முல்லையென அறியப்பட்ட சித்ரா


2014 முதலாகவே தொலைக்காட்சி அலை வரிசைகளில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், விளம்பரப் படங்களின் நடிகை, தொடர்களின் நடிகை என வந்து கொண்டிருந்தார் என்றாலும், அவரது உருவமும் பேச்சும் சிரிப்புமான முகமும் பதிந்துபோன தொடராக இருந்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற விஜய் தொலைக் காட்சியின் முதன்மை நேரத்தொடர்தான். அந்தப் பெண்ணின் பெயர் சித்ரா என்பதுகூட நேற்றுத் தற்கொலை செய்துகொண்டதாகப் பரவிய செய்திக்குப் பின்புதான் தெரியும். செய்திகளில் கூட முல்லையாக நடித்த சித்ரா என்றுதான் சொன்னார்கள்.
தொலைக்காட்சிகளில் வரும் எல்லாச் சின்ன திரைத் தொடர்களையும் பார்ப்பதில்லை என்றாலும் சில தொடர்கள் அவை ஒளிபரப்பாகும் நேரம் மற்றும் வகைமாதிரிக்காக அடிக்கடி பார்ப்பதுண்டு. அப்படிப் பார்த்த தொடர்களில் இப்போதும் நினைவில் இருப்பவை மெட்டி ஒலி. நாதஸ்வரம் போன்ற சன் தொலைக்காட்சித் தொடர்கள். இப்போது அந்த இடத்தை விஜய் தொலைக்காட்சி பிடித்திருக்கிறது.
திட்டமிட்டுத் தொலைக்காட்சித் தொடர்களைத் தயார்செய்வதாக அதன் தயாரிப்பாளர்கள் வெளிப்படுகிறார்கள். பெரும்பாலான தொலைக்காட்சி அலைவரிசைகள் நகர வாழ்க்கைக்குள் நுழைந்துவிட்ட - நடுத்தரவர்க்கத்துப் பாத்திரங்களை உருவாக்கி அதேவகையான பார்வையாளர்களை இலக்குப் பார்வையாளர்களாகக் கருதித் தொடர்களைத் தயாரிக்கின்றன. அதிலிருந்து விஜய் தொலைக்காட்சி விலகி நிற்கிறது. மண் மனம் வீசும் தொடர்கள் என்ற பெயரில் அவை வட்டாரப்பின்னணியைத் தொடர்களுக்கு உருவாக்குகின்றன. குறிப்பாகத் திருநெல்வேலி, மதுரை போன்ற தென்மாவட்ட அடையாளங்கள் கொண்ட கதைகள் அதன் தேர்வுகளாக இருக்கின்றன. சில வருடங்களுக்கு முன்பு மதுரைமாவட்டப்பின்னணி கொண்ட தொடர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பகல்நிலவு என்ற தொடரே பின்னர் ஆண்டாள் அழகர் என மாற்றம் செய்து ஒளிபரப்பப்பட்டது. இப்போது அந்த இடத்தைப் பாரதி கண்ணம்மாவும் பாண்டியன் ஸ்டோர்ஸும் பிடித்துக்கொண்டுள்ளன.
கூட்டுக்குடும்ப அமைப்பின் சிடுக்குகளையும் அது தரும் பாதுகாப்பையும் லாவகமான வசனங்கள் மூலம் பார்வையாளர்களுக்குக் கடத்திக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸில் முல்லை பாத்திரம் இரண்டு முனைகளுக்கும் அலையும் ஒரு பாத்திரம். தனக்குச் சமமாகப் படித்த ஆணோடு நடக்க இருந்த திருமணத்தில் திடீரென்று அவனின் காதலியின் ஆவேசமான நுழைவால் தடைபட்டுப் போகும் திருமணம் என்பதின் வழியாக அந்தப் பாத்திரம் உருக்கொண்டது. நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளைக்குக் காதலியோடு திருமணம் நடக்க, அவனின் தம்பியை - தன்னைவிடக் குறைவான படிப்புக் கொண்டவனைக் கட்டிவைக்கும் உறவினரின் நெருக்குதலை ஏற்றுக் கொண்டு வாழும் பாத்திரம். விருப்பமில்லாமல் ஏற்றுக் கொண்ட ஆடவனோடு அந்த வீட்டில் இருக்கும் காலத்திலிருந்து, மெல்லமெல்ல மாறிக் கணவனை ஏற்றுக் கொண்ட பெண்ணாக மாறும் கட்டங்களையெல்லாம் நுட்பமாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.
கூட்டுக்குடும்ப உறுப்பினர்களை எப்போதும் காட்சிச் சட்டகத்திற்குள் காட்டிக் கொண்டே இருக்கும் அந்தத் தொடரில் முல்லை பாத்திரத்தின் நுழைவும் பேச்சும் எப்போதும் துருதுருப்பும் நகையுணர்வும் கொண்டதாகவே அமைந்திருந்தது. படிக்காத கணவனை ஏற்றுக் கொள்ளாத அவளது அம்மாவோடு முரண்படும் காட்சிகளிலும், அதனால் ஏற்படும் சோக நகர்வுகளிலும் வெளிப்பட்ட அழுகையுணர்விலும் கச்சிதத்தன்மையைக் கொண்டுவரும் நடிகையாக இருந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸை எப்போதும் தவறவிடாத என் மனைவியிடம், “ இந்தப் பெண் சினிமாவில் நடிக்கத் தொடங்கினால் நிச்சயம் நல்ல பாத்திரங்கள் கிடைக்கும் ” என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பேன். ஒவ்வொரு நாளும் அந்தத் தொடர் முடிந்தபின்பு இரவுணவுக்காக உட்காருவோம். அப்போது முல்லையைப் பற்றி, ஒன்றிரண்டு சொற்கள் பேசாமல் இருந்ததில்லை. சாப்பிடும் நேரத்துப் பேசுபொருளாக முல்லையென்னும் சித்ரா இனி இல்லையென்பது வருத்தமான ஒன்று. தீர்க்கமான பாத்திரமாக வந்துபோன முல்லையின் இன்மை தற்கொலையால் நடந்துள்ளது என்பதை மனம் ஏற்க மறுக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்