இப்படிக்கடந்துபோனது 2023



எழுதிய கட்டுரைகள்

இணையத்தில் தொடர்ந்து எழுதியனவற்றை இந்த வலைப்பூவில் வாசிக்கலாம். இவையெல்லாம் இதழ்களில் எழுதப்பெற்ற கட்டுரைகள்.

1.    நாவல் எழுத்து: பெருவெளியும் சிறுவெளியும் -தீராநதி,
2.    மந்திரத்தறி: உள்ளடுக்குகள் கொண்ட நாடகப்பனுவல் -தாய்வீடு
3.    ஈழப்போர்க்கால நாவல்களில் பயங்கரவாதியின் இடம்- அபத்தம்
4.    வெட்டியெடுக்கப்பட்ட சதைத்துண்டு: லதா  உதயனின்  அக்கினிக்குஞ்சுகள் - இணையத்தில்
5.    திராவிட மாதிரி: முன்னெடுக்கப்படும் பண்பாட்டு நகர்வுகள் -உயிர்மை
6.    இந்தியத்தன்மை கொண்ட முதலாளியப்புரட்சி -உயிர்மை
7.    மாஜிதாவின் பர்தா:பண்பாட்டுச் சிக்கலை எழுதிய புனைவு
8.    நண்பகல் நேரத்து மயக்கம்: காணாமல் போனவனும் காணாமல் போய்க்கொண்டிருப்பவனும் -அம்ருதா
9.    பாசாங்குகள் இல்லாத ஒரு பகிர்வு: அபத்தம் இதழில் ஓர் உரையாடல்

இந்த ஆண்டில் பார்த்த சினிமாக்கள் பெரும்பாலும்  இணையச் செயலிகளில் தான். மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களையும் அரங்கில் பார்த்தேன். அதேபோல் வெற்றிமாறனின் விடுதலையையும் திரையரங்கில் பார்த்தேன். அவற்றைப்பற்றியெல்லாம் எழுதத் தோன்றவில்லை.

2023 இல் பார்க்கக் கிடைத்த நாடகங்கள்

1. உங்கள நீங்க எப்டிப் பாக்க விரும்புறீங்க – ஓராள் நாடகம்-செப்டம்பர் 25,- இயக்கம்: ராஜீவ்கிருஷ்ணன். நடிப்பு ஆனந்தசாமி - கோவை, பீளமேடு, ஜி.18. பொதுமக்களுக்கான அறக்கட்டளை

2. தங்க ஒரு ,3,பதின்மூன்று அற்புத விளக்குகள் -இரண்டு குறுநாடகங்கள் -பிஎஸ்ஜி கல்லூரி வளாகம், கோவை.

4. திருச்செந்தூர்- நாட்டியநாடகம், - கருணாசாகரி நாட்டியக்குழு- ராமானந்தா அரங்கம்,குமரகுரு கல்லூரி- பிப்ரவரி,24

5.மேக்பெத் -வில்லியம் சேக்ஸ்பியரின் மேக்பெத்- இயக்கம் முனைவர் மணீஸ்குமார். ராமானந்தா அரங்கம்,குமரகுரு கல்லூரி, -16, மே,2023-கோவை

6. நான் ரேவதி -ஓராள் தன்வரலாற்று நாடகம் -திருநங்கை ரேவதி -அமெரிக்கன் கல்லூரி, பேரவை

7. பட்டாங்கில் உள்ளபடி -பிரளயன் - அக்டோபர் 13, சென்னைக்கலைக்குழு- அமெரிக்கன் கல்லூரி பேரவை அரங்கம், அக்டோபர் 13,

8. மத்தவிலாச அங்கதம்-பிரளயன் - சென்னைக் கலைக்குழு - அமெரிக்கன் கல்லூரி கலையரங்கம் -அக்டோபர் 13,

9. வேள்பாரி - சந்திரமோகன், மருத்துவக்கல்லூரி அரங்கம், விருதுநகர்.

10. மனைவியர் பள்ளி - இரா.பிரபாகர், கலைடாஸ்கோப், சேவாலயம்,ஷெனாய்நகர், மதுரை -டிசம்பர்,30

 ஜனவரி15-16  சென்னைப் புத்தக்கண்காட்சி -2023

சென்னை இலக்கியத் திருவிழாவோடு இணைந்தே தொடங்கிய புத்தக் கண்காட்சிக்கு வரும் திட்டம் முதலில் இல்லை. ஆனால் சில நாட்களிலேயே சென்னை சங்கமத்தின் ஒரு பகுதியான இலக்கியச் சங்கமத்தில் உரையாற்ற வரும்படி கவி.இளையபாரதி அழைத்தபோது ‘திராவிட இலக்கியவியல்’ என்ற தலைப்பில் பேசுகிறேன் எனச் சொல்லி ஒத்துக்கொண்டேன்.    அதனால் ஒருநாள் புத்தகக் கண்காட்சிக்கும் மறுநாள் சென்னை இலக்கியச் சங்கமம் நிகழ்ச்சிக்குமென இரண்டு நாள் பயணம்(15, 16) தண்டபாணி தெற்கு, திருநகர் போனபோது மணி 12. பவா செல்லத்துரை அறையில் பையை வைத்துவிட்டுப் புத்தகக் கண்காட்சிக்குப் போனேன். இரவு 8 மணி அங்கு. ரியாஸ், கருணாகரன், செல்வம், சிதம்பரநாதன், எட்வின், ஈழவாணி என இலங்கை, புலம்பெயர் எழுத்தாளர்களைப் பார்த்தேன். மனுஷ்யபுத்திரனோடு உரையாடல். புத்தகங்கள் பெற்றுக் கொண்டேன். அப்சன் விடுதிக்கு வந்து 108 இல் படுத்துத்தூங்கத் தொடங்கும்போது மணி 1.00.

 இந்த ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வழக்கத்தை விடக் கூடுதலாக இலங்கையிலிருந்தும், புலம்பெயர் நாடுகளிலிருந்தும் எழுதும் எழுத்தாளர்களுக்கெனத் தனிக் கடையொன்றை - புது உலகம் - என்ற பெயரில் போட்டிருந்தார்கள். அதில் சில நூல்களை வெளியிடும் அழைப்பையும் கவி. ரியாஸ் குரானா விடுத்திருந்தார். அதனையும் ஏற்றுக்கொள்ள நினைத்தேன். அத்தோடு பன்னாட்டுப் புத்தகக்கண்காட்சி அமைப்புகளையும் பார்வையிட நினைத்தேன். அது நடக்கவில்லை.

காலையில் கலாப்ரியா வந்துவிட்டதாகப் பதிவு போட்டிருந்தார். சண்முகராஜா வருவதாகச் சொன்னதால் பன்னாட்டுப் புத்தகக்கண்காட்சி போகவில்லை.  கலாப்ரியா அறையில் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. 12 மணிவாக்கில் சின்னச்சாமியோடு கிளம்பிப்போனோம். இரண்டரை மணி வரை கண்காட்சியில் இருந்துவிட்டு ராஜரத்தினம் அரங்குக் கிளம்பினேன். இடையில் பூமணியைச் சந்தித்தேன்.  அடையாற்றில் ஒரு ரோட்டோரக் கடையில் ஒரு கேக், இரண்டு பிஸ்கட், ஆப்பிள் ஜூஸ் மதிய உணவு. நான்கு மணிக்குப் பதிலாக 5 மணிக்குத் திராவிட இயக்க இலக்கியவியல் அமர்வு தொடங்கி 8 மணிக்கு முடிந்தது. கனிமொழி இருந்து கவனித்தார். வெளியில் வந்து பேசினேன். ஞாபகம் வைத்திருந்தார். இரவே  கோவைக்குக் கிளம்பியாகிவிட்டது.  

 ஜனவரி, 20

காலையில் நடை. 8.20 -க்குக் கிளம்பி திருநகரில் காலைச் சிற்றுண்டி. பெரியார் பேருந்து நிலையம் வழியாகச் செந்தமிழ் கல்லூரிக்குப் போனபோது 10.10.  சரியாக 10.30 -க்குக் கூட்டம் ஆரம்பம். இலக்கியத்தில் மதுரை என்ற சாகித்ய அகாதெமி கருத்தரங்கு. ஆனந்தகுமார் ஏற்பாடு. சாமுவேல் சுதானந்தா, ஆனந்தகுமார், முருகேசபாண்டியன், ரத்தினகுமார் தவிர இரண்டு பெண்களும் வாசித்தனர். எல்லாருமே சுருக்கமாகவே பேசினர். நான் பேசும்போது மின்சாரம் நின்றது. இறங்கிப் பேசிவிட்டேன். பக்கத்தில் இருந்த மாஸ்கோ விடுதியின் மதிய உணவு. பாட்சுரா வந்தார். நீண்ட விவாதங்கள் நடந்தன. நாளை மறுநாள் அவரிடத்திற்கு வருவதாகச் சொன்னேன். வீட்டிற்கு வந்தபோது மணி 4.15. ஓய்வு. இரவில் மீனாட்சியில் தோசை


பிப்ரவரி,14 இமையத்திற்கு ஒருநாள் கருத்தரங்கு.

 முதல்நாள் பகல் ரயில் . ஒருமணி நேரம் ரயிலடியில் காத்திருப்பு. கோவை விரைவு வண்டி சென்னை சேரும்போது 10.50. இமையத்தின் ஓட்டுநர் வெளியே காத்திருந்தார்.  சென்னைப் பல்கலைக்கழக விடுதி போனபோது மணி 11.20. இமையம் போதையில் இருக்க, நானும் படுத்துவிட்டேன்.

காலை 7 மணி வாக்கில் எழுந்து இமையத்தோடு பேசிக்கொண்டிருந்தேன். பின்னர் பிரேமா விக்டரும் ஸ்டாலின் ராஜாங்கமும் வந்தனர். இட்லி வாங்கி வந்து அங்கேயே சாப்பிட்டு விட்டுக் கருத்தரங்கம் போனோம். ஓரளவு பரவாயில்லாத உரை. மற்றவர்கள் நல்ல பேச்சுகளை வழங்கினர். இன்று முக்கியமான சந்திப்பாக ப.கிருஷ்ணசாமியைப் பார்த்தது அமைந்தது. இமையத்திற்கு குவெம்பு விருது கிடைக்க, அவர் தேர்வுக்குழுவில் இருந்த து ஒரு காரணம். மதியத்திலும் மாலை 8 மணிவரையிலும் அவரோடு பேச்சு. எட்டரைக்கு அங்கேயே சாப்பிட்டுவிட்டுக் கிளம்பினேன். ரயில் 9 மணிக்குத் திறக்க, அமர்ந்து விட்டேன். தூக்கம். இடையில் 3.30 முதல் ஒருமணி நேரம் உறக்கமில்லை. திரும்பவும் 5.10 க்கு எழுந்துவிட்டேன். பக்கத்துப் பிளவில் இருந்த பிராமணக்குடும்பம் பேசிக்கொண்டே வந்தனர். கோவையில் இறங்கும்போது நல்ல குளிர்.

 பிப்ரவரி 24

வையத்துள் வாழ் -படக்கண்காட்சி

கல்லூரிக்குப் போனதும் துறை மாணவர்கள் ஆசிரியர்களோடு பேரூர் நோக்கிப் பயணம். அங்கு நடக்கும் படக்காட்சியைப் பார்த்தோம்.

 நொய்யல் ஆற்றின் கரையில் இருக்கும் பேரூரில் பட்டீசுவரர் ஆலையம் வரலாற்றின் நினைவுகளைச் சுமந்து நிற்கும் கல்வெட்டுகளோடு இருக்கிறது. அக்கோயிலைச் சுற்றியிருக்கும் சத்திரங்களும் மண்டபங்களும் கட்டிடக்கலையின் அடையாளங்களைத் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் பழையன சிதைந்து புதியன நுழையும் கட்டத்தில் உள்ளன. அவற்றைப் பார்க்கவும் அவற்றின் பயன்பாட்டைப் புரிந்துகொள்ளவும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கத்தோடு நிழற்படக்கண்காட்சி ஒன்று நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

கோவை குமரகுரு பன்முகக்கலை அறிவியல் கல்லூரியின் முன்னெடுப்பில் -கோயம்புத்தூர் புத்தாக்கக் குழுமம்- என்னும் பொருள் தரும் -COIMBATORE CREATIVE COLLECTIVE - அமைப்பு அங்குள்ள மூன்று மண்டபங்களில் விலங்குகள், பறவைகள், கடல்வாழ் உயிரினங்கள் சார்ந்த புகைப்படக்காட்சியை நடத்துகின்றது. VAIYAM -Where we belong என்ற பொருளில், பிப்ரவரி 22 முதல் 26 வரை நடக்கும் அக்கண்காட்சியைப் பள்ளி மாணவர்களும் கல்லூரி மாணவர்களும் பொதுமக்களும் வந்து பார்த்துச் செல்கிறார்கள். கண்காட்சியோடு நிழற்படக்கலை சார்ந்து நுட்பங்களும் கருவிகளும் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.

கோவை இலக்கியவிழாவைக் காணவரும் கலை ஆர்வலர்கள் பேரூரில் நடக்கும் கண்காட்சியையும் கண்காட்சி நடக்கும் மண்டபங்களின் கட்டட அமைப்புகளையும் பார்க்கலாம்.

ஞாயிறு நடக்கவுள்ள திருச்செந்தூர் நிகழ்வு தொடர்பான குழப்பங்கள் இரவில் சங்கர் வானவராயரின் குறிப்புகளுக்குப் பின் கூடுதலானது.

 மார்ச் . 17-19

சேலம் -  பெரியார் பல்கலைக்கழகத்தில் தேசியத் தகுதித்தேர்வு - தயாராக்குதல்.

 பல்கலைக்கழக மானியக் குழு நடத்தும் தேசியத் தகுதித் தேர்வு( NET -JRF/Lecturership) க்குத் தயாராகும் மாணாக்கர்களோடு உரையாடல். முழுமையும் கொள்குறி வினாவிடைத் தேர்வாக மாறிவிட்ட நிலையில் எப்படித் தயாராவது என்ற நோக்கத்தோடு உரையாடல்கள் நடந்தன. காலமேலாண்மை, தனித்திறன் அறிதல், குழுப்படிப்பு, தரவுத்தளங்களைப் பயன்படுத்துதல் போன்றனவற்றை விளக்கி இலக்கு நோக்கிப் பயணிக்கும்விதம் பற்றி விவாதிக்கப்பட்டது. ஒவ்வொரு அலகின் பரப்பையும் குறுக்குவெட்டாக விளக்கித் தரவுகளுக்கான அடிப்படை நூல்கள் சுட்டிக்காட்டப்பட்டன. மரபிலக்கியங்கள் பகுதிகள் இன்று நிறைவடைந்துள்ள நிலையில் நாளை இக்கால இலக்கிய வகைமைகள், திறனாய்வுகள் பிறதுறைப்பாடங்கள் விவாதிக்கப்படும். நீண்ட இடைவெளிக்குப்பின் தொடர்வகுப்புகள் உடல் அயர்வினை உணர்கிறது.

1999- 2004 வரை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இளைஞர் நலத்துறை இயக்கம் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்குப் பொறுப்பேற்று நடத்தியது. தமிழ்நாட்டரசின் தேர்வாணையம் நடத்தும் போட்டித்தேர்வுகள்,இந்திய அரசின் குடிமைப் பணிக்கான தேர்வுகள், வங்கிப்பணிகளுக்கான தேர்வுகள் ஆகியவற்றோடு பல்கலைக்கழக மானியக்குழுவின் ஆசிரியர் பணித்தகுதி, உதவித்தொகைத் தகுதி போன்றவற்றிற்கான தேர்வுகளையும் நடத்தியது. அவற்றில் எல்லாம் தமிழ் சார்ந்த தாள்களுக்குப்பொறுப்பாக இருந்த அனுபவம் உண்டு. அத்தோடு 1985 இல் முதன்முதலில் இவ்வகைத்தேர்வை மானியக்குழு அறிமுகம் செய்த போது எழுதித்தேர்வுபெற்ற முதல்வரிசை மாணாக்கர்களில் ஒருவன் என்ற தகுதியும் உண்டு. பின்னர் இவ்வகைத்தேர்வுகளுக்கு வினாத்தாள் தயாரிப்பு, பாடத்திட்ட உருவாக்கம், விடைத்தாள் திருத்தும் பணி எனத் தொடர் அனுபவங்கள் இருந்ததால், அதனை இப்போதைய மாணவர்களுக்குத் தரும் வாய்ப்பு கிடைத்தபோது தயங்கவில்லை.

பெரியார் பல்கலைக்கழகத்தமிழ் துறையில் இரண்டு நாட்களில் மூன்று நேரடி வகுப்புகள், இரண்டு தேர்வுகள், அவற்றிற்கான விடைகள், விளக்கங்கள் என விரிவான பயிற்சிகள் வழங்கப்பட்டன. 73 மாணவர்கள் பங்கேற்ற பயிற்சி வகுப்புக்கு இரண்டு நாளும் ஒருவரும் விடுப்பு எடுக்காமல் வந்திருந்து பங்கேற்றதும், தேர்வுகள் எழுதியதும் ஆச்சரியமூட்டியது. பாதிக்கும் அதிகமான 50 சதவீதம் மதிப்பெண் பெற்றார்கள் என்பது மகிழ்ச்சியாக இருந்தது. தரவு சேகரிப்பு முறைகளோடு கணினியைப் பயன்படுத்துதல், தொகுப்பு நூல்கள் பட்டியல், குழுவாகத் தயார் செய்தல் என வழிகாட்டியதை உள்வாங்கிச் செயல்படத் தயாராவார்கள் என்ற நம்பிக்கையைப் பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர்களும் மாணவர்களும் உண்டாக்கியிருக்கிறார்கள்.

துறை ஆசிரியர்கள் நன்றாக க்கவனித்துக்கொண்டார்கள். விருந்தினர் விடுதி நன்றாகப் பராமரிக்கப்படுகிறது.

 மார்ச் -27

உயிர்மைக்கட்டுரையை 1570 வார்த்தைகளுடன் அனுப்பினேன். கல்லூரிக்குப் போய் மறுபடியும் திருத்தம் செய்தேன். 12 மணிக்கு அனுப்பிவிட்டு, நாடகமேடை நினைவுகள்- 22-23 எழுதிக்கொண்டிருந்தேன். 2.30 க்குச் சிறுகதைத்திருவிழா விவாதக் கூட்டம் என்றார் முதல்வர். போனேன். மூன்று நாள் நிகழ்வை ஒரு நாள் நிகழ்வாக்கினோம். ஏப்ரல் கடைசி அல்லது மே முதல் வாரம் என முடிவுசெய்துள்ளோம். சங்கர் வானவராயரிடம் அயல் பயணங்களைப் பற்றிச் சொல்லிவிட்டேன்.  வீடு வந்தால் தொலைக்காட்சி பழுது. அலைபேசியில் அழைத்துச் சொன்னோம். யாரும் வரவில்லை

 ஏப்ரல் - 4

 மகாவீர் ஜெயந்தி விடுமுறை. நல்லவெள்ளியும் இந்த வாரம் என்பதால் இடையில் உள்ள இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு கிளம்பினோம். திருமங்கலத்தில் உள்ள வேலைகளை முடிக்கவேண்டும்.  காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி சரவணம்பட்டி மூன்று முக்கில் ஓட்டுநர் முத்துப்பாண்டியிடம் வண்டியைக் கொடுத்துவிட்டு மாறிக்கொண்டேன். காந்திபுரம் வழியாக சிங்காநல்லூர் போய் அவிநாசிபாளையத்திற்கு முன்னால் அபூர்வாவில் காலை உணவு. 9.45 க்குக் கிளம்பி கப்பலூர் 11.40. மதியம் மீனாட்சி பவனில் சப்பாத்தி சாப்பிட்டபின் ஓய்வு. மாலையில் திருமலையிலும் அங்கிருக்கும் காய்கறிக்கடையிலும் சாமான்கள் வாங்கிக்கொண்டோம்

 ஏப்ரல் 24

கைமுட்டுவலி தொடர்கிறது. கல்லூரிக்குப் போய் தரப்பட்ட போஸ்டர் மீது வேணுகோபால் கருத்தைக் கேட்டேன். கூட்டம் போட்டுவிட்டுச் சொல்கிறேன் என்றார். சொல்லவில்லை. நாளை நடக்கவில்லை. குறும்பாடங்கள் குறித்த அறிவிப்புகள், ப்ரியதர்ஷினியின் தொலைபேசி. பதில்கள் சொல்லிவிட்டேன். எல்லாவற்றிலிருந்தும் விடுபடவேண்டும். அவ்வப்போது மாடியிலேயே நடை

மே 25 -சிறுகதைத் திருவிழா

முதல் நாள் பிற்பகல் முதல்வரோடு ஏற்பாடுகள் குறித்துப் பேசினேன். இமையம் வருவது சந்தேகமாகிவிட்டது. பேனா, எழுத்துக்குறிப்பேடு, கைத்தறி ஆடை வாங்கிக் கொண்டோம். சான்றிதழ் வேலை முடிந்துவிட்ட து. உணவுக்குச் சொல்லியாகி விட்டது. சமாளித்துக்கொள்ளலாம் என்று நினைத்தேன். ஆனால் மாலை 4.45 க்கு முதல்வர், நிசாந்த, நிவேதிதன் ஆகியோர் அடங்கிய கூட்டம். எல்லாவற்றையும் நாங்கள் செய்வோம் என்றார்கள். செல்வேந்திரன் சொல்லியிருப்பார் என நினைக்கிறேன்.  முதுகு வலி இருந்தது;  மருத்துவரைப் பார்க்கப் போகவில்லை.நிகழ்வு நாள் காலையில் அரங்க ஏற்பாடுகளைப் பார்த்துவிட்டு வந்தேன். பின்னர் முதல்வரோடு சந்திப்பு. நாஞ்சில் நாடன், கோபாலகிருஷ்ணன் வந்துவிட்டார். பவாவும் நேரத்துக்கு வர, சரியாகப் பத்துமணிக்கு ஆரம்பித்துவிட்டோம் கல்லூரியின் நடைமுறைகள் சின்னச்சின்ன நெருடல்கள். ஆரம்பித்துவிட்டால் ஓடிக்கொண்டே இருக்கும். இப்போதும் அதுவே நடந்த து. திட்டமிட்டபடி இரண்டு இடங்களில் நிகழ்வுகள்.

வருவது சந்தேகம் எனச் சொன்ன இமையம் வருவதாகத் தெரிவித்து 1.15 -க்கு வந்துவிட்டார். பிற்பகல் அவர் மட்டுமே. 2 மணிக்கு இடியுடன் பெருமழை. 3.15 தான் ஆரம்பம். 4.30 -க்கு முடிந்தது. வீட்டுக்கு வந்தபோது 5.45.

மருத்துவரைப் பார்த்துவிட்டு. 9 மணிக்கெல்லாம் படுத்துத் தூங்கிவிட்டேன்.

மே.30

12.25-க்கு நுழைந்து பாரிஸ் செல்லும் ஏர்-பிரான்ஸ் அலுவலகத்தைக் கண்டடையும் போது மணி நள்ளிரவு 12.40. அது மூன்றாவது மாடியில் எச் -வரிசையில் இருந்த து.  அதன் அலுவலர் விமானப் பயணச்சீட்டை உறுதி செய்து விமான இருக்கை அனுமதி(போர்டிங் பாஸ்) அளிக்கும் முன்பு ஒரு சிக்கலை உருவாக்கினார். கையில் எடுத்துச் செல்லும் பெட்டிகளை வைத்து எடை பார்த்தார். எடை அதிகம் என்றார். அனுமதிக்கப்படும் மொத்த எடை 12+12 =24. ஆனால் உங்களிடம் 31 கிலோ இருக்கிறது; கூடுதல் பணம் கட்டவேண்டும் என்றார்.  வாக்குவாதம் கூடியது. இதைக் கோவையில் கிளம்பும்போது சொல்லியிருக்கவேண்டும் என்று சொன்னபின் இந்தமுறை பரிசாக அளிக்கிறேன்; இனிமேல் இப்படிக் கொண்டுவரக்கூடாது என்று சொல்லிவிட்டார். மும்பை – பாரிஸ்; பாரிஸ் – டல்லாஸ் என இருபயணங்களுக்கும் அனுமதிச்சீட்டை வழங்கினார். விரும்பினால் கைச்சரக்குப் பெட்டிகளையும் சரக்கு வழியில் அனுப்பலாம் என்றார். நாங்கள் தரவில்லை. 02.10 -க்குக் கிளம்பும் பாரிஸ் விமானத்திற்கான பயணத்தை 01.25 க்கு உறுதிசெய்யும்படி இருந்தது.

அங்கிருந்து கிளம்பி 74 வது வாசலைத் தேடி நடந்தோம். ஏறினோம். திரும்பினோம். ஒரு வழியாக அடைந்தபோது நீண்ட வரிசை 74 முன்னால் நின்றது. ஒருவர் சோதித்தபடி வந்தார். அவர் பயணச் சீட்டை வாங்கிப் பார்த்தார். இருவரது பயணச்சீட்டிலும் இருக்கவேண்டிய முத்திரை வைப்பதில் குளறுபடி. மனைவியின் பயணச்சீட்டில் முத்திரை இல்லை. வரிசையைக் குழப்பி அழைத்துப் போய் அனுமதிக்கும் அலுவலரிடம் நிறுத்திச் சொல்லிவிட்டுப் போய்விட்டார். அவர் முத்திரை இட்டவரை அலைபேசியில் அழைத்தார். காத்திருக்கச் சொன்னார். காத்திருந்தேன். இடையில் ஒரு யாழ்ப்பாணப் பெண்ணுக்கு மொழிபெயர்ப்பு உதவி. 

எல்லாம் சரியாகி உள்ளே போய் உட்கார்ந்தோம் 21/ ஐந்தாவது ஆறாவது இருக்கை. சிறிது நேரத்தில் உணவுப்பண்டங்கள் வந்தன. சாப்பிட்ட பின் தூக்கம் உடனே வரவில்லை. பிறகு கொஞ்சம் தூக்கம். விழிப்பு; தூக்கம். மலம் கழிக்காத நிலையில் வயிறு உப்பலாகவே இருந்தது. 

ஒன்பதரை மணிநேரப் பயணம் முடிந்து பாரிஸ் சார்லஸ் டெ கார்லெ விமான நிலையத்தில் கால் வைக்கும்போது இந்திய நேரம் நண்பகல் 12.00. பத்து நிமிடம் முன்னதாகச் சரியான நேரத்துக்கு வந்துவிட்ட து. அடுத்த விமானம் 2.20 நிமிட த்தில் இங்கிருந்து டல்லாஸுக்குக் கிளம்பும். தரைத்தளத்திலிருந்து மாடிக்கு ஏற்றித் திரும்பவும் தரைத்தளத்திற்கு இறக்கினார்கள். விமான நிலைய மெட்ரோ ரயிலில் இரண்டு நிறுத்தம் பயணம். பாதுகாப்புச் சோதனை மட்டும் தான்.   வேகமாகவே முடிந்தது. எல்.42 வாசல் வழியாக விமானத்திற்குள் போகவேண்டும் அதைத்தேடி நடந்தோம். இன்னொரு தளத்திற்குப் போனோம். இரண்டு கறுப்புவண்ணப் பெண்கள் இருந்தார்கள். கேட்டபோது காத்திருக்கச் சொன்னாள். வெயில் கண்கூசும் விதமாக இருந்த து. காத்திருந்தோம். பாரிஸ் விமான நிலையத்தைக் கூடப் பார்க்கத் தோன்றவில்லை. கால்மணி நேரத்தில் விசா, பாஸ்போர்ட் சோதனை ஆரம்பம். முக்கால் மணி நேரத்திற்கு முன்பே அனுமதிக்கத் தொடங்கினர். உள்ளே நுழையும் வாசல் சோதனை விளக்கு என்னை அனுமதித்த து. விஜயாவுக்கு அனுமதி கிடைக்கவில்லை. திரும்பவும் இன்னொரு வரிசையில் அழைத்துப்போனார்கள். முடித்து அனுப்பிவிட்டார்கள்.

விமானத்திற்குள் 15 எச்& ஜி. சன்னலோரம் ஒரு நடுத்தரப் பெண் அடுத்த இட த்தில் ஒருவரும் இல்லை. விஜயா அமர்ந்துகொண்டார். அதே வரிசையில் இந்தியக் குடும்பம். 4 பேர். ஒருவருக்குப் பின்வரிசை -16 இல். 15 இல் டி,, ஈ யில் ஒரு ஐரோப்பியக் கணவன், மனைவி ஒரு கைக்குழந்தை.

ஏறியவுடன் உணவு வந்த து. சாப்பிட்டவுடன் தூக்கம் வந்த து. பக்கத்திருக்கைப் பெண் படம் பார்த்துக்கொண்டே வந்தார். குழந்தையோடு கொஞ்சினார்கள். தூக்கம் வந்த து. விமானம் போய்க்கொண்டிருந்த து.

அட்லாண்டிக் பெருங்கடல் மீது விமானம் பலநேரங்கள் பறந்து கொண்டே இருந்தது. அந்தக் கடலைப் போலவே அமெரிக்காவின் பரப்பிலும் நிலங்கள், நதிகள், காடுகள், நகரங்கள் என எல்லாம் விரிந்து கிடப்பதை விமானத்திலிருந்து பார்க்க முடிந்தது. விமான நிலையங்களும் பெரும்பரப்பில் இருப்பதை டெல்லஸ் நகர விமான நிலையம் காட்டியது. டெல்லஸ் நகரத்து ஷெரன் ஏரிக்கரை வீட்டில் இருக்கும் பேரன், மகள், மருமகன் ஆகியோருடன் நேற்று இணைந்து கொண்டபோது இந்திய நேரம் இரவு 2.30 அமெரிக்காவின் டல்லஸ் நகரம் பகல் 01.00. தூங்கும் நேர மாற்றத்தைக் கடக்க நினைத்து ஏரிக்கரையில் ஒரு சிறுநடை. பின்னர் பக்கத்தில் இருக்கும் ஒரு பேரங்காடிக்குள் நுழைந்து திரும்பியாகிவிட்டது

23 வருட திருநெல்வேலி வாழ்க்கையில் ’பிறந்த ஊர் நெல்லை’ எனச் சான்றிதழ் பெற்றவன்(மே 3) மகள் வழிப்பேரன் நந்தா (ஹர்ஷித் நந்தன்) அவனது ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் அவனோடு இருப்போம். மூன்றாவது பிறந்த நாளில் வார்சாவுக்கு வந்தான். ஆனால் இந்த முறை இருக்க முடியவில்லை. ஓருமாதம் தாண்டிவிட்டது. நேரில் பார்த்து ஓராண்டு கடந்து விட்டது. இப்போது சேர்ந்துவிட்டோம்.

ஜூன் .8

டல்லாஸில் முதல் வாரம்

அமெரிக்காவின் டல்லஸ் நகருக்கு வந்து நேற்றோடு ஒருவாரம் ஓடிவிட்டது. டல்லாஸ் நகரின் கொரிந் பகுதியில் ஷரோன் ஏரிக்கரையில் தனித்தனியாக இருக்கும் வரிசை வீடுகளில் மகள் குடும்பம் இருக்கிறது. நெல்லையிலும் மதுரையிலும் பேரனுக்குச் சுற்றிக்காட்டிய இடங்களுக்குச் சமமாக அமெரிக்காவின் இடங்களைக் காட்டிக்கொண்டிருக்கிறான்.

இது கோடை காலம் சூரியன் இருக்கும் நேரம் 16 மணி நேரத்திற்கும் அதிகமாகவே இருக்கிறது. எப்போதும் காலை ஐந்தரை மணிக்கு எழுந்து பழக்கப்பட்ட எனக்கு இங்கும் அதே பழக்கம் தொடர்கிறது. விழித்துப் பார்த்தால் நம்மூரில் ஆறரைமணி போல் வெளிச்சம் இருக்கிறது. 7 மணிக்கெல்லாம் வெள்ளை வெயில் கண்களைக் கூசச்செய்கிறது. 30 செல்சியல் வெப்பநிலைக்குக் கீழே இருக்கிறது. ஆனால் வியர்வை இல்லை. 21 மணி வரை சூரியனின் கதிர்கள் தெரிகின்றன. இரண்டு நாட்கள் நள்ளிரவில் இடியுடன் கூடிய மழை .

காலையின் மழை பெய்த அடையாளங்கள் இல்லை. சாலைகளில் வேகமாக கார்கள் ஓடுகின்றன. எட்டுமணிக்கெல்லாம் பணியிடங்களுக்குச் செல்லும் பரபரப்பு . முதலிரண்டு நாட்கள் காலக்குழப்பத்தில் தூங்கி வழிந்தாலும் வாரக்கடைசி நாட்களான சனி, ஞாயிறு உற்சாகமாக ஓடிவிட்டன. பாரம்பரிய அடையாளம் கொண்ட கொண்டாட்டம் ஒன்றையும் முதல் பத்து இடங்களுக்குள் இருக்கும் அமெரிக்க அருங்காட்சியகம் ஒன்றும் வியப்பை அழித்தன. அமெரிக்காவின் கோடை காலத்திற்கான ஆடைகள் வாங்கி இரண்டு பேரங்காடி வளாகங்களுக்கும் போய்வந்தாயிற்று. மேற்கு நாடுகளிடம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று. சுத்தமான சுற்றுச்சூழல். மாசுபடாத காற்று. நீர்நிலைகள் கொண்ட குடியிருப்பு வளாகங்கள். எதிரே வருபவர்களுக்குப் புன்னகையோடு கூடிய வணக்கங்கள்..

ஜூன் 24

காலை 7.30 க்கு வீட்டிலிருந்து கிளம்பி இடையில் அரைமணி நேர நிறுத்தம். தொடர்பயணம். 12.45 வாக்கில் ஹேமிகிருஷ் வீட்டில் மதியம் சைவச்சாப்பாடு. 3.30 வாக்கில் கிளம்பி மீன்வளக்காட்சியகத்தில் சுற்றல். 6.30 ஆகியபின் கணேசன் வீட்டிற்குப் பயணம். நாசாவைத்தாண்டி இருந்த து. ஒருமணிநேரத்தில் போய்விட்டோம். ஒருமணி அறிமுக உரையாடல். வீட்டிலிருந்து அருகில் இருக்கும் இந்திய மெக்சிகன் உணவகத்தில் சாப்பாடு. திரும்பி வந்து தூக்கம்.

இந்தியக்குடும்பங்களில் பெண்களின் பாடுகளை விவாதித்த கதைகளைக் கொண்டஅவரது நெட்டுயிர்ப்பு தொகுதியை வாசித்தபோது தமிழ்நாட்டுக்கு வெளியில் இருக்கும் எழுத்தாளராக இருக்கலாம் என்பதற்கான அடையாளங்கள் இருந்தன. விமரிசனத்தை வாசித்துவிட்டுத் தொடர்புகொண்டு பேசியபோது எனது எண்ணம் உறுதியானது. அப்போது பெங்களூரில் இருப்பதாக அறியமுடிந்தது.

இன்று அமெரிக்காவில் ஹூஸ்டனில் நகரில் கணவர் கிருஷ்ணனுடன் தமிழ்ச்சங்கத்தில் நடந்த உரைக்கு வந்திருந்தார். சந்தித்த நினைவுக்கு அவர் அளித்த நினைவுப்பரிசைப் பெற்றுக்கொண்ட போது, இனி எழுதும் கதைகளில் மேற்குலக வாழ்வியலும் கீழைத்தேய வாழ்வியலும் சந்தித்து விலகும் கதைகளை எழுதுவீர்கள் என நினைக்கிறேன் எனச் சொன்னேன். தனது கதைகளைப் படித்து எழுதிய ஒரு விமரிசகரைப் பார்க்க வந்தது மகிழ்ச்சியாக இருந்தது. எழுத்தாளர் ஹேமிகிருஷ்/ இணையருக்கு அன்பும் வாழ்த்தும்.

ஜூலை .1

நியுமெக்சிகோவில் மணநாள் கொண்டாட்டம்

முந்திய இரவு நேரக்குழப்பங்களால் சரியாகத்தூங்கவில்லை. காலை 4 மணிக்கு எழுந்து, மகிழ்ச்சியான கொண்டாட்டம் என்ற பதிவை எழுதினேன்: மகிழ்ச்சிக்குரிய கொண்டாட்டம். நினைவில் இருக்கும் நாளொன்றில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. நேற்று அந்த மகிழ்ச்சி வாய்த்தது.

ஐரோப்பியர்களின் வருகைக்கு முந்திய அமெரிக்கர்களின் நினைவுச்சின்னம் இருக்கும் மலைப்பிரதேச நகரம் தாவோஸ். அங்கிருக்கும் மெக்ஸிக உணவகத்தில் இரவு உணவுக்குப் பின் பனிக்குளிர்மை கூடிய கேக் ஒன்றைப் பங்கிட்டுத் தின்று கொண்டாடினோம். மகள் குடும்பம் மகன் குடும்பமும் உடன் இருந்தார்கள். 10 மணி நேரப் பயணங்களுக்குப் பின் ஒன்றிணைந்த மனநிலை. மகிழ்ச்சியானது.மகன் ராகுலன் குடும்பம் 9 ஆண்டுகளாக அமெரிக்காவிலும் கனடாவிலுமாக இருக்கிறது. மகள் குடும்பம் சென்னையிலிருந்து புனேக்கு இடம்பெயர்ந்து இப்போது இருப்பது அமெரிக்காவில் .

பல்கலைக்கழகங்களில் பணியாற்றிய எனக்கு ஜூன்,30 கோடை விடுமுறையின் கடைசி நாளாக இருக்கும். அந்தக் கொண்டாட்டத்திற்கென எடுத்த புத்தாடை அணிந்துகொண்டு - ஜூலை முதல் தேதியில் புதிய கல்வியாண்டின் பணிகளைத் தொடங்குவேன். பிள்ளைகள் வேலைக்குப் போனபின்பு நானும் மனைவியுமாக மட்டுமே கொண்டாடுவோம். பணி ஓய்வுக்குப் பின் கடந்த நான்காண்டுகளாக அந்த நிலையும் இல்லை.

2023, ஜூலை ஒன்றுக்குரிய சூரியன் இன்னும் வந்து சேரவில்லை. தாவோஸ் மலை உச்சிக்குச் சூரியன் வந்து சேர்ந்தவுடன் புத்தாடையோடு அமெரிக்கப் பூர்வகுடிகளின் நினைவிடத்தைப் பார்க்கச் செல்ல வேண்டும். 1982, ஜூன் 30 இல் நடந்த திருமணம், 41 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. இந்த ஆண்டுக்கொண்டாட்டம் புதிய இடத்தில் அனைவரும் - மகள்,மருமகள், மருமகன், மகன், பேரன்கள், பேத்தியெனச் சேர்ந்து கொண்டாடிய மகிழ்ச்சிக்குரிய ஒன்றாக நிகழ்ந்துவிட்டது.

 அமெரிக்காவில் சுற்றுலா செல்பவர்களுக்குப் பரிந்துரைகள் இருக்கின்றன. நியு நியுமெக்சிகோவில் பயணம் செய்ய ஏற்ற மாதம் ஜூன். பரப்பளவில் ஐந்தாவது இடத்திலிருக்கும் இம்மாநிலம், மெக்சிகோவின் அருகில் இருக்கிறது. பெரும் காட்டுப்பகுதியில் பண்பாட்டு அடையாளங்களும் சாகசப் பயண இடங்களும் விரவிக் கிடக்கின்றன. கடுங்கோடைக்காலத்தில் குறைந்த ஆடைகளோடு காடு, மலைப்பிரதேசங்கள், அருவி, மணல்திட்டைகள் எனத்திரிகின்றார்கள். தாவோஸ் பாப்லோவில் அமெரிக்காவில் தொல்குடிக்கிராமம் ஒன்று அதன் பழைமை மாறாமல் பாதுகாக்கப்படுகிறது. அந்தக் கிராமம் இருக்கும் தாவோஸ் பாப்லோ நகரின் பெரும்பாலான கட்டடங்களும் அதே வண்ணம் கொண்ட சாயலோடு இருக்கின்றன. ஓரிடத்தைப் பண்பாட்டுக்காட்சியாக மாற்றுவதில் முழுமையைக் கொண்டுவருகிறார்கள்.



ஒருநாள் பயணத்தில் நாங்கள் பார்த்ததில் தாவோஸ் பாப்லோவிற்கு இணையாக மணல் மலைக்காட்சிகளைச் சொல்லலாம். பத்துமைல் சுற்றளவுக்குள் பனி உருகி ஓடிவரும் அருவி, விரிந்து பரந்து கிடக்கும் சூடேறித் தகிக்கும் மணல் திட்டைக்கள், பெரிய மரங்களோ, செடிகளோ வளராத காடுகள் என பரந்து விரிகின்றன. பாலைவனமாக இல்லாமல் பீடபூமியாகக் காட்சிதரும் அப்பகுதியை இரண்டாகப் பிரித்து ஒரு நதி அடியாழத்தில் ஓடுகிறது. அந்நதியின் மீது ஒரு பாலம். 650 அடிப் பள்ளம் கொண்ட நதியைப் பாலத்திற்குப் பக்கத்திலிருந்து பார்க்கும்போது தலைக்கிறக்கத்தை உணரமுடிந்தது.

மதிய உணவை ஜக்கட்டா அருவிக்குப் போகும் முன் அங்குள்ள பெஞ்சில் சாப்பிட்டோம். தக்காளி சாதம்.மலையேற முடியாது என்ற நிலையில் நானும் விஜயாவும் அருவிக்குப்போகவில்லை. சாப்பிட்ட இடத்தில்  ஓய்வு எடுத்துக்கொண்டோம். அங்கிருந்து மணல் மலைக்குப்போய்விட்டு அலமோசாவின்   ட்யூன் இன் என்னும் விடுதிக்குப் போனோம். இரவு தங்குவதற்கு முன்பதிவு செய்திருந்தோம். அங்கு போவதற்கு முன்பு தாய் ஹவுஸ் என்னும் தாய்லாந்துவகை உணவு கிடைக்கும் விடுதியில் சாப்பிட்டோம். வோட்கா சாப்பிட்ட தால் நல்ல தூக்கம்

  ஜூலை , 29

ஒட்டாவாவிலிருந்து டொரண்டோ பயணம். காலை 5 மணிக்கு எழுந்து 6 மணிக்குச் சாப்பிட்டுவிட்டேன்.ஆனால் 6.40 க்குக் கிளம்பிப் போனோம். வடக்குக் கனட்டா பகுதி பேருந்து நிலையம். சரியாக 7.25 க்குப் பேருந்து வந்த து. இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு ஓரிட த்தில் நிறுத்தம். அங்கேயே சாரல் தொடங்கி விட்ட து.  நாலரை மணி நேரப் பேருந்துப்பயணத்தில் பாதி நேரம் மழையின் மூட்டம்.  டொரண்டோவுக்குள் நுழையும்போது கடும் மழை. 12.10 க்கு இருபது நிமிட த்தாமத த்தில் சேர்ந்த து.  சிவம் முருகுபிள்ளைக்குப் பதிலாக சின்னசிவா வந்திருந்தார்.  அவரோடு அவர் வீட்டுக்குப் போய் ஓய்வெடுத்து மாலை 5.30 க்கு சிவா முருகபிள்ளை வந்து அழைத்துப்போனார். ஒரு தேவாலயத்தின் அடித்தள அரங்கில் கூட்டம். 85 பேர் வந்திருந்தார்கள். நல்ல உரையை நிகழ்த்தினேன்.

கனடாவின் டொரண்டோ நகரில் நடந்த ஆ.சி.கந்தராஜாவின் நாவல் வெளியீட்டு நிகழ்வுப் படங்கள். நண்பர் சேரனும் நானும் நாவல் குறித்து விரிவாகப் பேசினோம். ஜவஹர் எனது பேச்சுக்குப் பிறகு வந்தார். அவரையும் உடன் அழைத்துக்கொண்டு சிவா வீட்டில் தங்கினோம். கந்தராஜா கொண்டுவந்த சரக்கைப் பாதி காலி செய்தோம். நான் 12 க்குப் படுத்துவிட்டேன்.  அவர்கள் இருவரும் 2 மணி வரை பேசிக்கொண்டிருந்தார்கள்

ஆகஸ்டு. 1

அதிகாலை விழிப்பு இல்லை. 6.30 க்கு எழுந்து சில பதிவுகள் எழுதிவிட்டுக் குளித்து இட்லி 3 சாப்பிட வயிறு நிரம்பியது. வெட்டிவேலு மகன் வீட்டிலிருந்து கிளம்பி சேரன் வீடு போய்ச் சேர்ந்தபோது 11. அவரோடு பேசிக்கொண்டே இருந்தேன். மனைவி செரினும் இரண்டு நாய்களும். பிள்ளைகள் கணுவாய்ப்பயணம் போயிருந்தார்கள்.

 பிறகு அவரது வீட்டின் அருகில் இருக்கும் சிறு அங்காடிகளின் கூடத்தில் சுற்றி வந்தோம். மதிய உணவை அங்கேயே முடித்துவிட்டு வந்து மதியம் நல்ல ஓய்வு. நாலரை மணிவாக்கில் எழுந்தேன். சேரன் வெளியே போயிருந்தார். செரினும் நாய்களும் கிளம்பிவிட்டனர் அவர் வருவதற்குள் சில பதிவுகள் எழுதி முடித்தேன். 5.30 முதல் நண்பர்கள் வரத்தொடங்கினர். முதலில் வந்தவர் ஜயங்கரன். அடுத்து தங்கமணி. ஆசிக- கிழத்தியோடு, சிவம் லெனின்,தேவகாந்தன், திலீப்குமார், நாடகர் துஷ்சே, விக்கினேஸ்வரன், உரைகளும் உரையாடல்களும் உண்டாட்டும் முடியும்போது மணி 12

காலையில் எழுந்து பதிவுகள் எழுதிக்கொண்டிருந்தேன். 9 மணிவாக்கில் காபி, முட்டை, ஒரு வாழைப்பழம் எனக் காலை உணவு கொடுத்துவிட்டுச் சேரன் மருத்துவமனை போனார். போனவுடன் மின்கலம் போதவில்லை. வாகன ஏற்பாட்டிற்கு வெட்டிவேலுவைத் தொடர்புகொள்ளச்சொன்னார். தொடர்புகொள்ள அவர் ஒர்லாண்ட் பக்கம் போய்க்கொண்டிருப்பதாகவும் ஊபரில் ஏற்பாடு செய்யலாம் என்றார். அதற்குள் சேரன் ராஜகுமாரி என்பவரின் எண் அனுப்பி அவர் வந்து அழைத்துச் செல்வார் என்றார். பிறகு சேரனே வந்துவிட்டார் ஒருமணிக்கு. பிறகு பேசிக்கொண்டே கிளம்பி வாடகைக்காரில் ரயில் நிலையம் போனோம். மதிய உணவு வாங்கிக் கொண்டு 13.48 க்கு வரிசையில் நின்றோம். 5 பெட்டிகள் கொண்ட ரயிலில் ஏறி அமர்ந்த சில நிமிடங்கள் அந்தப் பெண் எண்ணருகில் 15 சி இருக்கைக்குரியவள் வந்தாள். எனக்கு 15 டி. இளம்பெண்ணின் அருகிருப்பு தரும் குறுகுறுப்பு. 14.18 க்கு ஒரு நிமிட த்தாமத த்தில் கிளம்பிய போது உணர்த்தியது. இணைய இணைப்புக்கு உதவினாள். பாட்டில் திறக்க உதவினாள். பேசிக்கொண்டோம். இந்தியாவிலிருந்து வந்துள்ள பேராசிரியர் என்றேன். தான் வணிகவியலில் கணக்கியல் படிக்கும் மாணவி என்றாள். ஒட்டாவாவிற்குப் போகிறாள். நான் பாலோவ்பீல்டில் இறங்கிக் கொண்டேன். அப்போது மணி 18.40. தாமதம் 18 நிமிடங்கள். வீட்டிற்கு வந்து உண்டபின்னும் தூக்கமில்லை. இரவுகள் தூக்கமில்லாதனவாக ஆகிக் கொண்டிருக்கின்றன.



ஆகஸ்டு.5

முதலில் காலை 5 மணிக்குக் கிளம்புவதாகத் திட்டம். ஆனால் இரவு 11 மணிக்கு வந்த செய்திப்படி ஆக்டென்ஸ்பெர்க் குட்டி விமானம் ஒருமணி நேரம் தாமதமாக க்கிளம்பும் என்று தெரிந்த து. அதனால் 6 மணிக்குப் பிறகு கிளம்பினோம். 8 மணிக்கெல்லாம் அங்கு போய்விட்டோம். பிறகு அங்கிருக்கும் வால்மார்ட்டிற்குள் போய் இருந்துவிட்டு விமான நிலையத்திற்கு எட்டரைக்கும் போனோம். அங்கேயே சாப்பிட்டுவிட்டு விமானத்தில் ஏறி பிலெடெல்பியா போன போது 11. வாடகைக்குக் கார் எடுத்துக்கொண்டு ஊர் சுற்றல். விடுதலை ஒப்பந்தக் கட்டடம் டெலவர் ஆற்றங்கரைப் பூங்கா, காதல் சதுக்கம், பிராங்க்ளின் வட்டம் எனப் பார்த்த தோடு காரில் குறுக்கும் நெடுக்குமாகத் திரிந்துவிட்டு விமான நிலையம் போனபோது மணி 5.

ராகுலனுக்கு 6.40 க்கு விமானம். எங்களுக்கு 8.33. சரியாகவே கிளம்பின. ஆனால் டல்லஸில் சரியாகவே 11.15 க்குத் தரையைத் தொட்ட விமானத்திலிருந்து வெளியேற ஒன்றரை மணி நேரம் ஆனது. வீட்டுக்கு வந்தபோது மணி 1.20
ஆகஸ்டு 13

லண்டனிலிருந்து பௌசர் ஒருங்கிணைக்கும் தமிழ்மொழிச் செயல்பாட்டகம் ஏற்பாடு செய்த மெய்ந்நிகர் உரைச்சொற்பொழிவு வரிசையில் முதல் சொற்பொழிவு. அமெரிக்காவின் டல்லாஸ் நேரம் 9 மணிக்கு. இந்திய நேரம் முன்னிரவு 7.30. அதற்குத் தயாராக வேண்டி காலைநடை போகவில்லை. இரண்டு மணி நேரம் நடந்த உரையாடல் திருப்தியாக இருந்த து. பகல் ஓய்வுக்குப் பின் டல்லாஸ் நகரில் மருந்துக்கம்பெனிகள் நட த்தும் சுப்பு பழனிச்சாமியோடு விருந்துக்கு செல்லத் தயார் ஆனேன். சரியாக 5.30 அழைத்துச்சென்றார். 8.30 க்குக் கொண்டு வந்து விடுவேன் என்று சொன்னார். ஆனால் செல்வக்குமார் என்ற தகவல் தொழில்நுட்ப அதிகாரியின் வீட்டுக்குப் போய் பேசிக்கொண்டிருந்தபோது 7.30. பிறகு அங்கிருந்து ஷீபுட் உணவுவிடுதி- குடியமர்வும் உண்டு போய் சாப்பிட த்தொடங்கி, முடிவதற்கு ஒருமணி நேரம் முன்பு சக்திவேல் வந்தார். அவர் தான் மெட்ரோப்ளக்ஸ் தமிழ்ச்சங்கத்தின் பொருளாளர். வீட்டிற்கு வந்து சேரும்போது மணி 11. பிறகு ஹர்ஷித்தோடு மூன்று சீட்டு விளையாண்டபின் தூங்கினேன்.

ஆகஸ்டு.19

காலையில் டெண்டன் நகரப்பகுதியில் இருந்த உழவர் சந்தைபோன்ற சமூக அங்காடிப்பக்கம் போய்விட்டு வந்தோம். பின்னர் மாலை மெட்ரோபிளக்ஸில் உரை. 2.45 க்குக் கிளம்பிப்போய்ச் சேரும்போது மணி 3.30. உயில் எழுதும் விழிப்புணர்வுக்கூட்டம் 4.30 க்குப் பேச்சு ஆரம்பம். பேசி முடித்தபோது மணி 6. அங்கிருந்து பிளவர்மவுண்ட் பகுதியில் வந்து இரவுச் சாப்பாடு முடித்து வீடு வந்தபோது மணி 9.

செப்டம்பர். 24

பாலக்காட்டில் இருக்கும் மஞ்சுளா வீட்டிற்குச் செல்ல ஓட்டுநரை 7 மணிக்கு வரச்சொன்னோம். தாமதமாக வந்தார்.8 மணிக்குக் கிளம்பினோம். அகலியா வளாகம் தாண்டி 7 கிமீ. போய்த்திரும்பினோம். நல்ல வளாகம். பார்க்கவேண்டிய இடம். சிலப்பதிகாரக்காட்சிக்கூடம். ஆம்பி அரங்கு. கூத்தம்பலம் எனச் சிலவற்றைத்தான் பார்த்தோம்

அக்டோபர் 4

காலையில் நடக்கவில்லை. முதல்வரைச் சந்தித்துக் கல்லூரியிலிருந்து விலகிக்கொள்ளும் திட்டத்தைச் சொன்னேன். சில மாற்றங்கள் செய்ய உள்ளோம். கொஞ்சம் பொறுத்திருங்கள் என்றார். 3 மணிக்கு நடப்பதாக இருந்த தமிழ்மன்றக்கூட்டம் தள்ளிப்போனதாகச் சொன்னார். குமரனுக்கு 7 வது நாள் பயிற்சிக்காகச் சென்றேன். சரவணகார்த்திகேயனின் கல்லளை கதை வாசித்து அவரோடு தொலைபேசியில் பேசினேன். நல்ல கதை. ஷோபாசக்தியின் மெய்யெழுத்துவோடு சேர்த்து வைத்து எழுதவேண்டும்.

அக்டோபர் 13

காலையில் செந்தீயின் நூல் வாசிப்பு.  8.15 க்குக் கிளம்பி, பெரியார் பேருந்து நிலையம் பாதையில் அமெரிக்கன் கல்லூரிக்குப் போனேன். 9.20 க்கெல்லாம் போய்விட்டேன். அரைமணி நேரத்துக்கும் மேல் தாமதம். முதல்வரோடு பேச்சு என நீண்ட து. சங்கரதாஸ் சுவாமிகள் நூற்றாண்டு நினைவுத் தொடக்கவிழாவில் உரை. தொடர்ந்து பழநியின் உரை. தொடர்ந்து ‘நான் ரேவதி’ ஓராள் நாடகம். பிற்பகலில் விஎம் எஸ் சுபகுணராஜன், பிரளயனின் உரைகள். இரண்டும் கேட்கப்படாத உரைகளாக மாறிவிட்டன. பிரளயன் இயக்கத்தில் பட்டாங்கில் உள்ளபடி, மத்தவிலாசப்பிரகசணம் என்ற இரண்டு நாடகங்களில் பட்டாங்கில் உள்ளபடியின் காட்சிகள், வசனங்கள், பாடல்கள் என எதுவும் பொருந்தி நிற்கவில்லை. மத்தவிலாசப் பிரகசணத்தில் நடிகர்களின் பங்களிப்பு சிறப்பு. இடையிடையே வரும் சமயங்களின் கருத்தியல் முரணின் வழி நிகழ்கால அரசியல் விமரிசனமாகப் புரிந்துகொண்டு பார்வையாளர்கள் ரசித்தார்கள். முடியும்போது மணி 8.30. இடையில் ஹரீஸில் மினி இட்லி. வீட்டுக்குப் போனபோது 9.45.

சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு நூற்றாண்டுக்கருத்தரங்கம் & நாடக விழாவில் இன்றும் நாடகங்கள் நிகழ்த்தப்படும்.முடிந்தபின் எழுதவேண்டும்

புகுமுக வகுப்பில்( PUC/1974-75 ) தங்கியிருந்த வாலஸ் விடுதி,அறை எண்,28-க்குப்போய் இப்போது தங்கியிருக்கும் நண்பரைச் சந்தித்தேன்.அமெரிக்கன் கல்லூரியில் தரவு அறிவியல் படிக்கப் பாளையங்கோட்டையிலிருந்து வந்துள்ளார் . தொடர்ந்து மாணவனாகவும் ஆசிரியராகவும் அமர்ந்த வகுப்பறை, நாடகங்கள் பார்க்கவும் போடவும் உட்கார்ந்த அரங்கின் முன்வாசலென நினைவுகளைச் சுமந்தபடி நகர்ந்தன அந்த இரண்டு நாட்கள்(13,14)

நவம்பர் 11,12

சத் தர்ஷன் இரண்டு நாள்

சத் தர்ஸன் போவதற்குத் தயாரானோம். 2 மணிக்குக் கிளம்பவேண்டும். அட்டப்பாடியிலிருந்து வாடகைக்கார் ஏற்பாடு. 2.35 க்கு வந்தார். சத் தர்ஸனுக்குப் போனபோது மணி 3.40. ஜே.14 தங்கினோம். 6.30 -க்கு சிறிய அறிமுகமும் ஏன் வந்திருக்கிறோம் என்பதைச் சொன்னபின் ஆனந்தகுமார் உடலின் இருப்பு, இல்லாமல் போவது, தற்காலிக மரணம், கொண்டாட்டம், லயிப்பு, ஆச்சரியம் எனப் பேச்சுகள் நடந்தன. தொடர்ந்து கலையும் பேசினார். அங்கிருந்து இருட்டையும் மின்மினிகளையும் உணர்தல் என நகர்ந்தோம். வெளிச்சத்திலேயே கவனமாக நடக்கவேண்டிய கல்பாவிய பாதை. மரங்களுக்கிடையே மின்மினிகளின் அலைவு.  படியிறங்கி, நெளிவுகள் கடந்து அரைமணி நேரம் உட்கார்ந்து மின்மினிகளைப் பார்த்துக்கொண்டிருந்தோம். மறைந்து வெளிப்படும் வாழ்க்கை. சிறு உயிர் சொல்லும் தற்காலிக மரணமும் உயிர்ப்பும். 

7.30 முதல் சாப்பாடு. இட்லி, கிச்சடி சாப்பிட்ட பின் 8.45 க்கு மறுபடியும் அமர்வு. சத் தர்ஸன் பற்றிக் கலை அறிமுகம் செய்தார். அவரது உரை உள்ளிழுக்கும் சொற்களைக் கொண்ட உரை. சொல்லோடு உடலும் இணையும் லாவகம். நடிப்பின் கூறுகளை மிகையில்லாமல் வெளிப்படுத்தினார். இனி இருக்கப்போகும் இரண்டு நாளில் என்ன செய்வோம் என்று சொன்னார். ஒருநாளைக்கு மட்டும் விரிவாக விளக்கினார். மௌன இருப்பு. எண்ணெய்க்குளியலுக்கான வரிசை. இரண்டு பிரிவுகளாகப் பிரித்து காலை 6 முதல் 9.00 வரை 13 பேர். 10 .00 முதல் 01.00 வரை மீதமுள்ளவர்கள் எனப் பிரித்தார். அறைக்கு வந்து 9.30 க்கெல்லாம் தூங்கிவிட்டோம். நல்ல தூக்கம்.

காலையில் 6.30 -7,00 வரை அமைதி அமர்வு. முதல் வரிசை எண்ணெய்க்குளியல் இருந்த தால்   அமைதி அமர்வுக்குப் போகவில்லை. 7.00 மணி எண்ணெய்த் தேய்ப்புக்குப் போய் அமர்ந்தோம். அது முடியும்போது மணி 8.00. பிறகு ஆற்றில் குளியல். ஆற்றங்கரைக்கல்லில் எண்ணெய்யோடு அமர்ந்த பின் ஆற்றில் இறங்கி சிகைக்காய் தேய்த்துக் குளித்துவிட்டு வரும்போது கண்ணில் எண்ணெயின் இறக்கம் தெரிந்தது. காலை உணவாகக் கஞ்சியும் இட்லியும்.

அங்கிருக்கும் வேலைகளில் பங்கேற்றுச் செய்யும் சேவைகளில் ஈடுபட்டோம். மனைவி வழக்கம்போல வீட்டில் செய்யும் சமையல் வேலைகளில் பங்கெடுத்துக்கொண்டார். காய்கள் வெட்டுவதில் ஈடுபட்டுவிட்டுத் திரும்பினார். நான் ஈடுபடவில்லை. ஒருநாளில் மட்டும் அடையாளத்திற்குச் செய்வதில் ஆர்வம் இருப்பதில்லை. வந்தவர்களில் பலர் குப்பை கூட்டுதல், கழுவுதல் போன்ற வேலைகளைச் செய்தார்கள். மழைக்காலமாக இருந்த நிலையில் செடிகளுக்கு நீர் பாய்ச்சுதல் போன்றனவற்றில் ஈடுபடவில்லை. அங்கு நடக்கும் கட்ட ட வேலை, வண்ணம் தீட்டல் போன்றவற்றில் ஈடுபடுவார்களாம்.

எண்ணெய்க்குளியலுக்குப் பிறகு தூங்காமல் இருப்பது நல்லது என்பதால் சத் தர்ஷன் வளாகப்பாதைகளில் நடந்து படம் பிடித்துக்கொண்டு திரிந்தோம். மதிய உணவுக்காகச் சரியாக -01.30 க்கு மணி அடித்தது. சாப்பிட்டு விட்டு வந்து சிறிய தூக்கமாக அரைமணி நேரம் தூங்கினேன். வழக்கமாகத் தூங்குவதுதான். 03.30 க்கு ஆனந்தகுமாரின் பயிற்சி வகுப்பு இருந்த து. அதில் உடம்பின் முதன்மையான மையங்களைக் கண்டறிந்து தட்டிக்கொடுப்பதற்கான பயிற்சியை செய்ம்முறைப் படுத்தினார். கால்மடக்கு, இடுப்பு, வயிறு, மார்பு, அக்குள், கழுத்துப் பின்புறம்,தலையில் முன்னாலிருந்து பின்னால் வரை,நெற்றி, காது, கண், வாய் என 11 இடங்கள். ஒவ்வொரு இட த்தைத் தட்டுவதற்கும் இடையில் மூச்சை உணர்தல் என அரை மணி நேரம் செய்யலாம். கடைசியில் தூக்கம் வரும் தூங்கலாம்.

தேநீர். தேநீருக்குப் பிறகு மலையேற்றம். ஐந்து மணிக்குத் தொடங்கி 6.15 க்கு வந்தார்கள். நான் மலையேறவில்லை. அதே நேரத்தை நானும் விஜயும் நடை போனோம். தொடர்ந்து மின்மினிப்பூச்சிகளின் வெளிச்சத்தில் லயித்திருந்தோம். உணவுக்குப் பின் இரவு கலையின் வகுப்பு -பிரபஞ்சத்தின் அமைப்புக்கும் மனித உடல் வாகின் அமைப்புக்கும் இணைவைத்துச் சொன்ன செய்திகள் ஏற்கத்தக்கன அல்ல என்றாலும் அந்தப் பெண் சொன்ன லயமும் உடல் மொழியும் கவனிக்கத்தூண்டின.

டிசம்பர் 3

ஊருக்குக் கிளம்பும் நாள்.  8.45 மணி வாக்கில் ஆல்வின் பேக்கர்ஸ் & மூவர்ஸ் ஆட்கள் வந்தனர். கிரேஸா எனப்பெயர் மாற்றப்பெற்ற அஸ்வினியில் இட்லி சாப்பிடப்போனோம். பொருட்களை எடுத்துக் கட்டிமுடிக்க ஒரு மணி ஆனது. மதியம் அங்கேயே பிரியாணி சாப்பிட்டோம். வாகனம் காந்திபுரம் போய் சீர் பொருட்களை இறக்கிவிட்டு வந்து ஏற்றிமுடித்து 3.45க்குக் கிளம்பிவிட்டோம். இடையில் ஒரு தேநீர், திலகாவில் இரவு உணவு என முடித்து வீடு வரும்போது 8.45. பொருட்களுடன் வாகனம் 9.30 க்கு வந்து சேர்ந்தது. கட்டில், இருக்கைகளைச் சேர்த்து கொடுத்தார்கள். எல்லாம் முடித்தபோது மணி 11.20. சாப்பாடு செலவு + வண்டி வாடகை -16000 + வேலை ஆட்கள் செலவு 500 = 17500

டிசம்பர் 13,14 திருவனந்தபுரத்தில் இரண்டு நாட்கள்

4.15 மணிக்கு விழிப்பு. திருவனந்தபுரம் செல்லத் தயாரிப்புகள். ராகுலும் பானுவும் 7 மணிக்குக் கிளம்பி வேலம்மாள் மருத்துவமனை போனார்கள். 8.20 க்குக் கிளம்பி நடந்து வந்து பேருந்து நிலையம் போய்த் திரும்பவும் வெளியூர்ப் பேருந்துகளில் ஒன்றை – சிவகாசிக்குப் போகும் பேருந்தில் ஏறினேன். 8.45 க்குக் கிளம்பி 9.10 க்கு விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்ட து. பயணிகளில் 70 சதவீதம் பெண்கள் தான். வேலைக்குப்போகிறவர்களும் கல்லூரிக்குப் போகிறவர்களுமான நிரம்பி வழிந்தது.

பேருந்து நிலையத்திலிருந்து விருதுநகர் சந்திப்புக்குப் போக ஆட்டோ கட்டணம் ரூ.80/ - மூன்று நடைமேடைகள் உள்ள சந்திப்பு நிலையம். மூன்றாவது மேடையில் தெற்கே செல்லும் ரயில்கள்.

பகல்நேரத்துப் பாசஞ்சர்

ஒன்றுக்காகக் காத்திருப்பு

விரைவு வண்டிகளைப்போல

குறித்த நேரத்திற்கு

வருவதுமில்லை;

சென்றுசேர்வதுமில்லை.

காத்திருக்கும்போது

நினைத்துக்கொள்ள

நிகழ்வொன்று இருந்தால் போதும்

தவறவிட்ட ரயிலுக்குப்பின்

முழு இரவும் கழித்த நிலையம்.

வருவதாகச் சொல்லி

வராதவருக்காகக்

காத்திருந்த நினைவுகள்

கைவசம் இருக்கு.

வரும்போது வரட்டும்

அந்தப் பாசஞ்சர்

---------------------

10.10 க்கு வரவேண்டிய விழுப்புரம் – திருவனந்தபுரம் மெயில் 10,30 க்கு வந்து சேர்ந்தது. திருநெல்வேலிக்குப் பிறகு கொஞ்சம் தூக்கம். நாகர்கோவிலில் ஆரஞ்சும் சேவும் சாப்பிட்டுவிட்டுத் தொடரும் பயணம். சரியான நேரத்துக்கு போய்ச்சேர்ந்தது. ஜிதேந்திரன் இருசக்கர வாகனத்துடன் காத்திருந்தார். காரியாவட்டம் வரும் வழியில் ஒரு பழச்சாறு அருந்திவிட்டு வந்து சேர்ந்தபோது மணி 5.  கொஞ்சம் தூக்கம். சுகிதா தொலைபேசியில் வந்தார். இன்னொரு முறை வருவதாகச் சொல்லிவிட்டேன். 8 மணிக்கு அங்கிருக்கும் உணவகத்தில் சப்பாத்தியும் கோழிக்கறியும் சாப்பிட்டுவிட்டு அறைக்குத் திரும்பினேன். தனித்தனிக்குடில் போல அறை. விசாலாமாக இருந்தது. இருவர் தங்கலாம்.

நவகேரளத்தெ

உண்டாக்கிக் களிக்கின்னெ

சேட்டன்மார்களோடும் சகாவுகளோடும் இன்னெயெ காலெப்பொழுது புலருண்ணு

 தமிழ் மலையாளம் நாவல்களின் களம் -TAMIL ,MALAYALAM - THEMES OF NOVELS-இந்தத்தலைப்பில் திருவனந்தபுரத்தில் உள்ள காரியாவட்ட அரசுக்கல்லூரியில் நடந்த கருத்தரங்கத் தலைப்பு. அக்கருத்தரங்கின் நோக்கவுரையை ஆற்றுவதற்காகச் சென்று திருவனந்தபுரத்தில் இரண்டு நாட்கள் இருந்தேன். காப்பிய(Epic )வடிவத்திற்கும் நாவல் ( Novel) வடிவத்திற்கும் தொடர்பிருக்கிறது என்பதைத் தமிழுக்கு முதலில் சொன்னவர் க.கைலாசபதி. எல்லா இலக்கிய வடிவங்களும் மனிதர்களை எழுதுவதையே முதன்மை நோக்கமாகக் கொண்டிருக்கின்றன என்றாலும் காப்பியத்தில் நிலவெளிகள் பதிவுகளும் உணர்த்தும் செய்திகளும் முதன்மை இடத்தைப்பெற்றுள்ளன. பா வகைகளிலிருந்து உரைநடை வகைகளை நோக்கி நகர்ந்த வெளிப்பாட்டுமுறையில் உருவான நாவல் இலக்கியமும் நிலவெளியை விரிவாகப் பதிவுசெய்கிறது. அத்தோடு நிலவெளியைப் பண்பாட்டு வெளியாக மாற்றிச் சமகாலச் சிக்கல்களை விவாதிக்கும் வடிவமாக மாற்றியிருக்கிறது. அமெரிக்காவின் கார்ல் சாசரின் பண்பாட்டு நிலவியல் என்னும் இந்தக் கருத்தாக்கத்தை விளக்கும் விதமாக இலக்கியவியல், இலக்கியத்திறனாய்வியல், இலக்கிய அணுகுமுறைகள் என்ற மூன்றையும் விரிவாகப் பேசிய உரையாக அமைந்தது எனது உரை.

இக்கருத்தரங்கை ஒருங்கிணைத்த ஜிதேந்திரனே ஒரு ஒப்பியல் ஆய்வாளர்தான். கிரிஷ்கர்நாட் -இந்திராபார்த்தசாரதி நாடகங்களை இருத்தலியல் நோக்கில் ஆய்வு செய்த எனது மாணவர். பேசவேண்டிய தலைப்பில் ஆழமும் அகலமும் கொண்ட கட்டுரைகளை வழங்கக்கூடியவர்களையே அழைத்திருந்தார். அவர் ஒருங்கிணைத்த அந்தக் கருத்தரங்கு நான் ஒருங்கிணைத்த கருத்தரங்குகளை நினைவூட்டியது.

 மலையாளம், தமிழ் மொழிபெயர்ப்பு நாவல்கள் என்ற தலைப்பில் உரையாற்றிய முனைவர் ப.விமலாவும், ஒப்பீட்டு நோக்கில் தமிழ், மலையாள நெய்தல் நாவல்கள் குறித்து உரையாற்றிய முனைவர் கி.பிரபாகரனும் விரிவான தகவல்களோடும்

 ஆய்வுப்பார்வையோடும் உரைகளை வழங்கினார்கள். தனது ஆய்வுக்காக 57 நாவல்களை வாசித்ததாகக் குறிப்பிட்டுவிட்டு இந்தக் குறிப்பிட நேரத்திற்குள் எல்லாவற்றையும் சொல்லிவிட முடியாது என்பதையும் விமலா. அதேபோல் பிரபாகரனும் கடல்புரவாழ்வை எழுதிய இருமொழி நாவல்களில் 20 நாவல்களைக் குறிப்பிட்டு உரையாற்றினார். இவ்விரு உரையும் மிகுந்த நம்பிக்கையூட்டிய உரைகளாக இருந்தன. நிதானமும் ஆய்வுப்பார்வையும் கொண்ட அடுத்த தலைமுறை ஆய்வாளர்கள் கல்விப்புலத்தில் இருக்கிறார்கள் என்ற மகிழ்ச்சியை தந்தது.

காரியாவட்டம் அரசுக்கல்லூரியில் தமிழ்த்துறை என்பது ஓராசியர் துறை. இந்தியமொழிகள் என்னும் பாடத்தில் தமிழ் படிக்க வருபவர்கள் எண்ணிக்கை குறைவு. ஆங்கில மொழியும் மலையாளமும் தவிர உருது, அரபி, பிரெஞ்சு இந்தித்துறைகள் ஓராசிரியர் துறைகளாக இருக்கின்றன. ஓராசிரியர் துறைக்குக் கூடக் கேரள அரசின் கல்வித்துறை கருத்தரங்கிற்கு நிதி வழங்குகிறது என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. அத்தோடு இக்கருத்தரங்கில் அக்கல்லூரியின் மொழித்துறை ஆசிரியர்கள் அனைவரும் பங்கேற்றுப்பேசினர். மூன்று மாணவிகள் பம்பரமாய்ச் சுழன்று வேலைசெய்தார்கள். அவையும் மகிழ்ச்சியைத்தந்தன. இக்கல்லூரியில் மட்டுமல்லாமல் சித்தூர், பாளையம் பல்கலைக்கழகக்கல்லூரித் தமிழ்த்துறைகளும் இந்த மாதத்தில் தமிழுக்கான கருத்தரங்குகளை நடத்தும் அறிவிப்புகளையும் நிகழ்ச்சி நிரல்களையும் அனுப்பியுள்ளன. இவற்றைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாகவும் இன்னொருபுறம் பெரும் வருத்தமாகவும் இருக்கிறது.

மகிழ்ச்சிக்குக் காரணம் கேரள அரசின் கல்லூரிக்கல்வித்துறை. வருத்தத்திற்குக் காரணம் தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை. தமிழ்நாட்டில் கல்விப்புலக் கருத்தரங்கம் என்றால் பெரும்பாலும் பல்கலைக்கழகத் துறைகள் நடத்துவன மட்டும் தான். அவையும் இப்போது இறங்குமுகத்தில் உள்ளன. எண்ணிக்கையில் கூடுதலாக அறக்கட்டளைகளைக் கொண்ட மூத்த பல்கலைக்கழகங்கள் தான் கருத்தரங்குகளை நடத்துகின்றன. புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் பொதுவான செலவுகளுக்கே தள்ளாடுகின்றன. தமிழக அரசின் கல்லூரிக்கல்வி இயக்ககம் கல்லூரிகளுக்குக் கருத்தரங்கம் நடத்த நிதியே வழங்குவதில்லை. பள்ளிக்கல்வித்துறையாவது கலைத்திருவிழா, இலக்கியவிழா, போட்டிகள் என மாணவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்குப் பணம் ஒதுக்குகிறது. தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டே கல்லூரிக்கல்வியை தொடர்ந்து இயக்கிவிடமுடியும் என நம்புகிறது.

 பாளையம் பேருந்து நிலையத்தில் தமிழ்நாட்டரசின் பேருந்தில் அடித்துப்பிடித்து ஏறி அமர்ந்தபோது மணி 4.50. பதினைந்து நிமிடங்கள் கழித்துக் கிளம்பி ஒவ்வொரு ஊரிலும் நின்று நாகர்கோவில் போய்ச் சேர்ந்தபோது மணி 7.50. சுசீந்திரம் தாண்டி ஒரு சாலையோரக்கடையில் சாப்பிட்டுவிட்டு ஓசன் சைடு ரெஸ்டாரண்டின் அறைக்குப் போய்த்தூங்கினேன்.

டிசம்பர் 30

 மதியம் வரை புத்தக வேலை. தொடர்ச்சியாக 6 மணி நேரம். சாப்பிட்டபின் ஒருமணி நேரம் ஓய்வு. 3.30 க்குக் கிளம்பி ஆளஞ்சல் அனுப்பிவிட்டுப் பேருந்து பிடித்து ஷெனாய் நகரில் இறங்கினேன். அமெரிக்கன் கல்லூரிக்கு ஜம்புரோ விடுதிக்குப் பக்கமாக ஒரு வாசல் இருக்கிறது; அதன் முன்னால் ஒரு படம். கார்த்திக்  வாகனத்தோடு ஆளனுப்பினார். சேவாலயம் சென்று வேடிக்கை பார்த்தேன். 6 மணி வாக்கில் பேரா. நெடுமாறன் வந்தார். அவரோடு பேசிக் கொண்டிருந்தேன். இளங்கோ கல்லானை, தர்மராஜ், கோகுல், கார்த்திக் எனப் பலரும் முகம் பார்த்தோம். நாடகம் தொடங்கும் முன் கார்த்திக் மேடையேற்றி ஒருதுண்டும் நீர்வழிப்படூஉம் கொடுத்துவிட்டார்.

நாடகம் முடியும்போது லயனலைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தேன். நடக்கத் தொடங்கியபோது பின் தொடர்ந்த லயனல் தனது வாகனத்தில் ஏற்றிக் கொண்டு பெரியாரில் விட்டார். அங்கிருந்து பேருந்து ஏறி வீடு திரும்பியபோது மணி 09.40

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்