கி.ராஜநாராயணன் - புதுச்சேரி - நான் -1

1 .

அமெரிக்கன் கல்லூரி, இரண்டாமாண்டு பட்டப்படிப்பில் சிறுகதை வகுப்பு. பேரா.சுதானந்தா வட்டார இலக்கியம் என்ற வகைமைப்பாட்டை விளக்கிச் சொல்லிவிட்டு “கதவு” கதையை வகுப்பிலேயே வாசிக்கச் சொன்னார். வகுப்பு முடியும்போது நமது துறை நூலகத்தில் அவரது நூல்கள் உள்ளன. இன்று மாலை நூலகம் திறந்திருக்கும். விரும்புபவர்கள் எடுத்துச் சென்று வாசிக்கலாம் என்றார்.  நூலகத்திலிருந்து  கோபல்ல கிராமத்தை - வாசகர் வட்டம் வெளியீடு – எடுத்துக் கொண்டேன்.
2

இளங்கலையில் முதல் இடம் பிடித்ததற்காக அந்த ஆண்டு (1980) கல்லூரி விழாவில் பரிசு கொடுப்பார்கள். மீனாட்சி புத்தக நிலையம் சென்று 30 ரூபாய்க்குள் நூல்களை வாங்கிக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டுப் போனார் பேரா.கி.இளங்கோவன். அமெரிக்கன் கல்லூரியில் பணியாற்றிய பெரும்புலவர் கார்மேக் கோணாரின் பேரன் அவர். அதற்கான ஒரு சீட்டும் கொடுத்தார். அதனை எடுத்துக் கொண்டு மதுரை மேலக்கோபுரவாசல் பகுதியில் இருந்த மீனாட்சி புத்தக நிலையத்திற்குப் போய் கிராவின் கிடை, பூமணியின் ரீதி, ஜெயகாந்தனின் உன்னைப்போல் ஒருவன் வாங்கிக் கொண்டுவந்து துறையில் கொடுத்தேன். அம்மூன்றையும் ஒரு கட்டுத்தொகுதியாக்கிச் சான்றிதழோடு வழங்கினார்கள். எனக்கேயான புத்தகங்கள் என்று வாங்கிய முதல் மூன்று புத்தகங்கள் அவை

3

கோபல்ல கிராமம் நாவலை வாசித்து முடித்தேன். இடம்பெயர்ந்து வரும் கூட்டம் ஓரிடத்தில் தங்கி இறந்துபோன தங்கள் குடும்பத்துப் பெண்ணைத் தெய்வமாக வழிபடத்தொடங்கினார்கள் என்ற தொல்கதையை வாசித்தபோது, அதுபோன்றதொரு கதையை எனது பெரியம்மா சொன்னது நினைவுக்கு வந்தது. பெரியம்மா சொன்ன கதையில் அந்தப் பெண்ணின் பெயர் மட்டுமே மாறியிருந்தது. அவளைத் தான் அம்மாவின் குடும்பம் குலதெய்வமாக வழிபடுகிறார்கள் என்றும் தெரிய வந்தது.

எனது பெரியம்மா எனக்குச் சொன்ன கதை உங்களுக்கு எப்படித் தெரியும்? என்று கேட்டு ஒரு அஞ்சல் அட்டை எழுதிப் போட்டேன் கி.ரா.வுக்கு. மதுரைக்கு வரும்போது சொல்கிறேன். நேரில் பேசலாம் என்று பதில் எழுதிப் போட்டிருந்தார். அவரது கையெழுத்து அவ்வளவு அழகாக இருந்தது.

4.

இது இன்னொரு கடிதம். கலை இலக்கியப் பெருமன்றத்தின் கூட்டத்திற்கான அழைப்பு. முதுகலை சேர்ந்து ஒருமாதமாகியிருக்கும். அப்போது எம்பில் படிப்பில் இருந்த ந.முருகேசபாண்டியன், எனக்கு வந்த கடிதம் ஒன்றைக் கையில் வைத்துக்கொண்டு விசாரித்தார். நவீன இலக்கியமெல்லாம் வாசிப்பீங்களோ? கல்லூரிகளில் ‘இளவல்’களைக் கிண்டல் செய்யும் விசாரிப்பு என்று நினைத்துக்கொண்டு பயத்துடன், ‘ஆமாம்’ என்றேன்.

நீங்கள் வாசித்த நாவல்களில் உங்களுக்குப் பிடித்த நாவல் எது? என்ற கேள்விக்கு எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் “கி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமம் ” என நான் சொன்ன போது எனக்கு வயது 21. அதற்கான காரணம் என்னவென்று கேட்டபோது, நிகழ்கால அரசியல், பொருளாதாரச் சமூகச் சிக்கல்களைப் பேசும் விதமாகப் பாத்திரங்களை உருவாக்கி, அவற்றின் உளவியல் ஆழங்களுக்குள் செல்வதன் மூலம் வாசகர்களையும் உடன் அழைத்துச் செல்லும் தன்மையிலான எழுத்தே சிறந்த எழுத்து எனவும், நாவல் என்னும் விரிந்த பரப்பில் தான் அதற்கான சாத்தியங்கள் அதிகம் எனவும் எனக்குப் பாடம் நடத்திய ஆசிரியர்களும், நான் படித்திருந்த இலக்கியத் திறனாய்வு நூல்களும் சொல்லியிருந்தன. அதையே அவரிடம் சொன்னேன். அவர் அதை ஏற்றுக் கொண்டதாகத் தோன்றவில்லை; என்றாலும் நண்பர்கள் ஆனோம். இரண்டு ஆண்டு வயது வித்தியாசம் மறந்துபோனது

5

அன்னம் பதிப்பகத்தின் நூல்களை விற்பனை செய்வதற்கான கடையொன்றை மதுரையில் தொடங்கினார் கவி.மீரா. கடை முதல் மாடியில் இருந்தது. உட்கார்ந்து பேச இடமுண்டு. அங்கு பொறுப்பாளராக இருந்தவர் எங்களின் அமெரிக்கன் கல்லூரி மாணவர். வணிகவியல் துறையில் பயின்ற யுவன் சந்திரசேகரின் வகுப்புத்தோழர். இருபதில் இருந்த இலக்கிய வாசகர்களும் நாற்பதுகளைத் தாண்டிய இலக்கியவாதிகளும் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திய இடம் அது. மீராவிடம் கி.ரா.வை மதுரைக்கு அழைத்து வரவேண்டும் என்ற கோரிக்கையை வைத்தோம். அப்போது மீரா சொன்னார், “மதுரையில அவரோட மணிவிழாவெக் கொண்டாடிவிடுவோம். கொஞ்சம் பொறுங்க” . 1983-இல் அதற்கான வேலையைத் தொடங்கினார். நானும் அந்தக் குழுவில் ஒருவனாக இருந்தேன்

6

கி.ரா. மணிவிழா மதுரை நியூகாலேஜ் ஹவுஸ் மாடியில் நடந்தது. மணிவிழா மண்டபத்தில் திரும்பிய பக்கமெல்லாம் எழுத்தாளர்கள். ‘நைனா.. நைனா..’ என்று ஒவ்வொருவரும் ஒலித்துக் கொண்டாடினார்கள். நெல்லை எழுத்தாளர்கள், கோவில்பட்டிக்காரர்கள், கோவைக்கார ர்கள், ராம்நாட் எழுத்தாளர்கள் என ஒவ்வொருவரும் பல ஊர்களிலிருந்து வந்திருந்தார்கள். பலரையும் அங்கு பார்த்தது இப்போதும் நினைவில் இருக்கின்றது. அப்போது வண்ணதாசன் நிலக்கோட்டையில் இருந்தார். அவரை அங்குதான் முதன் முதலில் பார்த்தேன்.

மணிவிழாவையொட்டிக் கரிசல் எழுத்தாளர்களின் கதைத் தொகுதி ஒன்றை - கரிசல் பரப்பைக் காட்டும் வரைபடத்துடன் கூடிய நூலொன்றைக் கொண்டுவந்தது அன்னம். ஏறத்தாழ 30 பேருக்கும் மேல் கரிசல் எழுத்தாளர்கள் என அடையாளப்படுத்தியிருந்தார் தொகுத்த கி ரா. இப்போதுள்ள தூத்துக்குடி மாவட்டமே கரிசல் நிலத்தின் மையம் என்றாலும் அப்போது திருநெல்வேலி மாவட்டத்தின் பகுதி. அதல்லாமல் மேற்கே வத்றாயிருப்பு, கிழக்கே காரியாபட்டி, ராம்நாடு எனக் கடற்கரை வரை நீண்டது. வடக்கே விருதுநகரைத் தொடாமல் தெற்கே கயத்தாறு வரையிலான பரப்பு. வெளிசார் அடையாளங்கள், வாழ்வியல், மொழி என வட்டார இலக்கியத்திற்கான ஒரு வரையறை உருவாக்கிய அந்தத் தொகுதியே அவ்வகையில் தமிழின் முன்னோடித் தொகுதி.

விழாவிற்கு முந்தியநாளே கி.ரா. மதுரை வந்துவிட்டார். காலேஜ் ஹவுஸ் தரைதளத்தில் தங்கியிருந்தவரைச் சந்தித்துவிட்டு இரவு கடைசிப் பேருந்தில் பல்கலைக்கழக விடுதிக்குச் சென்று மறுநாள் காலையில் திரும்பினேன். அப்போது நான் முனைவர் பட்ட ஆய்வுப்படிப்பைத் தொடங்கியிருந்தேன்.

7

1983-க்கும் 1989-க்குமிடையில் நேர்ச்சந்திப்புகள் இல்லை. கடிதங்கள் மட்டுமே. வாசித்த கதைகள் குறித்தும் வாசிக்கவேண்டியன குறித்தும் .

1989 ஜூலையில் தான் பணியில் சேரச்சொல்லிக் கடிதம் அனுப்பியிருந்தது பல்கலைக்கழகம். ஆனால் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்கவேண்டும் என்பதற்கா மே மாதக் கடைசியிலேயே சென்றுவிட்டேன். அப்போது அங்கு வருகைதரு பேராசிரியராக இருந்த க.நா.சுப்பிரமணியம், ஒப்பந்த காலம் முடிந்து கிளம்பிக்கொண்டிருந்தார். நாடகத்துறைக்குத் தலைவராகத் தில்லிப் பல்கலைக்கழகத்திலிருந்து இந்திரா பார்த்தசாரதி அழைக்கப்பட்டிருந்தார். அவர் வருகைதரு பேராசிரியராக அழைக்கப்படவில்லை. டெல்லிப் பல்கலைக்கழகத்தில் பணி ஓய்வுக்குப் பின் புதிதாகப் பொறுப்பேற்றிருந்தார். க.நா.சு.வின் இடத்தில் இன்னொரு வருகைதரு பேராசிரியராக எழுத்தாளர் ஒருவர் அழைக்கப்படும் வாய்ப்பிருப்பதாகத் தமிழ்த்துறை ஆய்வாளர்களும் ஆசிரியர்களும் சொன்னார்கள்.

புதுவையைச் சேர்ந்த ஒருவரை - திரு மன்னர் மன்னன் -பாரதிதாசனின் மகனார் பல்கலைக்கழகம் நியமிக்க வேண்டுமென்ற கோரிக்கையெல்லாம் இருந்தது. ஆனால் அப்போது துணைவேந்தராக இருந்த முனைவர் கி.வேங்கடசுப்பிரமணியம் யாரும் எதிர்பாராத விதத்தில் கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அழைக்கப்படுவதாக அறிவித்தார். அதற்குக் கடும் எதிர்ப்பெல்லாம் இருந்தது. அவர் கண்டுகொள்ளவில்லை. அறிவிப்புக்குப் பின் ஒரு மாதம் கடந்தது. கடிதப்போக்குவரத்துகள் நடந்துகொண்டிருப்பதாகச் சொல்லப்பட்டது. நான் பணியில் சேர்ந்த இரண்டாவது வாரத்தில் 05/07/1989 தேதியிட்டுக் கி.ரா.விடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதற்கு நான் பதில் எழுதிய பின் திரும்பவும் 28 ஆம் தேதியிட்டு இன்னொரு கடிதம் எழுதினார் நான் .

நாட்டுப்புறவியலில் ஆய்வு செய்வதற்காகப் பல்கலைக்கழகம் அழைக்கிறது என்றும், ஆகஸ்டு முதல் தேதி பணியில் சேரலாம் என்று தெரிவிக்கப்பட்டிருப்பதாக எழுதியிருந்தார். அத்தோடு ஒருவர் தங்கிக்கொள்ளும் விதமாக ஓர் அறையைப் பல்கலைக்கழகம் ஒதுக்கும் என்று தெரிவித்துள்ளது என்றும் குறிப்பிட்டு எழுதினார். ஆனால் கி.ரா,. மனைவி கணவதி அம்மாவோடு வருவாரென்றும் அவருக்கு உதவியாக ஒருவரும் வருவார் என்றும் தமிழ்த்துறை நண்பர்களால் சொல்லப்பட்டது.

ஒருநாள் திடீரென்று துணைவேந்தர் அலுவலகத்திலிருந்து அழைப்பு. அங்கே துணைப் பதிவாளர் பொறுப்பில் இருந்தவர் என்னிடம் பேசினார். வருகைதரு பேராசிரியராக வரும் எழுத்தாளர் கி.ரா., “துணைவேந்தரை நன்றாகத் தெரியும். கோவில்பட்டியில் கல்வி அதிகாரியாக இருந்தபோது பலதடவை சந்தித்துள்ளேன். அவரை விட்டால் நாடகத்துறையில் இருக்கும் இந்திரா பார்த்தசாரதியையும் அ.ராமசாமியையும் நன்றாகத் தெரியும்” என்று உங்கள் பெயரைக் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார். அதனால் பல்கலைக்கழகம் சார்பில் பாண்டிச்சேரி ரயிலடிக்குச் செல்லும் குழுவில் நீங்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று சொன்னார். அதன்படி ஒரு மாலை, பொன்னாடையோடு போன மூன்றுபேரில் ஒருவனாக நானும் இருந்தேன். ரயிலிலிருந்து இறங்கியவரைக் கைலாகு கொடுத்து இறக்கிவிட்டோம். அவரைத் தொடர்ந்து கணவதி அம்மாவும் ஓவியர் மாரிஸும் வந்தார்கள்.

தற்காலிகமாகத் தங்குவதற்கு அஜெந்தா கார்டன் விடுதியில் இரண்டு அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

8

பாண்டிச்சேரியில் அவர் தங்க வீடுதேடும் படலம் தொடங்கியது. பல்கலைக்கழகம் அவருக்கான வீட்டு வாடகையை ஏற்றுக்கொள்வதாகச் சொல்லியிருந்தது. அதையே அவரது அலுவலகமாக அறிவிப்புச் செய்து வாடகையைத் தந்துவிடும். தற்காலிகமாக பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த அஜெந்தா கார்டன் அறைகள் வாடகை அதிகம். வீடு கிடைத்துவிட்டால், இரண்டு அறைகளின் ஒருநாள் வாடகையில் ஒருமாத வாடகை தரமுடியும்.

புதுவையின் முத்தியால்பேட்டை, அங்காளம்மன் நகரில் ஒரு மாடிவீட்டில் தங்கியிருந்தேன். அதிலிருந்து மூன்று தெரு தள்ளி ஒரு வீட்டைக் கண்டுபிடித்தோம். அவருக்கும் வீடு முதல் மாடியில் தான் கிடைத்தது. படியேறுவதில் சிரமங்கள் உண்டு. என்றாலும் முதலில் இருப்போம். பிறகு மாறிக்கொள்ளலாம் என்று சொல்லிவிடவே முதல் வீடாக அங்கு குடியேறினார். அவருக்கு உதவத் துறையிலிருந்து ஆய்வாளர்களை அனுப்பினார் துறையின் தலைவர் பேரா.க.ப. அறவாணன். அவர்கள் வந்தபிறகு எனது வேலைகள் குறைந்தன. சந்தித்து உரையாடவும் மாலை நடைக்காகவும் மட்டுமே எங்கள் சந்திப்புகள் நடந்தன.

9

கி.ரா. பாண்டிச்சேரிக்கு வந்து ஆறுமாதம் தாண்டியிருக்கும். நக்கீரன் பத்திரிகையிலிருந்து அதன் உதவி ஆசிரியர் ஒருவரும் புதுச்சேரியின் நிருபரும் கி.ரா.வைச்சந்திக்க வந்தனர். ஆனால் வந்தவர்கள் நேராக அவர் வீட்டிற்குப் போகவில்லை. என் வீட்டிற்கே வந்தனர். அப்போது நக்கீரனின் ஆசிரியர் துரை. கோவில்பட்டிக்காரர். நக்கீரனில் கி.ரா.வை எழுத வைக்க விரும்பினார். என்னைப் பார்த்துவிட்டு அவரைப்பார்க்கச் சொன்னதாகச் சொன்னார்கள்.

மூவரும் மூன்று தெரு தள்ளி இருந்த அந்த வீட்டிற்குப் போய் அறிமுகத்திற்குப் பின்னர் வந்த செய்தியைச் சொன்னார்கள். நக்கீரனுக்கு முன்பே அவர் விகடன் குழுமத்தின் ஜூனியர் விகடனில் ‘கரிசல் காட்டுக் கடுதாசி’ தொடரை எழுதியிருந்தார். அடுத்தடுத்து விகடன் குழுமப்பத்திரிகையிலேயே எழுத வேண்டும் என்று கோரிக்கையும் இருந்தது. விகடன் ஆசிரியர் தன்னை மரியாதையாக நடத்திய விதம்பற்றியெல்லாம் சொல்லிவிட்டு நக்கீரனில் இப்போது எழுதுவது இயலாது என்று மறுத்தார். ஆனால் வந்தவர்கள் அவர்களின் ஆசிரியர் துரையிடம் தொலைபேசியில் பேசினார்கள். அவரும் கி.ரா.விடம் பேசினார்.

கடைசியாக ஒரு முடிவு ஏற்பட்டது. “கி.ரா. சொல்வதை எழுதி அனுப்பும் வேலை என்னுடையது. அது கி.ரா: கரிசலிலிருந்து புதுச்சேரிக்கு என்ற தலைப்பில் தொடராக வெளிவரும். அதனை எழுதும் இடத்தில் கி.ரா. பெயர் இருக்காது; கேட்டு எழுதுபவர் என்று தீர்க்கவாசகன் என்றிருக்கும்” என்பது அந்த முடிவு. அந்தத்தொடர் பத்துவாரம் வந்தது. அவரது எழுத்தை எதிர்பார்க்கும் வாசகர்களுக்கு இது உவப்பாக இருந்திருக்க வாய்ப்பில்லை. நிறுத்திக் கொண்டார்கள்.

தீர்க்கவாசகன் என்பது அப்போது நான் வைத்துக்கொண்ட புனைபெயர். அந்தப்பெயரில் கவிதைகள் எல்லாம் எழுதிக்கொண்டிருந்தேன்

10

புதுவை, முத்தியால்பேட்டை, அங்காளம்மன் நகர், வ.உ.சி. தெருவில் கி.ரா. அதிக நாட்கள் இருக்கவில்லை. நான்கைந்து மாதங்களே இருந்தார். ஒவ்வொரு நாளும் ஒருபக்கம் நடப்போம். கடலைநோக்கிப் போகும் சாலைகள் வழியே.. மீனவக்குப்பங்களின் வழியே.. தென்னந்தோப்புகளின் வழியே.. கள்ளுக்கடை ஓரமாக என நடக்கும்போது நின்று பேசிக்கொள்ளும் செய்திகள் .. பேசும்போது அவர் கவனித்துச் சொல்லும் நுட்பங்கள்.. ஒவ்வொன்றையும் முன்சென்று கரிசல் காட்டோடு இணைத்துக் காட்டும் ஒரு கயிறு அவரிடம் இருந்தது. அங்காளம்மன் கோவிலின் மேற்கே அங்காளம்மன் நகர்; கிழக்குப்பக்கம் அங்காளங்குப்பம். மனிதர்களின் அடையாளம் என்னவாக இருக்கிறது என்பதை அவர்களின் வாழ்நிலைதான் தீர்மானிக்கிறது. குப்பமென்றால் அரசு கவனிக்கும் என நினைக்கும்போது குப்பமாகிறது. நகர் என்றால் நாகரிகம் என நினைக்கும்போது நகராகின்றது. சொல்லிக் கொண்டே நடப்பார்.

புதுவையின் அடையாளங்களாக இருக்கும் பாரதி, பாரதிதாசன் நினைவிடங்கள் நகரின் மையப்பகுதியில் இருக்கின்றன. புதுச்சேரியைச் சொந்த ஊராகக் கொண்ட கனகசுப்புரத்தினம் என்னும் பாரதிதாசன் சமாதி எங்கே இருக்கிறது என்று கேட்டார். எங்கள் வீடுகள் இருக்கும் அங்காளங்குப்பத்தைத் தாண்டி கடலுக்குப் போகும் பாதையில் வைத்திக்குப்பத்திற்குள் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு ஒருநாள் பார்க்கப்போனோம். பாரதிதாசன் சமாதியைப் பார்க்கப்போனபோது கடல் மணல் புதைகுழியாக இறங்கி நடக்கவே முடியவில்லை. நின்று நிதானமாகச் செல்லவும் முடியவில்லை. பாதையெங்கும் மனிதக்கழிவுகளால் நிரம்பியிருந்தது. பாரதிதாசனுக்கு ஏன் இப்படி நிகழ்ந்துவிட்டது என்று வருந்தினார். அதைத்தாண்டிப் போனால் கடலோரம் முழுவதும் மீனவர்கள் கடலில் தான் கழிவை இறக்கிவிடுகிறார்கள். இதை நேரடியாகப் பார்த்தால் மீன் சாப்பிடும் ஆசையே போய்விடும் என்று சொல்லிச் சிரித்தார்.

அங்காளம்மன் நகரிலிருந்து அவரது வீடும் அலுவலகமும் லாஸ்பேட்டை அரசு கல்லூரிச்சாலையின் முதன்மைத் தெருவிற்கு மாறிப்போனபோது மகிழ்ச்சியாகவே உணர்ந்தார். நான் தான் விலகிப்போய்விட்டார் என்று நினைத்துக்கொண்டேன்



11

பல்கலைக்கழகத்திற்குச் செய்து முடிக்கவேண்டிய பணித்திட்டம் ஒன்றை உருவாக்கினார். இதுவரை எழுத்துலகம் கவனிக்காத பெண்மனங்களைப் பதிவுசெய்யும் நாட்டார் கதைகளைத் தொகுத்துப் பதிப்பிக்கும் திட்டம் அது. அதற்கு உதவியாக ஆய்வுப்பணியாளர் ஒருவர் தேவையெனக் கோரினார். துறையின் ஆய்வாளர் ஒருவர் அதற்காக அனுப்பப்பட்டார்.

காதல், காமம், முறைப்படுத்தப்படாத ஆண் -பெண் உறவு என ரகசியம் பேணப்பட்ட கதைகள் அவரிடம் ஏற்கெனவே நிறைய இருந்தன. அவையெல்லாம் கோவில்பட்டி வட்டாரத்தில் தொகுக்கப்பட்டவை. அவற்றைப் பதிப்பிப்பதைவிடவும் புதுவை வட்டாரத்துக்குரியதான கதைகளைத் தேடித் தொகுத்துப் பதிப்பிக்கலாம் என்பதற்காகப் புதிய கதைகளைத் தொகுக்க ஆரம்பித்தார். அப்படித் தொகுத்த நாட்டாரியல் மரபுகளே ‘பெண்மனம்’ எனவும், ‘வயதுவந்தவர்களுக்கு மட்டும்’ எனவும் பதிப்பிக்கப்பட்டன. அதுவரைக் கல்விப்புலம் பேசாமல் இருந்த பலவற்றை அவை பேசத்தூண்டின. அந்த வகையில் கி.ரா.வின் வருகைதரு பேராசிரியர் பணி ஒரு புரட்சிகரமான பணி.

அவர் அங்கு இருந்த காலச்சூழல் பாண்டிச்சேரியில் பல கலகங்களும் புரட்சிகரச் சிந்தனைகளும் கிளர்ந்துகொண்டிருந்த நேரம். தமிழின் மாற்றுச் சிந்தனைகள்த் தீவிரமாக முன்வைத்த நிறப்பிரிகையின் கூட்டுவிவாதங்கள், தலித் அரசியல் விவாதங்கள், புதிய அரசியல் சிந்தனைக் களங்கள், சங்கரதாஸ் சுவாமிகள் நாடகப்பள்ளியின் நிகழ்த்துமுறைச் சோதனைகள் எனப் பலப்பலவாய் ..அவற்றுக்குள் தனது இருப்பைக் காட்டும் விதமாக இந்தப் பாலியல் கதைகளின் தொகுப்பைக் கொண்டுவந்தார்.

12

புதுச்சேரி இலாசுபேட்டைக்குப் போன பிறகு வேறெங்கும் வீடு தேடவில்லை. பல்கலைக் கழகப் பணியில் இருந்ததுவரை தாகூர் கலைக்கல்லூரிச் சாலையில் தங்கியிருந்தார். அவர் வந்த போது புதுவைப்பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் அலுவலகம் ரங்கப்பிள்ளை வீதியில் இருந்தது. அதன் இரண்டாவது மாடியில் நான் பணியாற்றிய நிகழ்கலைத்துறையின் வகுப்புகள் நடக்கும். எப்போதாவது அங்கு வந்து நாடக வகுப்புகளைப் பார்த்துக்கொண்டிருப்பார்.

அப்படி யொருநாள் வருகைதரும்போது அவரும் எம் துறையின் தலைவர் இந்திரா பார்த்தசாரதியும் சமகாலத்தில் எழுதும் எழுத்தாளர்களின் எழுத்துகளைக் குறித்துப் பேசத் தொடங்கினார்கள். பேச்சினூடாக எனது கருத்தையும் கேட்டுக்கொண்டார்கள். பாவண்ணன், எஸ்.ராமகிருஷ்ணன்,கோணங்கி,ந.ரவீந்திரன், பாரதி பாஸ்கர், கண்டராதித்தன். பவா.செல்லத்துரை, சூர்யகாந்தன், இரா.முருகன் எனப் பேச்சு சுத்தி வந்தது. ஏன் இவர்களைப் பற்றிப் பேசுகிறார்கள் என்பது முதலில் எனக்கு விளங்கவில்லை. அதன் பிறகு பையிலிருந்து ஒரு கட்டுக் கையெழுத்துப் பிரதிகளை எடுத்து வைத்தார் கி.ரா. பெரும்பாலும் கையால் எழுதப்பெற்ற பிரதிகள். நாவல் போட்டிக்கு வந்த நாவல்கள் என்று சொல்லிவிட்டு ஆளுக்குப் பாதியாகப் பிரித்துக் கொண்டார்கள். இரண்டுபேர் மட்டும் டைப்செய்து அனுப்பியிருந்தார்கள். கி.ரா.வும் இ.பா.வும் போட்டியின் நடுவர்களாக இருக்கப்போவதாகவும் சொன்னார்கள். மூன்றாவது நடுவர் அப்போது தஞ்சையில் இலக்கியத்துறையின் பேராசிரியர் தா.வே.வீராச்சாமி. நீங்களும் வாசித்துப் பார்க்கலாம் என்று சொன்னார்கள். அவற்றை என்னிடமும் தந்தார்கள்.

ஒரு மாதம் ஓடியிருக்கும். திரும்பவும் கி.ரா. , ரங்கப்பிள்ளை வீதிக்கு வந்தார். நாவல்களைப் பற்றிப் பேசினார்கள். இருவருமே ஜெயமோகனின் எழுத்து பற்றி விவாதித்தார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீங்க? என்று என்னிடம் கேட்டார்கள். கன்யாகுமரி வட்டார எழுத்து என்பதைத் தாண்டிய தன்மை இருக்கிறது. பாத்திரங்களை உருவாக்கி முன்வைப்பதில் கவனம் இருக்கிறது என்று சொன்னேன். அந்த வருட அகிலன் நினைவுப் போட்டியில் ஜெயமோகனின் ‘ரப்பர்’ பரிசுக்குரியதாகத் தெரிவுசெய்யப்பட்டது. அதிகாரப்பூர்வமற்ற நடுவர்களில் ஒருவராக நானும் இருந்ததாக அப்போது நினைத்துக்கொண்டேன்.

13

அங்காளம்மன் நகரிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குப் பின் நானும் இலாசுப்பேட்டை, ராஜாஜி நகருக்கு நகர்ந்தேன். அவரும் அதே ஔவை நகரில் தான் இருந்தார். இலாசுபேட்டை அப்போது அறிவுஜீவிகளும் எழுத்தாளர்களும் நிரம்பிய இடம். கி,ரா,வுக்குப் பக்கமாக இருந்தவர் திறனாய்வாளர் பஞ்சு. அடுத்த தெருவில் ஒரு பிரெஞ்சுப் பேராசிரியர். இடது பக்கம் பிரெஞ்சு மொழியிலிருந்து மொழிபெயர்ப்பு செய்யும் நாயகர் இருந்தார். அரசு மருத்துவமனையில் மட்டுமே மருத்துவம் பார்த்த மருத்துவர் ஒருவர் இருந்தார். அசோக்நகரில் நிறப்பிரிகை ரவிக்குமார் இருந்தார். அதற்கடுத்த தெருவில் ராஜ்கௌதமன்.

காலையில் ஒரு சுற்றுலா; மாலையில் ஒரு சிற்றுலா என்பது கிராவின் நடைப்பயிற்சி. நானிருந்த ராஜாஜி நகரில் தான் தபால் அலுவலகம் இருந்தது. அவருக்குத் தினசரி நாலைந்து கடிதங்களாவது வரும். ஒன்பது மணிக்கு பல்கலைக்கழகம் கிளம்பும்போது வீட்டுக்கு வந்து அன்றைய தினசரியை வாசித்து முடிப்பார். அங்கிருந்து தபால் அலுவலகம் போய் தனக்கு வந்த கடிதங்களைத் தானே பெற்றுக்கொண்டு அங்கிருந்து கிளம்புவார். வாங்கிய கடிதங்களை அங்கேயே உடைத்து வாசிக்கமாட்டார். வீட்டுக்குப் போகும் பாதையில் கோவில்பட்டிக்காரர் வீடு ஒன்று இருந்தது. அங்குபோய் ஒரு செம்பு தண்ணி குடித்துவிட்டு அங்கு உட்கார்ந்து கடிதங்களைப் படிப்பார். அங்கிருக்கும் பெண்களோடு பேசிக்கதைகளை உருவாக்கிக் கொள்வார். அவர்கள் இல்லையென்றால் பஞ்சாங்கம் வீட்டில் அது நடக்கும். எங்கள் தெருவில் இருந்த கணிதப் பேராசிரியர் முருகானந்தம் மனைவிக்கு மருத்துவ ஆலோசனைகள் சொல்லி விட்டுப் போவதுமுண்டு.

தபால் அலுவலகத்தைக் காரணமாக்கி ஒன்பது மணிக்கு நடக்கத் தொடங்கித் திரும்பும்போது 12 மணி ஆகியிருக்கும். குறைந்தது நாலைந்து பெண்களிடமாவது கதைபேசி, சிரித்துவிட்டுப் போய்க் கணவதி அம்மாவிடம் பேசிய கதைகளைச் சொல்லிக் கொண்டிருப்பார். மாலையில் அம்மாவையையும் அழைத்துக்கொண்டு விமான நிலையச்சாலையில் ஒரு சிற்றுலா வருவார். பெரும்பாலும் இவ்விரண்டு உலாக்களும் மாறாமல் இருந்தன.

14

அதிகமும் தனித்தமிழ் இயக்கவாதிகள் இருப்பதுபோலத்தோற்றம் தரும் புதுச்சேரியில் வாரக் கடைசிகளில் இலக்கிய, சமூக இயக்கங்கள், அரசியல் கூட்டங்களுக்குப் பஞ்சம் இருக்காது. ஒவ்வொருவருக்கும் புனைபெயர்கள் இருக்கும். அவை பெரும்பாலும் தனித்தமிழ்ப் பெயர்கள். அவற்றைவிட்டால் ஒடுக்கப்பட்ட மனிதர்களின் நலன்களை முன்வைக்கும் மார்க்சியப் பின்புலம் கொண்ட மனித உரிமை அமைப்புகள், திராவிட இயக்கப்பார்வை கொண்ட பேரவைகள் எனப் பலவிதமான அமைப்புகளின் செயல்பாடுகள் நடந்துகொண்டே இருக்கும். 1990-களுக்குப் பிறகு தலித் இயக்கத்தின் சிந்தனை மற்றும் செயல்பாடுகளின் திரட்சியைத் தனதாக்கிக் கொண்ட இடமும் புதுச்சேரிதான். அமைப்புகளைப் போலவே சிற்றிதழ்களின் எண்ணிக்கையும் அங்கு அதிகம். மொழிக்காக, சமூகவிழிப்புணர்வுக்காக, இலக்கியத்திற்காக எனப் பலவிதமான இதழ்களும் வந்துகொண்டிருந்த நேரம். எதிர்வு, நிறப்பிரிகை, ஊடகம், கிரணம், என்ற மூன்று இதழ்களும் புதுச்சேரியை முகவரியாகக் கொண்டு தமிழ்ச் சிற்றிதழ்ப் பரப்பில் தாக்கம் ஏற்படுத்தியவை.

எதிர்வு இதழை நடத்திய சிவக்குமாருக்கு அமைப்பியல், குறியியல் எனத் தமிழவனின் திறனாய்வுக் கருத்தியல்களை முன்வைக்கும் நோக்கம் இருந்ததை முதல் இதழில் வெளிப்படுத்தினார். எதிர்வு இதழின் சார்பில் மாதாந்திரம் ஒரு கூட்டம் நடத்துவதையும் தொடங்கினார். முதல் கூட்டம் ரெட்டியார் பாளையத்தில் மருத்துவர் வீட்டில் நடந்ததாக நினைவு. அதற்கு எனது மிதிவண்டியில் போய்வந்தேன். இரண்டாவது கூட்டத்திற்கு அசோகமித்திரன் வருவதாகத் தகவல் வந்தது. கி.ரா. தொடர்பு ஏற்படுத்தித் தந்ததால் அவரது வருகை உறுதியானது எனத் தெரிந்தது. அந்தக் கூட்டத்திற்குப் பிறகு பெரிய அளவில் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார். அந்தக் கூட்டத்திற்குக் கடலூர், விழுப்புரம், விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி எனப்பக்கத்துச் சிறுநகரங்களிலிருந்தெல்லாம் வருவார்கள் என்பதும் தகவல். அதற்குப் பாவண்ணன் பெங்களூரிலிருந்து வருகிறார் என்று நண்பர்கள் சொன்னார்கள்.

எழுத்தாளர் பாவண்ணன் புதுவைக்காரர்தான். நான் புதுச்சேரிக்குப் போனதற்குச் சில மாதங்கள் முன்பு அவர் கர்நாடகா தொலைபேசித்துறையில் பொறுப்பேற்றுச் சென்றுவிட்டார். அவரது சொந்தக்கிராமம் புதுவை - விழுப்புரம் சாலையில் வளவனூர் பக்கம் . அவ்வப்போது பெங்களூரிலிருந்து புதுச்சேரி வருவார். கி.ராஜநாராயணனைப் பார்த்துப் பேசிவிட்டுப் போவார். நல்ல மிதிவண்டி இருந்தால் ஒவ்வொரு கூட்டங்களுக்கும் போய்வந்துவிடலாம். இந்தக் கூட்டமும் ரெட்டியார் பாளையத்தில்தான் என நினைத்துக்கொண்டு மிதிவண்டியில் கிளம்பி விட்டேன். ஆனால் அங்கு போனபிறகு தான் தெரிந்தது. வில்லியனூரில் தான் கூட்டமென்று. மிதிவண்டியைத் திரும்பவும் மிதித்து ஓட்டிப்போகச் சரியாக இருந்தது நேரம். போனபோது தெரியாத தூரம் வரும்போது அதிகமாகத் தெரிந்தது. அந்தக் கூட்டத்திற்குப் பிறகு எதிர்வு கூட்டங்களும் இல்லை. எதிர்வும் வரவில்லை.



15

எழுத்துத்தமிழ் அல்லது பொதுத்தமிழ், பேச்சுத்தமிழ் என இரண்டு நிலைகள் தமிழ்மொழியின் சிறப்பு எனவும், அதுவே சிக்கல் எனவும் சொல்வார்கள். புதிதாகத் தமிழைக் கற்க நினைக்கும் வேற்றுமொழிக்காரர்கள் இந்த வேறுபாட்டால் அதிகமும் திணறுகிறார்கள் என்பது மொழியியலாரின் வாதம். வட்டார இலக்கியம் எழுதும் எழுத்தாளர்கள் எப்போதும் பேச்சுத் தமிழின் ஒலிச் சிறப்பை விதந்து பேசுவார்கள். தமிழ்நாட்டின் மொத்தப்பரப்புக்கும் எழுதுவது புரிய வேண்டும் என்பவர்கள் பொதுத்தமிழின் பக்கம் நிற்பார்கள்.

இந்த எதிர்வில் கி.ரா. பேச்சுத்தமிழின் பக்கம் நிற்பவர். தனது கதைகளில் பாத்திரங்களின் உரையாடல்களைப் பேச்சுத்தமிழிலும், கதைசொல்லியின் விவரணைகளைப் பொதுத் தமிழிலும் எழுதிக்கொண்டிருந்தார். பேசுவதுபோல எழுதவேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பவர். அதுதான் மக்கள் தமிழ் எனப் புதுவைக்கு வந்தபின் வாதிடத்தொடங்கினார். பேசுவதுபோலவே எல்லாவற்றையும் எழுதவேண்டும் என்றும் சொல்லத்தொடங்கினார்.

புதுவை வணிக அவையில் நடந்த ஒரு கூட்டத்திற்குப் பின் அதன் முன்னிருக்கும் பாரதி பூங்காவில் மதிய உணவுக்குப் பின் அமர்ந்திருந்தார் கி.ரா. அந்தக் கூட்டத்திற்குக் கவி. பழமலய்யும் வந்திருந்தார். உரையாடல் மக்கள் தமிழ் பக்கம் நகர்ந்தது. அப்போது பழமலய் கி.ரா.விடம், “நீங்கள் சொல்லும் மக்கள் தமிழில் எழுதுவது என்ற நோக்கம் நல்லதுதான். அது சாத்தியமா?” என்று கேட்டார். ‘ பேசுவதுபோல எழுதுவதில் என்ன சிக்கல்?’ என்று கி.ரா. கேட்டார். தொடர்ந்த பழமலய், “வீட்டில் பேசுவதுபோல எழுதுவது என்றால், நீங்கள் வீட்டில் தெலுங்கு பேசிறீங்க. அதைத்தானே எழுதணும்; அதைத் தமிழ் வரிவடிவத்தில் எழுதினால் மக்கள் தமிழ் ஆகுமா?” என்று கேட்டார். அந்த உரையாடல் அப்போதைக்கு நின்றுபோனது.

16

“கரிசல் மண்ணை விட்டு ஒருநாள் கூட இருக்கமுடியாத ஆள் நான்” என்று மதுரையில் நடந்த மணிவிழாவின்போது சொன்னவர் கி.ரா. ஆனால் திரும்பவும் ஊருக்குப் போகப்போவதில்லை; புதுச்சேரியிலேயே இருந்துவிடுவது என முடிவு எடுத்தார். பல்கலைக்கழகத்தோடான ஒப்பந்த காலம் முடிந் தபின்னும் பாண்டிச்சேரியிலேயே இருப்பது எனக் கி.ரா. எடுத்த முடிவு ஆச்சரியமூட்டிய ஒன்று. ‘புதுச்சேரி - வேதபுரம்; இங்கு வந்தவர்களுக்குத் திரும்பிச் செல்லும் ஆசையே வராது’ என்றார். எட்டயபுரத்திலிருந்து வந்த பாரதிக்குப் புதுவையைவிட்டுப் போக மனம் இருக்கவில்லை. தூத்துக்குடியிலிருந்து வந்து சேர்ந்த சங்கரதாஸ் சுவாமிகள் திரும்பிப் போகவில்லை. இங்கேயே சமாதியாகிவிட்டார். அவரது நினைவிடம் கருவடிக்குப்பத்தில்தான் இருக்கிறது.

தமிழ்நாட்டுக்காரர்கள் மட்டுமல்ல; அரவிந்தர் வங்காளத்திலிருந்து வந்தவர் தானே? அவரோடு வந்தவர்கள் பெயர்களெல்லாம் நமக்குத் தெரியாது தானே. நானும் இங்கேயே இருந்துவிடப் போகிறேன். வேதபுரத்தார்க்குக் குறிசொல்லும் வேலையை எடுத்துக் கொள்வேன் என்று சிரித்துக்கொண்டே சொன்னார் ஒரு தடவை. இப்போது அவரது உயிரில்லா உடல் இடைசெவல் நோக்கி வந்துகொண்டிருக்கிறது. பிறந்த ஊருல உடலை வச்சுப்பாக்கிறதும் ஒரு வழமைதான்.

17

கி.ரா.வின் நினைவுகளோடு தொடர்புடைய சொற்களாக இருந்தவை கரிசல், கதைசொல்லி என்ற இரண்டும். இப்போது அவையிரண்டும் கி.ரா. பயன்படுத்திய அர்த்தங்களை இழந்துவிட்டன. தொல்காப்பியச் சொல்லதிகாரம் சொற்களை வகைப்படுத்தும்போது பொது, சிறப்பு, காரணம், இடுகுறி என்ற நான்கைக் கூறி, அதற்கு மேலும் காரணப்பொதுப்பெயர், காரணச் சிறப்புப்பெயர், இடுகுறிப் பொதுப்பெயர், இடுகுறிச் சிறப்புப்பெயர் என விரித்துப் பேசும். இவ்வகைப்பாடு சொற்களை வகைப்பாடு செய்வதற்கான இலக்கணம் மட்டும் என்று நினைக்க வேண்டியதில்லை. தமிழில் சொற்களை - குறிப்பாகக் கலைச்சொற்களை உருவாக்குவதற்குமான இலக்கணமாகவும் கொள்ளவேண்டிய வரையறைகள். தொல்காப்பியமும் அதன் உரைகாரர்களும் இதனை விரிவாகப் பேசியுள்ளனர்.

ஒரு பொதுச்சொல்லைச் சிறப்புச் சொல்லாக மாற்றுவதற்குப் பின்னால் அந்தக் காலகட்டத்தின் தேவையும் நெருக்கடிகளும் இருக்கின்றன. கரிசல் என்ற சொல் நிலத்தின் பெயராக இருக்கும்போது பொதுச்சொல். ஆனால் இலக்கியம் என்னும் இன்னொரு பொதுச்சொல்லோடு சேரும்போது சிறப்புச் சொல்லாக - காரணச்சொல்லாக மாறுகிறது. அதாவது கலைச்சொல்லாக மாறுகிறது. எல்லாவற்றையும் பொத்தாம் பொதுவாகப் புரிந்துகொள்ளக் கூடாது; சிறப்பான அர்த்தங்களோடும், காரணங்களோடும் வினையாக்கங்களோடும் புரிந்துகொள்ள வேண்டும் எனக் கோருகிறது இந்த மாற்றம். நிலம் என்பது அதன் நிறம், அங்கு வாழும் மனிதர்களின் பாடுகள், நிலவியல் அடையாளங்களை உருவாக்கும் தட்பவெப்பம், கருப்பொருட்கள், பண்பாடு என எல்லாம் இணைந்தனவாக மாறுகின்றன.

இதே தன்மையில் உருவானதல்ல கதைசொல்லி என்னும் கலைச்சொல். Performance, Narrative என்ற இரண்டு ஆங்கிலச் சொற்களை அரங்கியல் பலவிதமாகப் பயன்படுத்தத் தொடங்கிய நவீனத்துவ காலகட்டத்துக் கலைச்சொல் சொல்லுதலை நிகழ்த்துதலாக மாற்றிய காலகட்டத்தின் தேவையை உணர்த்தும் சொல். நிகழ்த்துதல் கோட்பாடு என்னும் அரங்கியல் சிந்தனையின் வழியாக இலக்கியவியலுக்குள் நுழைந்த அச்சொல்லுதலின் தீவிரம் எல்லாவற்றையும் நிகழ்த்துதலாக்க நோக்கத்தோடு இணைத்தது. நிகழ்த்துதலுக்கேற்ப சொல்லப்படும் மொழியின் பண்புகளும் அடுக்குகளும் மாறவேண்டும் என்று வலியுறுத்தியது. இத்தகைய பின்னணிகளை- படைப்பாக்க நுட்பத்தைப் புரியாமல், படித்த கதையைத் தனது சொல்முறைப்படி திருப்பிச் சொல்லும் ஒருவர் தன்னைக் ”கதைசொல்லி” என அழைத்துக் கொள்ளத்தொடங்கியதின் விளைவு அச்சொல் தமிழில் அர்த்தமிழந்த சொல்லாக மாறிப்போய்விட்டது.



18



இடைசெவலுக்கு வந்துபோன சினிமாக்காரர்கள் பற்றி அவரிடம் துருவித் துருவிக் கேட்டாலும் அதிகம் சொல்ல மாட்டார். பாரதிராஜாவின் ‘ முதல் மரியாதை’ படத்தின் காட்சிகளும், உச்சநிலைத் திருப்பமும் அவரது கிடையும், கோபல்ல கிராமமும் என்பதைச் சொல்லிக் கேட்ட போதும் ‘அது முடிந்துபோன சங்கதி என்று சொல்லிக் கடந்துவிடுவார். அந்தப் படத்தின் தொடக்கத்தில் போடப்பட்ட ‘நன்றி’க்குப் பின்னால் இருந்த சங்கதிகளை அவர் அதிகம் சொல்ல நினைத்ததில்லை.

திரும்பவும் இடைசெவலுக்குப் போகப்போவதில்லை, புதுச்சேரியிலேயே இருந்து விடப்போகிறார் கி.ரா. என்ற தகவல் சென்னையிலிருக்கும் பத்திரிகையாளர்களைவிடச் சினிமாக்காரர்களுக்கே அதிகம் வசதியாகத் தோன்றியது. அவ்வப்போது பலரும் வந்து போய்க்கொண்டே இருந்தார்கள். எப்போதும் அவரது எழுத்தின் மீது பிரியமும் முன்னோடியாக நினைக்கும் வாஞ்சையும் கொண்ட சினிமாக்காரர் தங்கர் பச்சான் அடிக்கடி வந்து பார்த்துச் செல்வார். அவரைச் சினிமாக்காரர் என்பதைவிட எழுத்தாளராகவே கி.ரா.வும் நினைத்தார்; நாங்களும் நினைத்தோம். கி.ரா.வுக்கு ஏதாவது செய்யவேண்டுமென்றால் தயங்காமல் செய்யும் விருப்பம் அவருக்குண்டு.

அவரைத் தாண்டி முதன் முதலில் புதுவையில் வந்து அவரைச் சந்தித்துப் போன சினிமாக்காரர் இயக்குநர் பாலச்சந்தரின் மகன் பால கைலாசம் என்றே நினைக்கிறேன். கிராமியமும் வரலாற்றுப் பின்புலமும் கொண்ட கதையொன்றைத் தொடராக எடுக்க நினைப்பதாகவும் அதற்கான கதையாக அவரது நாவல்களைப் பயன்படுத்த நினைத்து வந்து கேட்டாராம். அதற்கு ஏற்கெனவே எழுதிய கதைகளைவிடப் புதிதாக ஒன்றைத் தருகிறேன் என்று சொல்லி ஒரு கதை சொல்லியிருப்பதாகச் சொன்னார். அந்தக் கதையைச் சுருக்கமாக என்னிடம் சொன்னார். இதையெல்லாம் எடுக்க வாய்ப்பில்லை என்று நான் சொன்னபோது ‘பார்ப்போம்; அவங்க எடுக்கலையின்னா, தொடர்கதையா எழுதிடலாம்’ என்றார். எழுதியும் கொடுத்தார். அவர்கள் தொலைக்காட்சித் தொடராக எடுக்க நினைத்துக் கேட்டுப்போன கதைதான் பின்னர் ‘அந்தமான் நாய்க்கர்’ என்ற தொடராக வந்து நூலாக மாறியது.

19

சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப்பள்ளி மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் எடுப்பதற்காக வந்த நடிகர் நாசர், கி.ரா.வைப்பார்க்க விரும்பினார். அப்போது அவரது அவதாரம் வந்திருந்தது.

கடலைமிட்டாய்,கைமுறுக்கு, கடுங்காப்பி எனத் தந்த கணவதியம்மாவையும் உட்காரவைத்துக் கொண்டு பேச ஆரம்பித்து, பேசிக்கொண்டே இருந்தார். இடையில் எனது பிள்ளைகளை அழைத்துப் போய் நாசரைக் காட்டினேன். ஆனால் அவர்கள் பேச்சு ஒன்றைத்தொட்டு ஒன்றாய்ப் போய்க்கொண்டே இருந்தது. அவரிடம் கதை கேட்க நினைப்பவர்கள் இப்படிப் பேசிப்பேசிக் கதைகளை உள்வாங்கிக் கொள்வதைவிட, காட்சிகளை வடிவமைத்துக் கொள்வார்கள். சொல்ல நினைக்கும் ஒவ்வொரு செய்தியையும் ஒரு கதையின் துணுக்காக ஆரம்பம், உச்சம், முடிவு எனச் சின்னச் சின்ன அலகாகச் சொல்லிமுடிப்பார். அப்படி அவரிடம் கேட்டுக் கொள்ளும் ஒரு கதைத்துணுக்கை - காட்சித்துணுக்கை உருவாக்க நட்சத்திர விடுதியில் பத்துப்பன்னிரண்டு பேர் சில நாட்களைச் செலவழிக்க வேண்டும் என்பதை இயக்குநர்கள் பலரும் அறிந்தே இருந்தார்கள். அவரிடம் பேச்சுக்கொடுத்துக் காதில் திணித்துக் கொள்ள வரும் இயக்குநர்கள் சிலரென்றால், அவரையே சென்னைக்கு அழைத்துப் போய்த் தங்கவைத்துப் பேசிக்கொண்டிருந்துவிட்டுத் திரும்பும்போது பரிசுப்பொருட்களோடு கொண்டுவந்து விட்டுப் போகும் இயக்குநர்களும் உண்டு.

ஒரு தடவை ஔவை நகர் வீட்டில் படியேறிப்போனதும் நாலடி உயரமும் ஐந்துகிலோ எடையும் கொண்ட பேனா ஒன்று காட்சி தந்தது. பழைய நேவி பேனாவின் வடிவம். யார் தந்தது என்று கேட்காமலேயே சொல்லத்தொடங்கினார். எதையும் புதுமையாகச் செய்யும் விருப்பம் கொண்ட பார்த்திபன் பரிசு என்றார். அந்தப் பேனாவில் ஒரு எழுத்தும் எழுதமுடியாது. ஒரு மதிலில் அலங்காரமாகத் தொங்கவிடலாம். அப்படித்தான் சாத்தி வைத்திருந்தார் அந்தப் பேனாவை.

இன்னொரு தடவை நடிகர் பாக்கியராஜ் அழைத்துப் போய் அவர்களின் திருமணநாள் பரிசாகப் பட்டுவேட்டி, பட்டுச்சேலையோடு கொண்டுவந்து விட்டுப் போனார். ஆனால் அவர் தங்கியிருந்த இரண்டு நாட்களில் ஏராளமான கதைத் துணுக்குகளைக் கிரகித்துக் கொண்டிருப்பார். அறியப்பெற்ற இயக்குநர்களுக்கப்பால், அறியப்படாத இயக்குநர்களும் உதவி இயக்குநர்களும் அவரிடம் பேசிக்கொண்டிருப்பதற்காக - கதைகளைத் திரட்டிக் கொள்வதற்காக வந்துகொண்டே இருப்பார்கள். கி.ரா. ஒரு கதைச் சுரங்கம் என்பது முழுமையாக உணர்ந்தவர்கள் சினிமா இயக்குநர்கள் என்றே சொல்ல வேண்டும்.



20

இலாசுபேட்டை, ராஜாஜி நகர் முகவரியிலிருந்து - எனது முகவரி- ஊடகம் என்ற இதழைக் கொண்டுவந்தோம். அதுவரை பத்திரிகை, தொலைக்காட்சி, சினிமா, தொலைபேசி எனத் தனித்தனியாகவும், மொத்தமாகச் சொல்லும்போது தகவல் பரப்பும் சாதனங்கள் என்று சொல்லிக் கொண்டிருந்த நிலையை மாற்றி அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு சொல்லாக ‘ஊடகம்’ என்ற சொல்லைப்பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தோம்.

நான்கு இதழ்கள் தான் வந்தது என்றாலும் வெகுமக்கள் அரசியலும் ஊடகங்களும் இணைந்து செல்லும் நிலையைப் பலவித ஆய்வுகள் வழியாகவும் மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் வழியாகவும் கருத்தியல் விளக்கக் கட்டுரைகள் வழியாகவும் தமிழ்ப்பரப்புக்குள் உருட்டிவிட்ட இதழ் ஊடகம். அதில் எழுதும் நண்பர்களின் மொழியைக் கி.ரா.வால் உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை. வெளிப்படையாகவே “என்னய்யா பத்திரிகை நடத்திறீங்க; ஒன்னுமே விளங்கலையே” என்று சொல்லிவிட்டு, ‘எனக்கு விளங்கல என்பதற்காக இப்படி ஒன்னு வரக்கூடாதுன்னு சொல்லமாட்டேன். தமிழுக்கு இப்படியான பத்திரிகைகளும் வரவேண்டும்’ என்று சொன்னார்.

என்னிடம் அப்படிச் சொன்னவர், அவரைச் சந்திக்கவரும் ஒவ்வொருவரிடம் அதனை காட்டி அதன் சிறப்புகளையும் கவனப்படுத்தும் துறைகளையும் சரியாகவே முன்வைத்தார். அவரது அறிமுகம் மூலம் கிடைத்த நன்கொடைகள் உண்டு. சந்தாக்களும் உண்டு. ஊடகம் வந்து நின்ற பிறகுதான் அவரது கதைசொல்லி வரத்தொடங்கியது. அதில் நானெல்லாம் ஒன்றும் எழுதவில்லை. அதற்காக நிறைய வேலை செய்தவர்களாகப் பஞ்சாங்கத்தையும் பிரேமையும் சொல்ல வேண்டும். பிரேம்:ரமேஷ் இருவரும் இணைந்து அவரது ஒட்டுமொத்த எழுத்துகளையும் வாசித்துக் கலைஞன் பதிப்பகத்திற்காகச் செய்து தந்த ‘ கி.ராஜநாராயணன் : எழுத்துலகம்’ முக்கியமான ஒன்று. அதுபோல பஞ்சாங்கம் கி.ராவின் பங்களிப்புகளையும் படைப்புகளையும் குறித்துத் தொடர்ச்சியாக எழுதினார். தனியொரு நூலே - கி.ரா. என்னும் கதைசொல்லி’ கொண்டுவந்தார். இவற்றின் சாராம்சங்களை ஆங்கிலத்தில் தந்திருந்தால் அவருக்கு ஞானபீட விருது வழங்க நினைத்த தெரிவுக்குழுவிற்கு அவரது பன்முக ஆளுமை தெரியவந்திருக்கும்.



இந்திரா பார்த்தசாரதி ஒருமுறை சொன்னார். ‘ நமக்குள் தரம், தகுதி பற்றிய ஆயிரம் சண்டைகள் போடலாம். அதே நேரத்தில் தேசிய அளவில் மற்றமொழிகளோடு போட்டி போடும்போது அதையெல்லாம் காட்டாமல் தமிழுக்குக் கிடைக்கிறது என்று பார்க்கவேண்டும். தமிழ்நண்டுகளாக இருப்பதைக் கைவிடாமல் தேசிய அளவு விருதுகளை எதிர்பார்க்கக் கூடாது’. அவர் சொன்னதைத் தமிழ் எழுத்தாளர்களும் திறனாய்வாளர்களும் உணர்ந்ததாகத் தெரியவில்லை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்