வேதசகாயகுமார்: நினைவலைகள்


அவரது இறப்பு முதல் தகவலாக என்னிடம் வந்து சேர்ந்தபோது நேரம் முன்னிரவு 7.50. எழுதியவர் அனந்தபுரி நயினார். வருத்தமான செய்தி என பின்னூட்டக் குறிப்பெழுதிய பின் அவரோடான சந்திப்புகளும் உரையாடல்களும் விவாதங்களும் தொடர்ச்சியாக நினைவுக்கு வந்துகொண்டே இருந்தன.
இருவரும் தமிழ்க்கல்விப் புலத்திற்குள் இயங்கியவர்கள் என்பதால் முதல் சந்திப்பு எப்போது என்பதை உறுதியாகக் கொண்டுவர இயலவில்லை. எனது மாணவப்பருவத்தில் - மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆய்வாளராக இருந்த காலத்தில் அவரைப் பார்த்திருக்கிறேன் என்பது நினைவில் தட்டுப்பட்டது. சொந்த வேலையாகவோ மாணவர்களின் வேலையாகவோ பல்கலைக்கழகத்திற்கு வந்த போது எனது ஆய்வுநெறியாளரும் திறனாய்வாளருமான தி.சு.நடராசனைச் சந்திக்க அவர் வந்திருந்தார். அப்போது என்னை அவரிடமும் அவரை என்னிடமும் திசுந., அறிமுகம் செய்தார். நான் இவரை எனக்கு இளங்கலை படிக்கும்போதே தெரியும் என்று சொன்னேன். எப்படி என்று கேட்டார் குமார். அவரது கட்டுரை ஒன்றின் பெயரைக் குறிப்பிட்டு, அதை வாசித்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டு, அந்தக் கட்டுரையை அமெரிக்கன் கல்லூரியில் எனது ஆசிரியர் சாமுவேல் சுதானந்தா தந்ததாகச் சொன்னேன். நல்லநல்ல ஆசிரியர்களிடம் பாடம்படிக்கிறீர்கள் என்று சொல்லிவிட்டுக் கைகுலுக்கினார். அவரிடம் அவரது ஆசிரியர் ஜேசுதாசனின் தாக்கம் இருந்தது போல என்னிடம் எனது ஆசிரியர் திசுந.வின் தாக்கமும் அணுகுமுறைகளும் உண்டு.
பாண்டிச்சேரியிலிருந்து நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு வந்தபிறகு சந்திப்புகள் நடந்துகொண்டே இருந்தன. அவர் பணியாற்றிய திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரிக்குச் சிறப்புச் சொற்பொழிவுகளுக்காகவும் கருத்தரங்குகளுக்காகவும் அழைத்திருக்கிறார். அதேபோல் நானும் அவரை மனோன்மணியத்திற்கு அழைத்திருக்கிறேன். அவர் கல்லூரி வளாகத்தில் நடந்த புத்தொளிப் பயிற்சி வகுப்பில் வல்லுநராகப் பாடம் சொன்னதின் வழியாகக் கேரள மாநிலத்துத் தமிழ்க் கல்வியாளர்களின் அறிமுகம் கிடைத்தது. கேரளப்பல்கலைக்கழக வளாகத்திற்குப் பின்னர் அடிக்கடி சென்றுவருபவனாக மாறினேன். பல்கலைக்கழகம் சார்ந்த சந்திப்புகளாக இல்லாமல் நாகர்கோவிலில் நடந்த இலக்கியக் கூட்டங்களில் இருவரும் சந்தித்துக்கொண்டதுண்டு.
வேதசகாயகுமாரின் கல்விப்புலச் செயல்பாடுகள் சார்ந்த/ ஆய்வுசார்ந்த/ விமரிசனப்பார்வை சார்ந்த அணுகுமுறை எனக்கும் உடன்பாடானது என்றாலும் பலவற்றில் முரண்பாடுகள் உண்டு. ஏற்பும் மறுப்பும் என்பதான விமரிசனப் பார்வையை - ஒருவிதப் பிராமணியச் சிந்தனையோட்டத்தை இலக்கிய விமரிசனத்தில் மட்டுமல்லாமல் சமூகத்தளத்திலும் அரசியல் தளத்திலும் கொண்டிருந்தார் என்பதே அவரைப்பற்றிய மதிப்பீடாக இருக்கிறது. தமிழ்க் கல்விப் புலம் , நவீன இலக்கியத்தின் பக்கம் திசைதிரும்பாத போக்கில் இருப்பது குறித்த விமரிசனத்தை அவர் எப்போதும் வைத்துக்கொண்டே இருந்தார். அதில் எனக்கு உடன்பாடு உண்டு. ஆனால் அவர் நவீனத்துவமாக முன்வைத்த போக்கோடு எனக்கு முழுமையான உடன்பாடு இருந்ததில்லை.
க.நா.சுப்பிரமணியத்தின் நீட்சியாக மட்டுமே அவரது நவீனத்துவப்பார்வை இருந்தது. சமூகவிமரிசனம் சார்ந்த நவீனத்துவத்தைக் கட்சி இலக்கியமாகக் கணித்து தன்னை ஒதுக்கிக் கொண்டார். அதனால் திராவிட இயக்க எழுத்தாளர்கள் மீதும் இடதுசாரி இயக்க எழுத்துக்கள் மீதும் விமரிசனமற்ற ஒதுக்கல்களைக் கடைப்பிடித்தார். கல்விப் புலத்தவர்களுக்கு நவீன இலக்கியத்தின் மீதான ஒவ்வாமை இருந்தது போலத் தமிழ் மரபு இலக்கியத்தின் மீது நவீனத்துவர்களுக்கு ஒவ்வாமை இருக்கிறது என்பதை அவர் முன்வைத்ததில்லை. இவ்விரு ஒவ்வாமைக்கும் காரணம் பொதுத்தள அரசியல் முரண் என்பதைக் கவனித்ததில்லை. அதே நேரத்தில் தேசிய அரசியலுக்கு எதிரான அரசியலையே ஏற்றுக் கொண்டிருந்தார். . நாம் தமிழர் போன்ற கட்சிகளின் வரவை நேரடியாக ஆதரித்தார் என்று சொல்லமுடியாவிட்டாலும் அதன் கருத்தியலோடு அவருக்கு உடன்பாடு இருந்தது.
சுந்தரராமசாமிக்கு நெருக்கமான தமிழ்ப் படிப்பாளிகளின் சிறுபட்டியல் ஒன்று உண்டு. ராஜமார்த்தாண்டனும் இவரும் அவர்களின் முதன்மையானவர்கள். பின்னர் அந்த நெருக்கத்தை நாகர்கோவில் வாசிகளான ஜெயமோகன், போகன் சங்கர் என்று நகர்த்தியதையும் காணலாம். நாகர்கோவிலிலிருந்து பல்கலைக் கழகத்திற்குப் படிக்க வந்த பலர் அவரது பெயரைச் சொல்வார்கள். ஆனால் அவர்களிடத்தில் அவரது தாக்கம் இருந்ததென்று சொல்ல முடியாது. குறிப்பிட்ட ஒன்றின் மீது முழுமையான தரவுகளைத் தொகுத்துத் தரவேண்டும் என்ற ஆய்வுப்பார்வை அவருக்குண்டு. அதனைப் புதுமைப்பித்தனின் எழுத்துகளைத் தேடியதின் மூலம் உருவாக்கிக் கொண்டார். புதுமைப் பித்தனையும் ஜெயகாந்தனையும் ஒப்பிட்டு ஆய்வு செய்த அவரது முனைவர் பட்ட ஆய்வு நூலாக வந்துள்ளது. அந்த நூலில் ஜெயகாந்தனைப் புதுமைப்பித்தனின் நீட்சியாக ஒத்துக்கொள்ளத் தயாரில்லாத அவரது மனம் வெளிப்பட்டுள்ளது.

தமிழ்ச்சிறுபத்திரிகைகளுக்குள் செயல்பட்ட குறுங்குழுச் செயல்பாடுகள் - உள்வட்ட நடவடிக்கைகள் நேர்மறையான விளைவுகளை உருவாக்கக்கூடியன என்ற நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கை காரணமாக அவர் சேர்ந்து இயங்கிய குழுவைப் பாதுகாக்கவும் எதிர்க்குழுக்களை எதிர்க்கவும் உச்சநிலை முடிவுகளை மேற்கொள்வார் என்பதை அவர் எழுதியதாக நம்பப்படும் நாச்சார் மட விவகாரங்கள் கதையின் வழி உறுதிப்படுத்தினார். நாகர்கோவில் சார்ந்தே அவரது செயல்பாடுகள் அதிகம் வெளிப்பட்டன.
அவரது கட்டுரைகள் அடங்கிய நூல்கள் பெரும்பாலும் கல்விப்புல மாணவர்களுக்கு மாற்றுப்பார்வையோடு கூடிய அறிமுகங்களை முன்வைப்பனவாக இருந்தன. நவீன இலக்கியங்கள் குறித்த நூல்களில் ஒருவித இலக்கியவரலாற்றுத்தன்மையையும் செவ்வியல் இலக்கியங்கள் குறித்த கட்டுரையில் ரசனை சார்ந்த பனுவல் வாசிப்பனுவமும் வெளிப்பட்டுள்ளன. அவரது பெயர் சொல்லும்படியான பின்பற்றாளர்கள் சிலரை அவர் உருவாக்கியிருக்கிறார் என்பதும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒன்று.
ஓய்வுக்குப் பின் பல்கலைக்கழக மானியக்குழுவிற்குப் பெருந்திட்டம் ஒன்றை அனுப்பித் திறனாய்வுக்களஞ்சியம் ஒன்றை உருவாக்கினார். அதற்கான இணைப்பு இணையத்தில்கூட இருக்கிறது. தொடர்ந்து நாகர்கோவில் கல்லூரிகளில் ஆய்வுசெய்யும் தமிழ் ஆய்வாளர்களுக்கு ஆலோசனை வழங்குவது, ஆய்வுத்தலைப்புகளை உருவாக்கிக் கொடுப்பது எனத் தொடர்ந்துகொண்டிருந்தார். தனது வாசிப்பைத் தொடர்வதின் வழியாக எப்போதும் தன்னைப் புதுப்பித்துக்கொண்டிருந்த இலக்கிய ஆளுமையின் இழப்பும் இன்மையும் நினைவுகூரத்தக்கது
=================
அவரது தூண்டுதலின் பேரில் எழுதப்பெற்ற கட்டுரையொன்றை அவரின் நினைவாகப் பகிர்ந்துகொள்கிறேன். 2007,மார்ச் 13, 14 தேதிகளில் திருவனந்தபுரம்,பல்கலைக்கழகக் கல்லூரி நடத்திய நான்காவது தேசியக் கருத்தரங்கத்தில் வாசிக்க எழுதப்பட்ட கட்டுரை

https://ramasamywritings.blogspot.com/2007/06/blog-post_7103.html

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்