அ.ராமசாமி -புதுச்சேரி- கி.ராஜநாராயணன் -3


30
ஒரு இடத்தை அதன் பூர்வீகத்தோடும் மனிதர்களின் நிகழ்கால இருப்போடும் சேர்த்து வைத்துப் புரிந்துகொள்ள வேண்டும் என்று எப்போதும் நினைப்பவர் கி.ரா. அவரோட புனைகதைகளில் இந்தக்கூறு தூக்கலாவே இருக்கும். ‘என்னோட கதைகள் இட த்தெ எழுதிக்காட்டுதா? இடத்திலெ இருக்கிறெ மனுசங்களெ எழுதிக்காட்டுதான்னு உறுதியாச் சொல்ல முடியாது’ என்று ஒருமுறை சொன்னார். பாண்டிச்சேரிக்கு வந்தபிறகு அந்த ஊரைப் பற்றிப் பலரிடமும் கேட்டுத் தெரிந்துகொள்வதில் காட்டிய ஆர்வத்தைப் பின்னர் நேரில் பார்த்துத் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதிலும் காட்டினார்.

பிரபஞ்சனின் வீடு புதுச்சேரி ரயில்வே ஸ்டேசன் பக்கம் இருக்கு என்று சொன்னபோது, ‘அது ஸ்வெல்தாக்களோட ஏரியா’ன்னு சொல்றாங்களே? என்றார். சொல்லிவிட்டு. ‘ பிரபஞ்சனோட அப்பா காங்கிரஸ்காரர்; கள்ளுக்கடை ஒழிப்புப் போராட்டத்தில தன்னோட தென்னந்தோப்பெ அப்படியே வெட்டிச் சாய்ச்ச தீவிரவாதியின்னு கேள்விப்பட்டிருக்கேன்; அதனாலெ அவரு ஸ்வொல்தாவா இருக்க வாய்ப்பில்லை. ஆனா அவங்கெ சொந்தக்காரங்க யாராவது இருப்பாங்க .. ’ என்றார் கி.ரா.

பாண்டிச்சேரியின் பழைய நகர எல்லைக்குள் மூன்றுவகையான வீடுகள் உண்டு. கடற்கரைச்சாலை தென் -வடல் சாலை. ஒரு கிலோமீட்டர் நீளத்திற்குத் தென்வடலாகப் போகும் அந்தப் பெரிய சாலைக்கிணையாக நான்கு சாலைகள் தென்வடலாகவே போகும். பெரும்பாலும் பிரெஞ்சுப்பெயர்களைக் கொண்ட அந்தச் சாலைகளில் இருக்கும் கட்டடங்கள் பிரெஞ்சுப் பாணிக்கட்டடங்கள். உயரம் கூடிய விதானங்களும் சாளரங்களும் மென்மஞ்சளும் வெண்மையுமான வண்ணங்களும் அதன் அடையாளங்கள். பிரான்சில் இருக்கும் உணர்வைத் தரக்கூடிய கட்டடங்களோடு சாலைகளும் மனிதர்களும்… அந்தப் பகுதிக்குள் கூடுதல் சத்தமும் இரைச்சலும் இருக்கும் ஒரே பகுதி பாரதியார் பூங்காவும் அதனைச் சுற்றி இருக்கும் சட்டசபை, கவர்னர் மாளிகை, வணிக அவை, காந்தி திடல் பகுதிகள் தான். மற்ற பகுதிகளில் பிரெஞ்சுக் கல்விநிலையங்கள், தூதரக அலுவலகங்கள், பிரெஞ்சுக்காரர்கள் இப்போதும் வந்து தங்கிச்செல்லும் வில்லாக்கள் என அமைதி தவழும் இடங்கள். வெள்ளை நகரம் என அழைக்கப்படும் அந்தப் பகுதியைப் பிரிப்பதுபோல ஒரு கால்வாய் ஒன்று தென்வடலாக ஓடும்.

கால்வாய்க்கு மேற்கே இருக்கும் சாலைகள் பூர்வீகப் பாண்டிச்சேரிக்காரர்கள் வாழும் தெருக்களைக் கொண்டது. எல்லாச்சாலைகளும் கடற்கரையை நோக்கிச் செல்லும் விதமாகக் கிழக்கு மேற்காக நீளும் தன்மை கொண்டவை. ஒவ்வொரு சாலையும் ஒருவழிப்பாதையாக அமைக்கப்பட்ட நகரம். நகரத்திற்குள் பேருந்து,லாரி போன்ற கனரக வாகனங்கள் நுழைந்துவிட முடியாது. சந்தைக்கும் கடைகளுக்கும் தேவையான காய்கறிகள், மீன்கள், சரக்குகளை இறக்கும் கனரக வாகனங்கள் இரவுநேரத்தில் வந்து இறக்கிவிட்டுச் செல்லும் விதமாகப் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் உண்டு. கிழமேலாக இருக்கும் சாலைகளுக்கு இணையாக ரயிலடியில் தொடங்கி ஒரு சதுரத்தில் சின்னச்சின்னத் தெருக்களில் இரட்டைக்குடியுரிமை கொண்ட ஸ்வொல்தாக்களின் வீடுகள் உண்டு. அந்தப் பகுதியில் இருப்பவர்கள் இன்னும் பிரெஞ்சுக்குடியுரிமை பெற்றவர்கள். அவர்களின் முன்னோர் பிரெஞ்சு ராணுவத்தில் பணியாற்றி அங்கேயே தங்கியிருப்பார்கள். அவர்களின் வாரிசுகள் தங்களைப் பிரெஞ்சுக்குடிகளாகக் கருதிக் கொள்வதில் பெருமைகொள்பவர்கள். அந்த குடும்பத்தில் பெண்ணெடுத்துத் திருமணம் செய்துகொள்ளும் ஒருவர் இப்போதும் பிரெஞ்சுக் குடியுரிமை பெற்று பிரான்ஸுக்குப் போய்விடலாம். அந்த வசதியைப் பெற்றவர்களேயே ஸ்வொல்தாக்கள் என்று அழைப்பார்கள்.

கி.ரா.வருவதற்கு முன்பே நான் புதுச்சேரிக்குப் போயிருந்தாலும் இந்த விவரங்களையெல்லாம் அவர் வாயிலாகவே நான் அறிந்தேன். அவரைச் சந்திக்க வருபவர்களிடம் கேட்டுக்கொண்ட தகவல்களைப் பார்த்துத் தெரிந்துகொண்ட ஆர்வத்தில் அதையெல்லாம் பார்க்க வேண்டும் என்ற நினைப்பில் என்னை அழைத்துக் கொண்டு அவ்வப்போது போவார்.

தொடக்கத்தில் நானும் கி.ரா.வும் தங்கியிருந்த முத்தியால் பேட்டை கடலோரம் இருக்கும் பகுதி. நேராகக்கடல் நோக்கி நடந்தால் வைத்திக்குப்பம் என்ற மீனவர் குடியிருப்புகள் வழியாகக் கடலுக்குப் போகலாம். ஆனால் அங்கே நடக்க முடியாது. நல்ல காற்றும் கிடைக்காது. கடல்கரையைத் திறந்த வெளிக்கழிப்பறையாகப் பயன்படுத்துவார்கள் மீனவர்கள் . அத்தோடு புதுச்சேரி டிஸ்ட்லரிஸின் சாராயக்கழிவும் கடலில் கலந்து நாற்றம் மூக்கைத் துளைக்கும். அதனைத் தாண்டி மக்கள் நடப்பதற்காகப் பெரும்பெரும் கற்களைக் கொட்டித் தடுப்புகளை உண்டாக்கிக் கடலைத் தடுத்திருப்பார்கள்.

புதுவைத் தலைமைச்செயலகம் தொடங்கி பிரெஞ்சுக் குவர்னர் ட்யூப்ளே சிலை இருக்கும் சிறிய பூங்கா வரை ஒருகிலோ மீட்டர் நீளத்திற்குத் தளக்கற்கள் பதித்திருக்கும். இடையில் ஆஜானுபாகுவாக மகாத்மா காந்தி சிலையாக நிற்பார். முத்தியால் பேட்டையிலிருந்து கடற்கரைக்கு நடந்தே போய்விடுவோம். நான் தினசரி காலை வேக நடைக்காகப் போவேன். சில நாட்கள் கி.ரா.வும் வருவார்.அவர் வந்தால் வேகநடை கிடையாது. மென்னடைதான். நடை பாதை தொடங்கும் தலைமைச்செயலகப்பகுதியில் இருக்கும் பூங்காவில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார். புதுச்சேரிக்கு வரும் ஐரோப்பியர்கள் கடற்கரைக்கு வருவதும் காலையில் தான். அலைவந்து மோதும் பாறைகளின் மீது அமர்ந்து யோகா செய்யும் ஐரோப்பிய ஆண்களும் பெண்களும் காலையைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். யோக நிலையிலிருப்பவர்களில் பெரும்பாலோர் தவம்செய்ய வந்த சந்நியாசிகள் போலத் தான் இருப்பார்கள். கடலுக்குள்ளிருந்து சூரியன் செக்கச்சிவந்த பந்தாய் மிதந்து வருவதற்கு முன்பே வந்து அமர்ந்துவிடுவார்கள்.

கடற்கரைச் சாலையிலிருந்து மேற்கு நோக்கிப் போகும் ஒரு சாலையில் மூன்று நிமிடம் நடந்தால் அரவிந்தர் ஆசிரமம் போய்விடலாம். அதற்கு நேரே இருக்கும் வீதியில் தான் மணக்குள விநாயகர் ஆலயம் இருக்கிறது. இந்தப் பகுதியில் தானே பாரதியும் வ.வே.சு. அய்யரும் சுற்றித்திரிந்திருப்பார்கள் என்று ஆரம்பித்துக் கடந்த காலத்திற்குள் அழைத்துப் போய்த் திரும்பக்கொண்டுவருவார் கி.ரா.
 
31

எனக்கு எதையும் நேரடியாகச் சொல்லியே பழக்கம். இலக்கியம் மற்றும் கருத்தியல் சார்ந்த விவாதங்களை நேரடியாகச் சொல்லிவிடுவேன். அப்படிச் சொல்லிவிடுவது திறனாய்வாளனின் அடிப்படையான குணம் என்ற நம்பிக்கை எனக்கு இப்போதும் உண்டு. இந்தப் பழக்கத்தைக் கவனித்த கி.ரா., ஒருநாள், ‘ராம்சாமி.. நீங்க எதையும் பட்பட்டுன்னு போட்டு ஒடைக்கிறீங்க.. அப்படி ஒடைக்கிறதெ ஒங்க விமரிசனக்கட்டுரையிலெ வச்சிக்கோங்க.. நட்பு, பழக்கம், பக்கத்து வீட்டுக்காரங்க கூடப் பேசிப்பழகுறது போன்ற அன்றாட வாழ்க்கையிலெ அப்படியெல்லாம் பேசுறதெ விட்டுடுங்க” என்று ஒருமுறை உணர்த்தினார்;

இந்த யோசனையைச் சொன்னார் என்று நான் எழுதவில்லை. உணர்த்தினார் என்றே எழுதுகிறேன். அன்று அவர் உணர்த்திய ஆலோசனையை இப்போதும் பின்பற்ற முடியவில்லை என்பதுதான் வருத்தமாக இருக்கிறது. அவர் எதையும் நேரடியாகச் சொல்பவரில்லை. எனக்கு என்றில்லை; யார் ஒருவருக்கும் எந்தவிதமான யோசனையாக இருந்தாலும், ஆலோசனை சொல்வதாக இருந்தாலும் அதை நேரடியாகச் சொல்லமாட்டார். ஒருத்தர் சொல்லும் கருத்தில் உடன்பாடில்லை என்றால் கூட மறுப்பை உடனடியாகச் சொல்லி நான் பார்த்ததில்லை. எதற்கும் ஒரு கதை அல்லது சொலவடை அல்லது குறைந்த பட்சம் ஒரு சிரிப்பு என்பதாகவே ஆரம்பித்துப் பேசுவார். எதையும் ஆரம்பிப்பதற்குப் போடும் பீடிகையில் அவருக்கு முன்னால் அமர்ந்திருப்பவர்கள் அவரோடு இணைந்துகொள்வார்கள்; உடனே முரண்பட வேண்டும் என்று நினைக்கமாட்டார்கள். அவர் சொல்வதன் மேல் சிந்தித்துப் பதில் சொல்வார்கள். அப்படிச் சிந்தித்து நான் எனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக அன்று இப்படி ஆரம்பித்தார்:

‘நண்டு தின்னும் ஊரில் நடுப்பங்கு எனக்குன்னு ஒரு சொலவடை இருக்கு தெரியுமோ? ’ என்று ஆரம்பித்தார்.

“ஆமா.. கேள்விப்பட்டிருக்கேன்” என்றேன்.

‘கேள்விப்பட்டீங்க சரி; அதெ பயன்படுத்தனும்ல’ என்றார். எதற்கு இப்படிச் சொல்ல வருகிறார் என்பது முதலில் புரியவில்லை. அமைதியாக இருந்தேன். நான் அமைதியாக இருப்பதைப் பார்த்துப் பேசத்தொடங்கினார்.

‘பாண்டிச்சேரிக்காரங்க எம்.ஜி.ஆர் சினிமாவெல்லாம் எப்டி பார்த்தாங்கன்னு நமக்குத் தெரியாது. அந்தக் காலத்தில நாம இங்கெ இருக்கல்லெ. ஆனா அவரெ அரசியல்வாதியாப் பேசுற காலத்திலெ நாமெ இங்கெ வந்துட்டோம். நான் பார்த்த வரைக்கும் இங்கெ இருக்கிற ஒருத்தருக்கும் அரசியல்வாதி எம்.ஜி.ஆரைப் பிடிக்கவே இல்லெ. அதனாலெ அவரோட தனிமனித குணத்தெக் கூட இங்கெ இருக்கிறவங்க வெறுக்கவே செய்றாங்க. ’

“ஆமா.. திரும்பத்திரும்ப ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு ஓட்டுப்போடுது. ஆனா.. பாண்டிச்சேரிக்காரங்க.. மறந்தும் எம். ஜி. ஆர். கட்சிக்கு ஓட்டுப்போடத் தயங்குறதெ பாத்திருக்கேன்… ”

‘எப்படிப் போடுவாங்க.. எம்.ஜி.ஆர். பாண்டிச்சேரிக்காரங்க அடிமடியிலெயே கைவச்சாருல்ல; அதெ எப்படி மறப்பாங்க..’

“எம்.ஜி.ஆர். பாண்டிச்சேரியெ தமிழ்நாட்டோட சேர்த்துடலாம்னு மொரார்ஜி தேசாய்க்குக் கடிதம் எழுதினதெச் சொல்றீங்களா..? அப்படிக் கடிதம் எழுதினது எனக்கு உடன்பாடுதான். பாண்டிச்சேரியெ யூனியன் பிரதேசமா வச்சிருக்கிறதுல இருக்கிற நடைமுறைச் சிக்கலைச் சரியாப் புரிஞ்சவர் எம்ஜிஆர் தான். பாண்டிச்சேரியோட ஒரு பகுதி ஆந்திராவுக்குள்ள இருக்கு. ஏனாம் ஒரு முனிசிபாலிட்டி அளவுகூடக் கிடையாது. கேரளாவுக்குள்ள இருக்கிற மாஹே ஒரு ஊராட்சி அளவுக்குக்கூட இருக்காது. அதே மாதிரி காரைக்கால் பகுதி தனியா கெடக்கு. பாண்டிச்சேரிக்கும் காரைக்காலுக்கும் இடையிலேயே 4 மணி நேரப் பேருந்து ஓட்டம். ஏனத்துக்கும் மாஹேக்கும் ஒருநாள் ஓட்டம். இப்படியெல்லாம் வச்சிக்கிட்டு நிர்வாகம் எப்படி நடத்துறது?. இதெச் சரியாப் புரிஞ்சதுனால தான் எம்.ஜி.ஆர். இந்த நாலு பகுதிகளையும் அந்தந்த மாநிலங்களோட சேர்த்துடலாம்னு சொன்னார்” என்று எம்.ஜி.ஆரின் நின்று போன திட்டத்தெப் பாராட்டிச் சொன்னேன்.

‘ ஏன்கிட்டெ சொல்ற இதெ சங்கதியெ பாண்டிச்சேரிக்காரங்க இருக்கிற கூட்டத்திலயும் நீங்க சொன்னீங்க. அதெ நான் கேட்டுக்கிட்டு இருந்தேன். அப்பவே அது நிறுத்துங்கன்னு சொல்ல நினைச்சேன். ஆனா சொல்லல. ஏன்னா ஒருத்தரோட பேச்சு இடையிலெ மறிச்சு நிறுத்துறது என்னோட வழக்கமில்லை. ஆனா இந்தப் பழமொழியெ அப்பவே உங்கெகிட்ட சொன்னேன். என்றார். தொடர்ந்து, ‘எம் ஜி ஆர் சொன்ன திட்டம் நல்ல திட்டம்தான். எனக்கும் கூட அது சரின்னுதான் தோணுது. செலவுக் குறைப்பு,மக்களுக்கும் அரசாங்கத்துக்குமிடையேயுள்ள தூரம் குறைவு, நிர்வாகம் இப்படியெல்லாம் யோசிச்சா பாண்டிச்சேரியெ ஒரு தனிமாவட்டமாவும், காரைக்காலெ நாகப்பட்டினம் மாவட்டத்தில ஒரு தாலுகாவாகவும் ஆக்கிடலாம். மாஹேயெ கேரளாவிலயும் ஏனத்தெ ஆந்திராவுலயும் சேர்த்துடலாம். ஆனா. நான் இப்போ அதெ சரின்னு எடுத்து வச்சிப் பேச மாட்டேன். ஏன்னா. அந்தத் திட்த்தெக் கடுமையா பாண்டிச்சேரிக்காரங்க எதிர்த்தாங்க; தெருவில இறங்கிப் போராடுனாங்க. அது அவங்களுக்கு பிரெஞ்சுக்காரங்க கொடுத்த உரிமை; அதெ விட்டுத்தரமுடியாதுன்னு சொன்னாங்க. அன்னிக்கு மட்டுமில்ல; இப்பவும் அப்படித்தான் நினைக்கிறாங்க. அது கூட்டத்தோட செண்டிமெண்ட். அதெப் புரிஞ்சிக் கிடணும்.அதுக்குப் பின்னாடி இங்கெ இருக்கிறவங்களுக்குக் கிடைக்கிற வரிச்சலுகை, வியாபார வாய்ப்பு, அரசாங்க உதவிகள்னு நிறைய இருக்கு என்று விளக்கிப் பேசினார்.

பிரெஞ்சுக்காரங்க குடுத்த உரிமையினால தமிழ்நாட்டுக்காரங்களெவிட ஒரு படி உசத்தின்னு பாண்டிச்சேரிக்காரங்க நெனக்கிறாங்க. அதெக் கேள்விக்குட்படுத்துற ஒருத்தரையும் இவங்களுக்குப் பிடிக்காது. அவங்களெ வெளியூர்க்காரன் என்று திட்டுவாங்க; முடிஞ்சா வெளியேறுன்னு சொல்வாங்க. அதனால தான் எதையும் எடம்பொருள் ஏவல் பார்த்துப் பேசணும்னு சொல்றேன். அந்தத் திட்டம் நடக்காமப் போயி 20 வருஷம் ஓடிப்போச்சு. அப்போ காட்டின கோபத்தெ இன்னும் குறைச்சிக்கல பாண்டிச்சேரிக்காரங்க. அவங்க கிட்டப் போயி எம்ஜிஆரு நல்லவரு;வல்லவரு; பாண்டிச்சேரியெத் தமிழ்நாட்டோட இணைக்க நெனச்சது நல்ல நிர்வாகியோட யோசனையின்னு சொன்னா உங்களெ எப்படா இங்கிருந்து விரெட்டலாம்னுதான் பாப்பாங்க என்று விளக்கினார்.

அந்த விளக்கத்துக்குப் பின்னர் தான் எனக்கு ‘ நண்டு தின்னும் ஊரில் நடுப்பங்கு எனக்குன்னு சொல்லணும்’ என்ற சொலவடை புரிய ஆரம்பித்தது.

32

புதுச்சேரியை விட்டுவிட்டு திருநெல்வேலிக்குப் போகப்போகிறேன் என்று சொன்னபோது சிறிதாக அதிர்ச்சியைக் காட்டினார் கி.ரா. அவரது மனைவி கணவதி அம்மாளுக்குக் கூடுதல் அதிர்ச்சி இருந்தது. என் மனைவி விஜயலெட்சுமியோடு அவருக்கு இருந்த பிணைப்பு அப்படி. அவர்கள் இருவரும் பேசிக்கொள்ளும்போது கிராமத்தில் இருப்பதுபோலப் பேசிக்கொள்வார்கள். சமையல், பாண்டிச்சேரி பழக்கவழக்கம் என்பதைத்தாண்டிப் பல ரகசியங்களையும் பகிர்ந்துகொள்வார்கள். கி.ரா.வின் தபால் நிலைய வருகையின்போது அவர் வரமாட்டார். ஆனால் மாலை நடையில் வருவார். சில நேரங்களில் எங்கள் வீட்டில் வந்து அம்மாவை விட்டுவிட்டுக் கூட்டங்களுக்குப் போவார். அந்தக் கூட்டங்களில் நானும் இருப்பேன் என்பதால், திரும்ப வரும்போது என்னோடு வந்து அழைத்துப்போவார்.

புதுச்சேரி சிறிய நகரம். சுத்தமான காற்று, ஒழுங்குகள் கொண்ட வீதி, அரசுத்துறைகளோடு எளிதாகத் தொடர்புகொள்ளும் வசதி என்பதைத் தாண்டி, அதற்கொரு ஆன்மீக மனம் இருப்பதான நம்பிக்கை அவருக்கு இருந்த து. அங்கு வந்தவர்கள் திரும்பிபோவதைப் பற்றி நினைக்கமாட்டார்கள். நெருக்கடி எதுவும் இல்லையென்றால் கடைசிக்காலத்தை இங்கே கழித்துவிடுவதையே விரும்புவார்கள் என்று பல தடவை சொல்லியிருக்கிறார். நான் புதுவையை விட்டு வெளியேறப் பல்கலைக்கழகமோ, புதுவை நகரத்தின் வாழ்வியலோ காரணம் அல்ல. நான் பணியாற்றிய புதுவை சங்கரதாஸ் சுவாமிகள் நாடகப்பள்ளியின் இருப்பும் வேலை பார்ப்பதில் ஏற்பட்ட திருப்தியின்மையுமே காரணம் என்பதை அவரிடம் சொன்னேன்.

புதுச்சேரி, சென்னைக்குப் பக்கத்தில் இருக்கிறது. நாடகத்திலிருந்து சினிமாவுக்கு நகரும் வாய்ப்புகள் வந்தால் இந்த ஊரே ஏற்றது என்று சொன்னார். இதே கருத்தைத் தான் நண்பர் நாசரும் சொன்னார். அத்தோடு நாசருக்கு செங்கல்பட்டில் ஒரு நடிப்புக்கான நிறுவனம் ஒன்றைத் தொடங்கும் எண்ணமும் இருந்த து. அதன் பொறுப்பை என்னிடம் தரலாம் என்று கருதியதாகவும் சொன்னார். இருவரின் எண்ணங்களுக்கு மாறாகத் தெற்கு நோக்கி நகர்கிறேன் என்பதில் அவர்கள் இருவரும் வருத்தப்பட்டார்கள்.


33
 
மதுரைக்காரர்களுக்கு விருதுநகருக்குத் தெற்கே இருப்பவர்கள் எல்லாம் தெக்கத்தி ஆட்கள்தான். இலக்கிய வட்டாரத்தில் தெக்கத்தி எழுத்தாளர்கள் என்ற சொல்லாட்சி, 1980 கள் வரை, நெல்லை, கன்யாகுமரிக்காரர்களைக் குறிக்கும் சொல்லாக இருந்தது. கன்யாகுமரி எழுத்தாளர்கள் கூட அந்தச் சொல்லாட்சிக்குப் பெரிதும் சொந்தக் கொண்டாடுவதில்லை. ஆனால் நெல்லைக்காரர்கள், தங்களைத் தெக்கத்திச் சீமைக்காரர்கள் என்று சொல்லிக் கொள்வதில் பெருமையோடு இருந்தார்கள்.



இந்தப் பெருமையை மங்கச் செய்து, கரிசல் எழுத்தாளர்களின் கூட்டத்தையே தெக்கத்தி எழுத்தாளர்களின் கூட்டமாக மாற்றியவர் கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏரான கி.ராஜநாராயணன் தான். கரிசல் இலக்கியம் என்பதற்கு நில அடையாளம், மொழி அடையாளம், புழங்குபொருட்கள் மற்றும் தொழில்சார் கருவிகள் கொண்ட வாழ்வியல் அடையாளம் எனத் திட்டமிட்டு உருவாக்கித்தந்து, அதன் வெளிப்பாடாக கரிசல் வட்டாரச் சொல்லகராதியைத் தொகுத்துத் தந்ததன் மூலம் கரிசல் இலக்கியப்பரப்பை விரிவாக்கினார் கி.ரா. அவர் உருவாக்கிய பரப்பிற்குள் பூமணி, பா.ஜெயப்பிரகாசம், தமிழ்ச்செல்வன், சோ.தர்மன், தனுஷ்கோடி ராமசாமி, கௌரிசங்கர், உதயசங்கர், கோணங்கி போன்ற கதைக்காரர்களும் தேவதச்சன், தேவதேவன், சமயவேல், வித்யாஷங்கர் போன்ற கவிகளும் அந்தப் பரப்பைப் பலவித வண்ணங்கள் கொண்டதாக மாற்றினார்கள். அந்த மாற்றத்திற்குப் பின்னால் நெல்லை எழுத்தாளர்களும் கூட கரிசல் என்ற சொல்லை தெக்கத்தி என்ற சொல்லால் பெரிதாக்கித் தங்களையும் இணைத்துக்கொண்டு பெரிய அடையாளத்துக்குள் இணைந்து கொண்ட நிகழ்வைச் சமகாலத் தமிழ் இலக்கியப் பெருநிகழ்வு என்று சொல்லலாம்.

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வண்ணதாசன், கலாப்ரியா, விக்ரமாதித்யன் போன்றவர்கள் தங்களின் நிலப்பரப்பிலிருந்து வந்த முன்னோடியாகக் கி.ராஜநாராயணனைக் கொண்டாடியதை நேரில் கண்டிருக்கிறேன். இவர்களில் பலரும் கி.ரா.வைப் பார்க்கப் புதுவைக்கு வந்து போவதுண்டு. அவர்களில் ஒருசிலரின் வருகையின்போது நானும் உடன் இருந்திருக்கிறேன். தெக்கத்தி எழுத்தாளர் என்றோ, கரிசல் எழுத்தாளர் என்றோ தங்கள் அடையாளத்தைச் சொல்லிக் கொள்ளாத இருவர் கி.ரா. வைப்பார்க்க வந்தபோதும் அவரோடு இருந்திருக்கிறேன். ஒருவர் தோப்பில் முகம்மது மீரான்; இன்னொருவர் கழனியூரன். கழனியூரன், கி.ரா. நாட்டுப்புறக் கதைகளைத் தொகுத்தபோது உடனிருந்து தொகுப்புக்கு உதவியவர். அவரைப்போலவே தொகுப்புக்கு உதவிய இன்னொருவர் பாரததேவி. கழனியூரனும் தோப்பிலும் புதுவைக்கு வந்து கி.ரா.வோடு பேசும் விதத்தைக் கவனித்த எவரும் அவர்கள் நெருங்கிய உறவுக்காரர்கள் என்றுதான் நினைப்பார்கள். அவரோடும் கணவதி அம்மாவோடும் உறவுமுறை சொல்லிப் பேசிச் சிரித்து மகிழ்ந்துவிட்டுப் போவார்கள்.

இந்த உறவு வரலாற்றில் சொல்லப்பட்ட பிறழ்வான நிலைக்கு எதிரானது. இந்தியாவில் இசுலாமியர்களின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகவே விஜயநகரத்தில் இந்து ராஜ்ஜியம் நிறுவப்பட்டதாகவும், அங்கிருந்து வந்த நாயக்க ஆட்சியாளர்கள் மதுரை வரை வந்து இசுலாமியர்களை விரட்டியடித்ததாகவும் வரலாறு சொல்கிறது. அதற்கு முன்பு ஆந்திரப் பகுதியைக் கைப்பற்றிய இசுலாமிய அரசர்களும் தளபதிகளும் நாயுடுகளின் வீட்டுப் பெண்களை வம்படியாகத் திருமணம் செய்ய விரும்பினார்கள் என்றும், அதனை ஏற்காத நாயுடுகள் ஆந்திராவிலிருந்து இடம்பெயர்ந்து வந்தார்கள் என்றும், தெலுங்குச் சாதிகளின் தொன்மங்களில் பேசப்பட்டுள்ளன. கி.ரா. எழுதிய கோபல்ல கிராமம் நாவலில் கூட அந்த இடப்பெயர்வுக்கதை இடம்பெற்றுள்ளது. தனது நாவலில் அப்படிச் சித்திரித்த கி.ரா., தோப்பிலோடும், கழனியூரனோடும் மாமா-மாப்பிள்ளை என்று உறவுசொல்லிப் பேசிக் கொண்டிருப்பார் .

1991-92 ஆக இருக்கும். கி.ரா.வைப் பார்க்கப் புதுவை வந்திருந்தார் தோப்பில். சந்தித்த அன்று முதல் எனக்கும் மாமா தான். கி.ரா., பெரிய மாமா ஆனதால், நான் சின்ன மாமா ஆகிவிட்டேன். அப்படித்தான் தோப்பில் அழைப்பார். அவர் மேடையில் பேசுவதைக் கேட்பதைவிட தொலைபேசியில் பேசுவதை விரும்பிக் கேட்பேன். நீண்ட நேரம் பேசுவோம். கடலோரக் கிராமத்தின் கதை, சாய்வு நாற்காலி தவிர எல்லாமே வந்தவுடன் அழைத்துத் தந்து படித்துக் கருத்து கேட்பார். அவ்விரண்டையும் போலவே கூனன் தோப்பு, துறைமுகம், அஞ்சு வண்ணம் தெரு, குடியேற்றம் என எல்லா நாவல்களுமே தமிழக இசுலாமிய சமூகத்தின் உள்கட்டுமான நெருக்கடிகள் பற்றிய அலசல்களே. வியாபாரம் சார்ந்து திருநெல்வேலியில் வாழ நேர்ந்தாலும் எழுத்தில் கன்னியாகுமரி மாவட்டத்திலேயே தான் இருந்தார். சிறுகதைகளில் குறிப்பான வெளிகளைப் பார்க்க இயலாது.

நான் நெல்லைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த ஆண்டில் தான் தோப்பிலின் சாய்வு நாற்காலி சாகித்ய அகாதமி விருது(1997) பெற்றது. அவரது படைப்புகளை முன்வைத்து ஒருநாள் கருத்தரங்கம் ஒன்றை 1998 மார்ச்சில் நடத்தத் திட்டமிட்டபோது கி.ரா. மாமாவை அழைக்க முடியுமா? என்று கேட்டார் தோப்பில். அவர் தான் எனக்கு அகாடெமி விருது கிடைக்க முக்கியமான காரணம் என்றும் சொல்லி, அவரை அழைக்க முயற்சி செய்யுங்கள் என்றார். ‘அழைக்கலாம்; ஆனால் கி.ரா. பயணம் செய்து வரவேண்டுமே; இவ்வளவு தூரம் பயணம் செய்யத் தயங்குவாரே’ என்று சொல்லிவிட்டு முயற்சி செய்தேன். நாங்கள் பேசிக்கொண்டது போலவே அவர் வரவில்லை. ஆனால் தோப்பிலுக்காக ஒருநாள் முழுக்கக் கருத்தரங்கம் நடத்துவது குறித்து பெரிதும் மகிழ்ச்சி அடைந்தார். இதுதான் பல்கலைக்கழகங்கள் இலக்கியத்திற்குச் செய்யவேண்டிய வேலை என்று சொல்லி ஒரு அஞ்சலட்டை எழுதிப் போட்டிருந்தார்.

தோப்பில் கருத்தரங்கிற்குக் கி.ரா.வை அழைக்க முடியாததை எப்படியாவது ஈடுகட்ட வேண்டும்; திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு அவரை அழைக்கவேண்டும் என்பதில் எங்கள் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் வே. வசந்தி தேவியும் ஆர்வம் காட்டினார். முனைவர் வே. வசந்திதேவி இலக்கியவாதிகளைப் பல்கலைக்கழகத்தோடு தொடர்புபடுத்துவதில் ஆர்வம் கொண்டவர். எழுத்தாளர்கள் தொ.மு.சி.ரகுநாதனையும் சுந்தரராமசாமியையும் பல்கலைக்கழக ஆட்சிப்பேரவையின் உறுப்பினர்களாக ஆக்கும்படி ஆளுநருக்கு அவர் தான் பரிந்துரைத்தார். இளையோர் நலத்திட்ட ஆலோசனைக்குழுவில் தோப்பில் முகம்மது மீரானும் தமிழ்ச்செல்வனும் இடம் பெற்றிருந்தார்கள்.

அவரது பதவிக்காலம் முடியும் நிலையில் பெண்ணியம் குறித்து மூன்றுநாள் கருத்தரங்கம் ஒன்றினை நடத்தினோம். அக்கருத்தரங்கின் தலைமையுரையை நிகழ்த்த கரிசல் எழுத்தாளர் கி.ரா.வை அழைக்க வேண்டும் என்று என்னிடம் வலியுறுத்தினார். அப்போது கி.ரா., தயாராக இருந்தால் நமது பல்கலைக்கழகத்தில் கூட அவரை ஓராண்டு வருகைதரு பேராசிரியராக நியமிக்கலாம் என்றார். அவர் நமது பல்கலைக்கழகப்பகுதியைச் சேர்ந்தவர். நமது பல்கலைக் கழகப் பகுதியின் மனிதர்களை எழுதியவர் என்று அடிக்கடி சொல்வார். புதுச்சேரிக்குப் போன கி.ராஜநாராயணனுக்குத் திரும்பவும் கரிசல் பூமிக்குத் திரும்பும் ஆசை இல்லை என்பது தெரிந்தபின் அந்த முயற்சியைக் கைவிட்டுவிட்டோம்.

34.
 
இப்போது அவர் பெயர் புதுவை இளவேனில். புதுவையில் அறியப்பட்ட நிழற்படக்கூடத்தை நடத்திக்கொண்டிருக்கிறார். நிகழ்காலத்தில் நிழற்படக்கூடங்களுக்கு நல்ல வருமானம் இருக்கிறது என்பதால் அதை நிறுவி நட த்துகிறார். கல்யாணப்போட்டோ எடுப்பதைத் தாண்டி இப்போதெல்லாம் தொடர்ச்சியாகப் பிறந்தநாட்களுக்கு வெவ்வேறு இடங்களைத் தேர்வுசெய்து கொண்டாடும் நடுத்தரவர்க்கம், படங்களாகப் பதிவுசெய்யத் தொழில்முறைப் புகைப்படக்காரர்களை அணுகுகிறார்கள். கையிலிருக்கும் அலைபேசிக் காமிராக்களின் படங்களைத் தாண்டியும் வீட்டு விசேச நிகழ்ச்சிகளான பூப்புனித நீராட்டு, நிச்சயதார்த்தம், திருமணத்திற்கு முன் சந்திப்பு, வளைகாப்பு, அறுபதாம் கல்யாணம் என ஒவ்வொன்றையும் படங்களாகப் பதிவுசெய்து கணினியின் பக்கங்களில் தொகுத்து வைத்துக்கொள்கிறார்கள். முன்புபோல் ஆல்பம் போட்டு வைத்துக்கொள்வதில்லை.

இளவேனில் நிழற்படக்கூடத்தை நடத்தினாலும் அவர் ஒரு கலைஞர். மனிதர்களை – அவர்களின் பலவிதமான உணர்வுகளோடு படம் பிடித்த நிழற்படக்கலைஞர். அவரால் படம் பிடிக்கப்பட்ட தமிழ்நாட்டு ஆளுமைகள் பலவிதமானவர்கள். முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியைப் பலவிதமாகப் படம் எடுத்தவர். அவரைக்கூட ஓர் எழுத்தாளர் என்ற அளவிலேயே படங்களாக எடுத்துத் தந்தார். எழுத்தாளர்கள் பலரும் அவரது காமிராவினால் பிடிக்கப்பட்ட படங்களில் புன்னகைக்கவும், நிற்கவும், நடக்கவும், நண்பர்களோடு பேசிக்களிக்கவும் விரும்பினார்கள். பிரபஞ்சன், ரவிக்குமார், ராஜ்கௌதமன், லெனின் தங்கப்பா,ரமேஷ் ப்ரேம், போன்ற புதுவையோடு தொடர்புடைய எழுத்தாளர்களுக்கு அப்படியான படங்களை எடுத்துக்கொடுத்திருக்கிறார். அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டு எழுத்தாளர்களான தேவதேவன், பா.செயப்பிரகாசம், ஞானக்கூத்தன், கனிமொழி, பாமா, இன்குலாப், கோவை ஞானி, ராசேந்திரச் சோழன், அழகிய பெரியவன், தியோடர் பாஸ்கரன், வண்ணதாசன், கலாப்ரியா, சாருநிவேதிதா, ஆ.ரா.வேங்கடாசலபதி, சுகுமாரன், சல்மா முதலானவர்களைப் படங்களாக எடுத்து மகிழ்வித்தவர். என்னையும் அப்படியான படங்களில் பார்க்க ஆசைப்படுவதாகச் சொல்வதுண்டு.

புதுவைக்கு வரும்போது சொல்லுங்கள்; படம் எடுக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருப்பார். அவர் எடுக்க விரும்பிய காட்சிகள் நானும் கி.ரா.வும் உட்கார்ந்தும் நடந்தும் பேசித் திரிந்த காட்சிகளை. அந்தக் காட்சிகளை விவரிப்பார். “அப்பா (கி.ரா.வை அவர் அப்பொழுதே இப்படித்தான் அழைத்தார்) இருந்த ஒவ்வொரு வீட்டிலும் அவரோடு உங்களைப் பார்த்திருக்கிறேன். திருநெல்வேலிக்குப் போன பிறகும் வந்து சந்தித்துப் பேசிக்கொண்டிருந்த காட்சிகள் எனக்குள் இருக்கிறது. நீங்களும் அவரும் தாகூர் கலைக்கல்லூரிக்குப் பின்புறம் விமான நிலையப்பாதைகளிலும் விளையாட்டு மைதானங்களிலும் நடந்துகொண்டே பேசிக்கொண்டு போவீர்கள். பல நேரம் அவர் முன்னே நடக்க, நீங்கள் ஓரடி பின்னால் போவீர்கள். சில நேரங்களில் நின்று கையை அசைத்து விவாதிப்பீர்கள். அவர் அதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருப்பார். அந்தக் காட்சிகளையெல்லாம் இப்போது திரும்பவும் படமாக்க முடியாது என்றாலும் பல்கலைக்கழகம், கடற்கரை, கி.ரா. குடியிருந்த வீடுகள், காலை நடைக்குப் போகும் விமானநிலையப்பாதை எனப் பல இடங்களில் எடுக்கவேண்டும் என்று சொன்னார். என்னைப் படங்கள் எடுக்கலாம். என்னோடு கி.ரா.இருக்கும் படங்களை எடுக்க முடியாது.

இப்போது புதுவை இளவேனிலாக இருக்கும் இவரை முதலில் பாபுவாகவே அறிவேன். இலாசுபேட்டை தாகூர் கலைக்கல்லூரிச் சாலையில் இருந்த வீட்டிற்குப் போகும்போது தினசரிகள் வாங்கி வந்து கொடுக்கும் சிறுவனாகப்பார்த்தேன். பேப்பர் போடும் பையன் மேலே வந்து தந்துவிட்டுப் போகிறான் என்று நினைத்தேன். ஆனால் பேப்பரைக் கொடுத்துவிட்டுக் கணவதி அம்மாவிடம் காபி வாங்கிக் குடித்துவிட்டுப் பையொன்றை வாங்கிக் கொண்டு போனான். அவர்களுக்குத் தேவையான பொருட்கள் வாங்கித்தருவதற்காகத் தினசரி வந்துவிடுவான் என்பது பின்னர் தெரிந்தது.

பின்னர் ஒருமுறை பார்த்தபோது, அந்தச் சிறுவன் இளைஞனாக மாறிய தோற்றத்தில் இருந்தான். ஒரு ஆட்டோவின் பக்கத்தில் நின்றிருந்தான். கி.ரா. வீட்டின் வாசலில் நின்றிருந்த அந்த வண்டியைக் கவனிக்காமல் படியேறினேன். அந்த இளைஞன் எனக்கு வணக்கம் சொன்னான். நானும் வணக்கம் தம்பி என்று சொல்லிவிட்டு மேலே போய்விட்டேன். போனதும் எங்கேயாவது கிளம்பிறீங்களா? என்று கி.ரா.விடம் கேட்டேன்.

‘ஏன் அப்படிக் கேட்கிறீங்க’

“கீழே அந்தப் பாபு ஆட்டோவோடு நிற்கிறாரே ”என்று சொன்னேன். அவர்களுக்காக அவன் ஒரு ஆட்டோவை அழைத்துக் கொண்டுவந்திருக்கிறான் என்று நினைத்து அப்படிச் சொன்னேன்.

“ஓ.. அதுவா.. பாபுவோட வண்டிதான். வேலையில்லாமெ இருக்கிறானேன்னு வங்கியில் சொல்லி ஏற்பாடு செய்தேன். நானும் கொஞ்சம் பணம் கொடுத்தேன். இப்போ அவன் ஆட்டோவுக்குச் சொந்தக்காரன். காலையில் வருவான். எங்களுக்குத் தேவையான சாமான்களை வாங்கிக் குடுத்து வண்டியெடுத்துட்டுப் போய் ஆட்டோ ஸ்டேண்டில் இருப்பான்” என்றார்.

நான் பாண்டிச்சேரியில் இருந்தவரை பாபு சொந்த ஆட்டோவை ஓட்டும் ஆட்டோக்காரராக இருந்தார். சில வருடங்கள் கழித்துப் பாண்டிச்சேரி போனபோது நண்பர் ரவிக்குமாரோடு அவரைப் பார்த்தேன். அவரை அறிமுகம் செய்தபோது ‘ அவரைத் தெரியுமே. கி.ரா.வீட்டில் பல தடவைப் பார்த்திருக்கிறேன்’ என்றேன். “அப்போது அவர் பாபு; இப்போது புதுவை இளவேனில்” என்று அறிமுகம் செய்தார். புகைப்படம் எடுப்பதில் தேர்ச்சிபெற்று புகைப்படக் கலைஞராக மாறிக்கொண்டிருக்கிறார் என்று சொன்னார். ரவிக்குமார் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் அவரோடு நெருக்கமாக இருந்தார்.

அவர் எடுத்த படங்கள் பல இதழ்களில் வந்துகொண்டிருந்தன. கி.ராஜநாராயணை மட்டுமல்லாமல், புதுவையின் அடையாளங்கள் பலவற்றை எடுத்து வைத்திருந்தார். கி.ரா.வையும் புதுவையும் இணைத்துப் படங்கள் எடுத்தார். அதை புதுவையின் பிரெஞ்சு அடையாளங்களைக் கொண்ட ஹோட்டல் தெவில்லாவில் இருந்த மேரி ஹாலில் நட த்தினார் என்பது ஞாபகம். அதன் தொடக்கவிழா அல்லது நிறைவுவிழாவிற்கு வரமுடியுமா? என்று கேட்டார். என்னால் போகமுடியவில்லை. 2003 செப்டம்பரில் புதுவையில் நடந்த அந்தக் கண்காட்சிப் பிறகு கோவையில் மார்ச் 2004 இல் நடத்தப்பெற்றது. அதற்கு நடிகர் சிவகுமார், ஓவியர் ஆதிமூலம், மலையாள சினிமா இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் வந்து பாராட்டினார்கள். கி.ரா.வை படமாகத் தொகுத்தளித்த அந்தப் நிழற்படக் கண்காட்சிதான் புதுவை இளவேனிலைத் தேர்ந்த நிழற்படக்கலைஞராக உலகத்திற்கு
 அறிமுகம் செய்தது.

35

கி.ரா.வைத் தொகுத்தளித்த கண்காட்சியைப் பார்க்கும் வாய்ப்பைத் தவறவிட்ட எனக்கு எல்லாப் படங்களையும் வீட்டில் வைத்துப் புரட்டிக்காட்டினார் கி.ரா. அப்படிக் காட்டும்போது, அவரை ஓவியங்களாக வரைந்த ஆதிமூலத்தின் ஓவியங்களில் இருக்கும் பாவனைகளோடு இளவேனிலின் படங்களை ஒப்பிட்டுப் பேசினார்.

படங்கள் எடுப்பதற்காக இளவேனிலோடு புதுவையைச் சுற்றிவந்ததைச் சிரிப்போடு சொல்லிக் கொண்டே வந்தார். நான் முதன் முதலில் வந்து தங்கியிருந்த ஜமீன்தார் கார்டனிலும், அங்காளம்மன் நகரிலும் படம் எடுக்கவில்லை. நீங்கள் இருந்திருந்தால் ஒருவேளை அங்கும் போய்ப் படங்களை எடுத்திருப்போம் என்று சொன்னார்.

மனித முகங்களின் மெய்ப்பாடுகளையும் உடல் அசைவுகளையும் குறிப்பான சூழலில் வைத்து நிழற்படங்களாக்கிய புதுவை இளவேனிலின் அபாரமான படங்களின் நுட்பங்களைப் பார்க்கும் வாய்ப்பு சென்னையில் கிடைத்தது. கி.ரா.விற்கு வைத்ததைப்போலச் சுந்தர ராமசாமிக்கும் ஒரு புகைப்படக் கண்காட்சியை நடத்தவேண்டும் என்ற ஆர்வத்தில் இளவேனிலை நாகர்கோவிலுக்கு அழைத்துச் சென்று சில நாட்கள் தங்க வைத்துப் படங்கள் எடுக்கப்பட்டன. அவற்றின் தொகுதி ஒன்றைச் சென்னையின் அல்லயன்ஸ் பிரான்சேவில் கண்காட்சியாக நடத்தியது காலச்சுவடு அறக்கட்டளை.

அந்தக் கண்காட்சியில் சுந்தரராமசாமியின் பல்லக்குத்தூக்கிகளை மறுபடியும் நிகழ்த்தும்படி கேட்டுக்கொண்டது. 1992 நிகழ்த்திய பல்லக்குத்தூக்கிகளைத் திரும்பவும் கூட்டுக்குரல் சார்பில் நிகழ்த்தினோம். அந்த நாடகத்தை நிகழ்த்துவதற்கு எனக்கொரு கடப்பாடு இருந்தது. அதுவரை நிஜநாடக இயக்கத்தில் ஒரு நடிகனாகவும் பின்னரங்க வேலைகள் செய்யும் நபராகவும் மட்டுமே இருந்த என்னை, நாடகப் பனுவல்களை உருவாக்கும் எழுத்தாளராக அடையாளம் காட்டியது சுந்தர ராமசாமியின் பல்லக்குத்தூக்கிகள் கதைதான். நிஜநாடக இயக்கம் அல்லாமல் மதுரையில் புதிதாக உருவாக்கப்பட்ட சுதேசிகள் நாடகக்குழுவிற்காக நாடகங்களைத் தேடியபோது, நண்பர்களின் உரையாடல் வட்டத்தில், பல சிறுகதைகள் ‘நாடகீயத் தன்மைகள்’ கொண்டனவாக இருக்கின்றன என்று சொல்லிவிட்டு, உதாரணமாகப் பல்லக்குத்தூக்கிகள் கதையின் நாடகீயத்தன்மையை விளக்கிச் சொன்னேன். சொன்னவிதம் நண்பர்களுக்குச் சரியெனப்பட்டதால் எழுதும்படி வற்புறுத்தினார்கள்; எழுதினேன். படித்தோம். சில திருத்தங்கள் செய்யப்பட்டன. மேடையேற்றினோம். சிறுகதையை எழுதிய சுந்தரராமசாமிக்கு நாடகப்பிரதியை அனுப்பிவைத்து மேடையேற்றத்துக்கு அழைத்தோம். “மேடையேற்றத்தின்போது வர இயலவில்லை” என்று கடிதம் எழுதினார். பின்னர் ஒரு நேர்ப்பேச்சில், சிறுகதையை அப்படியே நாடகமாக்க வேண்டும் என்று அவசியமில்லை; நீங்கள் அப்படிச் செய்யவில்லை என்பதாகச் சொன்னார்.

அதிகமான நிகழ்வுகளை அடுக்கும் வடிவமல்ல. குறைவான நிகழ்வுகளை முன்பின்னாக அடுக்குவதன் மூலம் தன் வடிவத்தை உருவாக்கிக்கொள்வது சிறுகதை. சிறுகதை வடிவத்தில் கதைசொல்லியாக ஒரு பாத்திரம் கதைக்குள்ளோ, அல்லது வெளியிலோ இருக்கும். அதனைக் கண்டறிந்து தூக்கிவிட முடிந்தால் நாடகப்பிரதியுருவாக்கத்தின் பாதிவேலை முடிந்துவிடும். பல்லக்குத்தூக்கிகளில் அதைத்தான் செய்தேன். பல்லக்குத் தூக்கிகளைப் பற்றிய வருணனை, சித்திரிப்பு மூலம் அவர்களைப்பற்றியதொரு விலகல்நிலைக் கருத்துக்களை உருவாக்குவனாகக் கதைசொல்லியின் பாத்திரம் இருக்கும். அதன் மூலம் வாசகர்களின் வாசிப்புத்தளத்தை முடிவுசெய்யும் கதைசொல்லியின் அதிகாரத்துவத் தன்மை கதைக்குள் ஊடாடும். அதனைக் கண்டறிந்து தூரப்படுத்தியபின், 1990-களின் நிகழ்வுகளைக் குறிக்கும் சில குறியீட்டுச் சொற்களை உரையாடலில் சேர்த்தபோது நாடகப்பிரதி முழுமையானது. அத்தோடு நாடகத்திற்குள்ளோ அல்லது வெளியிலோ ஒருவித முரணிலையை உருவாக்க வேண்டும். பாத்திரங்கள் சார்ந்த முரணென்றால், அது அகமுரணாக அமையும், வெளியிலிருக்கும் ஏதோவொன்றொன்றால் புறமுரணாகத் தோன்றும். நவீன நாடகங்கள் என்ற வகைப்பாட்டில் பெரும்பாலும் புறநிலை முரண்களே முக்கியத்துவம் பெறும். பல்லக்குத்தூக்கிகளின் உரையாடலின் வழி உருவாக்கப்படும் அந்த நபர் நாடகத்தில் தோன்றா முரணை உருவாக்குவதன் வழி, புறநிலை முரணைக் குறியீடாக உருவாக்கிவிடுகிறார்.

மதுரையில் சுதேசிகள் மேடையேற்றிய பல்லக்குத்தூக்கிகளைப் புதுவையில் கூட்டுக்குரல் நாடகக்குழு மூலம் மேடையேற்றினோம். புதுவையில் இருந்த போது நண்பர்களோடு சேர்ந்து கூட்டுக்குரல் என்ற நாடகக்குழுவை ஆரம்பித்து பல இடங்களில் 1990 -1997 காலகட்டங்களில் பல நாடகங்களை நிகழ்த்தினோம். நாடகத்துறையிலிருந்து வெளியேறி ஏழு ஆண்டுகள் ஆனபின்பு ஏறத்தாழ நாடகத்தை நெறியாள்கை செய்வதை நிறுத்தியிருந்தேன். நீண்ட இடைவெளிக்குப் பின் அந்த நாடகத்தைச் சுந்தர ராமசாமிக்காகச் சென்னையில் நிகழ்த்தும் பொருட்டுக் கூட்டுக்குரல் நண்பர்களை இணைத்துக் கொண்டு திரும்பவும் மேடையேற்றினோம். அந்த விழாவில். எனது இலக்கியப்பயணத்தில் கி.ரா.வும் சு.ரா.வும் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். நிழற்படக் கலைஞனாகப் புதுவை இளவேனில் கவனிக்கப்படுவதற்கு இவ்விரு ஆளுமைகளின் படங்கள் ஆதாரங்களாக இருந்தன; இருக்கின்றன.










கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்