ஆண்டாளைச் சுற்றியும் தமிழ்த்தாயை முன்வைத்தும் -சில குறிப்புகள்


· மோதல்-முரண்

· மாற்று-எதிர்

· வேறுபாடு – வித்தியாசம்


§ மோதல் என்ற சொல்லும் முரண் என்ற சொல்லும் ஒரே பொருள் தரும் சொற்கள் அல்ல. மோதல் என்றால் மனம் நினைத்துக் கொள்ளும் அர்த்தம் வேறு; முரண் என்றால் மனம் உணரும் அர்த்தம் வேறு.
§ மாற்று என்ற சொல்லின் பொருளையே எதிர் என்ற சொல்லின் பொருளாகச் சொல்ல முடியாது; சொல்லக்கூடாது. இரண்டும் வேறுவேறு.
§ வேறுபாடு என்ற சொல்லுக்கு இணையான இன்னொரு சொல்லாக வித்யாசத்தைக் கருதமுடியாது; கருதக்கூடாது. ஒன்றிலிருந்து இன்னொன்று வேறுபட்டது.
§ Difference – Differance

கட்டமைப்பியல்வாதியாக அறியப்படுபவர் ழாக்தெரிதா என்னும் பிரெஞ்சுக்காரர். அவர் ஆங்கிலத்தில் இருக்கும் ‘டிபரென்ஸ்’ (Difference) என்ற சொல்லை ஒரேயொரு எழுத்தைத் தன்னுணர்வுடன் மாற்றி ‘டிபரான்ஸ்’ (Differa’nce) என்ற சொல்லை உருவாக்கிப் பயன்படுத்தினார். அகராதிப் பொருளுக்கும் பயன்பாட்டுப் பொருளுக்குமான அர்த்தத்தளங்கள் மாறுபடுவதை விளக்கும்போது இதையிப்படிச் செய்து மொழியின் விளையாட்டு, அதற்குள் செயல்படும் அதிகாரத்துவ நிலையைக் கட்டுடைத்துக்காட்டினார். ஆனால் கணினியின் திரை தெரிதா உருவாக்கிய சொல்லைச் சரியான சொல் அல்ல என்று காட்டிப் பழைய சொல்லையே திரும்பத் திரும்பக் கொண்டு வந்து நிறுத்துகிறது என்பதும் கவனிக்கவேண்டிய ஒன்று. ஆங்கிலத்தில் அப்படியொரு சொல் இல்லை என்பது கூகிளின் மைக்ரோசாப்ட் நிறுவனம் உருவாக்கியுள்ள பாடம். ஆனால் தெரிதா உருவாக்கிய சொல் பிரெஞ்சுச்சொல்; அவரது தேசமொழியின் சொல். அங்கீகரிக்கப்பட்ட சொல்லும் அதன் அகராதி அர்த்தமும் திரும்பத்திரும்பத் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளப் போராடும் விளையாட்டின் வினைகள் அவை.

*********
1.
 இலக்கியப்பனுவலுக்குள் வெளிப்படும் தகவல்களும் உணர்ச்சிகளும் எழுதியவளின்/னின் தன்னிலை வெளிப்பாடு எனத் தீர்மானமாகப் பேசும் விமரிசனமுறை பனுவலை மட்டுமே ஆதாரமாகக்கொள்ளாது. அப்பனுவலின் காலம் பற்றிய ஒதுக்க முடியாத பிற ஆதாரங்களையும், எழுதியவரின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளின் நம்பகமான தகவல்களையும் கொண்டுதான் முடிவுசெய்யும்.
ஆண்டாளைப் பொறுத்தவரையில் அவள் எழுதிய திருப்பாவை என்னும் 30 பாடல்களும், நாச்சியார் திருமொழி என்னும் 143 பாடல்களையும் கொண்ட பிரதி ஆதாரம் மட்டுமே உள்ளன. இப்பிரதிகளின் வெளிப்பாட்டுத்தன்மை, உணர்வெழுச்சிகள் எல்லாம் ஒரு பெண் தன்னிலையின் உடல் வெளிப்பாடுகளாக இருக்கின்றன; மன வெளிப்பாடுகளாகஇருக்கின்றன. குறிப்பான வெளிக்குரியதாகவும் குறிப்பான காலத்தில் வாசிக்கத்தக்கனவாகவும் அவளை முன்வைக்கின்றன.

கடவுளின் மீதான காதல் என்னும் மையத்தில் நின்றுகொண்டு தன்னை -உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் அளிக்க நினைக்கும் மனநிலை அது. அந்தவகையில் ரசிக்கத்தக்க கவிதை வெளிப்பாடு. இதனைத் தாண்டி அவளைப்பற்றிய தகவல்களும் வரலாறுகளும் கவிதைப்புனைவைவிடக் கூடுதல் புனைவுகள் நிரம்பியவை. புனைவான வரலாற்றைக்கொண்டு அவளைத் தெய்வப்பெண் எனவோ தேவதாசியெனவோ முடிவுசெய்வது இலக்கிய விமரிசனத்தின் எல்லைகளுக்குள் இல்லை. அவையெல்லாம் தனிமனித இச்சைசார்ந்த குறிப்புகள்.

*********************
2
ஆண்டாளை மையப்படுத்திக் கவி வைரமுத்துவை இரண்டு வாரங்களாகத் தமிழகத்தில் ‘வச்சு’ செய்தது ஒருகூட்டம். அக்கூட்டத்தின் மனநிலையையும் அரசியல் உள்நோக்கங்களையும் குறித்துக் கட்டுரையை முடித்து அனுப்ப இருந்த கடைசி நேரத்தில் வெடித்துக் கிளம்பியது இன்னொரு பிரிவினைத்தூண்டலைக் கிளறும் திமிர்த்தனம்.
தமிழ்நாட்டுத் தமிழர்கள் தங்களின் மொழி மற்றும் இனத்துக்கான அடையாளமாக உருவாக்கியிருக்கும் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட ஒருபொது நிகழ்ச்சியில், காஞ்சி காமாட்சி மடத்தின் இளையசாமியார் விஜயேந்திரன் எழுந்து நிற்கவில்லை. ஆனால் இந்திய ஒன்றியத்தின் அடையாளமாக உருவாக்கியிருக்கும் தேசிய கீதத்திற்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தியிருக்கிறார். தான் வாழும் மாநிலத்தின் – அம்மாநில அரசாங்கம் உருவாக்கிய மொழிசார்ந்த அடையாளத்தை மதிக்கவேண்டியதில்லை என்பதைக் காட்டிய இதனைத் திமிர்த்தனம் என்று சொன்னால் ஏற்காத கூட்டம்தான் வைரமுத்துவை வச்சுச் செய்த கூட்டம்.

பெரும்பான்மைத் தமிழ்நாட்டுத் தமிழர்களின் மனம் புண்படும் இந்தச் செயலைக் கண்டித்துக் குரல்கள் எழுந்தபோது, அந்தக் கூட்டம் விஜயேந்திரன் தியானத்தில் இருந்தார் என்றும், தியானம் செய்து கடவுளையே நினைத்துக்கொண்டிருப்பதுபோலத் தமிழ்மொழிக்கு மரியாதை செய்தார் என்றும் முதல் நாள் சப்பைக்கட்டுக் காரணங்களைச் சொன்னது. அடுத்த நாள் தமிழ்த்தாய் வாழ்த்து தேசியகீதம்போலச் சட்ட அங்கீகாரம் பெற்றதல்ல; அதனால் எழுந்து நிற்கவேண்டிய அவசியம் கிடையாது என்று நேரடியாக முரண்டு பிடித்தது.

இந்தியாவைக் குடியரசு நாடாக அறிவிப்பு செய்வதற்கு முன்னால் அனைவரும் ஏற்கத்தக்க சட்ட முன்வரைவு வேண்டும் எனத் தீர்மானித்து உருவாக்கப்பெற்ற அரசியல் நிர்ணயசபை தந்த வரைவு இந்திய அரசியல் சட்டம். பெருமதிப்பிற்குரிய அறிஞர் அம்பேத்கரின் தலைமையில் எழுதியளிக்கப்பெற்ற அரசியல் சட்டம், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறது. ஆனால் சட்டத்தின் முன் அனைவரும் சமமல்ல; பலருக்கு விதிவிலக்குகள் இருப்பதாகவே இந்நாட்டின் அதிகாரத்துவ அமைப்புகள் நடந்து கொள்கின்றன. இந்திய நாட்டின் அரசியல் சட்டத்தைச் செல்லுபடியாக்க வேண்டிய இடத்தில் இருக்கும் அமைச்சரவை, நாடாளுமன்றம், நீதிமன்றம் போன்றன சிலவகையான அமைப்புகளையும் சில தனிநபர்களையும் விலக்கானவர்கள் எனக் கண்டுகொள்ளாமல் இருப்பது அரசியல் சட்டத்திற்கெதிரான நடவடிக்கை என்பதை உணரவேண்டும்.

அரசியல் சட்டம் அல்லது மக்கள் பிரதிநிதிகள் இணைந்து உருவாக்கும் நடைமுறைச் சட்டங்கள் செல்லுபடியாகும் இடங்கள் பொதுவெளிகள் (Public Sphere). அது செல்லுபடியாகாத இடங்கள் அந்தரங்க வெளிகள் அல்லது தனி வெளிகள் (Private Sphere). இவ்விரு வெளிகளையும் பிரித்துப் பார்க்கும் அறிவை ஒவ்வொரு இந்தியருக்கும் அளிக்கவேண்டியது அரசின் கடமை. அதுதான் பொதுக்கல்வியின் நோக்கம். அப்பொதுக்கல்வி அறிவே இல்லாதவர்கள்போல நடந்துகொள்ளும் தனிநபர்கள் தங்களின் அறியாமையைக் காரணம் காட்டித் தப்பிக்கமுடியாது. ஆனால் இந்தியாவில் சிலர் தங்களின் அகங்காரத்தையும் திமிர்த்தனத்தையும் காட்டிவிட்டு அறியாமையின் பேராலும் மரபின் பேராலும் தப்பித்துக்கொள்கின்றனர். சம்ஸ்க்ருதம் – தமிழ் அகராதி வெளியீட்டுவிழாவில் விஜயேந்திரன்  நடந்தகொண்ட முறைமை அறியாமையின் வெளிப்பாடு மட்டுமல்ல; ஆணவத்தின் வெளிப்பாடும்கூட.

காஞ்சி மடத்திற்குள் – தனியறையில் – அவருக்கெனத் தனிமேடை போட்டு அமர்வதும், மற்ற மனிதர்கள் அவரைத் தொடாமல் இருப்பதும் அந்தரங்க நிகழ்வின் பாற்பட்டது; தனிமனித வெளியில் அனுமதிக்கப்படக் கூடியதும்கூட. சில நூறுபேர்கள் பார்வையாளர்களாக அமர்ந்திருக்கும்போது - மாநிலத்தின் ஆளுநர் உள்படப் பலரும் அமரும் மேடையில் அவ்வரிசையைத் தவிர்த்ததோடு அவர்கள் அனைவரையும் தாழ்வானவர்கள் எனக்காட்டும் நினைப்பைத் தரும் வகையில் தனியொரு மேடையில் அமர்வதும், மாநிலத்தின் உணர்வாக, அம்மாநில மக்களின் தேர்ந்தெடுக்கப்பெற்ற பிரதிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மாநிலமொழி வாழ்த்துப்பாடலுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் எழுந்து நிற்காமல் கண்மூடிக் கள்ளம் காட்டுவதும் அடிப்படையான தவறு. அரசியல் சட்டம் சொல்லும் அனைவரும் சட்டத்தின் முன் சமம் என்ற நிலைபாட்டுக்கு எதிரானது. அத்துடன், பொதுமனத்தின் போக்கை நிராகரித்துத் தனது மேலாண்மையை – ஆதிக்க நிலைபாட்டை உறுதியாகக் காட்டும் செயல்.

************* *************
4.
1970 - இல் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற திரு. மு. கருணாநிதி அரசாணை ஒன்றின் மூலம் அரசுத்துறை சார்ந்த பொது நிகழ்ச்சிகளின்போது கடவுள் வாழ்த்துக்குப் பதிலாக மொழிவாழ்த்து இடம்பெறும் என்று அறிவிப்பு செய்தார். பேரா.பெ. சுந்தரம்பிள்ளை எழுதிய மனோன்மணீயம் நாடகத்தில் இடம்பெற்ற ஒரு பகுதியை – தமிழ் மொழியின் பெருமைகளைச் சொல்லி வாழ்த்தும் அந்தப் பகுதியில் சிலவரிகளை நீக்கிவிட்டே மொழிவாழ்த்தாக அறிவித்தார். அந்த வரிகளை நீக்கியதின் பின்னணியில் வெளிப்பட்டது வெறுப்பரசியலை வளர்க்கக்கூடாது என்ற திரு மு.கருணாநிதியின் பண்பட்ட மனம்.

பேரா. சுந்தரம்பிள்ளையிடம் தீவிரமாக வெளிப்பட்டது தமிழ் x ஆரியம் என்ற கருத்தியல் முரண்பாடு. அம்முரண்பாட்டின் தொடக்கம் ஆங்கிலேயர்கள் உருவாக்கியது என்ற கருத்தை இந்துத்துவம் பேசுகிறவர்கள் தொடர்ந்து முன்வைக்கிறார்கள். ஆனால் “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம்” என்ற வெளிசார் அடையாளம் தமிழுக்கு உருவான காலந்தொட்டே இந்த முரண்பாடு உள்ளது. வடசொற்கிளவி என்ற சொல்லாடல் தொல்காப்பியத்தில் உள்ளது. வெளிசார் முரண்பாடு மொழியின் சொல்லாக்க முறை வேறுபாட்டில் உள்ளதை மொழியில் ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. ஒரு சொல்லின் பகுதி அல்லது வேர்ச்சொல், இடைநிலை, விகுதி போன்ற அமைப்புகளில் தமிழுக்கும் சம்ஸ்க்ருத மொழிக்கும் வேறுபாடுகள் உண்டு. ஆரியமென்னும் சம்ஸ்க்ருதம் இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்ப மொழி. அதன் தோற்ற வெளி இப்போதைய இந்தியப்பரப்பு அல்ல என்பதும் மொழியியல் கூறும் உண்மை. அதிலிருந்து பிறந்த மொழிகள் இந்தியத் துணைக்கண்டத்தில் பல்வேறு மாநிலங்களில் -ஹிந்தி, மராத்தி, ராஜஸ்தானி, பஞ்சாபி, வங்காளி, அஸ்ஸாமி, போஜ்பூரி போன்ற வட்டாரமொழிகளாக இன்று இருக்கின்றன.

இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்திற்கு முற்றிலும் வெளியில் இருப்பது தமிழ். தமிழின் மூலமொழி திரமிளம். திராவிட மொழிக் குடும்பத்தின் தொடக்கநிலை. அதிலிருந்து தோன்றி இலக்கணம், இலக்கியம், பண்பாடு போன்றவை குறித்துத் தனித்தனியாகப் பிரதிகளை உருவாக்கி இன்றளவும் நிலைத்து நிற்கும் முதல் மொழி தமிழ். அம்மொழிக்குடும்பத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற இலக்கிய இலக்கணங்கள் கொண்ட மொழிகளோடு குறைந்த எண்ணிக்கையில் பேசும் மக்களைக் கொண்ட குடகு, துளு, கோத்தா, கோண்டா, பிராகூய் முதலான வட, தென், நடுத் திராவிட மொழிகள் இன்றும் இந்தியத் துணைக்கண்டத்தின் தென்பகுதியில் பரவிக்கிடக்கின்றன.

இந்த வேறுபாடு திரும்பத் திரும்ப வலியுறுத்தப்படுவதின் பின்னணியில் ஆதிக்கத்திற்கெதிரான நிலைபாடொன்று இருக்கிறது. சம்ஸ்க்ருதம் என்னும் மூலமொழியிலிருந்தே எல்லா இந்திய மொழிகளும் தோன்றின என்ற கருத்தியலை ஏற்காத மொழி அரசியல் இருக்கிறது. அது மட்டுமல்ல; சம்ஸ்க்ருத வேதங்களையும் உபநிஷத்துகளையும் ஸ்மிருதிகளையும் பிரம்மாணமாகக் கொண்ட வைதீக மதத்தை ஏற்காத மத அரசியலும் உண்டு. தமிழ் நிலப்பரப்பை ஐவகை நிலங்களாக அடையாளப்படுத்தி உருவாக்கப்பெற்ற கருப்பொருள்சார் பண்பாட்டை வலியுறுத்தும் பண்பாட்டரசியலும் அதன் பின்னணியில் இருக்கிறது. பின்னிடைக்காலத் தமிழகத்தில் - சோழர்காலத்தில் அரச மதமாக உருவான சைவத்திற்கும், சம்ஸ்க்ருதக் கருத்தியலோடு நுழைந்த வைணவ சமயத்திற்கும் இடையே உண்டான முரண்பாடுகளும் உண்டு. இவையெல்லாவற்றையும் இந்திய விடுதலைப்போரின்போது விவாதிக்க வேண்டாம்; இப்போதைய தேவை இந்திய நாட்டிற்கு விடுதலையே என்ற பரப்புரை முன்னெடுக்கப்பட்டு விடுதலையும் பெறப்பட்டது.

காலனியாதிக்கத்திலிருந்து விடுதலை அடைவதற்காக ஒதுக்கிவைக்கப்பட்ட கருத்தியல்கள், மொழி அடையாளங்கள், பண்பாட்டுக்கூறுகள், அறிவுத் தோற்றச் சிந்தனைகள் என அனைத்தையும் தேசிய ஒற்றுமை என்னும் பெயரில் கைவிட வேண்டுமென வலியுறுத்துகின்றன தேசியம் பேசும் கட்சிகள். அதற்கு அடங்க மறுக்கின்றன தேசிய இன உரிமையை நிலைநாட்ட விரும்பும் மாநிலக்கட்சிகள். அத்தோடு பிராமணியக் கருத்தியலை – வைதீகச் சடங்குகளை முதன்மையாகக் கருதும் மத அமைப்பு, நால்வருணக் கட்டமைப்பின்மேல் இந்திய சமூகத்தை உருவாக்கிட விரும்பும் நோக்கம் கொண்டது. ப்ராமணர்களை மையத்தில் வைத்துக்கொண்டு சத்திரிய, வைசிய, சூத்திர மற்றமைகளை உருவாக்கி நிலை நிறுத்தியது. அதற்குள் வராதவர்களையெல்லாம் அவர்ணத்தார் எனவும் தஸ்யூக்கள் எனவும் பெயரிட்டுத் தீண்டாமையைச் செலுத்தியது.

சம்ஸ்க்ருத மூலத்தை மறுத்தல், வைதீக இந்துமதத்தை நிராகரித்தல், தேசிய இன அடையாளங்களைத் தக்கவைத்தல் போன்றவற்றைக் காலனிய விடுதலைக்காகத் தள்ளிவைத்தைப் பின்னரும் தொடர வேண்டுமென நினைத்தவர்களுக்குப் பெரும் தடையாக இருந்தவர் பெரியார் ஈ.வெ.ராமசாமி. அவரைப் போலவே தேர்தல் அரசியலுக்குள் செயல்பட்டாலும் தடைகளை உருவாக்கிக் கொண்டே இருந்தவர் மு.கருணாநிதி. இவ்விருவரையும் ப்ராமணியம் முதன்மையாக எதிரிகளாகக் கருதுகிறது. அப்படிக் கருதுவதில் ஆச்சரியம் எதுவுமில்லை. ஆனால் இவர்களை எதிர்க்கும் பலரும் – குறிப்பாகப் பிராமணிய அறிவுஜீவிகள் பெரியாரையும் கருணாநிதியையும் வெறுப்பரசியல் செய்தவர்களாகக் காட்டுவதிலும் அதனை நீட்டிப்பதிலும் தீவிரம் காட்டுவதிலும் உள்நோக்கங்கள் இருக்கின்றன. இந்த உள்நோக்கங்களில் வெற்றிபெறத் திரும்பவும் தமிழ்ப் பெரும்பான்மை, ஆரியச் சிறுபான்மை என்ற நிலைபாட்டை முன்வைக்காமல் இந்துப் பெரும்பான்மை, இந்துவல்லாத சிறுபான்மை என்ற முரண்பாட்டை உருவாக்க முனைகிறார்கள். எந்தக் கேள்வியையும் கேட்காமல் இந்துவாக ஐக்கியமாக வேண்டுமெனக் கோருகிறார்கள். அப்படி ஐக்கியமாகாதவர்களை இந்து மதத்தின் மற்றமையாக -எதிரியாகக் கட்டமைத்து- சிறுபான்மையினராகக் காட்டிவிடத்துடிக்கிறார்கள்.

இந்திய நாடு இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடு என்ற கருத்தியலை உருவாக்கி அரசதிகாரத்தை மத்தியில் கைப்பற்றியுள்ள பாரதீய ஜனதா கட்சி, அதே உத்தியைத் தமிழ்நாட்டிலும் பின்பற்றி இந்துப் பெரும்பான்மையின் ஆதரவு அமைப்பாகத் தன்னை முன் நிறுத்தப் பார்க்கிறது. அந்தச் ‘சதித்திட்ட’ அரசியலுக்குப் பண்பாட்டு நிகழ்வுகள் பெரிதும் உதவும் என்பது அதன் கணக்கு. பொருளாதார அரசியலை விடவும் பண்பாட்டு அரசியல் வெகுமக்களைத் திரட்ட உதவும் என்பது இந்திய போன்ற கீழ்த்திசை நாடுகளில் சோதனை செய்யப்பெற்ற உத்தி என்பதும் உண்மைதான். ஆனால் தமிழ்ப் பெரும்பான்மையை இந்துப்பெரும்பான்மை வெற்றிகொள்ளுமா? என்பதற்கு இப்போது விடையில்லை.
5
வைரமுத்துவை ஆண்டாளின் பெயரால் திணறடித்தவர்கள் சொன்ன வாதம் பெரும்பான்மை இந்துக்களின் மனதைப் புண்படுத்தினார் என்பதுதான். ஆனால் அவரது நோக்கம் அப்படியானதில்லை என்பதை நிதானமாக யோசிப்பவர்கள் அறியமுடியும். அண்மைக்காலமாகத் தனது திராவிடச் சார்பைக் கைகழுவிவிட்டு மைய அரசின் சார்புநிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் வைரமுத்து அதை உறுதியாக்கும் விதமாக திருவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயிலில் அந்த உரையை நிகழ்த்தினார். முழுமையும் ஆண்டாளின் புகழை – அவளின் கவியாளுமையைத் தனது வழக்கமான புனைவியல் மொழியால் விதந்துரைக்கவே செய்தார். ஆனால் அவளது கவிதைக்குள் வெளிப்படும் உடல் சார்ந்த வேட்கையின் தீவிரத்தையும் கவியின் சொந்த நிலைப்பாடாகவும் அனுபவமாகவும் கருதி, இதுபோன்ற வெளிப்பாட்டைச் செய்பவர் தேவரடியார் குலத்தில் பிறந்த தேவதாசியாக இருந்திருக்க வாய்ப்புண்டு என்றொரு கருத்தையும் கூறினார். இந்தக் கூற்றுகூட எனது கூற்றல்ல; நான் படித்த அமெரிக்க ஆய்வாளர் ஒருவரின் கூற்றுதான் என்பதையும் தெளிவுபடுத்தவே செய்தார். தான் படித்த ஆய்வுக்கட்டுரை மேற்கோள் காட்டுவது ஒரு அறிவார்ந்த செயல்பாடு. ஆனால் தமிழ் நாட்டின் பல்வேறு நிகழ்வுகளை முனையாக்க அரசியலுக்குப் பயன்படுத்த வேண்டுமென நினைக்கும் – பாரதீய ஜனதா கட்சியின் சிந்தனையாளர் கூட்டம் அவரை இந்துமத எதிர்ப்பாளராகக் கட்டமைத்து வெகுமக்கள் அரசியல் களத்தில் நிறுத்தினர். அப்படிச் செய்வது அறிவு மறுப்பரசியல்.

ஆண்டாள் பற்றிக் கவி வைரமுத்து பேசிய பேச்சுக்காக அவரைத் திகட்டத் திகட்டத் திட்டித் தீர்த்தவர்களின் பேச்சுமொழி எப்படிப்பட்டது? மனத்தை ஒருங்கிணைத்துத் தன்னை இறைவனிடம் அர்ப்பணித்துவிடத் துடிக்கும் பக்தர்களின் மொழி இப்படித்தான் இருக்குமா? வெவ்வேறு மாவட்டங்களின் நீதிமன்றங்களில் வழக்குத் தொடுப்பது உண்மையான மதப்பற்றுதானா? செயல்பாடுகள் எத்தகையன? நோக்கம் என்னவாக இருக்கும். அந்நோக்கம் நிறைவேறத்தக்க நோக்கம்தானா? இப்படிப் பல கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கின்றன. இப்படியான கேள்விகள் இப்போது மட்டுமே எழவில்லை. இந்திய அளவில் கடந்த 10 ஆண்டுகளாகத் தோன்றிக்கொண்டே இருக்கும் கேள்விகள். தமிழக அளவில் கடந்த ஓராண்டாகத் தீவிரமாக உருவாக்கப்படும் கேள்விகளாக இருக்கின்றன.ஏனென்றால் இப்படிக் கூச்சல் போடுவதின் மூலம் முனையாக்க (Polarization Politics ) அரசியல் செய்ய முடியுமென அவர்கள் நம்புகிறார்கள்.


வெற்று ஆரவாரத்தின் மூலம் இருமுனையாக்க அரசியல் செய்ய நினைப்பவர்கள், வைரமுத்துவிற்கெதிராகப் பொங்கியெழுந்ததைப் போல விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களுக்கெதிராகவும் பொங்கினார்கள். ராமன் பிறந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டுள்ளது என்பதற்காக அதனை இடித்துவிட்டுக் கோயில் கட்டவேண்டும் என்று வாதிடுவது சரியென்றால், இப்போதிருக்கும் பல கோயில்கள் சமண, பௌத்த வழிபாட்டிடங்களைத் தரைமட்டமாக்கிவிட்டுக் கட்டிய கோயில்கள் தானே? அதனையும் இடித்துவிடலாமா? என்ற தர்க்கபூர்வமான கேள்வியைத் திசை திருப்பித் திருமாவளவன் இந்துக்கோயில்களை இடிக்கச் சொல்கிறார். பெரும்பான்மை இந்து மக்களின் மனம் புண்படும்படி பேசிய திருமாவளவனைக் கண்டிக்கிறோம் என்று போராடினார்கள். இதுவும் அறிவு மறுப்பரசியலின் வெளிப்பாடே.


அறிவு மறுப்பரசியல் பெரும்பான்மைவாதத்தின் கருவியாக மாறும்போது மக்களாட்சி வடிவம் காணாமல் போய்விடும். இந்திய அரசியல் அமைப்பு தந்திருக்கும் பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை என அனைத்தும் புறந்தள்ளப்படும். அந்நிலையை நோக்கி இந்தியா பீடுநடை போடுகிறது. இதுவரை தமிழகம் அதற்குத் தடைகல்லாக இருந்திருக்கிறது. இப்போது அத்தடைக்கல்லைத் தகர்க்கும் வேலையைத் திட்டமிட்டுச் செய்வதன் வெளிப்பாடுகளே பெரும்பான்மையினரின் மனம் புண்படுகிறது என்ற பெயரில் நடக்கும் அறிவுமறுப்பு வாதம். அறிவுமறுப்புவாதம் ஆகக்கூடிய ஆபத்து என்பதை அனைவரும் உணர்ந்தாகவேண்டும்.
*********
 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்