அடம்பிடித்து அழும் காந்தியும் புத்தனும்


ஒரு நாள் இடைவெளியில் இணையப் பக்கங்களில் பதிவேற்றம் பெற்ற இந்த இரண்டு கவிதைகளையும் வாசித்தபோது இரண்டுக்கும் இடையே கவிதையின் சொல்முறையிலும் அமைப்பாக்கத்திலும் முன்வைப்பிலும் உருவாக்கும் உணர்வலைகளிலும் பெருத்த ஒற்றுமைகள் இருப்பதை உணரமுடிந்தது. இப்படியான ஒற்றுமைகளை உருவாக்குவது அவர்கள் இருவரும் கவிதையாக்க நினைத்த நேர்நிலை நிகழ்வுகள் என்றே சொல்லத்தோன்றுகிறது. முகநூலில் யவனிகாஸ்ரீராமின் கவிதையை வாசித்தது முதல் நாள் (டிசம்பர்.17) அடுத்தநாள் ரியாஸ் குரானாவின் கவிதை நடு இதழில் வாசிக்கக் கிடைத்தது.

யவனிகா ஸ்ரீராமின் கவிதைக்குள் விவரிக்கப்படும் நேர்நிலை நிகழ்வு இரண்டு வாரங்களுக்கும் மேலாக தலைநகர் டெல்லியில் போராடும் விவசாயிகள். ரியாஸ் குரானாவின் கவிதைக்குள் விவரிக்கப்படுவது இலங்கை இசுலாமியர்களின் புதைக்கும் உரிமையைப் பறித்துவிட்ட அரசின் அதிகாரத்துவப் போக்கிற்கெதிரான கபன் சீலைப் போராட்டம்.

இரு கவிகளுமே கவிதையின் தொடக்க விவரிப்புகளில் நிகழ்வுகளை விவரிக்கிறார்கள். விவரிக்கும்போது நேர்ச்செய்தி எழுத்தாக இல்லாமல் உருவகங்களுக்குள் சென்று உருட்டிவிட்டுக் கவனிக்க வைக்கிறார்கள். முன்னிறுத்த வேண்டியதை முதலிலும் கேள்விக்குள்ளாக்க வேண்டியதை இரண்டாவதாகவும் வைப்பதின் மூலம் எதிர்வுகளை உருவாக்கி விவரிக்கிறார்கள். விவரிக்கும்போது உருவாகும் இயலாமையை – எதுவும் செய்ய இயலாமல் தவிக்கும் தன்னிலையை – கையறுநிலையின் படித்தரங்களை முன்வைத்துவிட்டு அப்படியே விலகியிருந்தால் இரண்டுமே நிகழ்வை விவரித்த கையறுநிலைக் கவிதைகளாக நின்று போயிருக்கும். அப்படி நிறுத்துவது சாதாரணக் கவிகளின் எழுத்துமுறைமை. கையறுநிலையைத் தாண்டிக் கவிதைக்குள்

அஹிம்சை துயருறுகிறது

முற்காலத்தில் இத்தேசத்தில் இடுப்புக்கச்சை யணிந்து கைத்தடியுடன் திரிந்த ஒரு மனிதன்

சுட்டுக்கொல்லப்பட்டிருந்தான்

என மகாத்மா காந்தியை நினைவுபடுத்தும்போது கவிதை தேசத்தின் மனச்சாட்சியின் பெருங்குரலைக் காந்தியாக்கி உலவச்செய்கிறது. யவனிகாவின் கவிதையில் வரும் அதே தன்மையில் ரியாஸ் குரானாவில் கவிதைக்குள்

உரத்த குரலில் கட்டளைகளைப் பிறப்பித்தான்
பன்றி இறைச்சியை உண்ணக்கொடுத்து
தனது சாவுக்கு காரணமானவனை
புத்தர் மன்னித்ததைப்போல,
தனது அடிவயிற்றைத் தடவியபடி
கருப்பையில் மூட்டப்பட்ட தீயை
குழந்தையென முடிவற்று பிரசவித்தபடி
அவனை மன்னிக்கத் தொடங்கினாள்

என்ற வரிகள் உக்கிரமாக வெளிப்படுகின்றன. இந்தக் கவிதையாக்க முறைமையின் வழியாக இவ்விரு கவிகளும் தங்களின் தேசப்பரப்புக்குள் புழக்கத்தில் இருக்கும் தங்கள் மொழியின் முதன்மையான கவிகள் என்பதை உறுதிசெய்கிறார்கள்.

மக்களின் ஒரு பிரிவின் துயரத்தையும் கையறுநிலைத் தன்மையையும் ஆற்றாமையின் வெளிப்பாடுகளையும் கண்டு எக்காளமிட்டுச் சிரிக்கும் அதிகாரத்தின் ஆணவம் இப்போது கேள்விக்கப்பாற்பட்டதாக இருக்கலாம். ஆனால் அந்த ஆணவமும் அகங்காரங்களும் நீடித்த பலனைத் தரக்கூடியன அல்ல என்பதை உணர்த்தும் வரிகளை இந்த இரு கவிதைகளும் கொண்டனவாக இல்லாமல் கூட இருக்கலாம். அதிகாரத்தை நோக்கிக் குரல் உயர்த்திக் கொண்டிருக்கும் விவசாயிகளின் கூட்டத்திற்குள் தோட்டாக்களின் வேகத்தைத் தாங்கிக் கொள்ளத் தயாரான ஒரு காந்தியின் நோஞ்சான் எலும்பு கொண்ட ஒருவர் இருக்கக்கூடும். அந்த ஒருவரைப் பல ஆயிரம்பேராக மாற்றும் போராட்டத்தை அதிகாரம் தாங்கிக் கொள்ள முடியாத காலம் ஒன்று வரும் என்பதைச் சொல்லி முடிக்கிறது யவனிகாவின் கவிதை. அதேபோல் புதைக்கப்படாமல் எரிப்பதற்குத் தனது பிஞ்சுக்குழந்தையைத் தந்த அன்னையின் வயிற்றைப்போலப் பல வயிறுகள் இன்னும் இன்னுமாய்ப் பிஞ்சுகளைப் பெற்றுத்தரும்போது அதிகாரம் திகைத்து நிற்கப்போகிறது என்று காட்டிவிடுகிறார் ரியாஸ் குரானா.

********************************
இந்த இரண்டு கவிதைகளையும் வாசித்தவுடன் நிகழ்காலச் செய்திகளைக் கவிதைகளாக்குபவர்களை கவியாக ஏற்க மறுக்கும் இலக்கியப்பார்வையின் மீதும், அதையே தங்களின் உன்னதமான அளவுகோலாகச் சொல்லிக் கொண்டிருக்கும் விமரிசனப்பார்வையின் மீதும் இந்த இரண்டு கவிதைகளும் மூர்க்கமாக மூத்திரக்கோலம் போடுகின்றன என்ற உணர்வும் தோன்றியது என்பதையும் சொல்லத் தோன்றுகிறது. இவ்விரு கவிதைகளும் உணர்வுகளைத் திரட்டும் உருவகங்களாக வடிவங்கொண்டுள்ளதை வாசித்துப் புரிந்துகொள்ள முடியாதவர்கள், ஈழத்தின் இன்னொரு கவியான கருணாகரனின் பதிவை வாசித்துப் புரிந்துகொள்ளலாம்.

==========================================================

இதயம் உறைந்தவர்கள்

இந்த வருடத்தின் குளிர்காலத்தை

அவர்கள் நெடுஞ்சாலைகளில் கழிக்கிறார்கள்

அது தேச வரலாற்றில் நீண்ட ஒரு ட்ராபிக் ஜாம்

இரவின் பனியில் அவர்கள் நிலத்தின் மூக்கிலிருந்து வெப்ப ஆவி சீறுகிறது

கடுங்குளிரில் சில முதியவர்களின் இதயம் உறைந்து போயிருக்கின்றன

பதிலாக கந்தல் மற்றும் சுள்ளிகளில் நெருப்பு பற்றவைக்கப்படுகிறது

கார மிளகாய்களுக்கும் சுட்ட ரொட்டிக்கும் இடையில் முழங்குகிறார்கள்

தங்கள் நிலத்தில் வீசும் சூறாவளி

மழைக்கால நதியின் பேரோசை மேலும்

பள்ளத்தாக்குகளின் எதிரொலிகளால்

உருவான அக்குரல் வானைத்தொடுகிறது

விண்ணவர்கள் இறங்கும் அருள் காலம் வரப்போவதில்லை என்பதை அறிந்திருக்கிறார்கள்

மாறாக நெடுஞ் சாலை விரிசல்களில் அவை வயலாகும்படி இப்போது அவர்கள் சிறுவிதைகளைப் பயிரிடுகிறார்கள்

வீறு கொண்டஇந்த மந்தைகளைஎப்பிடியும் தொழுவத்திற்கு விரட்டி விடலாம் என இடையர்கள் காத்திருக்க

தானியங்களின் மீது தங்கமுலாம்

பூசித்தருவதாக வாக்களிப்பவர்கள்

காணியிலுலகிற்கே கஞ்சாப்பயிரிடலாம் எனஉற்சாகிக்கிறார்கள்

அஹிம்சை துயருறுகிறது

முற்காலத்தில் இத்தேசத்தில் இடுப்புக்கச்சை யணிந்து கைத்தடியுடன் திரிந்த ஒரு மனிதன்

சுட்டுக்கொல்லப்பட்டிருந்தான்

இனியொரு தோட்டா ஆயிரம் ஹெக்டேர்களைத்தாண்டி சிறுதானியக்குதிர்களைத்துளைத்து

உங்கள் வங்கிகள் வாக்குச் சாவடிகள் பாலங்களின் மீதேறி ஒடுங்கிய ஒரு அடிவயிற்றில் பாயுமானால்

அண்டத்தில் என்ன அவதாரங்களே அகிலத்திலும் பெருவெடிப்புதான்

யவனிகா ஸ்ரீராம்/ 2020/டிசம்பர்,17

====================================

எதிர்பார்த்த கணமொன்றில்,
அவளின் கருப்பையில் தீ பற்றிக்கொண்டது
அசைந்து கொண்டிருக்கும் தீச்சுவாலை
கால்களை உதைத்துப் புன்னகைத்தது
கைகளை அசைத்து அழுதது
சடசடத்து எரியும் நெருப்பின் ஓலத்தில்
குழந்தையின் மழலைச் சத்தம் பீறிட்டது
அந்தக் கெக்கலிப்பும், அழுகையும்
என்றுமில்லாதவாறு உலக மனசாட்சியை
துடிக்கச் செய்தன
பிள்ளை சுட்டவன், மதுக்கோப்பையை
கையிலேந்தியபடி ரசிக்கத்தொடங்கினான்
தீச்சுவாலையின் நளின அசைவுகளுக்கேற்ப
நடனமிடத்தொடங்கினான்
எரியும் குழந்தையின் அலறல்
இனிய இசையாய் அவனது காதுகளுக்குள்
ஊடுருவிப் பாய்ந்து இதயத்தைக் குளிர்வித்தது
கோப்பையில் மீண்டும் மதுவை நிரப்பிக்கொண்டான்
இதுபோன்ற இன்னுமொரு இனிய பொழுதுக்காக
தனது பணியாளர்களிடம்
உரத்த குரலில் கட்டளைகளைப் பிறப்பித்தான்
பன்றி இறைச்சியை உண்ணக்கொடுத்து
தனது சாவுக்கு காரணமானவனை
புத்தர் மன்னித்ததைப்போல,
தனது அடிவயிற்றைத் தடவியபடி
கருப்பையில் மூட்டப்பட்ட தீயை
குழந்தையென முடிவற்று பிரசவித்தபடி
அவனை மன்னிக்கத் தொடங்கினாள்
வாழ்நாள் வரை மன்னிக்க உறுதி பூண்டாள்
பரம்பரை பரம்பரையாக மன்னிக்கும்படி
கட்டளையிட்டாள்
கட்டளையிட்ட மறுகணத்தில்,
ஒரு சமூகம் கற்பனையில் ஆழ்ந்தது
எண்ணற்ற மதுக்கோப்பைகள் நிரம்பத் தொடங்கின
கூட்டம் கூட்டமாக ரசிக்கத் தொடங்கினர்
எண்ணற்ற தீச்சுவாலைகள் பெருகத்தொடங்கின
அதன் நளின அசைவுகளுக்கேற்ப,
புதிது புதிதாக நடனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன
எண்ணற்ற குழந்தைகளின் அலறல்கள்
பேரானந்தத்தின் புதிய இசையாகக் கிளர்ந்தெழுந்தன
இன்பத்தைக் கண்டுபிடித்த திளைப்பில்
பெரும் கடலின் நடுவே
அலைகளில் அசைந்தாடும் தோணிபோல
ஒரு நாடே மகிழ்விலிருந்தது
இத்தனை ஆர்ப்பாடமான மகிழ்ச்சியின் நடுவே
நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்
என யாராவது கேட்கவிரும்பியிருந்தால்
அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது இதுதான்
எரிக்கப்படுவதற்கான எனது முறை வரும்வரை
காத்திருப்பதற்காகவே வாழ்கிறேன்.


பிள்ளை சுட்டான்-கவிதை-றியாஸ் குரானா

----------------------------------
இன்றைய நம்முடைய சூழலில் இரண்டு போராட்டங்கள் முக்கியமானவை.

1. இலங்கையில் நடக்கும் கபன் சீலைப் போராட்டம்.

2. டெல்லியில் நடக்கும் விவசாயிகளின் போராட்டம்.

இரண்டு அரசுகளும் மக்களுடைய அடிப்படை உரிமைகள், வாழ்வாதார உரிமைகளைப் புறக்கணித்ததன் விளைவே இந்தப் போராட்டங்கள்.

இந்தக் கொவிட் 19 நெருக்கடிக் காலத்துயரிலும் மக்கள் வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள் என்றால் அதன் பின்னுள்ள நியாயத்தை அரசாங்கமும் அதிகாரத் தரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும்.

இல்லையென்றால், அது மக்களுக்கு எதிரான அரசாகவே இருக்கும்.

மக்களுக்கு எதிரான அரசு என்றால் அது பயங்கரவாத அரசாகவே இருக்கும்.

அவ்வாறான அரசுகளை எதிர்கொள்வதற்கு மக்களுக்குள்ள ஒரே வழி போராடுவதுதான். அந்தப் போராட்டத்தை ஒரு குறிப்பிட்ட தரப்பினர் மட்டும் செய்வதோ அவர்கள் மட்டும் அதில் பங்கேற்பதோ போதாது.

நாமும் அந்தப் போராட்டத்தில் இணைய வேண்டும்.

கபன் சீலைப் போராட்டத்துக்கு ஆதரவளிப்போம். அதில் பங்கேற்போம்.

டெல்லியின் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவளிப்போம்.

ருணாகரன்/டிசம்பர் 18

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்