நம் சமையலறையில்... : கட்டுப்படுத்தப்பட்ட எழுத்தும் வாசிப்பும்

கொன்றை அறக்கட்டளை, குமுதம் இதழுடன் இணைந்து நடத்திய சங்க இலக்கியச் சிறுகதைப் போட்டியில் குறிப்பான ஒற்றைக் கட்டுப்பாடு எதுவும் இல்லை. என்றாலும் சிலவகைக் கட்டுப்பாடுகளை உருவாக்கிக் கொள்ளும் நெருக்கடி கொண்டது அப்போட்டி. இதுதான் சூழல், இதுதான் பொருண்மை, இதுதான் காலப்பின்னணி, இத்தனை கதாபாத்திரங்கள் தான் இடம்பெற வேண்டும் என்ற கட்டுப்பாடுகளைக் கதை எழுத நினைத்த ஒருவர் தேர்வுசெய்யும் சங்கப்பாடல் உருவாக்கிவிடும். போட்டியில் பங்கேற்க நினைத்த ஒருவர் தவிர்க்க முடியாத ஒன்று.
இப்போட்டியில் பரிசுபெற்ற எல்லாக் கதைகளும் வாசிக்கக் கிடைக்கவில்லை. மூன்றாம் பரிசாக ரூபாய் ஒருலட்சம் பெற்ற தமிழ்பாரதனின் நம் சமையலறையில் ... கதையின் இணைப்பை அவர் அனுப்பியதின் பேரில் வாசித்துப் பார்த்தேன்.
இந்தக் கதைக்காக அவர் தெரிவு செய்த செவ்வியல் கவிதை கூடலூர் கிழாரின் குறுந்தொகைப் பாடல் (174) ”முளிதயர் பிசைந்த காந்தள் மென்விரல் ” எனத் தொடங்கும் அந்த ஆறுவரிக் கவிதையே இடப்பின்னணியான சமையல் கட்டையும், கணவன் - மனைவி என இரு பாத்திரங்களையும் தந்துவிடுகிறது. கணவன் விரும்பும் உணவைச் சமைத்தளிக்கும் மனைவியாக - அவனது பாராட்டில் தனது இருப்பை/ மகிழ்ச்சியைக் கண்டுகொள்ளும் மனைவியாக இருக்கும் பெண்ணைக் கண்முன் நிறுத்திய கூடலூர் கிழாராக நிகழ்காலப் புனைகதையாளர்கள் இருக்கமுடியாது.
நம் காலப்பெண்கள் தனி விருப்பமும் தன்னடையாளமும் கொண்டவர்களாக - தனது தேவைக்கான வருமானத்தைத் தாங்களே ஈட்டும் வல்லமை கொண்டவர்களாக மாறிவிட்டார்கள். அந்த மாற்றத்தின் நீட்சியாக குடும்ப உறவுகள் குறித்தும், புழங்கும் வெளிகள் குறித்தும் மனநிலை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதனை உள்வாங்கிய தமிழ்பாரதன் கணவன் மனைவி இருவருக்கும் தகவல் தொழில் நுட்பத்தில் -கன்சல்டன்சித் துறையில் -வேலை செய்பவர்கள் என்கிற சமூக அடையாளத்தைத் தந்துள்ளார். அத்தோடு மனைவியாகிய வள்ளிக்கு வீடு, சமையலறை என்ற புழங்குவெளிகளின் மீது மரபான பார்வை எதுவும் இல்லை. சமையலறையே தேவையில்லாத வெளி என்று நினைப்பவள் என்ற உளவியல் அடையாளத்தைத் தந்துள்ளார். அதற்கு மாறான மனநிலை கொண்டவன் கணவன் என்பதை வெளிப்படுத்தும் நிகழ்வாக அவனது அம்மா கதிரறுத்து அனுப்பிய ‘மாப்பிள்ளைச் சம்பா’ அரிசியைத் திருப்பி அனுப்பலாம் என்று சொன்ன பேச்சின் போது காட்டிய அதிர்ச்சியும் அதிருப்தியும் காட்டுகின்றன. விளைவு மணமுறிவுக்கான விண்ணப்ப மனு. அவனது இருப்பு உணவுடன் கூடிய விடுதி வாழ்க்கை. அவளோ அதோ தன்மையுடைய அடுக்கக வாழ்க்கையில்.
நடந்துவிட்ட பிரிவிற்கும் இப்போதைய இருப்பிற்கும் நெருக்கடி உருவாக்கும் ஒன்றாகக் கரோனா காலம் வைக்கப்படுகிறது. கரோனாவின் ஆரம்பக்கட்டத் தடைகளும் அச்சநிலைகளும் உருவாக்கிய கையறு நிலையில் எங்கே போவது என்று திகைத்து நிற்கும்போது அவனது அம்மாவின் ஆலோசனை, மனமுறைவை -பிரிவை மறுபரிசீலனை செய்யத்தூண்டும் விதமாகத் திரும்பவும் மனைவி வள்ளியிடமே போகும்படி சொல்கிறது. அம்மாவின் ஆலோசனையை ஏற்றுக் கொண்டு போனவனை வள்ளியும் நிராகரிக்கவில்லை. அவளுக்கும் கரோனா அதேவிதமான நெருக்கடிகளை உண்டாக்கியிருந்தது.
இந்த நெருக்கடியான சூழலில் இருவருக்கும் சமையலறையை பற்றிய புதிய கருத்துநிலைகள் தோன்றுகின்றன. பெண் மட்டுமே சமைத்துத்தர, சாப்பிடுபவனாக மட்டும் ஆண் இருக்கும் மரபான மன அமைப்பில் நெகிழ்ச்சி ஏற்படுகிறது. இருவரும் புழங்கும் வெளியாகச் சமையலறை மாற்றம் அடைகிறது. மணமுறிவுக்கான விண்ணப்பம் இனித் தேவையில்லை என்றாகிறது.
எழுதுவதற்கான தலைப்பு, பொருண்மை, சூழல், காலப்பின்னணி போன்ற குறிப்புகள் தரப்பட்டு எழுதப்பட்ட புனைகதைகள் என்ற தகவல் இல்லாமல் வாசிக்கப்படும் வாசிப்புக்கும், இந்தக் குறிப்புகளில் ஏதோ ஒன்று தரப்பட்டு எழுதப்பட்ட கதைகளை வாசிக்கிறோம் என்ற தன்னுணர்வுடன் வாசிக்கும் எந்தக்கட்டுப்பாடும் இல்லாமல் எழுதப்படும் வாசிப்புக்கும் வித்தியாசங்கள் உண்டு. எழுதுபவரையும் , வாசிப்பவரையும் ஒருவிதத் தேர்வுக்கூட மனநிலையில் இருப்பதாக நினைத்துக் கொள்ளத்தூண்டுவன இந்தக் கட்டுப்பாடுகள். அதே நேரத்தில் அவற்றைச் சவாலாக எடுத்துக்கொண்டு எழுதுபவர்கள் முயற்சிசெய்கிறார்கள். அவர்கள் எடுத்துக்கொண்ட சவாலை வாசிப்பவர்களுக்குக் கடத்தும்போது, அதே சவாலை வாசிப்பவர்களும் எதிர்கொள்ள வேண்டும்.
தரப்பட்ட கட்டுப்பாட்டுக் குறிப்பை நிகழ்காலப்பின்னணிக்குள் நகர்த்தியதோடு, குடும்ப உறவுகள் குறித்த நிகழ்காலப் புரிதலோடு கதையை எழுதியுள்ள தமிழ்ப்பாரதனின் கதை வாசிக்கத்தக்க கதையாக இருக்கிறது. வாழ்த்துகள்
--------------
கதையை வாசிக்க
https://tamilbharathan.blogspot.com/2020/12/1.html

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்