பெண்களுக்கு மங்கல நிகழ்வுகளில் இடமில்லை; அவரது மகன், மகள் போன்ற ரத்த உறவு தொடர்பான திருமண நிகழ்வாகவே இருந்தாலும் ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். அப்படி நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியில் தான் முன்வந்து அப்படியெல்லாம் ஒதுங்கி இருக்கக் கூடாது என்று சொல்லிப் பங்கேற்க வைத்தேன் என்று விவரித்தார். விவரிக்கும்போது இறப்பு தொடர்பான சொற்களைச் சொல்லிவிட்டார் என்பது சுரேஷ் சக்கரவர்த்திக்கு அதிர்ச்சியைத் தந்துவிட்டது. விஜயதசமி போன்ற ஒரு மங்கல நிகழ்ச்சியில் மரணம், சாவு, இறப்பு போன்ற சொற்களைச் சொல்லலாமா? என்பதுதான் அவரது பெருங்கவலையாகிவிட்டது. நேரடியாக முகஞ்சுளித்த அந்தப் பெரியவர் அங்கிருக்கும் மற்ற போட்டியாளர்களிடம் - இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளக்கூடியவர்கள் என அவர் நினைத்த ஒவ்வொருவரிடம் சொல்லிக்கொண்டே இருந்தார். அவரது பட்டியலில் அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, ரியோ போன்றோர் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவராக அனிதாவிடம் பேசி அவரை மன்னிப்புக் கேட்க வைக்கும் சூழலை உருவாக்கினர். அவரும் மன்னிப்புக்கேட்கவே செய்தார். என்றாலும் அந்தப் பெரியவர் பிடிவாதமாக இருந்தார். அந்தப் பிடிவாதம் பிக்பாஸ் நிகழ்வின் போட்டிப் பொருள் - கண்டெண்ட் - என்று கூட நினைத்திருக்கலாம். அவரது கவலையின் பின்னணியில் அந்த நம்பிக்கையில் - மங்கல நிகழ்ச்சிகளில் விதவைகளை ஒதுக்கிவைப்பதில் என்ன தவறு? என்ற கேள்வி இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளவேண்டும். அந்த நம்பிக்கையை ஆழமாக வலியுறுத்திய அவருக்குத் தொலைக்காட்சியின் பார்வையாளர்கள் அதிக வாக்குகள் அளித்து காப்பாற்றுவார்கள் என்ற எண்ணம் கூட இருக்கலாம். உள்ளே இருப்பவர்களைப் போலத்தானே வெளியில் இருக்கும் பார்வையாளர்களும் இருப்பார்கள்.

செய்தி வாசிப்பாளராக இருந்து பெருந்தலயில் பங்கேற்கும் அனிதா சம்பத், ஊடகத்தில் இருந்ததால் தனக்குப் பலவற்றையும் குறித்துக் கருத்து இருக்கிறது; அதைப் பேசவந்தால் தடுத்துவிடுகிறார்கள் என நினைக்கிறார். தான்அதிகம் பேசுபவள் என உள்ளே இருப்பவர்கள் நினைக்கிறார்கள் என்பது அவரது வருத்தம்.

வெளியே அந்த நிகழ்ச்சியைக் குறித்து எழுதுபவர்களும் அப்படித்தான் நினைக்கிறார்கள். நுணலும் தன் வாயால் கெடும் என்பதுபோன்ற பழமொழிகளை அவரோடு பொருத்தி விமரிசனம் எழுதுபவர்களின் எண்ணம் பெண்கள் அதிகம் பேசக்கூடாது என்பதைத் தாண்டி வேறென்னவாக இருக்கும்?.


இதுவொரு புலப்பாட்டுக்கலை



60 நாட்களைத் தாண்டிய பெருந்தலை- பிக்பாஸ் - பங்கேற்பாளர்களின் இன்றைய பொறுப்புச் செயல் தங்களை முன்மொழிதல். இதுவரை தன்னை ஒரு பங்கேற்பாளராக எப்படி முன் வைத்தார்கள்; அதன் மூலம் பார்வையாளர்களை எப்படி மகிழ்ச்சிப் படுத்தினார்கள் எனச் சொல்லும்படி வலியுறுத்தப்பட்டது. பொதுவான செயல்பாடுகளான காலைவிழிப்பு, வீட்டின் வேலைகள், ஆடை அணிதல், மற்றவர்களோடு பழகுதல் என்பதில் அவரவர்களின் தனித்தன்மையான வெளிப்பாடு இருந்தால் கூடச் சொல்லியிருக்கலாம். ஜித்தன் ரமேஷ் தொடங்கி அஜீத், கேப்ரி, சோம்சேகர், ரம்யா, ஷிவானி, நிஷா எனத் தொடர்ந்தார்கள். இவர்கள் ஒருவரும் பெருந்தலையின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யவில்லை.

இந்தப் போக்கு எங்கும் நிறைந்த ஒன்றாக இருக்கிறது. முன்னறிவிப்பு இல்லாமல் ஊடகங்களில் பேசும் நபர்கள் இப்படித்தான் பேசுகிறார்கள். அவர்களின் பகுதியிலேயே முகவரி சொல்லத்தெரியாதவர்களை நீங்கள் சந்தித்திருக்கக்கூடும். தெரிந்த இடத்தைப் பற்றிக்கூடக் குறிப்பாகச் சொல்லாமல் விலகிப் போய்விடுகிறார்கள். தங்களுக்குத் தெரிந்த தனித்திறன் நபர்களை அடையாளப்படுத்திச் சொல்லாமல் பொத்தாம் பொதுவாகப் பேசும் இந்தப் போக்கு கல்விப்புலங்களில் ஆசிரியர்களிடமும் மாணவர்களிடமும் காணப்படுகிறது. தேர்வுத்தாளில் எழுதப்படும் விடைகளில் கூட இந்தப் பொத்தாம் பொதுவான வெளிப்பாட்டுமுறையே காணப்படுகிறது. ஆனால் குடிமைத்தேர்வு போன்ற சிறப்புத்தேர்வுகளில் இப்படிப் பொத்தாம் பொதுவாக எழுதுவது தவிர்க்கப்படுகிறது. எழுப்பப்படும் வினாக்களே குறிப்பான விடைகளை எதிர்பார்ப்பதாகவே இருக்கும்.

குறிப்பாக ஒன்றைவிரிக்கவேண்டும்; அதைப்போலப் பலவற்றை அடுக்கிக் காட்ட வேண்டும்; ஆழமாக விளக்கவேண்டும்; விவாதிக்கவேண்டும்; அதன் மூலம் தங்களின் சொல்லாடல் திறனைக் காட்டவேண்டும்; தங்கள் அறிவைப் புலப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் செயல்படுவதாகத் தெரியவில்லை, பேச்சின் வழியே வெளிக்காட்டவேண்டிய புலப்பாட்டு நெறியின் குறைபாட்டை இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி வெளிச்சம்போட்டுக் காட்டி விட்டது. நாளை மற்றவர்களும் இப்படியே தான் தொடர்வார்களா அல்லது ஊடகப் பேச்சு, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு, சிறப்புப் பயிற்சி அளித்த அனுபவம் கொண்டவர்களான அனிதா, அர்ச்சனா, ஆரி, பாலா, சனம்ஷெட்டி, ரியோ போன்றவர்கள் வேறுபடக்கூடும்.

விஜய் தொலைக்காட்சியின் பெருந்தலை நிகழ்ச்சியை விட்டுவிடுவோம். புலப்பாட்டு நெறி என்பதைக் கொஞ்சம் விளங்கிக்கொள்ளலாம். புலப்படுத்தும் நெறியை ஒரு கலையாக வலியுறுத்தியவர் அரிஸ்டாடில். ஒன்றை வலியுறுத்திச் சொல்லும் கலை. அதற்கெனத் தனியான இலக்கண வரையறைகளும் தர்க்கமும் உண்டு. குறிப்பிட்ட ஒரு சூழலில் தனியொருவரிடமோ திரளான மக்களிடமோ சொல்வதற்குப் பயன்படுத்தும் சொல்லாட்சித்திறன் என ஒரு வரையறையைத் தரலாம் என்றாலும் வெறும் சொல்லாட்சி மட்டுமே புலப்பாட்டு நெறி அல்ல. காட்சிப்படுத்துதல், உணர்வூட்டித் தன்வசப்படுத்துதல், மொழிநடையின் செம்மை போன்றனவும் ஒருவரது புலப்பாட்டு நெறியைக் கட்டமைக்க க்கூடியன. அதனால் பேச்சுமொழியோடு உடல் மொழியும் புலப்பாட்டு நெறியில் வினையாற்றக் கூடியன.
தனது புலப்பாட்டுக் கலையை வளர்த்தெடுக்க நினைப்பவர்களுக்கு பலவிதமான சொற்களையும் கூறுகளையும் தருகிறது தொல்காப்பியம். உடல் மொழிக்காக அது தரும் கலைச்சொல் மெய்ப்பாடு. தர்க்கப்பார்வைக்காக அது சொல்லும் கலைச்சொற்கள் முன்னம் மற்றும் நோக்கு. மொழிப்பயன்பாட்டில் இசைத்தன்மையை உருவாக்கத் தொல்காப்பியர் தரும் முதன்மையான கலைச்சொல் வண்ணம். வண்ணம் என்ற சொல்லை இன்று நிறங்களோடு தொடர்புடைய சொல்லாகப் பயன்படுத்துகிறோம். ஆனால் தொல்காப்பியர் காலத்தில் வண்ணம் என்பது ஓசையொழுங்கு. பாக்களில் இடம் பெற்ற வண்ணங்களை 20 வகையாகப் பிரித்துப் பேசுகிறது தொல்காப்பியச் செய்யுளியல். இவையெல்லாம் கலந்து உருவானதே நடையியல். புனைகதையின் வரவிற்குப் பின் மொழிநடையாக மாறியிருக்கிறது. எழுத்துப் பனுவல்களில் மொழிநடையாகச் சுருக்கப்பட்ட கலைச்சொல்லின் இன்னொரு வடிவமாகப் புலப்பாட்டு நெறியைச் சொல்லலாம். பேச்சுக்கலையையும் நடிப்புக்கலையையும் தங்களின் வெளிப்பாட்டுக்கருவியாக நினைப்பவர்கள் புலப்பாட்டுத் திறனை வளர்த்துக்கொள்ளலாம். எழுத்துக்கலையை தங்கள் வெளிப்பாட்டுக் கருவியாக நினைப்பவர்கள் நடையியலில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தக் கவிதையை (புறம் 45 )எழுதியவர் கோவூர்கிழான்.

இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்;
கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்!
நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே; நின்னொடு
பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே;
ஒருவீர் தோற்பினும், தோற்ப நும் குடியே;
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால்,
குடிப்பொருள் அன்று, நும் செய்தி; கொடித்தேர்
நும்மோர் அன்ன வேந்தர்க்கு
மெய்ம்மலி உவகை செய்யும், இவ் இகலே!

இக்கவிதையில் வெளிப்படுவது ஓர் உறுதிப்பொருள். நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி என்ற இருவர் மோதிக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள். இவ்விருவரும் சகோதரர்கள் அல்லது பங்காளிகள் என்பதை அந்தக் குடிப்பெயரே தெரிவிக்கிறது. ஒரே குடியில் பிறந்த இருவரும் மோதுவதால் என்ன நிகழ்வும் என்பது அவருக்குத் தெரியும். அந்த மோதலைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு போரின் விளைவொன்றை உறுதியாகச் சொல்லிவிட்டி ஒதுங்கிக் கொள்கிறார் கவி கோவூர் கிழான். அந்த உறுதிப்பொருளை உருவாக்க முதல் இரண்டு அடியில் இருக்கும் சொல்லாட்சி அல்லன். அடுத்தடுத்து வரும் அன்றே, அன்றே என்னும் ஏகார ஈற்றுச் சொல். ஏற்று மோதலை நிறுத்தவில்லை என்றால் குடிகெடும் என்பதையும் உறுதியாகச் சொல்ல இன்னொரு ஏகார ஈற்றுச் சொல்லால் முடிக்கிறார் கவிதையை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்