நிகழ்காலத் தமிழகத்தில்/இந்தியாவில் சிந்தித்துச் செயல்படுகிறவர்களாகக் காட்டிக்கொள்ளும் மனிதர்களின் மூளையை அலைக்கழிக்கும் கருத்துரைகள் பலப்பல. தேசியம், தேசப் பாதுகாப்பு, தேசியப் பெருமிதம், தேசியப்பண்பாடு, சமய நல்லிணக்கம் அல்லது சமயச் சார்பின்மை, பிராமண எதிர்ப்பு, சமூக நீதி, தீண்டாமை ஒழிப்பு, பெரும்பான்மை வாதம், சிறுபான்மையினர் பாதுகாப்பு, பெண்களின் விடுதலை என்பன அவற்றுள் சில. இந்த வார்த்தைகளை முன்வைத்து, இவற்றின் எதிர்வுகளாக சிலவற்றைக் காட்டிப் பயமுறுத்தி அவற்றில் எதை ஆதரிக்கிற மனிதனாக நீ இருக்கப் போகிறாய்? எனக் கேட்பது நிகழ்கால மனத்தின் புறநிலை. இந்தப் புறநிலை உண்மையிலிருந்து ஒருவரும் தப்பிவிட முடியாது. அரசியல் தளத்தில் மட்டுமல்ல; எல்லாத்தளங்களிலும் இது செயல்பாட்டில் இருக்கவே செய்கிறது. அரசியலில் வெளிப்படையாக எழுப்பப்படும் இந்தக் குரல்கள் மற்றதுறைகளில் பதுங்கிக் கிடக்கும். தேவைப்பட்டால் கிளர்ந்தெழுந்துவிடும். இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் சௌரவ் கங்குலி இருந்தார். அப்போது ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற கிரிக்கெட் விளையாட்டுக்காரர் கிரேக் சாப்பல் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்தார். இர...