சிதைவுகளின் முழுமை - பின் நவீனத்துவச் சொல்லாடல்கள்



நடிக அரசியல்
தேசிய இன அடையாளம், வட்டாரவாதம், பெண்கள், ஒடுக்கப்பட்டோர், பழங்குடியினர் உரிமைகள், நாடோடிகள், மூன்றாம் பாலினர், மதங்களின் உட்பிரிவு நம்பிக்கைகள், சடங்குகள், வெளிப்பாடுகள், சாதியின் இருப்பைத் தக்கவைக்கும் முயற்சிகள் போன்றனவற்றை அடையாள அரசியல் சொல்லாடல்கள் என்ற அளவில் விவாதிக்கலாம்; விவாதிக்க வேண்டும்; அவையெல்லாம் சரிசெய்யப்படவேண்டும். அதை வலியுறுத்தும் அரசியல் விவாதங்கள், இவையெல்லாம் ஒரு தேசத்தைக் கட்டமைப்பதற்கு முதன்மையான தடைக்கற்கள் என்பதையும் மறுப்பதில்லை.
இத்தகைய விவாதங்களை இந்தியாவின் தேசியக்கட்சிகள் தங்களின் பொது அமைப்பில் விவாதிக்கின்றனவா என்று தெரியவில்லை. விவாதித்திருந்தால் எப்படியாவது தங்களின் ஆதிக்கத்தை எல்லா இடங்களிலும் நிலைநாட்டிவிட வேண்டுமென கருதியிருக்காது. வெவ்வேறு மாநிலங்களில்/ அமைப்புகளில் பின்வாசல் நுழைப்புகளை முன்னெடுத்திருக்காது. ஆனால் இந்தியாவில் தேசியத்தைக் கட்டமைப்பதாகச் சொல்லிக்கொள்ளும் கட்சிகள் தொடர்ந்து பின்வாசல் நுழைப்புகளைச் செய்துகொண்டே இருக்கின்றன.

ரஜினிகாந்தைத் தமிழக அரசியலில் இறக்கும் முயற்சி அப்பட்டமான பின்வாசல் நுழைவு. அதனைத் தேசியவாதம் வெளிப்படையாகச் செய்யாமல் மறைமுகமாகச் செய்கிறது. அறியாமல் செய்யும் பிழைகளுக்கு மன்னிப்பு உண்டு; அறிந்தே செய்தால் தண்டனைதான் கிடைக்கும். தண்டனை “ ஓரடி முன்னால், ஈரடி பின்னால்” என்ற அறியப்பட்ட சொற்றொடரின் அர்த்தமாக வெளிப்படும்; முடியும் என்ற சொல்ல விரும்புகிறேன். அப்படி முடிந்ததிற்கான முன்னுதாரணத்தைத் தேடி வேறெங்கும் செல்லவேண்டியதில்லை. தமிழ்நாட்டின் நிகழ்கால வரலாறே அதுதான்.

தேசியக் காங்கிரசும் தேசியவாதத்தில் நம்பிக்கைகொண்ட இடதுசாரிகளும் திரு எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களைப் பின்வாசல் வழியாகவே அரசியலில் நுழைத்தார்கள். நுழைந்த பின்னால், தமிழகச் சூழலில் தேசியவாதம் எடுபடாது என்பதைப் புரிந்துகொண்டார். தேசிய நலனின் பக்கம் திரும்புவதற்குப் பதிலாக இரண்டடி தாவி வட்டாரவாதத்தை வளர்த்தெடுத்தார். மாநிலவாதம் அல்லது தேசிய இனத்தின் நலன் பேசிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைபாடு தேசியத்திலிருந்து ஓரடி விலகல் என்றால், அதிமுகவின் தொடக்க கால நடவடிக்கைகள் வட்டார வாதத்தை நோக்கிய பயணமாகவே இருந்தது. அவர் காலத்தில் வட்டாரவாதமாக இருந்ததை அவருக்குப் பின்னால் தலைமையேற்ற அவரது வாரிசான ஜெ.ஜெயலலிதா சாதியவாதமாக மாற்றிக்கட்டமைத்துத் தன் தலைமையைத் தக்கவைத்தார்.

தேசிய இனங்களின் அடையாளங்கள், அவற்றின் விருப்பங்கள், அதனை நிறைவேற்றுவதற்கான நடைமுறைத் திட்டங்கள் பற்றிய மறுபரிசீலனை செய்யாமல் செயல்பட்ட காங்கிரசின் மைய அரசும், கட்சியும் 1960 -களில் வீழ்ச்சியைச் சந்தித்தன. அந்த வீழ்ச்சி, பல்வேறு தளங்களில் பல்வேறு பாணிகளில் இன்று முழுமையாக வெளிப்படுகின்றது. இந்தியாவை ஆண்ட தேசிய காங்கிரஸ் அதன் பிடிமானத்தை எல்லா மாநிலங்களிலும் இழந்துநிற்கிறது. எல்லா மாநிலங்களிலும் அதிகாரத்திற்கு வரவேண்டுமென விரும்பும் பா.ஜ.க., சகலவிதமான குறுக்குச் சால்களையும் ஓட்டுகிறது. கட்சியின் பெயர் ஒன்றாக இருந்தாலும் ஒவ்வொரு மாநில பா.ஜ.க.வின் செயல்பாடுகளும் தேர்தல் உத்திகளும் வெவ்வேறானவை. தேர்தல் வெற்றிக்காக மாநிலவாதம், மதவாதம், சாதியவாதம், தனிநபர்களை முன்னிறுத்தும் வெகுமக்கள் வாதம் என அனைத்தையும் பயன்படுத்துகிறது. இவையெல்லாம் உடனடிப்பலன்களைத் தரலாம். ஆனால் நீண்ட காலத்திற்குத் தேசத்தை - தேசத்தின் அடிப்படை அரசியல் வாழ்வை- பொருளாதாரக் கட்டுமானத்தை உறுதியாக்கித் தராது.

ஒருவிதத்தில் பின் நவீனத்துவ காலத்தின் முழுமை என்பது சிதைவுகளின் வழியாக உருவாக்கப்படும் முழுமைதான் என்றாலும், திரும்பவொரு சிதைவை விரும்பாமல் ஆக்குவதில் முழுமை வெற்றிபெற்றாக வேண்டும் சிதைவுகளின் அடையாளங்கள் தொடர்ந்து வாழும் என்றால் எப்போதும் சிதையவும் செய்யும் என்பதும் உணரப்படவேண்டும். சிதைவுகளின் தேவைகளை நிறைவுசெய்யும் ஒரு முழுமைக்குள் இருப்பதில் லாபமுண்டு என்பதைச் சிதைவுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நேரத்திலும் நினைக்கும் விதமாக முழுமை நடந்துகொள்ளவேண்டும்

வந்தேறி எனும் விசைச் சொல்

இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியும், சீமானும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்ற எண்ணம் அயல்நாடுகளில் வாழும் இந்தியத் தமிழர்களிடம்கூட இருந்திருக்கிறது. அவர் மட்டுமாவது வெற்றிபெற்று விடுவார் என்று நினைத்திருந்த ஒருவரை அமெரிக்காவில் சந்தித்தேன். திருச்சியிலிருந்து வந்தவர்.
“இந்தியாவிற்கு எப்போது வந்தீர்கள்” என்று கேட்டேன்
. “ மூன்று வருடமாச்சு?” என்றார்.

உங்கள் பார்வையில் படும் தகவல்கள் எல்லாம் இணையம் சார்ந்தவைகள்; அதனால் அப்படித்தான் யோசிக்க முடியும்” என்று சொன்னேன். அரைமனதோடு ஒத்துக்கொண்டார்.
கனடாவில் இருந்தபோது தேர்தல் முடிவுகள் வரவில்லை. வந்திருந்தால் நிச்சயம் ஈழத்தமிழர்களில் பெரும்பாலோர் இந்தப் பதிலை ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் ஒத்துக்கொள்ளக்கூடிய பதிலை என்னால் தர இயலாமல் தவித்திருப்பேன்.

புலம்பெயர்ந்து ஐரோப்பாவிலும் கனடாவிலும் வாழும் ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டுத் தேர்தலைத் தீர்மானிக்கும் முதன்மைக்காரணியாக மொழிப்பற்றும் அதன் உடன்பிறப்பான இனப்பற்றுமே இருக்கிறது என நம்புகிறார்கள். இந்த நம்பிக்கை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இன்னும் தீவிரமாக இருந்தது. அப்போது அவர்களின் நம்பிக்கையைச் சுமந்தவர் வைகோ. 2011 தேர்தல் முடிவுக்குப் பின் நார்வேயில் நடந்த பொங்கல் விழாவொன்றிற்கு நண்பர் சுகுமாரோடு போயிருந்தேன். இரவில் படுப்பதற்கும் காலை உணவுக்கும் தூரமாக இருந்த ஒருவரின் வீட்டில் ஏற்பாடு.
அவரது வீட்டில் கிடந்த இதழ்களில் வைகோவின் முழுப்பக்கப் படங்கள் இருந்தன. இரவு முழுவதும் என்னிடம் வைகோவின் அரசியலையும் அவரிடம் கொண்டிருக்கும் எதிர்பார்ப்பையுமே பேசிக்கொண்டிருந்தார். தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்றே என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அவரது கருத்துகளை முழுமையாக நான் மறுத்துப் பேசுவேன் என்று எதிர்பார்த்திருக்கமாட்டார். தமிழ்நாட்டு அரசியல்வாதி, தமிழ்நாட்டரசியல் செய்யாமல் ஈழத் தமிழ் அரசியல் செய்வதற்கு என்ன காரணம்? என்று கேட்டேன். இனப்பற்று, மொழிப்பற்று என்று மட்டும் பதில் சொன்னார். இப்போது அதே வைகோ அந்நியமொழிக்காரராகவும் தமிழினத்தை அடிமைப்படுத்தவந்த ஆதிக்க வந்தேறியாகவும் ஆகிவிட்டார்.
வந்துமோதும் விசைக்கேற்ப நிலைத்துவிட்ட பொருள் நகர்ந்து இடத்தைக் காலிசெய்யும். இது அறிவியல் விதி. ஐந்தாண்டுகளுக்கு முன்பு ஈழத்தமிழர்களின் மனதில் அசையாப் பெருங்கல்லாய் இருந்த வைகோவை கவனிலிருந்து புறப்பட்ட விசையுடன் இடம்பெயர்த்துவிட்டார் சீமான். அவரது கவனின் விசைத்திறன் ‘வந்தேறி’ என்ற சொல்லாக இருக்கிறது. இந்தச் சொல் புலம்பெயர்ந்து அலையும் ஈழத்தமிழர்களைக் கடும் உளைச்சலுக்குள்ளாக்கும் சொல் என்பது உணரப்பட இன்னும் சில காலம் ஆகலாம்.

ஆடப்படும் பந்துகள்

எல்லா நிகழ்வுகளுக்கும் இரண்டு கோணங்கள் உண்டு. எந்த முடிவுகளுக்கும் இரண்டுக்கு மேற்பட்ட பார்வைகளும் இருக்கும். அதிலும் வெகுமக்களின் முடிவால் தீர்மானிக்கப்படும் பொதுத்தேர்தல்களில் இதுதான் முற்றமுழுதான முடிவு என்று சொல்லிவிடமுடியாது. வேட்பாளர் தேர்வுகளையும் அறிவிப்பையும் கவனித்தவர்களுக்கு இது எளிதாகப் புரியும். ஒருபுறம் சில கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துக் கொண்டிருக்கின்றன. இன்னொருபுறம் அறிவித்த கட்சிகளின் வேட்பாளர்களின் பெயர்களும் மாறுகின்றன.

இதுதான் எனது தொகுதியெனப் பிடிவாதம் பிடித்த வேட்பாளர்களுக்கு ஊடகங்கள் தரும் முக்கியத்துவம் செய்திகளாகின்றன. கட்சிகள் எடுக்கும் முடிவை நடுநிலையாளர்கள் எனச் சொல்பவர்கள் சமூக ஊடகங்கள் வழி மாற்றிவிட முயல்கிறார்கள். திடீரென்று அரசியல் களத்தில் இறக்கப்படும் நபர் திசைதெரியாமல் குழம்புவதும் நடக்கிறது.

இதனை மக்களாட்சியின் பக்குவநிலையென்றும் நீங்கள் சொல்லலாம்; இல்லையென்றால், தனிநபர்களின் செல்வாக்கு கட்சியின் அடையாளத்தைக் கடந்து நிற்கிறது என்றும் வாதிடலாம். பரப்புரையைத் தொடங்கிய பின்னும் வேட்பாளர்கள் மாற்றம் என்பது இந்தத் தடவை அதிகம். அறிவித்த கட்சியே மாற்றுவது ஒருபக்கம் என்றால், அறிவிக்கப்பட்டவர்கள், ‘ நான் போட்டியிட விரும்பவில்லை’ எனச் சொல்லிப் பின்வாங்குவதும் நடக்கிறது. ‘அறிவிக்கப்பட்டவர் சரியான வேட்பாளர் அல்ல’ எனக் கட்சிக்காரர்களே எதிர்ப்புக் காட்டிப் போராட்டம் நடத்தும் நிலையும் முந்திய தேர்தல்களில் இல்லாத அளவுக்குக் கூடியிருக்கிறது. வேட்புமனுதாக்கலுக்குப் பிறகும்கூட மாற்றங்கள் இருக்கலாம். திரும்பப் பெறும் நாளில்கூட அதிகாரப் பூர்வ வேட்பாளரின் மனுவை வாபஸ் வாங்கச் சொல்லிவிட்டுப் பதிலிவேட்பாளரையே அதிகாரப் பூர்வ வேட்பாளராக்கலாம். இன்றிலிருந்து இன்னும் 10 நாட்கள் இந்தத் தடுப்பாட்டங்களும் அடித்தாடுமாட்டங்களும் தொடரப்போகின்றன.

மாறுதல்களும் மாற்றங்களும் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். வாக்காளர்களை நோக்கிவரப் போகும் வேட்பாளர்கள் நமக்கு அறிமுகமானவர்களாக இருக்கவேண்டும். ஆனால் அதை மட்டுமே கவனிக்க வேண்டுமா? என்றால், அதையும் தாண்டி வாக்காளர்கள் நினைத்துப் பார்க்கவேண்டியன சில உள்ளன. இவை இலட்சிய நோக்கம் கொண்ட எதிர்பார்ப்புகள் அல்ல: எளிய எதிர்பார்ப்புகள் தான்.

  • • நமது வேட்பாளர்கள், தமிழகத்தின் அரசியல் சூழல் மூலம், சமூக நல்லிணக்கம் உருவாக வேண்டுமென நினைப்பவர்களாக இருக்கவேண்டும்.
  • • கடந்த கால் நூற்றாண்டுகளாகப் புதிய பொருளாதார நடைமுறைகள் அமுலில் உள்ளன. அவற்றில் நேர்மறைக் கூறுகளும், எதிர்மறைக் கூறுகளும் இருக்கின்றன. அவற்றைப் புரிந்துகொண்டு விவாதித்துக் கொள்ளுவன கொள்ளவும், தள்ளுவன தள்ளவும் தெரியவேண்டும்.
  • • மனிதவளத்தை உருவாக்கும் கல்வி நிறுவனங்கள், மொழிக்கொள்கைகள், கற்கைமுறைகள் போன்றவற்றிற்கு முதன்மை கொடுத்துச் செயல்படுகிறவராக இருக்கவேண்டும்.
  • • சமூகத்தில் நிலவும் ஆண் - பெண் பால் வேறுபாட்டையும், சாதிய ஒடுக்கு முறைகளையும் களைவதற்கான கருத்துருக்களையும் திட்டங்களையும் முன்மொழிபவராக இருக்கவேண்டும்.

இவையெல்லாம் பரந்தபட்ட எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்புகள் தமிழகம் தழுவியன. இந்த எதிர்பார்ப்புகளைவிடவும் முக்கியமான எதிர்பார்ப்புகள் சில உள்ளன. அவை நமது ஒவ்வொருவரின் அடிப்படைத்தேவைகளோடு தொடர்புடைய எதிர்பார்ப்புகள்.
• முதன்மையான எதிர்பார்ப்பாக இருப்பது நல்ல குடிநீர். விடுதலையடைந்து 70 ஆண்டுகள் ஆகப்போகிறது. இன்னும் நல்ல குடிநீர் கிடைக்கவில்லை என்பது நமது அரசுகளின் ஆகப்பெரும் தோல்வி. நமது வீடுகளுக்குத் தேவையான குடிநீரையும் புழங்கும் நீரையும் தந்து உடல்நலம் காக்கும் உறுதியை நமது வேட்பாளர்கள் தரவேண்டும்.
• முதன்மையான எதிர்பார்ப்பாக இருப்பது நல்ல குடிநீர். விடுதலையடைந்து 70 ஆண்டுகள் ஆகப்போகிறது. இன்னும் நல்ல குடிநீர் கிடைக்கவில்லை என்பது நமது அரசுகளின் ஆகப்பெரும் தோல்வி. நமது வீடுகளுக்குத் தேவையான குடிநீரையும் புழங்கும் நீரையும் தந்து உடல்நலம் காக்கும் உறுதியை நமது வேட்பாளர்கள் தரவேண்டும்.
• அதற்கிணையான இன்னொரு எதிர்பார்ப்பு நல்ல சாலைகள். நமது வீட்டிலிருந்து வெளியேறிப் பணியிடத்திற்குச் சென்றுவரத்தேவையான நல்ல சாலைகள் வேண்டும்.
• நமது உடல்நிலை பாதிக்கப்பட்டால் உடனடியாகக் கவனிக்கத்தக்க மருத்துவமனைகளின் அருகிருப்பு அடுத்த தேவை.
• நமது உடல் உழைப்பையும் அறிவுழைப்பையும் பயன்படுத்திக்கொள்ளும் தொழிற்கூடங்களை நாம் இருக்குமிடங்களில் தொடங்கும் மனநிலையை நமது வேட்பாளர்கள் உணர்ந்தவர்களாக இருக்கவேண்டும்.

 இத்தகைய புரிதல்களைக் கொண்ட வேட்பாளர்களை நமது அரசியல் கட்சிகள் நிறுத்தியிருக்கின்றனவா? இல்லை; நிறுத்தவில்லை. நிறுத்தப்பெற்ற வேட்பாளர்களில் இவற்றைப் புரிந்துகொண்டவர்களை அடையாளம் காணவேண்டும். அதற்காக வாக்காளர்கள் சின்னச்சின்ன முயற்சிகளை எடுக்கலாம். நம்மை நோக்கி வரும் வேட்பாளர்களை அழைத்து அவரது தாகத்துக்குத் தண்ணீரோ, ஒரு சொம்பில் மோரோ கொடுத்து உபசரிக்கலாம். நமது குடியிருப்பு எதுவாயினும் -அது குடிசையாயினும் மாளிகையாயினும் உள்ளே அழைத்து உட்காரவைத்துப் பேசலாம். இப்போதே பேசாதவர் அதிகாரமிக்க சட்டமன்ற உறுப்பினராகிவிட்டால் நம்மோடு பேசவா போகிறார்? ஒவ்வொருவரும் பேசவில்லையென்றாலும் ஒரு குழுவாக- தெருவாக - கிராமமாக நின்று நாம் பேசவேண்டும். அவர் கேட்கவேண்டும். தேர்தல் பரப்புரையும் மக்களாட்சி நடைமுறையும் ஒருவழிப்பாதையெல்ல என்று உணர்த்தவேண்டும்.


அந்த உரையாடல்களில் இவையெல்லாம் எங்கள் தேவைகள்; இவைகளை நீங்கள் நிறைவேற்றித் தரமுடியுமா? என்று கேட்கக் கூட வேண்டாம். இந்தத் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டியவை என்பதை உணர்ந்துள்ளாரா என்றாவது சோதிக்கவேண்டும். இதுதான் வாக்காளர்களின் கடமை. வாக்காளர்களின் அதிகாரம் வாக்களிக்கும்வரைதான் வாக்கை அளித்து மையப்பூசிக்கொள்ளும்போது நமது அதிகாரம் கைமாறிவிடும். நமது கடமையைச் சரியாகச் செய்வதிலிருந்து வேட்பாளர்களின் கடமைகளை உணரச்செய்யலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்