கருணா:நிகழக்கூடாத மரணம்

 

நேரடித் தொடர்புகள் இல்லாத நிலையிலும் நண்பர்கள் என்ற அடையாளத்தோடு வாசிக்கவும் முரண்படவும் உரையாடவும் உதவி கேட்கவுமான வாய்ப்புகள் கொண்ட சமூக ஊடகத்தின் காலத்தில் வாழும் நமக்கு சில மரணங்கள் நிகழக்கூடிய மரணங்களாகத் தோன்றிக் கடந்துபோகின்றன. சில மரணங்கள் நிகழ்ந்திருக்கக் கூடாது என்று தோன்றுகின்றன.

நேற்று(21/12/20)  நண்பகலில் கவியும் செயலாளியுமான ஆன்மனின் முகநூல் பதிவு

அப்பா போய்ட்டாரு தோழரென்று அழும் மகளை எப்படி தேற்றுவது தோழா?

இதற்காகவா சென்னையிலிலிருக்கும் நானும் திருவண்ணாமலையிலிருக்கும் நீயும் வலிந்து பாண்டியில் சந்தித்தோம்?

அது நம் இறுதிச் சந்திப்பென்பதை எப்படி ஏற்பது தோழா

கருப்பு கருணா

எனக்கேவியழும் தொனியில் இருந்தபோது உண்டாக்கிய உணர்வுநிலையை அதிர்ச்சியான தகவல் என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்ல முடியும். நிச்சயம் கருணாவின் மரணம் நிகழக்கூடாத மரணம். நிகழக்கூடாத எதிர்பாராத மரணங்கள் உண்டாக்கும் உணர்வலைகளைச் சொற்களால் விவரிக்க முடியாது. அவரைக் கருப்பு கருணா என்று முகநூலில் மட்டுமே அறிந்தவனல்ல நான். முகநூலின் வருகைக்கு முன்பு இருபத்தாண்டுகளுக்கு முன்பே அறிந்த மனிதர் கருணா.

 இடதுசாரிக் கலை இலக்கியப் பார்வையில் ஈடுபாடும் பங்கேற்பும் இருந்த  மாணவப்பருவத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மீது ஒரு விலகல் தன்மை இருந்தது. மதுரைப்பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பிற்குச் சேர்ந்த பின்பு  இந்தியப் பொதுவுடமைக்கட்சியின் கலை இலக்கியப்பெருமன்றப் பெரியவர்கள், மார்க்சிய லெனினிய இயக்கத்தின் பெயர் சொல்லிக்கொள்ளாத தோழர்கள் மீதெல்லாம் இருந்த நம்பிக்கையும் ஈடுபாடும், இந்தியப் பொதுவுடமைக்(மார்க்சிஸ்ட்) கட்சியின் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் மீது இருந்ததில்லை.  மதுரைக்கிளையின் முக்கியப் பொறுப்பாளராக இருந்த திரு. அருணன் பல்கலைக்கழகத்தில் தான் பணியாற்றினார். அவரது உரைகள் சிலவற்றைக் கேட்டபோது ஏற்புடையதாக அப்போது தோன்றவில்லை.  அத்துடன் நிஜநாடக இயக்கத்தின் செயல்பாடுகளோடு இணைத்துக்கொண்ட நிலையில் அந்த ஒவ்வாமை இன்னும் அதிகமானது.   

 மதுரையில் ஏற்பட்ட ஒவ்வாமையைப் பாண்டிச்சேரி நண்பர்கள்தான் மாற்றினார்கள். அவர்களுக்குத் திருவண்ணாமலையில் செயல்பட்ட த மு எ ச.வின்     நடவடிக்கைகளில் பெரிய ஈடுபாடு இருந்தது; நம்பிக்கை இருந்தது. அவர்கள் தான் கலை இலக்கிய இரவைப் பற்றிச் சொன்னார்கள். 1992 இல் திருவண்ணாமலையில் நடந்த பிரமாண்டமான கலை இலக்கிய நிகழ்வுகளுக்குப் பாண்டிச்சேரியிலிருந்து நண்பர்களாக ஏழெட்டுப்பேர் போயிருந்தோம். அவர்கள் அனைவரும் என்னோடு கூட்டுக்குரல் நாடகக்குழுவில் சேர்ந்து செயல்பட்டவர்கள். பல்கலைக்கழக நாடகத்துறைக்கு வெளியே நாடகச் செயல்பாடுகளை முன்னெடுப்பதற்காக எனது வழிகாட்டுதலில் இயங்கிய கூட்டுக்குரல் நாடகக்குழுவிற்குப் பங்கேற்பு அழைப்பை அனுப்பியிருந்தது தமுஎசவின் கலை இலக்கிய இரவின் அமைப்புக்குழு. நாங்கள் பார்வையாளர்களாக மட்டுமே கலந்துகொண்டோம். கலை இலக்கிய இரவின் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்காக மட்டும் இல்லாமல் திருவண்ணாமலையையும் பார்க்கும் விருப்பம் இருந்தது.  அந்த ஆண்டிற்கு முன்பு ஓரிரவு நிகழ்வாக இருந்த கலை இலக்கிய இரவை இரவிலும் பகலிலும் நடக்கும் பெரும் நிகழ்வாக மாற்றியது அந்த ஆண்டுதான் என்று அப்போது சொன்னார்கள்.    

அந்த நிகழ்வுக்குத் தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பல்வேறு கிளைகளிலிருந்தும் வந்திருந்தார்கள். நேரடியாக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தோடு தொடர்பில்லாத எழுத்தாளர்கள், கலைஞர்களும்கூட திரளாக வந்திருந்தனர். பவா செல்லத்துரையோடும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தோடும் நெருக்கம் வைத்திருந்த  கோணங்கியும் எஸ்.ராமகிருஷ்ணனும் அங்கிருந்தார்கள். அவர்களுக்குத் திருவண்ணாமலை புதியதாகத் தோன்றவில்லை.  ஆனால் ஜெயமோகனுக்கு அதுதான் முதல் வருகை என்று தோன்றியது. அவரது முதல் சிறுகதைத்தொகுதியான  திசைகளின் நடுவே திருவண்ணாமலை கலை இலக்கிய இரவு  மேடையில் தான் வெளியிடப்பட்டது. புத்தகம் சுடச்சுட வெளியிடப்பட்டது என்று சொல்வதைவிட ஈரம் காயாத நூல் வெளியீடு அது. மீராவின் அன்னம் பதிப்பகத்தின் அகரம் அச்சகத்திலிருந்து -    சிவகங்கையிலிருந்து இன்னும் புத்தகம் வரவில்லையே என்ற தவிப்பில் இருந்த ஜெயமோகனை அவ்வப்போது கோணங்கிதான் வந்துவிடும்;  கருணா பொறுப்பேற்று பேருந்து நிலையத்திற்கு ஆளனுப்பியிருக்கிறார் என்று ஆறுதல் படுத்திக் கொண்டிருந்தார். பவா செல்லத்துரை மேடையில் ஆளுமைகளை அறிமுகம் செய்து நிகழ்ச்சிகளைத் தொகுத்து அளிப்பதில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தார். ஆனால் கருணா தான்    வந்திருந்தவர்களுக்கு உதவிசெய்வதற்கான உள்ளூர்க்காரர்களை    ஏற்பாடு செய்வது, தேநீர் வழங்கும் பொறுப்பு, கலைக்குழுக்களை மேடையேற்றுவது, அவர்களுக்கான நேர மேலாண்மை போன்ற பணிகளை   செய்துகொண்டிருந்தார்.  குழு மேலாண்மையையும் நேர மேலாண்மையையும் கையாள்பவர்களின் முக்கியத்துவம் என்ன என்று எனக்குத் தெரியும். அதே மாதிரியான வேலையை நான் நிஜநாடக இயக்கத்தின் இரண்டு நாடக விழாக்களுக்கும் செய்திருக்கிறேன். 1987 இல் நட த்திய மூன்று நாள் கலைவிழாவிலும் 1988 இல் நடத்திய ஒருநாள் கலை விழாவிலும் பெற்ற அனுபவங்களும் தொடர்புகளும் இப்போதும் நினைவில் இருக்கின்றன.   

 1989 இல் பாண்டிச்சேரிக்குப் போன பிறகு அடிக்கடி செவியில் விழும் -  உச்சரிக்கப்படும் பெயர்களில் ஒன்றாக திருவண்ணாமலை மாறியிருந்தது. திருப்பரங்குன்றத்துக் கார்த்திகை தீப நிகழ்வையும் சரவணப்பொய்கையில் ஆறு தீபங்களை அனுப்பும் காட்சியையும் விவரித்துச் சொன்னபோது பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தமிழ்த்துறைப் பேராசிரியர் அறிவுநம்பி, “திருவண்ணாமலை தீபத்”தைப் பற்றி விவரித்துச் சொல்லிவிட்டு, திருப்பரங்குன்றத்தைவிட திருவண்ணாமலை தீபத்திருவிழா சிறப்பானது என்று சொன்னார். அவர் காரைக்குடிக்காரர். மதுரைப்பல்கலைக்கழகத்திலும் பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்திலும் எனக்கு முன்னோடி; முருக பக்தர்.    பல்கலைக்கழகத்தைத் தாண்டிய கலை இலக்கிய நண்பர்களிடம், திருவண்ணாமலை என்றால்   யோகி ராம்சுரத்குமார் போன்ற போதை மயக்கத்தில் ஆன்மீக உரைகளையும் ஆசீர்வாதங்களையும் வழங்கும் சாமியார்களின் ஊர் என்பதான சித்திரமே இருந்தது.  

ஆன்மீகம், பக்தி என்ற   அடையாளத்திற்கு இணையாகத் திருவண்ணாமலைக்கு  ஒரு மாற்று அடையாளத்தைத் தனது கலை இலக்கியச் செயல்பாடுகளின் மூலம் உருவாக்கியது அந்த ஊரில் செயல்பட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கமே. அதற்கான வெளித்தொடர்புகளை உருவாக்கித் தருபவராக இருந்தவர் பவா. செல்லத்துரை. ஆனால் களத்தில் செயல்படும் மனிதராக இருந்தவர் எஸ். கருணா. என்பது அந்த நிகழ்வில் கலந்துகொண்ட போது உணர்த்தப்பட்டது. அதன் பிறகு எங்கள் கூட்டுக்குரல் நாடகக் குழுவில் இருந்த நண்பர் ஒருவரின் காதல் கல்யாண ஏற்பாடுகளுக்காகவும் திருவண்ணாமலைக்குப் போயிருக்கிறேன். அந்த ஏற்பாட்டின் போதும் கருணாவின் பங்களிப்பை நேரில் அறியும் வாய்ப்பு கிடைத்தது.

சுந்தர ராமசாமியின் பல்லக்குத்தூக்கிகள் சிறுகதையை நாடகமாக்கி மதுரையிலும் புதுவையிலும் நானே இயக்கி மேடையேற்றினேன். அதனை அடுத்து அந்தப் பிரதியை மேடையேற்றிய நாடகக் குழு கருணாவின் தீட்சண்யா நாடகக் குழுதான். அதன் பிறகே பலரும் அந்த நாடகத்தை மேடையேற்றினார்கள்.  பாண்டிச்சேரியில் இருந்த எட்டாண்டுகளில் கருணாவின் செயல்பாடுகளையும் இடதுசாரி வாழ்க்கை முறையின் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கையையும் தொடர்ந்து கேள்விப்பட்டிருந்தேன். திருவண்ணாமலையின் நகரத்தின் பொதுப்பிரச்சினைகளை முன்னெடுக்கும் முன்களப்பணியாளராக இருந்தார். மதவாத அமைப்புகளும், கடவுளைப்பயன்படுத்திப் பணம் சேர்க்கும் சாமியார்களும் அந்த ஊரில் இயங்குவதற்கு முயலும்போது தடைக்கற்களை உருவாக்கும் ஆளுமையாகவும் அமைப்பைக் கொண்டவராகவும் இருந்தார்.

அவரது செயல்பாடுகள் என்பன பேச்சுக்கலை சார்ந்தது. நேரடியாக மக்கள் திரளிடம் தனது கருத்தை முன்வைத்துவிடும் பேச்சுமொழி கைவரப்பெற்றவர். ஏழுமலை ஜமா என்றொரு நாட்டுப்புறக் கலைகளை அரங்கேற்றும் குழுவையும் வழிநடத்தினார். நாடகமேடையேற்றங்கள், திரைப்பட விழாக்கள் என அவரது ஒருங்கிணைப்பில் ஆண்டிற்குக் குறைந்தது நாலைந்து அறிவிப்புகளாவது வந்துகொண்டே இருக்கும். அவரது இயக்கத்திற்குத் தேவையான களப்பணியாளர்களை அதன் வழியே உருவாக்க முடியும் என நம்பியவர் அவர். அண்மைக்காலமாக புதுச்சேரி மாநில முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் வழியாகத் த.மு.எ.க. சங்கம் அங்கிருக்கும் பல்கலைக்கழகத் தொடர்பியல் துறையுடன் சேர்ந்து புதுவைத் திரைப்பட விழாவொன்றை நடத்திக்கொண்டிருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பின்  அந்த விழா நாளொன்றில் கருணாவைப் பல்கலைக்கழக வளாகத்தில் சந்திக்க முடிந்தது. எப்போதும் காட்டும் வாஞ்சையும் கலகலப்புமாகக் கை குலுக்கினார்.

தமிழகத்தின் இடதுசாரிக் கலைஞர்களும் எழுத்தாளர்களும் அவரது உடலைக்காணவும், அந்த உடலை மருத்துவக்கல்லூரிக்குத் தரும்போது உடனிருக்கவும் திருவண்ணாமலை நோக்கிப் பயணித்துக்கொண்டிருப்பார்கள் இந்த நேரத்தில். நேற்றிரவு நண்பர் இமையம் தொலைபேசியில் அழைத்துக் காலையில் திருவண்ணாமலை நோக்கிப் போகிறேன் என்று சொல்லிவிட்டு, “ தனது கோவேறு கழுதையின் முதல் விமரிசனக்கூட்டத்தை நடத்திய கருணா தான் 25 ஆண்டுக்குப் பிறகான வெளியீட்டிற்கும் பாராட்டுக் கூட்டத்தை முதன்முதலாக நடத்தினார் என்றும் பெத்தவன் என்ற குறுநாவலைத் தனிநூலாக வெளியிட்ட போது மொத்தமாக 500 பிரதிகள் வாங்கித் தமுஎகச கிளைகளுக்கு அனுப்பினார் என்றும் சொல்லித் தழுதழுத்தார். இலக்கியம், நாடகம், சினிமா எனத் திரள் மக்களுக்கான பிரதிகளை அடையாளம் கண்டு அவர்களுக்குக் கொண்டு சேர்த்துவிட வேண்டும் என்று பாடுபட்ட கருணாவின் இன்மையும் இழப்பும் தமிழகத்திற்கே பெரும் இழப்பு என்றுதான் சொல்லவேண்டும்.

பணி ஓய்வுக்குப் பின் சில அயலகப் பயணங்களையும் உள்நாட்டுப் பயணங்களையும் திட்டமிட்டிருந்தேன். பிடித்தமான தமிழ்நாட்டு ஊர்கள் சிலவற்றிற்குச் சென்று நாலைந்து நாட்கள் தங்கவேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன். அப்படியான பயணத்தில் முதல் சுற்றில் திருவண்ணாமலையும் இருக்கிறது என்று அவரிடம் சொல்லியிருந்தேன். கரோனாவின் முடிவுக்குப் பின் அந்தப் பயணம் நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அண்மைக்காலத்தில் திருவண்ணாமலையில் அரங்கச் செயல்பாடுகளை முன்னெடுக்கும் சந்திரமோகனிடம் இதுபற்றியொரு தொலைபேசி உரையாடலைக் கூடச் செய்திருந்தேன்.  அப்படியொரு பயணத்தில் கருணாவின் கைபற்றிக் குலுக்கமுடியாது என்று நினைக்கும்போது நேற்றைய நண்பகல்  அதிர்வு இந்தக் காலைக் குளிரில் இன்னும் கூடுதலாகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்