சேவாலயத்தோடு சில நினைவுகள்


சீடு அமைப்பின் மார்கழிக்கொண்டாட்டத்தின் ஒரு நிகழ்வாகப் பிரபாகர் இயக்கிய ‘மனைவியர் பள்ளி’ நாடகம் (மோலியரின் மூலத்தைத் தழுவிய நாடகம்)  ஷெனாய் நகரில் இருக்கும் சேவாலய வளாகத்தில் நடக்கிறது என்பதைக் கூகுள் வரைபடத்தோடு அனுப்பி வைத்தனர் பிரபாகரும் கார்த்திக்கும்.  பழைய அண்ணா பேருந்து நிலையம் வழியாகச் செல்லும் நகரப்பேருந்தில் ஏறினால் ஷெனாய் நகரில் இறங்கிக் கொள்ளலாம். 

 திருமங்கலத்திலிருந்து மதுரையின் எல்லாப் பேருந்து நிலையங்களுக்கும் நேரடியாகச் செல்லும் பேருந்துகள் இருக்கின்றன. அண்ணா பேருந்து நிலையம் இப்போது திரும்பு நிலையமாக இல்லை; எல்லாப் பேருந்துகளும் அதனைத் தாண்டி மாட்டுத்தாவணி, கலைஞர் நகர், அண்ணா நகர் என்று போகின்றன.  சாதாரணப் பேருந்து அல்லாமல் குறைவான நிறுத்தங்கள் கொண்ட பேருந்துகள், குளிரூட்டப்பட்ட நகரப்பேருந்துகள் எல்லாம் மதுரையில் ஓடுகின்றன. மதுரைக்குள் ஓடும் நகரப்பேருந்தில் நீண்ட தூரம் செல்லும் பயணத்தை அண்மையில் செய்யவில்லை. அதனால்   சாதாரணக் கட்டணத்தில் எல்லா நிறுத்தங்களிலும் நின்று போகும் பேருந்தில் ஏறினேன். அந்தப் பேருந்து திருமங்கலத்திலிருந்து கிளம்பி ஓடத்தொடங்கியபின் ஒவ்வொரு நிறுத்தத்திற்கும் அறிவிப்பு இருந்தது. மறவன் குளம் தொடங்கி, பெரியாஸ்பத்திரி வரை ஒவ்வொரு நிறுத்தத்தின் பெயரையும் கேட்டுக் கொண்டே பயணம் செய்த நேரம் 70 நிமிடங்கள். ஒரு கிலோமீட்டரைக் கடக்க 3 நிமிடங்கள் ஆனது.

மாணவப்பருவக் காலத்தில் அந்த ஷெனாய் நகர்ப் பகுதியில் சுற்றித் திரிந்திருக்கிறேன். சாலையில் இருக்கும் பலகையில் நகர் என்று இருந்தாலும், அப்போது இந்தப் பகுதி நகரமல்ல; நகர்ப்புறச்சேரி. வைகையின் வடகரை ஓரக்குடிசைப்பகுதி. சேவாலயத்திற்கும் மாணவப்பருவத்தில் சென்றிருக்கிறேன். அமெரிக்கன் கல்லூரியின் மாணவர் தொண்டுத் திட்டத்தின், நாட்டுப்பணித்திட்டத்தின் செயல்பாடுகள் நடக்கும் பகுதிகளில் அதுவும் ஒன்று. மார்கழிக் கொண்டாட்ட நிகழ்வு தொடங்குவதற்கு முன்பாகவே சென்று, அந்தப் பகுதியைப் பார்க்கலாம் என்று ஒருமணி நேரம் முன்னதாகவே சென்றேன்.

பேருந்திலிருந்து இறங்கியவுடன் ஷெனாய் நகர் பேருந்து நிறுத்தத்தின் அருகில் அமெரிக்கன் கல்லூரிக்கு உருவாக்கப்பட்ட புதிய வாசல் கண்ணில் பட்டது. அந்த வாசல் திரும்பவும் கல்லூரிக்கால நினைவுக்குள் நகர்த்தியது. அதன் வழியாக நுழைந்தால் புதுமுக வகுப்பு மாணவர்களுக்காக இருந்த ஜம்புரோ விடுதிக்குப் போகுமாம். இப்போது ஜம்புரோ விடுதி மாணவர்களுக்காக இல்லை. வேறுவிதமான பயன்பாட்டில் இருக்கிறது. கல்லூரிக்கு எனது காலத்தில் ஒரேயொரு வாசல் தான். அது மேற்கே கோரிப்பாளையம் பக்கம் இருக்கும். அனைவரும் அதன் வழியாகவே நுழையமுடியும்; வெளியேறவேண்டும். உயர்ந்து நிற்கும் சுற்றுச்சுவரோடு பாதுகாப்பாக இருக்கும் கல்லூரி வளாகம் அது.

நெடுமாறனும் நெடுமாறனும்

சேவாலய வளாகத்திற்குள் நுழைந்தபோது நாடகக்குழு ஒத்திகைகளைக் குறிப்புகளாகச் செய்து கொண்டிருந்தார்கள். வசனங்கள் பேசாமல் நிற்பதும் மனதிற்குள் சொல்லிக்கொண்டே நகர்வதும், அரங்கப்பொருட்களை மாற்றுவதும் காட்சிகள் மாற்றுவதும் என குறிப்புகளால் ஆன ஒத்திகை நடக்கும். சேவாலய வளாகத்தைச் சுற்றி வந்து நின்றபோது அவரும் அவரது மனைவியும் வந்தார்கள். நாடகம் தொடங்குவதாகச் சொல்லியிருந்த 6.30 க்கு அரைமணி நேரம் முன்பாக வந்துவிட்டார். வகுப்பு தொடங்குவதற்கு முன்பு வாசலில் நின்று கொண்டிருக்கும் ஆசிரியர்களில் அவரும் ஒருவர். கல்லூரியின் மணியோசை அடிக்கத்தொடங்கும்போது வகுப்பறையில் நுழைந்து 54 நிமிடங்கள் மாணவர்களோடு உரையும் உரையாடலுமாக நிகழ்த்திவிட்டு வெளியேறும் ஆசிரியர் நெடுமாறன். ஆங்கிலத்துறை ஆசிரியர். ஆங்கிலத்தில் பேசும் அதே தொனியிலும் உணர்ச்சிகரமாகவும் தமிழிலும் பேசக்கூடியவர். கல்லூரி மாணவர் பேரவையின் ஆலோசகராக இருந்தவர் அவர்தான் . நான் அப்போது புதுமுக வகுப்பு மாணவன்
நெடுமாறனைப் பார்த்தவுடன் அமெரிக்கன் கல்லூரிக்குள் நுழைந்த ஆண்டும் (1975 ) மாணவர் பேரவை தொடக்கவிழாவிற்கு கலைஞர் மு.கருணாநிதி வந்ததும் நினைவுக்கு வந்தது. அப்போது கலைஞர் தமிழகத்தின் முதல்வர். ஆனால் ஒன்றிய அரசும், தலைமை அமைச்சர் இந்திரா காந்தியும் எதிரியாக நினைத்துக்கொண்டிருந்த நேரம். பொதுமேடைகளில் அரசியல் பேசுவதைக் கண்காணித்துக்கொண்டிருந்த அவசரநிலை ஆட்சி நடந்துகொண்டிருந்தது. அதனால் தனி அரங்குகளில் நடக்கும் திருமண விழாக்களிலும் கல்லூரி நிகழ்ச்சிகளிலும் குறியீடாகவும் அங்கதமாகவும் அரசியல் பேசிக் கொண்டிருந்தார் கலைஞர்.
விழாவிற்கான வரவேற்புரையை நிகழ்த்தியவர் நெடுமாறன். ஏனென்றால் அவர்தான் மாணவர் பேரவையின் ஆசிரிய ஆலோசகர். முதல்வர் எம்.ஏ.தங்கராஜின் உரைக்குப் பின் சிறப்புரையைத் தொடங்கிய கலைஞர் "மதுரையில் நெடுமாறனே என்னை வரவேற்ற பின்னர் எனக்கென்ன கவலை?" என்று தொடங்கினார். கலைஞரின் பேச்சில் இடம்பெற்ற இன்னொரு நெடுமாறன் ப.நெடுமாறன். இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டவுடன் பேரா. இரா. நெடுமாறனுக்குப் பெரிய மகிழ்ச்சி; பக்கத்தில் இருந்த அவரது மனைவிக்கு அதைவிடக் கூடுதல் மகிழ்ச்சி. அவரோடு நாடகம் தொடங்கும் வரை அமெரிக்கன் கல்லூரி நினைவுக்குள் இருந்த எனக்கும் மகிழ்ச்சிதான். அப்போது அவர் சொன்னார் :IT IS NOT AN INSTITUTION; IT IS AN IDEA. ‘ ஆமாம். ‘அமெரிக்கன் கல்லூரி என்பது ஒரு கருத்து; அது பரவிக்கொண்டே இருக்கிறது..

1970 களில் ப.நெடுமாறனென அழைக்கப்பட்டவர் இப்போது பழ. நெடுமாறன் எனப் பெயர் மாற்றத்தோடு அரசியல் நிலைப்பாடுகளிலும் மாறியிருக்கிறார். காங்கிரஸின் தமிழ்நாட்டுக்கிளையின் முக்கிய தலைவர்களில் ஒருவராக - இந்திரா காந்தியின் நம்பிக்கைக்குரிய தமிழ்நாட்டுத் தலைவராக இருந்தார். மதுரைக்கு வந்த இந்திரா காந்திக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டிய திராவிட முன்னேற்றக் கழகத்தினர் அவரைத் தடிகொண்டு தாக்கக்கூடும் என உத்தேசித்து, அவரைச் சுற்றி அரண் அமைத்துக் காப்பாற்றியதால் ’மாவீரன் நெடுமாறன்; எனப் பட்டம் சூட்டிக்கொண்டவர். பின்னர் தேசியத்தைக் கைவிட்டுத் தமிழ்த்தேசியம் பேசும் ஒரு வட்டாரக்கட்சியை ஆரம்பித்தார். விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளராகவும், உலகத் தமிழ்த்தேசியத்தின் அடையாளமாகவும் கட்டமைக்கப்பட்ட ஆளுமை. அந்த மதுரைக்காரரின் அரசியல் எனக்கு மட்டுமல்ல; மதுரைக்காரர்கள் பலராலும் ஏற்றுக் கொள்ளப்படாத அரசியல் தான். மதுரையில் சொந்தச் செல்வாக்கால் ஒரு தேர்தலிலும் வெற்றி பெற முடியாத ஆளுமை. அரசியல் நோக்கங்களும் எண்ணங்களும் மாறியதுபோல் பின்னர் பழ.நெடுமாறனாகவும் மாறினார்.
இரா. நெடுமாறனைப் பார்த்துப் பழ. நெடுமாறனை நினைத்துக் கொண்டபோது நிகழ்வு தொடங்க அரைமணி நேரத்தாமதம் மறந்துவிட்டது.

2024- முதல் வாசிப்புக்கான நூல்

நாடகம் பார்க்கப்போன என்னை நாடகம் தொடங்கும் முன்பு மேடையேற்றி, துண்டுபோர்த்திக் கைதட்டல் வாங்கித்தந்து தொடர்ந்து நாடகங்களின் பார்வையாளனாக இருக்கக்கூடாது; நாடகங்களை எழுதித்தர வேண்டும்; இயக்கித்தர வேண்டும் எனச் சொல்லி அனுப்பியதாக உணர்ந்தேன். மேடையேறிய எனக்கு ஒரு நினைவுப்பரிசும் வழங்கினார். அது தேவிபாரதியின் நீர்வழிப்படூஉம். அண்மையில் சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்ட நாவல். விருது அறிவிக்கப்படும் முன்பே வாசித்த எழுத்துகள் உண்டு. இந்த ஆண்டு சாகித்ய அகாதெமி விருதுபெற்றுள்ள ‘நீர்வழிப்படூஉம்’ இன்னும் வாசிக்கப்படவில்லை. ஆனால் 2024 இல் முதலில் வாசிக்கப்பட வேண்டிய நாவலாக அதையே நினைத்திருந்தேன். சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வாங்க வேண்டும் என்றும் நினைத்திருந்த எனக்கு. நாவலை மேடையில் வழங்கி உடனே படிக்கும்படி சொல்லி விட்டார்கள் சீடு அமைப்பின் தொண்டர்கள்.
2024 இல் முதலில் தேவி பாரதி நாவலை வாசிக்கவேண்டும்; எழுதவேண்டும். மாதம் ஒரு நாவல் வாசிப்பதை விமரிசித்தாக வேண்டும் என்ற உறுதிமொழி எனக்குள் ஓடத்தொடங்கியது. என்னோடு மேடையேறிய செயல்பாட்டாளர் அரிஅரவேலன் யரலவழள அவர்களுக்கும் ஒரு செய்தி இருக்கவே செய்திருக்கும். மனைவியர் பள்ளி நாடகம் பற்றி நிதானமாக எழுதவேண்டும்.நாளை அல்லது மறுநாள் எழுதிவிடலாம். நன்றி சீடு தொண்டர்களுக்கும் கார்த்திக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்